திருவாசகம்-திருப்பொன்னூசல்


பண் :

பாடல் எண் : 1

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

போருக்கு அமைந்த கூரிய வேலையொத்த கண்களையுடைய பெண்களே! மேன்மை பொருந்திய பவளம் கால்களாகவும், முத்து வடம் கயிறு ஆகவும் உடைய, அழகு பொருந்திய பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி இனிமையாய் இருந்து, திருமால் அறியாத அன்றலர்ந்த தாமரை போலும் திருவடியை நாய் போன்ற அடியேனுக்கு உறைவிடமாக தந்தருளிய திருவுத்தர கோச மங்கையில் எழுந்தருளியிருக்கிற தெவிட்டாத அமுதம் போன்ற வனது அருளாகிய இரண்டு திருவடியைப் புகழ்ந்து பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

``கால், கயிறு`` என்பவற்றின் பின் தனித்தனி எச்ச உம்மை விரித்து, அவற்றை ``ஆக`` என்றதனோடு முடிக்க. `ஆக, அமர்ந்து, பாடி ஆடாமோ` என வினைமுடிக்க. நாள் மலர் - அன்றலர்ந்த தாமரை மலர்போலும். ஊராக - வாழும் இடமாகும்படி.

பண் :

பாடல் எண் : 2

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொழிப்புரை :

மயிலைப் போன்ற சாயலைப் பெற்று, அன்னத்தைப் போன்ற நடையையுடைய பெண்களே! விளங்குகின்ற மூன்று கண்களை உடையவனும், கெடாத விண்ணுலகில் தங்கி யிருக்கும் தேவர்களும் காணமுடியாத தாமரை போன்ற திருவடி தேன் கலந்தது போன்று இனித்து அமுதாய் ஊற்றெடுத்து அது விளங்கி உடலில் பொருந்தி உருக்குகின்ற திருவுத்தர கோச மங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந்தருளி இருக்கும் திருவிடை மருதூரைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடு வோம்.

குறிப்புரை :

`அங்கு இலங்கு மூன்றாகிய நயனத்தான்` என மாற்றி யுரைக்க. ``அங்கு`` என்றது பண்டறி சுட்டாய், ஆகாயத்தைக் குறித்தது. மூன்று, முச்சுடர். முச்சுடர்களுள் தீ நிலத்தின்கண் உள்ள தாயினும், பெரும்பான்மைபற்றி, ``அங்கு`` என்று அருளிச்செய்தார். `தேன் தங்கியாங்கு` எனவும், `அமுதூறியாங்கு` எனவும் உவம உருபு விரிக்க. ``தித்தித்து`` என்றதனை, `தித்திக்க` எனத் திரிக்க, தெளிந்து - தெளியப்பட்டு. `தான் தெளிந்து ஊன் தங்கி நின்று அங்கு அமுதூறி உருக்கும்கோன்` என இயைக்க.
குலம் - மேன்மை. `போன்ற` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. ``போன்றங்கு`` என்றதில் ``அங்கு`` என்ற அசை நிலை இடைச்சொல், ``பொன்னூசல் ஆடாமோ`` என்றதன் முன்னர்க் கூட்டப்படும்.

பண் :

பாடல் எண் : 3

முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

பொன் பொருந்திய ஆபரணங்கள் அணிந்த முலை களையுடைய பெண்களே! நினைக்கப்பட்ட முடிவும் முதலும் இல்லாத வன் முனிவர் கூட்டமும் பல நூறுகோடி விண்ணவரும் காத்து நிற்க, தனது திருநீற்றை எனக்கு அளித்து, தனது அருள் வெள்ளத்திலே, மிகு தியாக யான் ஆழ்ந்து கிடக்கும்படி எழுந்தருளியிருக்கின்றவனுடைய அழகிய உத்தரகோச மங்கையில் மாடங்களையுடைய அகன்ற கோயி லைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

முன் - `நினைக்கப்படுகின்ற. `ஈறும் ஆதியும் இல்லானாகிய மணி` என்க. `முனிவர் குழாமும், பல்நூறுகோடி இமையவர்கள் தாமும் நிற்பத் தனது திருநீற்றை எனக்கு அருளித் தனது கருணையாகிய வெள்ளத்தில் யான் பெரிதும் ஊறிக் கிடக்குமாறு என் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கும் மாணிக்கம் போல்பவனது உத்தரகோச மங்கைத் தலத்தின் மாளிகையைப் பாடி ஆடாமோ` என்றபடி.
திருநீறு, சிவபெருமானது திருவருளின் வடிவாகலின், ``தன்நீறு`` என்று அருளினார். ``திருவடி நீறு`` (தி. 4 ப.109 பா.2) என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசரும். ``மணி`` உவமையாகு பெயர். மின் - ஒளி. ``மாளிகை`` என்றது, கோயிலை.

பண் :

பாடல் எண் : 4

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

தொகுதியாகப் பொருந்திய, வெண்மையான வளையலை அணிந்த பெண்களே! விடம் தங்கிய கண்டத்தை யுடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற மேல் மாடங்களையுடைய அழகிய திருவுத்தர கோச மங்கை யில் இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடியவனும் அடி யாரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமுதம் சுரப்பவனும் இறப்புப் பிறப்புகளைத் தவிர்ப்பவனுமாகிய தூய்மையானவனின் புகழினைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

மஞ்சு - மேகம். இங்கும், ``அமுதம் ஊறி`` என்றதற்கு, மேல் (தி.8 திருப்பொன்னூசல். பா.2) உரைத்தவாறே உரைக்க. துஞ்சல் - இறத்தல். ``பிறப்பு`` என்றதும், `பிறத்தல்` என அத்தொழிலையே குறித்தது. புஞ்சம் - தொகுதி.

பண் :

பாடல் எண் : 5

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

ஆபரணங்கள் நிறைந்த அழகிய முலைகளை யுடைய பெண்களே! ஆண் இனமோ, அலி இனமோ, பெண் ணினமோ, என்று அயன் மாலாகிய இருவரும் காண முடியாத கட வுளும் தன் பெருங்கருணையால் தேவர் கூட்டம் நாணம் அடையாமல் பிழைக்கும்படி அடிமை கொண்டருளி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உணவாக உண்டருளியவனும், திருவுத்தர கோச மங்கையிலுள்ள, வளைவுள்ள பிறையணிந்த சடையையுடையவனு மாகிய இறைவனது குணத்தைத் துதித்து நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

அரிவை - பெண். ``இருவர்`` என்றது, தொகைக் குறிப்பாய், அயன் மாலைக் குறித்தது. `இருவர்தாமும்` என உயர்வு சிறப்பும்மை விரிக்க. அவர்தாமே காணாராயின பின், பிறர் காணாமை சொல்லவேண்டாவாயிற்று. ``நாணுதல்`` இங்குத் தோல்வியுறுதல். அது `தோற்று அழியாதபடி` எனப் பொருள்தந்தது. ``ஆட்கொண்டு`` என்றது, அபயம் அளித்தமையை. கோண் ஆர் - வளைவு பொருந்திய.

பண் :

பாடல் எண் : 6

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொழிப்புரை :

அரும்பு போன்ற அணிகளோடு கூடிய முலைகளையுடைய பெண்களே! மங்கை தங்கு பங்கையுடையவனும், திருவுத்தர கோச மங்கையிலுள்ள, மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடையையுடையவனும், தன்னடியார்களுள்ளே நாய் போன்ற என்னைச் சீராட்டி அடிமை கொண்டு என் முற்பிறப்பில் உண்டாகிய வினை மேலெழுந்து பற்றாதபடி, யான் ஞானத்தோடு விளங்கப் பிறவித் தளையை அறுப்பவனுமாகிய இறைவனது திருச்செவிகளில் ஆடுகின்ற குண்டலங்களைப் பாடி, அன்பால் உருகி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``ஆடு`` இரண்டும், `பொருந்திய` எனப் பொருள்தந்தன. `நாயேனை ஆட்கொண்டு தன் அடியாருள் வைத்துக் கோதாட்டி` என்க. பிறவித் தீது - பிறவிக்கு ஏதுவாய தீமை; என்றது ஆகாமிய வினையை, ஓடா வண்ணம் - கிளைக்காத நிலைமை; அஃதாவது, திருவடி ஞானம் அல்லது திருவருள் உணர்வு. திகழ - திகழ்தலால்; `அவ்வுணர்வு திகழுமாறு செய்பவனும் அவனே` என்றதாயிற்று. காதணி, இறைவற்கும், ஆசிரியர்க்கும் சிறப்புடைய தோர் அணிகலமாகலின், ``காதாடு குண்டலங்கள் பாடி`` என அதனையே விதந்தருளிச் செய்தார். போது - பூமாலை; ஆகு பெயர்.

பண் :

பாடல் எண் : 7

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

அணிகளை அணிந்த பொன்னை நிகர்த்த தனங்களையுடைய பெண்களே! நினைத்தற்கரிய, திருவுத்தர கோச மங்கையில் நிலைபெற்று, விளங்குகின்ற பெருமையுடைய வேதி யனும் தனது புகழினையே பலகாலும் சொல்லித் தாழ்ந்து வணங்க, பாவங்களின் பிடிப்பை ஒழிப்பவனும், என் அப்பனும் என்னையும் ஒரு பொருளாக அடிமை கொண்டவனுமாகிய இறைவனது, அழகினைப்பாடி அன்னப்பறவையின் மீது ஏறி ஆடுகின்ற அழகிய மயிலைப் போன்று நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

மறையோன் - அந்தணன். `மறையோனும், அறுப் பானும், ஆட்கொண்டானும் ஆகிய அவனது எழிலைப்பாடி` என்க. நான்காம் அடியை, `பொன்னூசல்` என்றதற்கு முன்னர்க் கூட்டுக. இவ் வடி, இல்பொருள் உவமை. மெல்ல அசைந்தாடும் ஊசலுக்கு, அத் தன்மையான நடையை உடைய அன்னம் உவமையாயிற்று. `சுணங்கு` எனப்படும் அழகிய தேமலால், தனங்கள் பொன்போல விளங்குவ வாயின என்க.

பண் :

பாடல் எண் : 8

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

உலகம் உய்யும்படி அழகிய கயிலை மலையின் உச்சியினின்றும் குவலயத்து நிலவுலகில் இறங்கி வந்து, வந்தி தரும் பிட்டினை நிரம்ப உண்டும், மிக ஆழமான கடலில் வலைஞனாய்க் கட்டு மரத்தின் மீது ஏறியும் பரிமேலழகனாய்க் குதிரை மீது வந்தும், நம்மை ஆண்டருளினவனாகிய நல்லொழுக்கம் விளங்குகின்ற, திருவுத்தர கோச மங்கையிலுள்ள, திருமாலுக்கும் காணுதற்கு அருமையான இறைவனை நாம் வாய் நிரம்பப் பாடி உடல் பூரித்து, மனம் நெகிழ்ந்து, பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்.

குறிப்புரை :

கோலவரைக் குடுமி வந்து - அழகிய திருக்கயிலை மலைச் சிகரத்தினின்றும் போந்து. ``அமுது`` என்றது, வந்தி தந்த பிட்டினை. ``சிவபுரத்தார் போரேறு - மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளி`` (தி.8 திருப்பூவல்லி. பா.16) என முன்னர் அருளிச் செய்தது காண்க. கடலின் மீது எழுந்து சென்றது, வலைவீசிய திரு விளையாடலிலாம். `உண்டு, எழுந்து` என்ற எச்சங்கள், எண்ணின் கண் வந்தன. ஞாலம் மிக - மண்ணுலகமே மேலான உலகமாம்படி. ``பரிமேற்கொண்டு நமை ஆண்டான்`` என்றதனால், இறைவன் மதுரையில் குதிரை வாணிகனாய் வந்தது, அடிகள் பொருட்டே என்பது ஐயமின்றித் துணியப்படுவதாம். `ஆண்டானாகிய அரியானை` என்க. `பூரித்து` என்பது எதுகைநோக்கி, `பூலித்து` எனத் திரிந்தது. பூரித்தல் - மகிழ்தல்.

பண் :

பாடல் எண் : 9

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொழிப்புரை :

விளக்கம் பொருந்திய, ஆபரணங்களை அணிந்த முலைகளையுடைய பெண்களே! தென்னை மரங்கள் பரவியுள்ள சோலையையுடைய திருவுத்தர கோச மங்கையில் தங்குதல் பொருந்திய ஒளிமயமான, ஒப்பற்ற திருவுருவத்தை உடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியைத் தொலைத்து எம் போல் வாரையும் அடிமை கொள்ளும் பொருட்டு, ஒரு பாகமாகப் பொருந்திய மங்கையும் தானுமாய்த் தோன்றி, என் குற்றேவலைக் கொண்ட, மணம் தங்கிய கொன்றை மாலையணிந்த சடையை யுடையவனது குணத்தைப் புகழ்ந்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்.

குறிப்புரை :

இதனுள், ``உலவு`` என்றன பலவும், `பொருந்திய` எனப் பொருள் தந்தன. தெங்கு - தென்னை மரம். தங்கு - தங்குதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``சோதி உருவம்`` என்றது, இலிங்க வடிவத்தை. ஆட்கொள்வான் - ஆட்கொள்ளுதற்பொருட்டு. `எங்களைப் பணிகொண்ட` என்க. ``கொண்ட`` என்றது, `கொண்டதுபோன்ற` என்னும் பொருளது. கொங்கு - தேன். திருவுத்தரகோச மங்கைத் தலத்தில் உள்ள இலிங்க மூர்த்தி முன்னர் நின்று, ``என்னை விடுதிகண்டாய்`` என அடிகள் வேண்டிய உடன் இறைவன் முன்போலவே ஆசிரியத் திருமேனியுடன் எழுந்தருளி வந்து அருள் செய்தமையின், அவ்வுருவமே வந்து பணிகொண்டது போன்ற கொன்றைச் சடையான்` என்று அருளிச்செய்தார். பொங்கு - பொங்குதல்; பூரித்தல்.
சிற்பி