திருவாசகம்-திருத்தோணோக்கம்


பண் :

பாடல் எண் : 1

பூத்தாரும் பொய்கைப்
புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம். 

பொழிப்புரை :

விளங்குகின்ற தில்லை அம்பலத்தின் கண்ணே திருநடனம் செய்கின்ற கூத்தனே! உனது செம்மையான திருவடியை அடையும்படி, மலர்கள் பூத்து நிரம்பி இருக்கின்ற தடாகநீர் இதுதான் என்று எண்ணிக் கானலை முகக்கின்ற அறிவிலியினது குணம், எங்களுக்கு உண்டாகாமல் நீக்கினவனே! என்று பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

``பூத்து ஆரும்`` என்றதற்கு, `பூக்கள்` என்னும் வினை முதல் வருவிக்க. இஃது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றவாறு.
பேய்த்தேர் - கானல். உறு, துணைவினை. பேதை குணம் - அறிவிலியின் தன்மை. `பேதைதன் குணம் எனக்கும் ஆகாமே எனது பேதைமையைத் தீர்த்தாய்` என்க. அஃதாவது `நிலை யில்லாத உலக இன்பத்தை நிலையானதாகக் கருதி நுகர விரும்பும் தன்மை உண்டாகாதபடி, அதற்கு ஏதுவாகிய பேதைமையைப் போக்கினாய்` என்றபடி. ``தோணோக்கம்`` என்னும் எழுவாய்க்குரிய, `ஆடப்படு கின்றது` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
எனவே, `உன் புகழையே பாடி ஆடுகின்றோம்` என்பது கருத்தாயிற்று. இது, முன்னிலைப் பரவல், இனி வருவன, படர்க்கைப் பரவல், ``ஏனை யொன்றே, தேவர்ப் பாராய முன்னிலைக் கண்ணே`` (தொல்.செய்.133.) என்றமைபற்றி, முன்னிலைக்கண் வருதலை. `பரவல்` என்றும், படர்க்கைக்கண் வருதலை, `புகழ்தல்` என்றும் வேறுபடுத்தும் கூறுப.

பண் :

பாடல் எண் : 2

என்றும் பிறந்திறந்
தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந்
தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை
அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர்
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

நெருங்கிப் பொருந்திய கூந்தலையுடையீர்! எக்காலத்தும் பிறந்தும் இறந்தும் துன்பக் கடலில் அழுந்தாமல் என்னை அடிமை கொண்டவனும், கன்றைக் கொண்டு விளங்கனியை எறிந்த வனாகிய திருமாலும் பிரமனும் காணுதற்கு அருமையான குறையாத பெருமையையுடைய தில்லை அம்பலத்தை உடையவனுமாகிய இறை வனது அருட்குணத்தைப் போற்றி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

`ஆண்டுகொண்டானாகிய அம்பலவன்` என்க. திரு மால் கண்ணணாய்த் தோன்றியிருந்தபொழுது கன்றால் விளங்கனியை எறிந்த வரலாற்றைக் கிருட்டின பாகவதத்துட் காண்க. துன்று ஆர் - நெருங்குதல் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 3

பொருட்பற்றிச் செய்கின்ற
பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி
வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார்
சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

வேடராகிய கண்ணப்பரது பெருமையை உலகம் அறிய அவரது செருப்பு அணிந்து சிறந்த அடியும் வாயாகிய குடமும் மாமிசமாகிய உணவும் ஆகமப் பொருள் பற்றிச் செய்கின்ற பூசைகள் போல விளங்கும்படி விருப்பமாய் ஏற்று இறைவன் திருமேனி குளிர, அப்பொழுதே அவர் திருவருள் பெற்று நின்ற வரலாற்றைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

`பொருள்பற்றி, அருள்பெற்று` என நிற்கற்பாலன; எதுகை நோக்கி, ளகரம் திரிந்து நின்றன. பொருள் - ஆகமங்களிற் சொல்லப்பட்ட விதிகள். `அவற்றிற்கு முரணாகக் குற்றம்படச்செய்தும் அருளைப்பெற்று நின்ற வியப்பைப் பாடி ஆடுவோம்` என்றபடி. `விளங்குமாறு அதனை விரும்பி` என உரைக்க. ``கலசம்`` என்றது, அதன்கண் நீரைக் குறித்தது. `அடி, கலசம், அமுதம்` என்ற செவ் வெண்ணின்பின், `இவை` என்னும் பெயரும், `இவற்றை` என்னும் உருபும் தொகுத்தலாயின. வாய்க்கலசம், இருபெயரொட்டு; உருவகம் அன்று, அமுதம் - உணவு. `வேடனார், கண்ணப்ப நாயனார்` என்பது வெளிப்படை. `வேடனாரது சேடு` என்க. சேடு - பெருமை, என்றது, அன்பின் சிறப்பை. ``அறிய`` என்றது, `மதிக்க` என்னும் பொருட்டாய், மகிழ்தலைக் குறித்தது. முன்னைத் திருப்பாட்டில், `தில்லை அம்பலவன்` என்றது இதற்கு எழுவாயாய் வந்து இயையும். காரணப் பொருளில் வந்த, ``அறிய`` என்ற எச்சம், ``பெற்றுநின்றவா`` என்ற வற்றோடு முடியும். மெய் - உடல். நின்றவா - என்றும் இறைவன் வலப் பக்கத்தில் மாறிலாது நின்றவகை. `கண்ணப்ப நாயனாரது அன்பின் சிறப்புக்கருதி அவரது பொருந்தாச் செயல்களை இறைவன் சிறந்த வேதாகம முறைப்படியே செய்கின்ற பூசைபோல ஏற்று மகிழ்ந்து அருள்புரிந்தான்` என, அன்பு ஒன்றையே விரும்பும் அவனது அருளின் பெருமையை வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 4

கற்போலும் நெஞ்சங்
கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன்
நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை
நாடறியத் தான்இங்ஙன்
சொற்பால தானவா
தோணோக்கம் ஆடாமோ.

பொழிப்புரை :

வலிமையான கல்லை ஒத்த என் மனமானது நைந்து உருக, கருணையினால் இறைவனைப் போலத் தோன்றி என் மனத்தின் கண்ணே நுழைந்தருளி என்னை நன்மைப் பகுதியிற்படுத்தி உலகம் அறியும் வண்ணம் பலரும் பேசும் நிலைமையை உடைய பொருள் ஆனாவற்றைச் சொல்லி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

`என் நெஞ்சம் கசிந்துருக` என உரைக்க. நிற்பானைப் போல - ஏனையோர்போல என்றும் புலப்பட்டு நிற்பவனைப் போல; இதற்கு, `வந்து` என்னும் முடிபு வருவிக்க. நற்பால் - நன்னெறி. `நாடறிய நற்பாற்படுத்து` என, முன்னே கூட்டுக. ``தான்`` என்றதும், தில்லை அம்பலவனையே என்பது வெளிப்படை. சொற்பாலது ஆனவா - சொல்லின்கண்ணதாம் பொருளானவாற்றை (ப்பாடி); `இது அவன் திருவுரு; இவன் அவன்` (தி.8 திருப்பள்ளி.7.) என உணர்ந்து சொல்லும்படி விளங்கியவாற்றைப்பாடி` என்றவாறு, `தான், என் நெஞ்சம் உருகும்படி கருணையினால் வந்து புகுந்தருளி என்னை நற்பாற் படுத்து இங்ஙன் ஆனவா` என வினைமுடிக்க.

பண் :

பாடல் எண் : 5

நிலம்நீர் நெருப்புயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ
டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகே ழெனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

இறைவன் ஒருவனே, நிலமும், நீரும் தீயும், வாயுவும், பெரிய ஆகாயமும், சந்திரனும் சூரியனும், அறிவுருவாய ஆன்மாவும் என்னும் எட்டு வகைப் பொருள்களாய் அவற்றோடு கலந்து இருப்பவனாய் ஏழுலகங்களும் திக்குகள் பத்தும் ஆகப் பல பொருள்களாக நின்ற வகையைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

உயிர் - காற்று. விசும்பு - ஆகாயம். நிலா - சந்திரன். பகலோன் - சூரியன். புலன் - புலம்; அறிவு; போலி. ஆன்மாவை, ``மைந்தன்`` என்றார், `புருடன்` என்னும் வடநூல் வழக்குப்பற்றி. `ஐம்பூதம், இருசுடர், ஆன்மா` என்னும் எட்டும் இறைவனுக்கு, `அட்ட மூர்த்தம் - எட்டுரு` எனப்படுதலின், ``எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்`` என்று அருளினார். திருநாவுக்கரசரும் இவ்வாறே,
``இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாய்எறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகி`` (தி.6 ப.94 பா.1)
என்று அருளிச்செய்தல் காண்க. `தான் ஒருவனுமே ஏழ் உலகெனப் பத்துத் திசையெனப் பலவாகி நின்றவா (பாடி)` என்க. ``என`` என்றவை, `எண்ணிடைச் சொற்கள்`.
ஈறாய்முத லொன்றாய்இரு பெண்ஆண்குணம் மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே.
என்ற திருஞானசம்பந்தரது திருமொழியை (தி.1 ப.11 பா.2) இங்கு உடன்வைத்து நோக்குக.

பண் :

பாடல் எண் : 6

புத்தன் முதலாய
புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில்
தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச்
செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால்
தோணோக்கம் ஆடாமோ.

பொழிப்புரை :

புத்தன் முதலான சிறு அறிவினையுடைய பல சமயத்தவர் தங்கள் தங்கள் சமயங்களில் தடுமாற்றம் அடைந்து நிற்க, என் சித்தத்தைச் சிவமயமாகச் செய்து யான் செய்த செயல்களையே, தவமாகச் செய்த எம் இறைவனது கருணையைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

திருவள்ளுவராற் செய்யப்பட்ட நூலை, `திருவள்ளுவர்` என்றல்போல, புத்தனால் ஆக்கப்பட்ட சமயத்தை, `புத்தன்` என்றது, கருத்தாவாகுபெயர். இதனை, ``வினை முதல் உரைக்கும் கிளவி`` என்பர் தொல்காப்பியர் (சொல். 115.).
மதம் - கொள்கை. தட்டுளுப்பு - நிலைதளர்தல்; அஃதாவது பயன்பெறா தொழிதல். சமயிகளது செயல், சமயங்களின்மேல் ஏற்றப் பட்டது. `நம் சித்தம்` எனவும், `நாம் செய்தன` எனவும் எடுத்துக் கொண்டு உரைக்க. சிவம் - சிவகரணம். கருணையினால் - கருணையைப் பாடும் பாட்டோடு.

பண் :

பாடல் எண் : 7

தீதில்லை மாணி
சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன்
தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன்
திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு
பற்றினவா தோணோக்கம். 

பொழிப்புரை :

தீமை சிறிதும் இல்லாத பிரமசாரியாகிய சண்டேசுர நாயனார் சிவபூஜையை அழித்தவனும் குலத்தால் அந்தணனும், முறையால் தந்தையுமாகிய எச்சதத்தனைக் கால்கள் இரண்டையும் வெட்ட அப்பாவச் செயலாலேயே இறைவனது திருவருளினால் தேவர்கள் தம்மை வணங்கும்படி இறைவனது பரிகலம் முதலிய வற்றைப் பெற்ற வரலாற்றைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

தீது - குற்றம். `இல்` என்பது, `இல்லென் கிளவி` என்னும் நூற்பாவின்வழி, (தொல் - எழுத்து. 373.) ஈற்றில் ஐகாரச் சாரியை பெற்றது. மாணி - பிரமசாரி; விசாரசருமர். இவரே பின் சண்டேசுர பதவியைப் பெற்றுச் சண்டேசுர நாயனாராயினார். இவரது வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்துள் விளங்கக் காண்க. ``மாணி`` என்றதில் தொக்குநின்ற ஆறனுருபு, `சாத்தனது செலவு` என்பது போல, வினைக் கிழமைக்கண் வந்தது. ``கருமம்`` என்றது, தொண்டினை. `சாதியாலும்` என்னும், ஏதுப் பொருட்டாகிய மூன்றாம் உருபு, தொகுத்தலாயிற்று. `வேதியனாகிய தாதை` என்க. ``சிதைத் தான், தாதை`` என்றவை, ஒருபொருள்மேற் பல பெயர். ``தாதை தனைத் தாள் இரண்டு சேதிப்ப`` என்றது, `யானையைக் கோடுகுறைத் தான்` என்பதுபோல நின்றது.
சேதித்தல் - வெட்டுதல். `அப்பாதகமே` எனச் சுட்டு வருவித்து, ``சேதிப்ப`` என்றதன் பின்னர்க் கூட்டுக. பாதகத்தைத் தரும் செயலை, ``பாதகம்`` என்றது, காரியவாகுபெயர். `கூழ்` என்பது போல, `சோறு` என்பதும் உணவைக் குறிப்பதொரு சொல்; அஃது இங்கு, `பயன்` என்னும் பொருட்டாய் நின்றது, இனி, `சிவபிரானுக்கு நிவேதிக்கப்பட்ட திருவமுதின் பகுதியையே குறித்தது` என்றலுமாம்; என்னை? இந்நாயனார்க்குச் சிவபெருமான்,
``நாம் - உண்டகலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காக`` (-தி.12 பெ.புரா.சண்டேசுரர்.56 )
என அருள் புரிந்தமையான் என்க. ``பாதகமே பற்றினவா`` எனக் கருவி வினைமுதல்போலக் கூறப்பட்டது. எனவே, `பாதகந்தானே சிறந்த நன்மையைப் பெறுதற்கு வழியாயினவாற்றைப் பாடி` என்பது பொருளாயிற்று.

பண் :

பாடல் எண் : 8

மானம் அழிந்தோம்
மதிமறந்தோம் மங்கைநல்லீர்
வானந் தொழுந்தென்னன்
வார்கழலே நினைந்தடியோம்
ஆனந்தக் கூத்தன்
அருள்பெறில்நாம் அவ்வணமே
ஆனந்த மாகிநின்
றாடாமோ தோணோக்கம். 

பொழிப்புரை :

மங்கைப் பருவத்தை உடைய நல்ல பெண்களே! அடியோங்கள் ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற இறைவனது திரு வருளைப் பெற்றுள்ளோம் என்றால் உலகியலில் மானம் அழிந்தோமா யினோம்; நம்மை மறந்தோமாயினோம்;
ஆகையால், நாம் அவ்வாறே விண்ணுலகத்தவர் வணங்குகின்ற தென்னவனாகிய அவனது நீண்ட வீரக்கழலை அணிந்த திருவடிகளையே நினைந்து ஆனந்தமே வடிவாய் நின்று தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

``மானம் அழிந்தோம்; மதிமறந்தோம்`` என்றதனை, ``அடியோம்`` என்றதன்பின்னர்க் கூட்டி, அதன் பின்னர், `இவ்வாறு` என்பது வருவிக்க. மானம், உலகத்தாரால் நன்கு மதிக்கப்படும் நிலை. மதி - அதனைப் பெறுதற்கு ஆவனவற்றை அறியும் அறிவு. தென்னன்- தென்னாட்டில் விளங்குபவன்.
நினைந்து - நினைதலால். ``பெறில்`` என்றது, ``நீரின் றமையா துலகெனின்`` (குறள் - 20) என்பதுபோல, `பெற்றது உண்மையாயின்` எனப் பொருள் தந்தது. அவ்வண்ணமே - அவ்வருள்வழியே.

பண் :

பாடல் எண் : 9

எண்ணுடை மூவர்
இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை
கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர்
எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர்
மாண்டனர்காண் தோணோக்கம். 

பொழிப்புரை :

உயர்வாக எண்ணத் தகுந்த மூவர், அரக்கர்கள் முப்புரம் எரித்த போது பிழைத்து, நெற்றிக்கண்ணை உடைய எம் தந்தையின், வாயிற்படியில் துவாரபாலகராய் நின்ற பிறகு அளவு கடந்த இந்திரர்களும், எத்தனையோ பிரமர்களும் இறந்தனர் என்று நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

எண் உடை - என்றும் சிவபெருமானை மறவாது நினைத்தலையுடைய. அசுரர்களை, ``இராக்கதர்`` என்று அருளினார். இவர், திரிபுரத்தில் அழியாது உய்ந்தவர். இவரைப் பற்றிய குறிப்பை மேலே (தி.8 திருவுந்தியார். பா.4- உரை.) காண்க. `எண்ணிலி` என்பதே ஓர் எண்போல அருளினார். மண் மிசை - மண்ணை உண்கின்ற. `மால்கள்` என்பதில் கள்விகுதி தொகுத்தலாயிற்று. இதனால், இறைவனது திருவருளைப் பெறாதோர் காலவயப்பட்டு இறத்தலையும், அதனைப் பெற்றோர் காலத்தைக் கடந்து வீடு பெறுதலையும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 10

பங்கயம் ஆயிரம்
பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன்
சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான்
சக்கரம்மாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம்
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

ஆயிரம் தாமரைமலர்களுள் ஒரு மலர் குறைய தமது கண்ணைத் தோண்டி, சிவபெருமானது திருவடி மீது சாத்தலும் சங்கரனாகிய எம்மிறைவன், திருமாலுக்குச் சக்கரப்படை அளித்த வரலாற்றை எங்கும் நாம் துதித்துத் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

``ஆயிரம்`` என்றதன்பின், `எனக்கொண்ட` என்பது வருவிக்க. `திருமால் சிவபெருமானிடம் சக்கரம் பெறுதற்கு நாள் தோறும் ஆயிரந் தாமரை மலர் கொண்டு அருச்சிப்பேன் எனக் கருதிக்கொண்டு அவ்வாறு அருச்சித்துவருகையில், ஒருநாள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்துவிட, அதற்கு ஈடாகத் திருமால் தனது கண்ணைப் பறித்து அருச்சித்ததனால் சிவபெருமான் மகிழ்ச்சியுற்றுச் சக்கரத்தை அளித்தருளினார்` என்பது புராண வரலாறு.
இதனை, காஞ்சிப் புராணத் திருமாற்றுதிப் படலத்திற் காண்க. இவ்வாறு தி.8 திருச்சாழல் பதினெட்டாம் திருப்பாட்டிலும் குறிக்கப் பட்டது. ``தம்கண்`` என்றது, ஒருமை பன்மை மயக்கம். `தன்கண்` என்றே பாடம் ஓதுதலுமாம். பரவி - துதித்து.

பண் :

பாடல் எண் : 11

காமன் உடலுயிர்
காலன்பல் காய்கதிரோன்
நாமகள் நாசிசிரம்
பிரமன் கரம்எரியைச்
சோமன் கலைதலை
தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

மன்மதனின் உடலையும் இயமனின் உயிரையும் சுடுகின்ற கிரகணங்களையுடைய சூரியனின் பல்லையும் கலைமகளின் மூக்கையும் பிரமனின் தலையையும் அக்கினி தேவனின் கைகளையும், சந்திரனின் கலைகளையும் தக்கனின் யாக தேவனின் தலையையும் நீக்கிப் பாவத்தைப் போக்கித் தூய்மை செய்த விதத்தைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

`காலன் உயிர், கதிரோன் பல், பிரமன் சிரம், எரியைக் கரம். தக்கனையும் எச்சனையும், தலை` என மாறிக் கூட்டுக. பிற இடங்களிலும் ஐயுருபுகள் தொகுத்தலாயின. அவை அனைத்தும், `தூய்மைகள் செய்த` என்பதனோடு முடியும்.
``எரியைக் கரம் தூய்மைகள் செய்த`` என்றது, `யானையைக் கோடு குறைத்த` என்பது போல நின்றது. `எச்சன், வேள்வித் தேவன்` என்பதும், `அவனும் தலையறுக்கப்பட்டான்` என்பதும் மேலே (தி.8 திருச்சாழல். பா.5-2-உரை.) கூறப்பட்டன. `தக்கன் வேள்வியிலும், பிறவிடங்களிலும் தேவர்கள் ஒறுக்கப்பட்டமையால், குற்றம் நீங்கித் தூயராயினர்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 12

பிரமன் அரியென்
றிருவருந்தம் பேதைமையால்
பரமம் யாம்பரம்
என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய்
அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா
தோணோக்கம் ஆடாமோ.

பொழிப்புரை :

பிரமன் திருமால் என்று சொல்லப்பட்ட அவ் விருவரும் தமது அறியாமையால் யாமே பரம்பொருள் என்று, வாது செய்தவர்களுடைய செருக்கு அடங்க, சிவபெருமான், நெருப்புரு வாகி அவ்விடத்தே அளவு கடந்து மேலான பொருளாகி நின்ற வரலாற்றைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

பரமம், பரம் - முதற்பொருள். `என்று அவர்கள்` எனப் பிரித்து, ``என்று`` என்றதனை, `என` எனத் திரிக்க. பதைப்பு - முனைப்பு. இதனுட் குறிக்கப்பட்ட வரலாறு முன்னர்த் திருச்சாழல் ஆறாம் திருப்பாட்டிலும் குறிக்கப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 13

ஏழைத் தொழும்பனேன்
எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன்
பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத
நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

அறிவில்லாத அடியவனாகிய நான் எத்தனையோ காலம் முழுதும் மேலான கடவுளை வணங்காமல் வீணாகக் கழித்தேன். அங்ஙனமிருந்தும் ஊழி முதல்வனும் அழியாத சிறந்த மாணிக்கம் போல்பவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் பிறவியின் வேரைப் பறித்து எறிந்த விதத்தைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

ஏழை - அறிவிலி. தொழும்பனேன் - தொண்டனேன். பாழ் - வறுநிலம். `பரம்பரனைப் பணியாதே பாழுக்கிறைத்தேன்` என இயைக்க. ``பாழுக்கிறைத்தேன்`` என்றது, `அன்ன செயலைச் செய்தேன்` என்ற பான்மை வழக்கு. அஃதாவது, `உலகியலில் நின்று உழைத்தேன்` என்றபடி. ஊழி முதல் - ஊழிக்கு முதலாய் நிற்கும் பொருள். சிந்தாத - கெடாத. தாழ் - பூட்டு. இது, தளையிடத்துள்ளது என்க. பறித்த - தகர்த்த. ``பாசமெனுந் தாழ் உருவி`` (தி.8 அச்சோ-7.) எனப் பின்னரும் அருளுவார்.

பண் :

பாடல் எண் : 14

உரைமாண்ட உள்ளொளி
உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

சொற்கள் தம் ஆற்றல் அடங்குதற்குக் காரணமான உள்ளொளியாகிய உத்தமனாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் மனத்தில் புகுதலும் கரையற்ற ஆசையாகிய பெரிய கடலைத் தாண்டுதலும் தமக்கு உணவு அற்ற இந்திரியங்களாகிய பறவைகள் அஞ்சி ஓட, நமது தன் முனைப்புக் கெட்ட விதத்தைப் பாடி தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

உரை மாண்ட - சொல் அற்ற; என்றது, `அதற்கு அப்பாற்பட்ட` என்றபடி. `உள்ளொளியாகிய உத்தமன்` என்க. ஆன்மா ஒளியும், இறைவன் அதன் உள்ளொளியும் ஆதல் அறிக. ``சோதியுட் சோதி`` (தி.5 ப.97 பா.3) என்றலும் இதுபற்றி. கரை மாண்ட - கரை அற்ற. காமம் - ஆசை; உலகியல் பற்றித் தோன்றும் ஆசை. ஒருகாலும் நிரம்பாது மேன்மேல் வளர்வதாகலின், அது கரையற்ற கடல் போல்வதும், இறைவன் திருவருள் உணரப்பட்ட பின்னர், அவ்வாசை தீர்ந்தொழிதலின், அவ்வாற்றாற் கடக்கப் படுவதும் ஆயினவாறு கண்டுகொள்க. `இந்திரியமாகிய பறவைகட்கு இரை` என்றது, மனத்தை. உலகியல் ஆசையற்றபின் மனம் இந்திரியத் தின் வழிப்படாமையின், அப்பறவைகள் இரிந்தோடலாயின. இரிந்து - நீங்கி. `துரை, மிகுதிப்பாடு` (சிவஞான சித்தி. சூ.2.32. உரை.) என்பர், மாதவச் சிவஞான யோகிகள். எனவே, `தன் முனைப்பு` என்பது பொருளாயிற்று.
சிற்பி