திருக்குருகாவூர் வெள்ளடை


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

இத்தனை யாமாற்றை
யறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே யென்றுன்னைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்க முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன் ; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை , ` பித்தன் ` என்று இகழ்ந்து பேசுவர் ; அஃது அவ்வாறாக , நீ , முத்தையும் மாணிக்கத்தையும் , பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ !

குறிப்புரை :

` இத்தனை ` என்றது , பொதிசோறும் தண்ணீர்ப் பந்தரும் கொண்டு மறையவன்போல வீற்றிருந்தமை முதலியன . ` பித்தரே என்றும்மை ` என்பது , அறியாதார் திரித்தோதிய பாடம் , ` மாணிக்கம் ` என்புழியும் இரண்டனுருபு விரிக்க . ` முளைப்பித்து ` என்னும் பிற வினையுள் பி விகுதி தொகுத்தலாயிற்று . ` எழுந்த வித்தனே ` என்றாராயினும் , ` வித்தாய் எழுந்தவனே ` என்பது கருத்தாகக் கொள்க . ` முத்து முதலியவற்றை முளைப்பிக்கும் வித்து ` என்றது இல்பொருள் உவமை . அவ்வுவமையால் , சிவபிரான் தன் அடியவர்கட்கு அரும்பெருஞ் செல்வமாய் இருத்தலைக் குறித்தருளியவாறு . ` வெள்ளடை ` என்றது , கோயிலின் பெயர் ; அஃது ஆங்குள்ள இறைவற்கு ஆகி , விளியேற்றது . ` அன்றே ` என்றது தேற்றம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

ஆவியைப் போகாமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக்
குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங்
கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

வாவிகளில் கயல்மீன்கள் துள்ள , குளத்திலும் , நீர்மடைகளிலும் , கருங்குவளையும் , செங்குவளையும் , தாமரையும் , செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய் !

குறிப்புரை :

ஆவியைப் போகாமே நிறுத்தியது , பொதிசோறும் , தண்ணீரும் தந்து என்க . வாவி , பெருங்கிணறு . ஆட்கொள்ளுதல் ஈண்டு , உய்யக்கொள்ளுதல் . ` குளத்திடை `, குளமாகிய இடம் என்க . ` தோறும் ` என்றதனை , ` குளத்திடை ` என்பதனோடும் கூட்டுக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பாடுவார் பசிதீர்ப்பாய்
பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக
உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக்
கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க , உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே , காடே சிறந்த அரங்காய் இருக்க , செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே , திருக் குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும் , பிறவாற்றால் துதிக்கின்ற வரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து , நோயைப் பற்றறுப் பாயன்றோ !

குறிப்புரை :

உவகை மீதூர்வால் , பாடுவாரையும் பரவுவாரையும் , அவர்கட்குச் செய்யும் திருவருள் வகைகளையும் வேறு வேறுபோல அடுக்கி ஓதி வியந்தார் . இதனை வருகின்ற திருப்பாடலை நோக்கியும் அறிக . பாடுவார் பசியைத் தீர்த்தல் தம்மிடத்து வெளியாய் நிகழ்ந்தமை அறிந்து அருளிச் செய்தவாறு . ` காடு ` என்றதற்கு ஏற்ப , ` வேடன் ` என்றது , ஓர் நயம் . ` காடுநின் னிடமாக ` என்பதும் பாடம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

வெப்பொடு பிணியெல்லாந்
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
ஒப்புடை யொளிநீலம்
ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி யழகாய
அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற , மலர்களையுடைய பொய்கைகளில் , மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற , அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ , என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய் !

குறிப்புரை :

எல்லாப் பிணிகட்கும் முதலாய்த் தோன்றுவது வெப்பு நோயாகலின் , அதனைத் தலையாயதாக ஓதினார் . சுவாமிகளுக்குப் பிணி தீர்த்தமையாவது , வலிந்து ஆட் கொண்டமையால் நோய் அணுகாத திருமேனியராயினமையேயாம் . ` அப்படி ` என்பது , மிகுதி யுணர்த்துவதோர் வழக்குச் சொல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

வரும்பழி வாராமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச்
சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை
அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும் , பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே , அரும்பு களையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும் , பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந் தருளியிருப்பவனே , நீயன்றோ , எனக்கு வருதற்பாலதாய பழி வாராமல் தடுத்து , என்னை ஆட்கொண்டாய் !

குறிப்புரை :

` வருதற்பாலதாய பழி ` என்றது , ` திருக்கயிலையில் இருந்தும் இறைவனை யடையாது பிறப்பில் அகப்பட்டார் ` எனச் சொல்லப்படுதல் . இறைவன் தடுத்தாட் கொண்டமையின் , அப்பழி வாராதொழிந்தமை யறிக . அல்லியை , ` பொய்கை அல்லி ` என்றதனால் , மல்லிகை வேறிடத்துள்ளமை கூறுதல் கருத்தாயிற்று . உடைமையை , விரும்பியதாக அருளியது இலக்கணை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , பரவெளியின்கண் உள்ள நீ , இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண் யாதொரு துன்பமும் தோன்றாதவாறு , பண்ணின்கண் இனிமையைப் போன்றும் , பழத்தின்கண் சுவையைப் போன்றும் , கண்ணின்கண் மணியைப் போன்றும் , மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ !

குறிப்புரை :

பண்ணிடைத் தமிழும் , பழத்தினிற் சுவையும் இன்பம் பயத்தற்கும் , கண்ணிடை மணியும் , கடுவிருட் சுடரும் உறுதியுணர்த் தற்கும் உவமை யாயின . அவற்றுள் பண்ணிடைத் தமிழ் உள்ளுணர் வநுபவமும் , பழத்தினிற் சுவைபுறவுணர்வநுபவமும் பற்றிவந்தன . அவ்வாறே கண்ணிடைமணி , அவர்பொருட்டு இறைவன்தானும் பொருள்களை உடன் சென்று காணும் நிலையையும் கடுவிருட் சுடர் பொருள்களைக் காட்டும் நிலையையும் பற்றி வந்தன . ` இடை ` என்றன , ஏழனுருபுகள் . ` விண்ணிடை நீ ` என இயைக்க . ` மனத்திடர் வாராமே ஒப்பாய் ` என்றதனால் . ` அவ்வாறு நிற்றல் மனத்திடத்து ` என்பது பெற்றாம் . ` ஒப்பாயன்றே ` என்றதன்பின் , ` அதனால் இது செய்தாய் ` என , தம் பசித் துன்பத்தையும் வெயிற்றுன்பத்தையும் அறிந்து வந்து , சோறும் நீரும் உதவி , நிழலளித்து ஆவியைப் போகாமே காத்து ஆண்ட அருட்டிறத்தை நினைந்துருகி அருளியது , குறிப்பெச்சமாய் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

போந்தனை தரியாமே
நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும்
நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந்
தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயாய்ப் போந்தவன் நீயேயன்றோ ! ஆதலின் , இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும் , யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன் .

குறிப்புரை :

` போந்தனை ` என்றது , முன்னிலை வினையாலணையும் பெயர் . சாதலைத் தவிர்த்து ஆண்டமையால் , ` நமன் தமர் என் மாட்டு வாரார் ` என்பதுபட நின்றமையின் , ` செய்தாலும் ` என்ற உம்மை , எதிர்மறை . ` நோந்தனை , சாந்தனை ` என்புழி நின்ற , ` அளவு ` என்னும் பொருளைத் தரும் , ` தனை ` இரண்டும் , அளவை யுடைய செயல்மேலும் , நிலையின்மேலும் நின்றன . ` ஏல்வை ` என்பது , ` ஏல் ` என நின்றது . அவ்விடத்து உள்ள உம்மை சிறப்பு , ` ஏனும் ` என்பதன் திரிபாகிய ஏலும் என்பதாக வைத்து உரைத்தலும் ஆம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மலக்கில்நின் னடியார்கள்
மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய
தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங்
கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக் களைபவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் , மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும் , அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ !

குறிப்புரை :

அலைவில்லாமை தெளிவினாலும் , மால் தீர்தல் அனுபவத்தாலுமாம் . ஆகவே , ` மால் ` என்றது , வாசனை மாத்திரமாய் நிற்பதைக் குறித்தல் அறிக . ` சலம் ` என்னும் பலபொருள் ஒருசொல் , முன்னர்த் துன்பத்தையும் , பின்னர் வெகுளியையும் குறித்து வந்தன . ` வந்தாலும் ` என்னும் உம்மை , சிறப்பு . அதனால் , ஏனைய சிறுதுயரங்களை விலக்குதல் சொல்லவேண்டாவாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

படுவிப்பாய் உனக்கேயாட்
பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன்
தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்க்
கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும் , நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பித்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும் , முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும் , நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ !

குறிப்புரை :

` பொன் ` என்றது , ஆகுபெயராய் அணியின்மேல் நின்றது ; அதனை , ஏற்புழிக் கோடலால் , தொடுவனவற்றிற்கு மட்டுமே கொள்க . ` தொடுவனவற்றைத் தொடுவிப்பாய் ` என்றதனால் , ` இடுவன வற்றை இடுவிப்பாய் , செறிப்பனவற்றைச் செறிப்பிப்பாய் ` என்பன வும் பிறவும் தழுவப்பட்டன . ` துகிலொடு ` என்னும் ஒடுவுருபு , ` தொடியொடு - தொல்கவின் வாடிய தோள் ` ( குறள் -1235.) என்றாற் போல , வேறுவினைப் பொருட்கண் வந்தது . ` தோலுடுத் துழல் வானே ` என்றது , உடம்பொடு புணர்த்தலாகலின் , அதற்கு இவ் வாறுரைக்கப்பட்டது , ` அடியாரைப் பொன் தொடுவிப்பாய் ` என்ற தனால் , அவன் எலும்பணிதலைக் கூறுதலுங் கருத்தாதலும் , ` அல்லா தாரை ` என்றதனால் , ` நல்லாரை ` என்பதும் பெறப்பட்டன . நல்லார் , திருத்தொண்டின் நெறியைப் பற்றினவர் ; அல்லார் , அதனைப் பற்றாதவர் , அவரைக் கெடுவித்தலாவது , வினைவழியில் உழலச் செய்தல் , திருவடியை அடைந்தார் கேடெய்தாமைக்குக் காரணம் கூறுவார் ,` கேடிலாப் பொன்னடி ` என்றருளினார் . அருளவே , ஏனைய சார்புகள் கேடுடையன என்பதும் , அவற்றை அடைந்தார் கெடுவர் என்பதும் பெறப்பட்டன .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

வளங்கனி பொழின்மல்கு
வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை யுறைவானை
இளங்கிளை யாரூரன்
வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை
பத்தர்கட் குரையாமே.

பொழிப்புரை :

வளப்பம் மிகுந்த சோலைகளையும் , நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற , வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , சிங்கடிக்குத் தங்கையாகிய , ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன் , மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை , அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும் .

குறிப்புரை :

` தமிழ்மாலை ` என்பது ஒருசொல் நடைத்தாய் , ` குளிர் ` என்றதனோடு , காரணகாரியப் பொருட்டாகிய இறந்த கால வினைத்தொகை நிலைபடத் தொக்கது . புகழென்னும் பொருளதாகிய , ` உரை ` என்பது ஆகுபெயராய் ; அதனாலாகிய மாலையை உணர்த் திற்று . ` பத்தர்கட்கு உரையாம் ` என்றது , ` திருக்குருகாவூர் இறைவனைப் பரவுவார் , இத் தமிழ்மாலையாலே பரவுக ` எனவும் , ` அங்ஙனம் பரவின் , இதன்கண் அவ்விறைவன் தன் அடியார்கட்குச் செய்தனவாகவும் , செய்வனவாகவும் சொல்லப்பட்ட பயன்களை அடைவார்கள் ` எனவும் அருளியவாறாம் .
சிற்பி