திருப்புகலூர்


பண் :

பாடல் எண் : 1

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

புண்ணியா , அழகிய புகலூர் மேவிய புண்ணியனே , நினையுந்தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது வேறு எதனை விரும்பி நினைவேன் ? நினது கழலடியையே கைதொழுது காணின் அல்லது வேறு காட்சியில்லேன் ; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன் . யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய் . அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன் . ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

எண்ணுகேன் - நினையும் தன்மையுடையேனாகிய யான் . ` சொல்லி ` என்றது , ` கருதி - விரும்பி ` எனப் பொருள் தந்தது . ` கண் ` என்றது காட்சியை . களைகண் - பற்றுக் கோடு . ` மற்றோர் ` என்றதனை , ` கண் ` என்றதற்கும் கூட்டுக . கழல் அடி - கழல் அணிந்த திருவடி . ` எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது , வேறு எதனை விரும்பி நினைவேன் ; நினது கழலடியையே கைதொழுது காணின் அல்லது , வேறு காட்சியில்லேன் ; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன் ` என உரைக்க . ஒண் உளே - யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே . ஒக்க அடைக்கும் போது - அவை அனைத்தும் ஒருசேர அடைக்கப் படுங்காலத்து ; என்றது , ` இறப்பு நேருங் காலத்து ` என்றபடி . உணரமாட்டேன் - மேற் குறித்தவாறு உன்னையே நினைதலையும் , காணுதலையும் வல்லேன் அல்லேன் ; ` ஆதலின் , அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன் ; என்னை ஏன்று கொண்டருள் ` என முடிக்க . ` என்னை ஏன்றுகொண்டருள் ` என்பது குறிப்பெச்சம் . பூம்புகலூர் - அழகிய புகலூர் , ` புண்ணியா , பூம்புகலூர் மேவிய புண்ணியனே ` என்ற விளிகளை முதற்கண்வைத்து உரைக்க . வருகின்ற திருத் தாண்டகங்களிலும் அவ்வாறே உரைக்க . புண்ணியன் - புண்ணிய ( அற ) வடிவினன் . ` புண்ணியா , புண்ணியனே ` என்றன , முன்னர்ப் பொதுவாகவும் , பின்னர்த் திருப்புகலூர்பற்றிச் சிறப்பாகவும் அருளிச் செய்தவாறு . ` உன்னடிக்கு ` என்னும் நான்கனுருபு , ` ஊர்க்குச் சென்றான் ` என்பதுபோல , ஏழாவதன் பொருட்கண் வந்தது ; இது புறனடை யான் அமைந்தது ( தொல் - சொல் . 110) ` உன்னடிக்கே ` என்னும் ஏகாரம் , இவ்வுலகில் வாழ்வதினின்றும் பிரித்தலிற் பிரிநிலை .

பண் :

பாடல் எண் : 2

அங்கமே பூண்டாய் அனலா டினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்சடை யினாய்
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.

பொழிப்புரை :

திருப்புகலூர் மேவிய தேவ தேவே ! எலும்புகளை அணியாகப் பூண்டவனே , அனலாடீ , ஆதிரை நாண்மீனை உடையவனே , கல்லால மர நிழலமர்ந்தோனே . ஆனேற்றை ஊர்ந்தவனே , குறைஒன்றுமில்லாத பரவிய சடையினனே , பாம்பொடு திங்களை வைத்து அவற்றின் பகை தீர்த்தாண்டவனே , தேவர் வேண்டப் பிறிது எண்ணம் ஒன்று இன்றியே சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினையுண்டு சாதலும் மூத்தலும் இல்லாத வலிய சிங்கமே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

அங்கம் - எலும்பு . ஆதிரையாய் - திருவாதிரை நாண் மீனை உடையவனே . பங்கம் - குறை . சங்கை - பிறிதோர் எண்ணம் . ` நஞ்சினை , தேவர் வேண்ட சங்கை ஒன்று இன்றியே உண்டு ` என இயைக்க . மூவா - கெடாத . சிங்கம் - சிங்கம் போல்பவனே ; உவமையாகு பெயர் ; இது , வலிமை நிலைக்களனாகத் தோன்றியது ; அஃதாவது , சிவபிரானது பேராற்றலை உணர்த்தியருளியது ; இஃது அறியாதார் , ` சுவாமிகளை இறைவன் சிங்க வடிவில் தோன்றி உண்டருளினான் ` எனத் தமக்குத் தோன்றியவாறே படைத்திட்டுக் கொண்டு கூறுப ; சேக்கிழாரது மெய்ம்மை கூறும் திருமொழிக்கு மாறாக அவர் கூறும் படைத்து மொழியைச் சிறிதும் கொள்ளற்க . தேவ தேவே - தேவர்கட்குத் தேவனே ; பெருந்தேவனே . ` அங்கமே பூண்டாய் ` என்றற்றொடக்கத்தன பலவும் , இறைவனது அருட்டிறங்களை எடுத்தோதித் தம்மை ஏன்றருள வேண்டியவாறு ; இனிவரும் திருத் தாண்டகங்களும் அன்ன .

பண் :

பாடல் எண் : 3

பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்
மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய்
அவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! பட நாகத்தைக் கச்சையாகக் கொண்டவனே , பால்போலும் வெள்ளிய திரு நீற்றினாய் , பளிக்குக் குழையினனே , பண்போலும் இன் சொல்லும் மை பூசிய கண்ணுமுடைய பார்வதியைப் பாகங்கொண்டவனே , மான் கன்றை ஏந்திய கையினனே , வஞ்சமிக்க கள்வரைப் போன்ற ஐம்புலன்களும் வஞ்சம் செய்தலை என்னினின்றும் நீக்கினை . அவை விரும்பும் காரியம் எனக்கு நன்மை பயக்குமாறு இல்லை . என்னுரை பொய்யுரை யன்று : உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக .

குறிப்புரை :

பை - படம் . பளிக்கு - பளிங்கு போல்வது ; சங்கு பண் ஆர் - பண்போலும் . மறி - கன்று . கள்வர் ஐவர் - ஐம்புல வேடர் . ` என் மேல் ` என்றது , ` என்னினின்றும் ` என்றவாறு . தரவு - வஞ்சச்செயல் . ` ஐவரையும் தரவு அறுத்தாய் ` என்றதனை , ` நூலைக் குற்றங் களைந்தான் ` என்பதுபோலக் கொள்க . வேண்டும் - விரும்பும் . ஆவது இல்லை - நன்மை பயக்குமாறு இல்லை . ` பொய்யுரையாது ` என்றது , ஐம்புலவாழ்க்கையை வெறுத்தமையையும் , ` திருவடிக்கே போதுகின்றேன் ` என்றமையையும் ; இவ்வாறு வலியுறுத்து அருளிச்செய்தது திருவடி சேர்தற்கண் அவாமிக் கெழுந்தமையால் என்க .

பண் :

பாடல் எண் : 4

தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! தாங்கள் செய்து வந்த சிவ வழிபாட்டினை இடையிலேயே விட்டொழிந்த மயக்கத்தினராகிய திரிபுரத்தசுரரின் மூன்று மதிலும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்துச் செங்கணையால் அவற்றை அழித்த தேவனே ! மயக்கமின்றி நின்னையே வழிபடுவார் மனத்தில் ஏற்படும் மெலிவைத் தீர்ப்பவனே ! தேவர்களுக்கு மருந்தாய் என்றும் அவருற்ற பிணி தீர்ப்பவனே ! அருளே உருவமாகி எப்பொருட்கும் முதலாகிய வேதமானவனே ! பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாத பொருளானவனே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

தெருளாதார் - தெளியாதவர் ; சிவவழிபாட்டினை இடையிலே விட்டொழித்தவர் ; திரிபுரத்து அசுரர் . ` செங்கணை ` என்றது , ` குருதி தோய்ந்த ` என்னுங் குறிப்பு மொழி ; இஃது இன அடை . மருளாதார் - திரிபுரத்தவர்போல மயங்கியொழியாதவர் . வாட்டம் - மெலிவு ; கவலை . அருளாகி - அருளே உருவமாகி . ஆதியாய் - எப் பொருட்கும் முதலாய் . அலர்மேலான் , பிரமன் . நீர்மேலான் , திருமால் . ஆய்ந்தும் - தேடியும் .

பண் :

பாடல் எண் : 5

நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! கங்கை தங்கிய செஞ்சடைமேல் நிலவையுடைய வெள்ளிய திங்களை நீங்காமல் உறையும்படி விரும்பிவைத்த நீதியனே ! பருமை பொருந்திய படுதலையில் பிச்சை கொள்வானே ! பண்டு மன்மதனைச் சுட்டு எரித்தவனே ! பாவங்களை நாசம் செய்பவனே ! கருமை பொருந்திய மேகம் போன்ற கண்டத்தை உடையவனே ! கரியதும் கையுடையது மாகிய களிறுகதற அதனை உரித்து அதன் தோலைப் போர்த்த போர்த்தொழில் வல்ல சிங்கமே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

நிலா வெண்டிங்கள் - நிலவையுடைய வெண்மையான சந்திரன் . பார் ஏறு - பருமை பொருந்திய ; பெரிய . படுதலை - அழிந்த தலை ; ` தலைஓடு ` என்றபடி . கார் ஏறு - கருமை பொருந்திய . ` கருங்களிறு , கைக்களிறு ` என்க . ` போர் ஏறு ` என்றதும் , வீரம் பற்றி ; ` களிற்றை அழித்த ஏறு ` என்பது நயம் ; ஏறு - சிங்க ஏறு .

பண் :

பாடல் எண் : 6

விரிசடையாய் வேதியனே வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! விரி சடையாய் ! வேதத்தாற் புகழப்படுவோனே ! வேதத்தைப் பாடுபவனே ! விரிந்த பொழிலால் சூழப்பட்ட வெண்காட்டினனே ! மீயச்சூரை உடையவனே ! திரிபுரங்களை எரித்தழித்த தேவதேவனே ! திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறைவோனே ! இனிய பண்பு உடையாரின் மனத்துள்ளவனே ! மாகாளத்து வாழ்பவனே ! வலஞ்சுழி வள்ளலே ! மாமறைக்காட்டெந்தையே ! என்றும் முறுக்குண்டு திகழும் சடையானே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

வேதியன் - வேதத்தாற் புகழப்படுபவன் . வேதகீதன் வேதத்தைப் பாடுபவன் . வெண்காடு , மீயச்சூர் , திருவாரூர் , வலஞ்சுழி , மறைக்காடு சோழநாட்டுத் தலங்கள் ; இவ்விடங்களில் இருந்து அருள்புரியும் நிலையை நேரிற்கண்டருளியவற்றை எல்லாம் நினைந்து ஓதி வேண்டியருளினார் . மாகாளம் , வைப்புத் தலம் ; பிற மாகாளங்களும் உள . ` மருவ இனியார் ` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று . ` இனிய பண்பு உடையவர் ` என்பது பொருள் .

பண் :

பாடல் எண் : 7

தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! கடவுட்டன்மை மிக்க கடவுளே , எல்லாத் தேவரும் நான்முகனும் , இந்திரனும் , மாலும் தேடிக் கண்டு நின்று திருவடிமேல் பூக்களை இட்டு நாவிற்பொருந்திய மறையைப்பாடி நட்டம் ஆடிப் போற்ற இள மரக்காவுடன் பொருந்திய பொழிலாகிய சோலையையுடைய கானப் பேரூர்என்ற திருத்தலத்தில் விளங்குபவனே ! கழுக்குன்றின் உச்சியில் உள்ளவனே ! மனம் வாக்கு மெய்களைக் கடந்தவனே ! நின் பூவைப் போலப் பொருந்திய அழகிய திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்றுகொண்டருள்வாயாக .

குறிப்புரை :

தே ஆர்ந்த தேவன் - கடவுட்டன்மை நிரம்ப உடைய கடவுள் ; ஏனையோர் அதனைச் சிறிது சிறிது உடையர் என்க . ` தேவர் எல்லாம் ` என்றதனை , ` எல்லாத் தேவரும் ` என மாற்றி , எல்லாத் தேவரும் , நான்முகனும் , இந்திரனும் , மாலும் , தேடிநின்று , அலர் இட்டு , மறைபாடி , ஆடிப்போற்ற ` என இயைத்து உரைக்க . ` போற்ற ` என்ற எச்சம் , ` கானப் பேராய் `, ` கழுக்குன்றத்து உச்சியாய் ` என்னும் வினைக்குறிப்புக்களைக் கொண்டன . கா - இள மரக்கா . பொழில் - பெருமரச் செறிவு . ` பொழிலாகிய சோலை ` என்க . கானப்பேர் , பாண்டிநாட்டுத் தலம் . கழுக்குன்றம் . தொண்டை நாட்டுத் தலம் . பூ ஆர்ந்த - பொலிவு நிறைந்த , ` பூப்போலப் பொருந்திய ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 8

நெய்யாடி நின்மலனே நீல கண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! நெய்யாடுபவனே , நின்மலனே , நீல கண்டனே , நிறைவுடையவனே , வேதம் வல்லானே , நீதியனே , மைவிரவு கண் மடவாள் பார்வதி திகழ் பாகத்தானே , மான்தோலை உடையாகக் கொண்டு மகிழ்ந்தவனே , இப்பொழுது பறித்தல் பொருந்திய , வில்வம் கொன்றை இவற்றால் ஆகிய மாலையைக் கொணர்ந்து இட்டு அடியேன் பொய்யில்லாத நின்புகழ்விரிக்கும் தோத்திரங்களைக் கூறி வழிபட்டு நின்று நின் சேவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

நெய் ஆடி - நெய் ஆடுபவனே . நிறைவு உடையாய் - யாதொரு குறையும் இல்லாது எல்லாவற்றாலும் நிறைந்த தன்மையை உடையவனே , நீதியான் - நீதியாய் இருப்பவன் . மை ஆடு - மை பொருந்திய . கொய் ஆடு - இப்பொழுது பறித்தல் பொருந்திய . கூவிளம் - வில்வம் . ` கூவிளம் , கொன்றை இவற்றால் ஆகிய மாலை ` என்க . ` அடியேனாகிய நான் ` என்க . கூறி நின்று - வேண்டிநின்று . ` நாளிட்டு ( காலையே சாத்தி )` என்பதே பாடம் போலும் ! இதனால் , ` சுவாமிகள் இறைவனை மாலை சாத்தியும் , மலர்தூவியும் வழிபட்டு இத் திருப்பதிகத்தை அருளிச் செய்து வேண்டி நின்றார் ` என்பது பெறப்படும் . பொய்யாத சேவடி - அடியவர்கட்குத் தப்பாது உதவும் செம்மை ஆகிய திருவடி .

பண் :

பாடல் எண் : 9

துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
யக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! தைத்தல் பொருந்திய கோவணத்தை உடையவனே ! தூய நீற்றினனே ! ஒளி மிகுந்து விளங்கும் வெள்ளிய மழுவாயுதத்தைக் கையிற் கொண்டு , தன்னைச் சார்ந்த குளிர்ந்த பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடைமுடிமேல் வைத்து மகிழ்ந்த அருள்தன்மையனே ! அன்னநடை மடவாள் பார்வதி திகழும் பாகத்தை உடையவனே ! எலும்பு மாலை அணிந்தவனே ! முதற்கடவுளே ! நான் நின் பொன்னால் ஆகிய கழல் அணிந்த திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டு அருள்வாயாக .

குறிப்புரை :

துன்னம் - தைத்தல் ; கீளோடு இணைத்தல் . துதைந்து இலங்கு - ஒளி மிகுந்து விளங்குகின்ற . தன் அணையும் - தன்னைச் சார்ந்த . ` தன்னனையும் ` என்பது பாடம் அன்று . அக்கு ஆரம் - எலும்பு மாலை ஆதியான் - முதற்கடவுள் . பொன்னங் கழல் - பொன்னால் ஆகிய கழல் .

பண் :

பாடல் எண் : 10

ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! ஒருவை ஆகிய நின்னையல்லது என் உள்ளம் வேறு உணராது . உணர்வு கலங்குமாறு புலனாகாது அருவாய் நின்ற இருவினைகளையும் முக்குணங்களையும் என்மேல் விடுத்துப் பொய்யான யான் எனது என்னும் செருக்கினை அறுத்தாய்க்குச் செய்யும் கைம்மாறு இல்லேன் . ஏலம் நிறைந்த கரிய மலைகளைச் சூழ்ந்து கடற்கரை விளங்கும் இலங்கைக்கு அரசனது விரைந்து செல்லும் தேர் , மேலே ஓடாமல் காலால் ஊன்றிய போர் செய்யும் திருக்கயிலாய மலையானே ! நான் நின் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

` ஒருவனை ` என்பதில் ஐ , முன்னிலை விகுதி ; அன் , சாரியை . தடுமாற்றத்து - கலக்கத்தையுடைய ; என்றது , ` கலக்கத்தைச் செய்கின்ற ` என்றபடி . ` தடுமாற்றத்து இருவரையும் மூவரையும் ` என இயையும் . ` உள்ளே நின்ற ` என்றது , ` புலனாகாது அருவாய் நின்ற ` என்றவாறு . இருவர் - இரு வினை . மூவர் - முக்குணம் . இல்லாத தரவு - பொய்யான ` யான் எனது ` என்னும் செருக்கு ; எல்லாவற்றிற்கும் இறைவனே முதல்வனாதலின் , உயிர்கள் கொள்ளும் ` யான் எனது ` என்னும் உணர்வு பொய்யாயிற்று . இல்லேன் - ` நிரம்பிய அன்பு இல்லேன் ; இல்லேன் போதுகின்றேன் ` என இயையும் . ` அன்பு இல்லேன் ; ஆயினும் ஏற்றருள் ` என்பது திருக்குறிப்பு . ஏலம் , மரவகை . கருவரை - பெரிய மலைகள் . கானல் - கடற்கரை . ` கருவரை சூழ் இலங்கை , கானல் இலங்கை ` என்க . கடுந்தேர் - விரைவுடைய விமானம் . மீது ஓடாமை - மேலே ஓடாதபடி . செற்ற - ஊன்றிய . ` செற்ற வரை ` என இயையும் ; ` செற்ற ` என்னும் பெயரெச்சம் , ` உண்ட இல்லம் ` என்பது போல . ` வரை ` என்னும் இடப்பெயர் கொண்டது . ` பொருதல் - போர் செய்தல் . திருக்கயிலாய மலையை , ` பொரு வரை ` என்று அருளினார் , இராவணனைத் தடுத்து நிறுத்தினமை பற்றி . காலாற் செற்றமை அருளியதனோடு அமையாது , இறுதியில் திருக் கயிலையை நினைந்து அருளினார் என்க . திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் ஆறாம் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது .
சிற்பி