திருவாசகம் - திருவார்த்தை


பண் :

பாடல் எண் : 1

மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடி
யார்குலாவுநீ திகுணமாக நல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறிவார் எம்பிரா னாவாரே.

பொழிப்புரை :

பெண் பொருந்திய பாகத்தனும், வேதம் சொன்ன மொழியையுடையவனும், உயர்ந்த இதய மலரில் வீற்றிருக்கும் ஒளிப்பிழம்பானவனும், குற்றமற்ற மேலான கருணையாளனும், அடியார்கள் கொண்டாடுகின்ற நீதியினையே குணமாக, அவர்களுக்கு அருள்புரியும், அரும்புகள் மலர்கின்ற சோலை சூழ்ந்த திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கும் எமது புண்ணியப் பொருளானவனும் ஆகிய இறைவன் மண்ணுலகத்தில் வந்து இறங்கி, எல்லாவற்றுக்கும் முதலாயுள்ள பெரும் பொருளாகிய தன் தன்மையை வெளிப்படுத்திய அருளின் அருமையை அறியவல்லவர்கள் எம் பிரான் ஆவார்கள்.

குறிப்புரை :

இவர் - மேம்பட்டு விளங்குகின்ற. வாசகன் - சொல்லை யுடையவன். `சோதி, நீதி` என்பனபோல, `கருணை` என்பதும் இறைவனையே குறித்தது. போது அலர் - போதுகள் மலர்கின்ற. `வந்திழிந்து` என அளபெடையின்றி ஓதுதல் பொருந்தாமையறிக. ஆதிப் பிரமம் - எல்லாவற்றிற்கும் முதலாகிய பெரும் பொருளை. வெளிப்படுத்த - எமக்குப் புலப்படுத்திய. இப்பெயரெச்சம். `அருள்` என்னும் காரணப்பெயர் கொண்டது. `அருளினது பெருமையை உணர்பவர் எமக்குக் கடவுளாவார்` என்க. இங்ஙனங் கூறியது, `அவரே சிவனடியார்` என்றபடி. ``கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பராகில் - அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே`` (தி. 6 ப.95 பா.10) என்னும் திருத்தாண்டகத்தைக்காண்க.

பண் :

பாடல் எண் : 2

மாலயன் வானவர் கோனும்வந்து
வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம தனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாடநீடு
குலாவு மிடவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தேவர் பிரானாகிய இந்திரனும் வந்து வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த ஆண்டவன் உலகத்தின் கண்ணே வந்து தோன்றி நல்ல வழியினைக் காட்டி நன்மை விளங்குகின்ற அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்கள் நெடிது விளங்குகின்ற திருவிடை மருதூரில் இளம் பெண் ஒருத்திக்கு, ஒழுக்கம் விளங்கும்படி கருணைபுரிந்த தன்மையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

நீடு குலாவும் - நெடிது விளங்குகின்ற. `இடவை` என்பது, `வந்தி` என்பவள் வாழ்ந்த இடத்தின் பெயர் போலும்! வந்தி பொருட்டு இறைவன் மண்சுமந்த வரலாறு வெளிப்படை. `இடவை - இடைமருது` என உரைத்து, `அதன்கண் மடநல்லாட்கு அருள்புரிந்த வரலாறு அறியப்பட்டிலது` என்று போவாரும், இடைமருதில் வரகுணன் அன்பிற்காக இறைவன் அவன் மனைவியை ஏற்றதனைப் பொருத்துவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 3

அணிமுடி ஆதி அமரர்கோமான்
ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம்
பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
வகையறி வார் எம்பிரா னாவாரே.

பொழிப்புரை :

அழகிய சடைமுடியையுடைய முதல்வனும் தேவர் கட்குத் தலைவனும் ஆனந்தக் கூத்துடையவனும், அறு சமயங்களும் தன்னை வணங்கும்படியாகச் செய்து மண்ணுலகத்தாரும், விண் ணுலகத்தாரும், வாழ்த்தி வணங்க, பிறவி நோய் நீங்கும் வண்ணம் அவர்கட்கு அருள்செய்கின்ற திருப்பெருந்துறையிலுள்ள எம் பெருங் கருணையாளனுமாகிய இறைவன் வலைப்பெண்ணாய் வந்த உமையம்மையை மணக்க விரும்பித் தோணியில் ஏறி, அழகிய வலையைக் கொண்டு பெரிய கெளிற்று மீனைப் பிடித்த திறத்தை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

பிஞ்ஞகனாகலின், அவனது முடியை, ``அணிமுடி`` என்றார். ஆதி - முதல்வன். அறுசமயம், அகச்சமயங்கள். `அவை தன்னைப் பணியும் வகைசெய்து` என்றது, `அறுசமயங்களை` வகுத்து என்றபடி. படவை, இக்காலத்தார், `படகு` என்ப. மணி - அழகு. `வலைகொண்டு விசிறும்` என இயைக்க. வான் மீன் - பெரிய மீன். `மீன்மேல் விசிறும்` என்க. இறைவன் வலை வீசிய திருவிளையாடல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 4

வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
இயல்பறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனும் திருப்பெருந்துறையில் உள்ள முதல்வனும், `வேடுவனது உருவங் கொண்டு மகேந்திர மலையின்கண் மிக்க குறைகளையுடைய தேவர்கள் வந்து தன்னைத் தேடும்படியாய் மறைந்திருந்தவனுமாகிய சிவபெருமான் அடியேங்கள் உய்யும் வண்ணம் திருவுளங் கொண்டு அக்காலத்தில் ஆடலை விரும்பிய குதிரைமேல் ஏறி வந்து தோழர்களை எவ்விடத்தும் ஆட்கொண்டருளிய, தன்மையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

மிகு குறைவானவர் - மிக்க குறையுடைய தேவர். சிந்தனை செய்து - தனது திருவருளை நினைந்து. ஏடர்கள் - தோழர்கள்; அடியார்கள். `வானவர் தேட மகேந்திரத்து இருந்த சிவபெருமான், ஐயன், பெருந்துறை ஆதி, அடியோங்கள் சிந்தனை செய்து உய்ய, அந்நாள் வேடுருவாகி, பரிமா ஏறி எங்கும் ஏடர்களை ஆண்டு கொண்ட இயல்பு அறிவார் எம்பிரானாவார்` எனக் கொண்டு கூட்டி முடிக்க. குதிரை வீரன் வடிவத்தை, ``வேடுரு`` என்றார். சிவ பிரான் மதுரையில் குதிரை கொணர்ந்த திருவிளையாடல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 5

வந்திமை யோர்கள் வணங்கியேத்த
மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும்எங்கள்
பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்
றோங்கு மதிலிலங் கைஅதனிற்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

தேவர்கள் வந்து வழிபட்டுத் துதிக்க, அவர் களுக்குப் பேரருள் புரியும் கடலாய், அடியவர்களது பாசக்கட்டு விட்டு நீங்கும்படி அருளுகின்ற எங்கள் மேலானாகிய திருப்பெருந்துறை முதல்வன் அக்காலத்தில் மேன்மேல் பரவுகின்ற அலைகளையுடைய கடலைத் தாண்டிச் சென்று உயர்ந்த மதிலையுடைய இலங்கையில் பந்து பொருந்திய மென்மையான விரல்களையுடைய மண்டோதரிக்கு அவள் நினைத்த அன்றே அருள் செய்த தன்மையை அறியக் கூடியவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

இலங்கையில் வண்டோதரிக்கு அருள்புரிந்த வரலாறு (தி.8 குயிற்பத்து பா.2 உரை) முன்னர்க் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே.

பொழிப்புரை :

முப்புரம் தீயில் வெந்தொழிய அழித்த வில்லை யுடையவனும், ஆண்டவனும், எந்தையும் ஆகிய திருப்பெருந்துறை முதல்வன், பணியைச் செய்யும் தேவர்களது முன்னிலையில், கடிக் கின்ற நாய்கள் சூழ்ந்து வர, தான் வேடனாகிச் சென்ற காட்டிலே, அம்பு தைத்து இறந்த பன்றிக்குத் திருவுளம் இரங்கி அக்காலத்தில் அற்ப மாகிய தாய்ப்பன்றியாகி அதன் குட்டிகளுக்குப் பால்கொடுத்த திரு வுள்ளப் பாங்கை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை :

``வேடுவனாய்`` என்றது முதல், ``இயங்கு காட்டில்`` என்றது காறும் உள்ளவை, சிவபெருமான் அருச்சுனன் பொருட்டுப் பன்றிப்பின் வேடனாய்ச் சென்ற வரலாற்றைக் குறிப்பன. அக்காலத் தில் தேவர்கள் ஏவல் செய்யும் வேடுவராய் வந்தனர் என்பதும் வரலாறு. சிவபெருமான் பன்றிக் குட்டிகட்குப் பால் கொடுத்த காட்டினை, அருச்சுனன் பொருட்டுச் சென்ற காடாகக் கூறியது, `நீவிர் உண்ணும் சோறே யாம் உண்பதும்` என்றல்போல, `காடு` என்னும் பொதுமை பற்றி. ஏவுண்ட பன்றி - அம்பு தைக்கப்பட்டு இறந்த தாய்ப் பன்றி. கேவலம் - தனிமை; சிறப்புச் சிறிதும் இன்மை. `கேவலமாக` என ஆக்கம் வருவித்துரைக்க. இங்ஙனம் ஆக்க வினை தொகுக்கப் பட்ட தொகாநிலை யாதலின், ``கேவலங் கேழலாய்`` என, மகரம் இனமெல்லெழுத்தாய்த் திரிந்தது. கேழல் - பன்றி. `பன்றியுள் ஒருவகை கேழல்` என்பதன்றி, `கேழல் ஆண் பன்றி` என்றல் எங்கும் இல்லை. அதனால், `ஒருசாரார் அங்ஙனம் கூறுப` என்னும் துணையே குறித்துப்போவர் தொல்காப்பிய உரையாளர். கிடப்பு - கிடை. தாய்ப்பன்றி கிடந்தவழியன்றி அதன் இளங்குட்டிகள் பாலுண்ண மாட்டாமையறிக. ``கிடை`` என்றது, கிடத்தற்கு ஏதுவாய அருளைக் குறித்தது. இறைவன் பன்றிக் குட்டிகட்குப் பால் கொடுத்த திருவிளை யாடல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 7

நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

வண்டின் ரீங்கார ஒலியையுடையதாகிய ஒப்பற்ற தாமரை மலரில் பொருந்திய கலைமகள் திருமகள் என்னும் மகளிர் இருவரும் வாழ்த்தி வணங்கி மலர் தூவி வழிபட, ஒளி மிகுகின்ற சோதி வடிவமான எமது ஆண்டவனும், நிலைபெற்ற மலர்கள் விரிகின்ற சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் எமது புண்ணிய மூர்த்தியுமாகிய இறைவன், பூமியில் வந்து காட்சி கொடுத்து, வேற்றுமைகளைக் களைந்து அருள் புரிகின்ற பெருமையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை :

நாதம் - வண்டுகளின் ஒலி. கமலப்போதினில் நண்ணிய நன்னுதலார் - திருமகளும், கலைமகளும். அவ்விருவரும் முறையே திருவாரூரிலும், திருக்கண்டியூரிலும் சிவபெருமானை வழிபட்டுத் தத்தம் கணவர் உயிர்பெற்றெழும் வரத்தைப் பெற்றமையை அவ்வத் தல புராணங்களுட் காண்க.
இவற்றுள், திருமகள் திருவாரூரில் வழிபட்டு வரம் பெற்ற வரலாறு பலரும் அறிந்தது. கண்டியூர் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாதலும், அது பிரமனது சிரத்தைக் கொய்த வீரட்டமாதலும் அறியற் பாலன. ``காபாலி - போரார் புரம் பாடிப் பூவல்லி கொய்யாமோ`` (தி.8 திருப்பூவல்லி-10) என்றதில், அடிகள் அட்ட வீரட்டங்களைக் குறித்தல் நினைவு கூரற் பாலது. மாலுக்கும், அயனுக்கும் சிவபெருமான் அருள்புரிந்தமையைப் பலவிடத்தும் அருளிச் செய்த அடிகள், இங்கு. அவர்தம் தேவியர்க்கு அருள் புரிந்தமையை அருளிச்செய்தார் என்க.

பண் :

பாடல் எண் : 8

பூவலர் கொன்றைய மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

மலர்கள் விரிகின்ற அழகிய கொன்றை மாலையை அணிந்த, மார்பையுடையவனும் போர்த்தொழிலுக்குரிய நகங்களை யுடைய வலிமை மிகுந்த புலியைக் கொன்ற வீரனும், மாதரிற் சிறந்தவளாகிய உமையம்மையின் பாகனும், வளமையான சோலை சூழ்ந்த அழகிய திருப்பெருந்துறை அரசனும் ஆகிய குற்றமில்லாத பெரும் புகழையுடைய எங்கள் ஆண்டவன் பெரிய கடலில் வாழ்பவனாகிய வருணனுக்கு நெருப்பில் தோன்றிய சித்திரம் போன்ற பெண்களுடைய தோள்களைத் தழுவிய உருவத்தின் தன்மையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை :

`கொன்றைய பூ அலரும் மாலை` என்க. `போர்ப் புலி` என இயையும். `ஏதம் இல்` என்பது கடைக் குறைந்து, `ஏதில்` என்றா யிற்று. கடல் வாணன் - கடல் வாழ்க்கையுடையவன்; வலைஞன். தீயில் தோன்றும் - தீயிடத்துத் தோன்றிய. ஓவிய மங்கையர் - சித்திரம் போலும் அழகுடைய மகள். வலைஞர்கோனிடத்து மகளாயிருந்த உமையம்மையைச் சிவபிரான் வலைஞர் மகனாய்ச் சென்று மணந்த திருவிளையாடல் வெளிப்படை.
முன்பு மூன்றாம் திருப்பாட்டில், வலைவீசி நந்தி சாபத்தை நீக்கினமை கூறினார். இங்கு வலையர் மகளாகியிருந்த அம்மையை மணந்தமை கூறினார். இங்குக் குறிக்கப்பட்ட வரலாறு பற்றி யாதும் கூறாது போவார் போக, கூறப்புகுந்தோர் யாவரும் இங்குக் கூறிய இவ் வரலாற்றையே கூறினார்; எனினும், ``தீயில் தோன்றும்`` என்ற வேறுபாடு ஒருபால் நிற்பினும், ``மங்கையர்`` எனப் பன்மை கூறினமையின், இவ்வரலாறு இன்னும் ஆய்ந்துணரற்பாலதே. ``ஓவிய`` என்பது, நீங்கிய எனவும் பொருள்கொளற்குரியது. `மங்கைதன் தோள்` என்பது பாடமாயின் மேற்குறித்த வரலாற்றைக் கொள்ளத் தடையில்லை.

பண் :

பாடல் எண் : 9

தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே.

பொழிப்புரை :

தூய்மையான திருவெண்ணீற்றையணிந்த, எம்பிரானும், ஒளியையுடைய மகேந்திர மலைக்குத் தலைவனும் தேவர்கள் வந்து வணங்கும்படியான தன் திருவடியை அடியார்கள் மேல் வைத்தருளிய ஆண்டவனும் அழகிய நல்ல திருப்பெருந் துறையை ஆள்பவனும் ஆகிய இறைவன் அக்காலத்தில் எனக்கு அன்பு மிகும்படி, திருவருள் புரிந்து தன் திருவடியைக் காட்டியருளி, மனம் நைந்து உருகும்படி துன்பத்தை ஒழித்து என்னை ஆட்கொண்டருளின திருவுள்ளக் கிடக்கையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை :

`தேவர் தொழும் பாதத்தை எம் முடிமேல் வைத்த ஈசன்` என்க. கேதம் - துன்பம். ``ஆண்டருளும்`` என்றது, `இனியும் வந்து ஆட்கொண்டருளுகின்ற` என எதிர்காலச் சொல்லாம்.
கிடப்பு - கிடைப்பு. `கிடைப்பு` என்பதே பாடம் என்றலு மாம். இறைவன் தம்மைத் தில்லைக்கு வருக எனப்பணித்தமையின், காலம் நீட்டித் தொழியினும் என்றேனும் ஒருநாள் தோன்றித் தம்மை ஏற்றருளல் ஒரு தலை என்பது பற்றி இங்ஙனம் அருளிச் செய்தார். இதனால், அடிகளை இறுதிக் கண் இறைவன் எவ்வாற்றாலேனும் தானே நேர்நின்று தன்பால் அழைத்துக்கொண்டான் என முடித்தலே முடிபாமன்றி, அவரது வாழ்க்கை வரலாற்றினைப் பிறிதோராற்றால் முடித்தல் முடிபாகாது.
பிற முடிபே முடிபாயின், திருப்பெருந்துறையில் இறைவனு டன் செல்ல விரும்பிய அடிகளை, `தில்லைக்கு வருக` என இறைவன் பணித்த சொல்லும், அடிகள் திருவாசகம் முழுதும் தம்மை மீளத் தோன்றி அழைத்துக் கொள்ளல் வேண்டும் எனச் செய்து கொண்ட விண்ணப்ப மொழிகளும் எல்லாம் பயனில் சொற்களாய்ப் போமாறு அறிக.

பண் :

பாடல் எண் : 10

அங்கணன் எங்கள் அமரர்பெம்மான்
அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர
இகபர மாயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ்
சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த
வகையறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

அழகிய கண்ணையுடையவனும், எங்கள் தேவ தேவனும் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனும் பூமியில் குரு வாகி வந்த எங்கள் பெருமானும் மிக்க திறமையுடையவனும் ஆகிய, திருப்பெருந்துறை இறைவன், பெரிய பாசம் நீங்கவும், இம்மை மறுமைப் பயனாய் இருப்பதாகிய ஒப்பற்ற ஆனந்தத்தையடையவும், அந்நாளில் சங்கினாலாகிய வளையல்களை முனிபத்தினியர்களிடம் கவர்ந்து கொண்டு வளமையான வணிகக் குழாத்தினோடும் வணிகப் பெண்டிர் நிறைந்துள்ள மதுரையம்பதியை அடைந்த தன்மையினை அறியக் கூடியவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

`(யாங்கள்) பாசந் தீரவும், இன்பம் எய்தவும் மதுரை சேர்ந்த வகை` என்க. சங்கம் - வளையல். `வளையலைக் கவர்ந்து` என்றது, `மங்கையரைக் காதல் கூரப் பண்ணினான்` என்றபடி. சாத்து- வாணிகக் குழாம். சதுரன் - திறமையுடையவன். நான்காம் திருப் பாட்டில் குதிரை கொணர்ந்தமையை அருளிச் செய்தார்; இதனுள், குதிரை வாணிகத் தலைவனாய் வந்த பொழுது காணப்பட்ட அவனது பேரழகினை அருளிச் செய்தார்.
சிற்பி