திருப்பைஞ்ஞீலி


பண் :கொல்லி

பாடல் எண் : 1

காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

கருமைநிறம் பொருந்திய நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே , நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய , திருப்பைஞ்ஞீலி இறைவரே , காட்டில்வாழும் அழகரே , நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர் ? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவின தாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர் ; அது நிற்க ; உமக்கு முத்து வடமாவது , பாம்புதானோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது அவர் தமது ஆரமாக மார்பில் பாம்பினை அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . ` கண்டர் `, அண்மை விளி . செய்தல் , ஈட்டுதல் , ` பணியும் ` என்றது , ` பணி ` என்னும் பெயரடியாகப் பிறந்த செய்யும் என்னும் எச்சம் . ` ஆரணீயம் ` என்றது , நீட்டும்வழி நீட்டல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்
வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்
பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்
மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

இறைவரே , மலையின்கண் பிறந்த , ` சந்தனம் , வேங்கை , கோங்கு , மிக்க கரிய அகில் , சண்பகம் ; என்னும் மரங்களை அலைத்துக்கொண்டு வரும் , தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கின்ற , காட்டில் வாழும் அழகரே , நுமது வெள் விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது ; சிவந்த நெருப்புப் போலும் நஞ்சினைக் கொண்ட வாயினையுடைய பாம்பு , ` மூசு ` என்னும் ஓசையுண்டாகச் சீறுகின்றது ; ஆதலின் , நீர் பிச்சைக்கு வரும் போது கையில் பாம்பையேனும் கொண்டுவருதல் வேண்டா .

குறிப்புரை :

இஃது அவர் தமது கையிற் பாம்பினைப் பிடித்து ஆட்டு தலைக் கண்டு அஞ்சியவள் கூறியது . ` செந்தழல் ` என்றது , அடையடுத்த உவம ஆகுபெயராய் , நஞ்சினைக் குறித்தது . விடையையும் வேண்டா என்றலே கருத்தாகலின் , ` பாம்பு வேண்டா ` என்றதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது . ` மலைத்த ` என்பதற்கு , ` மேலே கொண்ட ` என்றும் , ` முரித்த ` என்றும் உரைத்தலுமாம் . பசுமை , இங்குத் தண்மை மேற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்
துன்ன ஆடை சுடலையில்
பேயொ டாடலைத் தவிரும் நீரொரு
பித்த ரோஎம் பிரானிரே
பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்
பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , பாயுந் தன்மையுடைய நீரைக் கொண்ட அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும் , அதன் கரையில் , மாதவியும் , புன்னையும் பொருந்திய ` சோலைகள் சூழ்ந்த திருப் பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள , காட்டில் வாழும் அழகரே , நீர் , கண்ணும் , வாயும் , மேனியும் அழகியராய் இருக்கின்றீர் ; ஆயினும் , தைத்த கோவணத்தை உடுத்து , சுடலையில் பேயோடு ஆடுதலை ஒழிய மாட்டீர் ; நீர் ஒரு பித்தரோ ? அவற்றை விட்டொழியும் .

குறிப்புரை :

இஃது , அவர் பேயோடு ஆடுதலை நினைந்து அஞ்சியவள் கூறியது . தூய்மை , ஈண்டு அழகு . ` தூயவர் ` என்பது இடவழுவமைதி . ` கண்ணும் , வாயும் , மேனியும் ` என்றது , அவரது திருமேனியிற் சில உறுப்புக்களை விதந்தவாறு . ` ஆடை ` என்ற விடத்தும் இரண்டனுருபு விரிக்க . ` துன்ன ஆடையைத் தவிரும் என்றது , ` நல்லாடையை உடுத்து வாரீர் ` என்றபடி . ` தவிரும் நீர் பித்தரோ ` என்றமையால் பித்தரோ என்ற காரணம் புலப்படுத்தப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண்
அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்குமி தென்கொ லோபலி
மாற்ற மாட்டோ மிடகிலோம்
பைந்தண் மாமலர் உந்து சோலைகள்
கந்த நாறுபைஞ் ஞீலியீர்
அந்தி வானமும் மேனி யோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

பசிய , தண்ணிய , சிறந்த பூக்களை உதிர்க்கின்ற சோலைகள் நறுமணம் வீசுகின்ற திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளி இருப்பவரே . காட்டில் வாழும் அழகரே , நீர் மகளிர் மனத்தைக் கவர்தற்கு , ` இயல் , இசை , நாடகம் ` என்னும் முத்தமிழிலும் வல்லிரோ ? நும் மேனியும் அந்தி வானம் போல்வதோ ? சொல்லீர் , அவை நிற்க ; நீர் , உமது முன்கையில் பாம்பு நின்று படம் எடுத்து ஆடும்படி வந்து நிற்பது என் ? இதனால் , நாங்கள் கொண்டுவந்த பிச்சையை இடாது போக மாட்டேமும் , இடமாட்டேமும் ஆகின்றேம் .

குறிப்புரை :

` இப்பாம்பினை விடுத்துவாரீர் ` என்றபடி , இஃது அவர் தமது முன்கையில் பாம்பினைக் கங்கணமாக அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . கொல் ஓ அசைகள் . ` மேனியும் அந்தி வானமோ ` என மாற்றிக்கொள்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

நீறு நுந்திரு மேனி நித்திலம்
நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

தலைவரே , காட்டில் வாழும் அழகரே , நீர் , அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு , ` யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்றீர் ; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது . ஆயினும் , கரிய நீண்ட கண்களையுடைய பெண் ஒருத்தி யோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர் ; அதன் மேலும் நீர் , கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ ? சொல்லீர் ; இதனால் , உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம் ; நடவீர் .

குறிப்புரை :

இஃது அவரைப் பிரியாது உடன் வருகின்ற தேவியை யும் , அவரது சடையில் உள்ள கங்கையையும் கண்டு அஞ்சினவள் கூறியது . ` இவ்விருவரையும் விடுத்து வாரீர் ` என்பது குறிப்பு . ` நித்திலம் ` என்றவிடத்து , ` போல்வது ` என்பது எஞ்சி நின்றது . நீற்றழகில் திளைத்தவள் , பின் தேவியைக் கண்டு அஞ்சினாள் என்க . அவ் வச்சத்தின்பின் தோன்றிய புலவியானே , ` இடகிலோம் ; நடமின் ` என்றாள் . ` நீணெடுங் கண்ணினாள் ` என்பதும் பாடம் . ` சிறிது பிச்சை இடுமின் ` என்ற குறிப்பெச்சம் வெளிப்படுத்தி உரைக்கப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

குரவம் நாறிய குழலி னார்வளை
கொள்வ தேதொழி லாகிநீர்
இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே
நடந்து போகவும் வல்லிரே
பரவி நாடொறும் பாடு வார்வினை
பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே , காட்டில் வாழும் அழகரே , நீர் , குராமலரின் மணத்தை வீசுகின்ற கூந்தலையுடைய மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்வதே தொழிலாய் , இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர் ; அதனால் , நள்ளிரவில் இங்குநின்றும் நடந்துபோகவும் வல்லீரோ ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது , அவர் இருளிற்கு அஞ்சாராதலையறிந்து அஞ்சினவள் கூறியது . உடன் போக்கை விரும்புதலும் குறிப்பென்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்
என்பெ லாமணிந் தென்செய்வீர்
காடு நும்பதி ஓடு கையது
காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் , பாடு தலையுடைய வண்டுகள் இசையை முழக்குகின்ற சோலைகளை யுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சையிடுமின் ` என்று சொல்லி வந்து நிற்கின்றீர் ; நீர் , இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடுகின்றீர் ; அதனோடு ஒழியாது , எலும்புகளை யெல்லாம் அணிந்து என்ன பெறப்போகின்றீர் ? அதுவன்றி , நும் ஊரோ , காடு ; நும் கையில் இருப்பதோ , ஓடு ; இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது ? இந்நிலையில் நீர் , ஆடல் பாடல்களிலும் வல்லீரோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது , அவர் தம் மேனியில் எலும்பெல்லாம் அணி தலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . அவரது ஆடல் பாடல்களில் திளைத்தவள் , எலும்பணிதலைக் கண்டு அஞ்சினாள் என்க , கொன்றை , அடையாள மாலையாதலோடு நறுமணம் பொருந்திய தாயும் , காதலித்தார்க்குச் சூட்டுதற்கு உரித்தாயும் இருத்தல்பற்றி , ` அஃது ஒக்கும் ` என மகிழ்ந்தாள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங்
கங்கை யாளொடு திங்களும்
மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு
வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அத்தி யீருரி போர்த்தி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் அடியார்களும் , சித்தர்களும் பத்திமிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்று சொல்லிவந்து நிற்கின்றீர் ; ` ஊமத்தை , கொன்றை ` என்னும் இவற்றின் சிறந்த மலர்களும் , வன்னியின் இலையும் , கங்கையும் , பிறையும் , அவற்றொடு நெருங்கிய வெண்டலையும் , கொக்கிறகும் , வெள்ளெருக்கும் உம் சடையிலே உள்ளன ; அவைகளே யன்றி , யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது அவர் , யானைத்தோல் போர்த்திருத்தலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . ` மாமலர் மத்தக் கொன்றை ` என்பதனை , ` மத்தக் கொன்றை மாமலர் ` என மாற்றியுரைக்க , வெண்டலை தாருகா வனத்து முனிவர்கள் விட்டது என்பதனைக் கந்தபுராணம் ததீசியுத்தரப் படலத்திற் காண்க . ` கொக்கிறகொடு ` என விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் அன்று . கொக்கிறகு , கொக்குருவாய அசுரனை அழித்து அணிந்தது . ` சடைய ` என்ற விடத்து நின்ற , ` தாம் ` என்பது அசை நிலை . ` வெள்ளெருக்கு நுஞ்சடையவாம் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

தக்கை தண்ணுமை தாளம் வீணை
தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்க ரைகுட முழவி னோடிசை
கூடிப் பாடிநின் றாடுவீர்
பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் , எப்பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்று சொல்லி வந்து நிற்கின்றீர் . நீர் , ` தக்கை , தண்ணுமை , தாளம் , வீணை , தகுணிச்சம் , கிணை , சல்லரி , சங்கு , குடமுழா ` என்னும் இவற்றொடு கூடி , பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர் ; ஆயினும் , அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது , எலும்பையும் , ஆமையோட்டையும் அணிந்து கொண்டீரோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது , அவர் , எலும்பும் ஆமையோடும் அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . அவரது இசையிலும் , கூத்திலும் திளைத்தவள் , எலும்பையும் , ஆமையோட்டையும் கண்டு அஞ்சினாள் என்க . தக்கை முதலாக , குடமுழா ஈறாகச் சொல்லப்பட்டவை , வாச்சிய வகைகள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு
கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்
மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்
வேதம் ஓதுதிர் கீதமும்
பைய வேவிடங் காக நின்றுபைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

தலைவரே , காட்டில் வாழும் அழகரே , உமக்குக் கையில் ஒரு பாம்பு ; அரையில் , கட்டிய ஒரு பாம்பு ; கழுத்தில் ஒரு பாம்பு ; அவையெல்லாம் பின்புறமும் ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர் ; அதனோடு வேதம் ஓதுகின்றீர் ; இவற்றோடு இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்ற வந்து நின்று , ` யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்கின்றீர் ; பிச்சை எடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ ? சொல்லீர் .

குறிப்புரை :

பிச்சைக்கு வருவோர் இவ்வாறு பாம்புகளை உடம்பெங்கும் அணிந்துவருதல் கூடாது என்றபடி . இஃது , அவர் கை முதலியவற்றில் பாம்பை உடையவராதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரை
மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர்
வேண்டிக் காதல் மொழிந்தசொல்
மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன்
றொண்டன் வாய்மொழி பாடல்பத்
துன்னி இன்னிசை பாடு வார்உமை
கேள்வன் சேவடி சேர்வரே.

பொழிப்புரை :

அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள , காட்டில் வாழும் அழகராகிய இறைவரை , தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையினையுடைய மங்கையர் பலர் காதலித்து அக் காதலை வெளிப்படுத்திய சொற்களை யுடைய , நிலைபெற்ற பழைய புகழினையுடைய திருநாவலூரில் தோன்றினவனாகிய வன்றொண்டனது வாய்மொழியான இப் பாடல்கள் பத்தினையும் , மனத்தில் புகக்கொண்டு , இனிய இசையாற் பாடுபவர் , உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது செவ்விய திரு வடியை அடைவர் .

குறிப்புரை :

பாடலை மனம்புகச் செய்தலை, `மனனம் செய்தல்` என்பர். பாடல்களை ஒருவர் சொல்லக் கேட்டுப் பாடுவதிலும், தாம் அறிந்து பாடும்பொழுதே இசை இனிதாய் அமையும் என்க.
சிற்பி