திருவாசகம்-போற்றித் திருவகவல்


பண் :

பாடல் எண் : 1

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
அடிமுடி யறியும் ஆதர வதனிற் 5
கடுமுரண் ஏன மாகி முன்கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் 20
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து
எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35
பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம் பாய பலதுறைப் பிழைத்தும்
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45
ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
விரத மேபர மாகவே தியரும் 50
சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னும்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து 55
உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத் 60
தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற்
பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றிச் 70
சதுரிழந் தறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
தருபரத் தொருவன் அவனியில் வந்து 75
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச் 85
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95
மின்னா ருருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரைசேர் சரண விகிர்தா போற்றி 105
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி 115
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி 125
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானோர் நோக்கி மணாளா போற்றி 135
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி
இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி 150
ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155
குற்றா லத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165
ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி 175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி
கலையா ரரிகே சரியாய் போற்றி 190
திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி 195
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200
தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி
மந்தர மாமலை மேயாய் போற்றி 205
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210
படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 214
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220
புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்ற போற்றி சயசய போற்றி. 225

பொழிப்புரை :

பிரமன் முதலாகத் தேவர்கள் யாவரும் தொழுது நிற்க, இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்து, நான்கு திக்கிலுள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் மகிழும்படி வணங்குகின்ற, ஒளி பொருந்திய திருமுடியையுடைய அழகிய நெடுமால், அந்நாளில் திருவடியின் முடிவையறிய வேண்டுமென்ற விருப்பத்தால், வேகமும் வலிமையுமுடைய பன்றியாகி முன்வந்து ஏழுலகங்களும் ஊடுருவும்படி தோண்டிச் சென்று பின்னே இளைத்து `ஊழியை நடத்தும் முதல்வனே வெல்க வெல்க` என்று துதித்தும் காணப் பெறாத தாமரை மலர் போலும் திருவடிகள், துதித்தற்கு எளிதாகி,நெடிய கடலாற் சூழப்பட்ட உலகத்தில்,
யானை முதலாக, எறும்பு இறுதியாகிய குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் அதனை அழித்தற்குச் செய்யும் குறை வில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுடைய கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும், இரண்டாம் மாதத்தில் விளைக்கின்ற விளைவினால் உருக்கெடுவதினின்று தப்பியும் மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும், பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இருத்தலினின்று தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்றும் தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும், எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்றும் தப்பியும், ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும், குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்தில், தாய்படுகின்றதனோடு தான்படுகின்ற, கடல் போன்ற துயரத்தினின்று தப்பியும், பூமியிற் பிறந்த பின்பு, வளர்ச்சியடையும் வருடங்கள் தோறும் தாய் தந்தையர் முதலியோர் நெருக்கியும், அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல துன்பங்களில் தப்பியும் காலைப் பொழுதில் மலத்தாலும், உச்சிப் பொழுதில் பசியாலும், இராப்பொழுதில் தூக்கத்தாலும், ஊர்ப்பயணங்களாலும் உண்டா கின்ற துன்பங்களினின்று தப்பியும், கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும், வெண்மையாகிய பற்களையும், கார்காலத்து மயில் போலப் பொருந்திய. சாயலையும், நெருக்கமாகி உள்ளே களிப்புக் கொண்டு, கச்சு அறும்படி நிமிர்ந்து ஒளி பெற்று முன்னே பருத்து, இடை இளைத்து வருந்தும்படி எழுந்து பக்கங்களில் பரவி ஈர்க்குக் குச்சியும் இடையே நுழையப் பெறாத இளங்கொங்கைகளையும் உடைய மாதருடைய கூர்மையாகிய கண்களின் கொள்ளைக்குத் தப்பியும், மயக்கம் கொண்ட உலகினரது பெரிய மத்தக்களிறு என்று சொல்லத் தக்க ஆசைக்குத் தப்பியும், கல்விஎன்கின்ற பலவாகிய கடலுக்குத் தப்பியும், செல்வமென்கின்ற துன்பத்தினின்று தப்பியும், வறுமை என்கின்ற பழமையாகிய விடத்தினின்று தப்பியும், சிறிய எல்லைகளையுடைய பல வகைப்பட்ட முயற்சிகளில் தப்பியும்,
தெய்வம் உண்டு என்பதாகிய ஒரு நினைப்பு உண்டாகி, வெறுப்பில்லாததாகிய ஒரு பொருளை நாடுதலும்,ஆறுகோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்யவல்ல சடவுலக ஆற்றல்கள், வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும், அயலா ராயினோரும் கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் பேசி நாவில் தழும்பேறப் பெற்றனர். உறவினர் என்கின்ற பசுக்கூட்டங்கள் பின் பற்றி அழைத்துப் பதறிப் பெருகவும், மறையோரும், விரதத்தையே மேன்மையான சாதனம் என்று தம் கொள்கை உண்மையாகும் படி நூற்பிரமாணங்களைக் காட்டினார்களாகவும், சமயவாதிகள் எல்லாம் தம்தம் மதங்களே ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி ஆர வாரித்துப் பூசலிட்டார்களாகவும், உறுதியான மாயாவாதம் என்கிற பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும், உலோகாயத மதம் என்கிற, ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது கலை வேறுபாடு களையுடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து அதிலுள்ள பெருஞ் சூழ்ச்சிகள் எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும்,
முற்கூறிய அவற்றால் வழுவாது தாம் பிடித்த கொள்கையை விட்டு விடாமல், நெருப்பினிற் பட்ட மெழுகுபோல வணங்கி மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து ஆடுதல் செய்தும், அலறுதல் செய்தும், பாடுதல் செய்தும், வழிபட்டும், குறடும் மூடனும் தாம் பிடித்ததை விடா என்கிற முறைமையேயாகி நல்ல, இடையறாத கடவுள் பத்தியில் பச்சை மரத்தில் அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பது போல உறைத்து நின்று உருக்கம் மிகுந்து கடல் அலைபோல அலைவுற்று மனம் வாடி, அதற்கு ஏற்ப உடல் அசைவுற்று உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க வெட்கமென்பது தவிர்ந்து, நாட்டில் உள்ளவர் கூறும் குறைச்சொற்களை அணியாக ஏற்று, மனம் கோணுதல் இல்லாமல், தமது திறமை ஒழிந்து, சிவஞானம் என்னும் உணர்வினால் அடையப் பெறுகின்ற மேலான வியப்பாகக் கருதி கன்றினை உடைய பசுவின் மனம் போல அலறியும் நடுங்கியும், வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், அரிய மேலான ஒருவன் பூமியில் வந்து குருமூர்த்தியாகி அருள் செய்த பெருமையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது திருவடிகள் இரண்டையும் உருவைவிட்டு அகலாத நிழலைப் போல வெறுக்காமல், முன்பின்னும் நீங்காது நின்று அந்தத் திசை நோக்கி நினைந்து எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கிப் பத்தியென்னும் நதியானது கரை புரண்டு ஒட, நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, `நாதனே!` என்று கூவி அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க, கைம்மலர் குவித்து நெஞ்சத் தாமரை விரிய, கண்கள் களிப்பு மிக நுண்ணிய துளிகள் அரும்பத் தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம்.
மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம். பொன்மயமா யிருக்கிற மதுரைக்கு அரசனே! வணக்கம். கூடற்பதியில் விளங்கு கின்ற நன்னிற மாணிக்கமே! வணக்கம். தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம். கெடாத நான்கு வேதங்களுக்கும் முதல்வனே! வணக்கம். இடபம் பொருந்திய வெற்றிக் கொடியை உடைய சிவபிரானே! வணக்கம். மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறுவேறு உருவங்களை உடையவனே! வணக்கம். கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே! வணக்கம். பொன்மலை போன்றவனே! காத்தருள்வாய். வணக்கம். ஐயோ! எனக்கருள் செய்வாய். நினக்கு வணக்கங்கள். எல்லா உலகங்களையும் படைப் பவனே! காப்பவனே! ஒடுக்குபவனே! வணக்கம். பிறவித்துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே! வணக்கம். ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே! வணக்கம். ஒளியை வீசுகின்ற படிகத்தின் திரட்சியே! வணக்கம்.
தலைவனே! வணக்கம். சாவாமையைத் தரும் மருந்தான வனே! வணக்கம். நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே! வணக்கம். வேதத்தை உடையவனே! வணக்கம். குற்ற மற்றவனே! வணக்கம். முதல்வனே! வணக்கம். அறிவாய் இருப் பவனே! வணக்கம், வீட்டு நெறியானவனே! வணக்கம். கனியின் சுவை போன்றவனே! வணக்கம். கங்கையாறு தங்கிய சிவந்த சடையை யுடைய நம்பனே! வணக்கம். எல்லாப் பொருள்களையும் உடைய வனே! வணக்கம். உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே! வணக்கம். கடையேனுடைய அடிமையைக் கடைக்கணித்து ஏற்றுக் கொண்டவனே! வணக்கம். பெரியோனே! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். சைவனே! வணக்கம், தலைவனே! வணக்கம், அனற் பிழம்பாகிய இலிங்கவடிவினனே! வணக்கம். எண்குணங்கள் உடையவனே! வணக்கம். நல்வழியானவனே! வணக்கம். உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே! வணக்கம். தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே! வணக்கம். மற்றையோர்க்கு எளிமையான இறைவனே! வணக்கம். இருபத்தொரு தலை முறையில் வருகின்ற சுற்றத்தார் வலிய நரகத்தில் ஆழ்ந்து போகாமல் அருள் செய்கின்ற அரசனே! வணக்கம். தோழனே! வணக்கம். துணைபுரிபவனே! வணக்கம். என்னுடைய வாழ்வானவனே! வணக்கம். என் நிதியானவனே! வணக்கம். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். அப்பனே! வணக்கம். பாசத்தை அழிப்பவனே! வணக்கம். சொல்லையும் அறிவையும் கடந்த ஒப்பற்றவனே! வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே! வணக்கம்.
அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே! வணக்கம். கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே! வணக்கம். நிலைபெற்ற பெருங்கருணை மலையே! வணக்கம். என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை என் தலையில் வைத்த வீரனே! வணக்கம். வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம். அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் கடந்தவனே! வணக்கம். எல்லாம் கடந்த முதல்வனே! வணக்கம். மானை நிகர்த்த நோக்கத்தையுடைய உமா தேவியின் மணவாளனே! வணக்கம். விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குத் தாய் போன்றவனே! வணக்கம். பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே! வணக்கம். நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்து இருப்பவனே! வணக்கம். நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே! வணக்கம். காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து இருப்பவனே! வணக்கம். ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியவனே! வணக்கம். கனிபவருடைய மனத்தில் அமுதமாய் இருப்பவனே! வணக்கம். கனவிலும் தேவர்கட்கு அருமையானவனே! வணக்கம். நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே! வணக்கம்.
திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே! வணக்கம். சடையில் கங்கையைத் தாங்கியவனே! வணக்கம். திருவாரூரில் தங்கியருளிய தலைவனே! வணக்கம். சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே! வணக்கம். அண்ணாமலையிலுள்ள எம்மேலோனே! வணக்கம். கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே! வணக்கம். திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே! வணக்கம். அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே! வணக்கம். திருப்பராய்த் துறையில் பொருந்திய மேலோனே! வணக்கம். திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே! வணக்கம். இவ்விடத்து உன்னையன்றி மற்றொருபற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின் வணக்கம். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே! வணக்கம். திருப் பெருந்துறையில் பொருந்திய இறைவனே! வணக்கம். திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே! வணக்கம். வனப்பு நிறைந்த திருப்பழனத்தில் உள்ள அழகனே! வணக்கம். திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே! வணக்கம்.
உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே! வணக்கம். கல்லால மரத்தின் கீழ் இயக்கியர் அறுவருக்கும், வெள்ளானைக்கும் அருள் செய்த அரசனே! வணக்கம். மற்றும்பல தலங்கள் உள்ள தென்னாடுடைய சிவபிரானே! வணக்கம். வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே! வணக்கம். பன்றிக்குட்டிகளுக்குக் கருணை காட்டி அருளியவனே! வணக்கம். பெரிய கயிலாயமலையில் இருப்பவனே! வணக்கம். அம்மானே! அருள் செய்ய வேண்டும். அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே! வணக்கம். அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சி அடைந்தேன்; வணக்கம்.
நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், வணக்கம். அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும்; வணக்கம். நஞ்சையே அமுதமாக விரும்பினவனே! வணக்கம், அப்பனே! வணக்கம், குருவே! வணக்கம். என்றும் உள்ளவனே! வணக்கம். குற்றம் அற்றவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே! வணக்கம். பெரியவனே! வணக்கம். வள்ளலே! வணக்கம், அரியவனே! வணக்கம். பாசம் இல்லாதவனே! வணக்கம். அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே! வணக்கம். முறையோ பொறுக்க மாட்டேன். முதல்வனே! வணக்கம். சுற்றமானவனே! வணக்கம். உயிர்க்கு உயிராய் இருப்பவனே! வணக்கம். சிறந்த பொருளான வனே! வணக்கம். மங்கலப் பொருளானவனே! வணக்கம். ஆற்ற லுடையவனே! வணக்கம். அழகுடையவனே! வணக்கம். செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களை உடைய உமாதேவி பாகனே! வணக்கம். நாயினேன் வருத்த முற்றேன். நின் அடியவன் நினக்கு வணக்கம். விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே! வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே! வணக்கம். குவைப்பதி என்னும் ஊரிலே மகிழ்ந்து இருந்த இறைவனே! வணக்கம். மலைநாட்டை உடைய மன்னனே! வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரி யென்னும் ஊரினை உடையாய்! வணக்கம். திருக்கழுக்குன்றிலுள்ள செல்வனே! வணக்கம். கயிலை மலையில் வீற்றிருக்கும், திருப்பூவணத் திலுள்ள பெருமானே! வணக்கம். அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே! வணக்கம். என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே! வணக்கம்.
சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே! வணக்கம். அறிதற்கு அருமையாகிய தெளிவே! வணக்கம். துளைக்கப் படாத தூய முகத்தின் சோதியே! வணக்கம். அடிமையானவர்க்கு அன்பனே! வணக்கம். தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். ஆயிரம் திருப்பெயர்களை உடைய பெருமானே! வணக்கம். நீண்ட தாளினையுடைய அறுகம்புல் கட்டிய மாலை அணிந் தவனே! வணக்கம். பேரொளி வடிவாகிய கூத்தப் பெருமானே! வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே! வணக்கம். நினைத்தற்கரிய சிவமே! வணக்கம். மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே! வணக்கம். எங்களை உய்யும்படி ஆட்கொள்வோனே! வணக்கம். புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே! வணக்கம். அசையாநின்ற கடலின் மேல் நடந்தவனே! வணக்கம். கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே! வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே! வணக்கம். நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்ற முடையவனே! வணக்கம். உலகத்திற்கு எல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே! வணக்கம். நாகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கி அருளியவனே! வணக்கம். எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே! வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே! வணக்கம்.
செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே! வணக்கம். வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே! வணக்கம். தவறு யாது? பொருத்தம் யாது? என்று அறியாத நாயினேன் குழைந்து சொன்ன சொல் மாலையைக் கொண்டருள வேண்டும்; வணக்கம். மூன்றுபுரங்களை எரித்த பழையோனே! வணக்கம். மேலான ஒளியை உடைய மேலோனே! வணக்கம். பாம்பை அணிந்த பெரியோனே! வணக்கம். பழமையானவனே! எல்லாவற்றிற்கும் மூல காரணனே! வணக்கம். வணக்கம். வெற்றியுண்டாக வணக்கம்! வணக்கம்!.

குறிப்புரை :

போற்றித் திருஅகவல் - `போற்றி` என்னும் சொல்லையுடைய திரு அகவல். `போற்றுதலை உடைய` எனப் பொருள் மேல் வைத்துரைப்பின், அஃது ஏனைய பகுதிகட்கும் பிறவற்றிற்கும் பொதுவாதல் அறிக. இத் திருப்பாட்டில் இறைவனை அடிகள் பலபெயர்க் கோவையாற் போற்றுகின்றார்.
.
இதற்கு, `சகத்தின் உற்பத்தி` என முன்னோர் உரைத்த குறிப்பு, முதற் போற்றி வரையில் உள்ள பகுதி பற்றியே கூறியதாம். அங்ஙனம் கூறும் வழியும், `உலகம்` எனப் பொருள்தரும், `சகம்` என்பது, மக்களுலகையே குறித்துக் கூறியதாம்.
.
1-10. இதனுள் முதல் மூன்று அடிகளில் எண்ணலங்காரம் வந்தது, திருமால் காத்தற் கடவுளாதலின், போகத்தைத் தரும் கடவுளாவன். அதனால், ஐம்புலன்களும் நிரம்பக் கிடைத்தற் பொருட்டுப் போற்றப்படுவனாயினன். ஆகவே, இங்கு ``முனிவர்`` என்றது, சுவர்க்க இன்பத்தை வேண்டித் தவம் செய்வோரையாயிற்று. மலர - நிரம்ப உளவாதற் பொருட்டு. கதிர்முடி - மணிமுடி. கடவுளரிற் சிறந்தமையின், மாலை, `திருமால்` என்ப. அவன் கடவுளரிற் சிறந்தோனாதலை,
``தேவில் திருமால் எனச் சிறந்த``
என்னும் திருவள்ளுவ மாலையானும் (36) அறிக. இதில் `தே` என்பது அஃறிணைச் சொல்லாய், பன்மைமேல் நின்றது. `புருடோத்தமன்` என்றலும் இதுபற்றி. நிலங்கடந்த (உலகத்தை அளந்த) அண்ணல் என்பார், ``கதிர்முடி நெடுமால்`` என்று அருளினார். பிரமன், மால் இருவரும் சிவசோதியினது அடி, முடி, இரண்டையுங்காணவே புகுந்தனராதலின்,``அடி முடி அறியும் ஆதரவு`` என்றார். ஆதரவு - விருப்பம். அது, பகுதிப் பொருள் விகுதி. இன், ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு.
கடுமுரண் - மிக்க வலிமை. ஏனம் - பன்றி. முன் கலந்து - நிலத்தைச் சார்ந்து. ``முன்`` என்றது ஆகுபெயராய், முன்னே காணப்படும் நிலத்தைக் குறித்தது. ஆகாயம், அண்ணாந்து நோக்கிய வழியே காணப்படுமாதலின், அது முன்னர்க் காணப்படுவதன்றா யிற்று, ஏழ்தலம், கீழ் உலகம் ஏழு; அவை `அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம்` என்பன. உருவுதல் - கடந்து போதல். எய்த்தது, பிரகிருதியுடம்பு உடைமையின், பாதலத்திற்குக் கீழ்ச் செல்ல இயலாமையால் என்க. எய்த்தல் - இளைத்தல் ``ஊழி முதல்வன்`` என்றது, `காலத்தை நடத்துபவன்` என்றவாறு. எல்லாப் பொருளும் காலத்திற்கு உட்பட்டு நிற்றலின், `காலத்திற்கு முதல்வன்` என்றது, `எல்லாப் பொருட்கும் முதல்வன்` என்றவாறாம்.
சயசய - நீ வெல்க! வெல்க! வழுத்துதல் - துதித்தல். ``அடி இணைகள்`` என்றதனை, `இணை அடிகள்` என மாற்றிக்கொள்க. இணை அடிகள் சிவபிரானுடையன என்பது, திருமால் தேடிக் காணாத வரலாறு கூறியவதனால் பெறப் பட்டது.
``எளிது`` என்ற ஒருமை அப்பண்பின் மேல் நின்று ஆகு பெயராயிற்று. ``ஆய்`` என்ற வினையெச்சம் காரணப் பொருட் டாய்,`தாம் பிடித்தது சலியா`` (அடி.59) என்பது முதலியவற்றில் வரும் `சலியா` முதலிய வினைகளோடு இயைந்து நின்றது. வார் - நீண்ட.
.
11-12. இது முதலாகவரும் நாற்பத்தொன்பது அடிகளால் உயிர்கட்கு இறையுணர்வு உண்டாவதன் அருமையை விரித்தோதி யருளுகின்றார்.
யானையினும் பெரிய பிறவியும், எறும்பினும் சிறிய
பிறவியும் உளவாயினும் பெருமை சிறுமைகளின் எல்லைக்கு அவற்றைக்கூறும் வழக்குப் பற்றி அங்ஙனமே ஓதியருளினார். ஊனம் - குறைவு. `குறைவில்லாத` என்றது, `பலவாகிய` என்பதனைக் குறித்தது.
யோனி - பிறப்பின் வகைகள். இவ் வடசொல் முதற்கண் இகரம் பெற்று வந்தது. ஏழுவகைப் பிறப்பிலும் உள்ள யோனி பேதம் எண்பத்து நான்கு நூறாயிரம் என்பதை,
அண்டசம் சுவேத சங்கள்
உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நால்எண் பத்து
நான்குநூ றாயி ரத்தால்
உண்டுபல் யோனி எல்லாம்
ஒழித்துமா னுடத்து தித்தல்
கண்டிடிற் கடலைக் கையால்
நீந்தினன் காரி யங்காண்.
என்னும் சிவஞான சித்தியிலும் (சூ, 2. 89),
தோற்றியிடும் அண்டங்கள் சுவேதசங்கள் பாரில் துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானுடர்ஒன் பதுமா
ஏற்றிஒரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
என்னும் சிவப்பிரகாசத்திலும் (47) காண்க. எண்பத்து நான்கிற்குச் சிவப்பிரகாசத்துட் கூறப்பட்ட வகையை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்ப்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் சீர்த் தாவரம்நா லைந்து.
என (குறள்.62 - பரிமேலழகர் உரை)ச் சிறிது வேறுபடவும் கூறுவர் என்பது தோன்றவே சிவப்பிரகாசத்துள் `ஒரு தொகையதனில் இயம்புவர்`` என்று அருளினார் போலும்!
``யோனியினுள்`` என்றதன்பின், `செலுத்தும்` என்பது தொகுத்தலாய் நின்றது. `வினையினின்றும் பிழைத்தும்` என்க. பிழைத்தல் - தப்புதல். `` பிழைத்தும்`` என வரும் உம்மைகள் யாவும், வினைக்கண் வந்த எண்ணிடைச் சொற்கள். உயிர்கட்கு இறையுணர்வு உண்டாதற்கு உளவாகும் இடையூறுகள் பலவற்றையும் இங்கு முறைமைப்பட வைத்து அருளிச் செய்கின்றாராதலின், ``பிழைத்தும்`` என வருவனவற்றின் பின்னெல்லாம், `அதன்பின்` என்பது வருவித்து அம் முறைமை தோன்ற உரைக்க. ``பிழைத்து`` என வருவன பலவும், ``உண்டாகி`` (அடி.42) என்பதனோடே முடியும்.
.
13-14. உயிர்கள் நிலவுலகில் கருப்பையினுள் தோன்றும் பிறப்பிற்புகுங்கால், முதற்கண் தான் நின்ற நுண்ணுடம்போடு உணவு வழியாக ஆண் உடம்பிற் புகுந்து தங்கி, பின் அதனது வெண்ணீர் வழியாகப் பெண்ணினது வயிற்றில் உள்ள கருப்பையினுட் புகுந்து புல் நுனியில் நிற்கும் பனியினது சிறு திவலையினும் சிறிதாகிய நுண்டுளியளவில் கருவாகி நின்று,பின் சிறிது சிறிதாக வளர்ந்து நிரம்பும் பருவுடம்புடனே பிறக்கும். பெண்ணினது வயிற்றில் நுண்டுளியளவில் நின்று வளர்ந்து பிறத்தற்கு இடையே அதற்கு உண்டாகும் அழிவு நிலைகள் எத்துணையோ உளவாம். மக்களாய்ப் பிறக்கும் உயிர்களும், அத்துணை அழிவுகட்கும் தப்பியே பிறத்தல் வேண்டும் என்பதனை இது முதற்பதின்மூன்று அடிகளில் அருளிச் செய்கின்றார்.
உதரம் - வயிறு; அஃது இங்கு அதனிடத்துள்ள கருப்பையைக் குறித்தது. ஈனம் இல் - குன்றுதல் இல்லாத; என்றது, `பலவான` என்றபடி. எனவே அவற்றின் செருவிற்குத் தப்புதலின் அருமை குறித்தவாறாயிற்று. ``கிருமி`` என்றது, அக்கருவை உண்ண விரையும் அவற்றை. அவற்றினின்றும் தப்புதல், அவ்விடத்து அக்கிருமிகளை அழித்தொழிக்கும் நற்பொருள்களாலேயாம். அப்பொருள்கள் அவ்விடத்து உளவாதல் அக்கருவிடத்து உள்ள உயிரது நல்வினை யானேயாம் ஆதலின்; `அவ்வாற்றான் அவ்வுயிர் அவற்றது செருவி னின்றும் பிழைத்தும்` என்று அருளினார்.
.
15. ஒருமதி - ஒரு திங்கள் அளவில், ஈண்டு, `திங்கள்` என்பது, `சாந்திரமானம்` எனப்படும் மதியளவாகிய இருபத்தேழுநாட் காலமே யாம்; அது, `திங்கள்` என்பதனானே இனிது பெறப்படும். தான்றி - தான்றிக் காய்; என்றது, அவ்வளவினதாகிய வடிவத்தைக் குறித்தது. `தான்றியின் கண்` என ஏழாம் உருபு விரித்து, தான்றிக்காய் அளவினதாய வடிவம் பெறும் அளவில்` என உரைக்க. ``இருமை`` என்றது, இங்கு, சிதைவுறும் தன்மையைக் குறித்தது. இம் மெல்லிய நிலையிலே தாயது அறியாமை முதலிய பற்பல காரணங்களால் கருச்சிதைந்தொழிதல் எளிதாதலின்,` அதனின்றும் தப்பியும்` என்றார். இந்நிலையில் தப்புதல், தாயது வயிற்றில் நின்று அக்கருவை ஊட்டி வலியுற நிறுத்தும் நற்பொருள்களாலேயாம்.
.
16. இருமதி விளைவின் - இரண்டு திங்கள் என்னும் அளவில் உண்டாகின்ற வளர்ச்சிக்கண். ஒருமையின் பிழைத்தும் - ஒரு திங்கள் அளவில் இருந்தவாறே இருத்தலினின்றும் தப்பியும்; என்றது, முதற்றிங்களில் தான்றிக்காய் அளவாய் முட்டைபோற் பருத்து நின்ற கரு, இரண்டாந் திங்கள் முதலாக உறுப்புக்கள் பிரிந்து தோன்றும் நிலையைப்பெற்று வளர்ச்சியுறுமாகலானும், அந்நிலையில் அக்கரு அங்ஙனம் வளர்தற்கு வேண்டும் பொருள்கள் அதற்குக் கிடையா தொழியின், முதற்றிங்களில் நின்ற நிலையிலே நின்று கெட்டொழியு மாகலானும், `அங்ஙனம் கெடுதலினின்றும் தப்பியும்` என்றவாறு.
புல்நுனிமேல் பனித்திவலையினும் சிறிய நுண்டுளியாய் நிற்குமதுவே வித்தாயினும், நிலத்தின் கட்பதிந்து நீர் முதலியவற்றால் பதனெய்திய விதையே பின் முளையைத் தோற்றுவித்தல்போல, அந்நுண்டுளி ஒரு திங்கள் காறும் பருத்துத் தான்றிக்காயளவினதாய் நின்றபின்பே பின்னர்க் கழுத்து, தலை முதலிய உறுப்புக்களைத் தோற்றுவிக்குமாதலின், அதுகாறும் உள்ள நிலையை வித்தெனவே கொண்டு, பின்னர் இரண்டாந் திங்கள் முதலாக உறுப்பு முதலியவை தோன்றப்பெறும் நிலைகளையே, `விளைவு` என்று அருளினார். ஒருமை - ஒன்றன் தன்மை. `ஒன்று` என்று முன்னர் ஒருதிங்களாகிய காலத்தைக் குறித்து, பின்னர் அக்காலத்தில் நிகழும் நிகழ்ச்சியைக் குறித்தது.
.
17. மும்மதிதன்னுள் - மூன்று திங்கள் என்னும் அளவில். மதம் - மயக்கம். சூல்கொண்ட மகளிர் மூன்றாந் திங்களில் பித்தம் மிகப்பெற்று உணவேலாது மயக்கமுற்றுக் கிடக்கும் நிலையை, `மயற்கை` என வழங்குதல் பலரும் அறிந்ததாகலின் அதனை `அம்மதம்` எனப் பண்டறிசுட்டாற் சுட்டிப் போயினார். இம் மயற்கைக் காலத்தில் மகளிர், கருவைக் காத்துக்கொள்ளுதலில் கருத்தின்றி, புளிப்புப் பண்டங்களையே யன்றி மண்ணை உண்ணுதல் முதலிய வற்றையும் செய்வர், ஆதலின், அவற்றிற்கெல்லாம் அக் கரு, தப்பி வளர்தல் வேண்டும் என்று அருளிச் செய்தார். கருவுற்ற மகளிர் மண்ணை விரும்பியுண்டல்,
``1வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவ ருண்ணா வருமண் ணினையே`` -புறநானூறு, 20
எனக் கூறப்பட்டதும் காண்க.
.
18. ஈரிரு திங்கள் - நான்கு திங்களளவில். பேரிருள் - யாதும் அறியாமை. மூன்றாந் திங்களில் மயற்கையுற்ற மகளிர், நான்காந் திங்களில் அம்மயற்கை நீங்கப் பெறுவர். அந் நிலையில் முன்னர் உற்று நின்ற கரு மயற்கைக் காலத்துக் கெட்டொழியாது நிலைபெற்றதோ, அன்றி நிலைபெறாதே கெட்டொழிந்ததோ என எழும் ஐயத்தின்கண் யாதும் துணியப்படுதற்கு வழியின்றி நிற்குமாதலின், அந் நிலையையே, ``பேரிருள்`` என்றார். எனவே, அந்நிலையிலும் அக்கரு நிலைபெறாதொழிதல் கூடுமாகலின், `அவ்விடத்தும் கெடாது நிலை பெற்று` என்பார், `ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்` என்றார்.
.
19. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஞ்சு திங்கள் - ஐந்து திங்களின் என்னும் அளவில். முஞ்சுதல் - சாதல். தாயது வயிற்றினின்றும் போந்து நிலத்தையடைதற்குப் பத்துத் திங்களை எல்லையாக உடைய கருப்பைக் குழவி, அதனிற் பாதியளவினதாகிய ஐந்து திங்கள் காறும் பெரும்பான்மையும் நிலையாமையையே உடையதாம். அதனுள்ளும், மயற்கைக் காலத்து அழிந்தொழியாது நிலைபெற்று நான்காந் திங்களில் மெலிந்துநிற்கும் கருக்குழவியை, ஐந்தாந் திங்களிற் பல்லாற்றானும் குறிக்கொண்டு காவாதொழியின், வலுப்பெற்று முதிர மாட்டாது அழிந்தொழியும்; அதனால், ஐந்தாந் திங்களைக் கரு அழியுங் காலமாக அருளினார்.
.
20. ஆறு திங்களின் - ஆறு திங்கள் என்னும் அளவில். நூறு அலர் பிழைத்தும் - கருப்பையைக் கிழிக்கின்ற பூவினது செயலுக்குத் தப்பியும். அலர் - பூ. மரவகைகளிடத்துக் காய் தோன்றுதற்கு வழியாய் நிற்கும் பூப்போல, கருப்பையுள் கருவை ஏற்று ஈனும் பிறப்புக்களது கருப்பை யினுள், தாயினது செந்நீரில் குமிழிபோலத் தோன்றுவதொரு பொருள் உண்டு. அதற்கும் பூவைப்போல அரும்புதல், மலர்தல், கூம்புதல்கள் உள. அதனது மலர்ச்சிக் காலத்தில் பெண்ணிற்கு ஆணோடு கூட்டம் உண்டாயின், கரு வாய்க்கும். அக்காலத்தன்றி, அரும்பற் காலத்தும், கூம்பற் காலத்தும் உளவாம் கூட்டத்தாற் கருவுண்டாதல் இல்லை. கருவை ஏற்றலின்றி வாளா கூம்பிய பூ, சின்னாளில் கெட்டு வெளிப் போந்தொழியும், தாயது வயிற்றிற் பூவுண்டாயினமை அது புறத்துப் போந்துழியே அறியப்படுதலின், அதனையே, `பூப்பு` என வழங்குப முதற் பூ, கருவை ஏற்றலின்றி அழியற்பாலதே; ஏனெனின், அது கரு வந்தடைதற்கு வாயிலில்லாத காலத்தே உண்டாவது. அது கெட்டபின், தான் உள்ளே நில்லாது வெளிப்போதுங்கால், வாயிலை உண்டாக்கிப் போதருதலின், பின்னர்த் தோன்றும் பூக்கள் கருப் பெறுதற்கு உரியன வாம். முதற் பூத் தான் பயனின்றி ஒழியினும், பின்னர்த் தோன்றுவன அனைத்தும் பயனுடையவாதற்கு ஏதுவாய் வீழ்தலின், அவ் வீழ்ச்சியையே, சிறப்பாக, `பூப்பு` எனக் குறிப்பர். ஒரு பூ அரும்பி மலர்ந்து நிற்கும் காலம், முன்னைப் பூ வீழ்ந்த நாள் முதலாகப் பதினைந்து நாள் எல்லை என்பதும், அதன் பின்னர் அது கூம்புதல் உளதாம் என்பதும்,
``பூப்பின் புறப்பா டீராறு நாளும்``
என்பதனான் அறியப்படும் (தொல் - பொருள்; 185). `பூ வீழ்ந்த நாள்முதலாக மூன்று நாட்கள் பூப்பின் அகப்பாட்டு நாள்களாம்` என்பதனை அச்சூத்திர உரைகளான் அறிக.
கருப்பையுடைய பிறப்புக்களில் மக்கட் பிறப்பிலும் மாக்களுள் ஒருசார் பிறப்பிலும் உள்ள பெண்களது கருப்பையில் ஒரு முறையில் பெரும்பாலும் ஒரு பூவும் சிறுபான்மை சில முறைகளில் ஒன்றற்கு மேற்பட்ட பூக்களும் தோன்றும்; ஆதலின், அவற்றால் ஓர் ஈற்றில் பெரும்பான்மையும் ஒரு குழவியும், சிறுபான்மை ஒன்றற்கு மேற்பட்ட குழவிகளும் பிறக்கும்.
மாக்களுள் ஒரு சாரனவற்றுப் பெண்களது கருப்பையில் ஒருமுறையில் பல பூக்கள் தோன்றுதலின், அவற்றிடமாக ஓர் ஈற்றில் பல குழவிகள் பிறப்பனவாம். ஆகவே, கருப்பையுள் தோன்றும் கருவிற்கும், மரவகைகளிற்போல, அக்கருப்பையினுள் அரும்பி மலரும் பூவே காரணம் என்பது புலப்படும்.
இத்தகைய பூ, மக்கட் பிறப்பின் மகளிரிடத்துக் கருவை ஏற்றுக் குழவி உருவத்தைப் பெறத்தொடங்குவது, அஃது ஐந்தாந் திங்களிற் கெடாது வலியுற்று நின்ற பின்னரேயாம். அஃது அங்ஙனம் உருப்பெற்று வளர்கின்றுழி. அது கருப்பையைத் தாக்குதல் உளதாம். அக்காலத்து அத்தாக்குதலால் ஒரோவழி, கருப்பை கிழிந்து, அவ்வுருவம் அரையும் குறையுமாய் நிலத்தில் வீழ்தலும் உண்டு. அந் நிலையினும் குழவி தப்புதல் வேண்டும் என்பதனையே, ``ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும்`` என்று அருளிச்செய்தார். மக்களுள் மலடரல்லராயும், மகவை உருவோடு பெறும் நல்வினை இல்லாத மகளிர் தம் கருவை இழத்தல், பெரும்பான்மையும் இத்தன்மைத்தாய ஆறாந்திங்களிலேயாம். ஆதலின், அதனைக் கடந்த பின்னரே, சூல் காப்பு முதலிய சடங்குகளைச் செய்தல் முறைமையாயிற்று. நூறுதல் - சிதைத்தல். ``அலர்`` என்றது ஆகு பெயராய் அதனது தொழிலைக் குறித்தது. கருவை ஏற்ற பூ, காய் எனப்படுதல், குழவி உருவம் நிரம்பப் பெற்ற ஏழாந் திங்களிலே யாதலின், ஆறாந்திங்களில் நின்ற உருவத் தினை, ``பூ`` (அலர்) என்றே அருளினார்.
.
21. ஏழு திங்களில் - ஏழென்னும் திங்களளவில். புவி - நிலம். அஃது ஆகுபெயராய், அதனுள் தோன்றும் பிறப்புக்களை உணர்த் திற்று. கரு ஆறாந் திங்களில் வீழாதே நிற்பினும், குழவி நன்முறையில் வளராதொழியின், மக்கட்டன்மை நிரம்பப்பெறாது, ஏழாந் திங்களில் மாக்கள் போலப் பிறப்பதாம். அப்பிறப்பு வகைகளை,
``சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும் மருளும்``
என வந்த புறப்பாட்டுள் (28) `உறுப்பில் பிண்டம்` என்றது ஒழிந்தன எனக் கொள்க. இவ்வாறெல்லாம் பிறத்தல் மக்களுலகில் தொன்று தொட்டே காணப்படுவது என்பதனை,

``................ இவையெல்லாம்
பேதைமை யல்ல தூதிய மில்லென
முன்னும் அறிந்தோர் கூறினர்``
என அப்பாட்டுட் கிளந்தோதியவாற்றான் அறிக.
இனி மக்கள் வயிற்றினும் ஒரோவொருகால் மாக்களும் பாம்பு போலும் சில ஊர்வனவும், பிறவும் பிறத்தல் உள என்ப; அவை யெல்லாம் ஏழாந்திங்களில் குழவியது வளர்ச்சிக் குறைபாட்டால் நிகழ்வனவே யாதலின், மானுடப் பிறப்பினுட் புகுந்தும், தீவினை வயத்தால் அவ்வாறெல்லாம் ஆகாது தப்புதல் வேண்டும் என்ப தனையே, ``தாழ்புவி பிழைத்தும்`` என்று அருளினார், இஃது உண்டாகாமைப் பொருட்டும் ஏழாந் திங்களிற் கடவுட் பராவலை, அறிந்தோர் செய்ப.
இனி, மக்கட் குழவி பிறப்பது பெரும்பான்மையும் பத்தாம் திங்களிலேயாயினும், சிறுபான்மை அதற்கு முற்பட்ட ஒன்பது, எட்டு ஏழென்னும் திங்களிலும் பிறத்தல் நிகழ்ச்சிகள் உள. அவை ஒன்றினொ ன்று சிறுபான்மைத்தாக நிகழும். அவற்றுள் ஏழாம் திங்களிற் பிறக்குங் குழவி உயிரொடு பிறத்தல் சிறுபான்மை. உயிரொடு பிறந்த வழியும் பின்னர் நெடிது வாழ்தல் மிகச் சிறுபான்மை. அதனால், அங்ஙனம் ஏழாம் திங்களிற் பிறத்தலினும் தப்புதல் வேண்டும் என்பதனையே இவ்வடியுள் அருளினார் எனக் கொண்டு, அதற்கேற்ப `தாழ்புவி` என்றதனை `புவிதாழ்` என பின்முன்னாக மாற்றி ஏழாந் திங்களிற் றானே நிலத்தில் வந்து பிறத்தலினின்றுந் தப்பியும்` என உரைத்தலு மாம். இவ்விரண்டனையும் இவ்வடியின் பொருளாகக் கொள்க.
.
22. எட்டுத் திங்களில் - எட்டென்னும் திங்களளவில். கட்டம் - மெய்வருத்தம். அஃதாவது, ஏழாம் திங்களில் உருநிரம்பப் பெற்ற குழவி, அவ்வுருவம் நன்கு முதிர்ந்து வளரும் வளர்ச்சியால் கருப்பையினுட் கட்டுண்டு கிடக்கமாட்டாது வருந்தும் வருத்தமாம். இக்காலத்தில் அது, அக்கருப்பையோடே அசைவுறுதலும் உண்டு.
.
23. ``ஒன்பது``, ஆகுபெயர்; `ஒன்பது திங்கள் என்னும் அளவில்` என்றபடி. துன்பம் - மனக்கவலை. எட்டாம் திங்களில் நன்கு முதிர்ந்து வளர்ச்சியுற்ற குழவி, ஒன்பதாம் திங்களில் கருப்பையுட் கட்டுண்டு கிடக்கும் நிலையை உணர்ந்து ` இனி இதனினின்றும் புறப்படுமாறு எவ்வாறு` என நினைந்து கவலையுறும். `அக்காலை அஃது இனிப் பிறவி வாராமல் அருள வேண்டும் என இறைவனைக் கைகூப்பி வேண்டும்` எனவும் சொல்லுப. இவ் எட்டு ஒன்பதாம் திங்களில் உள வாகும் உடல் வருத்தம், மன வருத்தம் என்பவற்றைத் தாங்கும் உடல் வலிமையும், மனவலியும் இல்லாததாய் இருப்பின், குழவி அக் காலத்தே இறந்துபடுமாகலின், அவற்றினின்றுந் தப்புதல் வேண்டும் என்பார், `` எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்`` என்றும் ``ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்`` என்றும் அருளினார். ``கட்டமும் துன்பமும்` என்ற உம்மைகள் எச்சப் பொருள.
.
24-25. தக்க தச மதி - குழவி குறையின்றிப் பிறப்பதற்கு ஏற்புடைத்தாய பத்துத் திங்கள் என்னும் அளவில் ``தாயொடு`` என்ற ஒடு, எண்ணொடு. துக்க சாகாரத் துயர் - துக்கமாகிய. கடல்போலும் துயர். `துக்கம், துயர் ` என்பன ஒரு பொருளவாயினும், அடையடுத்து வந்தமையின், சிறப்பும் பொதுவுமாய் இருபெயரொட்டாய் நின்றன. குழவி பிறக்குங்கால் தாயும், குழவியும் படும் துன்பம் பெருந்துன்ப மாதல் வெளிப்படை. குழவிக்கும் தாய்க்கும் உளவாந் துன்பங்கள், குழவி தான் வெளிப்போதற்குச் செய்யும் முயற்சியால் வருவன
வாம். தாய் தனக்கு உளதாய துன்பமிகுதியால் குழவி இனிது பிறத்தற்கு ஏற்ப நில்லாமையானாதல், குழவி தனக்கு உண்டாய துன்ப மிகுதியால் வெளிப்போதும் முயற்சியிற் சோர்வுறுதலானாதல் குழவி பிறவாது வயிற்றிலே இறத்தலும் உண்டு.
அதனால், அவ்விருவகை இன்னலினும் தப்புதல் வேண்டு மாகலின், ``தாயொடு தான்படுந் துக்கசாகரத் துயரிடைப் பிழைத்தும்`` என்று அருளினார்.
.
26-27. `ஆண்டுகள் தோறும்`` என்றதனை, `` இருத்தியும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `பிறந்த பின்னர், தாயர் முதலியோர் தம்பால் நெருங்க அணைத்தும் ஓரிடத்தே இருக்க வைத்தும் ஆண்டு களின் வளர்ச்சிதோறும் அவர் செய்யும் எத்துணையோ பல செயல் களினின்றும் தப்பியும்` என்க.
`ஈண்டுவித்தும்` என்பது, தொகுத்தலாயிற்று. எனைப் பலவாவன, பாலூட்டல், நீராட்டல், மருந்தூட்டல், சீராட்டல் முதலியன, இவை குழவிக்கு நலஞ்செய்யுமாயினும், காலம் அளவு முதலியன ஒவ்வாதவழித் தீங்கு பயக்குமாதலானும், அவ்வொவ்வாமையை அவர் அறிதல் அரிதாகலானும், அவற்றினும் தப்புதல் வேண்டும் என்றார்.
.
28-29. மேலெல்லாம், உயிர், மக்கட் பிறப்பிற் புக்க வழியும் இனிது பிறவாதவாறும், பிறந்தபின் நன்கு வளராதவாறும் நிகழும் இடையூறுகளினின்றும் தப்புதல் கூறினார்; இனி, வளர்ந்த பின்னரும் உள்ளம் தெய்வத்தின் பாலன்றிப் பிறவற்றிற் செல்லுதற்கு வாயிலாவன வற்றினின்றுந் தப்புதல் கூறுகின்றார்.
``வேலை`` என்றதை, ``காலை``, ``கடும்பகல்`` என்ற வற்றிற்குங் கூட்டுக. வேலை - பொழுது, மலம் - வயிற்றில் உள்ள மலத் தால் உளதாம் துன்பம். இது காலைக்கண் பெரிதாம், பசி - பசித் துன்பம், நிசி - இரவு. நித்திரை - உறக்கம். இது நன்றாயினும் தெய்வத்தை நினைத்தற்கு இடங்கொடாது, தானே வந்து பற்றுதலின், தடையாயிற்று. `நித்திரை பிழைத்தும், யாத்திரை பிழைத்தும்` எனத் தனித்தனி கூட்டுக. நாள்தோறும் தவறாது நிகழும் மலம் முதலிய மூன்றனையும் ஒருங்கெண்ணி, `அவற்றிற் பிழைத்தும்` எனவும், இடையீடுற்று வேண்டுங்காலத்து நிகழும் யாத்திரையை வேறு வைத்து, ``யாத்திரை பிழைத்தும்`` எனவும் அருளினார் என்க. யாத்திரை - வழிச் செலவு. மலம், ஆகுபெயர்.
.
30-35. இப் பகுதியுள் மகளிரது அழகு ஆடவரது மனத்தைக் கொள்ளை கொள்ளுமாற்றினை விரித்தருளிச் செய்கின்றார். சிறப்பு பற்றி ஆடவரது உள்ளத்தையே கூறினாராயினும், இதனானே ஆடவரது அழகும் பெண்டிரது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுதலும் பெறப்படுவதேயாம், கார்மயில் - கார்காலத்து மயில், கார்காலத்தில் மயில் மேகத்தைக் கண்டு களித்தலும், அக் களிப்பினால் தோகையை விரித்து அழகுற ஆடுதலும் இயல்பு. ஒருங்கிய சாயல் - ஒழுங்கு பட்ட தோற்றம். பிற்கால வழக்கில் சாயல் என்னும் சொல் தோற்றம் எனப் பொருள் தரும் என்க. `மயில்போலும் சாயல்` என்க. நெருங்கி - ஒன்றை ஒன்று அணுகி. மதர்த்து - விம்மி. கதிர்த்து - அழகு மிக்கு, `முன்`என்றதனை, ``நிமிர்ந்து`` என்றதற்கு முன்னேகூட்டுக. பணைத்து - பருத்து. `இடை எய்த்து வருந்த` என்க. வருந்தல் பாரம் தாங்கமாட்டாமையானாம். எழுந்து - வளர்ச்சியுற்று. புடைபரந்து - மார்பிடம் எங்கும் பரவி. ``ஈர்க்கிடை போகா இளமுலை`` என்பது. பொருநராற்றுப் படையுள்ளும் (36) வந்தமை காண்க. `குழலையும், வாயையும், நகையையும், சாயலையும், முலையையும் உடைய மாதர் என்க. கூர்த்த - கூர்மை பெற்ற, நயனம் - கண். பிற உறுப்புக்களும் உள்ளத்தைக் கவருமாயினும், அவை நின்ற நிலையில் நிற்றலன்றிக் கண்போலப் புடைபெயர்ந்து அகப் படுத்த மாட்டாமையின் அக் கவர்ச்சிகள் சிறியவாக, கண் அவ்வாறன்றிப் புடைபெயர்ந்து அதனை அகப்படுத்தலின் அக்கவர்ச்சி பெரிதாதல்பற்றி அதனையே உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக அருளினார்.
.
36-37. பித்து,`பித்தம்` என நின்று, வேற்றுமைக்கன் இறுதி யொற்றுக் கெட்டது. உலகர் - உலக வாழ்க்கையையன்றிப் பிறி தொன்றை நோக்காதவர். அவ்வியல்பு அவரறிவின் கண் உள்ள மயக்கத்தாலாயிற்றாகலின், அதனை, `பித்து` என்றார். பெருந்துறைப் பரப்பு - பெரியவாகிய துறைகளையுடைய நீர்ப்பரப்பு. `பரப்பு` என்றது, வாழ்க்கையை, அதுதான், அரசாட்சியும் அமைச்சு முதலிய அரச வினைகளும், உழவும் வாணிபமும் முதலாகப் பற்பல துறை களையுடைமையின் `பெருந்துறைப் பரப்பு` என்றார். `துறை, பரப்பு` என்றவை குறிப்பு உருவகம். பெருமை, இங்கு, பன்மை குறித்தது. `பரப்பினுள் ` என்றதன் பின்,`நின்று கலக்கும்` என்பது வருவிக்க. `வாழ்க்கையாகிய நீர்ப்பரப்பினுள் நின்று அதனைக் கலக்கும் மத யானை என்று சொல்லத்தக்க ஆைu2970?` என்க. வாழ்க்கைக்கண் உளதாம் ஆசையாவது, பல தொழில் துறைகளில் நிற்குங்கால் அவற்றை இவை உடலோம்பல் மாத்திரைக்கே ஆவன` என்று அறிந்து புறத்தால் தழுவி, அகத்தில் பற்றின்றி யொழுகாது, அவையே உயிராகக் கருதி, அவற்றின்கண் மேன்மேல் உயர விரும்புதல். அவ் விருப்பம், அறிவை அறத்தையும் வீட்டையும் நோக்கவொட்டாது மயக்கி, அதனானே, வாழ்க்கைத் துறைகளிலும் பொய், களவு முதலிய பலவற்றைப் புரிந்து ஒழுகச் செய்தலின் அதனை நீர்ப்பரப்பைக் கலக்கும் மதயானையாக உருவகம் செய்தார் `அவாவிடை`` என்ற ஏழனுருபை ஐந்தனுருபாகத் திரிக்க.
.
38. `கல்வி கரையில`` (நாலடி - 135.) என்றபடி, கல்வி, அள வில்லாத துறைகளையுடைத்தாய், ஒவ்வொரு துறையும் மிகப் பரந்து கிடப்ப நிற்றலானும், அவை அனைத்திலும் வேட்கை செலுத்தின், நிரம்பப் பயன் எய்துதல் கூடாமையானும், நீர்வேட்கை கொண்டோன், அது தணிதற்கு வேண்டும் நீரை முகந்துண்டு தன் காரியத்திற் செல்லுதல்லது, தன் முன் காணப்படும் ஆறு, குளம் முதலியவற்றி லுள்ள நீரையெல்லாம் முகக்கக் கருதாமைபோல, பரந்துபட்ட கல்வியுள் உலகியலில் தமக்கு வேண்டுந்துணையே கற்று அமைந்து, உயிர்க்குறுதிதேட முயறலன்றி எல்லாக் கல்வியையும் முற்றக் கற்க முயலுதல் அறிவுடைமை யன்றாகலானும், ``கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்`` என்றார்.
.
39. ஈட்டல், காத்தல், அழித்தல் முதலிய எல்லாவற்றானும் பொருள் துன்பமே பயத்தலின், `செல்வம் என்னும் அல்லல்`` என்று அருளினார். அல்லலைத் தருவது, ``அல்லல்`` எனப்பட்டது. இதனின்றுந் தப்புதலாவது, இதன்கண் பற்றுச் செய்யாமையாம்.
.
40. நல்குரவு - வறுமை, விடம் - நஞ்சு. செல்வம் அல்லல் பயப்பினும், அறிவுடையார்க்காயின், அறத்தையும் உடன் பயக்கும், வறுமை அவ்வாறின்றி அவர்க்கும் இருமுது குரவர் முதலாயினாரை இனிது ஓம்பமாட்டாமை முதலிய பல குற்றங்களைப் பயந்து இருமையையுங் கெடுத்தலின், அதனை நஞ்சாக உருவகித்தார். இதனானே, வறுமையுட் பட்டார்க்கு அறிவு மெய்யுணர்தற்கட் செல்லாமையும் பெறப்பட்டது.
``வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பி``
(சூ. 2-91) என்றார் சித்தியாரினும். வறுமை இருமையையுங் கெடுத்தலை,
இன்மை யென ஒருபாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (-குறள், 1042)
என்பதனானும் அறிக. இவ்வாறு நல்குரவு இருமையுங் கெடுத்தலைப் பலரும் பண்டே அறிந்து அஞ்சப்படுவதென்பதனையே, ``தொல் விடம்`` என்றார் என்க.
இதனினின்றும் தப்புதல்.
தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாள்தந்த
துண்ணலி னூங்கினிய தில். -குறள், 1065
என்று மகிழ்ந்திருக்கும் பண்பு, தமக்கும், தம் சுற்றத்திற்கும் வாய்த் தலால் உண்டாவதாம்.
.
41. புல் வரம்பாய பல துறை - இழிந்த நிலையினவாகிய பல தொழில்கள். அவை, கள் விற்றல், மீன்படுத்தல், ஊன் விற்றல் போல்வன. இவை அறிவின்கண் நல்லன புகவொட்டாமையின், தெய்வ உணர்விற்கும் தடையாதல் அறிக. இத்தொழில்கள் தாமே சாதிகளாய் நிற்றலின்,
``தரைதனிற் கீழை விட்டுத் தவம்செய்சா தியினில் வந்து``
எனச் சிவஞானசித்தி (சூ 2-90) யுட் கூறப்பட்டது.
.
42-45. தெய்வம் என்பது ஓர் சித்தம் - கடவுள் என்று உணர்வ தோர் உணர்ச்சி. உண்டாகி - தோன்றப் பெற்று. முனிவிலாதது ஓர் பொருள் கருதலும் - எஞ்ஞான்றும் வெறுக்கப் படாததாகிய அவ் வொப்பற்ற பொருளை அடைய விரும்பிய அளவிலே. அளவில்லாத மாயையின் ஆற்றல்கள் தனித் தனியே தம் மயக்கும் செயல்களைச் செய்யத் தொடங்கிவிட்டன என்க.
தெய்வம், `கடவுள்` - பரம்பொருள் என்னும் பொருளதாய் நின்றது. `அம் முனிவிலாததோர் பொருள்` எனச் சுட்டு வருவித் துரைக்க. அதுபகுதிப் பொருள் விகுதி. ``மாயா சத்திகள்`` எனப் பட்டன. உலகியல்களாம். ``ஆறுகோடி`` என்றது, அளவின்மை குறித்தவாறாம். கோடி என்றே போகாது ``ஆறுகோடி `` என்றது மாயா காரியங்கள் அனைத்தும் `அத்துவா` எனப்படும், `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறாய் அடங்குதல் பற்றிப் போலும்! இனி, இதனை, `காமம், குரோதம்` முதலிய அகப் பகை ஆறென்றல் பற்றிக் கூறியதாக உரைப்பின், அவை ஆணவத்தின் காரியமாதலேயன்றி, மேல், மாதர்தம் மயக்கம் முதலாகக் கூறிய வற்றுள் அடங்கினவாதலும் அறிக.
மேல் கடவுளுணர்வு தோன்றுதற்குத் தடையாயுள்ளனவற்றை வகுத்தருளிச் செய்தார்; இனி, அது தோன்றிய பின்னரும், நிலை பெறாதொழிலைச் செய்வனவற்றை அவ்வாறருளிச் செய்வாராய், ``மாயா சத்திகள் தம் மாயைகள் தொடங்கின`` என்றார். எனவே, இனி வருவன அம் மாயா சத்திகளின் செயல்களே யாதல் அறிக.
உணர்வை, ``சித்தம்`` என்றார். உலகப் பொருள்கள் முன்னர் இனியவாய்த் தோன்றி விரும்பப்பட்டு, பின்னர் இன்னாதனவாய் வெறுக்கப்படுதல் போலன்றி, பரம்பொருள் எஞ்ஞான்றும் இனிதாயே நிற்றலின், அடையற்பாலது அஃது ஒன்றுமே என்பது உணர்த்து வார்,``முனிவிலாததோர் பொருள்` என்றார்.
.
46-47. `ஆத்தமானாரும் அயலவரும் கூடி` என்க. ஆத்தம்- மெய்ம்மை. ஆனார் - நீங்காதவர்; என்றது, `உறுதியுரைக்கும் நண்பர்` என்றவாறு. இனி. `ஆத்தம்` என்னும் பண்புப் பெயர், அதனை உடையார்மேல் நின்றதெனக் கொண்டு, `ஆத்தராயினார்` என்று உரைத்தலுமாம். அயலவரும் அவரொடு கூடியது அவர் கூற்றை வலியுறுத்தற்பொருட்டாம், இவர்கள் பேசும் நாத்திக உரைகளாவன, `இப்பொழுது கிடைத்துள்ள செல்வமும், மாடமாளிகையும், மகளிரும் முதலாய பொருள்களைத் துறந்து, இனி எய்தற் பாலதாய கடவுளை அடைதற்கு இப்பொழுது விரும்புதல் வேண்டா; பின்னர்ப் பார்த்துக் கொள்வோம் என்றாற் போல மெய்ந்நெறியினை நெகிழவிடக் கூறுவனவாம், கடவுளும் வினைப்பயனும் மறுபிறப்பும் போல்வன வற்றை, `இல்லை` என அழித்துரைக்கும் நாத்திகரைப் பின்னர்க் குறித் தருளுப. ``நாத்தழும் பேறினர்`` என்றதனால் இவற்றைப் பல்காலும் இடையறாது கூறி ஆமளவும் கடவுள் உணர்வை மாற்ற முயறல் குறிக்கப்பட்டது. ``நாத்தழும் பேறினர்`` என சினைவினை, முதல்மேல் நின்றது. ``பெருகவும் சூழவும்`` எனப் பின்னர் வருதலின், அவற்றிற் கேற்ப ஏனையிடங்களிலும், `நாத்தழும்பேறினராகவும், `சாத்திரங் காட்டினராகவும்` என்றாற்போல, ஆக்கமும், உம்மையும் விரித் துரைக்க.

48-49. சுற்றம் - உறவினர். கடவுள் நெறியது நலப் பாட்டினை அறியமாட்டாமையின், அதனை அடைய விரும்புவாரைத் தமக்கும் தம் தமர்க்கும் உறுதியுணராதவராக நினைத்து அவலம் எய்தலின், அத்தன்மையராய உறவினரை விலங்குகளோடு ஒப்பித்து, ``பசுக் குழாங்கள்`` என்று அருளிச் செய்தார். எனவே, சுற்றம் என்னும் குழாங்கள்`` என்றது இகழ்ச்சிக்கண் உயர்திணை அஃறிணையாய், பின் வரும், ``பதறினர்`` என்பதனோடு திணை மயக்கமாயிற்று என்க. இனி, `பதறின`` என்பதே பாடம் என்றலுமாம். தொன்று தொட்டு வந்த உறவுடையர் என்பார், `தொல்பசுக்குழாங்கள்`` என்றார். பற்றி அழைத்தல் - கை கால்களைப் பற்றிக்கொண்டு `அந்தோ! துறத்தல் வேண்டா` எனக் கூப்பீடு செய்தல். பதறுதல் - துன்பத்தால் விதிர் விதிர்த்தல். `பதறினராய்ப் பெருக` என்க. பெருகுதல், பலராய்ச் சூழ்ந்து கொள்ளுதல். உம்மை, வினைக்கண் வந்த எண்ணிடைச் சொல். ``சூழவும்`` எனப் பின்னர் (அடி 58) வருவதும் அது.
ஒருவர்க்கு ஒரு காரியம் பற்றிச் சொல்பவருள் ஆத்த நண்பர் முன்னிற்பராகலானும், அவர் தம் கருத்தை யுரைத்தலைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றுழி, அயலாரும் அவரோடு உடம்பட்டுச் சில சொல்லுபவாகலானும் அவ்விருவரையும் முன்னர் வைத்தும், அவர்தம் உரைப்படியேனும், அவற்றிற்கு மாறாக வேனும் செயலை மேற்கொள்ளும் வழியே, சுற்றத்தார் அறிந்து தாம் கூறுவனவற்றைக் கூறுவராகலின், அவரை அவ்விருவருக்கும் பின்னர் வைத்தும் அருளிச் செய்தார். இவரெல்லாம் உலகவராய் நீங்க, இனிச் சமயத்தார் செய்வனவற்றை அருளுவார்.
.
50-51. விரதம் - நோன்புகள், பரம் - மெய்ப்பொருள். `உயிர்கள் செய்யும் வினைகளே, அவற்றிற்கு நன்மை தீமைகளைப் பயக்கும்; உயிர்கட்கும், அவை செய்யும் வினைகட்கும் வேறாய் மூன்றாவதொரு பொருள் இல்லை என்பவர், வேதத்துட் கரும காண்டத்தையே சிறப்புடைய பகுதியாகக் கொண்டு. ஏனைய பகுதிகளைப் பொதுவகையால் தழுவுபவர். இவர், வேதத்தின் முற்பகுதியாகிய கரும காண்டம் ஒன்றனையுமே ஆராய்பவராகலின் `பூருவ மீமாஞ்சகர்` எனவும், கரும காண்டம் ஒன்றனையுமே சிறந்த பிரமாணமாகக் கொள்ளுதலின், `கருமகாண்டிகள்` எனவும், `கருமமே கடவுள்` என்றலின் `கருமப்பிரமவாதிகள்` எனவும் பெயர் கூறப்படுவர். எனவே, இங்கு, ``வேதியர்`` என்றது, இவர்களையே யாம்.
``ஆதிமறை ஓதி அதன்பயனொன் றும்மறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே``
என்றார், நெஞ்சுவிடு தூதினும் (116,117).
சரதம் - உண்மை. `சாத்திரம்` என்றது, இவரது நூலாகிய பூருவ மீமாஞ்சையை. இது, சைமினி முனிவரால் செய்யப்பட்டது. அந்நூல், இவர் தம் கொள்கையை மிகத் திறம்பட நிறுவலின், ``சரதமாகவே காட்டினர்`` என்று அருளினார், எவ்வாறுரைப்பினும், இவர் தம் கூற்று உண்மையல்ல என்பார், ``பரமாக`` எனவும், `சரதமாகவே``எனவும் ஈரிடத்தும் ஆக்கச் சொற்புணர்த்து அருளிச் செய்தார். ``ஆகவே`` என்றது, `போலத் தோன்றும்படியே` என்றவாறு. இன்னும், `உணர்த்தினர்` என்னாது, ``காட்டினர்`` என்றார், அஃது அறிவுடையோர் உணர்வைப் பற்றாது நீங்கலின். வேதத்துட் கரும காண்டம் முன் நிற்றல் பற்றி, இவரை முன்னர்க் கூறினார்.

52-53, ``சமய வாதிகள்`` என்றது, வேதத்துள் உபாசனா காண்டமும், அதுபோலும் பிற நூல்களும் பற்றி ஒரு தெய்வத்தை யாதல், பல தெய்வங்களையாதல் வழிபடும் கிரியா மார்க்கத்தவரை யாம். உபாசனா காண்டம், கரும காண்டத்தின் பின்னர்த்தாதல் பற்றி, இவரை மீமாஞ்சர்க்குப் பின்னர் வைத்து அருளிச்செய்தார். மதம் - தாம் தாம் தெய்வம் எனக் கொண்ட பொருள் பற்றிய கொள்கை. அமைதலுக்கு வினைமுதல், மேல் `பரம்`` என்றதேயாம். அதனால், அதனை இங்கும் இயைத்துரைக்க. இங்கும், ``அமைவதாக`` என்றார், பரம் பொருள் அவர் தம் மதங்களில் அமையாமையின். அமைதல் - அடங்குதல். ``அரற்றி`` என்றதும் அதுபற்றி. அரற்றுதல் - வாய் விட்டழுதல். இவருள் ஒருவர் கொண்ட தெய்வத்தை மற்றையோர் உடம்படாது மறுத்துரைத்துக் கலாய்த்தலின், `மலைந்தனர்` என்றும் அருளிச் செய்தார்.
.
54-55. மிண்டிய - வலிமைபெற்றெழுந்த. மாயாவாதம் - `உலகம் உள்பொருளன்று` என்னும் கூற்று. உலகம், கடவுள் போல என்றும் ஒருநிலையாய் நில்லாது, தோன்றி நின்று மறைதல் பற்றி, `பொய்` எனவும், `அசத்து` எனவும் ஆன்றோர் கூறினாராக, அக்கருத் துணராது, `கயிற்றில் அரவு போலவும் கானலின் நீர் போலவும் கடவுளிடத்தே தோன்றுவதொரு பொய்த் தோற்றமே உலகம்` எனவும், `அன்னதொரு தோற்றமே மாயை` எனவும் கொண்டு` `நாம் காண்பன அனைத்தும் மாயையே` என வாதித்தலின், அவ்வாதம், `மாயா வாதம்` எனப்பட்டது. இவ்வாதத்தினை வலியுறுத்தும் உத்தரமீமாஞ்சை யாகிய பிரம சூத்திரம் என்னும் முதனூலைச் செய்தவர் வேதவியாத முனிவராதலின், அதற்கு அந்நூலோடு இயைந்த உரையை வகுத்துப் பெருமைபெற்ற சங்கரர் காலத்திற்றான் இவ்வாதம் தோன்றிற்று என்றல் உண்மையுணராதார் கூற்றேயாமென்க,
இனி, மாயாவாதம் சங்கரர் காலத்திற்கு முன்னரே தோன் றிற்றாயினும், அது தமிழகத்திற் பரவியது, அவரது காலத்திற்றான் என்பது உண்மையேயாயினும், அடிகள் போன்ற பேரறிவுடை யார்க்குச் சங்கரர் காலத்திற்கு முன்னர் அதனை அறிதல் இயலா தென்றல் பொருந்துவதன்றாம், மாயாவாத நூல் வேதவியாத முனிவ ரால் செய்யப்பட்டது என்பதனை, `இங்ஙனம் நால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவன் வியாதமுனிவன்` எனச் சிவஞானபாடி யத்துட் கூறியவாற்றான் உணர்க. ஏகான்மவாதவகை நான்கனுள் மாயாவாதமே தலையாயதென்பது வெளிப்படை.
இவ்வாற்றான், சிவநெறியாளர்க்கு வடமொழியில் சிவாகமமே சிறப்பு நூலாவதன்றிப் பிற நூல்களுள் யாதொன்றும் அன்னதாகாமை பெறப்பட்டது. இவ்வரையறையில் நில்லாது, வியாத முனிவரது ஏகான்ம நூலைச் சிவநெறி நூலாக மேற்கொண்டு உரை வகுக்கப் புகுந்தமையால், நீலகண்ட சிவாசாரியர் சைவசித்தாந்தத்தோடு உள்ளத்தால் முரணாராயும், உரையால் முரணி நிற்பாராயினார் என்க,
வேதத்தை வகைப்படுத்திப் பதினெண் புராணங்களையும் செய்த வியாத முனிவரது நூலை, இவ்வாறு பிரமாணம் அன்றென விலக்குதல் குற்றமாமன்றோ எனின், ஆகாது; எவ்வாறு எனின்,
``வேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்``
எனப் பிற்காலத்தார் தாமே (குமரகுருபர அடிகள் - சிதம்பரச் செய்யுட் கோவை - 13.) ஓதினாராகலானும், அவர் அங்ஙனம் ஓதுதற்கு முதலாய்,
``கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற்
பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின்``
(சிவஞான முனிவர் மொழிபெயர்ப்பு; இதன் மூலம் சிவாசாரியர் பஞ்ச சுலோக வாக்கியம்) எனக் குறிக்கப்படும் பண்டை வரலாறு உண்மையானும், வேதவியாதர் குணவயப்பட்டு மயங்கினமை பெறப்படுதலான் என்க.
`மாயாவாதம் சங்கரர் காலத்திலன்றோ தோன்றியது என்பார்க்கு இங்ஙனம் செவ்வனே விடையிறுக்கமாட்டாதார், ஈண்டு அடிகள், `மாயாவாதம்`` என்றது, சூனியவாதமாகிய புத்த மதத்தை எனக் கூறி இடர்ப்படுவர், `மாயை` என்னும் வாய்பாடு வைதிக மதங்கட்கன்றி, அவற்றிற்குப் புறமாய மதங்கட்கு ஏலாமைதானே, அவர் கூற்றுப் பொருந்தாமையை இனிது விளக்கும். அன்றியும் அடிகள் ஈண்டு வைதிக மதங்களை எடுத்தோதியதன்றி அவைதிக மதங்களை எடுத்தோதினாரல்லர். ஓதினாரெனின், ஆருக மதத்தையும் கூறியிருத்தல் வேண்டும் என்க. உலகாயத மதம் ஏனை மதங்கள் அனைத்திற்குமே புறம்பாவதென்பதுணர்க.
இம் மாயாவாதம், கடவுட்கும் உயிர்க்கும் இடையே உள்ளதாய், யாண்டும் உயர்ந்தோர் பலராலும் போற்றிக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டான் அடிமைத் திறத்தினை, முனிவர் ஒருவரது நூலைத் துணைக்கொண்டு போக்க உறுதி கொண்டு நிற்றலின், ``மிண்டிய`` என அடைபுணர்த்தும், ஈன்று புறந்தந்து விளங்குவாளை, `இவள் மலடி` என்பார் கூற்றுப்போல, யாவராலும் உள்ளதாய்க் காணப்பட்டுப் பயன் தந்து வரும் உலகினை, விடாய் கொண்டோர்க்கு அதனைத் தணிக்க மாட்டாது வெறுந் தோற்றமாத்திரையாய் ஒழியும் கானல்நீர் முதலியவற்றோடு ஒப்பித்து, `இஃதோர் பொய்த் தோற்றம்`எனக் கூறும் தமது முருட்டு வாதத்தினை, `தற்கம், வாதம், செற்பம், விதண்டை, சலம், சாதி` முதலிய பாகுபாட்டுரைகளாற் சொற்சாலம் படவிரிக்கும் அவரது ஆரவார உரைகள், யாதுமறியா மக்களுள்ளத்தை மருட்சிக்குள்ளாக்குதலின், அதனை, சுழன்றடித்துப் பொருள்களைத் தலைதடுமாறாகப் புரட்டி மக்களை அல்லற்படுத்தும் பேய்க்காற்றின் செயலோடொப்பித்து, மாயாவாதமென்னும் சண்ட மாருதம் சுழித் தடித்து ஆஅர்த்து` என உருவகித்தும் அருளிச் செய்தார். `மாயாவாதிகள்` என அதனை உடையார் மேல் வைத்து அருளாது `மாயாவாதம்` என அவ்வாதத்தின் மேலே வைத்து அருளியதும், அதனது மயக்க மிகுதியைப் புலப்படுத்தற் பொருட்டாம். ``அதிற்பெரு மாயை எனைப் பல சூழவும்`` எனப் பின்னர் வருவதனை (அடி58) இதற்குங் கூட்டியுரைக்க.
இவ்வாதம், வேதத்துள் உபாசனா காண்டத்தின் பின்னர்த் தாய் இறுதியில் நிற்கும் ஞான காண்டத்தையே பற்றிநிற்றலின், மேற்கூறிய கிரியாமார்க்கச் சமயங்களின் பின்னர் வைத்து அருளினார். இதனானே, இதன்நூல், `உத்தர மீமாஞ்ைu2970?` எனவும், இம்மதம், `வேதாந்தம்` எனவும் பெயர் பெறுவவாயின. உபநிடதங்களுள் `அத்துவிதம்` எனவரும் சொல்லினைச் சிறப்பாகப் பற்றிக்கோடலின். `இவ்வாதிகள் தம் மதத்தினை` `அத்துவித மதம்` எனவும், தம்மை `அத்துவிதிகள்` எனவும் கூறிக்கொள்ளினும், `ஏகான்ம வாதம்` என்பது இதற்கு ஏற்புடைய பெயராகும், `மாயாவாதம்` என்பது சிவநெறியாளர் இதற்கு இட்ட பெயராம்.
உத்தர மீமாஞ்சை வேதத்தின் ஞானகாண்டத்தை ஆராய்வ தாயின், அதனை இகழ்தல் குற்றமாமன்றோ எனின் அன்றாம். என்னையெனின், வேதத்தின் பொருளை ஒருதலையாக இனிது விளங்க எழுந்தவையே சிவாகமங்களாதலின் அவற்றை இகழ்ந் தொதுக்கி, அவற்றொடு மாறுபட எழுந்த பிற நூல்களைக் கொள்வதே குற்றமாதலின் என்க, இதனை,
``............. நீண்மறையின் ஒழிபொருள், வேதாந்தத்
தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம்; பிறநூல்
திகழ்பூர்வம்; சிவாகமங்கள் சித்தாந்த மாகும்``
என்றும் (சிவஞான சித்தி - சூ. 8-15) ``வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்`` என்றும் (சிவப்பிரகாசம்-7.) சிவநெறியாசிரியன்மார் இனிது விளக்கிப் போந்தவாறறிக. இன்னும் அவர், சிவாகமங்களை யொழித்து வேதத்தின் சார்பாய் எழுந்த நுல்கள் அனைத்தும் பசுத்தன்மை யுடையோரால், தாம்தாம் அறிந்தவாற்றாற் செய்யப் பட்டன என்பதை,
அருமறை,ஆ கமம் முதல்நூல், அனைத்தும் உரைக்
கையினால்;
அளப்பரிதாம் அப்பொருளை; அரனருளால் அணுக்கள்
தருவர்கள்,பின் தனித்தனியே தாமறிந்த அளவில்
தர்க்கமொடுத் தரங்களினால் சமயம்சா தித்து
-சிவஞானசித்தி, சூ. 8-14
என எடுத்தோதியதுங் காண்க.

56-57. `உலகாயதர்` எனப் பன்மையாற் கூறாது ஒருமையாற் கூறினார். அவரது மதம் ஏனை எல்லா மதங்களினுங் கீழ்ப்பட்டதாய அதனது இழிபுணர்த்தற் பொருட்டு.
`காட்சி ஒன்றே அளவை; அதற்கு வாராதவாறு உரைப்பன வெல்லாம் போலிகள்; ஆகவே, முற்பிறப்பு மறு பிறப்பு, வீடுபேறு முதலியவற்றைக் கூறி, உலகத்தாரை, அலைக்கழித்தல் வேண்டா` என்பதே உலகாயதமதம். `நாத்திகம்` எனப்படுவதும் இதுவே. உலகாயதருள்ளும், `உடம்பே உயிர். மனமே உயர், பிராணவாயுவே உயிர்` என்றாற்போலும் வேறுபட்ட கொள்கை நூல்களையுடையார் உளராகலின், அந்நூல் வேறுபாடுகளை, ``கலாபேதம்`` என்றார், கலா- கலை; நூல். உலகாயதரது கொள்கைகள் பலவும் அந்நூல்களில் கிடைத்தலால், அந்நூற்பொருளை அம்மதமாகிய பாம்பினது கடிய விடமாக உருவகித்தார். கடுவிடம் - பெருநஞ்சு; `அஃதாவது மீளுதற்கரிய நஞ்சு` என்றவாறு. உலகாயதம், ஏனை மதங்கள்போல மக்களை உள்ளவாறு நெறிப்பட்டொழுகச் செய்யாது ``அச்சமே கீழ்கள தாசாரம்; எச்சம் - அவாவுண்டேல் உண்டாம் சிறிது`` (குறள் - 1075) என்றபடி அரசனாணையும், பிறவுமாகிய புறப்பொருள்கள் சார்பாக நெறிப்பட்டொழுகச் செய்தலால், உள்ளத்தால் பழி பாவங்கட்கு அஞ்சுதலைப் போக்கிக் கேடு பயத்தலின், அதனைக் கடுவிடமாக உருவகிப்பார், அதற்கேற்ப, அதனையுடையாரைப் பாம்பாக உருவகித்தார்,

58. உலகத்தைபொய்த்தோற்றம் எனவும், அதனால் கடவுட்கும், உயிர்க்கும் இடையே காணப்படும் ஆண்டவன் அடிமைத் திறமும் அன்னதே எனவும் உபதேசிக்கும் மாயாவாதிகளது உபதேச மொழியைக் கேட்டோர், கடவுளும், புண்ணிய பாவங்களும் சுவர்க்க நரகங்களும் இல்லை என்பதனை வலியுறுத்தி உணர்த்தும் உலகாய தரது நாத்திக மதத்தில் எளிதின் வீழ்ந்து கெடுவர் என்பது தோன்ற, அவர்களை மாயாவாதிகளை அடுக்க வைத்து அவர் கூற்றினைக் கடவுளுணர்விற்கு மாறாவன பலவற்றினும் நேர்மாறாவதெனக் குறிப்பான் உணர்த்தி முடித்தார். எய்தி - எய்துதலால், மாயை - மயக்கம். எனைப் பல - எத்துணையோ பல.

59. தப்பாமே - தவறிப்போகாதபடி. `தாம்பிடித்தது` எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. பிடித்தது, முன்னர்க் கூறிய, முனிவிலாத பொருளை அடையக் கருதிய. கருத்து (அடி.43). `சலியாது` என்பது ஈறு குறைந்தது. இதன்பின்னர். `நின்று` என்பது எஞ்சி நின்றது, ``ஆத்தமானார்`` (அடி.46) என்றது முதலாக இதுகாறும் வந்தவற்றை, ஏறவும், பெருகவும், காட்டவும், மலையவும், ஆர்த்தலால் சூழவும், எய்தலால் சூழவும், தாம் பிடித்தது தப்பாமே சலியாது நின்று` என முடிக்க. இதனுள் ``தாம்`` என்றது, பின்னர், ``தழைப்பவர்`` (அடி.86) எனப் படுவாரைக் குறித்தது,

60-61. ``தழலது`, ``மெழுகது`` என்றவற்றில் அது, பகுதிப் பொருள் விகுதி. `மெழுகுபோல உளம் உருகித் தொழுது` என மாற்றி உரைக்க. கம்பித்து - நடுங்கி. தொழுவது, சிவபெருமானை என்பது உய்த்துணர வைக்கப்பட்டது, ஞானத்தைத் தருபவன் அவனே என்பது வெளிப்படை என்பது தோன்றுதற் பொருட்டு.

62-64. பரவி - துதித்து., கொடிறு - `குறடு` என்னும் கருவி, ``விடாது``என்றதனைத் தனித்தனி கூட்டியுரைக்க, ``படியேயாகி`` என்றது, `இறுகப் பற்றிக் கொண்டு` என்றவாறு,

65-67. `ஆணி அறைந்தாற்போல`` என்றாராயினும், `அறைந்த ஆணிபோல` என்பதே கருத்து. `பசுமரத்தின் கண் அறையப் பட்ட ஆணிபோல இடையறாது நிற்கும் நல்ல அன்பினால் கசிவது` என்க. நல்லன்பு - மெய்யன்பு. கசிவது- துளிப்பதாகி. கண்ணீர், `அது பெருகிக் கடல் என்னும்படி மறுகப்பெற்று` என்க. மறுகுதல், இங்கு, வீழ்தலைக் குறித்தது, அகம் குழைந்து - மனம் கரைந்து; என்றது, `அந்தக் கரணங்களும் அன்பு வடிவாகப் பெற்று` என்றபடி. `அனுகுலமாய் அகங்குழைந்து`என மாறிக் கூட்டுக. `அனுகூலமாய்` என்றது குறுகிநின்றது, `அந்தக்கரணங்கள் முன்னர் மாறிநின்ற ஐம்புல வழியே தம்மை ஈர்த்து அலைத்தாற்போல அலையாது, தம்மோடு ஒத்துநிற்கப் பெற்று என்றவாறு. மெய்விதிர்த்து - உடல் நடுங்கி இவை யெல்லாம் இடையறாத நல்லன்பின் செயலாக அருளினமையின், முன்னர், உளம் உருகுதல் முதலாகப் பரவுதல் ஈறாக அருளியவை ஒரோவழி நிகழும் பொதுவன்பின் செயலாம் என்பது உணர்க.

68-71. சகம் - உலகம், `தம்மைப் பேய் என்று சிரிப்ப` என மாற்றிக் கொள்க. பேய் என்றலாவது, `அறிவை இழந்தார்` என்றலாம். சிரித்தல் - எள்ளி நகையாடுதல். `சகம் சிரிக்கும்படி நாண் நீங்கப் பெற்று` என்க. நாண் நீங்குதல் நன்றாமோ எனின், `அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் - மிகைமக்களான் மதிக்கற் பால` (நாலடி 163.) என்பவாகலின், உலகர் இகழ்ச்சிக்கு இறைவன் அடியார் நாணார் என்க. `நாடவர்`என்றது, `அவர்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. பூணாக - அணிகலனாய் நிற்ப, உலகத்தாரால் இகழப் பெறுதல் இறைவன் அடியார்க்குச் சிறுமையாகாமையே யன்றிப் பெருமையாயும் நிற்றலின்,`பழித்துரை பூணதுவாக` என்றார். நாணது, பூணது என்றவற்றில் அது, பகுதிப் பொருள் விகுதி, `பூணது` என ஒருமையாகக் கூறியது, `பூண்` என்னும் இனத்தை நோக்கி. கோணுதல் - மனம் திரிதல்; திரிவு, வெகுளியான் என்க, சதுர் - திறமை, அஃதாவது, அவர் போலத் தாமும் உலகியலில் வல்லராகல். அந்நிலை மனத்தினும் தோன்றாது ஒழிதலின், `இழந்து` என்றார். அறிமால் - அறிகின்ற மயக்கம்; அஃதாவதுஉலகியலை அறிந்தே அதனைப் பொருட்படுத்தாது நிற்றல். எனவே, பித்துக்கொண்டோர் உலகியலை அறியாது மயங்கி அலமரும் மயக்கம் போல்வதன்று என்றவாறாயிற்று. அறிவதையே, `மால்` என்றமையின், `அறி` என்னும் காலங்கரந்த பெயரெச்சம் வினைப் பெயர் கொண்டதாம், `அறிதுயில்` என்பதற்கும் இது பொருந்தும்.

72-87. சாருங் கதி - அடையத்தக்க நிலை; வீடுபேறு. `கதியது` என்றதில் அது, பகுதிப் பொருள்விகுதி. `கதியதனை` என இரண்டனுருபு விரித்து,` என வருவதனோடு முடிக்க. பரமா அதிசயமாக - மேலான பெருவியப்பாம்படி; இதனையும், அத னோடே முடிக்க. கற்றா - கன்று ஆ; கன்றையுடைய பசு. `கதறியும் பதறியும்` என்றது, `அன்பு மீதூரப் பெற்று` என்னும் பொருட்டாய், `மனமென` என்றதற்கு முடிபாயிற்று. இது, `நினையாது` என வரு வதில், நினைத்தல் வினையோடே முடிந்தது. எனவே, `பிறதெய் வங்களிடத்து அன்பு செலுத்துதலைச் செய்யாது` என்றவாறாயிற்று. இறைவன் குருவாகி அருளுதற்குமுன் முப்பொருள்களின் இயல்பு அனுபவமாய்த் தோன்றாமையின், அக்காலத்தில் ஏனைத் தெய்வங் களையும் சிவபெருமானோடு ஒப்பக்கொண்டு தொழுதல் உண்டாக, அவன் குருவாகிவந்து அருளியபின்பு அவை அனுபவமாய்த் தோன்ற லின், மற்றோர் தெய்வத்தைக் கனவிலும் நினையாத நிலை உளதாதல் பற்றி, `மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது - குருபரனாகிவந்து அருளிய பெருமை` என்று அருளினார்.
`நினையாது` என்றதனை, `நினையாமே` எனத் திரித்து, `நினையாமே வந்து அருளிய` என முடிக்க. `அரும்பரம்` என்பது,` அருபரம்` எனக் குறைந்துநின்றது. அரும்பரத்து ஒருவன் - அரிய பரம் பொருளாகிய இறைவன். `பரத்து` என்றதில் அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை. அவனி - பூமி, `வந்து குருபரனாகி அருளிய பெருமை` என்றதனை, `குருபரனாகி வந்து அருளிய பெருமை` என மாற்றியுரைக்க.
`பெருமை`, `சிறுமை` என்றன, அவ்வளவினவான கருணையைக் குறித்தது. பெருங்கருணையாவது, அருளப்படுவாரது தரத்தினளவாகாது, அதனின் மிகப் பெரிதாவது. அஃது ஏனக் குருளைக்குத் தாயாய் வந்து பால் கொடுத்தமை போல்வது. இதனை, `நாய்க்குத் தவிசிட்டாற் போல` என அடிகள் பலவிடத்தும் எடுத்தோதியருளுவார். அதனை அறியாது, `எம்தரத்திற்கு இஃது அவனாற் செயற்பாலதே என இகழாது` என்பார். `சிறுமையென்று இகழாதே` என்றார். தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிய பின்னர் ஒரோவழி உளம் உருகி ஆடிப் பாடித் தொழுதலும், அதன் பின்னர்ப் பலநாள் செல்ல, சகம் பேய் என்று தம்மைச் சிரித்தலைப் பொருட்படுத்தாது இடையறா அன்பின் இறைவனையே நாடி நிற்றலும் செய்யினும், அனாதி தொட்டு அளவிலா ஊழிக் காலங்காறும், ஓர் இமைப்பொழுதும் நீங்காது உயிர்க்குயிராய் உடன் நின்று நோக்கி உபகரித்து வந்த அவனது அருட்டிறத்தைச் சிறிதும் நினையாது மறந்தமையேயன்றி அதனை மறத்தலாகாது` என, அறிவோர் உரைத்த பல அருளுரைகளையும் அழித்துப் பேசிவந்த பெருங் குற்றத்தைச் சிறிதும் திருவுளத்தடையாது, இடையறா அன்பு தோன்றிய துணையானே வெளிநின்று அருள் புரிந்த திறத்தினை அங்ஙனம் அருளப் பட்டாரது தரத்தினளவானதே என்றல் எத்துணை ஓர் அறியாமையாதல் உணர்க.
இதனானே, முதற்கண் ஒரோவழி உளம் உருகித் தொழுதலும், பின்னர் இடையறா அன்பின் சதுர் இழந்து அறிமால் கொண்டு நிற்றலும் நிகழும் என்பதும், அது நிகழ்ந்தபின்னரே இறைவன் குருபரனாகி வந்து அருளுவான் என்பதும் போந்தன. குருபரனாகி அருளுவதற்குமுன் நிகழும் அந்நிலைகளே சத்திநிபாதமாவன. அவற்றுள், முன்னையது `மந்ததரம், மந்தம்` என இருவகைப்பட்டும், பின்னையது, `தீவிரம், தீவிரதரம்` என இருவகைப்பட்டும் நிகழும். அவற்றுள், `நாணது ஒழிந்து` என்றது முதல், `அறிமால் கொண்டு` என்றது ஈறாக அருளப்பட்டன தீவிரதர சத்திநிபாதமாம் என்க, `இகழாதே` என்பது முதலியன, இறைவன் குருபரனாகிவந்து அருளியதன் பின்னர் நிகழும் ஞானச் செய்திகளாம்.
`நிழலது` என்றதில் அது,பகுதிப் பொருள் விகுதி. `கரையது` என்றதும் அது. `அத்திசை முன்பின்னாகி` எனக் கூட்டுக, அத்திசை - அவ்விடத்து; என்றது, திருவடியுள்ள இடத்தை. அடியார்க்குத் துணையாவன ஆசிரியனது அடியிணையே யாதலின், அதனையே அருளிச் செய்தார், முன்பின் ஆகி - முன்னாதல் பின்னாதல் அணுகி. முனியாது - வெறாது நின்று; வெறுத்தல், மெய்வருத்தம் காரணமாக உளதாவது. அன்பு மீதூர்ந்தவிடத்து அவ்வருத்தந் தோன்றாமையின், `முனியாது` என்றார். அதனை,
`........... மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித்
திருக்கையிற் சிலையுந் தாங்கி
மைவரை என்ன ஐயர்
மருங்குநின் றகலா நின்றார்`
எனவும்,
சார்வருந் தவங்கள் செய்து
முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்துங்
காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா
அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார்
நீளிருள் நீங்க நின்றார்.
எனவும்,
`கருங்கடல் என்ன நின்று
கண்துயி லாத வீரர்`
எனவும்,
`எப்பொழுதும் மேன்மேல் வந் தெழும் அன்பால் காளத்தி
அப்பர்எதிர் அல்உறங்கார்; பகல் வேட்டை யாடுவார்`
எனவும்,
`கருமுகில் என்ன நின்ற
கண்படா வில்லி யார் தாம்`
எனவும் (தி.12 கண்ணப்பர் புராணம்-127,128,132, 151, 166.) சேக்கிழார் நாயனார் இனிது விளங்க அருளிச் செய்தமை யறிக,
இந்நிலை நோக்கியன்றே,
`கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்`
(தி.8 திருக்கோத்தும்பி - 4)என அடிகள் தாமே தம் நிலைக்கு இரங்கி யருளிச் செய்தார் என்க.
`நெக்கு நெக்கு` என்றதற்கு வினை முதலாகிய, `மனம்` என்பது வருவிக்க. `புலன்` என்றது, ஐம்புலன்கண்மேற் செல்லும் அறிவை, அஃது ஒன்றுதலாவது, அவற்றின்மேற் செல்லாது, ஆசான் மூர்த்தியையே அறிந்து நிற்றல், அவ்வழிக்காண்டல் கேட்டல் முதலியன அவன்பொருட்டே நிகழ்தலின், அங்ஙனம் ஒன்றும் தன்மை எய்திய அதனை, `நன்புலன்` எனச் சிறப்பித்தார், நாத - தலைவனே, அரற்றுதல், பிரிவுக் குறிப்புத் தோன்றிய பொழுதாம். மொட்டித்தல் - அரும்புதல்; என்றது, குவிதலை. கரம் மொட்டித்து இருதயம் மலர` என்றது நயம், `மலர்` என்றதனை இருதயத்திற்குங் கூட்டுக. இதனானே, முன்னர், இருதயம் மொட்டித்து, கரம் மலர்ந்திருந்தமை பெறப்பட்டது.
கண்களிகூர்தல், ஆசிரியத் திருமேனியைக் காணும் காட்சி யாலாம், `கண்` என முன்னர் வந்தமையின், பின்னர் வாளா, `நுண்துளி அரும்ப` என்றார். நிறுப்பவும் நில்லாது வெளிப்படுதல் தோன்ற, `நுண்துளி` எனவும், `அரும்ப` எனவும் அருளிச் செய்தார். `ஆர்வலர் புன்கணீர்` (குறள்-71) என்றார் திருவள்ளுவ நாயனாரும். கண்ணீரை நிறுத்த முயல்வது, மெய்யடியார் முன் தாமும் பேரன்புடைய அடியராய்த் தோன்றுதற்கு வெள்கி என்க.
சாயா - மெலியாத. தழைப்பவர் - பெருக நிற்பவர். பெருகுதல், ஆசான் மூர்த்தியைக் காண்டல், அவனது அருட்டிறத்தை நினைதல் முதலியவற்றால் இயல்பாகவே நிகழும் என்க. `தாயே` என்னும் பிரிநிலை ஏகாரம், சிறப்புணர்த்தி நின்றது. வளர்த்தது, ஞானத்தையாம். `வளர்த்தனை` என்றது வினையாலணையும் பெயர். அதன் பின்னர் நான்கனுருபு விரிக்க, போற்றி - வணக்கம்.
இதனுள் `உடல் கம்பித்து, அகம் குழைந்து, கரமலர் மொட்டித்து` என்றாற்போல வந்த பல சினைவினையும் குணவினை யும், அவற்றையுடைய முதல்மேலும், குணிமேலும் நின்றன,
`யானை முதலா` என்றது முதலாக இதுகாறும் வந்தன பலவற்றையும், பிறர்மேல் வைத்துப் பொதுப்பட அருளிச் செய்தாரா யினும் தம் அனுபவச் செயலையே அவ்வாறு அருளினார் என்பது உணர்ந்துகொள்க.

88, 89. மெய் - உண்மை ஞானம். `வேதியன்` என்றது, ஆசாரியனை. வினை, முன்னே செய்யப்பட்டுக் கிடந்தனவும், இஞ் ஞான்று செய்யப்படுவனவுமாம். இவை முறையே, `சஞ்சிதம்` எனவும், `ஆகாமியம்` எனவும் சொல்லப்படும். சஞ்சிதத்தினின்றும் இப் பிறப்பிற்கு நுகர்ச்சியாய் அமைந்தவை `பிராரத்தம்` எனப்படும். இவற்றுள் முன்வினையை அருட்பார்வையால், நெருப்புச் சேர்ந்த விறகுபோல அழிந்தொழியப் போக்கியும், இஞ்ஞான்றை வினையை, உணக்கிலாத வித்துப் போல மெலிவித்தும் கெடுத்தலால், சஞ்சிதத்தினின்று பிராரத்தம்; பிராரத்தத்தினின்று ஆகாமியம் என்று ஆகி, மீளவும் ஆகாமியம் சஞ்சிதமாய் வளர்தலாகிய தொடர்ச்சி அற்றொழிதலால், `வினை கெடக் கைதர வல்ல கடவுள்` என்றார். உற்றுழி உதவுதலை, `கை கொடுத்தல்` என்னும் வழக்குப்பற்றி, `கைதர வல்ல` என்றார். `பிறவிக் கடலின் ஆழாது, கைகொடுத்து ஏற்ற வல்ல` என்றது குறிப்பு. ஏனையோர் அது மாட்டாமையின், `வல்ல` என்றார். இறைவற்குக் கையாவது திருவருளே என்க.
முதற்கண் அன்பரை ஆட்கொள்ளும் முறையை விரிவாக எடுத்தோதிப் போற்றி, அப்பால், முன்னர் மதுரையிலும், இறுதியில் தில்லையிலும் தமக்கு அருள்புரிந்தும், புரியவும் நிற்கும் நிலையினை நினைந்து போற்றுகின்றார்,

90-91. ஆடக மதுரை - பொன்மயமான மதுரை. இது, செல்வச் சிறப்பை விளக்கிற்று, அரசு - தலைவன், அரசனாய் இருந் தான் எனக் கூறப்படும் வரலாற்றோடு இயைய உரைப்பாரும் உளர். மதுரையை, முதற்கண் கூறினமையின, அஃதே அடிகள் முன்னர் வாழ்ந்த இடம் என்பது பெறுதும். மதுரை கூடல், எனப் பெயர் பெற்றமைக்கு வரலாறு ஒன்று கூறப்படினும், `சங்கம் இருக்கும் இடம்` என்பதே பொருளாதல் வேண்டும். `உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்` என்று அருளுவார்.
திருக்கோவையாருள்ளும். `கூடல், கூட்டம்` என்பன ஒருபொருட் சொற்கள். சங்கத்தை, `புணர் கூட்டு` (மதுரைக் காஞ்சி - அடி.762) என்றார் மாங்குடி மருதனார். எனவே, `மதுரை` என்றது திருக்கோயிலில் இருத்தல் நோக்கியும், `கூடல்` என்றது, சங்கத்தில் இருத்தல் நோக்கியும் அருளியவாறாயிற்று. அல்லாக்கால், `மதுரை` என்றதனையே, மீளவும் பிறிதொரு பெயராற் குறித்தல் வேண்டாமையறிக. குருமணி - மேலான ஆசிரியன், சங்கத்தார்க்குத் தலைமை பூண்டு நின்றமை பற்றி, இவ்வாறு அருளிச் செய்தார்,

92-93. தமிழகம், பரதகண்டத்தின் தென்பகுதியாதல் பற்றி, அதன்கண் உள்ள தலங்களைத் தெற்கின்கண் உள்ளனவாகக் கூறுப; அதனால், `தென்தில்லை` என்றார். பின்னும் இவ்வாறு வருவன பல உள. இதற்கு, `தென் - அழகு` என்றே உரை கூறிப் போதலும் செய்ப. ஆடி - ஆடுபவன்; இப்பெயர் விளியேற்று நின்றது, இன்று - உன்னை யான் அடையப் பெற்ற இக்காலத்தில். `ஆரமுது` என்றது, அமுதம் கிடைத்தற்கரிய பொருளாதலை விதந்தவாறு. அதனால், இறைவன் காண்டற்கரியன் என்பது உணர்த்தப்பட்டது. `அமுது` முதலியன வாக இங்கு வருவன பலவும் உவம ஆகுபெயராதல் அறிக. இவ்விரு தலங்களையும் அருளிய பின்னர், அவனது பெருமைகளை எடுத் தோதிப் போற்றுகின்றார்.

94-95. மூவா - கெடாத. மறைகளை (வேதங்களை), `நான்கு` என்றல், `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் பொருள் பற்றிய வழக்கென்றலே பொருந்துவதாம், என்னையெனின் சொல்பற்றி `மூன்று` எனவும், `நான்கு` எனவும் `அளவில்லன` எனவும் பலவாறு கூறப்படுதலின், `மறை` என்பதற்கும், `வேதம்` என்பதற்கும் சொற் பொருள் யாதாயினும், `உண்மை முதனூல்` என்பதே பொருளாம். அஃது எக்காலத்திலும் எவ்விடத்திலும் எம்மொழியிலும் தோன்றுதல் கூடும். அத் தோற்றம் இறைவன் திருவருள் முன்னிற்றலானேயாம், ஆதலின், `மறைகள் ஈசன் சொல்` (சிவஞான சித்தி. சூ. 2.30) என்றல் பொருந்துவதேயாகும்.
`உற்ற குறியழியும் ஓதுங்காற் பாடைகளில் சற்றும் பொருள்தான் சலியாது`
(உண்மை விளக்கம்- 41. ) என்றபடி, சொல்லுக்கன்றிப் பொருட்கு அழிவின்மையின், `மூவா நான்மறை` என்று அருளினார். இனி, நான்மறையாவன இருக்கு முதலியவே எனினும், மூவாமை, பொருள் பற்றிக் கூறியதாமன்றிச் சொல் பற்றியதாகாமையறிக. `முதல்வன்`, `ஆக்கியோனும், அவற்றால்` உணர்த்தப்படும் தலைவனும் என்க.
சே ஆர் - இடபம் பொருந்திய. `வெல்கொடி` என்ற வினைத் தொகையில், `கொடி` என்பது, `ஆறு சென்றவியர்` என்பதில், `வியர்` என்பது போலக் காரியப் பெயர்.

96-97. `மின் ஆர்` எனப் பிரித்து, `ஒளி பொருந்திய` என்றும், `மின்னார்` என ஒரு சொல்லாகவே கொண்டு. `உமையை உடைய` என்றும் பொருள் கொள்க. விகிர்தன் - உலகியலின் வேறுபட்டவன். கல் - கல்லினின்றும். `வானத்தை வில்லா வளைத்தல், மணலைக் கயிறாத் திரித்தல்` என்பன போல `கல்லில் நார் உரித்தல்` என்பதும், செயற்கருஞ் செயலைச் செய்தலைக் குறித்து வழங்கப்படுவதோர் உவம வழக்கு. இதுவும் ஒட்டணியின் பாற்படும். எனவே, `கல்லில் நார் உரித்தது போலும் வியக்கத் தக்கதொரு செயலைச்செய்தவனே` என்பது பொருளாயிற்று. இது, தம்மை அன்பராக்கிய செயலைக் குறித்தே அருளியதாம். தம் வன்கண்மையை உணர்த்தத் தம்மை, `கல்` என்று அருளி, இறைவனது அருளுடைமையை உணர்த்த, `கனி` என்று அருளிச் செய்தார். `நார் என்பது, அன்பினையும் குறித்துநிற்றல்` காண்க.

98-99. `காவாய்` என்றது, `முன்னர்உலகியலின் நீக்கி அங்ஙனம் ஆண்டுகொண்டவாறே, இனியும் அதன்கண் செல்லாத வாறு காத்தருள்` என வேண்டியதாம். கனகம் - பொன். ஆ என்னும் இடைச்சொல் அடுக்கி, `ஆவா` என வந்தது, இஃது, `இரக்கம் வியப்பு` என்பவற்றைக் குறிக்கும் இடைச்சொல்; இங்கு இரக்கங்குறித்து நின்றது. `அருளாய்` என்றது, `உனது திருவடிப் பேற்றினை அளித் தருள்` என்றதாம். `ஆவா` என்றது, அது பெறாமையால் உளதாகும் வருத்தம் பற்றி. `எனக்கு` என்பது, `என்றனக்கு` எனச் சாரியை பெற்று வந்தது; `என்றெனக்கு` எனப் பாடம் ஓதுதலுமாம்.

100-101. `படைப்பாய்` முதலிய மூன்றும் விளிகள். இடர்- பந்தம்; அதனைக் களைதல் கூறவே, அஃது, `அருளல்` என்பதைக் கூறியதாயிற்று. எந்தாய் - எம் தந்தையே.

102-103. ஈசன் - ஐசுவரியம் உடையவன்; இவ் வட சொல்லைத் தமிழில், `செல்வன்` என்பர் ஆசிரியன்மார். இறைவன் - எப்பொருளிலும் தங்குவோன். `தேசு` எனக் குற்றியலுகர ஈறாய் நிற்கும் வடசொல், அம்முப்பெற்று, `தேசம்` என வந்தது. `குன்று, குன்றம்; மன்று மன்றம்` என்றற்றொடக்கத்தன போல. இன்னோரன்ன வற்றை, `குற்றிய லுகரம் அக்குச்சாரியை பெற்றன` (தொல் எழுத்து -418) என்பர் ஆசிரியர் தொல்காப்பியர். சிவபெருமான், தீத்திரள்போலும் திருமேனியையன்றித் தூய பளிங்குத் திரள் போலும் திருமேனியையும் உடையவனேயாம். இனி, இதனை, திருநீற்றுப் பூச்சுப் பற்றிக் கூறப்படுவதாகவும் உரைப்பர்.

104-105. அரைசு - அரசன். விரை - வாசனை. சரணம் - திருவடி. `விரைசேர்` என்றது, மலர்போறலைக் குறித்தது.

106-107, வேதி - வேதத்தை உடையவன். விமலன் - மாசில்லாதவன். ஆதி - எப்பொருட்கும் முதலானவன். அறிவு - அறிவே வடிவாயுள்ளவன்.

108-109. கதி - எவ்வுயிரும் சென்று சேரும் இடமாய் உள்ள வன். இன்பவடிவினனாதல் பற்றி, `கனியே` என்றார். நம்பன் - விரும்புதற்குரியவன்.

110-111. உடையான் - எப்பொருளையும் தனக்கு உடைமையாகவும், எவ்வுயிரையும் தனக்கு அடிமையாகவும் உடையவன். உணர்வு - உயிர்கட்கு அறிவைப் பயப்பவன். `கடையேனது அடிமைத் தன்மையையும் பொருட்படுத்தி நோக்கினாய்` என்றது, `அதனை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாய்` என்றபடி.

112-113. ஐயன் - வியக்கத் தக்கவன்; வியப்பு, பல்கோடி அண்டங்களையும் தன்னுள் அடக்கிநிற்கும் பெரியனாய் நிற்கும் நிலைபற்றித் தோன்றுவது. அணு - அவ்வாறே சிறியதிற் சிறியனு மாயவன். சைவன் - சிவம் (மங்கலம்) உடையவன். தலைவன் - யாவர்க்கும் தலைவன்.

114-115. குறி - உலகில் காணப்படும் ஆண் பெண் வடிவங் கள். குணம் - அவற்றிற்கு அமைந்த இயல்புகள். நெறி - அவற்றிற்கு அமைந்த ஒழுகலாறுகள். நினைவு - அவ்வொழுகலாறுகட்கிடையே அவற்றது உள்ளங்களில் எழும் எண்ணங்கள். இவை அனைத்திலும் இறைவன் கலந்து நிற்கும் கலப்புப் பற்றி அவனை அவையேயாக அருளினார். பின்னரும் இவ்வாறு அருளப் படுவனவற்றை அறிந்து கொள்க.

116-117. மருந்து - அமுதம். தேவர்கட்குக் கிடைத்துள்ள அமுதம் அன்று என்பார், `வானோர்க்கரிய மருந்து` என்றார். ஏனோர், மக்கள். வானோர், தம் சுவர்க்கபோகத்தில் மயங்கி வழி படாது காலங்கழித்தலின், இறைவன் அவர்கட்கு அரியனாயும், மக்கள் அவ்வாறன்றி உலகியலின் துன்பத்தை உணர்ந்து அதனை நீக்க வேண்டி வழிபட்டு நிற்றலின் அவர்க்கு எளியனாயும் நிற்கின்றான் என்க. `இப்பூமி - சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு` (தி.8 திருப்பள்ளி. 10) எனப் பின்னரும் அருளிச் செய்வார்.

118-119. சுற்றம் - வழித்தோன்றல்கள். மூவேழ் தலை முறையாவன, தன் தந்தைவழி, தாய்வழி, தன் மனைவிக்குத் தந்தைவழி என்பவற்றுள் ஒவ்வொன்றினும் ஏழாய் நிற்கும் தலை முறைகளாம். இவைகளைச் சென்றகாலம் பற்றியும், வருங்காலம் பற்றியும் கொள்க. ஒரு குடியுள் ஒருவன் செய்த நன்மை தீமைகள், முன்னும் பின்னும் அவனது இம் மூவேழ் தலைமுறையில் உள்ளாரை யும் சென்று பற்றும் என்பது வைதிக நூற்றுணிபு. அதனால், `தன்னால் ஆட்கொள்ளப்பட்ட அடியவரது மூவேழ் சுற்றங்களையும் நரகின்கண் அழுந்தாது மீட்டருள்வான்` என்று அருளிச் செய்தார். இவ்வாறே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்,
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்; மடநெஞ்சே, அரன்நாமம்
கேளாய்; நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம்அருளிக்
கேளாய நீக்குமவன் கோளிலிஎம் பெருமானே.
(தி.1. ப.62. பா.1) என அருளிச் செய்தல் காண்க.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
(குறள் - 62.) என்று அருளியதும், இதுபற்றி.
`மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்`
(குறள் - 456.) என்றமையால் நன்மக்கட்பேற்றிற்கு மனமொழி மெய்களின் தூய்மையும், தவமும் வேண்டும் என்பது விளங்கும். விளங்கவே,
`நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்`.
என்னும் அருமைத் திருக்குறளை(138)ப் பொன்னேபோற் பொதிந்து போற்றுதல் இன்றியமையாததொன்று என்பது போதரும். இவ்வாறு சுற்றத்தையும் காக்கும் வன்மையுடையன் என்பார், `அருள் அரே` என்று அருளினார். முரண் - வலிமை.

120-121. அடியவர், தம் அடிமைத் திறம் திறம்பாது நிற்பினும், இறைவன் தான் அவரொடு தோழமை முறையிலும், உடன் பிறந்தார் முறையிலும் எளியனாய் நின்று அருளுதலை, ``தோழா, துணைவா`` என்பவற்றால், அருளிச் செய்தார். வாழ்வு - நல்ல வாழ்க்கை. வைப்பு - சேம நிதி.

122-123. முத்தன் - பாசத்தினின்றும் நீங்கினவன். இஃது இயல்பாகவே நீங்கியதாம். இஃது,`அனாதி முத்தத் தன்மை` எனப்படும். முதல்வன் - எப்பொருட்கும் முன்னுள்ளவன். அத்தன் - தந்தை. அரன் - பாசங்களைத் தேய்ப்பவன்.

124-125. ``உரை`` என்பது, `பாச ஞானம்` எனவும், ``உணர்வு`` என்றது, `பசு ஞானம்` எனவும் கொள்ளப்படும். ``உரை யுணர்வு``, உம்மைத்தொகை. இறந்த - கடந்த. ஒருவன் - தனக்கு நிகராவது ஒரு பொருளும் இல்லாதவன். விளைவு - நிகழ்ச்சி; அஃது ஆகுபெயராய், அதனது காரணத்தின் மேல் நின்றது, காணப்படும் சிறப்புப் பற்றி, கடல் சூழ்ந்த உலகத்தையே எடுத்தோதினார்.

126-127. அருமை, காணலாகாத நிலை; அது, கருவி கரணங்களாகிய உடம்பொடு நிற்கும் நிலையாம், அதன் கண்ணே உள்ள எளிமையாவது, அந்நிலையிற்றானே கண்ணாற் காண எழுந் தருளி வருதலாம். அழகு - அழகிய திருமேனியையுடையவன்; இரு மடியாகுபெயர். `இன்பமாகிய மழையைப் பொழிதலின், கண்போலச் சிறந்து நிற்பவனே` என்பார், ``கருமுகிலாகிய கண்ணே`` என்றார்.

128-130. ஏனை மலைகளின் வேறுபடுத்தற்கு, ``மன்னிய`` எனவும், ``திருவருள்`` எனவும் அருளிச் செய்தார். ``மலை`` என்றது, பெருமை பற்றி வந்த உவமை. சேவகன் - வீரன். சேவகம், ஒரு சொல்லால் தம்மை வழிப்படுத்த திறல்; ``மன்ன என்னை ஓர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்`` (தி.8 செத்திலாப் பத்து-2) எனப் பின்னரும் அருளுப.

131-134. தொழுத கை - வணங்கிய உடன், `கை` என்பது இங்குக் காலத்தை உணர்த்திற்று. இனி, `தொழு தகை` என்றானும், `தொழுத கை` என்றானும் பிரித்து, `தொழுந் தகைமையுடையார், தொழுத கையினை யுடையார்` எனப்பொருள் கொள்ளலுமாம். துடைத்தல் - விரையச் சென்று முற்றத் தொலைத்தல், வாரி - கடல். முழுதும் - பசுக்களும், பாசங்களுமாகிய எல்லாப் பொருள் களையும்.

135-136. நோக்கி - பார்வையையுடையவள். தாய் - தாய்போலச் சிறந்தவள்.

137-142. பார் - நிலம். ஐந்து, `நாற்றம்,சுவை, உருவம், ஊறு, ஒலி` என்னும் குணங்கள். இவற்றுள் நாற்றம் முதல் ஒரோவொன்றாக முறையே நீக்கி, ஏனையவற்றை நீர் முதலிய ஏனை நான்கு பூதங் களினும் உள்ளன என்க. அளிபவர் - மனம் இளகுபவர்.

143-144. தமக்கு நனவிலும் வந்து அருளிய அருட்டிறம் இனிது விளங்க, கனவிலும் தேவர்க்கு அரியனாதலை, முன்னர் எடுத் தோதினார். இங்ஙனம் இறைவனை அவனது பெருமைகள் பல வற்றையும் விதந்து போற்றிய பின்னர், மதுரையும், தில்லையும் தவிர ஏனைய தலங்கள் பலவற்றிலும் எழுந்தருளியிருக்கும் நிலையை விதந்து போற்றுகின்றார்.

149-150. `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று. கண் ஆர் - கண்ணால் பருகும். ஆர்தல் - நிறைதல். அஃது இங்கு நிறையப் பருகுதலைக் குறித்தது.
155. இஃது இடைநிலையாய் வந்தது. அன்பு மிகுதியால் இன்னோரன்னவை இடை இடையே அடிகள் வாக்கில் நிகழ்தல் காண்க.

159. பாங்கு - அழகு.

160. விடங்கன் - ஒருவராற் செய்யப்படாது, இயல்பாய் அமைந்த திருவுருவத்தை யுடையவன். `அழகன்` என்றுமாம்.

162-163. இத்தி - கல்லால மரம். இருமூவர், அட்டமா சித்தி வேண்டி நோற்ற மகளிர் அறுவர். அத்தி - வெள்ளானை. `மகளிர்க்கும், அத்திக்கும் அருளியவன்` என்க, இவ்வரலாறுகளைத் திருவிளை யாடற் புராணம் சிறிது வேறுபடக் கூறும்.

164-165. தென்னாடு - பாண்டிநாடு. தமக்கு அருளிய நிலை பற்றி, அதனையே அடிகள் இறைவனுக்கு உரிய நாடாகப் பல விடத்தும் அருளுவர். எனினும், எல்லா நாடும் அவனுடையனவே என்பது தெரித்தற்கு, அடுத்த, ``எந்நாட்டவர்க்கும் இறைவா`` என்று அருளினார். இறுதிக் கண் எந்நாட்டையும் எடுத்தோதி முடித்து, இனியும் முன்போலப் பிறவாற்றாற் போற்றுகின்றார்.

166-167. பன்றிக்குட்டிகட்கு இறைவன் தாய்ப் பன்றியாய்ச் சென்று பால் கொடுத்த வரலாற்றைத் திருவிளையாடற்புராணத்துட் காண்க. ஏனம் - பன்றி. குருளை - குட்டி. மானம் - பெருமை.

168-169. அம்மான் - தலைவன். இருள் - துன்பம்; நரகமு மாம்; உவமையாகுபெயர்.
171. களங்கொளக் கருத - உன்னை என் நெஞ்சார நினைக்கும்படி. நெஞ்சத்தையே இங்கு, `களம்` என்றார் என்க.

172. இங்கு - இப்பொழுது.

174-176. `அத்தன், ஐயன்` என்பன முன்னர்க் கூறப்பட்ட வாயினும், நித்தன் முதலாகப் பின்னர் வருவனவற்றோடு ஒருங்கு நின்று சிறப்பித்தற் பொருட்டு ஈண்டும் கூறினார். நித்தன் - அழி வில்லாதவன். நிமலன் - மலம் இல்லாதவன். பத்தா - தலைவன்; வட சொல்; இஃது இயல்பாய் நின்று, அண்மை விளி ஏற்றது, `பத்தன்` எனக் கொண்டு, `அன்புடையவன்` என்றும் உரைப்ப. பவன் - எவ்விடத்தும் தோன்றுபவன்; `எவையும் தோன்றுதற்கு இடமாயுள்ளவன்` என்றுமாம்,

177-178. பிரான் - கடவுள். அமலன் - மலம் இல்லாதவன்; `விமலன், அமலன், நிமலன்` என்பன ஒரு பொருட்சொற்களாயினும், பலவகையாகப் போற்றுதல் செய்யும் போற்றிக் கோவையில் பொருள் வகை ஒன்றானே போற்றுதல் வேண்டும் என்பதோர் யாப்புறவில்லை; சொல்வகையானும் பலவகையாகப் போற்றுதல் செய்யப்படும்; அதனால், இன்னோரன்ன சொற்களால் பன்முறையானும் போற்றினார் என்க.

179-180. கோலம் - வடிவம்; `அதனையுடைய நெறி யாளனே` என்க. நெறியாளன் - உய்யும் நெறியை உணர்த்துபவன்; ஞானாசிரியன். தரியேன் - இனிப் பொறேன்; `வீடுதந்தருள்` என்பது கருத்து. ``முறையோ`` என்ற முறையீட்டுச் சொல்லை, இதன்பின் கூட்டியுரைக்க. `முதல்வா` என்றதனை, `ஈண்டு எனது முறையீட்டைக் கேட்பது உனக்குக் கடப்பாடு` என்னுங் கருத்தாற் கூறினார்.

181-182. உறவு - உறவினன். உயிர் - உயிரின்கண் கலந்து நிற்பவன். சிறவு - சிறப்பு; சிறப்புடையவன். சிவம் - மங்கலம்; மங்கலம் உடையவன்.

183-184. `மைந்தன்` என்பது, `மஞ்சன்` எனப்போலி யாயிற்று. `வலிமை யுடையவன்` என்பது பொருள். மணாளன் - `மண வாளன்` என்பதன் மரூஉ. `கலியாணகோலம் உடையவன்` என்பது பொருள். சிவபிரான் வடிவங்களுள், கலியாண கோலமும் ஒன்றாதல் உணர்க. பஞ்சு ஏர் அடி - செம்பஞ்சினையும், அழகினையும் உடைய பாதம்.

185-186. அலந்தேன் - உழன்றேன், நாயேன் அடியேன் - நாய்போன்றேனாகிய அடியேன். இலங்கு சுடர்- விளங்குகின்ற விளக்குப்போலும்.

187-190. இந்நான்கடிகளிலும் சிவபிரான், தமிழ்நாடன்றிப் பிற நாடுகளிலும் கோயில் கொண்டிருத்தலை எடுத்தோதிப் போற்று கின்றார். `கவைத்தலை, குவைப்பதி, அரிகேசரி` என்பன தலங்களாம், அவை இக்காலத்து அறிதற்கரியவாயின. சேரநாடும் மலைநாடு எனப்படுமாயினும் இங்கு, ``மலைநாடு`` என்றது, இமயத்தைச் சார்ந்த நிலப்பகுதியையாம். அங்குக் கேதாரம், பசுபதீச்சரம், அனேகதங்காவதம், இந்திர நீலப் பருப்பதம் முதலிய சிவதலங்கள் இருத்தல் வெளிப்படை. ``கலை ஆர்`` என்றது, `நூல்கள் நிரம்பிய` என்றும், `மான் கூட்டங்கள் நிறைந்த` என்றும் பொருள் கொள்ளுதற்கு உரித்து. அத்தொடரால் சிறப்பிக்கப்பட்ட தலம் அறியப்படாமையின், அத்தொடர்க்கும் பொருள்காண்டல் அரிதாகும். கவைத்தலை முதலியவற்றைத் தலங்களாகக் கொள்ளாது, சொற்பொருள் கூறுவாரும் உளர்.

191-192. பிற நாட்டுத் தலங்களை நினைந்த தொடர்பானே, தமக்கு மீளவும் குருவடிவத்தைக் காட்டியருளிய திருக்கழுக் குன்றத்தையும், தமது பாண்டிநாட்டில் பொன்னுருவில் நின்று அருள் புரியும் திருப்பூவணத்தையும் நினைந்து, இவ்விரண்டடிகளிலும் போற்றி செய்தார்.

193-194. மூவகைத் திருமேனிகளுள் அருவத் திருமேனி, உருவத் திருமேனி என்னும் இரண்டனைக் கூறவே இடைநிற்கும் அருவுருவத் திருமேனியும் தானே பெறப்பட்டது. முன்னர், ``மன்னிய திருவருள் மலை`` (அடி.128) என்றார்; இங்கு, ``மருவிய கருணை மலை`` என்றார். மருவுதல் - அடியவர் உள்ளத்து நீங்காது பொருந்துதல்.

195-196. `நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படங்கல்` என்னும் ஐந்து நிலைகளும் வடமொழியில் முறையே, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்` எனப்படும். இவை, `இருள்நிலை, பொருள்நிலை, அருள்நிலை` என்னும் மூன்று நிலைகளிலும் நிகழ்வன. இருள்நிலையில், ஒன்றைவிட மற்றொன்றில இருள் (அறியாமை) மிகும்; பொருள் நிலையில், ஒன்றைவிட மற்றொன்றில் உலகப் பொருள் மிக்கு விளங்கும்; அருள்நிலையில் ஒன்றைவிட மற்றொன்றில் இறைவனது திருவருள் மிக்கு விளங்கும். அவற்றுள் அருள்நிலையில் உள்ள துரிய நிலையே இங்குக் குறிக்கப் பட்டது. அந்நிலையில் பேரின்பம் சிறிது அரும்புதலன்றி, வெள்ள மாய்ப் பெருகி உயிரை விழுங்கிக் கொள்ளும் நிலை உண்டாகாது. அதனால், இந்நிலையில் நின்றோர், பேரின்ப வெள்ளத்துள் மூழ்கித் திளைத்திருத்தலன்றி, உலகத்தை நோக்கி நிற்றலும் உடையராவர். இதனைக் கடந்த அதீத நிலையிலே அது கூடுவதாகும். அதனைப் பெற்றோரே சிவனது உண்மை நிலையைத் தலைப்பட்டவராவர். அவர்க்கு அந்நிலையினின்றும் மீட்சி இல்லை. ஆதலின், அப்பெரு மானை, ``துரியமும் இறந்த சுடர்` என்று அருளினார். இருள்நிலை முதலிய மூன்றும் முறையே. ``கேவலம், சகலம், சுத்தம்` எனப்படும், உம்மை, சிறப்பும்மை. தெளிவு அரிது - கருவிகளால் அறியப்படாதது. தெளிவு - அனுபவப்பொருள்.

197-198 தோளா - துளையிடாத. முத்தம் - முத்து. துளையிடாத முத்தில் ஒளி குறைபாடின்றி விளங்கும். மாணிக்கம் முதலிய பிறவற்றின் ஒளிகளினும், முத்தின் ஒளி தண்ணிதாதல் பற்றி, அதனையே உவமித்தார். திருநீற்றுப் பூச்சினால் விளங்கும் வெண்மை பற்றி உவமித்தார் என்றலுமாம். இறைவன் தனக்கு அடியரானார்க்கு அன்பனாதலை, ``தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி`` எனப் பின்னரும் (தி.8 திருச்சதகம்-69) அருளுவார்.

199-200. ஆராமை - நிரம்பாமை. பேர் - பெயர். ஆயிரம், மிகுதிக்கு ஓர் எண் காட்டியவாறு. எல்லாம் உடைய பெருமானாகலின் அவைபற்றி வரும் பெயர்கள் அளவிலவாயின. பெம்மான் - பெரியோன்.

201-202. தாளி அறுகு - தழைத்துப் படர்ந்த அறுகம்புல். இது, பனையினுள் ஒருவகை, `தாளிப்பனை` என்னும் பெயர்த்தாதல் பற்றி யும் அறியப்படும். `இதனைக் கன்றுகள் விரும்பி மேயும்` என்பதும், அவ்வாறு மேயப்பட்டு வேனிற் காலத்தில் பட்டுக்கிடப்பினும் மழைக் காலத்தில் செழித்துப்படரும் என்பதும் இதனை அங்ஙனமே வளர விட்டால், அரும்புவிட்டுப் பூக்கும் என்பதும், அப்பூ நீலநிறத்துடன் அழகியதாய் விளங்கும் என்பதும், அதனை, மணவினைக்காலத்தில் மணமகளுக்கு வாகை இலையொடு விரவத் தொடுத்து அணிவர் என்பதும், பின்வரும் அகநானூற்றுப் பாடலின் (136.) அடிகளால் அறியப்படும்.
``மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டி.``
அறுகம் புல், பண்டைத் தமிழ்ச் செய்யுட்களில், `அறுகை` என வழங்கும். இதனால், இவ்வறுகு தமிழகத்தில் பண்டு கண்கவர் வனப் பினதாய்ச் சிறந்த ஒரு மங்கலப் பொருளாய் விளங்கினமை பெறப் படும். அதனானே வாழ்த்துக் கூறுவோர், மஞ்சளரிசியுடன் இதனை யும் சேர்த்துத் தூவி வாழ்த்துதல் பண்டை மரபாய் இருந்தது.
``அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்`` என்னும் வரி, சிலப் பதிகாரத்துள் (கனாத்திறம் உரைத்த காதை - 43) கடவுள் வழிபாடு கூறுமிடத்துக் காணப்படுகின்றது. இவ்வாற்றனே, ஞானாசிரியர்க்கு அவர்தம் அடியவர் தழைத்து வளர்ந்த அறுகம் புல்லாலாய மாலையை அணிவித்து அவரை வழிபட்டு நிற்றல் மரபாய் இருந்தமை பெறப் படும். செங்கழுநீர்ப் பூமாலையும் அவ்வாறு ஞானாசிரியர்க்கு அணியப்படுவதாம், அதனைப் பின்னர் (அடி.217) கூறுப. சிவபிரான் அடிமுடி தோன்றாத நீண்ட ஒளிப்பிழம்பாய்த் தோன்றியது, மால் அயன் முன்பு என்க. நிருத்தன் - நடனம் புரிபவன்.

203. இறைவன் தன் அடியவர் சாத்தும் சந்தனக் குழம்பினை அணிந்து அழகுடன் விளங்குதல் வெளிப்படை.
205-206. `மந்திர மாமலை, மகேந்திரமலை` என்பது, கீர்த்தித் திருவகவலில் காட்டப்பட்டது. உய்யக்கொள்வாய் - உய்யுமாறு உலகியலினின்றும் மீட்டுக் கொள்பவனே. ``எந்தமை`` என்றது, அடியவர்களை.

207-208. ``புலிமுலை புல்வாய்க்கு அருளினை``(அடி 207) என்ற இதுவும் ``கல்நார் உரித்த`` (அடி 97) என்றாற்போல `நினது அரிய திருவருளை எனக்கு வழங்கினாய் என, அன்னதொரு செயலைக் குறிப்பது. ``புலியொன்றைத் தாயை இழந்த மான்கன்று ஒன்றிற்குப் பால்கொடுக்கச் செய்தனன்`` என்ற வரலாறொன்றும் உண்டு. அலை கடல் - அலைகின்ற கடல்நீர். `இவ்வடி, வலைவீசிய திருவிளையாடலைக் குறித்தது` என்ப. ``மீமி`` எனவும், ``நடந்தாய்`` எனவும் போந்த சொற்கள், அங்ஙனம் பொருள்படுதற்கு ஏலாமையின், பிரளய வெள்ளத்துட்படாது நின்று, அதனுட்பட்டு அலந்த மாயோன் முதலியோர்க்குத் தோன்றி அருள்புரிந்தமையைக் குறித்தது என்றல் பொருந்தும்.

209-210. கரிக்குருவிக்கு அருள்புரிந்தமை திருவிளையாடற் புராணத்துட் கூறப்பட்டது. அதுவும், எளியோர்க்கு அருளுதலையே விளக்கி நிற்கும், இரும் புலன் - வரம்பில்லனவாய் எழும் ஐம்புல வேட்கைகள். நிரம்புதலை, `விடிதல்` என்னும் வழக்குப் பற்றி, புலர என்றார். அஃதாவது. `இனி இவை அமையும்` என்று ஒழிதல். இசைந் தனை - வந்து பொருந்தினாய். `உனக்கு வணக்கம்` என்க.

211-212. படி உறப் பயின்ற - நிலத்தின்கண்ணே பல நாள் எம்முடன் மிகப் பழகின. பாவக - வேடத்தையுடையவனே. இறைவன் குருவாகி வந்த கோலத்தை, `வேடம்` என்றார். தன்பொருட்டன்றிப் பிறர்பொருட்டுக் கொண்டதாகலின், ``ஒருவனே இராவணாதி பாவகம் உற்றாற் போல``(சிவஞான சித்தி, சூ. 1.67) என்றதும் காண்க. அடி நடு ஈறு - உலகத்தின் தோற்றம் நிலை இறுதி. அவற்றைச் செய்பவனை அவையாகவே அருளினார்.

213-214. நானிலம் - பூமி. `நாகலோகம் முதலிய மூவுலகத்தி லும் புகாமல்` என்றது `பிறவி எய்தாமல்` என்றபடி. பரகதி - மேலான நிலை; வீடுபேறு. பாண்டியற்கு அருளியது, அடிகள் நிமித்தமாக அவனும் காண எழுந்தருளிவந்தது.

215-216. ஒழிவு அற - எப்பொருளும் எஞ்சுதல் இல்லையாக. நிறைந்த - எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கின்ற. செழுமலர்ச் சிவபுரம்- உலகமாகிய கொடிக்குச் செம்மையான பூப்போலச் சிறந்து நிற்கும் சிவலோகம்; குறிப்புருவகம். திருக்கயிலையைச் சேக்கிழார் இங்ஙனம் (தி.12 திருமலைச் சிறப்பு. 3) சிறப்பித்தல் காண்க, ஒளிவடிவாய் நிற்றல் பற்றிச் செழுமை கூறினார்.

217-218. கழுநீர் மாலை பற்றி மேலே (அடி.201.) கூறப் பட்டது. மையல் - மயக்கம்; திரிபுணர்வு. துணித்தல் - அறுத்தல்.

219-220. பிழைப்பு - பொருந்தாதது. வாய்ப்பு - பொருந்து வது. இத்தொழிற் பெயர்கள் இரண்டும் ஆகுபெயராய் நின்று இவற்றை யுடைய பொருளைக் குறித்தன. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `குழைத்த` என்பது, உன்னைக் `குழைவித்தற்குச் செய்த` எனக் காரணத்தின்மேல் நின்றது. ``அன்போடியைந்த வழக்கு`` (குறள். 73). என்றதில், `இயைந்த` என்றதுபோல.

221- 222. திரிபுரம் வகையால் மூன்றாயினும், அதனுட்பட்ட நகரங்கள் பலவாதல் பற்றி, ``பல`` என்றார். அன்றி. ஒன்றல்லன வெல்லாம், `பல` எனப்படுதல் பற்றி, அவ்வாறு அருளினார் என்றலு மாம். புராணன் - பழையோன். பரம் பரஞ்சோதி - மேலானவற்றினும் மேலான ஒளி; பேரறிவு. `அதனையுடைய பரன்` என்க, ``பரன்`` என்றது, வாளா பெயராய் நின்றது.

223-225. புயங்கன் - பாம்பையணிந்தவன். `புயங்கம் என்ப தொருநடனத்தைச் செய்பவன்` எனவும் உரைப்ப. புராண காரணன் - காரணங்கள் பலவற்றிற்கும் காரணமாய் நிற்பவன். சயசய - வெல்க வெல்க.
இத் திருப்பாட்டும் கீர்த்தித்திருவகவலேபோல, நிலை மண்டில ஆசிரியம் என்க.
சிற்பி