திருக்கச்சூர் ஆலக்கோயில்


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே , கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற , மலையான் மகள் மணவாளனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ சென்று , முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ ?

குறிப்புரை :

வடுப்பட்ட கது வாய் - வடுப்படல் ; ` களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின் ` என்றது ( பதிற்று -15) காண்க . ` தலை ` என்றது , ` மண்டை ` எனப் பொருள் தந்து , அப்பெயரையுடைய ஓட்டினைக் குறித்தது ; ` கவிழ்ந்த மண்டை மலர்க்குநர்யாரென ` ( புறம் -103) என்றாற்போல்வன காண்க . ` முரிந்த வாயையுடையது ` என்றது , ஓட்டின் இழிபுணர்த்தும் அளவாய் நின்றது , ` பித்தவுலகர் ` ( திரு வாசகம் - போற்றி . 36.) என்றாற்போல . ` அடியார் ` எனத் தம்மைப் பிறர்போல அருளினார் என்க . ` அது ` என்றது , பண்டறி சுட்டாய் , இறைவனது கருணையைக் குறித்தது என்பதைச் சேக்கிழார் திருமொழி யான் அறிக ( தி .12 ஏ . கோ . பு -182). இஃது எல்லாத் திருப்பாடல்களின் ஈற்றிலும் சென்று இயையும் . ` அதுவே ` என்னும் ஏகாரம் பிரிநிலை . சிறப்பு ஓகாரத்தை , ` ஆமாறு ` என்றதனொடு கூட்டுக . ` கச்சூர் ` என்பது , தலத்தின் பெயர் ; ` ஆலக்கோயில் ` என்பது கோயிலின் பெயர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை யறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் மில்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானே , இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே , திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே , நீ , அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி , கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க , பிச்சைக் கென்று , ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால் , உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம் .

குறிப்புரை :

கழல் வலத்திருவடியிலும் , சிலம்பு இடத்திருவடியிலும் உள்ளன என்க . ` போது உச்சம் ஆ ` என மாற்றி , சிறப்பும்மை விரிக்க . ` இரத்தல் உனக்கு வேண்டுவதின்று ; அங்ஙனமாகவும் இரக்கின்ற உனது கருத்தினை யாம் அறிகின்றிலேம் ` என்றவாறு . இருவகை ஏழ்பிறப்புக்களாவன , வினைப்பயன் தொடரும் ஏழ்பிறப்பும் , தாவரம் முதல் தேவர் ஈறாக உள்ள ஏழ்பிறப்புமாம் ; ` எழுமை எழுபிறப்பு ` ( குறள் -106) என்றது காண்க . ` அச்சம் ` என்றது , நாணத்தை . ` வடபால் ` என்றதற்கு , ` ஆல நிழலில் ` என்றுரைத்து , ` ஆலக்கோயில் ` என்றதன் காரணம் விளக்கியவாறு என்றலுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

சாலக் கோயில் உளநின் கோயில்
அவைஎன் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோ ரறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்க ளுரைத்த அம்மானே.

பொழிப்புரை :

தேவரும் அறிய ஒண்ணாத நிலையையுடையவனே , அழகுடையதும் , குறைவில்லாததும் ஆகிய , குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற , கல்லால் நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே , உனது கோயிலாகப் பல கோயில்கள் இம் மண்ணில் உள்ளன ; அவற்றை யெல்லாம் என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து , மயக்கமுந் தீர்ந்தேன் ; வினையையும் ஓட்டினேன் ; இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து , நீ இரந்து சோறிடப்பெற்றேன் .

குறிப்புரை :

வருவித்துரைத்தது , இசையெச்சம் . மயக்கம் , இவ்வுல கின்பத்தைப் பெரிதாக நினைத்தல் ; வினை , அந்நினைவின் வழியே முயலுதல் . ` வடபாலை ` என்னும் ஐகாரம் சாரியை . ` கொண்டாடி ` என்னும் எச்சம் , காரணப் பொருட்டு . ` அறங்கட்டுரைத்த ` என்றும் பாடம் ஓதுவர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

இடப வாகனத்தையும் , இடபக்கொடியையும் , சடை முடியையும் உடையவனே , திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே , எங்கும் , அழகியவாயில்களையும் , நிறைந்த மணிமண்டபங்களையும் , அழிவில்லாத மாடங்களையும் கொண்டு , சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும் , நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் , தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற , வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள , ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெரு மானே , இஃது உன்கருணை இருந்தவாறேயோ !

குறிப்புரை :

` விடையும் கொடியும் ` என்றது , ஆற்றலாற் பொருளுணர நின்றது . கன்னிமாடம் , கன்னியர் உறையும் மாடம் என்பாரும் உளர் . ` கலந்து ` என்ற எச்சம் , எண்ணின்கண் வந்தது . ` தழுவுதலால் ` என்பது , ` தழுவி ` என வந்தது . ` அடையும் கச்சூர் ` என இயையும் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

மேம்பட்டதாகிய அறநெறியாயும் , அதன் பயனாயும் உள்ளவனே , பகைவரது திரிபுரங்களை எரித்தவனே , காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே , நீலகண்டத்தை யுடையவனே , மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்போல்பவனே , மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே , வயல்கள் நிறைந்த , கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , அடியேன் உன்னை மறவேன் .

குறிப்புரை :

திருக்கச்சூரில் , பெருமான் , மலைமேற் கோயில் கொண்டிருத்தலின் , ` மலைமேல் மருந்தே ` என்று அருளிச் செய்தார் . ` கழனி ` என்பது , ` இடம் ` என்னும் பொருளதாய் நின்றது . ` வினையின் பயனே ` என்பதும் பாடம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே யொழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

பிறவாதவனே , இறவாதவனே , யாதொன்றையும் விரும்பாதவனே , மூப்படையாதவனே , இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே , மறதி இல்லாதவனே , என்றும் சுடு காட்டையே இடமாகக்கொண்டு நடனம் ஆடுபவனே , திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ , உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் , உன் அடியவர் மனம் வருந்தமாட்டாரோ ? இதனை அறவே ஒழி .

குறிப்புரை :

ஆற்றாமையால் , ` அறவே ஒழியாய் ` என்றாரேனும் , ஒழியாமையைப் பாராட்டுதல் திருவுள்ளமாகலின் , ஈண்டும் ` அதுவே யாமாறிதுவோ ` என்பது வந்தியைவதேயாம் . ஒறுவாய் - மூளியான வாய் . ` முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி ` என்னும் பெரும்பாணாற்றுப் படை (98, 99) அடியின் உரையைக் காண்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

மை பொருந்திய பெரிய கண்களையுடைய மங்கை பங்காளனே , கங்கையையும் , ஆத்திப் பூவையும் , சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே , செம்மைநிறம் உடையவனே , வெண்மைநிறம் உடையவனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும் , அதனையும் மெய்யாகவே கொண்டு அருள்செய்கின்றவனே , எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை .

குறிப்புரை :

` நினைத்து அவர் வருந்தாதவாறு , இரத்தலை விட்டொழி ` என்றதாம் . ` ஒழியாத இஃது உன் கருணை இருந்த வாறேயோ !` என , ஈண்டும் வந்து இயையும் என்க . பொய்யே புகழ்தலாவது , அன்பானன்றி , ஒரு பயன் கருதிப் புகழ்தல் , அது பின் அன்பு உண்டாதற்கு வழியாதல்பற்றி , அதனையும் இறைவன் ஏற்று அருளுவன் என்க . ` கங்கை ` என்பதன் ஈற்று ஐகாரம் , தொகுத்தலாயிற்று . ` கங்கா நதியம் ` என்பதும் பாடம் . சிவபிரானுக்கு வெண்மை நிறமும் கூறப்படும் . மிக்க நெருப்பு வெண்மையாதலும் அறிக . இனி , ` வெண்மை , நீற்றினால் ஆயிற்று ` எனினுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

காட்டில் உள்ள கொன்றை மலர் , மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே , மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே , உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே , திருக்கச்சூரில் உள்ளவனே , ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , கீழ்மையுடையேனும் , அறிவில்லாதேனும் ஆகிய யான் , உடம்பை வளர்க்கும் செயலில் நின்று , உன்னை நினையாது விட்டேன் .

குறிப்புரை :

` எனக்கும் இது செயற்பாலதோ ` என்பதனையும் இங்கு உடன்கூட்டியுரைக்க ` ஞானக் கண்ணாய் ` என்றதற்கு , ` ஞானக் கண்ணில் விளங்குபவனே ` என்று உரைப்பினும் ஆம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்ளல் அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

உமையம்மைக்குக் கணவனே , உனது தன்மைகளைப் பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே , விளைதலை யுடைய கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன் பால் பேரன்புகொண்டு , அதனால் இன்பம்மீதூரப்பெற்று , தம்மை யறியாது வரும் சொற்களைச் சொல்லி , மணம்பொருந்திய மலர்களைத் தூவி உன்னைப் போற்றி செய்து உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும் பணிகளைச் செய்ய அவாவியிருக்க , நீ சென்று பிச்சை ஏற்பது அழகிதாமோ ? ஆகாதன்றே ?

குறிப்புரை :

` ஆதல் ` இரண்டனுள் முன்னது , உயர்தல் ; பின்னது , விளைதல் . உயர்தலாவது , வீடுபெறுதல் . ` பழனக் கழனி ` என்பதும் பாடம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னு மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லா
ரவர்என் தலைமேற் பயில்வாரே.

பொழிப்புரை :

அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால் , ` ஆரூரன் ` என்று , திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும் , செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும் , வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப் பாட வல்லவர் , என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர் .

குறிப்புரை :

` உன்னம் ` என்பது , நினைவாகலின் , இறைவனுக்கு அஃது அருளேயாதல் பற்றி , ` கருணை ` என்று உரைக்கப்பட்டது . ` ஆரூரன் ` என்றதனை , ` வன்றொண்டன் ` என்றதன் பின்னர்க் கூட்டுக . ` நூல் ` என்றது . நூலிற் சொல்லப்பட்ட இலக்கணத்தைக் குறித்தது . ` நூல் ` என்ற பொதுமையான் , ` இயற்றமிழ் நூல் , இசைத் தமிழ் நூல் , என்னும் இரண்டனையுங் கொள்க . ` என்தலைமேல் பயில்வார் ` என்றது , ` சிவனடியாராவர் ` என்றவாறாம் ; என்னை ? சுவாமிகள் தந் தலைமேல் பயில்வார் அவரே யாகலின் . ` எம் தலைமேல் ` என்பதும் பாடம் .
சிற்பி