திருநறையூர்ச் சித்தீச்சரம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் மரவும் உடையான் இடமாம்
வாரும் மருவி மணிபொன் கொழித்துச்
சேருந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

இடையறாது ஒழுகும் நீர்ப்பெருக்கு , மணியையும் பொன்னையுங் கொழித்துக்கொண்டு சேர்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , சடையின்மேல் நீரையும் , பல மலர்களையும் பிறையையும் ஊர்ந்து செல்லுகின்ற பாம்பையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` அரவம் ` எனப் பாடம் ஓதி , ` நிலவும் ` என்றதற்கு , ` நிலைபெற்ற ` என உரைப்பாரும் உளர் . ` அருவிபோலக் கடிதாய ஓட்டத்தையுடைய நீர் ` என்றற்கு , ` அருவி ` என்று அருளினார் . ` நறையூர் ` எனப்பட்டது , ஊர்ப்பெயர் எனவும் , ` சித்தீச்சரம் ` எனப் பட்டது கோயிலின் பெயர் எனவும் அறிக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்குந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

வளையையணிந்த கைகளையுடைய இளமகளிர் , மிக்க நீரினுள் மூழ்கி இன்புறும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , புற்றில் வாழ்கின்ற , படத்தையுடைய பாம்பு போலும் இடையினையுடையவளாகிய தன் தேவி அஞ்சும்படி , துளையையுடைய துதிக்கையையுடைய யானையினது தோலை உரித்துப் போர்த்தவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` ஏர் `, உவம உருபு . உரித்தல் , தன் காரியம் தோன்ற நின்றது . பெருமையை உணர்த்தும் , ` தட ` என்னும் உரிச்சொல் , இங்கு , மிகுதியை உணர்த்திற்று . ` நீர் ` என்பதில் , ` உள் ` என்னும் பொருள் தரும் கண்ணுருபு விரிக்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் உடையோன் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்
திகழுந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

அரும்புபோலும் , மெல்லிய தனங்களையுடைய மகளிரது முகங்களே , தாமரை மலர்போல விளங்குகின்ற திருநறை யூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை இகழுந் தன்மையைப் பெற்ற அசுரர்களது மதில்கள் மூன்றை எரித்த அம்பை யும் , வில்லையும் உடைய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

திருமாலே அம்பும் , மேருமலையே வில்லும் ஆதலின் , அவைகளை உடைமையைச் சிறந்தெடுத்து அருளிச்செய்தார் . ` பதி ` என்றது , ` இடம் ` என்னும் பொருளதாய் நின்றது . ` முகமே ` என்ற பிரிநிலை ஏகாரம் , ` மெய்ம்மைத் தாமரை மலர் மிகையாகும் ` என்னும் பொருளைத் தந்தது . மேலைத் திருப்பாடலில் , ` நீர்த்திளைக்கும் ` என்ற குறிப்பால் , இங்கு , ` முகிழ்மென் முலையார் ` என்றதும் அவரையே என்க . ` கமலம் திகழும் ` என்றது , வினையுவமம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலந் நனிபள் ளிஎழத்
திறக்குந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

தேனைக் கொண்டுள்ள தாமரைமலரை , நன்கு துயிலெழும்படி வண்டுகள் திறக்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச் சரம் ` என்னும் திருக்கோயிலே , வீரத்தைக் கொண்ட இராவணனது மலைபோலும் தோள்களை , தனது மலையால் முரியச்செய்த விரலையுடைய தலைவனாகிய இறைவன் இருக்கும் இடமாகும் .

குறிப்புரை :

` மறங் கொள் ` என்பது , எதுகை நோக்கி , வலிந்து நின்றது . ` உய்யக்கொள்ளுதல் ` என்பதுபோல , ` இறக்கொள்ளுதல் ` என்பதும் ஒருசொல் நீர்மைத்து . ` நறா ` என்னும் குறிற்கீழ் ஆகாரம் , செய்யுளிடத்துக் குறுகிற்று . மலர்கள் கூம்புவதைத் துயில்வதாகவும் , மலர்தலை விழிப்பதாகவும் கூறுதல் இலக்கிய வழக்கு . திறத்தலுக்கு எழுவாய் வருவிக்க . ` திறக்கும் ` என்னாது . ` சிறக்கும் ` என்பதே பாடம் எனலுமாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளும்
செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

குளங்களில் செங்கழுநீர்ப் பூவின் மணங் கமழுமாறு அவைகளின்மேல் கயல்மீன்களும் , சேல் மீன்களும் துள்ளி வீழ்கின்ற , மிக்க நீரையுடைய திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , திருமேனிமுழுவதும் நீற்றை அணிந்தவனும் , அடர்ந்த கூந்தலையுடைய மகளிரது உயர்ச்சி பொருந்திய பண்பு களைக் கொண்டவனும் ஆகிய இறைவன் விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற இடமாகும் .

குறிப்புரை :

` மொய்குழலார் ` என்றது , தாருகாவனத்து முனிவர் பத்தினியரை . அவர்களது உயர்ந்த பண்புகள் , நாணம் முதலியன . மீன்கள் துள்ளுதலால் மலர்கள் மலர்ந்து மணத்தை வீசுகின்றன என்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

ஊனா ருடைவெண் டலைஉண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

விண்ணிற் பொருந்திய சந்திரன் நுழைந்து செல்லும் , வளவிய சோலைகளினிடத்தில் தேன் நிறைந்து நிற்கும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , ஊன் பொருந்திய , உடைந்த , வெள்ளிய தலையில் , உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்று , ஆனினத்ததாகிய , வெற்றியையுடைய ஏற்றை விரும்புபவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

இத்திருப்பாடலின் முதலடியை , ` ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் ` ( தி .8 திருக்கோத் -2) என்னும் திருவாசக அடியோடு வைத்துக் காண்க . ` ஆன் ` என்றது , ஆனினது பொதுத்தன்மையை . பதிதல் - ஆழ்தல் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

காரூர் கடலில் விடம்உண் டருள்செய்
நீரூர் சடையன் னிலவும் மிடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

கச்சு மேற்பொருந்தப்பெற்ற தனங்களையுடைய மகளிர் அழகுடன் நிறைந்து நிற்கும் தெருக்களில் தேர்கள் ஓடுகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கருமை நிறம் பொருந்திய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , தேவர்கட்கு அருள்செய்த , நீர்ததும்பும் சடையினையுடையவனாகிய இறைவன் விளங்கியிருக்கின்ற இடமாகும் .

குறிப்புரை :

` இளமையையுடைய மகளிரும் , மைந்தரும் செல்வச் சிறப்போடு வாழும் ஊர் , திருநறையூர் ` என்று அருளியபடியாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கரியின் னுரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியுந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

தமது கடமைகளை விரும்பிச் செய்யும் அந்தணர் கள் , நிறைந்த சொற்களின் பொருளை ஆராய்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , யானைத் தோலையும் , ஆண் மான்கன்றையும் , எரிகின்ற மழுவையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

திருநறையூர் அந்தணர்கள் வேதத்தை ஓதுதல் , தமக்குத் தம் குரவர் கற்பித்த வைதிகச் செயல்களைச் செய்தல் என்பவற்றையே யன்றி , வேதம் முதலியவற்றின் பொருளை ஆராய்தலும் செய்வர் என்றவாறு .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

பேணா முனிவான் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் மிடமாம்
பாணார் குழலும் முழவும் விழவில்
சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

பண் நிறைந்த குழல்களின் ஓசையும் , மத்தளங் களின் ஓசையும் விழாக்களில் சேய்மைக்கண் சென்று பொருந்துகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை விரும்பாது வெறுத்தவனாகிய தக்கனது பெருவேள்வியின் சிறப்புக் களை எல்லாம் சிறவாதபடி அழித்தவனாகிய இறைவன் பொருந்தி யிருக்கும் இடமாகும் .

குறிப்புரை :

` பேணாது ` என்பதன் ஈறு கெட்டது . ` முனிவன் ` என்பது பாடம் அன்று . வேள்வி , குழல் , முழவு , இவை , ஆகுபெயர்களாய் நின்றன .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியுந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

நன்னெறியினின்றும் வழுவாத கடப்பாட்டினை யுடைய உயர்ந்தோர்கள் மிக்குள்ள திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கொடிய கூற்றுவனை உதைத்த , குறியினின் றும் தவறாது எறியும் மழுப்படையை உடையவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` வழுவாது ` என்பதன் ஈறு கெட்டது . ` கொடுங் கூற்றுதைத்த ` என்றதனை , ` குறியில் ` என்றதற்கு முன்னே கூட்டுக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

போரார் புரம்எய் புனிதன் அமரும்
சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே

பொழிப்புரை :

போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற , புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள் , எழுச்சிபொருந்திய தேவருலகத்தை அடைவார்கள் .

குறிப்புரை :

`சொல் இவை` என்றது வினைத் தொகை.
சிற்பி