திருவாசகம்-திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 1

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. 

பொழிப்புரை :

எல்லாவற்றையும் உடையவனே! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக!

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

இப்பாட்டினை, `உடையாய், யான், உன் கழற்கு, மெய் மயிர் அரும்பி, விதிர்விதிர்த்து, கண் நீர் ததும்பி, உள்ளம் வெதும்பி, பொய் தவிர்ந்து, கை தலைவைத்து, `போற்றி! சய! சய! போற்றி` என்று உன்னைத் துதிக்கும் கையை நெகிழ விடேன்; ஆதலின் என்னை நீ கண்டுகொள்` என இயைத்து, வேண்டும் சொற்களை வருவித்துரைக்க. பின்னரும் இவ்வாறு, சொல்லெச்சமாயும், இசையெச்சமாயும் நிற்கும் சொற்களை வருவித்துரைத்தலை அறிந்து கொள்க.
`உனது திருவடிக்கண் நீங்காது அன்பு செய்து ஒழுகுகின்றேன்; எனக்கு இரங்கியருள்` என்பது இத் திருப்பாட்டின் திரண்ட பொருள். இதனுள், `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றும் அன்பு வழிய வாயினமை அமைந்து கிடந்தவாறறிக.
``மெய்தான்`` முதலிய நான்கிடத்தும் வந்த ``தான்` அசை நிலை. விதிர்விதிர்த்தல் - நடுநடுங்குதல். இதுவும் அன்பால் உளதாவதே. `துடிதுடித்தல்` என்பதுபோல, `விதிர்விதிர்த்தல்` என்பது இரட்டைக் கிளவி. விரை - வாசனை. இஃது அடியவர் சூட்டும் மலர்களால் ஆவது. கழற்கு - கழற் பெறுதற் பொருட்டு. இந்நான்கனுருபு பொருட்டுப் பொருளதன்று; ஏதுப் பொருளது. நான்கனுருபு இப்பொருட்டாய் வருதலை,
``அடிபுனை தொடுகழல் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாய் அஞ்சுவலே``
(புறம்-83) என்றாற்போல்வனவற்றுள்ளுங் காண்க. ``கை`` இரண்டனுள், பின்னையது ஒழுக்கம். உள்ளம் வெதும்புதல் திருவடிப் பேறு கிடையாமையினாலாம். ``உன்னை`` என்பது ``என்னும்`` என்பதனுள் எஞ்சிநின்ற துதித்தல் வினையோடு முடிந்தது. கண்டுகொள் - எனது நிலையை நோக்கி அருள் செய்யத் திருவுளங்கொள்.
`அரும்பி, ததும்பி` என்பன, முன்னர், இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றனவாய், பின்னர், `விதிர்விதிர்த்து`, `வெதும்பி` என்பவற்றோடு ஒரு நிகரனவாய், சினை வினை முதல் மேல் நின்றனவாயின.

பண் :

பாடல் எண் : 2

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு
குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர
கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப்
பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள்
உத்தமனே. 

பொழிப்புரை :

எங்கள் மேலோனே! தலைவனே! உன் திருவருளோடு கூடி இருக்கப் பெறுவேனாயின், இந்திரன், திருமால், பிரமன் ஆகிய இவர்களுடைய வாழ்வினைப் பொருளாக ஏற்க மாட்டேன். எனது குடி அழிந்தாலும் உன் அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன். நரகத்திற் புகுந்தாலும் அதனை இகழமாட்டேன். உன்னை அன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன்.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `இறைவா, எங்கள் உத்தமனே, யான், உனது திருவருள் வழியே இருக்கப்பெறின், நரகம் புகினும் அதனை எள்ளேன்; அதனை மறந்து இருப்பதாயின், புரந்தரன், மால், அயன் முதலியோரது பதவிகளில் இருப்பதாயினும் அவற்றைக் கொள்ளேன்; யானன்றி என் குடியே கெடுவதாயினும், அடியாரொடல்லால் பிறரோடு நட்புச் செய்தலும், உன்னையல்லாது பிற தெய்வங்களைத் துணையாக எண்ணுதலும் செய்யேன்`.
`ஆதலின், என்னைக் கடைக்கணித்தருள்` என, மேலைத் திருப் பாட்டில் உள்ள, ``என்னைக் கண்டுகொள்`` என்றதனை, ஈண்டும் வருவித்து முடிக்க. `சிவஞானம் ஒன்றே பிறவித் துன்பத்தை நீக்குவ தாதலின், அதன்கண் விருப்பமும், அஃதல்லாத பிற எவையும் அத் துன்பத்தை ஆக்குவன ஆதலின் அவற்றின் கண் விருப்பம் இன்மை யும் கொண்ட தமது நிலையை இதனுள் எடுத்து விளக்கி வேண்டினார்.
புரந்தரன் - இந்திரன். `வாழ்வும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``குடி`` என்றதில் தொக்குநின்ற பிரிநிலை ஏகாரம் சிறப்புணர்த்தி நின்றது. ``கெடினும், புகினும்`` என்ற உம்மைகள், எதிர்மறை. இவற்றால், இறைவன் அடியரல்லாதவரோடு நட்புச் செய்யாமையால் குடிகெடுதலும், திருவருளை மறவாமையால் நரகம் புகுதலும் இல்லை என்பது போந்தது. ``நினது அடியார்` என, உயர்திணைக் கிழமைப் பொருளில் குவ்வுருபு வாராமல், அதுவுருபு வருதல் பிற்கால வழக்கு. எள்ளாமைக்கு, `திருவருளாலே இருக்கப் பெறுதலாகிய காரணத்தைக் கூறியவதனால், கொள்ளாமைக்கு, அதன் மறுதலையாகிய காரணம் பெறப்பட்டது. ``பிற தெய்வம்`` என்பதில், `தெய்வம்` என்றது, `உன்னையன்றிப் பிறரெல்லாம் எழுவகைப் பிறப்பினுள் ஒன்றாய தெய்வப் பிறப்பினர்` எனவும், `அதனால் அவரை எனக்குத் துணையாக நினையேன்` எனவும் குறிப்பினால் அருளிச்செய்தவாறு. `மேலானவன்` என்னும் பொருளதாகிய, `உத்தமன்` என்பது, இங்கு, `தலைவன்` என்னும் அளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 3

உத்தமன் அத்தன் உடையான் அடியே
நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன் என்ன
மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர்
திரிந்தெவருந்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல்
சாவதுவே. 

பொழிப்புரை :

உத்தமனும் எமது தந்தையும், எம்மை அடிமையாக உடையவனும் ஆகிய இறைவனது திருவடியைக் கருதி உருகி, உன் மத்தம் கொண்ட மனத்துடன் கூடிய பித்தன் இவன் எனக்கண்டோர் சொல்லவும், ஊர்தோறும் திரிந்து அவரவர் மனக் கருத்துக்கு இசைந் தனவாகிய பல சொற்களைச் சொல்லவும், யாவரும் தங்கள் தங்கள் மனத்துக்கு இசைந்தவற்றைப் பேசவும் கேட்டு மனம் இறக்கப் பெறுவது எக்காலமோ?

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `உத்தமன்.....அடியேநினைந்து உருகி, கண்டோர், `இவன் மால்` என்னத் தம் மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட, மத்த மனத்தொடு ஊர் ஊர் திரிந்து, எவரும் தத்தம் மனத்தன பேசச் சாவது எஞ்ஞான்று`
``கொல்``, அசைநிலை. ``உடையான் அடியே` என்ற பிரி நிலை ஏகாரம், ``பிறிதொன்றையும் நினையாது` என்பதை விளக்கிற்று. மத்தம் - உன்மத்தம்; பித்து; என்றது பேரன்பினை. மால் - மயக்கம்; இஃது ஆகுபெயராய், `மால் கொண்டான் (அறிவு மயங்கினான்) எனப் பொருள்தந்தது. ``நினைவில்`` என்றது, ஏதுப்பொருளில்வந்த ஐந்தாம் வேற்றுமை. ``ஒத்தன`` என்றது, ``இவன் மால்`` என்னக் கருதிய அவ்வொருபொருளே பற்றிவரும் சொற்களையும், ``தத்தம் மனத்தன`` என்றது, நல்லனவும், தீயனவுமாய பல பொருள்களைப் பற்றிவரும் சொற்களையும் என்க. `ஊர்க்கண் ஊர்க்கண் திரிந்து` என உருபு விரிக்க. `பல ஊர்களில் திரிந்து` என்றவாறு. இங்ஙனம் திரிய வேண்டியது, உலகியலுள் அகப்படாமைப் பொருட்டு. அடிகள் உலகியலின் நீங்கியே நின்றாராயினும், `மீளவும் அதன்கண் அகப்படுவேங்கொல்லோ` என்னும் அச்சத்தினால் இங்ஙனந் திரியவேண்டினார் என்க. ``திரிந்து`` என்னும் எச்சம், எண்ணின்கண் வந்தது. `சாவது எஞ்ஞான்று` என்றது, சாவின்கண் உள்ள விருப்பத் தாலன்றி, உடம்பின்கண் உள்ள வெறுப்பினாலாகலின், அதற்கு. `இவ்வுடம்பு நீங்கப் பெறுதல் எஞ்ஞான்று என்பதே பொருளாயிற்று. ``ஊரூர் திரிந்து`` என்றதனால், மனநினைவில் ஒத்தன சொல்வார், அவ்வாறு திரியக் கண்டோர் என்பது பெறப்பட்டது. எவரும் - யாவரும். இறந்தவரைப் பற்றிப் பலரும் பல சொல்லுதல் இயல்பாத லறிக. உடம்புள்ள துணையும் உலகியலிற் றொடக்குண்ணாது நிற்கவும், உடம்பு விரைய நீங்கப் பெறவும் வேண்டியவாறு.

பண் :

பாடல் எண் : 4

சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று
நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா விடும்நம்
மவரவரே
மூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண்
ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந்
திரிதவரே. 

பொழிப்புரை :

முற்காலத்தில் தக்கனானவன் இறக்க, யாகத்தில் கொல்லப்பட்ட ஆட்டைத் தின்று, பாற்கடலில் தோன்றிய நஞ்சை அஞ்சி ஐயோ! எந்தையே! என்று முறையிட்ட நம்மவராகிய, அவர்கள் தாமே எம்பெருமானோடு, மூவர் என்று எண்ணப்பட்டு விண்ணுலகை ஆண்டு, மண்ணுலகில் தேவர் என்று சொல்லப்பட்டு, செருக்கடைந்து திரிகின்ற இறைவர்கள்? என்ன பாவமோ?

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `முன் நாள், ஒருமுறை, தாம் சாவ, தக்கன் வேள்விக்கண் தகர் தின்று, மற்றொருமுறை நஞ்சத்திற்கு அஞ்சி, `எந்தாய்! ஆவா! அவிதா` என்று முறையிடும் நம்மனோராகிய அவரையே, `மூவர் கடவுளர்` என எம்பிரானொடும் வைத்து எண்ணி, அதன் பயனாக விண்ணாள்வதற்கு அமைந்து, `யாம் மண்மேல் தேவர்` என்றே இறுமாந்து `திரிதருவர் சிலர்; இஃது என்ன பாவம்!`
சாவ - சாமாறு. இது வீரபத்திரரால் நிகழ்ந்தது. ``தகர்தின்று`` என்றது, நஞ்சினை உண்ண மாட்டாமையையும், தக்கனைக் கடிய மாட்டாமையையும் உணர்த்தி நின்றது. `இவற்றாலும், முறையிட்டமையாலும் பசுவருக்கத்தினர் என்பது தெற்றென விளங்கவும், அவரைப் பதியாகிய சிவபெருமானோடு ஒருங்குவைத்தெண்ணுவர்` என்றவாறு. `அவிதா` என்பது, ஓர் முறையீட்டுச் சொல். `நம்மவர்` என்றது, `பசு வருக்கத்தினர்` என்றதாம். ``அவர்`` என்றதில் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. ``அவரே`` என்ற பிரிநிலை ஏகாரம், இழிவுணர்த்தி நின்றது. `ஆண்டு` என்பது, பான்மை வழக்கால். `ஆளுதற்கு அமைந்து` எனப் பொருள் தந்தது, ``அன்போடியைந்த வழக்கு`` (குறள்-73) என்பதில், `இயைந்த` என்பதுபோல. `பூசுரர்` என்பதை, `மண்மேல் தேவர்` என்று அருளினார். `நிலவுலகிற் காணப்படும் தேவர்` என்பது இதன்பொருள். எனவே, `ஆசிரியன்மார்` என்றதாம். இங்ஙனமாகவே, இவர், தாம் வீடடையாமையேயன்றிப் பிறரையும் அடையவொட்டாது மயக்கம் உறுவிக்கின்றனர் என்று இரங்கியவாறாயிற்று. என்ன பாவம் - என்னே அவர்தம் வினையிருந்தவாறு. `திரிதருவர்` என்பது தொகுத்தலாயிற்று. மக்கட்பிறப்பின் பயனாகிய வீடெய்தாது, அதனை வீண்போக்கலின், ``திரிதருவர்`` என்றார். இங்ஙனம் திரிதருவார், சிவாகமங்களைக் கொள்ளாது இகழ்ந்து, வேதம் ஒன்றையே போற்றும் வேதியர். சிறப்பு நூலைக் கொள்ளாது இகழ்ந்து பொதுநூல் ஒன்றனையே கொண்டு, அதற்குத் தாம் வேண்டியவாறே பொருள்கூறித் தருக்குதல் பற்றி, அவரை இவ்வாறு அருளிச் செய்வாராயினர்.
மண்மேல் தேவர் என்று இறுமாந்து திரிபவர், பூர்வ மீமாஞ்சகர், உத்தர மீமாஞ்சகர் என்னும் இருசாராருமே யாவர். அவருள், பூர்வ மீமாஞ்சகர், `வேதம், தெய்வம் உண்டு என்னும் பொருள் படக் கூறும் கூற்றுக்கள் புனைந்துரையன்றி உண்மையல்ல; ஆயினும், அக்கூற்றுக்கள் நல்வழி நிற்றற்கு உதவுவதால் உண்மை என்று கொள்ளத்தக்கன` என்பர் ஆதலாலும், உத்தர மீமாஞ்சகர், `பல் வேறு வகைப்பட்ட தேவர்கள், மற்றைய உயிர்கள், பலவகை உலகங்கள் ஆகிய யாவும், உண்மையில் கயிற்றில் அரவுபோலப் பொய்யே; ஆயினும், அவ்வுண்மையை உணரும் பக்குவம் வரும் வரையில் அவைகளை உண்மைபோலக் கொண்டு ஒழுகல் வேண்டும்` என்பர் ஆதலாலும், இவ்விருசாராரும் எல்லாத் தேவர்களையும் ஒரு தன்மையராகக் கொள்வதன்றி, அவருள் எவரையும் தனிச்சிறப்பு உடையராகக் கொள்ளார்; ஆகவே, `சிவபெருமான் ஒருவனே பதி; ஏனையோரெல்லாம் பசுவருக்கத்தினர்` என உணரும் உண்மை ஞானம் அவர்க்கு ஆகமங்களின் வழியேனும்; அநுபவத்தின் வழியேனும் உண்டாதற்கு ஏதுவின்மை யறிக.
`சிவபெருமான் ஒருவனே பதி` என்பது, வேதத்துள் குறிப்பாகவும், சிவாகமத்துள் வெளிப்படையாகவும் சொல்லப்படுதலை உணரமாட்டாராயினும், புராணங்களில் அது பல வரலாறுகள் வாயிலாக இனிதுணர்த்தப்படுதலின், அவைகளையேனும் உணர்கிலர் என்பார், தக்கன் வேள்வித் தகர்தின்றது, நஞ்சம் அஞ்சி அவிதா இட்டது ஆகிய புராண வரலாறுகளை உடம்பொடு புணர்த்துக் காட்டியருளினார். அதனால், `உலகிற்கு இந்திரன் முதலிய பலரும் முதல்வர்` எனவும், `மும்மூர்த்திகளும் முதல்வர்` எனவும் அனேகேசுரவாதங் கூறும் பௌராணிகர் கூற்றுப் பொருந்தாமை பெறப்பட்டது.
மூவருள் சிவபிரானோடு வைத்து எண்ணப்படும் ஏனையிருவர், மாலும் அயனும் என்பது வெளிப்படை. இவ்விருவரோடு ஒருவாற்றான் ஒப்பவைத்து எண்ணுதற்குரியவன் குணருத்திரனேயன்றி, குணாதீதனாகிய, `மகாருத்திரன்` எனப்படும் சிவபிரான் அல்லன் என்க.
இனி, இக்குணருத்திரன், மால், அயன் முதலியோருள் ஒரோவொருவரைப் பதியாகக் கருதும் பாசுபதர் முதலியோரை இங்குக் கூறாராயினார், அவர், முதல்வரல்லாதாரை முதல்வர் எனக் கருதலன்றிப் பலரையும் முதல்வர் என்னாமையானும், முதல்வரல்லாத சிலரையும், முதல்வனோடு ஒப்பவைத்து முதல்வர் எனக் கருதுதல் உண்மை ஞானத்திற்குப் பெரிதும் புறம்பாய் வீடுபயவாமைபற்றியே இரங்கி அருளிச்செய்கின்றாராக லானும் என்க.

பண் :

பாடல் எண் : 5

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்
டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை யேன்உனக்
கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின்
திருவடிக்காம்
பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம்
பரம்பரனே. 

பொழிப்புரை :

தவத்தையோ செய்திலேன்; குளிர்ந்த மலர்களால் அருச்சித்துக் குறைபாடின்றி வணங்க மாட்டேன், வீணாகவே பிறந்த பாதகன் நான்; பக்தர்களுக்குச் சொந்தமாகிய சிவபோதம் என்னும் அரிய செல்வத்தை நான் பெற்றிலேன்; உன்னை அடைவதற்கான நல்ல பிறவியை எனக்குத் தருவாயாக.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

`மேலானவர்க்கு மேலானவன்` எனப் பொருள்தரும், `பரம்பரன்` என்னும் தொகைச்சொல் ஒருசொல் நடைத்தாய், `கடவுள்` என்னும் அளவில் நின்று ``எம்`` என்றதற்கு முடிபாயிற்று. இத் தொடரை முதலில் வைத்து `யான்` என்னும் எழுவாய் வருவித் துரைக்க. மலரிட்டு இறைஞ்சுதலாகிய கிரியைத் தொண்டினைப் பின்னர்க் கூறுதலின், ``தவம்` என்றது யோகத்தையாயிற்று. சரியையும் கிரியையுள் அடங்கும். சரியையும், கிரியையும், `சிவதருமம்` என ஒன்றாகக் கூறப்படுதல் காண்க. சரியையை, ``புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன்`` என, அடிகள் பின்னர் அருளுதல் காண்க (தி.8 திருச்சதகம் பா.14). ``தவமே`` என்ற ஏகாரம், தேற்றப் பொருட்டாய், `சிறிதும்` எனப் பொருள்தந்தது, முட்டாது - தவறாது. `சரியை கிரியை யோகங்களைச் செய்யேன்` என்றது, அடிகள் அமைச்சராய் இருந்தமையைக் குறிக்கும். ``இறைஞ்சேன்` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. அவம் - வீண். ``அருவினையேன்`` என்றதன்பின், `ஆயினேன்` என்பது தொகுத்தலாயிற்று. `அவம்படவே பிறந்த வினையேனாகிவிட்டேன்` என்க. இனி, `வீண் என்பது உண்டாதற்கு இடமாகிய வினையேன் ஆகிவிட்டேன்` எனினுமாம். `இவ்வாற்றால் உன் அடியார் நடுவுள் இருக்கும் பேற்றினைப் பெற்றிலேன்` என்றார் என்க. சிவம் - நன்மை. திரு - நல்லூழ். `எனினும், உன் திருவடியிற் சேர்கின்ற பயனையே எனக்கு அருள வேண்டும்` என வேண்டுவார், அதற்குக் காரணமாக, `யானும் அவ்வடியவர்போல உன்னால் ஆட்கொள்ளப் பட்டவனன்றோ` என்பதனை, `அடியேற்கு` என உடம்பொடு புணர்த்தருளினார். பவம் - உண்மை. அது, செயல் நிகழ்தலைக் குறிக்கும். இது, `சம்பவம்` எனவும் வரும். ``அருளு`` என, ஏவற்கண் உகரச்சாரியை வந்தது. கண்டாய், அசைநிலை.

பண் :

பாடல் எண் : 6

பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாதடி
யேஇறைஞ்சி
இரந்தஎல் லாம்எமக் கேபெற லாம்என்னும்
அன்பருள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற்
கன்பெனக்கும்
நிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த
முழுவதுமே. 

பொழிப்புரை :

பரவி, பலவகையாயிருக்கிற, ஆராய்ந்து எடுக்கப் பெற்ற மலர்களை உன் திருவடிகளில் இட்டு, குறைபாடின்றி, உன் திருவடிகளையே வணங்கி, வேண்டினவை எல்லாம் எங்களுக்கே பெறுதல் கூடும் என்று நிச்சயித்த அடியார்களுடைய மனத்தை ஒளித்து மற்றோரிடத்தில் நில்லாத கள்வா! பூரணமாக உன்னைத் துதிக்க, அடியேனுக்கும் உன் நெடிய கழலை அணிந்த திருவடிகளுக்குச் செய்ய வேண்டிய அன்பை இடையீடின்றி அருள் செய்வாயாக.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பரந்து - வலம் வந்து. ஆயப்படாத மலரினை இடுதலும், நாளும் செய்யாது இடை இடையே விட்டொழிதலும் கூடாமையின், ``ஆய்மலர் இட்டு முட்டாது இறைஞ்சி`` என்று அருளினார். இரந்த எல்லாம் - (தம் பிழையைப் பொறுக்குமாறு) வேண்டித் துதித்த செய்கைகள் யாவும். எமக்கே பெறல் ஆம் - நமக்கே பேறாவனவாம். என்னும் அன்பர் - என்று உணர்கின்ற மெய்யன்பினை உடைய வர்களது. `இறைவனை வழிபடப் பெறுதலே பெரும்பேறு என உணர்கின்றவரே மெய்யன்பர்` என, அவரது இயல்பினை விதந்தோதியவாறு. உள்ளம் - உள்ளத்தின்கண். `விளங்கிநிற்கின்ற பெருமானே` என்னாது, ``கரந்து நில்லாக் கள்வனே`` என்றது `அன்பரல்லாத பிறரது உள்ளத்தில் சிறிதும் விளங்காது நிற்பவன்` என்று கூறும் கருத்தி னாலாம். `யானும் நின்னை முழுவதும் ஏத்த`, `எனக்கும் நின்றன் வார் கழற்கு அன்பை நிரந்தரமாக அருளாய்` என்க. வார்கழல், அடையடுத்த ஆகுபெயர். நிரந்தரம் - இடைவிடாமை.

பண் :

பாடல் எண் : 7

முழுவதுங் கண்டவ னைப்படைத் தான்முடி
சாய்த்துமுன்னாள்
செழுமலர் கொண்டெங்குந் தேடஅப் பாலன்இப்
பால்எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடக மாடிக்
கதியிலியாய்
உழுவையின் தோலுடுத் துன்மத்தம் மேல்கொண்
டுழிதருமே.

பொழிப்புரை :

உலகம் முழுமையும் படைத்தவனாகிய பிரமனை படைத்தவனாகிய திருமாலும், தலைவளைத்து முற்காலத்தில் செழுமையாகிய மலர்களை ஏந்திக் கொண்டு எவ்விடத்தும் தேடி நிற்க, அப்பாற் பட்டிருந்தவன்; இவ்விடத்தில் எமக்கு உபகாரியாய் சுடுகாட்டில் பேய்களோடு கூடி நடனம் செய்து கதியில்லாதவனாகி புலித்தோலைத் தரித்து உன்மத்த குணத்தை மேற்கொண்டு திரிந்து நிற்பவன். இஃது என்ன ஆச்சரியம்?

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

முழுவதும் - உலகங்கள் எல்லாவற்றையும். கண்ட வன்-படைத்தவன்; பிரமதேவன். பிரமதேவனைப் படைத்தவன் திருமால். முடிசாய்த்து - தலைவணங்கி. தேடியது. வழிபடற் பொருட்டு. அப்பாலன் - அகப்படாது ஒளித்தவனாகிய எம்பிரான் என்க. திருமால் சிவபிரான் திருவடியைத் தேடிக் காணாமையேயன்றி. வழிபட விரும்பித் தேடியபொழுதும் அவர் காணாதவாறு சிவபிரான் ஒளித்த வரலாறு ஒன்றும் உண்டு என்பது, இதனாற் பெறப்படுகின்றது.
`அதர்வசிரசு` என்னும் உபநிடதத்திலும், இலிங்க புராணத்திலும், `தேவர்கள் தம்முன் காணப்பட்ட உருத்திரரை இன்னார் என்று அறியாது, `நீர் யார் ` என வினாவ, அவர் தமது பெருமைகளைக்கூறி மறைந்தார்; பின்பு தேவர்கள் `அவரைக் கண்டிலர்` என்று ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. `கண்டிலர்` என்பது, எதிர்ப்பட்டவர் உருத்திரரே என்று அறிந்த தேவர்கள் தமது அறியாமைக்கு வருந்தி, அவரை வழிபட விரும்பித் தேடியபொழுது கண்டிலர் என்னும் குறிப் புடையதேயாதல் வேண்டும். அவ்வரலாறே இங்குத் தேவர் என்னாது, திருமால் எனப்பட்டது போலும்! கழுது - பேய். நாடகம் - நடனம். கதியிலி - புகலிடம் இல்லாதவன். உழுவை - புலி. உன்மத்தம் - பித்து. உழி தரும் - திரிவான். `தேவருலகத்தில் திருமால் முதலியவர்கட்கு எட்டாதவன், இம் மண்ணுலகத்தில் மிக எளியனாய்க் காணப்படுகின்றான்` என்றபடி. தனக்கோர் ஆதாரம் இன்றித் தானே அனைத்திற்கும் ஆதாரமாய் நிற்றலை, ``கதியிலி` என்றும், உலகத்தாரொடும் ஒத்து நில்லாது வேறுபட்டு நிற்கும் நிலையை, ``உன்மத்தம்`` என்றும் பழிப்பதுபோலக் கூறிப் புகழ்ந்தருளினார். `கழுதொடு காட்டிடை நாடகம் ஆடுதல்` என்பது. உண்மையில் எல்லாவற்றையும் அழித்த நிலையில் உயிர்களோடு நின்று சூக்கும ஐந்தொழில் செய்வதேயாயினும், அந்நிலையை மக்கள் இவ்வுலகத்தில் சுடுகாட்டுள் ஆடுவானாகவே கண்டு வழிபட, அவர்க்கு அருள் புரிதல்பற்றி, ``இப்பால் உழிதரும்` என்று அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 8

உழிதரு காலும் கனலும் புனலொடு
மண்ணும்விண்ணும்
இழிதரு காலம்எக் காலம் வருவது
வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த
வல்வினையைக்
கழிதரு காலமு மாய்அவை காத்தெம்மைக்
காப்பவனே. 

பொழிப்புரை :

சஞ்சரிக்கிற வாயுவும் அக்கினியும் நீருடன் பூமியும் ஆகாயமும் நசிக்கின்ற காலமானது எக்காலத்துண்டாவது, அவ்வாறு அக்காலமுண்டான பின்பும், நீடு வாழ்கின்ற திருவடியையுடைய எம் தந்தையே! உன் தொண்டனேன் செய்த வலிய வினைகளை நீக்கி அருளுக. காலதத்துவங்களாகிய அவைகளைக் காத்து எங்களையும் காக்கின்ற இறைவனே!

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

சொற்கிடக்கை முறை வேறாயினும், ``எக்காலம் வருவது`` என்பதனை, `வருவது எக்காலம்` என மாற்றி இறுதியில் வைத்துரைத்தல் கருத்தாதல் அறிக. ``உழிதரு காலத்த`` என்றதனை முதலிற் கொள்க. உழிதரல் - நில்லாது பெயர்தல். இப்பண்பு காற்றிற்கும் காலத்திற்கும் உளதாதல் அறிக. கால் - காற்று. இழிதரல் - விட்டு நீங்குதல். `காலம் ` என்னும் முதனிலை அன்விகுதியோடு புணருமிடத்து இடையே அத்துச் சாரியை பெற்று, `காலத்தன்` என நின்று விளியேற்றது. `நில்லாது பெயர்கின்ற காலதத்துவமாய் நிற்பவனே` என்பது பொருள். ``வல்வினையைக் கழிதரு காலமு மாய்`` என்றது, `காலதத்துவமாய் நிற்பதனால், உன் அடியேனாகிய யான், பல பல பிறப்புக்களில் செய்த வல்வினையினின்று நீங்குகின்ற காலமுமாய் நின்று` என்றபடி. `அடியேன் கழிதரு` என இயையும். அவை - வல்வினைகளை. காத்து - வந்து பற்றாதவாறு தடுத்து. ``எம்மை`` என்றது, தம்மோடொத்த பிறரையும் உளப்படுத்து. `ஐம்பெரும் பூதங்கள் முதலிய தத்துவங்கள் என்னின் வேறாக என்னால் அறியப்பட்டு நீங்குங்காலமே என் வல்வினை கழியுங் காலம்; அதுபோது என்னை நீ உன் திருவடியிற் சேர்த்து உய்யக் கொள்வாய்; அத்தகைய காலம் எனக்கு வாய்ப்பது எப்பொழுது` என்பது இப்பாட்டின் திரண்ட கருத்து. பூதங்களையே கூறினாரா யினும், பிற தத்துவங்களையும் தழுவிக்கொள்ளுதல் கருத்தென்க.

பண் :

பாடல் எண் : 9

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்
ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என்
சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன
இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ
தியம்புகவே. 

பொழிப்புரை :

பவன் என்னும் திருப்பெயர் உடையவன்; எமக்கு உபகாரகன்; குளிர்ச்சி பொருந்திய பெருமையமைந்த தலைமாலையை அணிந்தவன்; தேவர் பெருமான்; சிவன் என்னும் பெயர் உடையவன்; எமக்குபகார சீலன்; என் தாழ்வைக் கண்டு வைத்தும் என்னை ஆண்டு கொண்டருளினன். ஆதலால் இவ்வுலகத்தார் அவனே எமக்குத் தலைவன் என்றும் நான் அடியவன் என்றும் இவ்வாறே தெரியும் தன்மையைச் சொல்லுக.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

`பவனாகிய எம்பிரான், சிவனாகிய எம்பிரான்` என்க. இப்பரிசே எம்பிரான் தெரியும் பரிசாவது - இம் முறைமையிலே எம் இறைவன் என்னைக் கடைக்கணித்தற்குக் காரணத்தை. புவன் இயம்புக - இவ்வுலகம் அறிந்து கூறுவதாக. `அவனது பேரருளல்லது பிறிது காரணம் இல்லை` என்றவாறு. `புவனம்` என்பது கடைக் குறைந்துநின்றது.

பண் :

பாடல் எண் : 10

புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல்
லாமணியே
தகவே எனைஉனக் காட்கொண்ட தன்மைஎப்
புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண்
ணாஅமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த
நாடகமே. 

பொழிப்புரை :

என் தொளைக்காத மாணிக்கமே! நான் உன் அடியார்களுக்கு இடையே வாழவும், தகுதி உடையவன் அல்லன். அங்ஙனமாக அடியேனை உனக்கு ஆளாக்கிக் கொண்ட தன்மை யானது தகுதியோ? எவ்வகைப் புன்மையோரையும் மிகவும் உயர்வித்துத் தேவர்களைப் பணியச் செய்கிறாய். கிடைக்கலாகாத அமிர்தமே! எம்பிரானே! என்னை நீ செய்த கூத்து நகைப்பதற்கு உரியதே ஆகும்.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `என் பொல்லா மணியே, அண்ணா அமுதே, எம்பிரான், யான் உனக்கு அன்பருள் புகவே தகேன்; அங்ஙனமாக என்னை உனக்கு ஆளாகக் கொண்ட தன்மை தகவே? சிலபோது, நீ, எப்புன்மையரை மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; ஆதலின், என்னை நீ செய்த நாடகம் நகவே தகும்`. ஏகாரங்களுள் ``தகவே`` என்பது வினாப்பொருளிலும், ``நகவே`` என்பது பிரிநிலைப் பொருளிலும் வந்தன. ``புகவே, மிகவே`` என்பன, தேற்றப் பொருள. பொல்லா - பொள்ளா; துளை யிடாத. ``தோளா முத்தச் சுடரே`` என முன்னருங் கூறினார். (தி.8 போற்றித்- 197). எப் புன்மையர் - எத்துணைக் கீழானோரையும்; உம்மை, தொகுத்தல். பணித்தி - தாழ்விப்பாய். செய்த - இவ்வாறு ஆக்கிய. ``நாடகம்`` என்றது, இங்கு வினோதக் கூத்தைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 11

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே. 

பொழிப்புரை :

நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

இவ்விரண்டாம் பத்து, சிலவற்றை இறைவனிடமும், சிலவற்றை நெஞ்சினிடமும் கூறுவதாக அமைந்திருத்தலின், இதற்கு, `அறிவுறுத்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர்! `தரவு கொச்சகம்` என்பன தொல்காப்பியத்தும் காணப்படும். நடுவே - அவர்களுக்கு இடையில். ``வீடகத்து`` என்றது, `உனது இல்லத்தினுள்` என்ற நயத்தினையும் தோற்றுவித்தது. தக்கார் பலர் குழுமிப்புகும் ஓரிடத்து அவர்போல நடிப்பவனும் அவர்கட் கிடையே அங்குப்புக மிக விரைந்து செல்லுதல் உலகியல்பு. அவ் வியல்புபற்றிக் கூறியவதனால், அடிகளுக்கு வீடடைதற்கண் உள்ள விரைவு எத்துணையது என்பது புலனாகும். எய்த வந்திலாதார் எரியிற் பாய்ந்தமை(தி.8 கீர்த்தி - 132) முதலியவற்றைச் செய்ததுபோலத் தாம் செய்யாமை பற்றித் தமது செயலை நாடகம் என்று அருளினார். ஆடகச் சீர் மணி - பொன்னின்கண் பொருந்திய மணி. சீர்த்தல் - பொருந்துதல். உனக்கு - உன் பொருட்டு. ``ஊடகத்தே`` என்பதனை, `அகத்தூடே` என மாற்றிக்கொள்க. அகம் - மனம். நின்று - நிற்க. `அதனால் அஃது உருக` என்க. ``உருக`` என்ற செயவெனெச்சம், தொழிற்பெயர்ப் பொருளைத் தந்து நின்றது. `எம்மை உடையானே` என, இரண்டாவது விரிக்க. `உடையான்` தலைவன் எனக்கொண்டு, நான்காவது விரித்தலுமாம்.

பண் :

பாடல் எண் : 12

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்
கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான்
மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம்
பெருமான்எம்
மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே
வருந்துவனே.

பொழிப்புரை :

நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியே னாகுங் காலம், எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

என் கடவேன் - என்ன கடப்பாடு உடையேன்; ஒன்றுமில்லை. எனவே, `இறப்பைப் பற்றியும் கவலையுறுகின்றிலேன்` என்றவாறு. ``வானேயும்`` என்றதில் ஏகாரமும், உம்மையுமாகிய இரண்டு இடைச் சொற்கள் ஒருங்குவந்தன. ஏகாரம் தேற்றமும், உம்மை உயர்வு சிறப்புமாய் நின்றன. தேன் ஏயும் - தேன் பொருந்திய. `மலர்க் கொன்றை` என்றதனை. `கொன்றை மலர்` என மாற்றி யுரைக்க. `பெருமான், மான்` என்றவற்றுள் ஒன்றற்கு, `தலைவன்` எனவும், மற்றொன்றற்கு, `பெரியோன்` எனவும் பொருள் உரைக்க. `பிறப்பு` இறப்புக்களாகிய துன்பங்களை நீக்கிக் கொள்வது எவ்வாறு என்றோ, சுவர்க்கபோகமும், இவ்வுலகத்தை ஆளும் செல்வமும் ஆகிய இன்பத்தைப் பெறுவது எவ்வாறு என்றோ யான் கவலையுறு கின்றேனல்லேன்; உன் அருளைப் பெறுவது எந்நாள் என்ற அவ் வொன்றை நினைந்தே நான் கவலையுறுகின்றேன்` என்றவாறு. `அருள்` என்றது, இவ்வுடம்பின் நீக்கித் தன்னோடு உடனாகச் செய்தலை.

பண் :

பாடல் எண் : 13

வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான்
நாயடியேன்
இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத்
தழும்பேறப்
பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம்
புரியாயேல்
வருந்துவனத் தமியேன்மற் றென்னேநான்
ஆமாறே. 

பொழிப்புரை :

நான் உன் திருடியைக் காணும் பொருட்டு மலர் சூட்டேன்; நாத்தழும்பு உண்டாகத் துதியேன்; இவை காரணமாக நீ உன் அருளாகிய அமிர்தத்தைத் தந்தருளாயானால், நான் வருந்துதலே யன்றி உனக்காளாகும் விதம் யாது?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`வருந்துவன் நின் மலர்ப்பாதமவை காண்பான்` என மேற்போந்ததனையே மறித்துங் கூறினார், `அங்ஙனம் வருந்துலன்றி, அதற்கு ஆவனவற்றுள் ஒன்றும் செய்திலேன்` எனத் தமது ஏழைமையை விண்ணப்பித்தற்பொருட்டு. ``புனையேன்`` என்றதற்கு, `சாத்தி வழிபடேன்` என்றாயினும், `மாலை முதலியனவாகத் தொடேன்` என்றாயினும் உரைக்க. இவ்விரண்டும் இருந்து செய்யற் பாலனவாதல் அறிக. அதனைக் கிளந்தோதியது, `எனது உலகியல் நாட்டம் என்னை இவற்றின்கண் விடுகின்றிலது` என்பதைத் தெரிவித்தற் பொருட்டு. `நத் தமியேன்` எனப் பிரித்து, `மிகவும் தமியேனாகிய யான்` எனப் பொருள் உரைக்க. `ந` என்னும் இடைச் சொல் சிறப்புணர்த்தியும் வருமாகலின், அது, பின் வரும் தனிமையின் மிகுதியை உணர்த்திற்று. `அதுவன்றி நான் ஆமாறு மற்று என்` என்க. ஆமாறு - அடையும் நிலை.

பண் :

பாடல் எண் : 14

ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன்
அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன்
புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன்
கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே
சார்வானே.

பொழிப்புரை :

அறிஞர் அறிவுக்குப் புலப்படுவோனே! உன் திருவடிக்கு ஆளாகும் பொருட்டு மனம் உருகுதலும் அன்பு செலுத்து தலும், பூமாலை புனைந்தேத்துதலும், புகழ்ந்துரைத்தலும், திருக் கோயில் பெருக்குதலும், மெழுக்கிடுதலும் கூத்தாடுதலும் முதலியவற் றில் யாதும் செய்யேன். ஆயினும் இந்த உலக வாழ்வை நீக்கி உன் திரு வடியைப் பெற விரும்புகிறேன். உன் பெருங்கருணையால் என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`உன் திருவடிக்கு ஆமாறு` என மாற்றுக. ஏகாரம், அசை நிலை. `அன்பினால் அகம் குழையேன்; உருகேன்` என்க. குழைதல் - இளகல். உருகல் - ஓட்டெடுத்தல். `தூகேன்` என்பதற்கு, `தூ` என்பது முதனிலை. `விளக்குதல்` என்பது இதன் பொருள். இதனை, `திருவலகிடுதல்` என்றல் மரபு. ``விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்`` (தி.4.ப.77.பா.3) என்று அருளிச் செய்தமை காண்க. `சதுராலே சாமாறே விரைகின்றேன்` எனக் கூட்டி, `உலகியல் துழனிகளால் இறப்பதற்கே விரைந்து செல்லுகின்றேன்` என உரைக்க. `விரைகின்றேன்` எனத் தம் குறிப்பின்றி நிகழ்வதனைத் தம் குறிப்பொடு நிகழ்வது போல அருளினார். சார்வானே - எல்லாப் பொருட்கும் சார்பாய் நிற்பவனே. இப்பாட்டில் மூன்றாம் அடி ஐஞ்சீரடியாய் மயங்கிற்று.

பண் :

பாடல் எண் : 15

வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
வாழ்த்துவனே. 

பொழிப்புரை :

ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

வளி - காற்று. ஒளி, ஞாயிறு முதலியவை. ஊன் - உடம்பு; ஆகுபெயர். `பூதங்களும், அவற்றின் காரியங்களும் ஆகி இருப்பவன்` என்றபடி. இறைவன் இப்பொருள்கள் எல்லாமாய் நிற்பது, உடலுயிர்போல வேறறக் கலந்து நிற்கும் கலப்பினாலாம். ``உண்மை, இன்மை`` என்றவை, அவற்றையுடைய பொருளைக் குறித்தன. இறைவன், அநுபவமாக உணர்வார்க்கு உள்பொருளா யும் அவ்வாறன்றி ஆய்ந்துணர்வார்க்கு இல்பொருளாயும் நிற்பான் என்க.
கோன் - எப்பொருட்கும் தலைவன். அவர் அவரை - ஒவ்வொருவரையும். ``யான் எனது என்று `` என்னும் எச்சம், ``ஆட்டு வான்`` என்னும் பிறவினையுள் தன்வினையொடு முடியும். எனவே, ``ஆட்டுவான்`` என்பது, `ஆடுமாறு செய்வான்` என இரு சொல் தன்மை எய்தி நின்றதாம். உலகியலை, `கூத்து` என்றது. நிலையற்றதாதல் கருதி, கூத்து, ஒரு கால எல்லையளவில் நிகழ்ந்து, பின் நீங்குவதாதல் அறிக. `ஒத்த சிறப்பினவாய் அளவின்றிக் கிடக்கும் உனது பெருமைகளுள் எவற்றைச் சொல்வேன்! எவற்றைச் சொல்லாது விடுவேன்!` என்பது இத்திருப்பாட்டின் தெளிபொருள்.

பண் :

பாடல் எண் : 16

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்
மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந்
தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை
நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும்உன்னைப்
பரவுவனே. 

பொழிப்புரை :

தேவர் உன்னைத் துதிப்பது, தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழ விரும்பியேயாம். வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே! நான் அப்படி யின்றி என் பிறவித் தளையை அறுத்துக் கொள்ள விரும்பியே உன்னைத் துதிக்கின்றேன்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

எல்லாம் - எல்லாரும். `சூழ்ந்து` என்பது வலித் தலாயிற்று. மதுகரம் - வண்டு. தாரோயை - மாலையை அணிந்த உன்னை. நாயடியேன் - நாய்போலும் அடியேன். `நாயடியேனாகிய யானும்` என, ``யானும்`` என்றதனை இதன் பின் கூட்டுக. பாழ்த்த - இன்பம் அற்ற. பரவுவன் - துதிப்பேன். `தேவர்களும் உன்னை வணங்குகின்றார்கள்; யானும் உன்னை வணங்குகின்றேன், தேவர்கள் போகத்தை வேண்டுகின்றனர்; எனக்கு அது வேண்டுவதில்லை; உனது திருவடி நிழலே வேண்டும்` என்பது கருத்து. இதனானே, `இதனை அருளுதல் உனக்கு இயல்பேயாய் இருத்தலின், எனக்கு விரைந்து அருள்புரிக` என்ற குறிப்பும் பெறப்பட்டது. இறைவன் போகத்தை வழங்குதல், உயிர்களின் இழிநிலை குறித்தன்றித் தன் விருப்பத்தினாலன்றாதலும், வீடுபேற்றைத் தருதலே அவனது கருத்தாதலும் அறிந்து கொள்க. உம்மைகள், எச்சப்பொருள.

பண் :

பாடல் எண் : 17

பரவுவார் இமையோர்கள் பாடுவன
நால்வேதம்
குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள்
ஒருபாகம்
விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்
மேன்மேல்உன்
அரவுவார் கழலிணைகள் காண்பாரோ
அரியானே.

பொழிப்புரை :

கடவுளே! உன் அருமை நோக்கித் தேவர் உன்னைப் பரவுகின்றனர். வேதங்கள் ஓதி மகிழ்கின்றன. உமாதேவி ஒரு பாகத்தை நீங்காது இருக்கின்றனள். மெய்யடியார்கள் கூடிக் காண்கின்றனர். நான் ஒன்றும் செய்திலேன். ஆயினும் என்னை உன் பெருங் கருணையால் ஆட்கொள்ள வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

குரவு - குராமலரையணிந்த. அரவு - பாம்பை யணிந்த. ``வார்கழல்`` என்றது அடையடுத்த ஆகுபெயராய், `திருவடி` என்னும் பொருட்டாய் நின்றது. `கழலிணைகள் என்றதனை `இணையாகிய கழல்கள்` எனக்கொள்க. `உன் திருமுன்பில் தேவர்கள் உன்னைத் துதித்து நிற்பார்கள்; வேதங்கள் முழங்கும்; உமையம்மை உனது திருமேனியில் ஒரு கூறாய் விளங்குவாள்; ஆயினும், அடியார்களே மெய்யன்பினால் உன்னை அடைவார்கள்; ஆதலின், அவர்களே உனது திருவடிகளை மேன்மேலும் கண்டு இன்புறுவார்கள்போலும்` என்றவாறு. ஓகாரம் சிறப்புப் பொருட்டு. அம்மையும் இறைவனை வழிபடுதல் முதலியவற்றால் இறைவன் திருவடியைக் காண முயல்பவள்போலக் காணப்படுவதால், `தேவர், வேதங்கள்` என்னும் இவரோடு உடன் கூறினார். `அவள் இறைவனின் வேறாதலின்மை யின், கண்டு இன்புறுவாருள் ஒருத்தியாகாள்` என்றபடி. எனவே, `ஒரோவொருகாரணத்தால் இமையோர் முதலியவர் திருவடியைக் காணாராக, அடியார்களே அவற்றைக் கண்டு இன்புறுவார்` என்ற தாயிற்று. இமையவர்கட்கு மெய்யன்பு இன்மையானும், வேதம் மாயாகாரியமேயாகலானும் திருவடியைக் காணலாகாமை யறிக. அரியானே - யாவர்க்கும் காண்டற்கு அரியவனே.

பண் :

பாடல் எண் : 18

அரியானே யாவர்க்கும் அம்பரவா
அம்பலத்தெம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட
பெய்கழற்கீழ்
விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன்
நயந்துருகேன்
தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான்
சாவேனே. 

பொழிப்புரை :

கடவுளே! சிறியேனை ஆட்கொண்டருளின உன் திருவடியைப் பாடுதல், மலர் தூவி மகிழ்தல், வியந்து அலறல், நயந்து உருகுதல் முதலியவற்றைச் செய்து உய்யும் வகை அறியாமல் உயிர் வாழ்கின்றேன். எனவே நான் இறப்பதே தகுதியாகும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`யாவர்க்கும் அரியானே` என மாற்றுக. அம்பரம் - ஆகாயம். சிதம்பரம் - சிதாகாசம்; ஞானவெளி. அதனுள் விளங்குதல் பற்றி, `அம்பரவா` என்றார். அம்பலம் - மன்று; சபை, பெய்கழல் - கட்டப்பட்ட கழலையுடைய திருவடி, ``கீழ்`` என்றது ஏழனுருபு. அலறுதல் - கூப்பிடுதல், நயந்து - விரும்பி; அன்புகொண்டு. தரியேன்- அத்திருவடிகளை உள்ளத்துக்கொள்ளேன்; நினையேன். `ஆதலின், நான் ஆமாறு என்! நான் சாவேன்! சாவேன்!!` என்க. ``சாவேன்`` என்றது, `பயனின்றி இறப்பேன்` என்றபடி. அடுக்கு, துணிவுபற்றி வந்தது.

பண் :

பாடல் எண் : 19

வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச்செவ்
வாய்க்கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும்
பாழ்நெஞ்சே
ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான்
இன்றுபோய்
வானுளான் காணாய்நீ மாளாவாழ்
கின்றாயே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! மலர்க்கணைக்கும் மாதர்க்கும் பதைத்து உருகி நின்ற நீ, இறைவனது பிரிவுக்கு ஆற்றாது உருகியிறந்து படுவாய் அல்லை; ஆதலால் நீ பயன் அடையாது ஒழிகின்றனை.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

வேனில்வேள் - மன்மதன், அவன் வேனிற் காலத்தை உரிமையாக உடைமைபற்றி, `வேனில்வேள்` எனப்பட்டான். ``வெண்ணகைச் செவ்வாய்க்கரிய பானலார் கண்ணியர்`` என்றாரா யினும், `அவரது நகை முதலியவற்றுக்கு` என்று உரைத்தலே கருத் தென்க. குவ்வுருபுகளை ஆனுருபாகத் திரிக்க. ``இன்றுபோய், வான் உளான்`` என்றதனால், `புகுந்து ஆண்டது அன்று` என்பது பெறப் பட்டது. வான் - சிவலோகம், நீகாணாய் - அவன் பிரிந்து நிற்றற்கு ஏதுவாகிய உன் இழிநிலையை நீ நினைக்கின்றிலை; `அதனால் இறவாது உயிர் வாழ்கின்றாய்; உனது வன்மை இருந்தவாறு என்` என்க. இதன்கண் நெஞ்சினை உயிருடையது போல அருளினார்.

பண் :

பாடல் எண் : 20

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே
வல்வினைப்பட்
டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை
ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்
பல்காலும்
வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய
வெள்ளத்தே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

``வாழாத நெஞ்சமே`` என்றதனை முதலில்வைத்து `இறைவனை அடைந்து வாழமாட்டாத மனமே` என உரைக்க, ``வாழ்கின்றாய்`` என்றது, வாழ்தலையோ செய்கின்றாய்` எனப் பொருள் தருதலை எடுத்தலோசையாற் கூறிக்காண்க. அங்ஙனம் பொருள் படவே; `இல்லை` என்பது அதன்பின் வருவிக்கப்படுவ தாம். ``உனக்கு`` என்றது முன்னரும் சென்று, `ஏத்தாதே உனக்குக் கேடு சூழ்கின்றாய்` என இயையும். `உனக்குப் பல்காலும் சொல்கின்றேன்` என மாற்றியுரைக்க, ``சொல்கின்றேன்` எனத் தொடங்கியதனையே, ஈற்றடியிற் சொல்லி முடித்தார். எனவே, ``உய்யப் பார்` என அறி வுறுத்தியவாறாயிற்று. அவலக் கடலாய வெள்ளம் - `துன்பக் கடல்` எனப் பெயர்பெற்ற வெள்ளம்.

பண் :

பாடல் எண் : 21

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே.

பொழிப்புரை :

கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இம் மூன்றாம் பத்துள் முதல் திருப்பாட்டில் பேரன்பின் நிலையையும், எட்டாம் திருப்பாட்டில் இறைவன் தமக்கு வியாபக உணர்வு அளித்தமையையும், ஒன்பதாம் திருப்பாட்டில் இறைவனது பெருநிலையையும் குறித்திருத்தல் பற்றி இதற்கு, `சுட்டறுத்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர். சுட்டு - சுட்டுணர்வு. அஃது, ஒருகாலத்துப் பலவற்றை உணராது ஒன்றனை மட்டுமே உணர்தல். இஃது, `ஏகதேச உணர்வு` எனவும் படும். ஒருகாலத்தில் பலவற்றையும் ஒருங்குணர்தல், `வியாபக உணர்வாகும்`. உணர்வை, `ஞானம்` என்ப. இவையே, `சிற்றறிவு, முற்றறிவு` எனப்படுவனவாம். என - என்றுதுதிப்பவர் துதிக்க. வேட்ட - (உன்னைக் காண) அவாவிய. நெஞ்சு - நெஞ்சினர்; ஆகுபெயர். பள்ளம்தாழ் - பள்ளத்தின்கண் வீழ்கின்ற. உறுபுனலின் - மிகுந்த நீர்போல. `உறு புனலின் பதைத்து` என இயையும். ``கீழ்`` என்றது, கீழ் நிற்பனவாகிய கால்களை. பதைத்து - விரைந்து; ஓடி. ஓடுதல், இறைவன் வெளிப்படும் இடத்தை நாடியாம். அவர் - அத்தகைய பேரன்பர். ``நிற்க`` என்றது, உன்னைக் காணாது நிற்க எனவும், ``ஆண்டாய்`` என்றது, `எதிர் வந்து ஆண்டாய்` எனவும் பொருள்தந்தன, ஆண்டாய்க்கு - ஆண்ட உன்பொருட்டு. உடம்பு `முழுதும் நெஞ்சேயாய் உருக வேண்டியிருக்க, உள்ள நெஞ்சும் உருகவில்லை; உடம்பு முழுதும் கண்களேயாய் நீர்சொரிய வேண்டுவதாக, உள்ள கண்களும் சிறிதும் நீரைச் சிந்தவில்லை; இங்ஙனமாகவே, என் நெஞ்சு கல்லே; என் கண்கள் மரத்தின்கண் உள்ள கண்களே` என்ற படி. ``மரம்`` என்றது அதன் கண்களை. மரத்தின்கண் உள்ள துளைகட்கு, `கண்` என்னும் பெயருண்மை பற்றி, இகழப்படும் கண்களை, அவைகளாகக் கூறும் வழக்கினை, ``மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்`` என்னும் முத்தொள்ளாயிரச் செய்யுளால் உணர்க. `அண்ணால்` என்பது ``அண்ணா` என மருவிற்று.

பண் :

பாடல் எண் : 22

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனையநான் பாடேன்நின் றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோநான் ஆன வாறு
முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே. 

பொழிப்புரை :

தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக் கிடந்த என்பால் வலிய எதிர்ப்பட்டு வந்து நின்று, நீ வா, நான் வினையை ஒழிக்க வல்லேன் என்று கூறுவாய் போல, ``நான் இத்தன்மையன்`` என்று உன்னியல்பை எனக்கு அறி வுறுத்தியருளி, என்னை அடிமை கொண்டு, எமக்குத் தலைவனாய் நின்ற உன் பொருட்டு, இருப்பினாற் செய்த பதுமை போன்ற நான், நின்று கூத்தாட மாட்டேன்; முதல்வனே! நான் இவ்வாறாய முறையின் முடிவு என்ன என்று அறிய மாட்டேன்; இது முறையாகுமோ?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புகுந்து- எதிர்வந்து. போது - வா. வினைக் கேடன் - வினைகட்கு அழிவைச் செய்பவன். இனையன் - இன்னான்; உருகுந் தன்மை இல்லாமை பற்றித் தம்மை இருப்புப் பாவையோடு ஒப்பித்தார். உலறுதல் - வற்றுதல்; மெலிதல். சோர்தல் - நீங்குதல், முனைவன் - முன் (முதற்கண்) நிற்பவன். `நான் இங்ஙனம் ஆனவாறு முறையாகுமோ` என்க. முடிவு - (இவ்வாறு இருப்பதன்) விளைவு. ``கிடந்தேனை உன்னை அறிவித்து`` என்றது, ``களித்தானைக் காரணங்காட்டுதல்`` (குறள் 929) என்றதுபோல நின்றது.

பண் :

பாடல் எண் : 23

ஆயநான் மறையவனும் நீயே யாதல்
அறிந்தியான் யாவரினுங் கடைய னாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே. 

பொழிப்புரை :

நான்கு வேதப் பொருளாய் இருப்பவன் நீ என்பதையும் எல்லாரினும் இழிந்தவன் நான் என்பதையும் அறிந்து உனக்கு நானும் ஓரடியான் என்றேன். ஆதலால், ஆண்டு கொண்டனை. அத்தனையே அன்றி, உனக்கு அடியார் இல்லாத குறையினால் அன்று, உன் பெருங்குணத்தைக் குறித்து நான் என்ன சொல்லிப் புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆய - பெருகிய. நான்மறையவனும் - நான்கு வேதங்களையும் அருளினவனும்; என்றது, ஒழுக்க நெறிகள் பலவற்றையும், உலகிற்கு நன்கு உணர்த்தியவன்` என்றவாறு. ``நீயே`` என்ற ஏகாரம், பிரிநிலை. ``கடையன்`` என்றது. ``ஒழுக்க நெறிகளுள் ஒன்றிலும் நில்லாதவன்` என்றதாம். ``நோக்கி`` என்றது முன்னர், ``அறிந்து`` என்றதனோடு இயைய வைத்து எண்ணப்பட்டது. கண்டு- பின், உண்மையை உணர்ந்து. உண்மையாவது, `சிறியோர்க்கு இரங்குதல் பெரியோர்க்கு இயல்பு` என்பது. ``நாதனே, எம் பெருமான்`` என்ற இரண்டையும் முதலில் கூட்டுக. `நானும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. அன்பன் - அன்பனாதற்கு உரியவன். என்பேனாயினேன் - என்று எண்ணும் இயல்புடை யேனாயினேன். ஆதலால் - ஒழுக்க நெறிகளால் சான்றோனாகா விடினும், இவ்வாறு உன் பெருமையைச் சிறிதேனும் உணரப் பெற்றமையால். இதனால், இறைவன் குருவாகி வந்து ஆட் கொள்வதற்கு முன்பே அடிகள் இறைவன் திருவருளில் நாட்டமுற்று நின்றமை பெறப்படும். ``அடியார் தாம் இல்லையே`` என்றது, `உனக்கு அடியவர் இல்லையாயின் குறையோ` என்னும் பொருளது. ஏகாரம், வினா. ``அன்றி`` என்றதனை, இதற்கு முன்னே கூட்டுக. பெருமை - பெரியோரது தன்மை; அது, சிறியோரை இகழாது, குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டல். `ஓர் பேயனேன் மற்று என் சொல்லிப் பேசுகேன்` என இயையும். பேசுதல், இங்கு, `விளக்குதல்` என்னும் பொருட்டு. விளக்குதல், தம்மை ஆட்கொண்ட காரணத்தை என்க.

பண் :

பாடல் எண் : 24

பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்றென்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப்
போற்றியெம் பெருமானே என்று பின்றா
நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே. 

பொழிப்புரை :

இறைவனே, பேசும் பொழுதும் உன் திருப் பெயரைப் பேசியும் பூசும்பொழுதும் திருநீற்றையே நிறையப் பூசும் நல் அன்பரை ஆண்டருளும் இயல்பினை உடைய நீ, அன்பில்லாத என்னை ஆண்டருளினது வியக்கத் தக்கதாயிருக்கின்றது.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`தாம் பேசின்`. `தாம் பூசின்` என மாற்றுக. `பேசின், பூசின்` என்றவை, பேசுதல், பூசுதல் இவற்றின் அருமையைக் குறியாது, `பேசும் பொழுதெல்லாம், பூசும்பொழுதெல்லாம்` எனப் பொருள் தந்தன. பின்றா நேசம் - சலியாத அன்பு. கடந்தார் - கடந்தவராவார்; இது, துணிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாக வந்ததாம். துணிவு, தகுதி பற்றி வந்தது. `பின்றா நேசத்தாரை ஆண்டானே, நீ, அவா வெள்ளக் கள்வனேனை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னை` என வியந்தவாறு காண்க.

பண் :

பாடல் எண் : 25

வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்று
அநேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே. 

பொழிப்புரை :

தேவர்கள் உன் திறம் முதலானவற்றையும் உள் உருவம் ஒன்றா? பலவா? என்பதனையும் அறியாமல் தடுமாறி நிற்க, என்னைத் தடுத்து உன் வண்ணம்காட்டி, திருவடி காட்டி, வடிவு காட்டி என்னை ஆட்கொண்டனையே! உன்னைக் குறித்து என்னவென்று புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``வண்ணம்``என்றதற்கு முன், `உன்` என்பதும் ``அனேகன்`` என்றதற்குமுன், `நீ` என்பதும் வருவித்து, அனேகன் முதலிய நான்கின்பின்னும் `அல்லை` என்பதைத் தனித்தனி விரித்தும் உரைக்க, ``சேயது, வெளிது`` என்றவை பண்பின்மேல் நின்றன. அணு-சிறியாய்; ஆகுபெயர். அணுவில் இறந்தாய் - பெரியாய், அங்கு-அறியப்புகும் அக்காலத்து. எண்ணம் - கொள்கை. தடு மாற்றம், அநுபவமாகாமையால் வந்தது. காட்டி - அநுபவமாகக் காணும்படி காட்டி. இப்பகுதியை, ``அதுபழச் சுவையென`` என்ற திருப்பாட்டின் (தி.8 திருப்பள்ளி.7) பகுதியோடு ஒருங்குவைத்துக் காண்க. வழி - உய்யும் வழி. `திண்ணமாக` என ஆக்கம் வருவிக்க. திண்ணமாவது, பிறவாமையே. ``தான்`` என வந்தன பலவும் அசை நிலைகள். சிந்திக்கேன் - நினைப்பேன். ``என்`` என்றதனை, ``சிந்திக்கேன்`` என்றதற்குங் கூட்டுக, `எச்சொல்லால் சொல்லி, எந் நினைவால் நினைப்பேன்! சொல்லுக்கும், நினைவுக்கும் அடங்காத தாய் உள்ளது உனது திருவருட் பெருமை` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 26

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.

பொழிப்புரை :

கடவுளே! இருமை வகை தெரியாத என் மனத்தை நின்திருவுருக்காக்கி, கண்களை நின் திருவடிகளுக்கு ஆக்கி, வழி பாட்டையும் அம்மலர் அடிகளுக்கே ஆக்கி, வாக்கினை உன் திரு வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் பயனுற என்னை அடிமை கொண்ட உனது பெருங் குணத்தை என்ன வென்று புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிந்தனை - நினைத்தல்; இஃது இறைவன் வடிவம் முழுவதையும் பற்றி அகத்தே நிகழவேண்டுமாதலின், ``நின்றனக்கு ஆக்கி`` என்றும், ஏனைய காட்சியும், தொழுகையும் புறத்தில் திரு வடியை நோக்கிச் செய்தலே சிறப்பாகலின், `அவற்றைத் திருவடி மலர்க்கே ஆக்கி` எனவும் அருளினார். வார்த்தை - செய்தி; இங்குப் புகழைக் குறித்தது. அடிகள் புலமைத்திறம் முழுவதையும் இறைவன் புகழுக்கே ஆக்கினமை அறிக. ``மணி`` என்றது சிறப்புப்பற்றிக் கூறப்பட்டது. இறைவன்புகழே யாவர் புகழினும் சிறந்ததாதல் அறிக. இறைவன் புகழை இங்ஙனம், ``மணிவார்த்தை`` எனக் குறிப்பிட்டமை யானே, அஃதொன்றையே பாடியருளிய அடிகள், `மாணிக்கவாசகர்`` எனப் பெயர் பெற்றார் என்ப, ``ஆக்கி`` என்னும் எச்சங்கள், ``ஆர`` என்றதனோடு முடியும். அது, சினைவினையாயினும் முதல்மேல் நின்றதாகலின் அவ்வெச்சங்கட்கு முடிபாதற்கு இழுக்கின்று. `ஐம்புலன்களும்` என்னும் உம்மை தொகுத்தல்.
``புலன்கள்`` என்றது, பொறிகளை. ஆர - நிரம்ப; என்றது, `இன்புறுமாறு` என்றபடி; இஃது எதிர்காலத்ததாய் நின்றமையின், ``ஆக்கி`` என்னும் எச்சங்களும் `உழுது வருவான்` என்பது போல, எதிர்காலத்தனவாம். என்னை?
``செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்``
என்பது தொல்காப்பியமாகலின். (தொல் - சொல் 241.)
இறைவன் ஆசிரியத் திருமேனியனாய் வந்து உடன், இருந்த காலத்தில் அடிகள் முதலியோரது ஐம்பொறிகளுள் நாப்பொறி இன்பம் எய்தியது, அவன் அளித்து உண்பித்தசுவைப் பொருள்களாலாம். இனி, ``ஐம்புலன்கள்`` என்றது பெரும்பான்மைபற்றிக் கூறிய தெனினும் இழுக்காது; `இவ்வூனக் கண்களாலே காண வந்தாய்` என்பதே கருத்து.
``உணர்வின் நேர்பெற வருஞ்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர
அருளினை``
(தி.12 பெரி. பு. ஞான. சம். 161.) என்று அருளிச்செய்தது காண்க.
வந்தனை- எதிர்வந்தாய்; இஃது எச்சப்பொருட்டாய் நின்றது. விச்சை - வித்தை. மால் - மருட்கை; வியப்பு. `விச்சையை யுடைய, வியப்பைத் தருகின்ற அமுதப்பெருங்கடலே` என்க. தருதல், `தடையின்றிச் சார்ந்து இன்புறவைத்தல். இரண்டு; இகம், பரம். அவை இல்லையாயது, அவற்றிற்கேற்ற அறிவும், ஒழுக்கமும் இன்மை யினாலாம். தனியன் - பற்றுக்கோடில்லாதவன். `ஒரு பயனும் இன்றி யொழியற்பாலனாகிய எளியேனை, மிக மேலான பயனைப் பெறச் செய்தாய்` என்றபடி. `உனது கருணையை என்னென்று புகழ்வேன்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 27

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.

பொழிப்புரை :

தனியனாய்ப் பிறவிப் பெருங்கடலில் விழுந்து, பலவகைத் துன்பங்களாகிய அலைகளால் எறியப்பட்டு, மற்றோர் உதவியும் இன்றி, மாதர் என்னும் பெருங்காற்றால் கலங்கி, காமமாகிய பெருஞ்சுறாவின் வாயிற்சிக்கி, இனிப்பிழைக்கும் வழி யாதென்று சிந்தித்து, உன் ஐந்தெழுத்தாகிய புணையைப் பற்றிக் கிடக்கின்ற என்னை முத்தியாகிய கரையில் ஏற்றி அருளினை.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், `பிறவி, துன்பம், மகளிர், காமம்; திருவைந் தெழுத்து, பிறப்பின்மை, என்னும் இவைகளை முறையே. `கடல், அலை, சூறாவளி, சுறாமீன், புணை, கரை, என்னும் இவைகளாக முற்றுருவகம்பட வைத்து அருளிச்செய்தவாறு காண்க. மல்லல் - வளம்.
மூர்க்கன் - கொண்டது விடாதவன். `எனக்கும் உண்மையை உணர்த்தி என்னை ஆட்கொண்டாய்` என்றபடி. `உனது சதுரப்பாடு இருந்தவாறு என்` என்பது குறிப்பெச்சம். ``கல்நாருரித்த கனியே`` (தி.8 போற்றித். 97) என முன்னரும் அருளிச் செய்தார், `இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி, அஞ்செழுத்தைத் துணையாகப் பற்றி யிருந்த தம்மை, ``மூர்க்கனேன்`` என்றது, மாதராசை துன்பந்தருவது என்று அறிந்தும் அதனை விடாது நின்றது பற்றியாம்.
இதனாலும், அடிகள், இறைவனால் ஆட்கொள்ளப் படுவதற்கு முன்னர், `சரியை, கிரியை, யோகம் என்னும் நிலைகளில் நின்றமை பெறப்படும். தனியனேனாய்க்கிடக்கின்ற என்னை, அவ்விடத்து மூர்க்கனேற்குக் கரையைக் காட்டி ஆட்கொண்டாய்` என முடிக்க. ``தனியனேன் என்றது கேவல நிலையைக் குறித்தது`, எனக் கொண்டு, `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இதனுட் கூறப்பட்டன எனக் காட்டுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 28

கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. 

பொழிப்புரை :

ஒருவராலும் கேட்டு அறியாதவனும், தனக்கு ஒரு கேடில்லாதவனும், உறவு இல்லாதவனும், கேளாமலே எல்லாம் கேட்பவனும் ஆகிய இறைவன், என் சிறுமை நோக்காது நாய்க்குத் தவிசிட்டாற் போலத் (தவிசு - இருக்கை; ஆசனம்) தன் அருகில் இருத்தி, காட்டுதற்கரிய தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எக் காலத்திலும் கேட்காத வேத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பித்து, மீட்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட் கொண்டான். இது ஒரு விந்தையாகும்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`ஆரும் கேட்டு அறியாதான்` என மாற்றுக. ``ஆரும்`` என்றது, சத்திநிபாதர்களைச் சுட்டியன்றி, உலகரைச் சுட்டியேயாம். இவர்களை, `நாடவர்` எனவும். `நாட்டார்` எனவும் அடிகள் குறித்தலையறிக. உலகரால் கேட்டறியப் படாமை, அவர்கள் அறிவிற்கு உணரவாராமையின் தமராய்ச் சொல்லுவார் இன்மை யினாலும், அறிவர் உரைக்கும் உரைகள் அவர்கட்குப் பொருள் படாமையினாலுமாம். கேடு - அழிவு. ஒன்று - சிறிது. `கேட்டாரும் அறியாமையால், இலனால் இல்லை` என்றபடி. கேளாதே எல்லாம் கேட்டான் - பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன். இது, கிளையின்மையால் அறியப்படும் என்பார், அதனை முற்கூறினார். கிளை, இருமுதுகுரவரும், பிறதமரும். இத் தன்மையனாகலின், பிறவாமற் காத்து ஆட்கொண்டான், என்பார், இவற்றை முதற்கண் கிளந்தோதினார். ஏக்கற்றுநின்றாரை, `விழித்து நின்றார்` என்றல் வழக்கு. அடிகள்பெற்ற பேற்றினையறிந்தபின், உலகவர் தமக்கு அஃது இன்மையை நினைந்து ஏக்கற்றனர் என்க. உயர்ந்தோர்க்குச் செய்யத்தக்கன, இழிந்தோர்க்குச் செய்யின், அதனை, `நாய் மேல் தவிசிட்டவாறு` என்றல் மரபு. தவிசு - இருக்கை. இஃது, யானையேறுவார் அதன்மேல் இடுவது. ``நாய்மேல் தவிசிடு மாறு`` (பழமொழி நானூறு - 105), எனவும் ``அடுகளிற் றெருத்தின் இட்ட - வண்ணப்பூந் தவிசுதன்னை ஞமலிமேல் இட்டதொக்கும்`` (சீவகசிந்தாமணி-202) எனவும் சொல்லப் பட்டமை காண்க. ``இவ்வாறாகவே, ``இட்டு`` என்றது, இட்டது போலும் செய்கையைச் செய்து` என்றவாறு. அச்செயலாவது, ஒரு மொழியாகிய ஐந்தெழுத்தின் உண்மையை அறிவுறுத்தியதாம். ``பின்னும்`` என்றதனை இதன்பின் கூட்டுக. ``நாயினேற்கே`` என்றது, `எனக்கே` என்னும் அளவாய் நின்றது. காட்டாதன, உணர்த்தியவாறே உணரும் உணர்வு மதுகை இல்லாதார்க்கு உணர்த்தலாகாதன. அவை, பொருட் பெற்றிகள்; இவற்றை, `தத்துவம்` என்ப. கேளாதன, உணர்த்தியவாறே ஒழுகும் ஆர்வம் இல்லாதவரால் கேட்கலாகாதன; இதற்கும், `சொல்லலாகாதன` என்பதே கருத்து. அவை, சாதனங்களும், அவற்றாற் சாதிக்கும் முறைகளுமாம். ``மீட்டேயும்`` என்றதில் உள்ள தேற்றேகாரத்தைப் பிரித்து, ``பிறவாமல்`` என்றதனோடு கூட்டுக. ``விச்சைதான்`` என்ற எழுவாய்க்குப் பயனிலையாகிய, `இது` என்பது எஞ்சி நின்றது. `இவையும் உயர்ந்தோர்க்கே செய்யற்பாலன; இவற்றையும் எனக்குச் செய்தான்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 29

விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி
அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி
அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர
அச்சன்ஆண் பெண்ணலிஆ காச மாகி
ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற
செச்சைமா மலர்புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே. 

பொழிப்புரை :

ஆண், பெண், அலி என்னும் உருவங்கள் இல்லாதவனாய் ஐம்பூத உருவினனாய், அவற்றுக்குக் காரணமாகிய மூலப் பகுதியாய், அதனையும் கடந்து நின்ற சிவபெருமான், சிறியேனைத் தன் அடியவன் ஆக்கிப் பிறவித்துன்பம் நீங்கும் வண்ணம் ஆட்கொண்டருளி, என் மனம் உருகும்படி அதனுள்ளே நுழைந்து நிலைத்திருந்தான். உலகத்தில் இது போன்ற விந்தையொன்று உண்டோ?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `அச்சன்......தேவர்கோ, (என்னை) ஆக்கி ஆட்கொண்டான்; அன்புகூர, அமுதம் ஊறி, அகம் நெகப் புகுந்து ஆண்டான்; கேட்கின், இது ஒப்பது விச்சை உண்டோ`.
கேட்டல் - ஆராய்தல். ``கேட்பான்புகில் அளவில்லை`, என் புழியும் (தி.3.ப.54பா.4) கேட்டல் என்பது, இப்பொருட்டாதல் அறிக. அச்சம், பிறவி பற்றியது. ``அமுதம்`` என்றது, இன்பத்தை. அன்பினாலும், இன்பத்தாலும் மனம் நெகிழப்பெறும் என்க. ``நெகவே`` என்னும் ஏகாரம், தேற்றம். புகுந்தது, அகத்து என்க. ``ஆண்டான்`` என்றது, `அருளினான்` என்னும் பொருட்டு. அச்சன் - தந்தை. பூதங்களுள் இரண்டைக் கூறவே, ஏனையவும் கொள்ளப் படும். அந்தத்தில் உள்ள நாத தத்துவத்தை, ``அந்தம்`` என்றார்; ஆகுபெயர். செச்சை - வெட்சி.

பண் :

பாடல் எண் : 30

தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தை
யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே. 

பொழிப்புரை :

தேவர்களால் அறியப் பெறாதவனும் மூவர் களுக்கும் மேலானவனும் ஆகிய இறைவன் தானே எழுந்தருளி என் சிறுமை கருதாது என்னைத் தடுத்தாட் கொண்டமையால், இனி நாம் யார்க்கும் குடிகளல்லோம்; எதற்கும் அஞ்சோம்; அவன் அடியார்க்கு அடியாரோடு சேர்ந்தோம். மேன்மேலும் ஆனந்தக் கடலில் குடைந் தாடுவோம்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேவர் கோ - இந்திரன். பொழில்கள் - உலகங்கள். பயந்து - பெற்று; படைத்து. மற்றை - தன்னின் வேறாகிய, மூவர்: அயன், அரி, அரன். `இவர்கள் குணமூர்த்திகளாதலின், நிற்குண னாகிய பரமசிவனின் வேறே` எனவும், `அன்னராயினும், அவனது அதிகார சத்தியைப் பெறுதற்கு உரிமையுடையராயினமையின், ஏனைத் தேவரின் மேம்பட்டவர்` எனவும் உணர்த்தற்கு, ``மற்றை`` என்றார். இதனானே, மூவருள் ஒருவனாகிய உருத்திரன் பரமசிவனின் வேறென்பதும், பரமசிவனாகிய சிவபெருமான் இம் மூவரின் வேறாய நான்காவது பொருள் என்பதும் தெற்றென விளங்கும். மாண்டூக்யம் (1-7) என்ற உபநிடத வாக்கியத்தையும் நோக்குக. மூர்த்தி - மூவர் முதலிய பலரையும் தனது வடிவாக உடையவன். வாயிலை (அதிட்டானத்தை) வடிவு என்று பாற்படுத்துக் கூறுதல் மரபு. மூதாதை - பாட்டன்; என்றது, இம் மூவர்க்கும் மேற்பட்ட வித்தியேசுரர் முதலியோர்க்கும் முன்னோ னாதல்பற்றி. மாது ஆளும் பாகத்து - உமையம்மையால் ஆளப்படும் கூற்றினையுடைய. `யாவர்க்கும்` என்னும் குவ்வுருபும் உம்மையும் தொகுத்தலாயின. குடி - அடிமை. குடைந்து ஆடி - அவ்வின்பத்தில் மூழ்கி விளையாடி. ஆடுவோம் - களித்தாடுவோம். ``நாமார்க்குங் குடியல்லோம்`` என்னும் திருத் தாண்டகத்தை (தி.6.ப.98.பா.1) இதனுடன் ஒருங்குவைத்துக் காண்க.

பண் :

பாடல் எண் : 31

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே. 

பொழிப்புரை :

நெஞ்சே! இறைவனது திருவடிக்கு அன்பு செய்கின்றிலை; அவ்வன்பின் மிகுதியால் கூத்தாடுதல் செய்கிலை; எலும்பு உருகும் வண்ணம் பாடுகின்றிலை; இவை எல்லாம் செய்ய வில்லையே என்று பதைப்பதும் செய்கிலை; திருவடி மலர்களைச் சூடவும் முயன்றிலை, சூட்டவும் முயன்றிலை; இறை புகழ் தேடலும் இல்லை; தேடித் தேடி அலையவும் இல்லை; நீ இப்படியான பின்பு, நான் செய்யும் வகை ஒன்றும் அறியவில்லை.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், அடிகள் தம் தாழ்நிலையையே தம் நெஞ்சின் மேலும், தம்மேலும் வைத்துக் கூறியருளும் முகத்தால், அந்நிலையை நீக்கிக்கொள்ள முயலுதல்பற்றி, `ஆத்தும சுத்தி` என இதற்குக் குறிப்புரைத்தனர் போலும் முன்னோர். `பிண நெஞ்சே, உடையான் கழற்கு அன்பிலை` என் றெடுத்துக்கொண்டு, `அதனால் துணையிலி ஆகின்றாய்` `செய்வது ஒன்று அறியேன்` என முடிக்க. உடையான் - நம்மை ஆளாக உடையவன்; `அந்தணனாய் வந்து அறைகூவி ஆட்கொண்டருளியவன்` என்றபடி. இவ்வாறன்றி, `கூத்து உடையான்` என்றியைத் துரைத்தல் ஈண்டுச் சிறவாமை அறிக. ``கூத்து`` என்ற விதப்பு, `அஃது அன்பராயினார்க்கன்றிச் செய்யவாராது` என அதனது பெருமை யுணர்த்தியவாறு. பதைத்தல், செய்வதறியாமையான் வருவது. ``பாதமலர்` என்றது, முன்னும் சென்று இயையும். `அவனது பாதமலர்` எனவும், `அவனைத் தேடுகின்றிலை` எனவும் உரைக்க. ``மலர் சூடுகின்றிலை`` என்றதனால், `சென்னிமேற் கொள்கின்றிலை`` என்பது பொருளாயிற்று. சூட்டுதலுக்கு, `மலர்` என்னும் செயப்படு பொருள் வருவித்து, `அவற்றின்கண் சூட்டுகின்றதும் இலை` என்க. உம்மை, எச்சம். ``பிண நெஞ்சு``, உவமத்தொகை. உவமை, அறிவின்மை பற்றிக் கூறப்பட்டது. அவன் வந்து ஆட்கொள்வதற்கு முன்னர், அறியாமையால் அவனை நினையாதிருந்த குற்றம் பொறுக்கப்பட்டது; ஆட்கொண்ட பின்னரும் அவ்வாறிருப்பின் பொறுக்கப்படுமாறில்லை என்பார், ``செய்வதொன்றறியேன்`` என்று அருளினார்.
``தன்னை அறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழை`` (சிவஞானபோதம். சூ. 12. அதிகரணம்.4)
என்றது காண்க,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
(குறள்-110.) என்றது பற்றி எழுந்தவாறுமாம். ``இலை`` நின்ற ஐகாரம், முன்னிலை ஒருமை விகுதி; சாரியையன்று.

பண் :

பாடல் எண் : 32

அறிவி லாதஎ னைப்புகுந் தாண்டுகொண்
டறிவதை யருளிமேல்
நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப்
பந்தனை யறுப்பானைப்
பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா
றாடுதி பிணநெஞ்சே
கிறியெ லாம்மிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத்
தாய்என்னைக் கெடுமாறே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! அறிவு இல்லாத என்னைத்தானே வலிய வந்து ஆண்டருளி மேலாகிய நெறிகளை எல்லாம் எனக்குப் புலப்படுத்தினவனும்; என் பிறவித்தளையை அறுப்பவனுமாகிய இறைவனை நினையாமல் மாறுபடுகின்றனை; ஆதலால் என்னைக் கெடுத்து விட்டாய்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறிவு - மெய்யறிவு; என்றது, உள்ளவாறு உணரும் தன்மையை. ``அறிவதை`` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. மேல் - பின். நெறி - அறியும் முறைமை. புலமாக்குதல் - அறிவித்தல். பந்தனை அறுத்தல் - பாசத்தைப் பற்றறத் துடைத்தல். இது, பின்னர் நிகழ்தற்பாலதாதலின், எதிர்காலத்தாற் கூறினார். `அறுப்பானைப் பிறி விலாத` என இயையும். பிறிவிலாத அருள் - பிரிவில்லாமைக்கு ஏது வாய அருள். தன்னை வேண்டாது, உலகின்பத்தை வேண்டுவார்க்கு அப்பயனையும் இறைவன் அருளுதலின், அது, பிரிவுடைய அருளாம். அவ்வாறன்றித் தன்னையே தருவது, பிரிவிலாத அருள் என்க. இதனை, ``இன்னருள்`` என்றார், ஏனையது இன்னாமையையும் விளைத்தல் பற்றி. இவ்வருள்தான், அருளும் முறைமையாற் பலவாதல் பற்றி, ``அருள்கள்`` எனப் பன்மையாற் கூறினார். அவற்றையே, ``பலவிதம் ஆசான் பாச மோசனந்தான் பண்ணும் படி`` (சிவஞானசித்தி - சூ. 8.3.) என ஓராற்றான் உணரக் கூறுப.
``உரையாடுதல், சொல்லாடுதல்` என்பனபோல, `மாறாடுதல்` என்பது ஒரு சொல்; `பிணங்குதல்` என்பது பொருள். அஃதாவது, `பிரிவிலாது நிற்க விரும்புகின்ற என்னோடு ஒருப்பட்டு நில்லாது, மாறு கொண்டு நிற்கின்றாய்` என்றபடி. இந்நிலை, மலவாதனையால் வருவது. இதனானே, இறைவனை அடைந்து இன்பத்துள் நீங்காது நிற்க விரும்புதலே உயிர்க்கு இயல்பென்பதும், அவ்விருப்பத்திற்கு மாறாய் அவனை அடையவொட்டாது தடுத்து அதனைத் துன்பத்துள் வீழ்த்துவது மலம் என்பதும் பெறப்படுமாறறிக.
கிறி - பொய்; என்றது, திரிபுணர்வை. அதுதான், உணரப் படும் பொருளாற் பலவாமாகலின், ``எல்லாம்`` என்றார். மிக - மேம்பட்டுத் தோன்ற. கீழ்ப்படுத்தாய் - அவற்றின்கீழ்க் கிடக்கச் செய்தாய். `கெடுமாற்றானே கெடுத்தாய்` என்க. கெடுமாற்றானே கெடுத்தலாவது, கெடும் வழி அறிந்து அவ்வழியிலே செலுத்திக் கெடுத்தல்; நெஞ்சினை அறிவுடையதுபோலக் கூறிய பான்மைக் கூற்று. `உனது மாறாட்டத்தால், என்னைக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய்` என்க. `அருளீமேல்` என மூவசைச் சீராதலே பாடம் போலும்.

பண் :

பாடல் எண் : 33

மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையைஎம்
மதியிலி மடநெஞ்சே
தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச்
சிவனவன் திரள்தோள்மேல்
நீறு நின்றது கண்டனை யாயினும்
நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது
கேட்கவுங் கில்லேனே. 

பொழிப்புரை :

நெஞ்சே! நீ என்னோடு மாறுபட்டு இவ்வாறு கெடுத்த உன்னை உறுதியாகத் தெளிந்திலேன். சிவபெருமானது திரண்ட தோளின் மீதுள்ள திருவெண்ணீற்றின் அழகைக் கண்டு மகிழ்ந்தும் இனியும் உருகினாயல்லை; இந்தப் பாழுடம்பைக் கிழித் திலை; உன் தன்மையைக் கேட்கவும் சகிக்க மாட்டேன்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`கெடுப்ப` என்பது, `கெட` எனத் தொகுத்தலாயிற்று. `கிடந்த` என்பதன் ஈற்று அகரமும் அன்னது. அனையை - அத்தன்மையை உடையை. `அனையையாகிய நெஞ்சே` என்க. `மடநெஞ்சு` என்பது, வாளா பெயராய் நின்றது. ``எம்`` என்ற பன்மை, `எனக்கேயன்றி என் குடியிலுள்ளார்க்கும் நலஞ்செய்ய அமைந்த நெஞ்சே` எனப் புகழ்தல் வாய்பாட்டால் இகழ்ந்தவாறு. `தேறுகின்றிலம்` என்றதும், தம் தமரையும் உளப்படுத்து. தேறுதல் - தெளிதல். சிக்கென - உறுதியாக. `சிக்கெனத் தேறுகின்றிலம்` என இயையும். `இனித் தேறுகின்றிலம்` என்றது முன்னர்ப் பலகாலும் தேறிக் கெட்டமை பற்றி. `கண்டனை; ஆயினும் நெக்கிலை` என இரு தொடராக்கியுரைக்க. சிவபிரான் திருமேனியில் உள்ள திருநீறு, தேவர் முதல் யாவரும், எப்பொருளும் நிலையாது ஒழிதலையும், அனைவரையும், அனைத்தையும் அவனே தாங்குபவனாதலையும் விளக்கி நிற்கும். `ஆதலின் அதனை உணர்ந்தும் அவனிடத்து அன்பு செய்கின்றாயில்லை` என்றவாறு. தாங்குதலை இனிது விளக்குதல் தோன்றத் தோள்மேல் உள்ளதை அருளினார். காயம் - உடம்பு. அதனைச் சிதைத்தல் பிரிவாற்றாமையாலாம். கெடுதற்கு ஏதுவாவதனை, ``கெடுவது`` என்றார். இது - இத்தன்மையை. கேட்கவும் கில்லேன் - ஏற்றுக்கொள்ளாமையேயன்றி, இவ்வாறானது என்று சொல்லுதலைச் செவியால் கேட்டுணரவும் பொறேன்.

பண் :

பாடல் எண் : 34

கிற்ற வாமன மேகெடு வாய்உடை
யான்அடி நாயேனை
விற்றெ லாம்மிக ஆள்வதற் குரியவன்
விரைமலர்த் திருப்பாதம்
முற்றி லாஇளந் தளிர்பிரிந் திருந்துநீ
உண்டன எல்லாம்முன்
அற்ற வாறும்நின் னறிவும்நின் பெருமையும்
அளவறுக் கில்லேனே. 

பொழிப்புரை :

மனமே! நீ கெடுவாய். இறைவனது திருவடியைப் பிரிந்து நீ அனுபவித்த விடய இன்பங்களையும், அவை அழிந்த விதத்தையும், உன் அறிவையும், உன் பெருமையையும் அளவு செய்ய வல்லேன் அல்லேன்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையானும், உரியவனும் ஆகியவனது திருப்பாதத் தளிர்` என்க. எல்லாம் - எல்லாவற்றானும். ``பிரிந்திருந்தும் நீ உண்டன`` என்றதனால், பிரிவுபற்றி வருந்தாதிருத்தலும், ``அற்றன`` என்றதனால், அவை அறாது நிற்கும் எனக் கருதி அவற்றை அவாவின மையும் குறிக்கப்பட்டன. நிலையாதவற்றை நிலையுடையன எனக் கருதிய அறியாமையை, ``அறிவு`` என்றும் அவற்றைப் பெற்ற அளவானே மகிழ்ந்து செருக்கும் சிறுமையை, ``பெருமை`` என்றும் அருளினார், இகழ்ச்சி தோன்றுதற் பொருட்டு. அறியாமை, சிறுமை என்பவற்றை உண்டவற்றோடு ஒருங்கெண்ணி, `அளவுபடா` என்றார், இவை அவ்வுண்டவைபற்றியே அறியப்படுதலின். கிற்றவா - நீ வல்ல வாறு; `இது` எனச் சொல்லெச்சம் வருவிக்க. கெடுவாய் - இச்செய்கையால் நீ கெட்டொழிதல் திண்ணம். ``கிற்றவா, கெடுவாய்`` என்றவற்றை இறுதியில் வைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 35

அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க்
கடியவர்க் கெளியான்நம்
களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட்
கசிந்துணர்ந் திருந்தேயும்
உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன்
செய்தது மிலைநெஞ்சே
பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை
பரகதி புகுவானே. 

பொழிப்புரை :

நெஞ்சே! தேவர்களும் அளவு செய்தற்கு அரியவன்; அடியார்க்கு எளியவன்; அத்தன்மையனாகிய இறைவன், நம்மையோர் பொருளாக்கி நமது குற்றம் களைந்து ஆண்டருளி னமையை அறிந்திருந்தும் பரகதியடைதற் பொருட்டு அவனது திருவடியை வணங்கினாயல்லை. உன் தன்மை இருந்தவாறு என்னை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`இமையவர்க்கு அளவறுப்பதற்கு அரியவன்` என்க. இமையவர்க்கு அருமைகூறவே, ஏனையோர்க்கு அருமைகூற வேண்டாவாயிற்று. களவு - யான் எனது என்பன. இறைவன் செய்ததை, `யான் செய்தேன்` என்றும், இறைவனுடையதை `எனது` என்றும் கருதுதலின், களவாயிற்று. `கருத்தினுள் உணர்ந்து` என இயையும். `இருந்து ` என்பது துணைவினை. `உலகு` என்பது, எதுகை நோக்கி, `உளகு` எனத் திரிந்தது. பளகு - குற்றம். இறைவன் உன்னை ஆட்கொண்ட கருணையை நீ உணர்ந்திருந்தாயாயினும், உன்னை அவன் நினைந்து, இவ்வுலகத் தொடர்பை அறுத்து, உன் உள்ளத்தைத் தான் உறையும் பெரிய இடமாகச் செய்தமை காணப்படவில்லை, அஃது ஏன்? நீ அவ்வுணர்ச்சியளவில் நில்லாது, பரகதியிற் புக விரும்பி உன் குற்றங்களைக் களைந்து அவனது திருவடிகளை வணங்கும் செயலில் நின்றிலை` என்றவாறு. இதனால், மெய்யுணர்ந்து பின்னர், அதன்கண் உறைத்து நிற்க வேண்டுதல் பெறப்பட்டது. இறைவனால் மீள நினைக்கப்படுதல் முதலிய தம், செயல்களை நெஞ்சினுடையனபோல அருளிச்செய்தார். இதனுள், இறுதியிரண்டடிக்கும் பிறவாறு உரைப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 36

புகுவ தாவதும் போதர வில்லதும்
பொன்னகர் புகப்போதற்
குகுவ தாவதும் எந்தையெம் பிரான்என்னை
ஆண்டவன் கழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு
தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற்
கென்செய்கேன் வினையேனே. 

பொழிப்புரை :

சென்று அடைதற்கு உரியதும், சென்றால் மீளுத லில்லாததும் ஆகிய, சிவலோகம், புகுதற் பொருட்டுச் செல்லுவதற்குத் தடையான பற்றுக் கழல்வதும் எம் தந்தையும், எம் தலைவனும், என்னை ஆண்டருளினவனும் ஆகிய இறைவனது திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் உருகுதலும் நாள் தோறும், அமுதத்துடன் தேன் பால் கற்கண்டினும் மேற்பட்ட பேரின்பம் விளைவதும் இல்லை யாயின் இதற்குத் தீவினையுடையேன் யாது செய்ய வல்லேன்?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புகுவது முதலிய நான்கும் அவ்வத்தொழில்மேல் நின்றன. சிவலோகத்தைக் குறித்த. `பொன்னகர்` என்பதனை முதலிற் கூட்டுக. `ஆவது` என்பன பலவற்றிற்கும், `உண்டாதல்` எனப் பொருளுரைக்கப்படும். போதரவு - மீண்டு வருதல். `இல்லது, இன்று` என்பன அப்பண்பின்மேல் நின்றன. தாம் விரும்புவன பலவற்றையும் நினைந்து இரங்குகின்றாராகலின், புகுந்தபின் நிகழற்பாலதாகிய போதரவு இன்மையையும் அருளிச்செய்தார். உகுவது - நீங்குவது; இதற்கு, `உடம்பு` என்னும் வினைமுதல் வருவிக்க. நெகுவது - ஊறு வது. ஒடு. எண்ணிடைச்சொல். தேன் முதலிய மூன்றும் ஆகு பெய ராய், அவைபோலும் இன்பத்தைக் குறித்தன. மற்று, வினை மாற்று.

பண் :

பாடல் எண் : 37

வினைஎன் போல் உடை யார்பிறர் ஆர்உடை
யான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்
பன்றுமற் றதனாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான்
முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி
இன்னதென் றறியேனே.

பொழிப்புரை :

என்னைப் போலத் தீவினை உடையவர், பிறர் யாருளர்? என் முதல்வன் நாய் போன்ற அடியேனைத் தினையளவும், நீங்கியிருப்பது அவனது திருக்குறிப்பு அன்று; ஆதலால் இறைவனது திருவடியாகிய நல்ல மலரை, நானே நீங்கியிருந்தும் தலையைக் கல் முதலியவற்றில் முட்டிக் கொள்கிலேன்; பிளந்து கொள்ளேன்; இத் தன்மையேனாகிய என்னுடைய பாவனை இரும்பாகும்; மனமானது கல்லாகும்; காது இன்ன பொருள் என்று அறியேன்?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையானுக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்த லாயிற்று. ``தினையின் பாகம்`` என்றது, `மிகச் சிறிது` என்னும் பொருட்டாய், அவ்வளவிற்றாகிய காலத்தை உணர்த்திற்று. மற்று அசைநிலை. `நான் பிரிந்து` என மாற்றி, `நானே` எனப் பிரிநிலை ஏகாரம் விரித்துரைக்க. ``அதனால்`` என்றது, இக்கூற்றிற்கே ஏது உணர்த்திநின்றது. `இருந்து` என்றே ஒழியாது, `இருந்தும்` என உம்மை விரித்து ஓதுதல் பாடமாகாமை அறிந்துகொள்க. ``தலை`` என்றது, முன்னரும் சென்று இயையும். முட்டுதல், கல் முதலியவற்றினும், கீறுதல், கருவியாலும் என்க. ``இருந்து முட்டிலேன் கீறேன்`` என்றாரா யினும், `முட்டாமலும், கீறாமலும் இருக்கின்றேன்` என்றலே கருத் தென்க. ``கீறிலேன்`` என்றதன்பின்னும் `ஆகலான்` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. இனையன் - இத்தன்மையுடையேனது. `வேடம்` எனப்பொருள் தரும் `பாவனை` என்பது, இங்கு, உடம்பைக் குறித்தது. ``இரும்பு, கல், இன்னது`` என்றன, `அவற்றான் இயன்றது` எனப் பொருள் தந்து நின்றன.

பண் :

பாடல் எண் : 38

ஏனை யாவரும் எய்திட லுற்றுமற்
றின்னதென் றறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின்இன் தேறலைச்
சிவனைஎன் சிவலோகக்
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக்
குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான்இருந் தோம்புகின் றேன்கெடு
வேன்உயிர் ஓயாதே.

பொழிப்புரை :

மற்றையோர் எல்லாரும் இன்னது என்று அறியப் படாத தேன் போல்வானும், பசுவின் நெய் போல்வானும், கரும்பின் இனிமையான சாறு போல்வானும், சிவனும் எனது சிவலோகத் தரசனும், பெண்மானின் நோக்கம் போன்ற திரு நோக்கத்தை யுடையவளாகிய உமாதேவியின் ஒரு பாகத்தை உடையவனும் ஆகிய இறைவனை அணுகிலேன். நீண்ட நாள்கள் இருந்து உடம்பை வளர்க்கின்றேன். கெடுவேனாகிய எனது உயிர் ஒழியவில்லையே!

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேன் முதலிய மூன்றும் ஆகுபெயராய், `அவை போல்பவன்` எனப் பொருள் தந்து, ``அறியாத`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயின. `சிவன்`` என்றது, இறைவனைச் சிறப்பு வகையாற் குறித்தவாறு. இதனை, ``கூறனை`` என்றதன் பின்னர் வைத்து, `சிவனை, ஏனை யாவரும் எய்திடலுற்றும், யான் நெடுங்காலம் குறுகிலேன், உயிர் ஓயாதே இருந்து ஊனை ஓம்புகின்றேன்; கெடு வேன்` எனக் கூட்டியுரைக்க. ஏனை யாவரும் - என்னை யொழித்து ஒழிந்த அடியவர் எல்லாரும். ``நெடுங்காலம்`` என்றதன்பின், செல்ல என்னும் பொருட்டாகிய, `ஆக` என்பதும், அதன்பின் உம்மையும் விரிக்க. கெடுவேன் என்றதன் பின்னும் இரக்கப் பொருட்டாகிய ஓகாரம் விரித்து, `இந்நிலையிற்றானே இருந்து, அழிந்தொழிவேன் போலும்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 39

ஓய்வி லாதன உவமனில் இறந்தன
ஒண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும்
என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன்
தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்
செழுங்கடல் புகுவேனே. 

பொழிப்புரை :

அழியாததும் உவமை இல்லாததும் ஆகிய தன் திருவடியை அருள் செய்து, நாயினும் இழிந்தவனாகிய என்னை நல்வழி காட்டி ஆண்டருளி, தாயினும் சிறந்த அருள் செய்த இறை வனைக் காணாத நான், தீப்பாய்தல் முதலியவற்றைச் செய்திலேன். என்மன வலியிருந்தவாறு என்னை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஓய்வு - மெலிதல்; `உயிர்களைத் தாங்குதலில் தளர்ச்சி யில்லாத` என்றபடி. `உவமம்` என்பது, ``உவமன்`` என ஈறு திரிந்தது. ``உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை`` (தொல், பொருள் - 274) என்றாங்கு, `எவ்விடத்தும், பொருளின் உவமம் சிறந்து காட்டுதல் மர பாய் இருக்க, இவை அவ்வாறன்றி, உவமம் யாதாயினும், அதனினும் சிறந்து நிற்பன` என வியந்தருளிச் செய்தவாறு. உவமம், தாமரைமலர், பொன், தளிர் முதலியன. `இலாதனவும், இறந்தனவும் ஆகிய தாள்` என்க.
`நாய்` என்பது, அதன் பண்பின்மேலும், `குலம்` என்றது, அதனிற் பிறந்த உயிரின்மேலும் நின்றன. `நாய் என்னும் அத்தன்மை யிற் பொருந்திய குலத்திற் பிறந்த அவ்வுயிரினும் கடைப்பட்ட` என்றபடி. ``என்னை`` என்றதை, `எனக்கு` எனத் திரிக்க. தாயில் ஆகிய இன்னருள் புரிந்த - தாயினது அன்பு போலச் சுரந்த இனிய திருவருளை விரும்பிச் செய்த. `நனி` என்னும் உரிச்சொல், `காணேன்` என்பதன் முதனிலையைச் சிறப்பித்தது; `இடையறாது கண்டிருக்கும் பேற்றைப் பெற்றிலேன்` என்றபடி. இதன்பின், `அதன்பொருட்டு` என்பது வருவிக்க. ``புகுவேனே`` என்றதில் உள்ள ஏகாரம் எதிர் மறையாகலின், `தீயில் விழமாட்டாதவனும், திண்வரையினின்றும் உருளமாட்டாதவனும் ஆகிய யான், செழுமையான கடலிலே புகுவேனோ; மாட்டேன்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 40

வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும்
அதுதனை நினையாதே
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை
மத்திடு தயிராகித்
தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன்
சிவன்நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும்
உண்டுடுத் திருந்தேனே. 

பொழிப்புரை :

மாதர் மயக்கத்தில் சிக்கி, உழன்ற என்னை ஆட் கொண்டருளின இறைவனது சிவபுரத்தை அடையாமல், உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் பொருட்டு இன்னமும் உண்டும் உடுத்தும் இருந்தேன். என்னே என் நிலை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேனில் வேள் - மன்மதன். மதி - சந்திரன். படிறு - வஞ்சனை, என்றது அன்னதாகிய பார்வையை என்பது, `நோக்கியர்` என்றதனால் பெறப்பட்டது. ``படிறிடை`` என்றதன்பின், `பட்டு` என ஒருசொல் வருவித்து, அதனையே ``நினையாது`` என்ற எச்சத்திற்கு முடிபாக்குக. `மகளிரது கடைக்கண் நோக்கில் அகப்படின், வேள் கணை கிழிக்கவும், மதிசுடவும் துயருறும் நிலை உண்டாம் என்பதனை நோக்காது அகப்பட்டேன்` என்றதாம். `மத்திடு தயிராகியதனால்` போகேனாய் இன்னும் இருந்தேன்` என்க.
மேல் ``உடையான் அடிநாயேனைத் தினையின் பாகமும் பிறிவது திருக் குறிப்பன்று`` (பாட்டு-41) என்றதனால், இறைவன் அடிகளை, ``கோலமார்தரு பொதுவினில் வருக`` என ஈங்கே நிறுத்தி, ஏனையடியார்களை மட்டில் அழைத்துச் சென்றதற்குக் காரணம், தமது கருத்து வகையேயன்றி, இறைவனது திருவுளப்பாங்கு அன்று என்பதை அருளிச்செய்தார். இதனுள் அக்கருத்து இன்னதென்பதை எடுத்தோதியருளினார். ``மான் நிலாவிய நோக்கியர்`` எனப் பொதுமையிற் கூறினாரேனும், அஃது அடிகள்மாட்டுப் பேரன்புடையராய் அவரையின்றியமையாராகிய ஒருவரையே குறிக்கும். அவரை அடிகள் தம் மனைவியார் என்றலே பொருந்துவதன்றிப் பிறவாறு கோடல் பொருந்தாது. அவரும் இறைவன் அடிகளை ஆட்கொள்வதற்கு அண்மைக் காலத்தே மணந்தவராதல் வேண்டும். அடிகளை அவர் இன்றியமையாதிருந் தமையையும், அந்நிலையை அடிகள் நினைந்து அவர் அறியாதே இறைவனோடு செல்லமாட்டாராயினமையையும் வருத்த மிகுதியால் காமம் காரணமாக அமைந்தனபோலத் தாம் அருளிச்செய்தாராயினும், அன்பினால் அமைந்தன என்றே கொள்ளப்படும். படவே, அடிகள் பாண்டியனை விட்டு நீங்கியபின்னும் இறைவன் `தில்லையில் வருக` என்று பணித்த பின்னும் சிறிது காலம் அவ்வம்மையாரோடு திருவாத வூரில் இருந்து, பின்னர் இறைவன் திருவருட்பேற்றின் பெருமையை அவர்க்கும் அறிவுறுத்தித் தில்லைக்குப் புறப்பட்டார் என்பதும் அவ் வம்மையாரும் வருத்தமின்றி, அடிகளையும் இறைவனையும் வழி பட்டிருந்து இறைவன் திருவடியை அடைந்தார் என்பதும் உய்த் துணர்ந்து கொள்ளற்பாலன.
அடிகள் தாம் இறைவனோடு செல்லாது நின்ற காரணத்தை, இனிவரும், ``முடித்தவாறும்`` என்ற திருப் பாடலிலும் அருளுவர், சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னரும் மனைவியார் இருவருடன் வாழ்ந்திருந்தமை நன்கறியப்பட்டதாகலின், அன்னதொரு நிலை அடிகட்கும் இருந்ததெனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் தவறுடைத்தாகாமையே யன்றி, இன்னோரன்ன அருட்டிரு மொழிகளை, மனம் உலகப் பற்றினாலும், பிறவாற்றாலும் சிறிதும் துயருறாதிருக்கவும், உற்றது போல, `மாதர் வலையில் அகப்பட்டு வருந்துகின்றேன்; ஆக்கைக்கு இரைதேடி அலைவதிலே காலம் கழிக்கின்றேன்` என்றெல்லாம் பாடுவார் சிலரது பாடல்களோடு ஒப்பவைத்துப் பொருள் செய்தல் குற்றமாதலும் அறிந்துகொள்க.
இங்ஙனம், சிறுபற்றுக் காரணமாக அடிகள் உலகில் நின்றபின், மீள இறைவன் திருவடி கூடுங்காலம் சிறிது நீட்டித்தமையின், அந் நீட்டிப்பைப்பொறாமையால், அடிகள், தம்மைத் தாமே பலகாலும் நொந்து பல பாடல்களை அருளிச்செய்தார்; அவ்வருளிச்செயல் உல கிற்குப் பேருபகாரமாய் முடிந்தது எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 41

இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே
வருக வென்றுப ணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன் கிற்பன் உண்ணவே. 

பொழிப்புரை :

நீ என் மனத்தில் எழுந்தருளியிருந்து நான் துன்பம் நுகர்தற்கு இரங்கி, வருக என்று கட்டளை இட்டு அருளினை; அந்தச் சுகத்தை நான் அநுபவிக்கப் பெற்றிலேன்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

இப்பகுதிக்கு, `கைம்மாறு கொடுத்தல்` எனக் குறிப் புரைத்தனர் முன்னோர். `கொடுத்தல்` என்பது `கொடுத்தல் பற்றியது` என்னும் பொருட்டாய், கொடுத்தல் இயலாமையையே குறிக்கும். இஃது இப்பகுதியில் ஒன்பதாந் திருப்பாட்டின் பொருள் பற்றி உரைக்கப்பட்டது.
பொருள்கோள்: `வானுளோர்க்கு ஒருவனே, (நீ என்னை) வருக என்று பணித்தனை; (ஆயினும் யான்) அது செய்கின்றிலேன்; (மற்று) உண்ணவே கிற்பன்; (அதனால்,) யான் இருகை யானையை ஒத்திருந்து, என் உள்ளக் கருவைக் கண்டிலேன்; கண்டது எவ்வமே`.
இருகை யானை, இல்பொருள் உவமை. விலங்கொடு தமக்கு வேற்றுமை கையுடைமை என்பது கூறுவார், யானையாகிய விலங் கிற்கு கையுண்மை கருதி, அதனின் வேறு படுத்து, ``இருகை யானை யை ஒத்து`` என்றார். கரு - உட்பொருள். உள்ளத்தின்கண் உள்ள உட் பொருளாவது, முதற் பொருள்; சிவம். `கருவை`` என்றது, `கருவாகிய நின்னை` என்னும் பொருட்டாகலின், முன்னிலைக்கண் படர்க்கை வந்த மயக்கமாம். கிற்றிலேன் - வல்லேனல்லேன். கிற்பன்- வல்லேன்.

பண் :

பாடல் எண் : 42

உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 

பொழிப்புரை :

மேலான பொருள் ஒன்று உண்டு என்று அறிந்தார்க்கும் அறிதற்கரிய நீ, எனக்கு உள்ளபடி எழுந்தருளிக் காட்சி தந்தருளினை. அப்படி காட்சி கொடுத்த உன்னைக் கண்டும் காணாத வன் போல மயங்குகின்றேன். இது என்ன கண்மாயம்?

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

ஒண்பொருள் - சிறந்த பொருள்; பரம்பொருள். உண்டு என்று உணர்வார் - உண்மை மாத்திரையின் உணர்வார். அவர், சிந்தனையறிவின்றிக் கேட்டலறிவு ஒன்றேயுடையார் என்க. அவர்க்கு அப்பொருளின் இயல்பு அறியவாராமையை, பெண்டிர் ஆண் அலியென்று அறிய ஒண்கிலை என்றார். எனவே ``பெண்டிர் ஆண் அலி`` என்றது, `இன்னது` என்னும் அளவாய் நின்றது. ``உள்ளவா`` என்றது, `நின் இயல்பு முழுதும் இனிது விளங்கும் வகையில்` என்றபடி. கண்டும் தோன்றியபொழுது அநுபவமாகக் கண்டும். கண்டிலேன் - பின்னர்க் காணவில்லை. `அவ்வநுபவம் நீங் காது நிற்கப் பெறுகிலேன்` என்றபடி. கண்மாயம் - கட்பொறி பற்றிய மாயம். அது நன்கு காணப்பட்ட பொருள் ஓர் இமைப் பொழுதில் விரைய மறைதல். கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரி தாதல் போல, (குறள். 377) அநுபவத்தைத் தலைப்பட்டும், நிலைக்கப் பெற்றிலேன்; இஃது ஓர் வினைப்பயன் இருந்தவாறு என்பதாம்.

பண் :

பாடல் எண் : 43

மேலை வானவ ரும்மறி யாததோர்
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோம்
கால மேஉனை யென்றுகொல் காண்பதே. 

பொழிப்புரை :

மேன்மையுடைய தேவர்களும் அறிய காட்சிக்கு எட்டாத திருவுருவத்தை உடைய நடராஜப் பெருமானே! நீ என்னை ஆட்கொண்டு உள்ளாய். பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக் கும் சாட்சியாய் இருக்கும் கால சொரூபம் நீ. உன்னை நான் எப்போது காண்பேன்?

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``மேலை`` என்றதில் ஐ சாரியை. மேலை வானவர் - மேலிடத்துள்ள தேவர். எனவே. ``வானவர்`` என்றது, வாளா பெய ராய் நின்றதாம். கோலம் - வடிவம். அஃது ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது. வானவராலும் அறியப்படாமை கோலத் திற்கு அடையாதல் அறிக. ``கூத்தன்`` என்றது தான்செய்யும் செயலால் தொடக்குண்ணாதவன் என்பது குறித்து நின்றது. மண், விண் முதலிய எல்லாவற்றிலும் அவையேயாய்க் கலந்து நிற்றல்பற்றி இறைவனை அவையாகவே ஓதினார். அதனானே, பின்னர் அவைகளை `இவை` எனச் சுட்டினார். பின்னர், `காலமே` என்றதும் அது. ஏகாரத்தை எண்ணுப்பொருள தாக்குவாரும் உளர்; அவர், பின்னர், `காலமே` என்றதற்கு வேறு கூற மாட்டாதவராவர். போம் என்ற பெயரெச்சம் காலம் என்ற ஏதுப்பெயர் கொண்டது. `காலம்` என்பது காலப் பெயரன்றோவெனின், அன்று; என்னையெனின், ``நிலனே காலம் கருவி`` (தொல். சொல் - 113.) என்றவிடத்து, `காலம்` என்றது, அவ்வவ் வினைநிகழ்ச்சிக்குரிய சிறப்புக் காலத்தையன்றி, எல்லா வற்றிற்கும் ஏதுவெனப்படும் பொதுக்காலத்தை அன்றாகலானும், ஈண்டுக் கருதியது பொதுக் காலத்தையன்றிச் சிறப்புக் காலத்தை அன்றாகலானும், இப்பொதுக்காலம், பிறபொருள்களோடு ஒப்பப் பொருள் எனப்படுமாகலானும் என்க.

பண் :

பாடல் எண் : 44

காண லாம்பர மேகட்கி றந்ததோர்
வாணி லாம்பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறறி யேன்புலன் போற்றியே. 

பொழிப்புரை :

இறைவா! ஊனக் கண்ணால் அன்றி, ஞானக் கண்ணாலேயே காண்பதற்குரிய பரஞ்சோதி நீ! பறவைக் குஞ்சு கூட்டை விட்டுப் பறக்க முடியாது இருப்பது போன்று பாழாய்ப் போன நான் பொய்யுடலை விட்டுப் பிரிந்து உன்னோடு பொருந்தி இருக்கும் நெறியை அறியாது இருக்கிறேன். ஐம்புலன்களில் வைத்துள்ள பற்றுதலே அதற்குக் காரணம். பொறிவாயில் ஐந்தையும் எரிந்து போனவைகளாக ஒதுக்கி வைத்துப் பழகுவேனாக!

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

காணலாம் பரமே - ஞானக்கண்ணாலன்றி ஊனக் கண்ணாலும் காணத்தக்க பரம்பொருளே; இஃது அடியவர்க்கு அநுபவமாதல் குறித்தபடி. கட்கு இறந்தது ஓர் வாள் நிலாம் பொருளே-கண்ணொளியைக் கடந்ததாகிய ஒரு பேரொளி நிலை பெற்றுள்ள பொருளே; இஃது இறைவனது திருமேனியின் சிறப்புக் கூறியவாறு. `நிலாப் பொருள்` என்பது, பாடம் ஆகாமையறிக. பார்ப்பு - பறவைக்குஞ்சு. `பாழ்நனேன்` என்பது, எதுகை நோக்கி, `பாணனேன்` எனத் திரிந்துநின்றது. `பாழ்த்த பிறப்பு`` (தி.8 திருவாசகம் - 20) என்றாற்போல, `பாழ்` என்பது வினைப் பகுதியாயும் நிற்றலின், நகர இடைநிலை பெற்றது. `பாழாகின்ற யான்` என்பது பொருள். ``புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய`` (தி.8 சிவபுராணம் அடி 55) என்றாராகலின் அவ்வஞ்சனைக்கு இடமாகிய உடம்பை, ``படிற்று ஆக்கை`` என்று அருளினார். பூணுதல் - பொருந்தக் கொள்ளுதல். போற்றி - பாதுகாத்து; என்றது, `அவற்றை விடுக்குதலின்றி நின்று` என்றபடி. `பார்ப்பெனப் படிற்றாக் கையைவிட்டு உனைப் பூணுமாறு அறிகின்றிலேன்` என்க. `குடம்பை தனித்தொழியப் புள் பறத்தல் போல், (குறள் - 338) உடம்பு தனித்துக்கிடப்ப யான் அதனினின்றும் புறப்பட்டு` என்பார், ``பார்ப்பென ஆக்கையை விட்டு`` என்றார்.

பண் :

பாடல் எண் : 45

போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்
றாற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங்
கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே. 

பொழிப்புரை :

இறைவா! உன்னை வாயால் துதித்தும் உடம்பால் அங்கப் பிரதட்சணம் செய்தும் பல விதங்களில் புகழ்ந்துரைத்தும் பத்தியில் நிலை நின்று அந்த உறுதியான பக்தியின் வலிமையைக் கொண்டு உன்னை அழைக்கின்றேன் இல்லை. மார்க்கண்டேயனைப் பிடித்தல் பொருட்டு உன்னை எதிர்த்து வந்த கூற்றுவன் உன் திருவடியை அடைந்தான். என்னுடைய போக்கும் அத்தகையதாய் இருக்கிறது.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

போற்றி என்றல் - வணக்கங் கூறுதல். புரளுதல், ஆற்றாமைபற்றி. நின்று - அன்பு நெறியிலே நின்று. ``ஆற்றமிக்க``, ஒருபொருட் பன்மொழி. `ஆற்றல் மிக்க``, என்பது பாடமாயின், உன்னை யடைவிக்கும் `ஆற்றல் மிகுந்த` என உரைக்க. ``அழைக் கின்றிலேன்`` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. ``ஏற்று வந்து எதிர்`` என்றதை, `எதிரேற்று வந்து` என மாற்றிக்கொள்க. எதி ரேற்றல் - பகையாய் ஏற்றுக்கொள்ளுதல். கூற்றம் - இயமன்; என்றது அவனது செயலை. ``கொள்கை`` என்றதும், செயலையே. `உன்னை அன்பால் அழைத்து அடையப் பெறாது ஐம்புல இன்பங்களில் திளைத்திருக்கின்ற என்னை, நீ ஒறுத்துஉன்பால் அழைக்கவே உன்னை யான் பெறுவேன்போலும்` என்பார், இறைவனை அன்பால் வழிபட்டு அவன் திருவடியைப் பெறாது, பகையாய் வந்து அதனைப்பெற்ற கூற்றுவனது செயலை உவமை கூறினார். ``காலன் அறிந்தான் அறிதற் கரியான் கழலடியே`` (தி.4.ப.113.பா.11) என்றார், ஆளுடைய அரசுகளும்.

பண் :

பாடல் எண் : 46

கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 

பொழிப்புரை :

கொன்றை மாலையை அணிந்த இறைவனே! எள்ளும் எண்ணெயும் போல எல்லாப் பொருள்களிலும் நீக்கமின்றி நிறைந்து இருப்பவனே! உன்னை அடையும் வழியை அறியாத என்னையும் உன் அன்பரைப் போலக் கூவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

`கொள்ளுங்கில்` என்பது பிழைப்பட்ட பாடம். `எனையும்` என்ற உம்மை தொகுத்தலாயிற்று. அன்பரின் - ஏனைய அடியார்களைப்போல. கூய் - அழைத்து; `பணி கொள்ளுங் கொல்` என இயைக்க. நள் - நடு. `நடு, கீழ், மேல்` என்பன, அவ்வவ்விடத்தை யுணர்த்தி நின்றன.

பண் :

பாடல் எண் : 47

எந்தை யாய்எம்பி ரான்மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய்தம்பி ரான்தனக் கஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவருஞ்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.

பொழிப்புரை :

சிவன், எனக்குத் தந்தையும் தாயும் தலைவனும் ஆனவன். அவன் உயிர்கள் அனைத்துக்கும் தந்தையும் தாயும் தலைவனும் ஆகின்றான். மற்றுத் தனக்கு அம்முறை உரிமை ஒன்றும் இல்லாதவன். சொல்லால் மட்டும் அன்றி மனத்தாலும் யாராலும் அறிய முடியாத ஞானநற்செல்வத்தை உடையவன். அவனை நான் அறிதற்கு முன்பே அவன் என் உள்ளத்தில் குடிகொண்டு உள்ளான்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``எந்தை, யாய், எம்பிரான்`` என்றது தமக்கும், ``தந்தை, தாய், தம்பிரான்`` என்றது பிறர்க்குமாம். `யாய்` என்றது, எனக்குத்தாய் என்னும் பொருளாதலை ``யாயும் ஞாயும் யாரா கியரோ`` (குறுந்தொகை-40) என்றதனானும் அறிக, அஃது - அம் முறைமை. முந்தி - தானே முற்பட்டு. ``முந்தி என்னுள் புகுந்தனன்`` என்றதை இறுதிக்கண் வைத்துரைக்க. `பிறர் முயன்றும் அடைதற் கரியவன், தானே வந்து என்னுள் புகுந்தனன்` என்றபடி. செல்வன் - எல்லாம் உடையவன்.

பண் :

பாடல் எண் : 48

செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 

பொழிப்புரை :

செல்வர்களுக்கு இடையிலும் வறியோர்களுக்கு இடையிலும் தேவர்களுக்கு இடையிலும் புழுப்போன்ற அற்ப உயிர்களுக்கு இடையிலும் புல் போன்ற தாவரங்களுக்கு இடையிலும் சிவனருள் பாகுபாடு இன்றி நிறைந்து இருக்கிறது. அந்த அகண்ட சொரூபத்தைக் காணப்பெற்ற பின்பும் அப்பெரு நிலையினின்றும் வழுவியவன் ஆனேன். முற்றிலும் மலபரிபாகம் அடையாததே இந்தக் துன்பநிலைக்குக் காரணம் ஆகும்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``செல்வம், நல்குரவு`` என்றவை அவற்றை யுடைவரைக் குறித்தன. ``புழு, புல்`` என்றவற்றை, `தாழ்ந்த பிறவி` என ஒருபகுதியாகக் கொள்க. ``வரம்பு`` என்றது, `பாகுபாடு` என்னும் பொருட்டாய் நின்றது. `இறைவனை அறிதல் அறியாமைகட்கு, உலக முறை பற்றிக் காணப்படும் இப்பாகுபாடுகள் காரணமல்ல; அருள்வழி நிற்றலும், நில்லாமைகளுமே காரணம்` என்பார். உலகியலை எடுத் தோதி, ``யார்க்கும் அரும்பொருள்`` என்று அருளினார். விண்ணோரது உயர்வைக் குறித்தற்குப் புழுப் புற்களை எடுத்தோதி யதன்றிப் பிறிதின்மையின், `யாவர்க்கும்` என்பது கூறாராயினார். அரும்பொருளாகிய இறைவனை, ``அரும்பொருள்`` என்றது பான்மை வழக்கு. கல் வகை மனம் - கல்லென்னும் வகை போலும் மனம். ``வகை`` என்றது, அதனையுடைய பொருள் மேல் நின்றது. ``பட்ட கட்டம்`` என்னும் எழுவாய்க்குரிய `இது` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. `இது` என்பது, `இழிக்கத் தக்கது` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 49

கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீறு
இட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண் டும்அறி யேனையே. 

பொழிப்புரை :

எண் மூர்த்திகளின் தத்துவத்தையும் அர்த்த நாரீசுவர தத்துவத்தையும் அறிந்து கொள்ளாத எனது பாசத் தளையைக் களைந்து, என்னை ஆட்கொண்டாய். அது மட்டுமன்று. திருநீறு பூசிய உன் மெய்யன்பர்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுதி வாய்ந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

கட்டு - பாசம். கண் ஆர நீறிடுதல் - காண்கின்ற கண்கள் மகிழ்வுறும்படி திருநீற்றை அணிதல். பட்டி மண்டபம் - கூட்ட மண்டபம்; என்றது, கேள்வி மண்டபத்தை. அஃதாவது, அறிவார் ஒருவர் உரைக்கும் அரும் பொருள்களைப் பலர் இருந்து கேட்கும் மண்டபம். இறைவன் திருப்பெருந்துறையில் ஆசிரியக் கோலத்துடன் குருந்த மரத்தடியில் அடியவர் பலருடன் வீற்றிருந்த நிலையையே அடிகள் இங்கு, ``பட்டி மண்டபம்`` என்றார் என்க. ``எட்டினோடு`` என்பதில் ஓடு, எண்ணிடைச்சொல். எனவே, ``எட்டினோடு இரண்டும்`` என்றது, `எட்டும் இரண்டும் கூட்டியுணரத் தெரியாதவன்` என்னும் பொருட்டாய், `கல்லாதவன்` என்பதைக் குறிக்கும். யோக நெறியில், அகார உகரங்களாகிய பிரணவத்தை உணராதவன் என்பதைக் குறிக்கும். உபதேச முறையில் எட்டும் இரண்டும் கூடிய பத்தென்னும் எண்ணினைக் குறிக்கும் யகரமாகிய எழுத்தின் பொருளை - ஆன்மா இயல்பை அறியாதவன் என்பதைக் குறிக்கும். இவற்றுள் அடிகள் அருளியது யோகநெறிப் பொருள் பற்றியேயாம், ஞானோபதேசத்திற்கு முற்பட்ட நிலை அதுவே யாகலின். `தவமே புரிந்திலன்`` என மேலும் ( பா. 9) அருளிச்செய்தமை யறிக. ``ஏற்றினை`` என வந்த இரண்டனுள், பின்னையதன்பொருள், `இடபவாகனத்தையுடைய நீ` என்பது. `அறியேனைப் பட்டி மண்டபம் ஏற்றினை; இது நின் கருணை இருந்தவாறு` என்க.

பண் :

பாடல் எண் : 50

அறிவ னேஅமு தேஅடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே.

பொழிப்புரை :

பேரறிவு சொரூபியே! அமிர்த சொரூபியே! அற்ப னாகிய என்னை ஒரு ஞானியாக்குதற் பொருட்டு அன்றோ, நீ, என்னை ஆட்கொண்டது. நீ ஆட்கொண்டதற்கு முன்பு நான் அறிவிலி யாய் இருந்தது வெளிப்படை. இன்று நான் ஞானியோ அல்லனோ. எனக்கு விளங்கவில்லை. என் நிலைமையைச் சற்றே கூர்ந்து தெளிவு செய்வாயாக!

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

பொருள்கோள்; `அறிவனே, அமுதே. ஈசனே, நீ என்னை ஆண்ட நாளில், அடிநாயினேன் அறிவனாகக் கொண்டோ ஆண்டது! (என்பால் நீ) கண்டது அறிவிலாமையன்றே! (அங்ஙனமாக, யான் என்றும்) அறிவனோ? அல்லனோ? அருள்`. இதனுள், ``அறிவு`` என வந்தன பலவற்றிற்கும், `பேரறிவு` என உரைக்க. இது, சொற்பொருட்பின் வருநிலையணி. `சிற்றறி வுடைமையே என் இயல்பாதல் அறிந்த நீ, என் பிழை கருதி என்னை விலக்கியது பொருந்துமோ`, என முறையிட்டவாறு. அருள் - சொல்லு.

பண் :

பாடல் எண் : 51

ஈசனே என் எம்மானே
எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமொன்று
அல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு
நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே
செய்வ தொன்றும் அறியேனே. 

பொழிப்புரை :

இறைவா! பெருமை வாய்ந்த எம் தந்தையே! நீ பிறவி நோயைப் போக்கியுள்ளாய். சிற்றம்பலச் செழுஞ்சுடரே! உடல் உணர்ச்சியில் உழன்று கிடந்த என்னை நீ, உயர்ந்த பேறும் அடையப் பெற்றவன் ஆக்கினாய். உன்னை விட்டுப் பிழைபடுகிற மனத்தை உடைய எனக்கு, என்ன செய்வது என்று விளங்கவில்லை.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப் பகுதிக்கு முன்னோர் கூறிய குறிப்பு, `அநுபோக சுத்தி` என்பது, `தடையில்லாச்சிவாநுபவம்` என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். அடிகள் இப் பகுதியில் அதனையே விரும்பிப் பாடுதல் காணலாம். ``ஈசனே`` என்றதன்பின் உள்ள, ``என்`` என்றதனை இறுதிக் கண் கூட்டி, வினாவாக்கி, `இதற்குக் காரணம் என்` என உரைத்து, `என்மாட்டுள்ள மலமாசே காரணம்` என்பது கருத்தாக்குக. எந்தை பெருமான் - என் தந்தையாகிய பெருமானே. நாசன் - போக்குபவன். ``யாதும் ஒன்று`` என்றதனை, `யாதொன்றும்` என மாற்றியுரைக்க. `உலகில் உள்ள பொருள்களில் யாதொன்றும் ஆகாத நீசனேன்` என்க. யாதொன்றும் ஆகாமையாவது, எப்பொருளினும் யாதேனும் ஓர் குணம் உளதாகும்; என்னிடத்தில் குணம் யாதும் உண்டாயிற்றில்லை என்றபடி. இங்ஙனங் கூறியபின், ``பொல்லா நாயான நீசனேன்`` என்றது, இத்துணை இழிந்தவரை நாயோடு ஒப்புமைப் படுத்தும் வழக்கு நோக்கி. `அதுதானும் என் மாட்டு ஒவ்வாது` என்றற்கு, பொல்லா நாய் - நன்றியறிவில்லாத நாய் என் றார். இஃது இல்பொருள் உவமை. நீசன் - இழிந்தவன். ``ஆண்டாய் க்கு`` என்றதன்பின், `கைம் மாறாக` என்பது வருவிக்க. `நினைக்கவும்` என்ற உம்மை தொகுத்த லாயிற்று. கண்டாயே - இதனை நீ கண்டாயன்றோ. செய்வது - இதை நீக்குதற்குச் செய்யும் வழி. அறியேன் - அறியாது திகைக்கின்றேன்.

பண் :

பாடல் எண் : 52

செய்வ தறியாச் சிறுநாயேன்
செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும்
பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்
கிருப்ப தானேன் போரேறே. 

பொழிப்புரை :

செய்ய வேண்டுவது இது என்று அறியாத நாயினேன் உன் திருவடியைக் காணாத பொய்யர் பெறும் பேறெல்லாம் பெறுதற்குரியேனாகி, உன் மெய்யன்பர் உன் திருவடியை அடையக் கண்டும் கேட்டும் அதனை அடைய முயலாமல் பொய்யனாய் உண்டும் உடுத்தும் காலம் கழிக்கின்றேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``செய்வது`` என்றது, அருள் பெற்றபின் செயற் பாலதனை. இது, அவ்வருட்கு முதல்வனாகிய இறைவனையன்றிப் பிறிதொன்றனை நாடாமையாம். `அதனை அறிந்திலேன்` என்றது, பின்னும் இவ்வுலகத்தை நாடினமைபற்றி. அதனானே, ``சிறுநாயேன்`` என வருந்தியுரைத்தார். சிறுமை, நாய்க்கு அடை. `அருள் பெற்றபின் செயற்பாலதனைச் செய்யாதொழிந்தமையின், அருள் பெறாதவரது நிலையையே நான் எய்தற்குரியனாயினேன்` என்பார், `பாதமலர் காணாப் பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்` என்றார். இதன் பின்னர், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, ``இருப்பதானேன்`` என்றதனோடு இயைத்து, `இஃதொரு வினையிருந்தவாறு` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. ``செம்பொற் பாதமலர், மலர்ப்பாதம்`` என்றவற்றிற்குமுன், `நின்` என்பது எஞ்சிநின்றது. பொய்யர் பெறும் இழப்பினை, `பேறு` என்றது இகழ்ச்சி பற்றி. வெறி - வாசனை. பொய் - உலகியல். மெய்- வீட்டு நெறி. மெய்யர் பாதம் மேவலை அடிகள் கேட்டது, கண்ணப்பர் முதலியோரது வரலாற்றில் என்க. `அக் கேள்வி யறிவேயும் அமையும், யான் இவ்வுலகியலைத் துறத்தற்கு` என்பார், அதனையும் உடன் கூறினார். இக் காட்சியறிவு கேள்வியறிவுகளாலும் என் உள்ளம் திருந்திற்றில்லை என்பார், ``உண்டு உடுத்து இருப்பதானேன்`` என்று அருளினார். உண்டலையும், உடுத்தலையும் எடுத்தோதியது, அவற்றைப் பெற்றதனோடு மகிழ்ந்து, பிறிது நாட்டமின்றியிருக்கின் றேன் என்றற்கு. ஏறு - சிங்க ஏறு, என்பது, `போர்` என்னும் அடை யாற் பெறுதும். தேவரின் மிக்கானாதல் கருதிச் சிவபெருமான், `சிங் கம்` எனப்படுதலை, ``மூவாச் சிங்கமே``` (தி.6.ப.99.பா.2), ``சிவனே தேவர் சிங்கமே`` (தி.7.ப.52.பா.1) என்றாற்போலுந் திருமொழி பற்றி அறிந்து கொள்க. ஏறு போல்வானை, ``ஏறு`` என்றது, உவமை யாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 53

போரே றேநின் பொன்னகர்வாய்
நீபோந் தருளி யிருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ
டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ்
சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ
கொடியேன் உயிர்தான் உலவாதே. 

பொழிப்புரை :

இறைவனே! நீ உன் சிவபுரத்தில் நின்றும் எம் பிராட்டியோடும் இவ்விடத்து எழுந்தருளி அருள் செய்யப்பெற்ற உன் அன்பர், உன் திருவடியை அடையக் கண்டும், கண்கெட்ட ஊர் எருது போன்று இவ்வுலகத்தில் உழல்வேனோ? இத்தன்மையேனது உயிர் நீங்காதோ?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``போந்தருளி`` என்ற செய்தெனெச்சத்தை, `போந் தருள` எனத்திரித்தும், ``இருள்நீக்கி`` என்றதனை, ``உடன் வந்து`` என்றதன்பின்னர்க் கூட்டியும், `கொடியேன், உயிர் உலவாது, கண்கெட்ட ஊர் ஏறாய் இங்கு உழல்வேனோ` என மாற்றியும் பொருள் கொள்க. `நீ` என்றது, பின்னரும் சென்றியையும். `நீ நின் பொன்னகர் வாய் போந்தருளவும், அருள்பெற்ற சீரேறு அடியார் நின்பாதம் சேரவும் அவற்றைக் கண்டும் உயிர் உலவாது கொடியேன் இங்கு உழல்வேனோ` என வினைமுடிக்க.
``உடன்`` என்றதில், `உடனாய்` என ஆக்கம் வருவித் துரைக்க. திருப்பெருந்துறையில் இறைவன் ஆசான் மூர்த்தியாய் வந்த பொழுது அம்மையோடு உடனாய் இருந்திலனாயினும், அம்மை யாவாள் அருளன்றி வேறல்லளாகலானும், இறைவன் அருளன்றி யிலனாகலானும், அவளோடு உடனாய் வந்தருளியதாகப் பல விடத்தும் அருளுவர்; மேலும் அவ்வாறு அருளினமை காட்டப் பட்டது. இறைவன் அருளன்றி இலனாதலை,
``அருளுண்டா மீசற் கதுசத்தி யன்றே
அருளு மவனன்றி யில்லை - அருளின்
றவனன்றே இல்லை``
(சிவஞானபோதம் சூ-5. அதி-2) என்பதனால் அறிக. ஏறு - எருது. காட்டேற்றினின்றும் பிரித்தற்கு, ``ஊரேறு`` என்றார். ஊர் ஏறுகள் மேய்தற் பொருட்டுக் காட்டிற் செல்லுமாயினும், மேய்ந்த பின்னர் ஊரை அடையும். அவற்றுள் கண்கெட்ட, ஏறு ஒன்று இருக்குமாயின், அஃது ஏனையவற்றோடு கூடிச் செல்லமாட்டாது காட்டிலே கிடந்து தன் இனத்தையும், தலைவனையும் நினைந்து கதறி அலமருதலின், அதனை, அருளைப் பெறுதற் பொருட்டு இவ்வுலகில் வந்தவர் பலரும் அதனைப் பெற்றுச் சிவன் நகருக்குச் சென்றுவிட, அவர்களோடு செல்லாது இவ்வுலகில் நின்று அவர்களையும், இறைவனையும் நினைந்து அழுது அலமரும் தமக்கு உவமை கூறினார். `என் உயிர்` என்பது ஒற்றுமை வழக்காயினும், உறுப்புத் தற்கிழமை வழக்கோ டொத்தலின், `உலவாது` என்பது, சினைவினை முதல்மேல் நின்ற வாறு; இவ்வாறன்றி இதனை வேறு தொடராக்கி உரைத்தலுமாம்.

பண் :

பாடல் எண் : 54

உலவாக் காலந் தவமெய்தி
உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப்
பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க
மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன்
என்கொண் டெழுகேன் எம்மானே. 

பொழிப்புரை :

அளவில்லாத காலம் உடலை வெறுத்துத் தவம் புரிந்த பல முனிவரும் வருந்தி நிற்க, பாவியாகிய என்னைப் பணி கொண்டனை. அங்ஙனமாகவும் இந்தமல உடம்பை ஒழிக்க முயலேன். உன்னிடத்து அன்பு இல்லாத நான் இனி எவ்வகையால் உயர்வேன்?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மணியே, எம்மானே` உனைக் காண்பான், பல மாமுனிவர், உறுப்பும் வெறுத்து, இங்கு உலவாக் காலம் தவம் எய்தி நனிவாட, அவர்களைப் பணிகொள்ளாமல் உன்னைக் காணும்பொருட்டு யாதும் செய்யாத பாவியேனைப் பணி கொண்டாய்; (யானோ) உடம்பை நீக்கிக் கொள்ளும் விருப்பம் இல்லேன்; உன்னைக்காண விரும்பி அலைகின்ற அன்பும் இல்லேன்; எவ்வாற்றால் உன்னைத் தொடர்வேன்`.
தவம், உண்டி சுருக்கல் முதலாயின. உடம்பினை, `அங்கம்` என்னும் வடநூல் வழக்குப்பற்றி, ``உறுப்பு`` என்றார்.
``உறுப்பொத்தல் மக்கள்ஒப் பன்றால்``
(குறள்.993) எனவும்,
``குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்போ ரனையரால் வேறு``
(குறள்.704) எனவும் வருவனபோல்வனவற்றைக் காண்க.

பண் :

பாடல் எண் : 55

மானோர் நோக்கி உமையாள்
பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தானேன் உடையானே. 

பொழிப்புரை :

மான்விழி போன்ற விழியினை உடைய அம்பிகையின் வலப்பாகா! சிதம்பர நாதா! நீ பரிபூரணப் பரம் பொருளாகத் தோன்றி உன் அடியார்க்கு அமிர்தம் ஆகின்றாய். உன்னை நினைவதே மானுட வாழ்க்கையின் குறிக்கோள் என்று நீ காட்டியருளியதை அறிந்து கொண்ட நின் அன்பர், உன்னையே நினைந்து உன்னை அடைந்தார். உன் உடைமையாகிய நானோ உடலையே நினைந்து நிலவுலகுக்கு உரியவன் ஆனேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கூடுவார் - பொருந்துபவர்; ஒத்து நடப்பவர். ``கூட`` என்றதன்பின், `கூடாதேனாகிய யான்` என்னும் எழுவாய் வருவிக்க. `இஃது என் வினையிருந்தவாறு` என்பது குறிப்பெச்சமாய், இறுதிக் கண் எஞ்சி நின்றது. ``உமையாள்,`` ``கரும்பின்`` என்பன மூவசை யிடத்து ஈரசை வந்த சீர் மயக்கம்.

பண் :

பாடல் எண் : 56

உடையா னேநின் றனைஉள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதஞ்
சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தாக முடித்தாயே. 

பொழிப்புரை :

உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. உள்ளக் கனிவு உண்டாகவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் விருப்பம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாக இங்கு வாழ்ந்து இருக்கிறேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையாயாகிய நின் பாதம்` என்க. ``கண்டும்`` என்னும் உம்மை தொக்கது. இஃது, ``இருப்பதாக`` என்றதில், `ஆக` என்பதனோடு முடியும். ஊர் நாய் - வளர்ப்பார் இல்லாத நாய்; `அஃதா யினும் தான் செய்தற்பாலதனைச் செய்யும்; யான் அஃதில்லேன்` என்பார், ``ஊர்நாயிற் கடையானேன்`` என்றார். ஊர் நாய் செய்வது, ஊரைக் காத்தல். ``கசியாதேன்`` முதலிய எழுவாய்கள், `இருப்பது` என்னும் தொழிற்பெயரொடு முடியும். ஆக - நிகழும்படி. முடித்தாய்- வரையறுத்தாய். ஏகாரம், தேற்றம். `இதுதான் என்னை வந்திங்காட் கொண்ட கருணைக்குரிய செயலோ` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 57

முடித்த வாறும் என்றனக்கே
தக்க தேமுன் னடியாரைப்
பிடித்த வாறும் சோராமற்
சோர னேன்இங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே
சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து
கேடென் றனக்கே சூழ்ந்தேனே. 

பொழிப்புரை :

நீ முடித்த விதம் எனக்குத் தக்கதே. நான் அடியவரைப்பற்றியிருந்தும், என்னை மாயையாகிய பெண் வருத்த வருந்தினேன். எனக்கு நானே கெடுதியுண்டாக்கிக் கொண்டேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``சோரனேன்`` என்பது முதலாக இறுதிகாறும் உள்ளவற்றை, எஞ்சிநின்ற, `ஆதலின்` என்பதனோடு முதலிற் கூட்டி, ``தக்கதே`` என்றதைப் பின்னும் இயைத்து, `அவருக்கு` என்பது வருவித்து, `முடித்தவாறும் என்றனக்கே தக்கதே; அடியாரைச் சோராமல் முன் பிடித்தவாறும் அவருக்கே தக்கதே` என உரைக்க. `அவரவருக்குச் செயற்பாலதனையே செய்தாய்; ஆதலின், யான் இங்கு நின்று துன்புறுவது நின்பிழை அன்று; என் பிழையே` என்ற வாறு. முன்னைத் திருப்பாட்டில், `இறைவன் செய்தது முறையன்று` என்பதுபோல அருளினமையின், இத் திருப்பாட்டில், `அது முறையே` என்றார் என்க. கழிபடர் (மிக்க துன்பம்) உற்றோர் இங்ஙனம் பல வகையாலுங் கூறி இரங்குதல் இயல்பென்க. ``ஒருத்தி`` என்றது, தம் மனைவியாரையேயாதல் வேண்டும் என்பது மேலே (தி.8. திருச்சத கம் பா. 44) கூறப்பட்டது. வாய்துடித்தமை முதலியவாகக் கூறியன, அடிகள் பிரிந்து வருங்காலத்து, அவ்வம்மையார்பால் நிகழ்ந்த ஆற்றா மைக் குறிப்பே என்றும், அங்ஙனம் ஆற்றாமை எய்திய அவரை, `விரைந்து வருதும்` என அடிகள் தேற்றிப்பிரிந்தார் என்றும், அதனால், இறைவன் தம்மைப் பிரிந்து செல்லும்பொழுது தாம் அத்தேற்றச் சொல்லைக் கடக்கமாட்டாராயினார் என்றும் கொள்ளற்பாலன.

பண் :

பாடல் எண் : 58

தேனைப் பாலைக் கன்னலின்
தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை
உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீஎன்னை
ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந்
தன்மை யாம்என் தன்மையே. 

பொழிப்புரை :

மனம் தெளிந்தவர்களுக்குப் பரமானந்தத்தை ஊட்டும் ஞானப் பிரகாசன் நீ. அவர்களுக்கு ஒப்பற்ற மேலாம் பொருள் நீ. மற்றுப் பக்குவம் அடையாத நான் உனக்கு அடிமை என்றும் நீ எனக்குத் தலைவன் என்றும், சொந்தம் பாராட்டினால் ஒரு புன்சிரிப்பின் மூலம் நீ அதை மறுப்பாய். உன் அருளுக்குத் தகுதியற்ற நான் அதற்குத் தகுதியுடையவன் என்று சொல்லுவது தகாது.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கன்னல் - கரும்பு; இஃது அதன் சாற்றைக் குறித்தது. உம்பர் - மேலிடம். உம்பரான் - மேலிடத்தில் இருப்பவன். `உம்பர் ஆனை` என இருசொல்லாக அறுத்து, `தேவர்ஆ (பசு - காமதேனு)` என்றும் உரைப்பர். என்றால் - என்று உறவு கூறினால். ``தானும் சிரித்து`` என்றது, `பிறர் சிரித்தலேயன்றி` என்னும் பொருளைத் தருத லின், உம்மை, எச்சப் பொருட்டு. சிரித்தல், `வருக என்று பணித்த போதும் வாராதொழிந்த இவன்தானோ என் அடியான்! இவனைத் தானோ நான் ஆண்டுகொண்டது! நன்றாயுள்ளது இவன் கூற்று!` என்னும் இகழ்ச்சிக் குறிப்பினாலாம். ``சிரித்தே`` என்ற ஏகாரம், தேற்றம். `அங்ஙனம் இகழினும், தனக்கு இயல்பாய அருட்டன்மை யால், முன்பு வந்து ஆண்டதுபோல, இனியும் என்னைத் தன்பால் கூவிக்கொள்வான்` என்பார், `சிரித்தே ஒழியலாம்` என்னாது, ``சிரித்தே அருளலாம்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 59

தன்மை பிறரால் அறியாத
தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா
புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே
என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே. 

பொழிப்புரை :

உன்னுடைய இயல்பு, பிறர் பலராலும் அறியப் பெறாதது. அத்தகைய இறைவனே! புன்மையுடைய என்னை ஆண்டருளிப் புறத்தே செல்ல விடுகிறாயோ? நீயே அப்படிச் செய்தால் நான் என் செய்வேன்? எவ்விடத்தில் புகுவேன்? என்னை நோக்குவோர் யார்?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிறர் - உன்னையொழிந்த மற்றையோர். சிவாநுபூதிச் செல்வராயினும், சிவனது தன்மை முற்றும் அறியப்படாமையறிக. அறியாத - அறியப்படாத. ``பொல்லாநாய்`` என்றதற்கு மேல் (பா. 55) உரைத்தாம். ``புன்மையேனை ஆண்டு விடுவாயோ`` என்றது, `என் புன்மை நோக்காது முன்பு என்னை ஆண்டுகொண்டு, பின்பு அது நோக்கி விட்டு விடுவாயோ` என்றவாறு. `அங்ஙனம் செய்யின், அஃது ஆண்டவற்கு அழகாகாது` என்பது குறிப்பு. ஓகாரம், இரக்கப் பொருட்டு. ``விடுவாயோ`` என்றதன்பின், `விடின்` என்பது எஞ்சி நின்றது. ``நோக்குவார்`` என்றது, `நோக்கி இரங்குவார்` என்னும் பொருட்டு. ``யாரே`` என்னும் ஏகாரம், அசைநிலை. ``பொன்`` என்றது, அதன் ஒளியை, ``எங்கு`` என்றது, `எவரிடத்தில்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 60

புகுவேன் எனதே நின்பாதம்
போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி
நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண
நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே
எந்தாய் அந்தோ தரியேனே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் திருவடிகளில் சரண் புகுவேன். உன் அடியார் நடுவில் கூடியிருந்து நகைத்தல் ஒன்றுமே செய்வேன். ஆனால் சரியான அன்பிலேன். இத்தகையோனான என்னை நீ ஆண்டருளல் தகுதியாமோ?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`எந்தாய், நின் பாதத்தில் யான் புகுவேன்; (அதற்கு) அஃது என்னுடையதோ! (நீ கொடுக்க அன்றே பெறற்பாலது!) அதனை நீ கொடுத்து ஆண்டருள (ஏனைய அடியார்போல) அடியேனும் தகுவனோ? (தகேன்; ஏனெனில்,) நாணமில்லா நாயினேன், பண்டு, போற்றும் அடியாருள் நின்று நின் தோள்களை நோக்கி மகிழ்வேனாயினும், (இன்று எனக்கு) நினைக்காண நெகும் அன்பில்லை; அந்தோ, என் தன்மையை (யான்) தரியேன்` எனப் பொருள் கொள்க. இறைவன் திருப்பெருந்துறையில் ஆசான் மூர்த்தியாய் எழுந்தருளியிருந்த கோலம், அடியார் உள்ளத்தைக் கவருந் தன்மையதாய், இருந்தமையின் தம் உள்ளமும் அதனால் ஈர்ப்புண்டது என்பதை, ``பண்டு தோள்நோக்கி நகுவேன்`` என்றார். ``சிவனவன் திரள்தோள்மேல் - நீறு நின்றது கண்டனையாயினும் நெக்கிலை`` என முன்னரும் (தி. 8. திருச்சதகம் பா. 37) அருளினார். ``நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் - பேணாமை பேதை தொழில்`` (குறள்-833) என்பவாகலின், ``நாணமில்லா நாயினேன்`` என்றது, `பேதையேன்` என்னும் பொருளதாதலும், பெற்ற திருவருளைப் பேணுந்தன்மை இன்மையால், `பேதையேன்` என்றார் என்பதும் பெறப்படும். `பேணாது நின்றே பயன்பெற விழைகின்றேன்; அஃது இயல்வதோ` என்பார், `புகுவேன் எனதே நின்பாதம்` என்றார்.

பண் :

பாடல் எண் : 61

தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி. 

பொழிப்புரை :

கடவுளே! சங்கரனே! விருத்தனே! ஒப்பில்லாத தலைவனே! தேவர் தலைவனே! வணக்கம். இந்த உடம்போடு கூடி வாழும் வாழ்க்கையைச் சகித்திலேன். ஆதலால் இதனை ஒழித்து உன் திருவடியை அடைவிக்க வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப்பகுதிக்கு, `காருணியத்திரங்கல்` என முன்னோர் உரைத்த குறிப்பு, `இறைவன் தனது கருணைத் தன்மையால் திருவுளம் இரங்குதலைக் குறித்தது` என்றே பொருள் கொள்ளற்பாற்று; என்னையெனின், இதனுள் அடிகள், `தரிக்கிலேன் காய வாழ்க்கை` என்று எடுத்துக் கொண்டு `உடல் இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருளு,ஒழித்திடு இவ்வாழ்வு, வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும்` என்றாற்போலப் பன்முறையும் வேண்டுகின்றா ராகலின். இதனானே, இதனுள், `போற்றி` என வருவன பலவும், அங்ஙனம் இரங்குமாறு வேண்டிக்கொள்ளும் வணக்கவுரையாதல் பெறப்படும்.
தரிக்கிலேன் - பொறுக்கமாட்டேன். `காய வாழ்க்கை தரிக்கிலேன்` என்க. வானம் - பரலோகம். `அதன்கண் உள்ள` என்க. நீ எவ்வாறும் ஆவாய் என்பார், `எங்கள் விருத்தனே, விடலையே` என்றார். விருத்தன் - முதியோன். விடலை- இளையோன். ``தம்பிரான்`` என்றதில் தம், சாரியை. பிரான் - தலைவன்.

பண் :

பாடல் எண் : 62

போற்றிஓம் நமச்சி வாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய
புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய
புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய
சயசய போற்றி போற்றி

பொழிப்புரை :

இறைவனே! போற்றி! போற்றி! இந்தப் பொய்யுலக வாசனையால் மயங்குகின்றேன். உன்னையன்றி எனக்கு வேறு புகலிடம் இல்லை. ஆதலால் என்னைக் கைவிடாமல் காத் தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``ஓம் நமச்சிவாய`` என்றது, `இம்மந்திரத்தின் பொருளாய் உள்ளவனே` என்றவாறு. `போற்றியோ` எனப் பிரித்து, ஓகாரத்தை, இரக்கப்பொருளது எனினுமாம். புயங்கம் - பாம்பு; `ஒரு வகை நடனம்` எனவும் கூறுப. மயங்குதல் - செய்வதறியாது திகைத்தல். `என்னைப் புறம் போக்கல்` என்க. கண்டாய், முன்னிலை அசை. சயசய - வெல்க வெல்க.

பண் :

பாடல் எண் : 63

போற்றிஎன் போலும் பொய்யர்
தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றிபோற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றிய மானன் வானம்
இருசுடர்க் கடவு ளானே

பொழிப்புரை :

பொய்யுடலில் ஆசை வைத்துள்ள என் போன்றவர்களுக்கு அருள் புரிவதால், நீ, வள்ளல் ஆகின்றாய். உன் கருணைக்குப் புதிய தேன் ஒப்பானது. ஐம்பெரும் பூதங்கள், சூரியன் சந்திரன், உயிர் ஆகிய எட்டு மூர்த்திகளாய் நீ இருக்கின்றாய். இப்படி யெல்லாம், இருக்கிற உனக்கு மேலும் மேலும் வணக்கம் கூறுகிறேன்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


``பொய்யர் தம்மை ஆட்கொள்ளும்`` என்றது. அருட்டிறத்தை அருளியவாறு. `கருணையாகிய புதுமது வெள்ளம்` என்றபடி. மது - தேன். புவனம் - நிலம். இயமானன் - உயிர். இருசுடர், ஞாயிறும் திங்களும். `இவ்வெட்டுமாய் நிற்கும் இறைவனே` என்றபடி. கடவுளான் - எல்லாவற்றையும் கடத்தலை உடையவன். `இறை, தெய்வம்` என்னும் தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவிகள், `இறைவன், தேவன்` என உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைத்தல் போல, `கடவுள்` என்னும் பெயரும் `கடவுளான்` எனப் பால்பிரிந்து இசைத்தது என்க (தொல். சொல் -4).

பண் :

பாடல் எண் : 64

கடவுளே போற்றி என்னைக்
கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை
உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி

பொழிப்புரை :

நான் தகவிலன் என்பதை அறிந்து என்னை ஆட்கொள். என் உள்ளத்தை உருக்கி அதை இளகச் செய். உடலை ஒதுக்கிவிட்டு விரைவில் முத்தியடையும்படி செய். கங்காதரா! உன்னை நான் மீண்டும் வணங்குகிறேன். நான் தகாதவன் எனினும் நீ சங்கரன் ஆதலால் என்னை ஆட்கொண்டருள்க.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``கண்டுகொண்டு`` என்றதில் கொள், தற்பொருட்டுப் பொருண்மை விகுதி, `உனக்குள் நீதானே கண்டு` என்பது பொருள். `உன்னை வலிசெய்வார் ஒருவரிலர்; நீதானே இரங்குதல் வேண்டும்` என்றபடி. விட - (உலகப்பற்று) நீங்குமாறு. `என்னை உள்ளே உருக்கி ஆண்டிட வேண்டும்` என்க. உருக்கி - உருகப்பண்ணி. உம்பர் - மேலுலகம்; சிவலோகம். `அருள்` என்னும் முதனிலை, ஏவலிடத்து, உகரம் பெற்றது.

பண் :

பாடல் எண் : 65

சங்கரா போற்றி மற்றோர்
சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி
மால்விடை யூர்தி போற்றி
இங்கிவாழ் வாற்ற கில்லேன்
எம்பிரான் இழித்திட் டேனே. 

பொழிப்புரை :

சங்கரனே! மங்கை பங்கனே! மால்விடை யுடையானே! வேறோர் புகலிடம் இல்லேன். இந்தப் பொய் வாழ்வைச் சகிக்கிலேன் ஆதலால், என்னைக் கைவிடல் உனக்குத் தகுதியன்று.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். சரண் - புகலிடம். பொங்கு அரா - சினம் மிகுகின்ற பாம்பு; இஃது ஆகுபெயராய் அதன் படத்தைக் குறித்தது. மால் விடை - பெரிய இடபம். `ஊர்தி` என்பதில் இகரம், செயப்படுபொருட் பொருளதாய் நின்று, `ஊரப்படுவது` எனவும், வினைமுதற் பொருளதாய் நின்று `ஊர்பவன்` என்னும் பொருளையும் தரும். இங்கு அஃது வினைமுதற் பொருளதாய் நின்றது. `இவ்வாழ்வு` என்னும் வகரம் தொகுத்தலாயிற்று. இழித் திட்டேன் - அருவருத்தேன். `ஆதலின், நீக்கியருள்` என்பது குறிப் பெச்சம்.

பண் :

பாடல் எண் : 66

இழித்தனன் என்னை யானே
எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ் வாழ்வு போற்றி
உம்பர்நாட் டெம்பி ரானே. 

பொழிப்புரை :

எம்பிரானே! என்னை நானே தாழ்த்துவது அன்றி உன்னை நிந்தித்திலேன். சிறியவர் செய்த குற்றங்களைப் பெரியவர் பொறுத்தல் கடமையாதலால் என் குற்றங்களைப் பொறுத்து, இந்தப் பொய் வாழ்க்கையை ஒழித்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


`யான் உன்னைப் பழித்திலேன்; என்னையே இழித் தனன்` என்க. இழித்தனன் - இகழ்ந்துகொண்டேன். பழித்திலேன் - பழிகூறிற்றிலேன். `என்னைப் பிரிவது உனக்குத் திருக்குறிப் பன்றாக வும், (தி.8. திருச்சதகம் பா. 41) யானே பிரிந்து நின்றேன்; சிறியோரது பிழையைப் பொறுத்து அவர்க்கு உதவுதல் பெரியோரது கடனாகலின், நீ எனது பிழையைப் பொறுத்து இவ்வாழ்வை ஒழித்திடல் வேண்டும்` என வேண்டியவாறு. உம்பர் நாடு - மேலுலகம்; `அதன்கண் உள்ள எம் பிரானே` என்க.

பண் :

பாடல் எண் : 67

எம்பிரான் போற்றி வானத்
தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை
கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி. 

பொழிப்புரை :

தேவர் பிரானே! உமாதேவி பாகனே! திரு வெண்ணீறு உடையவனே! செவ்விய பெருமானே! திருச்சிற்றம் பலத்தை உடையவனே! முத்தி உலகை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வானத்து அவரவர் - வானுலகில் உள்ள அவ்வவர்க்கு. ``அவரவர்`` என்றது, ஒவ்வொரு பகுதியிலும் உள்ளாரைக் குறித்து. ``ஏறு`` என்றது, ``தலைவன்` என்னும் பொருட்டாய் நின்றது.
தெய்வப் பகுதியினராவார், உலகை நடத்துதற்கண் ஒவ்வொரு தொழிற்கு உரியராய் நின்று, அவ்வவ்வளவில், `முதல்வர்` எனப்படுவராத லாலும், அம் முதன்மைகள் பலவும் `சிவபெருமானது` முழுமுதன்மை யின் ஒவ்வொரு கூறாய் நிற்பனவாதலாலும், அப்பெருமானை `வானத்து அவரவர் ஏறு` என்று அருளிச்செய்தார்.
கொம்பர் - பூங்கொம்பு. ஆர்- (அதன் தன்மை) பொருந்திய. `கொம்பர்போலப் பொருந்திய` என்று மாம், செம் பிரான் - சிவப்பு நிறக் கடவுள். பிரமனை, `பொன்னன்` என்றும், திருமாலை, `மாயோன்` என்றும் கூறுதல்போல, சிவபிரானை, ``செம்பிரான்`` என்றார். `உம்பர்` என்பதன் அடியாகத் தோன்றிய, `உம்பரான்` என்பது விளியேற்று, `உம்பரா` என நின்றது.

பண் :

பாடல் எண் : 68

ஒருவனே போற்றி ஒப்பில்
அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன் றென்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே.

பொழிப்புரை :

பலவாகத் தோன்றும் பொழுதும் நீ ஒருவன்தான் இருக்கிறாய். உயிர்கள் அனைத்துக்கும் நீ சிறந்த தந்தையாய் இருக் கிறாய். தேவர்களுக்கெல்லாம் நீ மூத்தவன். உயிர்கள் உள்ளத்தில் நீ நித்திய திருவுருவத்தில் இருக்கிறாய். உனக்கும் எனக்கும் உள்ள உறவை நீ உறுதிப்படுத்து. என்னை உன் மயம் ஆக்குக. எனது உயிர் போதத்தை அகற்றி விடு. உனது மகிமையை நினைந்து நான் உன்னையே போற்றுகிறேன்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`ஒருவன்` என்பது, கடவுளைக் குறிப்பதொரு சொல். ஒப்பில் அப்பன் - `தந்தை` எனப்படுவாருள் ஒருவரும் ஒப்பில்லாத தந்தை. `குரவன்` என்பது, எதுகைநோக்கி, `குருவன்` என நின்றது. மக்களுக்கு உய்யும் நெறிகாட்டுவார் ஆசிரியராதல்போல, தேவர் கட்கு உய்யும் நெறிகாட்டுவான் சிவபெருமானே யாதல்பற்றி, `வானோர் குரவனே` என்றார்.
கோமளக் கொழுந்து - அழகின்மேல் எல்லை. சிவபிரானது அழகின் சிறு கூறுகளே ஏனைய யாவரிடத்தும், எப்பொருளிடத்தும் காணப்படும் அழகுகளாதல் தெளிவு.
இதனை, அப்பெருமான் பேரழகுடன் தோன்றிய வரலாறுகள் பல தெளிவுறுத்தும். `உடலினின்றும் பிரித்து ஏற்றுக்கொள்ளுதலை` ``வாங்கிட வேண்டும்`` என்றார். `தமியனேன் தனிமை தீர்த்து நின்பாதம் தருக` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 69

தீர்ந்தஅன் பாய அன்பர்க்
கவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும்என் பொய்ம்மை யாட்கொண்
டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க்
கமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற்
கருளிட வேண்டும் போற்றி

பொழிப்புரை :

அன்பரிடத்தில் மிகுந்த அன்பு செய்பவனே! என் பொய்ம்மை ஒழியும் வண்ணம் என்னை ஆண்டருளினவனே! விடத்தை உண்டு தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தவனே! உன் திருவடியை எனக்குத் தந்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தீர்ந்த அன்பு - முதிரவேண்டுமளவும் முதிர்ந்து முடிந்த அன்பு; `பேரன்பு` என்றவாறு. அன்பாய - அன்பே வடிவமாகிய; `அன்பு பிழம்பாய்த் திரிவார்`(தி.12 கண்ணப்பர் புரா. 154), `அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு` (தி.12 கண்ணப்பர் புரா. 157) என்றாற்போல வருவன காண்க. ``அன்பர்`` என்றது. `அடியவர்` என்னும் அளவாய் நின்றது. ``அவரினும் அன்பன்`` என்றது, அவரது அன்பளவினன்றிப் பன்மடங்கு பெரிதாய பேரருளை அவர்கட்கு வழங்குபவன் என்றவாறு.
அவ்வருளாவது, ஊனக்கண்ணைப் பெயர்த்தளித்த அன்பர்க்குப் பரிசாக, ``என் அன்புடைத் தோன்றல்`` (நக்கீரர் திருமறம்) என விளித்தும், தனது திருக்கையாலே அவரது திருக் கையைப் பிடித்தும், தன்னைப் பயன் கருதியன்றி அன்பே காரணமாக வணங்குவார் பலரும் அவரைத் தன்னினும் மேலாக வைத்து வணங்கு மாறு, தன் வலப்பக்கத்தே அவரை என்றும் நீங்காது நிற்கச்செய்தும் உயர்த்தினமை போல்வதாம்.
இது பற்றியன்றே, ``பேறினியிதன் மேலுண்டோ`` (தி.12 கண்ணப்பர் புரா. 185) என இச்சிறப்பினைப் போற்றிக் கூறியது! ``அற்றவர்க்கு அற்ற சிவன்`` என்று அருளிச் செய்தார் ஆளுடைய பிள்ளையாரும் (தி.3.ப.120.பா.2) என்க. `பேர்த்தும்` என்பது மெலிந்து நின்றது; `மீளவும்` என்பது பொருள். தம்மை ஆட் கொள்வதைத் தம்பொய்ம்மையை ஆட்கொள்வதாக அருளினார். முன்னர் இருந்த பொய்ம்மை, மெய்ந்நெறியிற்` செல்லாது உலகியலில் இருந்தது. பின்னர் உள்ள பொய்ம்மை, இறைவனுடன் செல்லாது இவ்வுலகில் நின்றது. `பெரியோனாகலின், மீளவும் பொறுத்து அருள்புரிவான் என்று துணியலாகும்` என்னும் கருத்தினால், ``ஆட்கொண்டருளிடும் பெருமை போற்றி`` என்றார். எனவே, இஃது எதிர்காலம் நோக்கிக் கூறியதாயிற்று.
இங்ஙனம் துணிதல் கூடுமாயினும், அவனது திருக்குறிப்பை வரையறுத்தல் கூடாமையின், ``நின்பாதம் நாயேற்கு அருளிட வேண்டும்`` என்று வேண்டினார்.
அங்ஙனம் வேண்டுகின்றவர் சிறியேனது குற்றத்தை எண்ணாத அவனது திருவருளின் பெருமையைக் குறித்தற்பொருட்டு, ``நஞ்சயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல்`` என்று அருளினார். வள்ளல், விளி. வார்ந்த - ஒழுகிய. ஆர்ந்த - (இன்பம்) நிறைந்த.

பண் :

பாடல் எண் : 70

போற்றிஇப் புவனம் நீர்தீக்
காலொடு வான மானாய்
போற்றிஎவ் வுயிர்க்குந் தோற்றம்
ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றிஎல் லாஉ யிர்க்கும்
ஈறாய்ஈ றின்மை யானாய்
போற்றிஐம் புலன்கள்நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கை யானே. 

பொழிப்புரை :

பஞ்ச பூதங்களாக இருப்பவனே! எல்லா உயிர் களுக்கும் பிறப்பிடமாய் இருப்பவனே! பிறப்பு இல்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் இறுதியும் உனக்கு இறுதி இன்மையும் ஆனவனே! ஐம்புலன்களும் தொடரப்பெறாத மாயத்தை உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``தோற்றமாகி``, ``ஈறாய்`` என்றவற்றில், `தோற்றம், ஈறு` என்றவை, `அவற்றிற்குக் காரணன்` எனப் பொருள் தந்தன.
``ஆனாய்`` எனவும், ``இல்லாய்`` எனவும் வந்தன, விளிகள். புணர்க்கை - புணர்ப்பு; சூழ்ச்சி; என்றது, வல்லமையை.

பண் :

பாடல் எண் : 71

புணர்ப்ப தொக்க எந்தை என்னை யாண்டு
பூண நோக்கினாய்
புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ
டென்னொ டென்னிதாம்
புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு
நின்க ழற்கணே
புணர்ப்ப தாக அங்க ணாள புங்க
மான போகமே.

பொழிப்புரை :

ஆண்டவனே! உன்னோடு மாறுபட்டுத் திரிகின்ற அடிமையை நால்வகை உபாயங்களாலும் உன்னடிமை என்று உன் னோடு கூட்டிக் கொள்வது போல, மெய்யடியார் குணங்கள் ஒன்றும் இல்லாத என்னை, ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளித் தடுத்து ஆட் கொண்டு மெய்யடியார் மீது வைக்கும் அருள் நோக்கத்தை அடியேன் உணர்வுக்கு உள்ளும் புறமுமாக வைத்தருளினை! பிரமாதிகளுக்கும் அரிய இவ்வருள் நோக்கம் அடியேனுக்குக் கிடைத்தல் அரிதென்று அதன் அருமை அறிந்தபோது எனதாயிருந்த சகசமலம் ஒன்றும் என்னை நின்னொடு இரண்டறக் கூட்டுவதாகவும், இப் பிரபஞ்சத்தின் மேல் நின்ற அன்பு உன் திருவடிக்கண் மீளாது நிற்பதாக வும் ஆயின. அழகிய கண்ணாளா! திருமால், பிரமன் அகியவருடைய உலக போகங் களையும் கடந்து இருக்கும் சிவானந்த போகமே! இந்தக் காருண்ணி யத்துக்கு நாயேனால் செய்யப்படுவதாகிய கைம்மாறும் உண்டோ?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப்பகுதியில் அடிகள் இறைவன் மாட்டு முறுகி எழும் பேரன்பினையே சிறப்பாக வேண்டிப் பாடுகின்றார். அன்பே இன்பிற்குக் காரணம் ஆதலின், இதற்கு, `ஆனந்தத்தழுந்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர்!
புணர்ப்பது ஒக்க - என்னை உன்னுடன் இரண்டறச் சேர்த்துக்கொள்வதுபோலவே. `ஒக்கவே` என்னும் தேற்றே காரம், தொகுத்தலாயிற்று. இதனால், இறைவன் மாட்டுக் குறையின்மை பெறப்பட்டது. பூண நோக்கினாய் - நிரம்பத் திருவருளை நல்கினாய். நோக்குதல் அருளுதலாதலை, `கண் பார்த்தல்` எனக் கூறும் வழக்குப் பற்றி உணர்க. ``புணர்ப்பது`` நான்கில் இடை இரண்டனுள் அது, பகுதிப்பொருள் விகுதி. இது புணர்ப்பன்று என்றபோது இது நின்னொடு என்னொடு என் ஆம் - இங்ஙனம் நல்கிய அருள் என்னை நின்னொடு ஒன்றாகச் செய்யும் உபாயம் அன்று எனப்பட்ட பொழுது. இவ்வருள் உன்னோடு என்னிடை என்ன பயனை உடையதாம்? `இஃது உபாயம் அன்று எனப்பட்டது` என்றது, அருள் புரிந்த உடனே இறைவனுடன் ஒன்றுபடாமல் உலகில் நின்று விட்டமையை யாவரும் அறிந்தமைபற்றி. இங்ஙனம் அருளியது அருளின் மாட்டாமை கூறியதன்று; தமது பக்குவம் இன்மை கூறியதாம். இது புணர்ப்பாக அன்றாக - இவ்வருள் என்னை உன்னோடு ஒன்று படுத்தும் உபாயமாகுக, அன்றாகுக; என்றது, இதற்குமேல் செயற்பாலதனை நோக்கல் வேண்டும் என்றபடி. அன்பு நின்கழற்கண் புங்கமான போகம் புணப்பதாக - இனி அன்பென்னும் உபாயமே உனது திருவடிக்கண் உண்டாகும் பேரின்ப நுகர்ச்சியில் என்னைச் சேர்ப்பதாக; `அத்தகைய அன்பினை எனக்கு அருளுதல் வேண்டும்` என்பது கருத்து. எனவே, `திருவருள் பயன்படுவது அன்புடையாரிடத் தேயாம் என்பது பெறப்பட்டது. அடிகள் அன்பில்லாதவரல்லர்; அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவரது (தி.8 கீர்த்தித் திருவகவல் - 130.) அன்பு போன்ற அன்பும், கண்ணப்பரது (தி.8 திருக்கோத்தும்பி - 4) அன்பு போன்ற அன்பும் தமக்கு இல்லை என்பதையே குறித்தருளுகின்றார். புங்கம் - உயர்ச்சி.

பண் :

பாடல் எண் : 72

போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த
ராதி இன்பமும்
ஏக நின்க ழல்இ ணைய லாதி
லேனென் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி
அஞ்ச லிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை ஆற
தாக ஐயனே. 

பொழிப்புரை :

ஐயனே! இந்திரன் முதலியோருடைய போகங் களையும் விரும்பிலேன். உன் திருவடியையன்றி மற்றோர் பற்று மிலேன். என்கைகள் உன்னை அஞ்சலிக்கவும் என் கண்களில் நீர் ஆறு போலப் பெருகவும் வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

போகம் வேண்டி - இன்பத்தை விரும்பி. `புரந்த ராதிகளது இன்பமும் வேண்டிலேன்` என்க. புரந்தரன் - இந்திரன். ``இன்பம்`` என்றது இன்ப வாழ்க்கையை. `மக்களுள் மன்னர் முதலியோரது வாழ்வையேயன்றி` எனப் பொருள் தருதலின், ``இன்பமும்`` என்ற உம்மை, இறந்தது தழுவிற்று. ஏக - ஏகனே. ``இலேன்`` என்றதற்கு, `பற்றுக்கோடு` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. இதன்பின் `ஆதலின்` என்பதும் எஞ்சிநின்றது. ஆகம் - உடம்பு. விண்டு - உருகி. கம்பம் - நடுக்கம். வந்து - வரப்பெற்று; இதனை, `வரப்பெற` எனத் திரித்துக்கொள்க. குஞ்சி - தலைமயிர். `என் கை குஞ்சிக்கண் அஞ்சலித்தற்கண் ஆக` என்க. அஞ்சலித்தல் - கும்பிடுதல். `என்கை குஞ்சிக்கண் அஞ்சலியாக` எனினுமாம். `கண் களில் தாரை ஆறதாக` என்க. `தாரை - இடையறாது விழும் வீழ்ச்சி. `அதனையுடைய ஆறு` என்க. அது, பகுதிப்பொருள் விகுதி. ``ஆறதாக`` என்றது பன்மை ஒருமை மயக்கம். `இந்திராதியரது இன்பங்களை உவர்த்து உனது திருவடியொன்றினையே பற்றுக் கோடாகக் கொண்டவரிடத்து இத்தகைய அன்பின் நிகழ்ச்சிகள் நிகழு மன்றே; அடியேன் அவை நிகழப் பெற்றிலேன்` என்று இரங்கி, அவற்றை வேண்டியவாறு. `கழலிணை` என, விகாரமின்றியே ஓதுதல் பாடமாகாமை யறிக.

பண் :

பாடல் எண் : 73

ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர்
பற்று வஞ்சனேன்
பொய்க லந்த தல்ல தில்லை பொய்ம்மை
யேன்என் எம்பிரான்
மைக லந்த கண்ணி பங்க வந்து
நின்க ழற்கணே
மெய்க லந்த அன்ப ரன்பெ னக்கு
மாக வேண்டுமே. 

பொழிப்புரை :

ஐயனே! உன்னையன்றி வேறொரு பற்றிலேன். நான் முழுப் பொய்யனாயினும் உன் திருவடியை அடைந்த மெய்யன்பரது அன்பு போன்ற அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பற்று - துணை. பொய் - நிலையில்லாத உலக வாழ்க்கை, `அதனைக் கலந்ததல்லது வேறு பேறில்லேன்` என்றது, திருவடிப்பேற்றினைப் பெறாமைக் கருதி. பொய்ம்மை ஏன் - `எனக்கு உலகவாழ்க்கையில் பற்றில்லை` என்று சொல்லுகின்ற பொய்ம்மையை நான் ஏன் சொல்லவேண்டும்? சொல்லமாட்டேன்; `ஆதலின் எனக்குத் துணைபுரிய வேண்டும்` என்றபடி. `நின் கழற் கணே வந்து மெய்கலந்த அன்பர்` என்க.
மெய் - நிலைபெற்ற இன்பம். ஆக வேண்டும் - உண்டாக வேண்டும். முதற்றொடரை இறுதியிற் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 74

வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை
தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ
என்ற ருளுநீ
பூண்டு கொண் டடிய னேனும் போற்றி
போற்றி யென்றுமென்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன
நின்வ ணங்கவே. 

பொழிப்புரை :

இறைவா! எனது உயிர்போதத்தை நீக்கிச்சிவ போதத்தை உறுதியாக்கி, என்மீது இரக்கம் வைத்து எனக்குப் பேரன்பைக் கொடுத்து அருளுக. பேரன்பு பூண்டு உன்னைப் போற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடத்துப் பிறப்பு இறப்பு எத்தனை வந்தாலும் அதனால் எனக்குத்துன்பம் இல்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மன்ன, நின் கழற்கண் அன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே வேண்டும்; அதன்பொருட்டு நீ நாயினேனை ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு; அடியனேனும், மாண்டு மாண்டு வந்து வந்து பூண்டுகொண்டு போற்றி போற்றி என்று மென்றும் நின் வணங்க` எனக் கூட்டியுரைக்க,
இஃது, `இப்பிறப்பில் அத்தகைய பேரன்பு அடியேனுக்கு எய்தாதாயின், பல பிறப்புக்கள் பிறந்தாயினும் அதனைப் பெறு வேனாக` என்றபடி. எனவே, ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு தலும் அப்பிறவிதோறும் என்பதாயிற்று.
ஆவ என்று - ஆஆ என்று இரங்கி. பூணுதல், அத்திருவரு ளை. `என்றென்று` என்னும் அடுக்குச் சிறப்பும்மையுடன் நின்றது. வண ங்க, அகர ஈற்று வியங்கோள். இதனால், இறைவன் திருவடிக்கண் பொய்யற்ற மெய்யன்பைப் பெறுதல் எத்துணை அரும்பேறு என்பது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 75

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம்
நான்கும் ஓலமிட்டு
உணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ
ருண்மை இன்மையின்
வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து
நின்ற ருளுதற்
கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ
லோநி னைப்பதே. 

பொழிப்புரை :

உமாதேவி பங்கனே! மண்ணுலகும் விண்ணுலகும் உன்னை வணங்கி நிற்கும். நான்கு வேதங்களும் உன்னையறிய முயன்று அறியவொண்ணாமையால் இளைக்கும். அவ்வாறான பின்பு, யாம் உன்னை வணங்கி உன் திருவடியை விடோம் என்று சொல்ல, நீ வந்து எமக்கு அருள் செய்தற்கு உன் திருவுளம் யாதோ?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மங்கை பங்க, நின்னை மண்ணும் விண்ணும் வணங்கும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும்; இவற்றால், மற்றோர் மெய்ப்பொருள் இல்லாமை தெளியப்படுதலின், யாம் நின்னை எய்தலுற்று வணங்கி, `விடேங்கள்` என்று கூறி நிற்கவும், வந்துநின்று அருளுதற்கு நினைப்பது என்கொலோ`. `ஓலம் இடுதல்` என்பது இங்கு, `துதித்தல்` என்னும் பொருளது. உணங்கும் - இளைக்கும். `விடேம்` என்னும் தன்மைப் பன்மை முற்றுவினை,
`கள்` என்னும் விகுதிமேல் விகுதியைப் பெற்றது. `என்னவும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வந்து நின்று - மீளத் தோன்றிநின்று. அருளுதல் - பொய்ம்மை தீர்ந்த மெய்யன்பினைப் பெறச் செய்தல். இணங்கு - நெருங்கிய. நினைப்பது - நினைத்தல்; ஆராய்தல். `இனி உன்னை யாங்கள் பிரிவதில்லை என்று உறுதி கூறவும், எங்களுக்கு அருள் செய்ய ஆராய்வது என்னை` என்றபடி. இதனுள், தம்மைப் பன்மையாக அருளினார்.

பண் :

பாடல் எண் : 76

நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை
யேய வாக்கினால்
தினைத்த னையு மாவ தில்லை சொல்ல
லாவ கேட்பவே
அனைத்து லகு மாய நின்னை ஐம்பு
லன்கள் காண்கிலா
எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை
பாத மெய்தவே.

பொழிப்புரை :

பரமனே! உலகனைத்தும் ஆகியிருக்கிறான். எனினும் அவனை அநுபூதியில் அடைவதற்கு மனம் உதவாது; வாக்கு உதவாது; ஐம்பொறிகளும் உதவமாட்டா. அந்தக் கரணங்கள் யாவும் பிரபஞ்சத்தை நுகர்வதற்கே உதவுகின்றன. பஞ்சபூதப் பொருளாகிய பரமனை வழிபடுதற்குச் சிறிதேனும் அவைகள் பயன்படா.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``நினைப்பதாக`` என்றதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. ஏய - பொருந்த. ``சொல்லல்`` என்றது, சொல்லப்படும் பொருள்களைக் குறித்தது. `ஆவன` என்பது, அன்பெறாது நின்றது. கேட்பவே - அறிந்தார் சொல்லக் கேட்பனவே; சொல்வோர் கேள்வியுணர்வே உடையவர் என்க.
காண்கிலா - காணமாட்டா; இதன்பின், `இங்ஙனமாகலின்` என்பது வருவிக்க. `எந்தை பாதம் எய்த எனைத்தெனைத்தது, எப்புறத்தது` எனக் கூட்டுக.
நினைப்பு அது ஆக - இவ்வாறாயினும், என் எண்ணம் நின்பாதத்தை எய்துதலாகிய அதுவேயாகுக. `நினைபஃதாக` எனப் பாடம் ஓதினும் அமையும். `மனம் செல்லும் அளவில், வாக்குச் செல்லாது. மற்று, அஃது உன்னைப்பற்றிப் பலவற்றைச் சொல்லுகின்றதே என்றால், அவையனைத்தும் பிறர் சொல்லியவற்றைக் கேட்டு அங்ஙனமே சொல்வனவன்றி வேறில்லை. ஐம்புலன்கள் அடியோடு உன்னை அணுகவே மாட்டாது நிற்கும் என்றால், உனது பாதத்தை உயிர்கள் அடைதல் என்பது எந்த அளவில் இயல்வது! எத்துணைச் சேய்மையில் உள்ளது! ஆயினும், எண்ணம் மாறாதிருப்பின் என்றேனும் எய்தலாம்` என்றபடி. ``வைத்த உள்ளம் மாற்ற வேண்டா, வம்மின்மனத் தீரே`` என ஆளுடைய நம்பிகளும் அருளிச்செய்தார் (தி.7.ப.7.பா.1).
``புலன்கள்`` என்றது பொறிகளை. அவை இறைவனை அணுக மாட்டாமைக்கு ஏதுக்கூறுவார், ``அனைத்துலகுமாய நின்னை`` என்றார். `அனைத்துலஃகும்` என்பதே பாடமாதல் வேண்டும்.
``எய்த`` என்ற வினையெச்சம் தொழிற் பெயர்ப் பொருள் தந்தது; `எய்தலே` என்பதே பாடம் எனினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 77

எய்த லாவ தென்று நின்னை எம்பி
ரான்இவ் வஞ்சனேற்கு
உய்த லாவ துன்க ணன்றி மற்றொ
ருண்மை யின்மையின்
பைத லாவ தென்று பாது காத்தி
ரங்கு பாவியேற்கு
ஈத லாது நின்க ணொன்றும் வண்ண
மில்லை யீசனே. 

பொழிப்புரை :

சிவனே! நான் உன்னை அடைய இருப்பது எப்பொழுதோ? எனக்கு உன்னையன்றி வேறு புகலிடம் இல்லாமை யால், என் துன்பத்தை நோக்கி இரங்கிக் காத்தருளல் வேண்டும். இவ்வாறு நீயே ஆட்கொண்டருளினாலன்றி, நான் உன்னை அடையும் வகையில்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `எம்பிரான், ஈசனே, நின்னை யான் எய்தலாவது என்று? வஞ்சனேற்கு உய்தலாவது நின்கண் (ஒன்றுதலாகிய உண்மை) யன்றி மற்றொர் உண்மை இன்மையின் (நீ என்னைப் புறக்கணித்துவிட்டால்) ஆவது பைதல் என்று நினைந்து பாவியேற்கு இரங்கிப் பாதுகாத்தருள்; ஈதலாது (யான்) நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை`.
``ஆவது`` மூன்றில் முதலது, உண்டாவது; இடையது, இடைச்சொல், இறுதியது, விளைதல். பைதல் - துன்பம். ``பாதுகாத்து இரங்கு`` என்றதனை, `இரங்கிப் பாதுகா` எனப் பின் முன்னாக்கி உரைக்க. ``ஈது`` என்றது, இதனையே சுட்டிற்று.
ஒன்றும் வண்ணம் - ஒன்றாதற்கு வழி; அன்றி, `வண்ணம் ஒன்றும் இல்லை` என மாற்றி, `இதுவல்லது உன்னிடம் நான் வேண்டு வது ஒன்றும் இல்லை` என்று உரைத்தலுமாம். மூன்றாம் அடியில் ``பைதல்`` என்றதன் முதலெழுத்து ஒன்றரை மாத்திரையாய் நின்று எதுகையாயினமையின், நான்காம் அடியின் முதலெழுத்து இரண்டு மாத்திரையாய் நின்று எதுகையாயிற்று. மூன்றாமடியில், `பய்தல்` என்று பாடம் ஓதுதலும், அவ்விடத்து, `நான்காம் அடியின் முதலெழுத்து ஓசையொப்புமையான் எதுகையாயிற்று; இன்னோரன்னவை உயர்ந்தோர் செய்யுட் கண்வரும் ஒப்பியல் என்று உரைத்தலுமே சிறப்புடைய வாம். இவ்வொப்பியலை, `ஆரிடப் போலி` என்பர்.

பண் :

பாடல் எண் : 78

ஈச னேநீ அல்ல தில்லை இங்கும்
அங்கும் என்பதும்
பேசி னேனொர் பேத மின்மை பேதை
யேனென் எம்பிரான்
நீச னேனை ஆண்டு கொண்ட நின்ம
லாஓர் நின்னலால்
தேச னேஓர் தேவ ருண்மை சிந்தி
யாது சிந்தையே.

பொழிப்புரை :

இறைவா! இவ்வுலகம் அவ்வுலகம் ஆகிய எல்லாம் நீயே ஆகியிருப்பதால், உனக்கு வேறான பொருள் ஒன்றும் இல்லை என்று என் அறிவுக்கு எட்டியவாறு நான் கருதுவேன். அங்ஙனம் எண்ணவில்லையேல் நான் நீசன் ஆவேன். உனக்குப் புறம்பாக வேறு ஒரு பொருள் இல்லாததால் நீ பரம்பொருள். எங்கும் ஒரே ஒளிப்பிழம்பாக நீ இருப்பதால் நான் சிந்திப்பதற்கு மற்றோர் ஒளி வடிவம் ஏதும் இல்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `ஈசனே, எம்பிரான், நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா, தேசனே, இங்கும் அங்கும் நீயல்லது இல்லை என்பதும், ஓர் பேதம் இன்மையும் பேதையேன் பேசினேன்; என் சிந்தை, ஓர் நின்னலால் ஓர் தேவர் உண்மை சிந்தியாது` எனக் கூட்டி, `ஆதலின் எனக்கு இரங்கியருள்` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
இங்கும் - உலக நிலையிலும். அங்கும் - வீட்டு நிலையிலும். இல்லை - வேறு துணை இல்லை. ஓர் பேதம் - சிறிது வேற்றுமை; என்றது, எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்றல்.
`ஓர் பேதமும்` என்னும் இழிவு சிறப்பும்மையும், `இன்மை யும்` என்னும் எண்ணும்மையும் தொகுத்தலாயின.
ஓர் நின்னலால் - ஒப்பற்ற உன்னையன்றி. `பேதமின்மையை எடுத்தோதியது` எல்லாவற்றையும் சிவமாகக் காணும் உணர்வு பெற்றமையைக் குறித்தற்கு.

பண் :

பாடல் எண் : 79

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில்
ஐம்பு லன்களான்
முந்தை யான காலம் நின்னை எய்தி
டாத மூர்க்கனேன்
வெந்தை யாவி ழுந்தி லேனென் உள்ளம்
வெள்கி விண்டிலேன்
எந்தை யாய நின்னை இன்னம் எய்த
லுற்றி ருப்பனே. 

பொழிப்புரை :

மனம் முதலியவற்றால் முற்காலத்தில் உன்னை அடையாத மூர்க்கனாகிய நான், வெந்தொழிந்தேனில்லை. என் மனம் குன்றி, வாய் விட்டலறினேனில்லை. இன்னும் உன்னையடைய நினைத்திருக்கிறேன்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், ``செய்கை`` என்றது, அதற்குக் கருவியாகிய கன்மேந்திரியங்களைக் குறித்தன. இசை யோசையைக் கேட்கும் வழியன்றி எழுத்தோசையைக் கேட்கும் வழிச் செவி ஐம்பொறிகளின் வேறு வைத்து எண்ணப்படுமாகலின், அதனை, `கேள்வி` என வேறாக ஓதினார். சீர் இல் - சிறப்பில்லாத. இது தாப்பிசையாய், முன்னரும் சென்று இயையும். ``புலன்கள்`` என்றது பொறிகளை. மெய்ந்நெறியில் தொழிற்படும் கருவி கரணங்கள் சிறப்புடையன (வீட்டுநிலையின) ஆகலின், உலகியலிற் செல்லும் அவற்றை, `சிறப்பில்லன` என்றார். `சிறப்பில்லன` என்றது, `இழிவுடையன` என்னும் பொருட்டு. இழிவு, பிறவியில் வீழ்த்தல். இம் முதலடியில், அடிகள் இறைவனை அடைதற்குத் தடைசெய்தவற்றை விதந்தோதியருளினார், முந்தை யான காலம் - முதலாய் நின்ற காலம்; அஃது இறைவனால் ஆட் கொள்ளப்பட்ட காலமாம். இதற்கு, `ஆட்கொள்ளப்படுதற்கு முற்பட்ட காலம்` என உரைப்பாரும் உளர். அப்பொழுது எய்தாதொழிந் தமைக்கு அடிகள் இத்துணை இரங்குதற்கு ஓர் இயைபின்மையின், அஃது உரையாகாமை அறிக. விழுந்திலேன் - அழிந்திலேன். இனி, ``வெந்து விழுந்திலேன்`` என்றதனை, `விழுந்து வெந்திலேன்` எனப் பின் முன்னாக்கி, `தீயின்கண்` என்பதனை வருவித்து உரைப்பாரும் உளர். உள்ளம் வெள்கி விண்டிலேன் - நெஞ்சம் வெள்கிப் பிளந்திலேன். `நின்னை எய்தலுற்று இன்னம் இருப்பன்` என்க. எய்தலுற்று - எய்த விரும்பி. இருப்பன் - உயிர்வாழ்வேன். `அன்று நீ அழைத்த காலத்தில் அடையாது, இன்று அடைவதற்கு அவாவு கின்றேன்; இஃது என் அறியாமை இருந்தபடி` என்பதாம். முன்னர் இறைவனது குறிப்பின்வழிச் செல்லாது தம் குறிப்பின்படியே நின்றமை குறித்து, `மூர்க்கனேன்`` என்று அருளிச்செய்தார். `அம் மூர்க்கத் தன்மையின் பயனை இப்போது அடைகின்றேன்` என வருந்தியவாறு. இத் திருப்பாட்டு, அடிகளது உண்மையுள்ளத்தை எத்துணைத் தெளிவாகக் காட்டுகின்றது!

பண் :

பாடல் எண் : 80

இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு
கொண்ட நின்னதாட்
கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க
லந்து போகவும்
நெருப்பு முண்டு யானு முண்டி ருந்த
துண்ட தாயினும்
விருப்பு முண்டு நின்கண் என்கண் என்ப
தென்ன விச்சையே.
 

பொழிப்புரை :

இரும்பு போலும் வன் மனத்தையுடைய நான், என்னை ஆண்டருளின உன் திருவடியைப் பிரிந்தும், தீப்பாய்ந்து மடிந்திலேன். இத்தன்மையேனாகிய என்னிடத்தில், உனக்குச் செய்ய வேண்டிய அன்பிருக்கின்றது என்பது என்ன மாய வித்தை?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`நின` என்பது, விரித்தல்பெற்றது. ``தாள்`` என்றது, அதன்கண் எழும் இன்பத்தைக் குறித்தது. கருப்பு மட்டு - கருப்பஞ் சாறு. எனைக் கலந்து - என்னை அடைந்து; `எனக்குக் கிடைத்து` என்றபடி. `எனைக் கலந்து வாய்மடுத்து` என மாற்றி, `கலந்தமையால் யான் வாய்மடுத்த பின், நீங்கிப் போகவும்` என உரைக்க. `போகவும் இருந்தது` என இயையும். ``நெருப்பும் உண்டு` என்றதன்பின்னும், ``யானும் உண்டு`` என்றதன் பின்னும், `ஆக` என்பது வருவிக்க. `உண்டு` என்பது மூவிடத்திற்கும் பொதுவாய் வருதல், பிற்கால வழக்கு. இருந்தது - நெருப்பில் வீழாது உயிர்வாழ்ந்திருந்தது. அதாயினும் - அந்நிலை உண்டாய பின்னும். `அஃதாயினும்` எனப்பாடம் ஓதுதல் பொருந்தும். `என்கண் நின்கண் விருப்பும் உண்டு` என மாறுக. விருப்பு - அன்பு. `உயிர்வாழ்தலோடு இதுவும் உண்டு` எனப் பொருள் தருதலின், ``விருப்பும்`` என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சம். என்ன விச்சை - என்ன மாய வித்தை. ஒருவரது அன்பிற்குரிய பொருள் நீங்கியபின் அவர் உயிர்வாழ்தலும், ஒருபொருள் நீங்கியபின்னும் உயிர்வாழ்வார் அப்பொருள்மேல் அன்புடையர் எனப்படுதலும் இயல்வன அல்ல ஆகலின், ``நின்ன தாள் கருப்புமட்டுப் போகவும் யான் இருந்ததுண்டு; அதாயினும் என்கண் நின்கண் விருப்பும் உண்டு என்பது என்ன விச்சை`` என்றார். ``நெருப்பும் உண்டு; யானும் உண்டு`` என்றது, `யான் நெருப்பில் வீழாமைக்கு நின்பால் அன்பின்மையே காரணம்; பிறிதொரு காரணம் இல்லை` என்பதனை வலியுறுத்தவாறு. `என் அவிச்சை` எனப் பிரித்து, `உன்பால் எனக்கு அன்பு உண்டு என்பது என் அறியாமையே` என்று உரைப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 81

விச்சுக் கேடுபொய்க் காகா தென்றிங்
கெனைவைத்தாய்
இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன்
ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்னான் செய்கேன்
பேசாயே. 

பொழிப்புரை :

இறைவனே! பொய்க்கு வேறொரு இடம் இல்லை என்று என்னை இங்கு வைத்தாய். உன் மெய்யன்பர் யாவரும் உன் திருவடியை அடைந்தார்கள். நான் பிறவி அச்சமாகிய கடலில் மூழ்குதலன்றி வேறு என்ன செய்யக் கடவேன்?

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

இப்பகுதியில் அடிகள், ஏனைய அடியார்கள் பெற்ற பெரும்பேற்றை நினைந்து தமக்கு அதுவாயாமைக்கு வருந்தி, அதனைத் தந்தருளுமாறு பல்லாற்றானும் வேண்டுகின்றார். இவ் வருத்தத்தினையே, `ஆனந்த பரவசம்` என்றனர் போலும் முன்னோர்!
விச்சு, `வித்து` என்பதன் போலி. கேடு - அழிவு. `பொய்ம்மைக்கு விதைக்கேடு உண்டாதல் கூடாது என்னும் கருத்தினால் என்னை இவ்வுலகத்தில் வைத்தாய்` என்க. எனவே, `பொய்ம்மைக்கு விதை தாமல்லது பிறரில்லை` என்றவாறாயிற்று. ``என்னை வகுத்திலை யேல்இடும் பைக்கிடம் யாது சொல்லே`` என்ற திருநாவுக்கரசர் திருமொழியையும் (தி.4.ப.105.பா.2) காண்க. பொய்ம்மையாவது, பிறவி. பிறக்கும் உயிர்கள் பல உளவேனும், அப் பிறவி நீங்கும் வாயிலைப் பெற்றபின்னும் அதன்வழியே பிறவியை ஒழிக்கக் கருதாது மீளப் பிறவிக்கு வாயிலைப் பற்றி நிற்பதோர் உயிரில்லை என்னும் கருத்தால், இவ்வாறு கூறினார். கூறவே, `அவ்வாயிலைப் பெற்ற ஏனைய அடியவர் பலரும் பிறவா நெறியை அடைந்தனர்; யான் அதனை அடைந்திலேன்` என்பது போதரலின், அதனையே இரண்டாம் அடியில் கிளந்தோதினர் என்க. இச்சைக்கு ஆனார் - உன் விருப்பத்திற்கு உடன்பட்டவர்கள்; என்றதனால், அடிகள் அதற்கு உடம்பட்டிலாமை பெறப்பட்டது. அச்சம், பிறவிபற்றியது. `இஃது இப்பொழுது உள்ள எனது நிலை` என்றபடி. `யான் செய்யத் தக்கதைச் சொல்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 82

பேசப் பட்டேன் நின்னடி யாரில்
திருநீறே
பூசப் பட்டேன் பூதல ரால்உன்
அடியானென்று
ஏசப் பட்டேன் இனிப்படு கின்ற
தமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன்
அடியேனே. 

பொழிப்புரை :

உன் அடியாருள் ஒருவனாகச் சொல்லப்பட்டேன். திருவெண்ணீற்றால் பூசப்பட்டேன். இறைவனே! உன் அடியவன் என்று உலகத்தோரால் இகழப்பட்டேன். இவ்வளவும் போதாது என்று மேலும் உனக்கு ஆசைப்பட்டேன். அடிமைப்பட்டேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

பொருள்கோள்: `திருநீறே (உன்னால்) பூசப்பட்டேன்; அதனால், பூதலரால் (முன்) உன் அடியாரில் (வைத்துப்) பேசப் பட்டேன்; (இப்பொழுது அவர்களால்) உன் அடியான் (படுகின்ற துன்பம் இது) என்று ஏசப்பட்டேன்; இனி (இத் துன்பத்தைப்) படுகின்றது (உன் அடியான் என்ற நிலைமைக்குப்) பொருந்தாது; (ஆதலின்) உனக்கு ஆட்பட்டேனாகிய உன் அடியேன், அவ்வடி யார்க்கு உரிய அந்நிலையைப் பெற ஆசைப்பட்டேன்.`
``திருநீறே பூசப்பட்டேன்`` என்றதில் உள்ள ஏகாரம், ஏனைய அடியார்கள்போல உடன்வரும் நிலைமையை அருளாமையைப் பிரித்து நின்றது. `அடியான்` என்னும் சொல், பிறிதொரு சொற் குறிப்பானன்றித் தானே இழிவுணர்த்தாமையின், இது தன்னையே இகழுரையாக உரைத்தல் பொருந்தாமையறிக. `ஏசப்பட்டேன்` என்றமையால், ``இனிப்படுகின்றது`` என்றது, துன்பத்தை என்பதும், ``உன் அடியேன்`` என்றதனால் ஆசைப்பட்டது அதற்கேற்ற நிலையை என்பதும் பெறப்பட்டன. `அதனைத் தந்தருள்` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 83

அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை
கொல்லோ
அடியா ரானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இது நீக்க மாட்டேன் எங்கள்
சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு
காணேனே. 

பொழிப்புரை :

நான் உன் அடியனல்லேனோ? நீ என்னை ஆட்கொண்டது இல்லையோ? உன் அடியார் எல்லோரும் உன் திருவடியை அடையவும் நான் இந்த உடம்பை ஒழியாதிருக்கிறேன். கொடியேன் உன்னைக் காணும் வழி கண்டிலேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

முதலடியை ஈற்றில் வைத்து உரைக்க. ``கடியேன்`` என்றதனை, ``சேர்ந்தார்`` என்றதன்பின்னர்க் கூட்டுக. செடி - துன்பம். காணுமாறு - காணும் வாயிலை. ``காணேன்`` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. ஆட்கொள்ளப்பட்டு அடியராயினார் பெற்ற பயன் தமக்கு எய்தாமையின், `இறைவன் தம்மை ஆட் கொண்டதாக நினைப்பது மயக்கமோ` என்று ஐயுறுவார்போல அருளி னார். பாவினங்களின் அடிகட்கும் பிற்காலத்தார் சீர்வரையறுத்தாரா யினும், அவற்றுள் சில அடிகள் சீர்மிக்கு வருதலும் முன்னைய வழக் கென்பது சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலியவற்றாலும் அறியப்படும்.
அவ்வாற்றானே இத்திருப்பாட்டுள் இரண்டாமடி யொழிந்தவை அறுசீரடியாயின. மேல் வருவனவற்றுள்ளும் சில பாடலிற் சிலவும், பலவும் இவ்வாறு வருதல் காண்க. பத்துத் திருப் பாடலையும் ஓரினச் செய்யுளாகவே செய்யப் புகுந்தமையின், நான்கடியும் அறுசீராயினவும் ஈண்டு, `கலித்துறை` என்றே கொள்ளப் படும்.

பண் :

பாடல் எண் : 84

காணு மாறு காணேன் உன்னை
அந்நாட்கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்ததென்ன
பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தாசெத்தே
போயினேன்
ஏணா ணில்லா நாயினேன் என்கொண்டெழுகேன்
எம்மானே. 

பொழிப்புரை :

பரஞ்சோதியே! ஆணே! பெண்ணே! ஆர் அமுதே! அத்தா! எம்மானே! உன்னை அடையும் மார்க்கத்தை நான் கண்டிலேன். அன்று உன்னைக் கண்டபின் நான் வீண்பேச்சுப் பேசி ஒரு நலனையும் அடைந்திலேன். செத்துப்போன நிலையில் இப்போது இருக்கிறேன். என் கீழ்மையைக் குறித்து நான் வெட்கப்பட வில்லை. மேல்நிலை அடைவதற்கான ஆற்றல் என்னிடத்து இல்லை. நான் எப்படி உய்வேன்?

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

`கண்டேனேனும்` என்பது `கண்டேனும்` எனத் தொகுத்தலாயிற்று. பாண் - பாணர் மொழி; இன்சொல். `உன்னை யான் அந் நாட்கண்டேனேனும் இன்று காணுமாற்றைக் காணேன்; அதனால், என்னை அன்று இன்சொற் பேசி உன்பாற் படுத்தது என் கருதி` என உரைக்க. `உனது காட்சியை முன்போல வழங்கி, ஏனையோர் போல என்னையும் அழைத்துச் செல்லவேண்டும்` என்பது கருத்து. இறைவன், `ஆண், பெண்` என்னும் இருவகைப் பிறப்பினையுடைய எல்லா உயிர்களிலும் கலந்துள்ளமை பற்றி, `ஆணே பெண்ணே` எனவும், `அருளாதொழியின் நான் அழிந் தொழிதல் திண்ணம்` என்றற்கு, ``செத்தேபோயினேன்`` எனவும் அருளினார். ஏண் - வலிமை. ``நாண்`` என்றதன்பின், `இரண்டும்` என்பது தொகுத்தலாயிற்று. என் கொண்டு - எதனைத் துணையாகக் கொண்டு. எழுகேன் - கரையேறுவேன்.

பண் :

பாடல் எண் : 85

மானேர் நோக்கி யுடையாள் பங்காமறையீ
றறியாமறையோனே
தேனே அமுதே சிந்தைக்கரியாய் சிறியேன்
பிழைபொறுக்குங்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன்
சிவமாநகர்குறுகப்
போனா ரடியார் யானும் பொய்யும்புறமே
போந்தோமே. 

பொழிப்புரை :

மான் விழி போன்ற விழிகளையுடைய உமாதேவி யாரின் பாகா! வேத வேதாந்தத்துக்கு எட்டாத மறைபொருளே! தேனே! அமிர்தமே! மனத்துக்கு எட்டாதவனே! என் குற்றத்தை மன்னித்து அருளும் அரசே! என் குறைபாட்டை நான் பரிந்து உன் னிடம் முறையிட்டேன். அதாவது உன் அடியார்கள் உனக்கு உரியவர் கள் ஆயினர். நானோ பொய்யாகிய பிரபஞ்சத்துக்கு உரியனாய், நானும் பிரபஞ்சமும் உனக்கு வேறாக இருந்து வருகிறோம்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

``கொடுமை`` என்றதில், பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு விரிக்க. பறைந்தேன் - விரைந்தேன். `கொடுமை செய்வதற்குச் சிறிதே விரைந்தேன்` என்றபடி. இறைவன் தம் முன் இருந்து மறைந்த அந்நாளில் உடன் செல்ல மாட்டாதிருந்தமையையே அடிகள், சிறிது கொடுமை செய்ய விரைந்ததாக அருளினார். அஃது இறைவன் திருக்குறிப்பிற்கு மாறாதல்பற்றி, ``கொடுமை`` என்றார். எனினும், `பிழை` என்பதே பொருளாகக் கொள்ளற்பாற்று. `நீ அடியவர் செய்யும் பிழையைப் பொறுக்கும் தலைவனாதலின் பொறுத்தருளவேண்டும்` என்பார், ``சிறியேன் பிழைபொறுக்குங் கோனே`` என விளித்தார்.
`யான் அடியவரோடு சிவமாநகர் குறுகப் போகாமல், பொய்ம்மையோடு வேறோரிடம் குறுகப் போனேன்` என்பார், ``யானும் பொய்யும் புறமே போந்தோம்`` என்றார். இங்ஙனம் பொய்ம்மையைத் தம்மோடு ஒப்பவைத்து எண்ணியது, `அது வல்லது எனக்கு நட்புப் பிறிதில்லை` எனக் கூறுமுகத்தால், அப் பொய்ம்மையால் தமக்குக் கேடு விளைந்தமையைக் குறித்தற்கு. பொய்ம்மை, இறைவன் வழியையன்றித் தம்வழியைப் பொருளாகத் துணிந்தமை. சிவமாநகர்க்குப் புறமாவது இவ்வுலகு. `நின்னிற் சிறந்த பொருள் பிறிதில்லையாகவும் உளதாக எனது பேதைமையால் நினைந்தேன்` என்றற்பொருட்டே முதற்கண் இறைவனை, `தேனே! அமுதே!` என்றற்றொடக்கத்தனவாகப் பலவற்றான் விளித்தருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 86

புறமே போந்தோம் பொய்யும் யானும்
மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம்
பெற்றேன்யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
மற்றொன்றறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே
நின்தாள்சேர்ந்தாரே. 

பொழிப்புரை :

ஆன்மாவாகிய நானும் உலகம் ஆகிய மாயையும் உனக்குப் புறம்பானோம். உன்பால் பத்தி பண்ணுவதற்கான உறுதி யான தெய்வீகத் தன்மை என்னிடம் இல்லை. உன்னைத் தவிர வேறு எதையும் அறியாத பரிபக்குவ உயிர்கள் தங்கள் ஆன்ம போதத்தை அகற்றி உன்பால் இரண்டறக் கலந்தன. அதற்காக அவர்கள் பத்தி மார்க்கத்தைத் தீவிரமாகக் கையாண்டனர்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

வல்லேன் - மாட்டேன்; இது, `வல்லுதல்` என்னும் தொழிலடியாகப் பிறந்த எதிர்மறைவினை; `வன்மை` என்னும் பண்படியாகப் பிறந்ததாயின், `வன்மையுடையேன்` எனப் பொருள் படும். இதன்பின், `ஆதலின்` என்பது வருவித்து, `மாட்டாமையான் அல்லாத தன்மையை (பொய்யன்பை)ப் பெற்றேன்` என உரைக்க.
`இஃது என் தன்மை, நின்னை முற்றச் சார்ந்த அடியவரே உன்னை யன்றிப் பிறிதொன்றைப் பொருளாக அறியாதவர்; அதனால், வீடு பேற்றிற்குரியவற்றையே செய்து உனது திருவடியை அடைந்தார்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள். அறவே - முற்றிலும். சிறவு - சிறப்பு; வீடுபேறு; இஃது இதற்கு ஏதுவாய செயல்களைக் குறித்தது.
நிரம்பிய அடிமையை உடையவரது செயல்கள் இவை எனவே, இவற்றின் மறுதலையாயவை தமது செயல்கள் என்பதும், அதனால் தாம் இறைவன்தாள் சேராராயினார் என்பதும் கூறியவாறாயிற்று. ஆகவே, `யான் இங்குக் கிடந்து அலமருதல் என் குற்றமன்றி உன் குற்றம் அன்று` என்பதும் குறித்தவாறாம். ``என்னா லறியாப் பதந்தந்தாய் யான் அதறியாதே கெட்டேன் - உன்னால் ஒன்றுங் குறைவில்லை`` (தி.8 ஆனந்த மாலை 2.) எனப் பின்னர் வெளிப்படையாகவே அருளிச்செய்வர்.

பண் :

பாடல் எண் : 87

தாராய் உடையாய் அடியேற் குன்தா
ளிணையன்பு
பேரா உலகம் புக்கா ரடியார்
புறமேபோந்தேன்யான்
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங்
குன்தாளிணையன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல்கொண்
டழுகேனே. 

பொழிப்புரை :

இறைவனே! அடியேன் உன் திருவடிக்கு அன்பு செய்யும்படிச் செய்தருள வேண்டும். அடியார் முத்தியுலகம் புக, யான் புறம் போந்தேன். ஊர்ப் பசுக்கள் மேய்தற்கு வரக் கூடவே குருட்டுப் பசுவும் வந்ததுபோல, அன்பர் உன் திருவடிகளுக்கு அன்பு செய்ய நானும் அன்பு செய்ய விரும்பி அழுகின்றேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. மிலைத்தல் - கனைத்தல். `ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்து` என்றது. ஊரிலுள்ள ஏனைய பசுக்கள் மாலைக்காலத்தில் தம் இல்லத்தை அணுகியபொழுது தம் கன்றுகளைக் கனைத்து அழைக்க, குருட்டுப் பசுவும் தன் இல்லத்தை அணிமையிற் கண்டது போலத் தன் கன் றினைக் கனைத்து அழைத்தலையாம். `மிலைத்து` என்றது, `மிலைத் தது` போன்ற செயலைச் செய்து` என உவமை குறித்து நின்றது. `கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன்`, `பனிநீராற் பரவை செயப் பாவித் தேன்` (தி.4.ப.5.பா.1,4) என்றாற்போல. இதனால், `மெய்யடியார்கள் நீ பேரின்பப் பொருளாதலை உணர்ந்து உன்னை, `தேனே அமுதே கரும்பின் தெளிவே, என்று இன்புற்றுப் புகழ, அதனைக் கண்டு யானும் அவ்வாறே புகழ்கின்றேன்` எனக் குறித்தவாறாம். `மிலைத்து ஆரா` என இயையும். மிலைத்து - மிலைத்தலால். ஆரா - பொருந்தாத; ஏற்புடையேனாகாத. வருகின்ற திருப்பாட்டு, `அழுகேன்` எனத் தொடங்குதலால், இப்பாட்டின் இறுதிச் சொல்லை, `எழுகேன்` என ஓதுதல் பாடமாகாமையறிக. ``மிலைத் திங்கு`` என்ற பாடத்தை, மிலைத்தாங்கு` என ஓதி, அதனை, அன்பு வேண்டி அழு தற்கு வந்த உவமையாக்கி உரைப்பாரும் உளர். ``மயல் கொண்டு`` என்றதற்கு, ``ஆசைப்பட்டு`` எனப் பொருள் உரைப்பாரும் உளர். மோனை கருதி, `போரா உலகம்` எனப் பாடம் ஓதி, `போதா` என்பது, ``போரா`` என மருவிற்று எனக் கொள்ளுதலும் உண்டு.

பண் :

பாடல் எண் : 88

அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய்
அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார்
கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந்
தொடராதே
பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப்
பணிகேனே.

பொழிப்புரை :

உன்னிடத்து மெய்யன்பு உடையவராய் ஒளி பொருந்திய பொன் போன்ற உன் திருவடிகளைக் கண்டு தீயில் இட்ட மெழுகை ஒத்தவராய் உன் அன்பர்கள் தொழுது உன்னைப் பின் பற்றினர். அவர்களைப் பின்பற்றாமல் நான் புன்மைக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன். எம்முறையைக் கையாண்டு நான் உன்னை வழுத்துவது என்று எனக்கு விளங்கவில்லை.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

`அழல்சேர்ந்த மெழுகே அன்னாராகிய தொடர்ந்தார்` என்க. `மெழுகே அன்னார் தொடர்ந்தார்; அவரோடும்` என ஓதற் பாலதனை இங்ஙனம் சுருங்க ஓதினார். பழுது - குற்றம். `பிறந்தேன்` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. என்கொண்டு - என்ன முறைமையைக் கொண்டு. ``பணிகேன்`` என்றது, `பணிந்து இரக்கேன்` என்னும் பொருளதாய் நின்றது. இரத்தல், பேரா உலகத்தையாம். அன்பாம் மனத்தோடு அழுதல் உண்மையே; ஆயினும், உன்னைத் தொடர்ந்தாரோடு கூடி உன்னைத் தொடராது நின்ற யான் இப்பொழுது என்ன முறைமைபற்றி என்னை உன்பால் அழைத்துக் கொள்ளும்படி உன்னை வேண்டுவேன்` என்றவாறு. ``பிறந்தேன்,`` வினையாலணையும் பெயர்.

பண் :

பாடல் எண் : 89

பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய
அடியார்க்குன்
அணியார் பாதங் கொடுத்தி அதுவும்
அரிதென்றால்
திணியார் மூங்கி லனையேன் வினையைப்
பொடியாக்கித்
தணியார் பாதம் வந்தொல்லை தாராய்
பொய்தீர்மெய்யானே. 

பொழிப்புரை :

இறைவனே! அடியவர்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி உன் திருவடியைத் தந்தருள்வது அருமையானால், மனக் கோட்டத்தை உடையவனாகிய என் வினைகளை நீறாக்கி உன் திருவடியை எனக்குத் தந்தருள்வது அருமையே. ஆயினும் எனக்கு உன்னை அன்றி வேறு புகலிடம் இல்லாமையால் என்னைத் திருத்தி ஆட்கொண்டு உன் திருவடியைத் தந்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

``பணிவார்`` என்றது முற்று. ``பழைய அடியார்`` எனப் பின்னர் வருகின்றமையின் வாளா, ``பணிவார்`` என்றார். எனவே, `பழைய அடியார் உன்னையே பணிவார்; அவர்க்குப் பிணி தீர்த்தருளி உன்பாதங் கொடுத்தி` என உரைத்தல் உரையாயிற்று. புனல் காலே உண்டியாக, கானின்று வற்றியும் புற்றெழுந்து செய்யும் தவங்களினும் இறைவனை வணங்குதல் எளிதிற் செயற்பாலதாகலின், ``அதுவும் அரிதென்றால்`` என்றார். ``யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை`` (தி.10 திருமந்திரம்-252) என்று அருளியதும் காண்க.
``வினையைப் பொடியாக்கி`` என்றதனால், `அதனையும் எனக்கு அரிதாகச் செய்தது என்வினை என்றால், அவ்வினையை முதற்கண் நீக்கி உன்னைப் பணியச்செய்து, பின்பு வந்து உன் பாதம் தாராய்` என்பது பொருளாயிற்று. ``ஒல்லை`` என்றதனை, ``பொடியாக்கி`` என்றதற்கு முன்னே கூட்டுக. பொய்தீர் மெய்யானே - பொய்யை நீக்கியருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே.

பண் :

பாடல் எண் : 90

யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்
பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே
தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்
துறுமாறே. 

பொழிப்புரை :

இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

``யானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் சிறப்புணர்த்தி நின்றது. சிறப்பு, `உறுப்பும், பண்பும்` ஆகியவற்றிற்கு முதலாய் நிற்றல். ``நெஞ்சு`` என்றது நினைப்பினை. ``யானே பொய்`` என்றதனால், `நெஞ்சும் பொய், அன்பும் பொய்` என்றவை, வலியுறுத்தல் மாத்திரை யாய் நின்றன.
`இங்ஙனமாயின் வருந்தினால் மட்டும் உன்னைப் பெறுதல் கூடுமோ? கூடாதாகலின், அடியேன் உன்னை வந்து அடையும் வழியை அருளாய்` என்பது ஏனைய அடிகளின் பொருள். ``உருகுவது உள்ளங்கொண்டு ஒர்உருச் செய்தாங்கு எனக்கு அள்ளூறாக்கை அமைத்தனன்`` (தி.8 திருவண்ட-175-177.) ``மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து...கண்ணீரரும்பி....உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்`` (தி.8 திருச்சதகம்-1) என்றாற் போல் முன்னரும் இவ்வாறே பின்னரும் அடிகள் பல விடத்தும் அருளுதலின், அவர் இறைவன் மாட்டு உள்ளம் நெக்குருகி இடையறாது கண்ணீர் பெருக்கி நின்றமை தெளிவாதலின், அவர் அந் நிலையைப் பெறாது அதனையே அவாவி நின்றாராக வைத்து, ``பெறலாமே`` என்றதற்கு, `பெறுதல் கூடும்` என உடன்பாடாகப் பொருளுரைத்தல் பொருந்தாமையறிக.
இங்ஙனமாகவே, ``என் அன்பும் பொய்`` என்றது, மெய்விதிர்த்தல், கண்ணீரரும்புதல் முதலியவை நிகழாமை பற்றிக் கூறியதாகாது, ``முனைவன் பாதநன் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலைகீறேன்`` ``தீயில் வீழ்கிலேன் திண்வரையுருள்கிலேன்`` (தி.8 திருச்சதகம்-37,39) என்றாற் போல அருளிய நிலைபற்றியே வருந்தி அருளிச்செய்ததாதல் அறியப்படும்.
படவே, எய்தவந்திலாதார் எரியிற் பாய்ந்தமை (தி.8 கீர்த்தி-132) போல்வதொரு செயலால் இறைவன் திருவடியைப் பெறுதல் கூடு மன்றி, அதுமாட்டாது ஏங்கி அழுதலால் மட்டும் பெறுதல் கூடாது` என்பதனையே, ``அழுதால் உன்னைப் பெறலாமே`` என்று அருளினார் என்பது இனிது விளங்கும். இன்னும், `பெறுதல் கூடும்` என்பது கருத்தாயின், `ஆனாலும்` என உம்மை கொடுத்து ஓதுதல் வேண்டும் என்க.

பண் :

பாடல் எண் : 91

மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாக நோக்கியுங்
கீறி லாதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் மெய்யன்பர் முந்திவந்து உன் திருவடிக்கு அன்பு செய்து உன் மெய்ந்நிலையை அடைந்தார்கள். முடிவில்லாத பெரியோனாகிய நீ ஒளியையாகி எழுந்தருளி என்னைக் கடைக்கண் நோக்கியருளியும் மனமுருகாத நான் கடைப்பட்டேன். இது என் தீவினைப் பயனேயாம்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

முன்னைப் பகுதியில், இறைவன் பிரிவினால் உயிர் விடத் தக்க ஆற்றாமையைத் தரும் பேரன்பினை வேண்டிய அடிகள், இவ் இறுதிப் பகுதியில், அவ்வன்பின் முடிந்த பயனாகிய திருவடி கூடுதலையே வேண்டுகின்றார். இது பற்றியே இதற்கு, `ஆனந்தாதீதம்` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆனந்த அதீதம் - இன்பத்தை வேறாக உணரும் உணர்வும் அடங்கப் பெற்று, அவ்வின்பத்தில் அழுந்திநிற்கும் நிலை.
மாறுஇலாத - வற்றுதல் இல்லாத. ``வந்து முந்தி`` என்றதனை, உன் மெய்ம்மை மேவினார் என்றதற்கு முன்னர்க் கூட்டி ``உன்பால் வந்து, என்னின் முற்பட்டு` என உரைக்க; மலர்கொள் - மலர்தலைக் கொண்ட; எங்கும் நிறைந்த. `தாளிணையின்` என, நீக்கப் பொருட்கண் வந்த இன்னுருபு விரிக்க. வேறு இலாப் பதம் - வேறாதல் இல்லாத பக்குவம். பரிசு - தன்மை. மெய்ம்மை - நிலையான இன்பம்; ஆகுபெயர். `என் உடம்பு ஒளிசெய் மானுட மாம்படி நோக்கியும்` என உரைக்க. ஒளிசெய்தலை, ஞானத்தைத் தருதலாகக் கொண்டு இறை வற்கு ஆக்கின், `ஆக` என்றதனை, `ஆகி` என ஓதுதல் வேண்டும். கீறிலாத - கிழிக்க இயலாத; வலிய. `ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாம் அடங்காதவர், ஓதி உணராத பேதையாரினும் பெரும்பேதை யாராதல் போல, நீ எதிர்வந்து அருள்செய்யப்பெற்றும் உருகாத நெஞ் சத்தையுடைய நான், அவ்வாறு அருள்செய்யப்பெறாத கடையரினும் பெரிதும் கடையனாயினேன்` என்றதாம். `நான் பட்டகீழ்மை இது` எனப் பயனிலை வருவித்து முடிக்க. `இக்கீழ்மையை நீக்கி, உன் மெய்ம்மை அன்பர் பெற்ற நிலையை எனக்கும் அளித்தருள்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 92

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ணம் என்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே. 

பொழிப்புரை :

இறைவனே! நீயே எழுந்தருளி என்னை ஆட்கொண்ட பிறகு உன்னை எளிதாய் நினைத்ததே அன்றி அரிதாய் நினைத்தேனில்லை. ஆயினும் உன் மெய்யடியார் உன் உண்மை நிலையையடைய, நானொருவனுமே இந்தவுலகத்தில் தங்கியிருக்க விட்டு நீ போவது உனக்குத் தகுதியாமோ?

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மழ - மழவு; குழவி. ``என்று`` என்றதனை, `என` என்று திரித்து, உவம உருபாக்குக. ``மழக் கையிலங்கு பொற்கிண்ணம் என்றலால்`` என ஓதினாரேனும், `கையிலங்கு பொற்கிண்ணத்தை மழவு எண்ணுதல் என அல்லால்` எனப் பொருளுக்கேற்ப மாறுதல் கருத்தாதல் அறிக. `பொற்கிண்ணம் குழவி கையிற் கிடைத்ததாயின், அதனை அஃது ஏனைய சில பொருள்களோடொப்ப எளிய பொருளாகக் கருதுதல் போலவே, என்முன் வந்து என்னைப் பணிகொண்ட உன்னை நான் ஏனைய சிலரோடொப்ப எளியையாகக் கருதினேனன்றி அரியையாகக் கருதிற்றிலேன்` என இதனை விரித்துரைத்துக்கொள்க. `என் இயல்பு இதுவாயிற்று` என்பார் இறந்த காலத்தாற் கூறாது, நிகழ்காலத்தாற் கூறினார். `எளியனாகக் கருதினேன்` என்றது, அழைத்தபொழுது செல்லாமல், `பின்னர்ச் சென்று அடைவோம்` என்று பிற்பட்டு நின்றமையை என்க. `உன் மெய்ம்மை அன்பர் இவ்வாறின்மையால், உன்னை முன்பே வந்து அடைந்து விட்டார்கள்; யான் பிற்பட்டு நின்றது எனது அறியாமையாலே என்பர், ``பொய் இலங்கு எனை`` என்றும், `யான் எனது அறியாமை காரணமாகப் பிற்பட்டு நிற்பினும், என்னை வற்புறுத்தி உடன்கொண்டு செல்லாது மீளவும் முன்போலவே உலகியலில் புகும்படி விட்டுப் போவது, அறைகூவி ஆட்கொண்ட உனது அருளுக்குப் பொருத்தமாகுமோ? சொல்` என்பார், `புகுதவிட்டு நீ போவதோ பொருத்தமாவது சொலாய்` என்றும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 93

பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன்
போத என்றெனைப் புரிந்து நோக்கவும்
வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன்
மாண்டி லேன்மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை
இருத்தி னாய்முறை யோஎ னெம்பிரான்
வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே. 

பொழிப்புரை :

பொய்யனாகிய என்னை விரும்பி நோக்கவும் நோக்கின உதவியை நினைந்து நான் வருந்தி மாண்டிலேன். இறைவனே! உன் அன்பரும் நீயும் சிவபுரத்துக்கு எழுந்தருளி என்னை இவ்வுலகத்தில் இருத்துதல் உனக்கு முறையாமோ? என் தீவினைக்கு இறுதி இல்லையோ!

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``பொய்ம்மை உண்மையேன்`` என்றதன்பின், `ஆயினும்` எனவும், `வஞ்சம் உண்மையேன்` என்றதன்பின், `ஆதலின்` எனவும் நின்ற சொல்லெச்சங்களை வருவித்துரைக்க. போத - போதுக; வருக. புரிந்து - விரும்பி. வஞ்சம் - வேறோர் எண்ணம்; என்றது, உலகியற் பற்றினை. ``மாண்டிலேன்`` என்றதற்கு, ``பிரிவாற்றாமையால்` என்னும் காரணம், ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. ``மலர்க் கமலம்`` என்பது. பின் முன்னாக நின்ற ஆறாவதன் தொகை. அரத்தம் - சிவப்பு. `அருள்செய் அன்பர்`` என்றது, செயப்படு பொருள்மேல், தொக்க வினைத்தொகை. ``அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி`` எனவும், `எனை இங்கு இருத்தினாய்` ``வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே`` எனவும் போந்த சொற்கள், அடிகளது ஆற்றாமை நனிமிக விளக்குவனவாம். முறையோ - நேர்மையோ. வம்பன் - பயனில்லாதவன்.

பண் :

பாடல் எண் : 94

இல்லை நின்கழற் கன்ப தென்கணே
ஏலம் ஏலுநற் குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்
எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேயெனக் கின்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே. 

பொழிப்புரை :

இறைவனே! எனக்கு உன் திருவடிக் கண் அன்பு இல்லையாகவும், கல்லைக் குழைத்த வித்தையைக் கொண்டு என்னைத் திருத்தி உன் திருவடிக்கு அன்பனாக்கினாய். ஆதலால் உன் கருணைக்கு ஓர் எல்லை இல்லை.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``அன்பது`` என்றதில் அது, பகுதிப்பொருள் விகுதி. ஏலம் - மயிர்ச்சாந்து. ஏலும் - பொருந்தும். ``நற்குழலி`` என்றதில் நன்மை - அழகு. ஆக்கும் விச்சை - ஆக்குகின்ற வித்தை போல்வ தொரு வித்தை.
``கருணை`` என்றதில் நான்கனுருபு தொகுத்தலாயிற்று. ``நின்கருணைக்கு எல்லை இல்லை`` என மாற்றி, `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ``வல்லை`` என்றதை ``மீட்கவும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக.
மறு - குற்றம். குற்றமில்லாத வானம், சிவலோகம். `என்கணே நின்கழற்கு அன்பு இல்லையாகவும், நின் கருணைக்கு எல்லை இல்லை ஆதலின், கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டு என்னை முன்பு நின்கழற்கு அன்பனாக்கினாய்; அது போலவே, நான் இப்பொழுது ஏதுகொண்டு ஏது செய்யினும் இன்னும் எனக்கு உன்கழல்காட்டி மீட்கவும் வல்லையே` என்க. ``கொண்டு`` என்பது மூன்றாவதன் பொருள்தரும் இடைச் சொல்லாதலின், `எக் காரணத்தால் எதனைச் செய்யினும்` எனப் பொருள் கூறுக. ``வல்லையே`` என்றதில் உள்ள ஏகாரம் தேற்றம். எனவே, `இனியும் என்னை மீட்க நீ வல்லாய் என்னும் துணிவுடையேன்` என்பது பொருளாயிற்று. ``மீட்கவும்`` என்ற உம்மை, சிறப்பு.

பண் :

பாடல் எண் : 95

வான நாடரும் அறியொ ணாதநீ
மறையில் ஈறுமுன் தொடரொ ணாதநீ
ஏனை நாடருந் தெரியொ ணாதநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத் துடைய விச்சையே. 

பொழிப்புரை :

இறைவனே! தேவர்கள், மறைகள், ஏனை நாட்டவர்கள் ஆகியோர்க்கும் அரியையான நீ, அடியேனை ஆட்கொள்ளுதல் முதலாயினவற்றை நோக்கும் இடத்தில், அஃது எனக்கு இவ்வுலக சம்பந்தமான அஞ்ஞானம் அழிதற்கேயாகும்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இறைவனது அருமை தோன்ற, ``நீ`` என்றதனைப் பலமுறை கூறினார். மறையில் ஈறும் - வேதத்தில் முடிவாயுள்ள பகுதியும். உம்மை, சிறப்பு. ஏனை நாடர் - தேவருலகிற்கு மேற்பட்ட சத்தியலோகம் முதலியவற்றில் உள்ளவர். அவர், பிரமன் முதலியோர். `இனிதாய்` என்பது, விரித்தலாயிற்று.
``ஆண்டுகொண்டவா`` என்றது முதலிய நான்கிடத்தும், `ஆறு` என்பது கடைக்குறைந்து நின்றது. அவற்றிலெல்லாம் எண்ணும்மை விரித்து, அவற்றை, எஞ்சிநின்ற, வியப்பைத் தருவன` என்பதனோடு முடிக்க. ஊனை - உடம்பை. உடம்பை ஆடச் செய்த நாடகம், உலகியல். ஞானநாடகம், ஆனந்தக் கூத்து, எனவே, `முன்பு உடம்பை ஊன நாடகம் ஆடுவித்தவாறும், பின்பு உயிரை ஞானநாடகம் ஆடுவித்தவாறும்` என்றதாயிற்று. `ஊன நாடகம்` எனப் பாடம் ஓதி, ஆடுவித்தமை இரண்டிற்கும், `என்னை` என்பதனைச் செயப்படுபொருளாகக் கொள்ளுதலே சிறக்கும்.
பருகுதல் - அனுபவித்தல். வையகத்து உடைய விச்சை நைய - உலகின்கண் யான் கொண்டிருந்த பாச ஞானம் கெட. இதனை, ``ஞான நாடகம் ஆடுவித்தவா` என்றதற்கு முன்னே கூட்டுக.
`இச்சை` எனப் பிரித்தல், அந்தாதிக்கு ஒவ்வாமையறிக.

பண் :

பாடல் எண் : 96

விச்ச தின்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும்
புலைய னேனைஉன் கோயில் வாயிலிற்
பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக்
குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர்
நச்சு மாமர மாயி னுங்கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே.

பொழிப்புரை :

இறைவனே! எல்லா உலகங்களையும் வித்தில்லாமல் தோற்றுவிப்பாய். என்னை உன் கோயில் வாயில் பித்தனாக்கி, உன் அன்பரது திருப்பணிக்கும் உரியேனாகச் செய் தனை. உலகத்தார், தாம் வளர்த்தது ஆதலின் நச்சு மரமாயினும் வெட்டார்; அடியேனும் உனக்கு அத்தன்மையேன்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விச்சு - வித்து. `வித்தில்லாமலே விளைவை உண்டாக்குவாய்` என்றது, `அதுபோன்ற செயல்களைச் செய்வாய்` என்றபடி. ``விச்சின்றி நாறுசெய் வானும்`` (தி.4.ப.4.பா.2.) என்று அருளிச்செய்ததும் இவ்வாறாம்.
இறைவன் இங்ஙனம் செய்தல் என்பது, சில காரியங்களை அவற்றிற்குரிய நியத காரணம் இல்லையாகவும், பிற காரணமே காரணமாய் அமைய அவற்றை நிகழச் செய்தலாம். அது, நாவுக்கரசர்க்குக் கல்லே தெப்பமாய் அமையக் கடலைக் கடந்து கரையேறச் செய்தமை, ஞானசம்பந்தருக்கு ஆண்பனைகளே பெண் பனைகளாய்க் காய்தரச் செய்தமை, சுந்தரருக்குச் செங்கல்லே பொன் னாகிப் பயன்படச் செய்தமை போல்வனவாம்.
இவைபோலும் செயல்கள் பிறவும் கேட்கப்படுதலின், அவை பற்றியே அடிகள் இவ்வாறு அருளிச்செய்தாராவர். எனினும், தமக்கு இறைவனைக் காணும் முயற்சியின்றியும் அவன் தானே வந்து தம்மைத் தலையளித்தாட் கொண்டமையைக் குறிப்பிடுதலே கருத்தென்க. இனி இப்பகுதி, உயிர்களின் முதற்பிறப்பிற்கு வினையாகிய காரணம் இல்லையாகவும், அவைகட்கு முதற்கண் நுண்ணுடம்பைக் கொடுத்துப் பின் அதன்வழித் தோன்றிய வினைக்கீடான பிறவியைத் தருதலைக் குறிப்பதாகச் சிவஞானபோத மாபாடியத்துள் உரைக்கப்பட்ட வாற்றையும் அறிக. வைச்சு - வைத்து. வைப்பது உயிர்களிடம் என்க. கோயில், திருப்பெருந்துறையில் உள்ளது. ``திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி`` (தி.8. திருப்பள்ளி. 8) எனப் பின்னரும் அருளிச் செய்வர்.
பிச்சன் - பித்தன். உரியன் - அடியவன். ``தாம்`` என்றது மக்களை என்பது, பின்னர் வருவனவற்றால் விளங்கிக் கிடந்தது. ஓர்- ஒரு. இது சிறப்பின்மை குறித்தது. மா - பெரிய. `மா நச்சு மரம்` என மாற்றிக்கொள்க. `மிக்க நஞ்சாய மரம்` என்றது, காய் கனி முதலிய வற்றை உண்டாரை அப்பொழுதே கொல்லும் எட்டி மரம் போலும் மரங்களை. `அம்மரங்களால் தீங்கு உண்டாதல் அறிந்திருந்தாலும், வளர்த்தவர் வெட்டமாட்டார்கள்` என்றபடி. ``வளர்த்தது`` என்றதற்கு, `அறியாது வளர்த்தது` எனவும், ``ஆயினும்`` என்றதற்கு, `ஆதல்` அறியப்படினும்` எனவும் உரைப்பினும் அமையும். ``நானும் அங்ஙனே`` என்றது, `நானும் உனக்கு அத்தன்மையனே` என்றபடி. உவமைக்கண், வளர்த்தது, கொல்லுதல் என்றவற்றிற்கு ஏற்பப் பொருட்கண் கருதப்பட்டன, கோயில் வாயிலில் பிச்சனாக்கி அன்பருக்கு உரியனாக்கினமையையும், பின் கைவிடுதலையுமாம்.

பண் :

பாடல் எண் : 97

உடைய நாதனே போற்றி நின்னலால்
பற்று மற்றெனக் காவ தொன்றினி
உடைய னோபணி போற்றி உம்பரார்
தம்ப ராபரா போற்றி யாரினுங்
கடைய னாயினேன் போற்றி என்பெருங்
கருணை யாளனே போற்றி என்னைநின்
அடிய னாக்கினாய் போற்றி ஆதியும்
அந்த மாயினாய் போற்றி அப்பனே. 

பொழிப்புரை :

நீ என்னை உடையவன் ஆதலால் எனக்கு உன்னை அல்லது வேறு புகலிடம் ஏதேனும் உளதோ? பகர்ந்தருள் வாயாக. தேவர்களுக்கெல்லாம். மேலாகிய மேலோனே! உன்னை வணங்குகிறேன். இனி யானோ எவர்க்கும் கீழ்ப்பட்டவன். அத்தகைய என்னை உன் கருணையினால் உனக்கு அடிமை யாக்கினாய். எனக்குத் தொடக்கமும் முடிவும் நீயே. அத்தகைய அப்பனே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆவது - நன்மை தருவது. `எனக்கு ஆவது பற்று மற்று இனி ஒன்று உடையனோ` என்க.
பணி - சொல்லு. உம்பரார் - தேவர். பராபரன் - முன்னும் பின்னும் உள்ளவன். இத் திருப்பாட்டில் வணக்கமே கூறினார்.

பண் :

பாடல் எண் : 98

அப்ப னேயெனக் கமுத னேஆ
னந்த னேஅகம் நெகஅள் ளூறுதேன்
ஒப்ப னேஉனக் குரிய அன்பரில்
உரிய னாய்உனைப் பருக நின்றதோர்
துப்ப னேசுடர் முடிய னேதுணை
யாள னேதொழும் பாள ரெய்ப்பினில்
வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய்
நைய வையகத் தெங்கள் மன்னனே. 

பொழிப்புரை :

எனக்குத் தந்தையே! அமிர்தமே! ஆனந்தமே! உள்ளம் உருகுதற்கும் வாய் ஊறுதற்கும் ஏதுவாயுள்ள தேன் போன்றவனே! உனக்கு உரிமையுடைய மெய்யன்பரைப் போல நானும் உரிமையாளனாகி உன்னைப் புசித்து உயிர் வாழ்வதற்கான ஒப்பற்ற உணவே! ஒளி விளங்கும் திருமுடியை உடையவனே! மாறாத் துணையாய் இருப்பவனே! தொண்டர் தளர்வுற்று இருக்கும்பொழுது உதவும் செல்வமே! இப்பொய் உலக வாழ்க்கையில் நான் துன்புற்று இருக்கும்படி வைப்பது முறையாகுமோ? எங்கள் அரசே! கூறுவாயாக.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அள் ஊறு - உள்ளே சுரக்கின்ற. அன்பரில் - அன்பரைப்போல. துப்பன் - பற்றுக்கோடானவன். `என்னை வையகத்து நைய வைப்பதோ` என மாற்றி, `வைப்பதோ பொருத்தம்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 99

மன்ன எம்பிரான் வருக என்னெனை
மாலும் நான்முகத் தொருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என்னெனை
முழுதும் யாவையும் இறுதி யுற்றநாள்
பின்ன எம்பிரான் வருக என்னெனைப்
பெய்க ழற்கண்அன் பாயென் நாவினாற்
பன்ன எம்பிரான் வருக என்னெனைப்
பாவ நாசநின் சீர்கள் பாடவே. 

பொழிப்புரை :

என்றும் நிலை பேறுடைய எங்கள் தலைவனே! அடியேனை வருக என்று கட்டளை இடுவாயாக. திருமாலுக்கும் நான்முகனுக்கும் மூலப் பொருளே! என்னை வருக என்று ஏற்றுக் கொள்வாயாக. சம்கார காலத்தில், எல்லாம் ஒடுங்கி இருக்கும் போது எஞ்சித்தன்மயமாயிருக்கும் எம் தலைவ, என்னை வருக என்று அழைப்பாயாக. உன்னை வந்து அடைந்தவர்களது பாவத்தைப் போக்குபவனே! நான் உன்னைப் புகழவும் உனது சிறப்பினைப் பாடவும் என்னை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`மன்ன, முன்ன, பின்ன, பன்ன` எனவும், ``எம்பிரான்`` எனவும் வந்தன விளிகள். பன்னன் - துதிக்கப்பட்டவன். இத் திருப் பாட்டில், `நின் சீர்கள் பாட என்னை வருக என்று அழை` என்பதே அருளிச் செய்தார். பாடுதல், சிவலோகத்தில் என்க.

பண் :

பாடல் எண் : 100

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.

பொழிப்புரை :

இறைவனே! நான் உன்னைப் பாடுதல் வேண்டும். பாடிப்பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும். நான் அம்பலத்தாடும் நின் மலர்க்கழல் அடையும்படி செய்தல் வேண்டும். நீ இந்த உடம்பை ஒழித்து வீடு தந்தருளல் வேண்டும். உனக்கு வணக்கம் செய்கிறேன்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
`நான் நின்னையே பாட வேண்டும்` எனக் கூட்டுக. பிறவும் அங்ஙனம் கூட்டற்பாலன. போது - மலர். புழுக்கூடு - புழுக்களுக்கு உறைவிடமான இடம்; உடம்பு. `புழுக்கூட்டினை நீக்கு` என்றது, `உன்பால் சேர்த்துக்கொள்` என்னும் பொருளதாதலின், ``எனை`` என்ற இரண்டாவதற்கு முடிபாயிற்று. வீடவேண்டும் - நீங்க வேண்டும். பொய் - உலகப் பற்று. மெய்யர் மெய்யன் - மெய்யன்பர்களுக்கு மெய்ப்பொருளாய் உள்ளவன். இத் திருப்பாட்டில் தம் விருப்பங்கள் பலவற்றையும் பன்முறை வணக்கங்கூறி விண்ணப்பித்துக் கொண்டார். முதல் திருப்பாட்டின் முதற் சொல்லாகிய, `மெய்` என்பதனாலே இவ்விறுதித் திருப்பாட்டு முடிந் திருத்தல் அறியத்தக்கது.
சிற்பி