திருநள்ளாறு


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

செம்பொன் போலும் திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிபவனும் , கரிய கண்டத்தை உடையவனும் , திரு மாலும் பிரமனும் காணாத சம்புவும் , நெருப்பை அகங்கையில் ஏந்திய வனும் , சாமவேதத்தை விரும்புபவனும் , தனக்கு ஒப்பாவதொரு பொருள் இல்லாதவனும் , குடம்போலும் தலையை உடைய பெரிய யானையின் தோலை உடையவனும் , எருதின்மேல் ஏறிவரும் தலைவ னும் , எங்கள் அருந்துணைவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளி யுள்ளவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

சம்பு - இன்பத்தை ஆக்குபவன் . ` கும்பம் ` என்பது , யானையின் தலைக்கு உவமையாகு பெயர் . சொற்பின் வருநிலை அணிபட அருளுவார் ,` கோவின்மேல் வருங் கோ ` என்று , அருளினார் . முதற்கண் நின்ற , ` கோ ` என்பது வடசொல் . ` நம்பன் ` என்பது , ` விரும்பப்படுபவன் ` என்னும் பொருளதாகலின் , அதற்கு , இவ்வாறு உரைக்கப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

மணத்தைத் தருகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்தவனும் , வேதத்தின் இசையை விரும்புபவனும் , அன்பு மிகச்சிறந்து , மனம் உருகித் துதிப்பவர்களது வினைத்தொடர்பை அறுப்பவனும் , பால் முதலிய ஆனைந்தினை ஆடவல்லவனும் , ஒலிக் கின்ற கடலும் , மலையும் , உலகும் ஆகியவற்றை ஏழேழாக உடைய தலைவனும் , ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும் , முல்லை நிலத் திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும் , திருநள்ளாற்றில் எழுந் தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

மிகச் சிறத்தலுக்கு , வினைமுதல் வருவிக்கப்பட்டது . ` சிறந்து ` என , குண வினை , குணிமேல் நின்றது , மலைகளை , எட்டென்றலேயன்றி , ஏழென்றலும் மரபேயாம் என்க . ` தொல்லை நரைவிடை ` என்பதும் பாடம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச்
சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறுநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

பூவில் உள்ள மணமும் , பொன்னும் , மணியும் ஆகிய இவைபோல்பவனும் , ` மண் , நீர் , தீ , காற்று , வானம் ` என்னும் ஐம்பெரும் பூதங்களாய் நிற்பவனும் , எருதின்மேல் வரும் செல்வத்தை உடையவனும் , நன்மையே வடிவானவனும் . தேவர்கட்கெல்லாம் தேவனும் , தித்திக்கும் தேன்போல இனிப்பவனும் , குவளைப் பூப் போலும் கண்களையுடையவளாகிய மங்கைதன் பங்காளனும் , கங்கையைத் தாங்கிய சடையை உடையவனும் , ` சீகாமரம் ` என்னும் இசையாற் பாடுமிடத்து , நாவில் இனிமை மிகுகின்றவனும் , திரு நள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` பூவில் வாசம் ` என எடுத்தோதியது , ஏனைய நறுமணங்களில் சிறந்ததாதல் பற்றி . வாசம் முதலிய மூன்றும் சிறப்புப் பற்றி வந்த பொதுமையை யுடையவாக , தேன் , இனிமையை உணர்த் தும் சிறப்பினதாதல் பற்றி , அதனை முன்னையவற்றோடு ஒருங்கு ஓதாராயினார் . ` காற்று ` என்றது , செய்யுள் பற்றி முறை பிறழ நின்றது , ` சேவின் மேல் வரும் செல்வன் ` என்றது , நகைச்சுவை பயப்பதாய் , அவனது முதன்மையை உணர்த்திற்று . ` காவியங்கண்ணி பங்கன் , கங்கைச் சடையன் ` என்றதும் , ` உடம்பில் ஒருத்தியையும் , தலையில் ஒருத்தியையும் உடையவன் ` என்னும் பொருட்டாய் , அன்னதாயிற்று . ` சீகாமரம் ` என்பதனை ` காமரம் ` என்றது , முதற்குறை . ` காமரம் ` என்னும் , பண்ணின் பொதுப்பெயர் , ` சீ ` என்னும் சிறப்புச் சொல்லோடு புணர்ந்து , ஒருவகைப் பண்ணிற்குப் பெயராய் வழங்கும் . இராகங் களுள்ளும் ஒருவகையினை , ` சீராகம் ` எனக் குறியிட்டு வழங்குவர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த
பாலன்மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை
நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

` அடைக்கலம் ` என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன்மேல் சினந்து வந்த இயமனை , வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் ஓர் உதை உதைத்தலை மேற்கொண்ட தலைவனும் , தன்னை நினைப்பவரது மனத்தை விட்டு நீங்குதல் இல்லாதவனும் , அறிவு மிக்க தேவர்களும் , அசுரர்களும் கூடிக் கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல் பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` உருள ` என்றது , ` உயிர்நீங்கிக் கிடப்ப ` என்றவாறு . ` உதை ` என்றதன்பின் . ` உதைத்தல் ` என்பது , தொகுத்தலாயிற்று . விஞ்சை - வித்தை ; அறிவு ; தேவரை . ` புலவர் ` என்னும் வழக்கினை நினைக்க . இங்கு , ` இறவாதிருத்தற்கு வழியறிந்தனர் ` என , நகை தோன்ற அருளுவார் , ` விஞ்சை வானவர் ` என்று அருளினார் . மிகுதி , உலகு இடங் கொள்ளாமை . அந்நஞ்சினும் மிகப் பெரிய அமுதாய் நிற்றலின் , அதனை உண்ண வல்லனாயினான் என்பது திருக்குறிப்பு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

மங்கை பங்கனை மாசிலா மணியை
வான நாடனை ஏனமோ டன்னம்
எங்கும் நாடியுங் காண்பரி யானை
ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

மங்கை ஒருத்தியது பங்கை உடையவனும் , இயல் பாகவே மாசில்லாது விளங்கும் மணிபோல்பவனும் , வானமாகிய நாட்டை உடையவனும் , பன்றியும் அன்னமும் எவ்விடத்துத் தேடியும் காணுதல் அரியவனும் , எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலை வனும் , ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு நிறைந்து நிற்கின்ற அந்தணர்கள் தனது திருவடியைப் போற்றுகின்ற நம் தலை வனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் . வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` மாசிலா மணி ` இல்பொருள் உவமை . காணாது எய்த்தமையின் , ` திருமால் பிரமன் ` என்னாது , ` ஏனமொடு அன்னம் ` என்று ஓதினார் . ` அப் பெரிய தேவர்கட்கு அரியனாகியவன் , எனக்கு எளிவந்தருளினான் ` என நினைந்து உருகியவாறு . ` எளிவந்த ` என்றதற்கு , ` எளிமை பொருந்தியவனாகிய ` என்று உரைப்பினுமாம் . ` மறை ` என்றது , அதனை ஓதுதலை . ஆன் உருபு . ஒடுவுருபின் பொருளில் வந்தது , ` நங்கள் கோனை ` எனப் பின்னர் அனைவரையும் உளப்படுத்து அருளுவாராயினும் , தமக்கு எளிவந்த தன்மையை நினைந்து , தமக்குப் பிரானாயினமையை ,, முன்னர் வேறெடுத்து அருளிச் செய்தார் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

கற்பக தருவும் பெரிய பொன்மலையும் போல்பவனும் , காமனைக் காய்ந்தவனும் , கண் பொருந்திய நெற்றியை உடையவனும் , சொல் நிலையில் நிற்கும் பொருள் உணர்வாகிய அறியாமையைக் களைந்து , பொருள்கள் , நேரே விளங்குமாறு விளக்குகின்ற தூய ஒளியாய் நிற்பவனும் , என்னை அடியவனாக , திருவெண்ணெய் நல்லூரில் , யாவரும் வியக்கத் தக்க , பழமையதாகத் தீட்டப்பட்டதோர் ஓலையைக் காட்டி அடிமை கொண்ட நன்னிலை யாய் உள்ளவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` பொன்மலை ` என்றது , ` பெரிய நிதிக்குவை போல் பவன் ` என்றபடி . ` பொருள்களை நேரே தலைப்பட்டுணராது , சொல் வடிவிலே உணருமாறு உணர்வைத் தடுத்து நிற்பது அக இருளாகிய ஆணவமலம் ` என்பதும் , ` எல்லாப் பந்தமும் நீங்கிய வழியும் , இவ் வொருபந்தம் நீங்குதல் அரிது ` என்பதும் , ` அது ` நீங்கின் , இறைவனது திருவடியை அடைதல் எளிது , என்பதும் , ` மூவகை அணுக்க ளுக்கும் முறைமையான் விந்து ஞானம் மேவின தில்லையாகில் விளங்கிய ஞானம் இன்றாம் ; ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல் சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே ` - சிவஞான சித்தி - சூ .1-26 என்றற் றொடக்கத்து மெய்ந்நூற் பகுதிகளான் உணர்ந்துகொள்க . ` நற்பதம் ` என்றது வீட்டு நிலையை ; என்னையெனின் , அதுவே , எல்லாவற்றினும் மேலாய நன்னிலை யாகலின் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

அன்று ஒரு பன்றியின்பின் அதனைத் துரத்திச் சென்ற வேடனும் , அன்னதொரு மாயம் வல்லவனும் , நால்வர் முனிவர்க்கு ஆல் நிழலில் இருந்து சொல்லிய அறத்தை உடையவனும் , தேவர்கட்கு அரியனாய் நிற்பவனும் , தேவர் சேனைக்குத் தலை வனாகிய , குறவர் மகளாகிய வள்ளிதன் கணவனைப் பெற்ற தலைவ னும் , நான் செய்த குற்றங்களைப் பொறுப்பவனும் , பூக்களின் மணம் பரக்கின்ற திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` சென்ற மறவனை ` எனக் கூட்டுக . ` மறவனாய் ` எனப் பாடம் ஓதி , கிடந்தவாறே யுரைத்தல் சிறக்கும் . ` குறவர் மங்கைதன் கேள்வன் ` என்றது . ` முருகன் ` என ஒருபெயர்த் தன்மைத்தாய் ,` நாயகனான ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று . ` பொறுக்கும் ` என்ற எதிர்காலச் சொல்லோடு இயைந்தமையின் , ` செய்த ` என்றது , எதிர்காலத்து இறந்த காலமாம் . இது , ` செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம் ` - தொல் . சொல் . 239 எனச் செய்தெனெச்சத்திற்கு ஓதியவாறுபற்றி உணரற் பாலது . ` விரியும் ` என்ற சொற்பெற்றியால் , ` நறை `, ` பூவின் மணம் ` என்பது உணரநிற்கும் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமல னைஅடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

மாதராள் ஒருத்திக்குத் தனது உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும் , மாணிக்கம் போல்பவனும் , தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற , வேத முதல்வனாய் உள்ளவனும் , வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும் , அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும் , தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து , அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும் , திரு நள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றை யும் நினையேன் .

குறிப்புரை :

உடம்பின் ஒரு பகுதியைக் கொடுத்தது , அவனது பேரருளை யுணர்த்தும் , ` உடம்பில் இடங்கொடுத்தான் ` என்பது நயம் , ` வேத வேள்வியர் வணங்கும் விமலன் ` என்றது . ` வணங்காது விடின் தக்கன் அடைந்த நிலை எய்தும் ` என்னும் அச்சத்தாலேனும் அவரால் வணங்கப்படுபவன் என்றவாறு . இறைவன் சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் இருமுறை தூது சென்றமை வெளிப்படை . இதனை எடுத்தோதினமையின் , இத் திருப்பதிகம் , நம்பியாரூரர் தொண்டை நாடு சென்று மீண்டதற்பின் அருளிச்செய்தது என்பது ஐயமின்றி விளங்கு தலால் , ` தொண்டைநாடு நோக்கிச் செல்லுங்கால் இத்தலத்தை வணங்கி அருளிச்செய்தது ` என்றல் பொருந்தாமை யறிக , தொண்டை நாடு நோக்கிச் செல்லும் பொழுது திருக்கடவூரை அடைதற்கு முன்னர் இத்தலத்தை வணங்கிய செயலைக் கூறுமிடத்து , சேக்கிழார் , ` திருப் பதிகம் அருளிச் செய்தார் ` எனக் கூறாது , வாளா போயினமை , ஓர்ந் துணரற்பாலது . ` எளிவந்த தூதனை ` என்றாரேனும் , ` தூதனாய் எளிவந்த வனை ` என்றலே திருவுள்ளம் என்க . தூதனாகியதையும் , தோழமை தந்ததனையும் எடுத்தோதி , அவனது எளிவந்த கருணையைப் பெரிதும் நினைந்து , ` அவனை யன்றி எனக்கு நினைக்கும் பொருளும் உண்டோ ` என உருகியவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள்
இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

இலங்கைக்கு அரசன் அழகு விளங்குகின்ற கயிலாய மலையைப் பெயர்க்க , அது போழ்து மலையரையன் மகளாகிய உமை அஞ்சுதலும் , அவனது விளங்குகின்ற பெரிய முடி யணிந்த தலைகள் ஒருபதையும் , தோள்கள் இருபதையும் நெரித்து , பின்னர் அவன் செருக்கொழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு , வலக்கையிற் பிடிக்கும் வாளினையும் ` இராவணன் ` என்ற பெயரை யும் , அவனுக்கு அளித்த வள்ளலும் , குழவிப் பருவத்தையுடைய சிறந்த சந்திரன் , சடைமேல் தங்கி நன்மையுடன் வாழ்கின்ற ஒளி யுருவினனும் திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` துலங்கு நீண் முடி ` என்றது . அடையடுத்த ஆகு பெயர் . தலையையும் தோளையும் நெரித்தது . கால்விரலால் அம் மலையை ஊன்றியாம் . ` வலக்கை ` என்றது மெலிந்து நின்றது . ` வலங்கை ` என எடுத்தோதியது ,` அதனோடொப்பப் பிடிக்கப் படுவது வேறொன் றில்லாத வாள் ` என , அதன் சிறப்பு உணர்த்தற்கு . ` இராவணன் ` என்பது , ` அழுதவன் ` எனப் பொருள் தரும் . ` மதிச் சடைமேல் ` எனச் சகர ஒற்று மிகுத்து ஓதுதல் பாடம் அன்று . தக்கனது சாபந் தொடராது என்றும் இளைதாய் இனிது , இருத்தலின் , ` நலங்கொள் ` என்று அருளினார் . இனி , இதற்கு , ` அழகு பெற்று விளங்குகின்ற ` என்று உரைத்தலுமாம் , ` நலங்கொள் ` என்பது , ` சோதி ` என்ற இடப் பெயர் கொண்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநள்ளாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானை , திருநாவலூரில் தோன்றியவனும் , ` சிங்கடி ` என்பவளுக்கும் ` வனப்பகை ` என்ப வளுக்கும் தந்தையும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் , ` இப் பெருமானை மறந்து நான் நினைப்பது வேறு யாது ` என்று சொல்லி , அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லவர்க்கு , இறந்து போதலும் , பிறந்து வருதலும் இல்லையாக , பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள் .

குறிப்புரை :

`சிங்கடி தந்தை , வனப்பகை அப்பன்` என வகுத்து அருளிச் செய்தார், அவர்மேலுள்ள அன்பினால், சிறத்தலுக்கு வினை முதல் வருவிக்க. `சிறந்த` என்றது, அதன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. போதலை, `இறந்து போக்கு` என விதந்தமையின், வருதலுக் கும், அவ்வாறு விதந்தோதுதல் திருவுள்ளமாயிற்று. `ஆகி` என்ற தனை, `ஆக` எனத் திரிக்க. அன்றி, `ஆக` என்பதே பாடம் எனலுமாம், இனிதே இருத்தல், துன்பமின்றியே இருத்தல்.
சிற்பி