திருவாசகம்-திருப்பொற்சுண்ணம்


பண் :

பாடல் எண் : 1

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

பொழிப்புரை :

தோழியர்களே! முத்துக்களாலாகிய நல்ல மாலையையும், பூமாலையையும் தொங்கவிட்டு முளைப் பாலிகையை யும், குங்குலியத் தூபத்தையும் நல்ல விளக்கையும் வையுங்கள். உருத்திராணியும், திருமகளும், நிலமகளும் கலை மகளோடு கூடித் திருப்பல்லாண்டு பாடுங்கள். கணபதியின் சத்தியும், கௌமாரியும், மகேசுவரியும், கங்காதேவியும், முன்வந்து வெண் சாமரை வீசுங்கள். எமது தந்தையும் திருவையாற்றை உடையவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவன் நிரம்ப அணிதற் பொருட்டுப் பொன் போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

முத்துநல் தாமம் - முத்தினாலாகிய நல்ல மாலை. தூக்கி- தொங்கவிட்டு. மாலை தூக்குதல் முதலியன, மனை எங்குமாம். சத்தி என்பது, உருத்திராணியைக் குறிக்கும். சோமி - திருமகள்; `சந்திரனுக்குப் பின் பிறந்தவள்` என்பது இப்பெயரின் பொருள். `பாற் கடல் கடையப்பட்ட பொழுது, சந்திரனும், திருமகளும் அதன்கண் தோன்றினர் என்பது புராணம். பார்மகள் - நிலமகள். திருமகள், நிலமகள் இருவரும் திருமாலுக்குத் தேவியராதலையும், நாமகள் நான்முகன் தேவியாதலையும் அறிக. இவரது பெயர்களெல்லாம் இங்குப் பெண்களுக்கு இடப்பட்டவை எனக் கொள்க. பல்லாண்டு, `பல்லாண்டுக் காலம் வாழ்க` என வாழ்த்திப் பாடும் பாடல். ``சித்தி`` முதலிய மூன்றும் உமையம்மைதன் பெயர்களே. அவற்றையுடைய வேறு வேறு மகளிர், இங்குக் குறிக்கப் பட்டனர். சித்தி - ஞான வடிவினள். கௌரி - செம்மைநிறம் உடையவள். `உமையம்மை ஒரு பொழுது செம்மை நிறமுடையளாய்த் தோன்றினாள்` என்பதும் புராணம். பார்ப்பதி - மலைமகள். ``ஐயாறன்`` என்றதன்பின், `ஆகிய` என்பது விரிக்க. `அவன் ஆட` எனச் சுட்டுப் பெயர் வருவித்துரைக்க. ஆட - மூழ்க; என்றது இங்கு நெய்பூசி மூழ்குதலைக் குறித்தது. நெய் பூசியபின், நறுஞ்சுண்ணம் திமிர்ந்து மூழ்குதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நி லாமே
குனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்
தேவியுங் தானும்வந் தெம்மை யாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

அழகு பொருந்திய நீண்ட சடையுடைய எம் பெருமானுக்கு அழகிய பொற்சுண்ணத்தை இடிக்க வேண்டும். மாம் பிஞ்சின் பிளவை ஒத்த கண்களையுடைய பெண்களே! வாருங்கள்! வந்து விரைவிற் பாடுங்கள்! அடியார்கள் வெளியில் இல்லாதபடி அவர்களை அழையுங்கள்! ஆடுங்கள்! வணங்குங்கள். எமது இறை வனாகிய கூத்தப் பிரான் இறைவியும் தானுமாய் எழுந்தருளி வந்து எம் வழிபாட்டை ஏற்று எம்மை அடிமைகொள்ளும் பொருட்டுச் செம் பொன்போல ஒளிவிடும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

பூ இயல் - பூக்கள் பொருந்திய. பொன் திருச்சுண்ணம்- பொன் போலும் அழகிய சுண்ணம். ``இடிக்க`` என்பது, தொழிற் பெயர்ப் பொருள் தந்தது. கூவுமின் - அழையுங்கள். `தொண்டர் புறம் நில்லாதவாறு அவரை இங்கு அழையுங்கள்` என்க. குனிமின் - நடனம் செய்யுங்கள். ஆள - ஆளுதற்பொருட்டு. `வேண்டும்` என்பது, செய் வினை வாய்பாடாய் நின்று, ` வேண்டப்படும்` எனப் பொருள் தந்து இன்றியமையாமை குறிப்பதொரு செய்யுமென்முற்று. சொல் வார்க்கும், கேட்பார்க்கும் உள்ள தகுதி வேறுபாடுகளால், இஃது இரத்தற் குறிப்பையும், விதித்தற் குறிப்பையும் உடன் உணர்த்தி நிற்கும். இவ்வேறுபாட்டானே இது தன்மை முன்னிலைகளினும், படர்க்கைப் பலர்பாலினும் வருதல் பொருந்துவதாயிற்று. இஃது இயல் பாய் ஏனை வினைச் சொற்கள் போலவரும் `வேண்டும்` என்பதனின் வேறுபட்டதென்க.

பண் :

பாடல் எண் : 3

சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

அழகிய திருநீற்றை அணிந்து கொண்டு தரையை மெழுகுதல் செய்து மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நவமணி களைப் பரப்பி இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு எவ்விடத்தும் அழகிய தீபங்கள் வைத்துக்கொடிகளை ஏற்றுங்கள். விண்ணவர்க்குத் தலைவனும் பிரமனுக்கு முதல்வனும் சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் அழகிய முருகனுக்குத் தந்தையும் எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற உமா தேவியின் கணவனுமாகிய இறைவனுக்குப் பொருந்திய பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

நீறணிதல், மகளிர் நெற்றியிலாம். `நீறணிந்தும் மெழுகி` என்ற மகர ஒற்று, விரித்தல். ``எங்கும்`` என்றதனை, ``மெழுகி`` என்ற தற்கு முன்னர்க் கூட்டுக. எங்கும் - மனையகமெல்லாம். அந்தரர் - விண்ணோர். ஆழியான் - திருமால். விண்ணோர் முதலிய மூவர்க்கும் தலைவன் என்பதை வலியுறுப்பார், பொருட்பின் வருநிலையாக, `கோன், பெருமான், நாதன்` என அப்பெயர்தோறும் தலைமைச் சொற் கொடுத்து அருளிச் செய்தார், `இன்ன பெருமானுக்குச் சுண்ணம் இடிக்கின்றோமாகலின், இந்திரன் கற்பகம் நமக்கு அரிதன்று, என்பாள், இந்திரன் கற்பகம் நாட்டுமின்` என்றாள். ``தாதை`` என்ற தன்பின் `ஆகிய` என்பது விரிக்க.

பண் :

பாடல் எண் : 4

காசணி மின்கள் உலக்கை யெல்லாங்
காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடிய வர்கள்
நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடிப்
பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

உலக்கைகளுக்கெல்லாம் மணிவடங்களைக் கட்டுங்கள். கருமை நிறமுடைய உரல்களுக்குப் பட்டுத்துணியைச் சுற்றுங்கள். இறைவனிடத்து அன்புடைய அடியவர்கள் நிலைபெற்று விளங்குக என்று வாழ்த்தி உலகமெல்லாம் புகழ்ந்து கொண்டாடுகின்ற காஞ்சிமா நகரிலுள்ள திருவேகம்பனது செம்பொன்னால் செய்யப் பட்ட திருக்கோயிலைப் பாடி, தளையாகிய இரு வினைகளை நீக்கி நின்று திருவருளைப்பாடிப் பொன்போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

காசு - மணி, இரத்தினம். காம்பு - பட்டாடை. `கறுப்பு` என்னும் பொருளதாகிய, `கறை` என்பது, இங்கு அந்நிறத்தையுடைய கல்லைக் குறித்தது. ``தேசமெல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு வேகம்பம்`` என அடிகள் அருளிச் செய்தமை, அத்தலத்தின் பெருமை இனிது விளங்குதற் பொருட்டே என்பது, நன்குணர நிற்பதொன்று. இவ்விடத்தே, `அன்புடையவர்கள் என்றும் நின்று நிலாவுக` என அடியார்களை வாழ்த்தியதும், அடிகளை அங்கு நல்வரவேற்று வணங்கி மகிழ்ந்த அடியவர் குழாத்தினை நினைந்தே போலும்! இத் திருப்பாட்டில் இத்துணை வெளிப்படையான சொற்கள் பொருந்தி யிருப்பவும், அடுத்துவரும் திருப்பாட்டும் இவ்வாறாகவும் இப் பகுதியை இத்தலத்தில் அருளிச் செய்ததாக ஒருவருங்கூறாது போயது வியப்பேயாம். பாசவினை - வினை பாசத்தை என மாறிக் கூட்டுக. முன்னர், `கோயில்பாடி என்றமையின், இங்கு, ``பாடி`` என்றது, அவனது புகழ் முதலிய பிறவற்றையும் பாடி` என்றவாறாம்.

பண் :

பாடல் எண் : 5

அறுகெடுப் பார்அய னும்மரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர்
நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்
நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்த வில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் அறுகம்புல்லை எடுத்த லாகிய பணியைச் செய்வார்கள். அவர்களைத் தவிர ஏனையோராகிய இந்திரன் முதலிய வானுலகத்தவர்களும் முணுமுணுக்கின்ற தேவர் கணங்களும் நமக்குப் பின் அல்லாமல் அவ்வறுகினை எடுக்கவிட மாட்டோம். நெருங்கிய முப்புரத்தை எய்து அழித்த வில்லையுடைய வனாகிய திருவேகம்பனது செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடி நகையோடு கூடிய சிவந்த வாயினையுடையீர்! மூன்று கண்களை யுடைய எம்தந்தைக்குப் பூசிக் கொள்ளும் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

அறுகு - அறுகம் புல். எடுப்பார் - எடுப்பதற்கு முற்படுவார். ஒருவரை மங்கல நீராட்டுவார் முதற்கண் அறுகம் புல்லை நெய்யில் தோய்த்து எடுத்து அதனால் நெய்யேற்றிப் பின் சுண்ணந்திமிர்ந்து நீராட்டுதல் மரபு. அவ்வாறு செய்யுமிடத்து நெய்யேற்றுதற்கண் முற்பிற்பாட்டு முறைமை அதனைச் செய்வாரது தகுதி வேறுபாட்டிற்கு ஏற்ப அமையும். அம்முறைமைக்கண், தகுதி வேறுபாடு தெற்றென விளங்காதாரிடையே பிணக்குண்டாதலும் உண்டு. அவ்வாற்றால் இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுதற்கண் நெய்யேற்றுதற்கு மக்களினும் தேவர் முற்பட்டு அறுகம் புல்லை எடுப்பார் என்பாள், ``அறுகெடுப்பார் அயனும் அரியும் ...... எல்லாம்` என்றாள். அன்றி - அவரன்றியும், ``இந்திரனோடு`` என்றதனால், ``அமரர்`` என்றது, ஏனைத் திசைக்காவலரை என்க. அயன், மால், திசைக்காவலர் என்னும் இவரிடைத் தகுதி வேறுபாடு தெற்றென விளங்கிக் கிடத்தலின், முற்பிற்பாட்டு முறைமைக்கண் இவர் மாட்டுப் பிணக்கு நிகழாமை பற்றி அவர்களை வாளாதே சுட்டி, ஏனைத் தேவரிடையே அவ்வேறுபாடு தெரித்துக்காட்ட வாராமையின், அவர்தங் குழாங்கட்கிடையே பிணக்கு நிகழும் என்பது பற்றி அக் குழாங்களை, ``நறுமுறுதேவர்கணங்கள்`` என்றாள். `நறுமுறுத்தல்`` என்பதை இக் காலத்தார், `முணுமுணுத்தல்` என்பர். இஃது உள்ளத் தெழுந்த வெகுளியைத் தெற்றென வெளிப்படுத்தமாட்டாதார் செய்வது, `தம்மில் பிணங்காதும், பிணங்கியும் முற்படும் தேவர் அனைவரும் நம்மைக் கண்டவழி அஞ்சி நமக்கும் பிற்படுவர்; அவ்வாறின்றி முற்படவே துணிவராயினும், நம் உரிமையை நாம் நிலைநிறுத்திக் கொள்ள வல்லோம்` என்பாள், ``எல்லாம் நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோம்`` எனக்கூறினாள்.
இவள் இங்ஙனம் கூறியது, எப்புன்மையரையும் மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணிக்கும் (தி.8 திருச்சதகம்-10) தனது கருணைத் திறத்தினால், தேவர்க்கும் வழங்காத பெருநிலையைத் தங்கட்கு வழங்கி ஆட்கொண்ட அணுக்கம் பற்றியாம். ``நம்மின்`` எனத் தலைவியையும் உளப்படுத்திக் கூறினாளாதலின், தோழி, குற்றேவல் பிழைத்தாளல்லள் என்க. இஃது ஏனையிடங்கட்கும் ஒக்கும். ``எடுக்க ஒட்டோம்`` என்றதன்பின் `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, `சுண்ணத்தினைத் தாழாது இடிப்போம்` என உரைத்து முடிக்க. தேவர்க்கும் எட்டாத பெருமான் தமக்கு எளிவந்து அருளிய அருட்டிறத்தை இடையறாது எண்ணி எண்ணி நெஞ்சம் கரைந்துருகும் அடிகள், தம் உள்ளத்துணர்ச்சியை இத்திருப்பாட்டின் கண் செய்யுள் நலம்பொதுளத் தெளித்துள்ள அருமையை உணரின், நெஞ்சம் நெக்குருகாதார் யாவர்!

பண் :

பாடல் எண் : 6

உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெ லாம்உரல் போதா தென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
காண உலகங்கள் போதா தென்றே
நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

இவ்வுலகம் முழுவதும் உரல்களை வைப்பதற்கு இடம் போதாது என்று சொல்லும்படி பெரியவர் பலர் பல உலக்கை களைக் கொண்டு ஓங்கி இடிப்பார்கள். உலகங்கள் பலவும் இடம் போதமாட்டா என்னும்படி அடியவர் ஒன்று கூடிப் பார்ப்பதற்கு வந்து நின்றனர். நாம் நன்மையடைய, அடியார்களாகிய நம்மை ஆட் கொண்டருளி அன்றலர் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாம் சென்னிமேல் சூடிக்கொள்ளும்படி கொடுத்த இமவான் மருமகனாகிய பெருமானைப் பல்கால் பாடிக் களித்துப் பொன்போலும் நிறமுடைய வாசனைப் பொடியை இடிப்போம்.

குறிப்புரை :

பொருள்கோள்; `பெரியர் உலக்கை பலவற்றைக் கொணர்ந்து ஓச்சுவார்; அதனால், உலகமெலாம் உரலாயினும் போதாது என்று சொல்லி, அடியவர் நம்மோடு கலந்து பணிசெய்ய, காண உலகங்கள் போதா என்னும்படி வந்து நின்றார்; ஆதலின்...... நாம் பாடிப்பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும்`. சிவபெருமானது வருகையை முன் உணர்ந்தோர் அதனை முன்னிட்டு நிகழும் ஆர வாரங்களை நினைந்து கூறினராகலின், ``ஓச்சுவார்`` என எதிர்காலத் தாற் கூறினர். பெரியர் - அடியவர். `ஆயினும்` என்பது தொகுத்தல். நலக்க - நலம் அடைய.

பண் :

பாடல் எண் : 7

சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பரா பரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

கைவளையும் தோள்வளையும் பலகாலும் ஒலிக்க, அடியார் கூட்டம் புறப்பட்டு அரகரவென்று அடிக்கடி முழங்க, நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்க, நாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய, கால் அணி மென்மையான பாதங்களில் ஒலிக்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவனாகிய எங்களுக்கு மிக மேலானவனும் பெரிய பொன் மலையை ஒத்த தலைவனுமாகிய இறைவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

சூடகம் - கை வளை. ``ஆர்ப்ப`` என்றன பலவும், நிகழ் காலத்தின் கண் வந்தன. நாடவர் ஆர்ப்ப, நாமும் ஆர்ப்ப` என்ற இரண்டிடத்தும் உள்ள ஆர்த்தல், `சிரித்தல் என்னும்` பொருள, நாடவர் அடியவரைச் சிரித்தல், சிற்றின்பத்தை இகழ்தல் பற்றி. அடியவர் நாடவரைச் சிரித்தல், பேரின்பத்தை இகழ்தல் பற்றி. அடுக்குக்கள், இடைவிடாமைப் பொருளன. பாடகம் ஒருவகைக் காலணி. `மெல்லடியின் கண் பாடகம் ஆர்க்கும் மங்கை` என்க. சிவபெருமான் பொன்னார் மேனியனாகலின். ``ஆடக மாமலை அன்னகோ`` என்றாள். ஆடகம் - பொன்,

பண் :

பாடல் எண் : 8

வாள்தடங் கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்தி லங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

வாள்போன்ற பெரிய கண்களையும் இளமையு முடைய மங்கைப் பருவப் பெண்களே! வரிகளையுடைய வளையல் கள் ஒலிக்கவும் வளப்பம் மிகுந்த தனங்கள் பூரிக்கவும், தோளிலும் நெற்றியிலும் திருநீறுபிரகாசிக்கவும் எம்பெருமானே வணக்கம் என்று பலகாற் கூறி அப்பொழுது பறித்த அன்றலர்ந்த மலர்கள் சூட்டப் பெற்ற திருவடியைக் காட்டி நாயினும் கீழ்ப்பட்ட நம்மை இப்பிறவியிலே ஆண்டுகொண்ட முறைகளைப் பலகாற் பாடி இறைவன் திருமுழுக் கிற்குப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

வரி - கீற்று; இஃது அழகிற்காக இடப்படுவது. பொங்க- பூரிக்க. துதைந்து இலங்குதலுக்கு. `நீறு` என்னும் வினைமுதல் வருவித்து, `தோளிலும், அழகிய நெற்றியிலும் திருநீறு நிறைந்து விளங்க` என உரைக்க. `எம்பிரானே சோத்து` என்க. நாட்கொண்ட - மலரும் நாளைப் பொருந்திய` `நாள மலர்` என்பதில், அகரம் தொகுத்தல். நாளம் - தாமரைத் தண்டு.

பண் :

பாடல் எண் : 9

வையகம் எல்லாம் உரல தாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந் துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாண னுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

உலகமுழுவதும் உரலாகக் கொண்டு மகாமேரு என்கிற உலக்கையை உள்ளத்திலே நிலைநாட்டி, உண்மை என்கிற மஞ்சளை நிறைய இட்டு மேன்மை தங்கிய அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனது செம்மையாகிய திருவடியைப் பலகாற்பாடிச் செம்பொன் மயமான உலக்கையை வலக்கையில் பிடித்துத் தலைவனாகிய அழகிய தில்லைவாணனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

``வையகம்`` என்றது முதலாக, ``அட்டி`` என்றது இறுதி யாக உள்ள பகுதியால், `மக்கள் இறைவன் பொருட்டுப் பொற் சுண்ணம் இடிக்குங்கால், உரலை நிலவுலகமாகவும், உலக்கையை மேருமலையாகவும், இடிக்கப்படும் பொருள்களை உண்மை அன்பாகவும் கருதிக்கொண்டு இடித்தல் வேண்டும்` என்பது குறிப் பிடப் பட்டது. இதனால். `இறைவன் ஆடுவது அன்பர் அன்பிலன்றி, அவர் ஆட்டும் பொருளில் அன்று` என்பது திருவுள்ளம். ``நேயமே நெய்யும் பாலா`` (தி.4.ப.76.பா.4) என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசு சுவாமிகளும். உண்மையன்பைப் பிற பொருட்கண் செலுத்தாது இறைவனிடத்திற் செலுத்துதலே, இடித்தல் தொழிலாம். ஆகவே, எல்லாவற்றையும் தாங்கும் நிலமும், அதற்கு உறுதியாய் நிற்கும் மேருமலையும் அத்தொழிற்கே துணைபுரிவனவாதல் வேண்டும் என்ற வாறு. மெய், ஆகுபெயர். ``மஞ்சள்`` என்றாரேனும், ஏனையவும் உடன் கொள்ளப்படும். மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற. ``காசணி மின்கள் உலக்கை எல்லாம்`` என்றமையின் அதற்குப் பொன்னணியும் பூட்டுதல் பெறப்படுதலின், ``செம்பொன்`` என்றதும் அதனினாய அணியை என்க. `செம்பொன்னாலாகிய உலக்கை` என்றே உரைப்பாரும் உளர். இருகையும், பணிசெய்ய வேண்டுதலின், `வலக்கை, வலிமையையுடைய கை` என்க.

பண் :

பாடல் எண் : 10

முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொ டாட ஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

முத்துவடமணிந்த தனங்கள் அசைந்து ஆடவும், நெருங்கிய கூந்தலிலுள்ள வண்டுக் கூட்டங்கள் எழுந்து ஆடவும், மனமானது சிவபெருமானிடத்தில் நீங்காதிருக்கவும், செங்கயல் மீன் போன்ற கண்கள் நீர்த்துளியை இடைவிடாது சிந்த, அன்பு எம்பெரு மானிடத்தில் மேன்மேற்பெருகவும் பிறவியானது உலகப் பற்றுள்ள பிறரோடும் சூழ்ந்து செல்லவும், எம் தந்தையாகிய சிவபெருமான் அருளோடு நம்முன் விளங்கித் தோன்றவும் அவன் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

முத்து அணி - முத்து மாலையை அணிந்த. `சூழலின் கண்` எனவும், `நம் சித்தம்` எனவும், `நம் செங்கயற்கண்களில்` எனவும், `நம் பித்து` எனவும், உரைக்க. கண் பனி ஆட`` என, இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின்மேல் நின்றது. பனி - பனித்தலை (சிந்துதலை) உடைய நீர். பித்து - பேரன்பு. `ஆட` என்பது, ``சிவனொடும் ஆட`` என்றாற் போல்வனவற்றில், `பொருந்த` என்னும் பொருளைத் தந்து நின்றது. ``பிறரொடும்`` என்ற இழிவு சிறப்பும்மையைப் பிரித்து, ``பிறவி`` என்றதனோடு கூட்டுக. உம்மை, பிறவிக்கு இடமின்மை காட்டி நின்றது. `அத்தன் ஆட` என இயையும்; இங்கு, ``ஆட`` என்றது, `மூழ்க` என்றதாம். இது, முன் வந்தவற்றோடு ஒரு நிகர்த்ததாகாது வேறாதலின், மும்முறை அடுக்கியருளினார். இங்கும் அடுக்குக்கள் மேல் வந்தனபோல நின்றன.

பண் :

பாடல் எண் : 11

மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

பெண்களே! பக்கங்களில் பல்லினது ஒளி, நிலவு போன்று ஒளிவீசவும், அழகிய பவளம் போன்ற உதடுகள் துடிக்கவும், வாயைத் திறந்து பாடுங்கள். நம்மவன் ஆண்டு கொண்ட வழியையும் இறைபணியிலே நிற்கச் செய்ததையும் அவ்வாறு இடைவிடாது பாடி எம்பெருமானைத் தேடுங்கள். அவ்வாறு தேடி மனம் உன்மத்த நிலையையடைய, தடுமாறிப் பின்னர் மனம் தெளிந்து ஆடுங்கள். தில்லையம்பலத்தில் நடனஞ் செய்தவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

மாடு - பக்கம். நகை வாள் - பற்களின் ஒளி. நிலா எறிப்ப - நிலவை வீச. ``வாய்திறந்து`` என்றதை, ``பாடுமின்`` என்றதற்கு முன்னே கூட்டுக. பவளம் போலும் இதழை, `பவளம்` என்றது உவமையாகுபெயர். `எறிப்ப, துடிப்ப` என்றவை `பாடுமின்` என்றதனோடு முடியும். `நந்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் வாய்திறந்து பாடுமின்; பாடி எம், பெருமானைத் திகைத்துத் தேடுமின்; தேடித் தேறிச் சித்தங் களிப்ப ஆடுமின்` எனக் கூட்டியுரைக்க. பெருமான் வரவுணர்ந்து எல்லாம் செய்கின்றவள் நீட்டித்தல் நோக்கி,`பலதிசையினும் சென்றுபார்மின்` என்பாள், ``திகைத்துத் தேடுமின்`` என்றும், `அங்ஙனம் பார்க்குமிடத்து யாதேனும் ஒரு திசையில் பெருமான் வரக் காணின், அவ்விடத்து அவனை மகிழ்ச்சியோடு எதிர்கொண்மின்` என்பாள், ``தேறிச் சித்தங் களிப்ப ஆடுமின்`` என்றும் கூறினாள். ``தேடுமின், ஆடுமின்`` என்ற இரண்டும் ஆயத்தாருள் ஒரு சிலரை நோக்கிக் கூறியனவும், ஏனையவை பலரையும் நோக்கிக் கூறியனவுமாகலின், இவை தம்முள் இயையாமை இல்லை என்க. தேடச் செல்லுகின்றவர்களும் சிறிது நேரம் எம்முடன் பாடிப் பின்னர்ச் செல்லுக என்பாள், ``பாடித் தேடுமின்`` என்றாள். ``பாடிப் பாடி என்றதனை அடுக்காக்காது பிரித்து, ஒன்றனை, ``ஆண்ட வாறும்`` என்றதனோடு கூட்டுக. ``பாடி`` எனவும், ``தேடி`` எனவும் பெயர்த்துங் கூறியது, ``இது செய்த பின் இது செய்க` என முறைதெரித்தற் பொருட்டு. எனவே, அவை` பாடியபின், தேடியபின்` என்னும் பொருளவாம்.

பண் :

பாடல் எண் : 12

மையமர் கண்டனை வான நாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

தாமரை மலர் போன்ற செவ்வரிபடர்ந்த இரண்டு கண்களையும் பொன் வளையணிந்த தோள்களையும் பாம்பின் படம் போன்ற அல்குலையுமுடைய மடந்தைப் பருவத்தையுடைய பெண்களே! கருமையமைந்த கழுத்தினையுடையவனும் விண்ணுலகத் தாருக்கு அமுதமாயிருப்பவனும் செம்மை நிறமுடைய கூத்தனும், தேவனும், தேவர்க்குத் தலைவனும் நம்மைத் தன் வசப்படுத்தி அடிமை கொண்டு தனது அரிய தன்மையைப் புலப்படுத்தினவனும் பொய்ம்மை யாளருக்குப் பொய்ம்மையானவனும் மெய்ம்மையாளருக்கு மெய்ம் மையானவனுமாகிய இறைவனைப் பாடிப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

மை - கருமை நிறம். வானநாடர் மருந்து - அமுதம். மாணிக்கக் கூத்து - மாணிக்கம் போலும் உயர்ந்த கூத்து. ஐயன் - தலைவன். ஐயர் - தேவர்; இதுவும், ஒரு சார் தலைமை பற்றி வந்த பெயரேயாம். அகப்படுத்து - தன்வழிப்படுத்து. அருமை காட்டும் - தனது அரியனாந் தன்மையைக் காட்டுகின்ற; என்றது, `நாம் பல்கால் வேண்டியும் எளிதின் வந்திலன்` என்றதாம், `முன்பு அகப்படுத்து ஆட்கொண்டு, இப்பொழுது அருமை காட்டுகின்றான்` என்றபடி. பொய்யன் - வெளிப்படாது நிற்பவன். மெய்யன் - வெளிப்பட்டு அருள் செய்பவன். `யாம் பொய்யரல்லேம்; மெய்யேமாகலின் வாரா தொழியான்` என்பது குறிப்பு. போது அரிக் கண் - பூப்போலும். வரிகளையுடைய கண்; `அவற்றது இணை` என்க. `பையரவல்குல்` என்பதில், `பையரவு` என்பது, `முன்றில்` என்பது போலப் பின் முன்னாகத் தொக்க ஆறாவதன் தொகை.

பண் :

பாடல் எண் : 13

மின்னிடைச் செந்துவர் வாய்க்க ருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமு தெங்க ளப்பன்
எம்பெரு மான்இம வான்ம கட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்த கப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

மின்னல் கொடி போன்ற இடையினையும் செம்பவளம் போன்ற இதழினையும் கருமையான கண்களையும் வெண்மையான பற்களையும் இசைபொருந்திய மென்மையான மொழியினையும் உடையவர்களே! பொன்னாபரணம் அணிந்த தனங்களையுடைய மங்கைப் பருவப் பெண்களே! என்னையுடைய அமுதம் போன்றவனும் எங்கள் அப்பனும் எம்பெருமானும் மலையரசன் மகளாகிய பார்வதிக்கு அவளை உடைய நாயகனும் மகனும் தந்தையும் முன்பிறந்தானுமாகிய எங்கள் கடவுளது திருவடி களைப் பாடிப் பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

பண் அமர் - பண்ணின் தன்மை பொருந்திய. தன் உடை- தன் உடைப் பொருளாகிய. ``தன்`` என்பது, இமவான் மகளை. `தன் உடைப்பொருளாகிய கேள்வன்` என்றது, கணவன் மனைவி யரிடையுள்ள இயைபை விதந்தோதியவாறு. ``பிறன் பொருளாள்`` என்னும் திருக்குறளில் (141) திருவள்ளுவரும், ஒருவன் மனைவியை, `அவனது உடைமைப் பொருள்` எனக் கூறினார். மனைவியை, `உரிமை ` என்னும் பெயராற் குறித்தலும் இதுபற்றியே யாம். `சிவத்தையும் சத்தியையும் முறையே தந்தையும் மகளுமாகக் கூறுதல், சிவமும், நாதமும் ஆகிய சிவபேதங்களினின்றும் முறையே சத்தியும், விந்துவுமாகிய சத்தி பேதங்கள் தோன்றுதல் பற்றியாம். சத்தியையும், சிவத்தையும் முறையே தாயும், மகனுமாகக் கூறுதல், சத்திபேதங்களுள் ஒன்றாகிய சத்தியினின்றும், நாதமாகிய சிவபேதம் தோன்றுதல் பற்றியாம். சிவத்தையும், சத்தியையும் முறையே தமை யனும், தங்கையுமாகக் கூறுதல், சத்தி பேதமாகிய விந்துவினின்றும், சிவபேதமாகிய சதாசிவன் முன்னும், சத்தி பேதமாகிய மனோன்மனி பின்னும் தோன்றுதல் பற்றியாம். சிவமும், சத்தியும் சதாசிவன், மனோன்மனி முதலிய சிவபேத சத்தி பேதங்களாய் நின்று எல்லாப் பொருள்களையும் பயத்தலின், அவ்விருவரும் கணவனும் மனைவியு மாகவும், உலகிற்கு அப்பனும் அம்மையுமாகவும் கூறப்படுவர்; இறுதியிற் கூறிய இஃது ஒன்றே பெரும்பான்மை. ``மனோன் மனியைப் பெற்ற - தாயிலானைத் தழுவும்என் ஆவியே`` (தி.5. ப.91. பா.1.) என்றருளியதில்,`மனோன்மனி` என்றது, பொதுமையில், `சத்தி` என்னும் பொருளதாம். இச் சிவபேத சத்தி பேதங்களின் இயல்பை எல்லாம் சிவஞானசித்தியினும், சிவ ஞானபோத மாபாடியத்தினும் தெளியக் காண்க; ஈண்டு விரிப்பிற் பெருகும்.
இத்தத்துவ முறைபற்றி இங்கு இவ்வாறருளிச் செய்த அடிகள், திருக்கோவையுள்ளும், ``தவளத்த நீறணியுந் தடந்தோள் அண்ணல், தன் ஒருபாலவள் அத்தனாம்; மகனாம்`` (தி.8 கோவையார்-12) என்று இங்ஙனமே அருளுதலையும், `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத் தினின்றும் சதாசிவதத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார், ``இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்`` என்பதூஉம் அப்பொருண் மேல் வந்தது`
என்று அதற்குப் பேராசிரியர் உரை உரைத்தலும் காண்க.
``வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.``
(தி.10 திருமந்திரம் - 1178) என்பது திருமூலர் திருவாய்மொழி.
``கனகமார் கவின்செய் மன்றில்
அனகநா டகற்கெம் அன்னை
மனைவிதாய் தங்கை மகள்``
எனக் குமரகுருபரரும் அருளிச் செய்தார்(சிதம்பரச் செய்யுட் கோவை-33)
``பூத்தவ ளேபுவ னம்பதி னான்கையும்
பூத்தவண்ணம்
காத்தவ ளேபின் கரந்தவ ளேகறைக்
கண்டனுக்கு
மூத்தவளே`` (-அபிராமியந்தாதி - 13)
எனவும்,
``தவளே இவள் எங்கள் சங்கர னார்மனை;
மங்கலமாம்
அவளே அவர்தமக் கன்னையு மாயினள்;`` (-அபிராமியந்தாதி - 44)
எனவும் கூறியதும் இதுபற்றி. ஒருவரையே இங்ஙனம் ஒவ்வாத பல முறையினராகக் கூறுதல், `இவையெல்லாம் ஒரு பயன் கருதி நாடக மாத்திரையால் அவர் மேற்கொள்வனவேயன்றி, உண்மையில் அவர் இவ்வாறு திரிபுற்று நிற்பவரல்லர்; அவர்தம் உண்மை இயல்பு, இவை அனைத்தினும் வேறு` என்பது உணர்த்துதற் பொருட்டேயாம். இதனை, ``ஒருவனே இராவணாதி பாவகம் உற்றாற் போலத் - தருவன் இவ்வடிவம் எல்லாம் தன்மையும் திரியானாகும்`` என விளக்குகின்றது சிவஞானசித்தி (சூ. 1-67).
இவற்றையெல்லாம், `அபரஞானம்` எனப்படும் நூலுணர் வினால் நம்மனோரும் பரக்கக் கூறுதல் கூடுமாயினும், பரஞானமாகிய அநுபூதியைப் பெற்ற அடிகள் போன்றவர்கட்கே இவையெல்லாம் உண்மையான் விளங்குவன என்பதையும் அந்நூல்,
``சிவம்சத்தி தன்னை ஈன்றும்
சத்திதான் சிவத்தை ஈன்றும்
உவந்திரு வரும்பு ணர்ந்திங்
குலகுயி ரெல்லாம் ஈன்றும்
பவன்பிரம சாரி யாகும்
பான்மொழி கன்னி யாகும்
தவந்தரு ஞானத் தோர்க்கித்
தன்மைதான் தெரியு மன்றே.``
என விளக்குகின்றது (சூ.2.77.). கேள்வன் முதலிய பெயர்களைச் செய்யுள் நோக்கி முறைபிறழ வைத்தார்.

பண் :

பாடல் எண் : 14

சங்கம் அரற்றச் சிலம்பொ லிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலை யாடச்
செங்கனி வாயித ழுந்து டிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம் பாடிக்
கங்கை இரைப்ப அராஇ ரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்க ழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

செம்மையாகிய அணிகளையுடைய பெண்களே! சங்க வளையல் ஒலிக்கவும், காற்சிலம்பு ஒலிக்கவும், நெடிய கூந்தலில் சுற்றிய பூமாலை அசையவும், வாயில் உள்ள சிவந்த கொவ்வைக் கனிபோலும் உதடு துடிக்கவும், சிவபுரத்தின் பெருமையைப் பாடி, கங்கை வெள்ளம் ஒலிக்க, பாம்பு நடுங்கி ஒலிக்கின்ற திரட்சியான சடையையுடைய இறைவனது திருவடிக்கு மிகுந்த விருப்பத்தால் தனங்கள் விம்மப் பொன்போலும் அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

இரைப்ப - ஒலிக்க; இஃது உடனிகழ்ச்சியாகிய எதிர்காலத்தின்கண் வந்தது.
``நீரொலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்` (தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 113.) என்றதும் காணத்தக்கது. `கழற்கே பொங்கிய` என இயையும். `காதலால் கொங்கைகள் பொங்க` என்க. இக் காமப் பொருள், `இறைவன் திருவடியில் பேரன்புடையார்க்கு அது காரணமாக உடல் பூரிக்கும்` என்பதைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 15

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

கருங்குவளை மலர் போன்ற பெரிய கண்களையுடைய இளம் பெண்களே! ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தெளிவானவனும், அதன் பாகானவனும், தேடுவதற்கு அருமையான நன்மைப் பொருளானவனும், சுவை கெடாத தேனானவனும், முக்கனிகளின் சுவையானவனும், மனத்தில் புகுந்து இனிக்க வல்ல தலைவனும், பிறவித்தளையை அறுத்து ஆண்டுகொண்டருளின கூத்தப் பெருமானுமாகிய இறைவனை நாவில் வடுவுண்டாகும்படி, துதித்துப் பாடிப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

ஞானக் கரும்பு, உருவகம். தெளிவு - அதன் சாறு. பாகு-அச்சாற்றைக் காய்ச்சுவதனாலாவது. நாடல் - நினைத்தல். கிடைத்தல் கூடாமையால், நினைத்தற்கும் அரியதாயிற்று. நலம், அதனையுடைய பொருட்கு ஆகுபெயர். நந்தா - கெடாத. `சித்தம் புகுந்து தித்திக்க வல்ல தேனை` எனக் கூட்டுக. பானல் - நீலோற்பல மலர்.

பண் :

பாடல் எண் : 16

ஆவகை நாமும்வந் தன்பர் தம்மோடு
ஆட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல்
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொ டியான்
சிவபெரு மான்புரஞ் செற்ற கொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

நாமும் அன்பரோடு கூடி வந்து உய்யும் வகையில் பணிசெய்யும் வகைகளைப் பாடி விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் கனவிலும் கண்டறியாத செந்தாமரை மலர்போலும் திருவடிகளை எமக்குக் காட்டுகின்ற செல்வமாகிய காளையை அகத்தே கொண்ட வெற்றியையுடைய கொடியையுடையவனும் சிவபெருமானும், முப்புரங்களை அழித்த வெற்றியையுடைய வீரனுமாகிய இறைவன் திருநாமங்களைப் பரவிச் சிவந்த பொன் போல ஒளியைத் தருகின்ற வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

ஆவகை - உயர்வெய்தும் வகையில். வந்து - சென்று; இடவழுவமைதி.
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி``
(தி.8. போற்றித்திருவகவல் 143)
என முன்னரும் அருளிச் செய்தார். `பாதங்களை நமக்குக் காட்டும்` என்க. சே அகம் ஏந்திய கொடி - எருதைத் தன்னகத்துக் கொண்ட கொடி. கொற்றம் - வெற்றி. சேவகம் - வீரம்.

பண் :

பாடல் எண் : 17

தேனக மாமலர்க் கொன்றை பாடிச்
சிவபுரம் பாடித் திருச்ச டைமேல்
வானக மாமதிப் பிள்ளை பாடி
மால்விடை பாடி வலக்கை யேந்தும்
ஊனக மாமழுச் சூலம் பாடி
உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனக மாகநஞ் சுண்டல் பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

சிவபெருமானது தேன்நிறைந்த உள்ளிடத்தை யுடைய பெருமை பொருந்திய கொன்றை மலரைப் பாடி, சிவ லோகத்தைப் பாடி, அழகிய சடையின் மேலுள்ள விண்ணிடத்து உலாவுகின்ற பெருமையமைந்த இளம்பிறையைப் பாடி, பெரிய இடபத்தைப் பாடி, வலக்கையில் தாங்கிய, தசை தன்னிடத்தில் பொருந்திய மழுவினையும் முத்தலை வேலினையும் பாடி, விண் ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் பிழைக்கும் வண்ணம் அந்நாளில் விடத்தை உணவாக உண்டதைப் பாடிப் பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

தேன் அக மா மலர் - தேனை அகத்திலே உடைய சிறந்த மலர். `தேனகக் கொன்றை மலர்` என மாற்றிப் பொருள் கொள்க. வானகம் - விண்ணில் இயங்குதற்குரிய, மதிப்பிள்ளை - பிள்ளை மதி; மூன்றாம் பிறை. மால் விடை - பெரிய இடபம். ஊனகமாமழு - பகைவரது ஊனை அகத்திலே உடைய பெரிய மழு. உம்பர் - மேலுலகம். இம்பர் - கீழுலகம். போனகம் - உணவு.

பண் :

பாடல் எண் : 18

அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் பிரமன் தலையைக் கொய்து பந்தாடினமையைப் பாடி, சூரியனது பல்லைத் தகர்த்தமையைப் பாடி, யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டமையைப் பாடி, இயமனைக் காலால் உதைத்ததைப் பாடி, ஒருங்கே உலவிய திரிபுரங்களை அம்பால் எய்து அழித்தமையைப் பாடி, சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய எங்களை ஆட்கொண்ட நன்மையினைப் பாடி, பாடலுக்கேற்ப நின்று தொடர்ந்து ஆடி இறைவனுக்கு வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

பிரமன் தலைகளுள் ஒன்றைச் சிவபெருமான் கைந் நகத்தால் கிள்ளி எறிந்தபொழுது அதனைச் செண்டாடினார் என்பது இதனால் பெறப்படுகின்றது.
``அரி அயன்தலை வெட்டிவட் டாடினார்`` (தி.5.ப.85.பா.2.)
என்ற அப்பர் திருமொழியும் இங்கு நினைக்கத் தக்கது. அருக்கன் - சூரியன். இவனது பல்லைச் சிவபெருமான் பறித்தது தக்கன் வேள்வியில். கயம் - யானை. யானையுருக் கொண்ட அசுரன் கயாசுரன். இயைந்தன முப்புரம் - ஒருங்கு கூடி இயங்கிய மூன்று கோட்டைகள். நயம் - விருப்பம்; என்றது, திருவருளை.

பண் :

பாடல் எண் : 19

வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
மத்தமும் பாடி மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

சிவபெருமானது வட்ட வடிவாகிய கொன்றை மலர் மாலையைப் பாடி, ஊமத்தமலரையும் பாடி, பிறையையும் பாடிப் பெரியோர் வாழ்கின்ற அழகிய தில்லை நகரைப் பாடிச் சிற்றம்பலத்து ஞானசபையிலுள்ள எமது செல்வமாகிய பெருமானைப் பாடி, அரையிற் கட்டிய பாம்புக் கச்சையினைப் பாடி, கையிற் சுற்றியுள்ள கங்கணத்தைப் பாடி, மூடினகையின்மேல் வைக்கப்பட்டுப் பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைப் பாடி, இறைவனுக்கு வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

`வட்ட மாலை` என இயையும். இஃது இண்டையைக் குறித்தது. மத்தம் - ஊமத்த மலர். சிட்டர் - மேலோர்; இது தில்லை வாழந்தணர்களைக் கூறியதாம். செல்வம் - செல்வம் போல உள்ள சிவபெருமான். மாசுணம் - பாம்பு. கச்சை - அரையில் உடைமேல் இறுகக் கட்டுவது. ``மாசுணம்`` என்றது, ``கங்கணம்` என்றதனோடும் இயையும். சிவபெருமான் கையில் ஒரு பாம்பைத் தனியாக வைத்து ஆட்டுதலும் பலவிடங்களிற் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 20

வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயி னாருக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

வேதநூலும் அவற்றுள் கூறப்படும் யாகங்களும் ஆனவரும், மெய்ப்பொருளும் பொய்ப் பொருளும் ஆனவரும், ஒளியுமாகி, இருளும் ஆனவரும், துன்பமுமாகி இன்பமும் ஆனவ ரும், பாதியுமாகி முழுதுமானவரும், உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆனவரும், உலகுக்கு முதலும் முடிவுமானவரும் ஆகிய இறைவருக்கு, நீராடும் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

பின் வருவனபோல மறுதலைப் பொருள்பட, ``வேதம்`` என்றதற்கு,`வேதமுடிபினால் உணர்த்தப்படுவதாகிய ஞானம்` எனப்பொருள் கூறுக. ``வேள்வி`` என்றது, கன்ம காண்டத் துள் சொல்லப்பட்ட வேள்விகளையாம். மெய்ம்மை - நிலைத்த பொருள். பொய்ம்மை - நிலையாத பொருள். சோதி - ஒளி; ஞானம். இருள் - அஞ்ஞானம். பாதியாதல், ஒரு வடிவத்தில் பாதி வடிவமே தானாய் இருத்தல். மற்றைப் பாதி வடிவம் அம்மை என்க. இது, மாதொரு கூறானவடிவம். முற்றுமாதல், முழுவடிவமும் தானேயாதல்; இது உமாமகேசுரவடிவம் முதலாகப் பலவாம். இவ்வடிவங்களில், அம்மை தனித்துக் காணப்படுவாள்,
``பெண்உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்``
எனப் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தினும் இவ்விருவகை வடிவும் கூறப்பட்டன. பந்தம் - கட்டு; பிறப்பு நிலை. வீடு - பிறப்பு நீங்கிய நிலை.
இறைவன் மெய்ப்பொருளாதல் வெளிப்படை. எல்லாப் பொருளிலும் உடலில் உயிர்போலக் கலந்து நிற்றலால், நிலையாப் பொருளும் ஆகின்றான். ஞானம், இறைவனது இயற்கை தன்மை, அஞ்ஞானத்தைத் தருகின்ற ஆணவத்திலும் திரோதான சத்தியாய் இயைந்து நிற்றலின், அஞ்ஞானமும் ஆகின்றான். மறைத்தல் தொழிலால் பிறவித் துன்பத்தை விளைவித்தலின், துன்பமாகின்றான். இன்பம் - பேரின்பம். இஃது அவனிடத்தில் இயல்பாய் உள்ளது, பந்தம் - திரோதான சத்தி வாயிலாக ஆணவத்தின் சத்தியை நடத்தி உயிர்களைப் பிறப்பினுள் அழுத்தல். ஐந்தொழில்களுள், `மறைத்தல்` என்பது இதுவே. வீடாவான் இறைவனே என்பதும், அவனே உலகிற்கு ஆதியும், அந்தமும் என்பதும் வெளிப்படை. இவ்வாற்றால், `அவனையன்றி யாதும் இல்லை` என்பது உணர்த்தியவாறு.
சிற்பி