திருப்பாச்சிலாச்சிராமம்


பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

எனது தலையையும் , நாவையும் , நெஞ்சத்தையும் , இத் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானார்க்கே உரியன ஆக்கினேன் ; திருவடித் தொண்டினையும் அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன் ; இவற்றை யானே சொல்லின் , பொய்போல்வதாகும் . இந் நிலையில் , இவர் படம் விரித்த பாம்பினைக் கட்டிக்கொண்டு ஒரு கோவணத்தோடு இருந்து , பித்தரோடே ஒத்து , சிறிதும் திருவுளம் இரங்கிலராயினும் , எம்மைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` தனக்கு ` என்றது , பன்மை ஒருமை மயக்கமாய் , செய்யுளில் சுட்டுப் பெயரோடு ஒத்து , முன் வந்தது . ` உவமம் ` என்பது , ` உவமன் ` என ஈறு திரிந்து , ` போலி ` என்னும் பொருளதாய் நின்றது . நச்சு - விருப்பம் ; அருள் . ` ஆகில் ` என்றதில் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . ` இல்லையோ ` என்னும் ஓகாரம் இரக்கப் பொருளதாய் , முறையீடுணர்த்தி நின்றது . இன்னோரன்னவை , ` கடிசொல் இல்லைக் காலத்துப் படினே ` ( தொல் - சொல் . 452) என்றதனாற் கொள்ளப்படுவன . இவை , வருகின்ற திருப்பாடல்கள் எல்லா வற்றினும் ஒக்கும் . இத் திருப்பதிகத்திற்கு இவ்வாறன்றி , ஓகாரத்தை எதிர்மறையாக்கி , ` இவர் நமக்கு அருள் செய்யாராயின் , இவரையன்றி நமக்குப் பிரானார் பிறர் இல்லையோ ` எனப் பொருள் கூறி , ஏனைத் தலங்களிலுள்ள இறைவரைப் பிறரென்றதாக உரைப்பாரும் உளர் . அது , ` ஊடலுடையார் போல் ` என்னாது , ` முறைப்பாடுடையார் போல் ` எனக் கருத்துரைத்தும் , ` அருளாதொழியினும் ` என உம்மையை விரித்துக் காட்டியும் ( தி .12 பெரிய புரா . ஏயர்கோன் . 80-81) உணர்த்திப் போந்த மரபாகாமை யறிக .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே யமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
இறைஇறை திருவருள் காட்டார்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

அடியேன் என்னைப் பெற்ற தாயைத் துணையென்று நினைந்திலேன் ; தந்தையைத் துணையென்று நினைந்திலேன் ; என்னை ஆண்ட தலைவனே சாலும் என்று நினைத்தேன் . இவ்வாறு ஒருவன் உளன் ` என்று , தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் , அன்னங்கள் மிக்கு வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திரு வுள்ளத்தடைத்து , சிறிது திருவருளைப் புலப்படுத்திலர் . இவர் தம் அடியவர்க்கு , மறுமை நலம் ஒன்றையே அளித்தலல்லது , இம்மை நலத்தை அருளுவதில்லையாயினும் . இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` இறை ` இரண்டனுள் , முன்னது காலம் உணர்த்தி , மேலே , ` கருதி ` என்றதனோடு இயைந்தது . காட்டாய் என்பது பாடம் ஆகாமை அறிக .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

உற்றபோ தல்லால் உறுதியை உணரேன்
உள்ளமே அமையுமென் றிருந்தேன்
செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற
செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பெற்றபோ துகந்து பெறாவிடி லிகழில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

யான் , ஒரு பொருளினால் நன்மையாதல் தீமையாதல் வந்த காலத்தில் அதனைக் கண்டபின் அல்லது , அதற்கு முன்பே அதன் உண்மை இயல்பை ஓர்ந்துணரும் சிறப்புணர்வு இல்லேன் ; அதனால் , என் பொதுமை யுணர்வே சாலும் என்று அமைந்திருந்தேன் . இத்தன்மையேனிடத்து , தேவர் பொருட்டு அவரைப் பகைத்த அசுரரது முப்புரத்தில் தீயெழச்செய்தும் , நஞ்சினை யுண்டு கண்டத்தில் வைத்தும் , சிவந்த சடை முதலிய தவக் கோலத்தைப் பூண்டும் , ` களை கண் இல்லாது அலமந்தவர்க்கு அருள் பண்ணுபவர் ` எனப் பெயர் பெற்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் , அடியேன் யாது சொல்லி இரந்தாலும் , தாம் மனம் மகிழ்ச்சி அடையப் பெற்றபோது இரக்கம் வைத்து , பெறாதபோது இரக்கம் வையாது விடினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` உறுதி ` என்றது , என்றும் மாறாத இயற்கையை . ` உள்ளம் ` என்றது , ` மனம் ` என்னும் பொருளதாய் , அதனால் வரும் பொது உணர்வைக் குறித்தது . புரம் எரியெழச் செய்தமை முதலியன உடம்பொடு புணர்த்தனவாகலின் , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` உற்றபோதல்லால் உறுதியை யுணரேன் ; உள்ளமே யமையு மென்றிருந்தேன் ` என்றது , தம் எளிமையை விளக்கி யருளியவாறு . ` சொன்னாலும் ` என்ற குறிப்பினால் , பெறுதல் , பெறாமைகள் , உள்ளத்து உவகையைப் பற்றியவாயின .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

நாச்சில பேசி நமர்பிற ரென்று
நன்றுதீ தென்கிலர் மற்றோர்
பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப்
புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம்
பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

மனமே , பொன் விளையும் எனப் புகழத்தக்க கழனிகளில் பறவைக் கூட்டம் ஒலிப்பதும் , நீர் நிறைந்த பொய்கைகளை யுடையதும் ஆகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அடிகள் எனப்பட்ட இவர்தாம் , சிலரை , ` நம்மவர் ` என்றும் , சிலரை , ` பிறர் ` என்றும் நாவாற் சிலவற்றைச் சொல்லுதலும் . அவர் சொல்வனவற்றைத் தாம் , ` நன்று ` என்று புகழ்தலாதல் , ` தீது ` என்று இகழ்தலாதல் செய்தலும் இலர் . மற்றும் ஓர் முகமன் செய்தலும் இவரிடத்து இல்லை . ஆயினும் , பலரையும் தமக்கு அடிமை என்று மட்டும் ஆளாக்கிக் கொள்வர் . அதன் பின்பு அவரிடம் அன்பு கொண்டு ஓர் இனிய பேச்சுப் பேசுதல் இலர் ; ஒன்றைத் தருதலும் இலர் ; ஆயினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரையன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

முகமன் செய்தலை , ` பூச்சு ` என்றல் வழக்கு . ` தர ` என்னும் வினை எச்சம் , தொழிற் பெயர்ப் பொருள் தந்தது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை
வாட்டிய வகையின ரேனும்
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை
போகும்நாள் வீழும்நா ளாகிப்
பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

கட்டப்பட்ட வெவ்விய வில்லால் , வானத்தில் இயங்கும் அரண்களை அழித்த வன்கண்மையை உடையவராயினும் , தொண்டுபுரிந்த அந்த நாட்களே புகழத்தக்க நாட்களும் , தொண்டு புரியாது போகும் நாட்கள் பயனின்றிக் கழிந்த நாட்களுமாம் என்று கொண்டு , அன்புசெய்பவருக்கு அருள் செய்பவராகிய , திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவர் , என்னளவில் , யாது சொல்லி இரந்தாலும் திருச்செவியில் ஏலாது , நொடிப் பொழுதில் நீங்குதலையே உடையவராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` பேர்வது ` என்பது தொழிற் பெயர் . அதன்பின் , ` உடையர் ` என்பது எஞ்சிநின்றது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்
தீவினை செற்றிடும் என்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
ஆவதும் அறிவர்எம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

அடியேன் , ` பணிபிழைத்தற் குற்றம் வந்து அழிவைச் செய்யும் ` என்று அஞ்சி , நன்றல்லாத தவத்தைச் செய்வார் சென்ற வழியையும் மிதியேன் ; தமது திருவடித் தொண்டினையன்றி மற்று யாவரது பணியையும் யான் அறிந்திலேன் ; அடியேன் இத் தன்மையேனாதலை எம்பெருமானாராகிய இவரும் அறிவர் . அங்ஙனமாக , என்னைப் புரத்தற்கு , படைகளுள் முதன்மையுடைத்தாகிய சூலத்தைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளாகிய இவரது நிலைமை , பிசைந்த வெள்ளிய சாம்பலைப் பூசுவதே யாயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

நன்றல்லாத தவமாவது , இறைவனை முதல்வனாக அறியாது , வினையையே முதலாக நினைத்து ஒழுகும் ஒழுக்கம் , அதனையுடையவர் புத்தர் , சமணர் , மீமாஞ்சகர் , தார்க்கிகர் , சாங்கியர் என்போர் . ` அடித்தலம் அல்லால் ` எனப் பாடம் ஓதுதலும் ஒன்று . ` ஆர் `, ` பரமர் ` என்றன ஆகுபெயர்கள் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

கையது கபாலங் காடுறை வாழ்க்கை
கட்டங்க மேந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்
வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
பையர வல்குற் பாவைய ராடும்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே யொத்தோர் பொய்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

கையின் கண்ணதாகிய தலை ஓட்டினையும் , காட்டில் வாழும் வாழ்க்கையினையும் , ` கட்டங்கம் ` என்னும் படையினை ஏந்திய கையினையும் , மார்பின் கண்ணதாகிய முப்புரி நூலினையும் உடைய ஒளிவிடுகின்ற புல்லிய சடையின்மேல் வெள்ளிய பிறையைச் சூடிய விகிர்தரும் , அரவப் படம் போலும் அல்குலினை உடைய மகளிர் ஆடலைப் புரியும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளும் ஆகிய இவரது தன்மை , சொல் பிறழாதவர் போல வந்து ஆட்கொண்டு , பின்பு பிறழ்தலைச் செய்வதேயாய் விடினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

செய்யுட் கேற்றவாறு ஓதியருளினாராயினும் , ` கையிற் கபாலத்தர் ; கட்டங்கத்தர் ; காடுறை வாழ்க்கையர் ; மெய்யிற் புரிநூலர் ; சடைமேல் திங்களர் ` என்றுரைத்தலே திருவுள்ளம் என்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

நிணம்படு முடலை நிலைமையென் றோரேன்
நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும்
கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

அடியேன் , நிணம் பொருந்தியதாகிய இவ்வுடம்பை நிலைத்த தன்மையுடையதென்று நினையாது , நெஞ்சம் இறைவருக்கு உரியது என்றே துணிந்தேன் ; இரவும் பகலும் அடியவர் குழாத்தின் ஊடே சென்று தம்மை அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன் ; இவ்வாறாக , படம் பொருந்திய பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவரது தன்மை , பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதேயாய்விடினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` ஓரேன் ` என்றது . முற்றெச்சம் , ` நெஞ்சமே ` என்னும் ஏகாரத்தை மாற்றி உரைக்க . ` கருத்து ` என்றது , அன்பின் மேல் நின்றது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே
குற்றேவல் நாள்தொறுஞ் செய்வான்
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்
எம்பெரு மானென்றெப் போதும்
அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

நெஞ்சே , நீ அன்பால் இளகி மகிழ்ச்சியோடும் விரைந்து சென்று நாள் தோறும் குற்றேவல் செய்ய அடைகின்றாய் ; ஆயினும் , தமக்கு வரையறுத்த நாளெல்லையைத் தவத்தாற் கடக்க மாட்டாத சிலர் , இயல்பில் அன்பில்லாதவராயினும் , தாம் கேட்ட வாற்றால் வாயினால் எப்போதும் , ` சிவனே சிவனே ` என்று கூப்பிடுந் தன்மையுடையவராயின் , அவர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானார் , யாது சொல்லி வேண்டினும் , நீ பிழை செய்ததைப் பொறுத்து உனக்கு ஒன்றையும் ஈகின்றிலர் ; ஆயினும் உன்னைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; நீ என் செய்தியோ !

குறிப்புரை :

தமது முறைப்பாட்டினை இத் திருப்பாடலில் நெஞ்சின் மேல் வைத்து அருளிச் செய்தார் என்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந்
தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினாற் கூறி
மனத்தினால் தொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

வட்டாதல் தன்மையிற் பட்ட உடையும் , நறும் பொடியாகப் பூசிய வெள்ளிய நீறும் , மற்றும் இன்ன தோற்றமும் ஆகிய இவற்றது பெருமையை யுணர்ந்து , அவற்றைக் கண்டால் , அடியேன் நீல கண்டத்தையுடைய எம்பெருமானாரைக் கண்டதாகவே மனத்தால் நினைத்து , வாயால் துதிப்பேன் ; அவ்வாறாக , படத்தை யுடையதன் வகையிற்பட்டபாம்பைப் பிடித்த கையை யுடையவராகிய , திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர் , என்னைத் தம்பால் கட்டுண்டு கிடக்குமாறு ஆட்கொண்டு , ஒன்றையும் ஈயாராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` காணில் ` என்றது , அடியவர் வேடத்தை யாதல் அறிக . ` மணிப்படு கண்டன் ` என்றது பன்மை ஒருமை மயக்கம் , பட்டுடை - முழந்தாள் அளவாக உடுக்கும் உடை விசேடம் . ( சிந்தா . 468 நச் . உரை .)

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க் கடியனு மானேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி
லாச்சிரா மத்தெந்தம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

எய்தற்கரிய புகழையுடையராய பெரியோர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர்க்கு யான் ஒரு பிறப்பில் அடியேன் அல்லேன் ; ஏழ் பிறப்பிலும் அடியேன் ; அதுவேயுமன்றி , இவர் தம் அடியார்க்கும் அடியனாயினேன் ; என்னை விற்கவும் , ஒற்றி வைக்கவுமான எல்லா உரிமைகளுமாக இவர்க்கு நான் உரியவனா யினேன் ; இவர்தம் ஒளி பொருந்திய மலர் போலும் செம்மையான திருவடிகளே எனக்கு உறுதுணையாக , என் உள்ளம் அவற்றிடத்து உருகா நிற்கும் ; இவ்வாறாக , இவர் , முன்பு பெருமைகள் பேசி , பின்பு சிறுமைகள் செய்வாராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` காட்டாய் ` என்பதனை , ` காட்டாக ` எனத்திரித்து , முன்னே கூட்டுக . ` உள்ளமும் ` என்னும் உம்மை , ` உடலும் ` என எதிரது தழுவிற்று . ` எம்மடிகள் ` என்பது பாடமாகாமை அறிக . ` எம் மடிகள் ` என அளபெடுத்து ஓதுதலும் ஆம் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 12

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மான்என்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவல்ஆ ரூரன்
பேசின பேச்சைப் பொறுத்தில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

` எம்பெருமான் ` என்று , எப்போதும் உரிமையோடு பரவிய புகழை யுடையவனும் , திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவரை யடைந்து அவரது திருவடிகளைத் தொழவேண்டுமென்று பல நாட்கள் வாயினாற் சொல்லி , மனத்தினால் நினைந்தவனும் ஆகிய , வளப்பமான வயல்கள் சூழ்ந்த , திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள் , உண்மையில் ஏசினவும் அல்ல ; இகழ்ந்தனவும் அல்ல ; ஆதலின் , அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் ; அது செய்யாராயினும் , அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` ஏசுதல் மனத்தொடு படாதது ; இகழ்தல் மனத்தொடு பட்டது ` என்க . ` பித்தரே ஒத்தொர் நச்சிலராகில் , பின்னையே அடி யார்க் கருள்செய்வதாகில் , பெற்றபோ துகந்து பெறாவிடி லிகழில் ` என்றற் றொடக்கத்தன இகழ்ந்தனபோல நின்றமையின் , ` ஏசினவல்ல இகழ்ந்தனவல்ல ` என்று தெரித்தோதியருளினார் . இவ்விறுதித் திருப் பாடல் முடியும் பொழுதும் , இறைவர் அருள் பண்ணாமையின் இதனைத் திருக்கடைக் காப்பாக ஓதாது , ` பொறுத்திலராயின் இவரலா தில்லையோ பிரானார் ` என முன்னைத் திருப்பாடல்கள் போலவே ஓதியருளினார் . எனினும் , இது முடிந்தவுடன் இறைவர் நிரம்பத் திருவருள் செய்தமையால் , இதனைப் பாடுபவரும் அப் பயன் பெறுதல் , அத் தொடரிலே அமைந்து கிடந்தது என்க . இக் கருத்தானே இத் திருப்பாடலைச் சேக்கிழார் ` திருக்கடைக் காப்பு ` ( தி .12 ஏ . கோ . பு .82.) என்று குறித்தருளினார் .
சிற்பி