திருவாரூர்


பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

பாவியும் , மூடனும் ஆகிய யான் , என் அன்பையும் , அடிமையையும் விட்டொழியும்படி , முத்தும் , சிறந்த மாணிக்கமும் , வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன் ! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன் ; ஆதலின் இங்கு இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` போய்த் தொழுவேன் ` என்றது , வருகின்ற திருப் பாடல்களிலும் சென்று இயையும் . ` அது ` , பகுதிப்பொருள் விகுதி . உயிரோடு ஒன்றித்து நிற்பது உடம்பேயாகலின் , ` இது ` என்றது , அதனையே ஆயிற்று . ` இத்தன்மைத்தாகிய உடலின்பங் கருதி ஈண்டு இரேன் ` என்பார் , ` இதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் ` என்று அருளினார் . பின்னும் பலவிடங்களில் உடம்பை இகழ்ந்து அருளுவனவெல்லாம் , இக்கருத்தானே என்க . ` என் இறைவன் ` என இயையும் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 2

ஐவணமாம் பகழியுடை
அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம்
விழிசெய்த சிவமூர்த்தி
மையணவும் கண்டத்து
வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற , வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு , செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய , கருமை பொருந்திய கண்டத்தையும் , நீண்ட சடையினையும் உடைய , எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச்சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` வண்ணம் ` என்பது , வகையைக் குறித்தது . ` மன்மதன் ஐந்து வகையான மலர்களையே அம்பாக உடையவன் ` என்பதும் , அம் மலர்கள் , ` தாமரை , மா , அசோகு , முல்லை , நீலம் ` என்பதும் , அவை முறையே , ` உன்மத்தம் , மதனம் , மோகம் , சந்தாபம் , வசீகரணம் ` என்னும் பெயருடையனவாய் , ` சுப்பிர யோகம் , விப்பிர யோகம் , சோகம் , மோகம் , மரணம் ` என்னும் அவத்தைகளைச் செய்யும் என்பதும் , அவ்வவத்தைகள்தாம் , பேச்சும் நினைவும் , மிகுதலும் , பெருமூச்செறிதலும் , உடல் வெதும்பி உணவை வெறுத்தலும் , அழுது பிதற்றுதலும் , மூர்ச்சையுறுதலுமாம் என்பதும் செய்யுள் வழக்காதலின் , அவை எல்லாம் அடங்க , ` ஐவணமாம் பகழியுடை ` என்றும் , அவனை வென்றார் உலகத்து அரியராகலின் , ` அடல் மதனன் ` என்றும் , அவனை எளிதில் அழித்தமை தோன்ற , ` பொடியாகச் செவ்வணமாந் திருநயனம் தீவிழித்த சிவமூர்த்தி ` என்றும் , அம்மூர்த்தியைப் பிரிந்து இங்கே இருப்பேனாயின் , அவனது இன்பத்தை யுணராத பிறர் போல யானும் அம்மன்மதனால் வெல்லப்பட்டேனாவேன் ` என்பார் . ` எம் ஆரமுதை என் ஆரூர் இறைவனை எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் ` என்றும் அருளினார் . மன்மதனது வெற்றிப் பாட்டினை , கந்த புராணத்துக் காமதகனப் படலத்துள் , அவனே கூறு மாறாய் வந்த வற்றான் அறிக .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

சங்கலக்குந் தடங்கடல்வாய்
விடஞ்சுடவந் தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம்
உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த
அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

வருத்துதலைச் செய்கின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லேனாகிய யான் , தேவர் , சங்குகள் விளங்குகின்ற பெரிய கடலிடத்துத் தோன்றிய ஆலகாலவிடம் தம்மைச் சுடுகை யினாலே அடைக்கலமாக வந்து வணங்க , அப்பொழுதே அவரது துன்பத்தை நீக்கி , அவ்விடத்தை உண்டு , அவரை விரும்பிக் காத்த பெரியோனாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து , எவ்விடத்து இறத்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` சங்கு ` என்றதன்பின் , ` அலங்கும் ` என்பது , ` அலக்கும் ` என வலித்தலாயிற்று . ` இங்கு ` என்றதன்பின் , ` அலப்பிக்கும் ` என்பது , குறைந்து நின்றது ; ` அலைக்கும் ` என்பது , திரிந்தது என்றலுமாம் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட
அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

இவ்வுலகில் வந்து , துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான் , அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட அரிய மருந்தும் , அமுதும் போல்பவனும் , வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும் , மான் பொருந்திய கையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` வெங்கனல் ` என வந்தமையின் , ` இங்கனம் , அங்கனம் , எங்கனம் ` என்பனவே பாடம் என்பாரும் உளர் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

செப்பரிய அயனொடுமால்
சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே
அறியாதே யருவினையேன்
ஒப்பரிய குணத்தானை
இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

நீக்குதற்கரிய வினையையுடையேனாகிய யான் , சொல்லுதற்கரிய பெருமையையுடைய , ` பிரமதேவனும் , திருமாலும் ` என்னும் அவர்தாமும் நினைத்தற்கும் , காண்பதற்கும் அரிய அத் தன்மைத்தாய பெரிய செல்வமாய் உள்ளவனும் , பிறர் ஒருவரது குணமும் நிகர்த்தல் இல்லாத அருட்குணங்களை யுடையவனும் , பிறர் ஒருவரும் தனக்கு நிகரில்லாதவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும் , அடைதலும் இன்றிப் பிரிந்து , எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

மக்களினும் பெருமையுடைய தேவர்களினும் பெருமை யுடையராகலின் , ` செப்பரிய அயனொடுமால் ` என்றார் . ` அறிதல் ` என்றது , இங்கு நினைத்தலின் மேற்று . ` அருவினையேன் ` என்றது , ` பிரிந்திருப்பின் அன்னேனாவேன் ` என்றதாம் . ` ஒப்பரிய ` என்ற எச்சம் , ` குணம் ` என்றதனோடு முடிந்தது . அக்குணங்கள் தாம் எட்டென்பது நன்கறியப்பட்டது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

வன்னாக நாண்வரைவில்
லங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப்
புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத
மூர்க்கனேன் ஆக்கைசுமந்
தென்னாகப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

வலிய பாம்பு நாணியும் , மலை வில்லும் , திருமால் அம்பும் , அங்கியங் கடவுள் அம்பின் முனையுமாகத் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த தன்மையை உடையவனாகிய எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போக முயலாத மூடனேனாகிய யான் , அவனைப் பிரிந்து , என்னாவதற்கு இவ் வுடலைச் சுமந்து இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` பகழி ` என்றதன்பின் , ` ஆக ` என்பது வருவிக்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

வன்சயமா யடியான்மேல்
வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தான்
முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை
விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

பின்னிடாத வெற்றியையுடையவனாய்த் தன் அடியவன்மேல் வந்த கூற்றுவனை அவனது மார்பு பிளக்கும்படி வெற்றி பொருந்திய தனது திருவடியால் முன்பு உதைத்து , பின்பு எழுப்பிய மூர்த்தியும் , மின்னலினது ஒளியை உண்டாக்குகின்ற நீண்ட சடையையும் , விடையையும் உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப்பிரிந்து , நான் , என் செய்வதற்கு இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

வலிமை , இங்கு பின்னிடாமை மேற்று . முன் , ` முனிந்து ` என்றதனால் , பின் , ` உகந்து ` என்பது பெறப்பட்டது . ` உகந்த ` என்றது , தன் காரியம் தோன்ற நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

முன்னெறிவா னவர்கூடித்
தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை யமரர்தொழும்
நாயகனை யடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தைமறந்திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறி யாய் உள்ள பிரமனும் , மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழு முதற் பொருளானவனும் , அப்பொருளை அடையும் நெறியாய் உள்ள வனும் , ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும் , எல்லாத் தேவருள் ளும் சிறந்த தேவனும் , தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து , நான் , எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத் திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` முழுமுதல் ` என்றது எல்லாப் பொருள்களையும் நோக்கியும் , ` நாயகன் ` என்றது தேவர்களை நோக்கியும் , ` தேவர் குலக்கொழுந்து ` என்றது , இங்ஙனம் வேறாயினும் , தேவருள் ஒரு வனாயும் நிற்றல் நோக்கியும் என்க . சொற்சுருக்கம் நோக்கி , ` அந் நெறியை ` என்கின்றார் . பொருள் இனிது விளங்குதற்பொருட்டு , ` முழுமுதலை ` என்றதனை அடுத்து நிற்க வைத்தார் . ` முழுமுதல் ` என்னும் தன்மை விளங்குதல் வேண்டி , ` அப்பொருள் ` என , வேறு போலக் கூறப்பட்டது . ` அடியார்கள் செந் நெறியை ` என்றதன் முன்னிற்கற்பாலதாய , ` தேவர்குலக் கொழுந்து ` என்பது செய்யுள் நோக்கி அதன் பின்னின்றது . மேலைத் திருப் பாடல்களிலெல்லாம் , சொல்லெச்சமாய் எஞ்சி நின்ற , ` இங்ஙனம் ` என்பது ஈண்டு , எஞ்சாது தோன்றிநின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

கற்றுளவான் கனியாய
கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப்
பெரிதடியே கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற , கண்ணையுடைய நெற்றியையுடையவனும் , என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும் , முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை , அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து , எதன்பொருட்டு இறவாது உள்ளேனாய் , இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` உள்ள ` என்பது , இடைக்குறைந்து நின்றது . ` கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் ` என்றும் , ` ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ` என்றும் ( குறள் - 356,357) அருளினமையின் , இறைவன் கற்று நினைக்கும் வழித் தோன்றுவோனாதல் அறிக . ` கற்றுளவான் கவியாய ` என்பதே பாடம் எனலுமாம் . ` உளன் ` என்றது , ` உடையன் ` என்னும் பொருட்டாய் நின்றது . ` எற்றுக்கு ` என உருபு விரிக்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

ஏழிசைகளைப் போன்றும் , அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும் , இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து , அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி , யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு , மாவடுவின் வகிர்போலும் , ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை , அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` ஏழிசையாய் ` முதலிய மூன்றிடத்தும் வந்த ஆக்கங் கள் உவமை குறித்து நின்றன . உம்மை , எச்சத்தொடு சிறப்பு . ` துரிசு ` என்றது , பரவையாரையும் , சங்கிலியாரையும் காதலித்தமையும் , அவைகாரணமாகச் செய்த சிலவற்றையும் , ஆண்டமையாவது , திருவாரூரிலே குடியேற்றிப் பணிசெய்யவைத்து , அருள்கள் பல செய்தமை . ` ஏழையேன் ` என்றது வாளா பெயராய் நின்றது . ` இருக் கேனோ ` என்னும் ஓகாரம் , எஞ்சி நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 11

வங்கமலி கடல்நஞ்சை
வானவர்கள் தாம்உய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி
நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த
தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

தேவர்கள் பிழைத்தற்பொருட்டு , மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு , அமுதத்தை அவர்கட்கு அருளினவனும் , சிறியேனை ஒரு பொருளாகவைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி , என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறை வனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` அருளி ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்த தாதலின் , அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது . சங்கிலியாரோடு கூட்டு வித்ததும் திருவாரூர் இறைவனது திருவிளையாட்டே எனக் கருது கின்றாராதலின் , ` சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனாகிய என் ஆரூர் இறைவன் ` என்றார் . ` பிரிந்திருந்தமையின் உண்மையன்பு இல்லேன் ` என்பார் , ` சழக்கனேன் ` என்று அருளினார் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 12

பேரூரு மதகரியின்
உரியானைப் பெரியவர்தம்
சீரூருந் திருவாரூர்ச்
சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூர னிவைவல்லார்
உலகவர்க்கு மேலாரே

பொழிப்புரை :

செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திரு வடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி , புகழ்மிகுந்த மத யானையின் தோலையுடைய அவனை , அவன் அடித்தொண்டனாகிய , இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர் , உலகர் எல்லார்க்கும் மேலானவராவர் .

குறிப்புரை :

`பேரூரும்` என்றதற்கு, `பெரிதும் மிக்குப் பாய்கின்ற` என, மதத்திற்கு அடையாக உரைத்தலுமாம். `கரியினுரியான்` என்றதும், `ஆருரன்` என்றதும், சுட்டுப்பெயராய் நின்றன. `பெரியவர்` என்றது தேவாசிரியனில் உள்ள திருக்கூட்டத்தவரை. `சிவனடியே` என்றவிடத்து, `சேர்` என்பது வருவிக்க. `சிவனடிசேர்` என்பதே பாடம் என்றலும் ஒன்று. `அடியன்` என்றது, வாளா பெயராயிற்று. அகலிடத்தில் எங்கும் செல்லுதல், இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களை வணங்க வேண்டி என்க.
சிற்பி