திருக்கச்சியனேகதங்காவதம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையையுடைய எம்பெருமானும் , அழகு விளங்கும் , ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும் , தீயில் நின்று ஆடுபவனும் , மேலானவனும் , மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும் , மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங் காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

குலவான் - மேலானவன் . மறை - மறு ; புள்ளி . ` ஆன் நெய் , எண்ணெய் ` முதலாக நெய் பலவாகலின் ` தேன்நெய் ` என்றது இரு பெயரொட்டு . ` சிவபிரான் சடையில் கொன்றை முதலிய மலர்கள் பலவற்றை அணிதல் , அவற்றில் உள்ள தேனாகிய பயன் பற்றி ` என்று , தற்குறிப்பேற்றமாக அருளினார் . புரிதல் , விரும்புதல் . இறைவனது விருப்பம் , அவனது சடைமேல் ஏற்றப்பட்டது . இனி , ` தேனால் புரிக்கப் பட்டு உழல்கின்ற சடை ` என்றலுமாம் . ` உழல் சடை ` என இயையாது , ` உழல் எம்பெருமான் ` என்று இயைத்து , ` தேனால் ஆட்டப்படுதலை விரும்புகின்றவன் ` என்று உரைப்பினும் அமையும் . இவ்வாறன்றி , ` தேனாவது வண்டு ` என்றும் , ` நெய் ` என்றது ` தேனை ` என்றும் உரைப் பாரும் உளர் . ` எரித்து ` என்னும் எச்சம் , எண்ணுப் பொருளது . ` மானை ` என்னும் இரண்டனுருபு , ` கையன் ` என்னும் ஏழாவதன் பொருட்கண் வந்த வினைக் குறிப்பொடு முடிந்தது . ` மாறுபட ` என்றது . ` ஆறுபட ` எனப் பிரித்துரைத்தலும் ஆம் . ` அனேகதங் காவதமே , என வரையறுத்தருளியது , புகழ்ச்சி கருதியென்க . ` அனேகதங்காபதம் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணனின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள் கணவன்
ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

மேலைத்தில்லை அம்பலவாணன் , குறுநடையையும் , குழிந்த கண்களையும் , பிளந்த வாயினையுமுடையனவாகிய பேய்கள் உடன் விரும்பி யாடவும் நரிகள் நின்று ஊளையிடவும் , சிறப்புண்டாக நின்று ஆடுதலை விரும்புவதும் , உயர்ந்த இடபக்கொடியை யுடைய எம்பெருமானும் , தேவர் பெருமானும் , உமாதேவிக்குக் கணவனும் , சடையின்கண் கங்கையை யுடைய தந்தையும் ஆகிய அவ்விறைவனுக்கு உரித்தாயதுமாகிய இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` குறுநடை ` என்பது நீட்டலாயிற்று . வேறு - சிறப்பு . மேலைத்தில்லை கொங்கு நாட்டிலுள்ள ` பேரூர் ` என்னும் வைப்புத் தலம் . இதனைச் சுவாமிகள்கோயில் திருப்பதிகத்திலும் அருளிச் செய்தமை அறியற்பாலது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கொடிக ளிடைக்குயில் கூவு மிடம்மயி
லாலும் மிடம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
கண்டன் இடம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீரும் இடம்திரு
வாகும் இடம்திரு மார்பகலத்
தடிக ளிடம்மழல் வண்ணன் இடம்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

துன்பத்தைக் கொண்ட வினையாகிய பகை நீங்குவதும் , நன்மை வளர்வதும் , மழுப்படையை யுடைய , விளக்கத்தைக் கொண்ட நீரைச் சடையில் ஏற்ற , பிறைத் துண்டமாகிய கண்ணியை யணிந்த நெற்றியை யுடைய நீலகண்டனும் , அழகிய மார்பிடத்தனவாகிய பல அணிகலங்களையுடைய தலைவனும் , நெருப்புப் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவனுக்கு உரியதும் ஆகிய இடம் , கொடி போலும் மகளிர் பாடல்களுக்கு இடையே குயில்கள் கூவுவதும் , அவர் ஆடல்களுக்கு இடையே மயில்கள் ஆடுவதும் ஆகிய ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` கொடிகள் ` என்றது உருவகம் ; அஃது ஆகு பெயராய் அவரது தொழில் மேல் நின்றது . மகளிரது பாடல் ஆடல்களின் மிகுதி உணர்த்தற் பொருட்டு , அவரது பாடல் ஆடல்களுக்கிடையே , குயிலும் மயிலும் கூவுதலும் , ஆடுதலும் செய்வனவாக அருளினார் . ` கண்ணி ` எனினும் ` முடி ` எனினும் ஒக்கும் . ` மார்ப + கலம் ` எனப் பிரிக்க . ` கலம் ` என்றது நல்ல அணிகலங்களையும் , தலை மாலை முதலியவற்றையும் ஒருங்கு கருதியென்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
பாயவி யாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

தேனால் நுழைவிக்கப்பட்டனவாகிய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையும் , கங்கையையும் , பிறையையும் அணிந்த சடையினையுடைய , மேகங்கள் தவழும் மலையில் வளர்ந்த மங்கையும் சிறந்த தேவியுமாகிய உமையை ஒரு பாகத்தில் பொருந்தி யிருக்குமாறு மகிழ்ந்து வைத்து உயிர்கட்கு அருள் புரிகின்ற , சங்கக் குழையை அணிந்த காதினின்றும் வெள்ளொளிக் கற்றையாகிய அருவித்திரள் பாய , அவற்றாலும் அவியாத நெருப்புப் போலத் தோன்று தலையுடைய அங்கையின் மழுவானது இடையறாது ஒளி வீசுகின்ற தன்மையையுடைய இறைவனது இடம் , ஆரவாரத்தையுடைய கச்சி மாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக் கோயிலே .

குறிப்புரை :

` சங்கக் குழை ` என்பது , எதுகைநோக்கி , ` சங்கு குழை ` என இயல்பாய் நின்றது . ` செவிகொண்டு ` என்பது வேற்றுமை மயக்கம் . அருவி , உருவகம் . ` பாய ` என்னும் அகரந்தொகுத்தல் . ` பாய வியர்த்தழல் ` என்பதும் பாடம் . ` போல் உடை ` என்றதற்கு , ` போலு தலையுடைய ` என உரைக்க . ` கையன் ` என்பதிலுள்ள கை , தன்மை . ` தம் ` என்பது , ஒருமைப் பன்மை மயக்கம் . ` தன் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பைத்த படத்தலை ஆடர வம்பயில்
கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

ஆடும் பாம்பாகிய ஆதிசேடனது பையின் தன்மையைப் பெற்ற படத்தினையுடைய தலையின்கண் நீங்காதிருக்கின்ற இடமாகிய நிலவுலகத்தில் வாழப்புகுவோர் , தமதுள்ளத்தை ஒரு நெறிக்கண்ணே வைத்தபொழுது , அவர்க்கு உயர்ந்து விளங்குவதும் , திருவாளனாகிய சிவபிரானது திருவடிக் கண்ணே பிறழாது வைத்த மனத்தையுடையவராகிய அடியார் . தம் மனம் , விரும்பிக் கொள்ளுமாறு அதனுள் இருத்தப்பட்டதும் , மழுப்படையையுடைய தலைவனும் , நெருப்புப்போலும் நிறத்தையுடையவனும் ஆகிய அப் பெருமானுக்கு உரித்தாயதும் ஆகிய இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` அரவத் தலை ` என்பது , ` தலை அரவம் ` என மாறி நின்றது . பயிலப் புகுவார் , மக்களாய்ப் பிறந்தார் ` வைத்த விடம் ` இரண்டனுள் , முன்னது வினை எச்சம் ; அதனுள் , அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தண்ட முடைத்தரு மன்தமர் என்தம
ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

தண்டாயுதத்தை யுடைய இயமனது ஏவலாளர் , என் சுற்றத்தாராகிய சிவனடியாரை நலியக் கருதும் வலிய துன்பத்தைத் தீர்ப்பதும் , உடம்பை யுடைய இப்பிறவியின்கண் மனம் பொருந்தி நின்று நினைப்பவரது பிறவியை அறுப்பதும் , தனது கண்டம் உடைத்தாயுள்ள கரிய நஞ்சினை , உண்ணும் பொருளாக உண்ட தலைவனும் , ஏழு கடல்களின் உள்ளே உள்ள நிலமேயன்றி அண்டம் முழுவதையும் உடைய பெரியோனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாயதும் ஆகிய இடம் , ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

நமன் தமர் நலியாமையும் , பிறவி எய்தாமையுஞ் செய்தல் கூறவே , இறைவனை அடைவித்தல் சொல்ல வேண்டா வாயிற்று . ` கடந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு
தேத்தும் இடங்கதி ரோனொளியால்
விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற்
பேடைதன் சேவலொ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு
மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

பாசப் பிணிப்பால் உண்டாகும் திரிபுணர்வை நீக்கியவர் , கைகுவித்துக் கும்பிட்டுத் துதிப்பதும் , இடபவாகனத்தை யுடையவனும் , அட்டமா நாகங்களையும் அணிந்தவனுமாகிய இறைவனுக்கு உரித்தாயதுமான இடம் , பகலவனது ஒளியினின்று நீங்கியதும் , குயிற் பேடை தனது சேவலோடு கூடி விளையாடுவதும் ஆகிய சோலைக் கண் ஒப்பற்ற மாதவியில் தேன் ததும்பி மலர்ந்த மலர் , மணத்தைப் பொருந்துகின்ற , ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண்ணுள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` ஒளியால் `, ` மாதவியோடு ` என்றன உருபு மயக்கம் . ` விட்டுமிடம் ` என்பது பாடமாயின் , டகரமெய் விரித்தல் என்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர்
தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

` முன்பே அடையப் பட்டவனைக் கடைபோகத் தொழுது உய்வோம் ` என்று நினையாது , புத்தனது பொய்யுரையால் மயங்கிய அசுரரது அரண்கள் மூன்றினையும் சாம்பலாக்கிய வில்லை யுடைவனும் , யாவரிடத்தும் கண்ணோடாது உயிரை வௌவும் கொடிய காலனை அழிந்தொழியும்படி காலால் கொன்றவனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாய இடம் , குளிர்ந்த வனமல்லிகை , முல்லை , குரா , மகிழ் , குருக்கத்தி , புன்னை இவற்றின் மலர்களது அகவிதழில் பெண் வண்டுகள் உறங்குகின்ற , ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகரில் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` வீந்தவிதல் ` ஒருபொருட் பன்மொழி . மாதவி , குருக்கத்தியின் ஓர் வகையுமாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
வேனகை யாள்வி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
நட்டநின் றாடிய சங்கரனெம்
மங்கைய வன்னன லேந்து பவன்கனல்
சேரொளி யன்னதொர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

ஐயப்பாடுடையவர் அடைதற்கரியவனும் , முல்லை யரும்புபோலும் நகையினை யுடையாளாகிய , என்றும் பிரிவில்லாத , மிக்க புகழை யுடைய உமாதேவி மகிழும்படி சுடு காட்டில் நின்று நடன மாடுகின்ற சங்கரனும் , எம் அங்கைப் பொருளாய் உள்ளவனும் , நெருப்பை ஏந்துபவனும் , நெருப்பிற் பொருந்தியுள்ள ஒளிபோலும் ஒளியை யுடைய பெரிய மழுப் படையை ஏந்திய அங்கையை யுடையவனும் ஆகிய இறைவன் நீங்காது உறைகின்ற இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க் கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

ஏல் , உவம உருபு . ` நகையாள் தவிரா ` எனப்பிரிக்க . ` பெரியகலம் ` என்பது , ` பேரகலம் ` என மருவி வந்தது . ` எம் அங்கைய வன் ` என்றதனை . ` தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் ` என்ற திருவாசகத்தோடு பொருந்தவைத்து நோக்குக . ( தி .8 திருவா . திருவண் . 162.) ` சங்கரனே அங்கையினல்லன லேந்துமவன் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

முத்தி பெறுதற் பொருட்டுப் பல்லூழி கால மாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும் , அதனால் வினை நீங்கப்பெறும் இடமும் , பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று , அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவிக் கடலில் வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய , ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலைப் பாடப் புகும் பொழுது , சிவபிரானுக்கு அடியவனாகிய , புகழையுடைய நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார் அடையும் இடம் , சிவபிரானது இடமே யாகும் .

குறிப்புரை :

காஞ்சி , ஊழிக்காலத்தும் அழிவிலது எனப்படுதலின் , ` பல ஊழிகள் நின்று நினைக்குமிடம் ` என்றருளினார் . ` பெரியோர திடங்கலிக் கச்சியனேகதங் காப்பனிடம் ` என்பதொரு பாடமும் உண்டு . சிவபிரானை , ` சிவலோகன் ` என்றது , ` அவன் இடமாவது அதுவே ` என , பின்னர் வருவதனை யுணர்த்தற் பொருட்டு . இங்ஙனம் உரையாக்கால் , இத் திருப்பதிகப் பயன் சிறப்புடைத்தாமாறில்லை .
சிற்பி