திருவாசகம்-அச்சப் பத்து


பண் :

பாடல் எண் : 1

புற்றில்வா ளரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

புற்றிலேயுள்ள கொடிய பாம்பிற்கும் அஞ்ச மாட்டேன். பொய்யர்களது மெய் போன்ற சொற்களுக்கும் அஞ்ச மாட்டேன். திரட்சியான நீண்ட சடையையுடைய, எம் பெரியோனாகிய, நெற்றிக் கண்ணையுடைய இறைவனது திருவடியை அடைந்தும், வேறொரு தெய்வத்தை இருப்பதாக எண்ணி, எம் பெருமானைப் போற்றாதாரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

புற்றில் அரவு - புற்றில் வாழும் பாம்பு. வாளரவு - கொடிய பாம்பு. மெய் - மெய்யென்று நாட்ட முயலும் சொல்; இச் சொல், தன்னைத் தெளிந்தாரை வஞ்சித்துக் கேட்டின்கண் வீழ்த்தலின் அஞ்சப்படுவதாயிற்று. `நண்ணியபின்` என்பது, `நண்ணி` எனத் திரிந்து நின்றது. தெய்வப் பிறவியை எய்தினோர் யாவரிடத்தும் உள்ள தெய்வத்தன்மைகள் பலவும் சிவபெருமானது அருளாற்றலின் கூறேயாதலின், அவனை உணர்ந்த பின்னர்ப் பிறிதொரு தெய்வத்தைச் சுதந்திரமாய் நின்று அருள்செய்வதாகக் கருதுதல் குற்றமாயிற்று. எனவே, பிறிதொரு தெய்வத்தை அவன் அருள்வழிநின்று அருள் செய்யும் அதிகார தெய்வமாகக் கருதின் குற்றமின்றாதல் பெறப்படும். இப் பகுதியின் எல்லாத் திருப்பாடல்களின் ஈற்றடியும் மோனை நயம் கெடாதே வருதலின், இங்கும், `பெம்மான் கற்றிலாதவர்` எனப் பாடங்கொண்டு, `அவனது பெருமையை உணராதவர்` என்று உரையாது, `பெம்மாற்கு அற்றிலாதவர்` என்றே பாடங்கொண்டு, `அவன் பொருட்டுப் பிற தெய்வங்களிடத்துள்ள பற்றுக்கள் நீங்கப் பெறாதவர்` என்றே உரைக்க. அம்ம, வியப்பிடைச்சொல். `அஞ்சு மாறு` பெரிது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. இதனானே, `அஞ்சேன்` என்றதும் `மிக அஞ்சேன்` என்னும் கருத்துடையதாம். முன்னர் `அஞ்சேன்` என்று கூறிப் பின்னர் `நாம் அஞ்சுமாறு` என்றது உயர்வுபற்றி வந்த பால்வழுவமைதி. உயர்வு, `அஞ்சுவது அஞ்சல்` (குறள் - 428). `இங்ஙனம்` நெறிபிறழாது நிற்கும்பேறு எமக்கு வாய்த்தது` என மகிழ்ந்தருளிச் செய்தவாறு. இதனுள் ``அஞ்சேன்`` என்பன பலவும், அவ்வச்சத்திற்குக் காரணமாகிய பொருள்களால் கெடுவது உடல் நலத்தைத்தரும் உலகியலேயன்றி உயிர்நலம் அன்றாதல் பற்றியும், ``அஞ்சுமாறுபெரிது`` என்றது, அவ்வச்சத்திற்குக் காரணமாகிய பொருள்கள் அவ்வாறன்றி உயிர் நலத்தைத் தரும் சிவஞானத்தை அழித்தல் பற்றியுமாதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 2

வெருவரேன் வேட்கை வந்தால்
வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
தேவர்எத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.

பொழிப்புரை :

ஆசை மிகுந்து வந்தாலும் அஞ்சமாட்டேன். வினை யாகிற கடல் என்னைச் சூழ்ந்து கொண்டாலும் அஞ்சமாட்டேன். பிரம விட்டுணுகளாகிய இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத, எம் தலைவனாகிய, இறைவனது திருவடிவத்தையே கண்டு களிப்பதன்றி, மற்றைய தேவர்களை என்ன தேவரென்று, அருவருப்புக் கொள்ளாத வரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

குறிப்புரை :

வெருவரேன் - அஞ்சேன். வேட்கை - ஐம்புல ஆசை. ``வினை`` என்றது, பிராரத்தத்தை, அது. சிவஞானத்தில் உறைந்து நிற் பாரை யாதும் செய்யமாட்டாதாகலின், அது பற்றி எழும் ஐம்புல வேட்கையும் அவர்க்கு உடல் ஊழாயே கழியும்; ஆதலின், அகத்து நிற்கும் நுண் பொருளாகிய அவை இரண்டும் அத்துணையாக அஞ்சப் படாவாம். இனிச் சிவஞானிகள் அல்லாதாரது கூட்டுறவு உண்டாயின், அது புறத்துத்தூலமாய் நின்று சிவஞானத்தைக் கெடுக்குமாகலின், அது பெரிதும் அஞ்சத் தக்கதாம். `தேவருட் சிறந்தார் மூவர்` என்பது பலர்க்கும் உடன்பாடாக அவருள் ஏனை இருவரால் அளவிட்டறிய ஒண்ணாதவன் சிவபெருமான் என்பது தெரியப்பட்ட பின்னர், பிற தேவரைத் தலைவராக எண்ணுதல் என் என்பார், இருவரால் அறியப் படாமையை எடுத்தோதினார். சிவபெருமானை மூவருள் ஒருவனாக வைத்தெண்ணுவார் கொள்கைபற்றியே நோக்கினும், இவ்வரலாற்றால் அவனது முதன்மை தெற்றென விளங்கும் என்பது கருத்து. மாறு - பகைமை. `மாற்றின்கண்` என்னும் ஏழாம் வேற்றுமைத் தொகைக்கண் றகரம் இரட்டாமை இலேசினாற் கொள்க. எம் பிரான் - எமக்குத் தலை வன். தம்பிரான் - எல்லா உயிர்க்கும் தலைவன் ``தேவர்`` எனப் பின் னர் வருகின்றமையின், `திருவுருவே தேவரன்றி` என உரைக்க. சிவ பெருமானது சொரூபநிலை புறச் சமயிகளால் உணரவாராமையின், அவனது தடத்தமாகிய திருவுருவையே குறித்தருளினார். எத் தேவர் - என்ன முதன்மையுடைய தேவர். அருவருத்தல் - வெறுத்தல்.

பண் :

பாடல் எண் : 3

வன்புலால் வேலும் அஞ்சேன்
வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.

பொழிப்புரை :

வலிமையான மாமிசம் பொருந்திய வேற்படைக் கும் அஞ்சமாட்டேன். வளையலை அணிந்த பெண்களுடைய கடைக் கண் பார்வைக்கும் அஞ்சமாட்டேன். எலும்புகளெல்லாம் உருகும் படியாகப் பார்த்துப் பொன்னம்பலத்தில் நடிக்கின்ற, எனது துளை யிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பற்றவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

`வல் வேல்` என இயையும். புலால் - எதிர்ந்தவரது மார்பின் தசை. வளைக் கையார், மாதர்; என்றது, ஆடவர் பலரையும் வலிதின் மயக்கும் பொதுமகளிரை. அவர் கடைக்கண் அனைவராலும் பழிக்கப்படுதலின், அதன் மயக்கத்தின்கண் அகப்படாது நீங்குதல் எளிது; சிவபெருமானிடத்து அன்பில்லாதவர் அங்ஙனமன்றித் தம்மை உய்யும் நெறியுடையோராக மதித்துப் பிறர்க்கு உறுதிகூற முற்படு தலின், அவரது மயக்கின்கண் அகப்படாது நீங்குதல் அரிது` என்பது கருத்து. வளைக்கையார் கடைக்கணும் ஒருவகை வேலாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 4

கிளியனார் கிளவி அஞ்சேன்
அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

மொழியால் கிளி போன்ற மாதரது இனிய சொற்களுக்கு அஞ்சமாட்டேன். அவரது வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்சமாட்டேன். வெண்மையான திருநீற்றில் மூழ்கிய திருமேனியையுடைய அந்தணனது திருவடியை அடைந்து நீர்த்துளிகள் சிந்துகின்ற கண்களையுடையவராய் வணங்கி அழுது, உள்ளம் நெகிழ்ந்து இவ்விடத்தில் கனிதல் இல்லாதவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

கிளவி - சொல். `மயக்கும் மகளிரது கிளிபோலும் மொழி` என்பதனை, கிளியனார் கிளவி எனச்சுருங்க ஓதினார். கிறி - பொய். முறுவல், அவர் சிரிப்பது, உண்மை மகிழ்ச்சி பற்றியன்றி, மயக்குதல் மாத்திரைக்கேயாகலின், ``கிறி முறுவல்`` என்று அருளினார். அவர்க்குக் கண்ணினும் இவை சிறந்தமையின், இவற்றை இங்கு வேறெடுத்தருளிச்செய்தார். அளி - அன்பு. முன்னைத் திருப் பாட்டில், அன்பு சிறிதும் இல்லாதவரைக் குறித்து அருளிச் செய்தார்; இதன்கண் பேரன்பு இல்லாதவரைக் குறித்து அருளிச்செய்தார் என்க. எனவே, இவரும் ஓராற்றான் அஞ்சுதற்கு உரியராதல் அறிக. பயனில் சொல்லை விலக்க வந்த திருவள்ளுவ நாயனாரும்,
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். -குறள் 198
என, சிறுபயன் தரும் சொல்லையும் விலக்கியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 5

பிணியெலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

எல்லா வகையான நோய்களும் வந்தாலும் அஞ்ச மாட்டேன். பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சமாட்டேன். துண்டப் பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது, தொண்டரோடு பொருந்தி, அத்திருமால், வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காண மாட்டாத சிவந்த திருவடியைத் துதித்து திருவெண்ணீறு அணியாத வரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

குறிப்புரை :

துணி நிலா - துண்டாகிய சந்திரன். அழுந்தி - அன்பில் திளைத்து. மால் - திருமால்; ``அம்மால்`` என்றது, பண்டறிசுட்டு. `வெண்ணீறணிகிலாதவரைக் கூறுவார்` அதனை அணியும் முறையை விதந்தோதினார். எனவே, அம்முறையால் அணியாது, வாளா கோலஞ்செய்தல் மாத்திரையாக அணிபவரும் ஒருவாற்றான் அஞ்சத்தக்கவராதல் பெறப்படும். ``வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்``(தி.10 திருமந்திரம் - 240) என்று அருளிச் செய்தார் திருமூலரும். ``பயன்`` என்ற பொதுமையால், தமக்கும், பிறர்க்கும் பயன் படாமை பெறப்படும்; படவே, அப்பயனுக்கு அவர்தம் வேடம் ஓராற்றால் தடையாதலும் பெறுதும். திணி - திணிந்த; உறுதியான.

பண் :

பாடல் எண் : 6

வாளுலாம் எரியும் அஞ்சேன்
வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

ஒளிவீசுகின்ற நெருப்புக்கும் அஞ்சமாட்டேன். மலை, தலைகீழாகப் பிறழ்ந்திட்டாலும் அஞ்சமாட்டேன். தோள்களில் விளங்குகின்ற திருவெண்ணீற்றையுடையவனும், காளையை ஊர்தி யாக உடையவனும்,சொல் அளவையைக் கடந்த அப்பனுமாகிய இறைவனது திருவடித் தாமரைகளைத் துதித்து, பெருமை பொருந்திய மலர்களைச் சார்த்தி மனம் உருகுகின்ற அடிமைகள் அல்லாதவர் களைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

குறிப்புரை :

வாள் - ஒளி. வரை - மலை, ``தாள`` என்ற அகரம், விரித்தல். பெருமையை உணர்த்தும் தட என்னும் உரிச்சொல், இங்கு மிகுதியை உணர்த்திற்று. நைதல் - உருகுதல். ``ஆள்`` என்றது, `அடிமை` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 7

தகைவிலாப் பழியும் அஞ்சேன்
சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.

பொழிப்புரை :

தவிர்க்க முடியாத பழிக்கும் அஞ்சமாட்டேன். இறத்தல் முதலானவற்றிற்கும் அஞ்சமாட்டேன். புகையைக் கொண்ட நெருப்பைக் கையிலே ஏந்தி வீசிக் கொண்டு, விளங்குகின்ற பொன்னம்பலத்தில் ஆடுகின்ற அரும்பு மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்த முதல்வனது திருவடியைத் துதித்து, மனம் நெகிழாதவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

தகைவு இலா - தடுக்கலாகாத; ஒருதலையாக வரற்பாலதாய. முன்னம் அஞ்சேன் - முதற்கண் அஞ்சேன்; என்றது, `யான் அஞ்சாத பொருள்களுள் அதுவே முதற் கண்ணது` என்றபடி. `முகந்த` என்பதன் ஈற்றகரம், தொகுத்தல். முகைநகை - அரும்பவிழ்கின்ற. இது வாயார வாழ்த்தாதவரைக் கூறியது,

பண் :

பாடல் எண் : 8

தறிசெறி களிறும் அஞ்சேன்
தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும் ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் அஞ்சமாட்டேன். மணம் வீசுகின்ற சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது, தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய கழலணிந்த திருவடிகளைத் துதித்துச் சிறப்புற்று, இன்பமாக இருக்க மாட்டாத அறிவிலிகளைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

தறி செறி களிறு - தறியின்கண் கட்டிவைக்கப் படுகின்ற யானை; என்றது, `பெரும்பாலும் அவிழ்த்து ஓட்டப்படாத, அவிழ்த்து ஓட்டின்,கொலைத் தண்டத்திற்கு உரியார் மீது ஓட்டப்படுகின்ற கொலையானை` என்றபடி. இன்னதொன்றே பல்லவ மன்னன் ஆணையால் நாவுக்கரசர்மீது ஏவப் பட்டது. `தறிசெறு களிறு` என்பதே பாடம் என்பாரும் உளர். உழுவை - புலி. வெறி - வாசனை. `அப்பன் கழல்கள்` என இயையும். செறிதரு - கட்டப்பட்ட. `அப்பன், நண்ண மாட்டா` என்பன, `கழல்கள்` என்பதன் ஆகுபெயர்ப் பொருளையே சிறப்பித்தன. இது சிவஞானத்தால் இன்புற்றிருக்கமாட்டாதவரைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
திருமுண்டம் தீட்ட மாட்டா
தஞ்சுவா ரவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.

பொழிப்புரை :

மேகத்தில் உலாவுகின்ற இடிக்கும் அஞ்ச மாட்டேன். அரசரது நட்புக்கும் அஞ்சமாட்டேன். விடத்தையே அமுத மாக ஏற்றுக் கொண்ட இறைவனானவன், எம் தலைவனாகிச் செம்மை யாகவே எம்மை ஆட்கொண்டான். அவனது செல்வமாகிய திரு வெண்ணீற்றைத் தமது நெற்றியில் பூச மாட்டாமல் அஞ்சுவோராகிய அவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

மஞ்சு உலாம் - மேகத்தின்கண் பொருந்திய. உரும் - இடி. மன்னரோடு உறவு தீக்காய்தல் போல்வதொன்றாகலின், (குறள்- 691) அதுவும் அஞ்சப்படுவதாதல் அறிக. நம்பிரான் - பலர்க்கும் தலைவன். எம்பிரானாய் - எமக்குத் தலைவனாய் வந்து. ``செஞ் செவே`` (தி.8 வாழாப்பத்து. பா.6) என்றதனை முன்னரும் காண்க. ``திரு`` என்றது, `விபூதி` என்னும் பொருட்டாய், திருநீற்றை யுணர்த்திற்று.
முண்டம் - நெற்றியினிடத்து. தீட்டுதல் - பூசுதலாதலை, ``தீட்டார் மதில்`` (தி.8 திருவம்மானை.பா.6) என்றதனானும் அறிக. இனி, `முண்டம் என்பதே, ஆகுபெயராய், அதன்கண் தீட்டப்படும் திருநீற்றை உணர்த்தும்` என்பாரும் உளர். ``அஞ்சுவர்`` என்றது, `கூசுவார்` என்றபடி. முன்னர், ``வெண்ணீறு அணிகிலாதவரை`` (தி.8 அச்சப்பத்து. பா.5.) என்றது, அதனைப் புறக்கணித்திருப்பாரையும், இஃது, அதனை அணியக் கூசுவாரையும் கூறியன என்க.
திருவெண்ணீற்றை அணியக்கூசுதல், உலகவர் இகழ்ச்சிக்கு ஏதுவாய் நிற்கும் சாம்பலாதல் பற்றி.

பண் :

பாடல் எண் : 10

கோணிலா வாளி அஞ்சேன்
கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

கொலைத் தன்மை தங்கிய அம்புக்கு அஞ்ச மாட்டேன். இயமனது கோபத்துக்கும் அஞ்சமாட்டேன். நீண்ட பிறையாகிய, அணிகலத்தையுடைய சிவபெருமானை எண்ணிக் கசிந்து உருகி, நெகிழ்ந்து ஒளிபொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகத் துதித்து நின்று புகழ மாட்டாத ஆண்மை யுடையரல்லாரைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

கோண் இலா வாளி - வளைதல் இல்லாத அம்பு. `கோள் நிலா வாளி` எனப் பிரித்து, `உயிரைக் கொள்ளுதல் பொருந்திய அம்பு` என்று உரைப்பாரும் உளர். நீள் - வளர்தற்குரிய. வாள் நிலாம் - ஒளி பொருந்திய. `நீர் சோர` என ஒரு சொல் வருவிக்க. ஆண் - புருடத்தன்மை; அஃது அதனையுடையாரைக் குறித்தது. சிறந்த புருடார்த்தத்தை அறியாமையின், சிவபெருமானை வாழ்த்தாதவரை, `புருடத்தன்மை உடையரல்லாதவர்` என்றார். எனவே, இது, மக்கட் பிறப்பின் பயனை அடைய நினையாதவரைக் குறித்தவாறாயிற்று.
சிற்பி