பொது


பண் :

பாடல் எண் : 1

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

பொழிப்புரை :

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை . தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும் , நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின் .

குறிப்புரை :

` நாம் ` என்றது , எடுத்தலோசையால் , ` சிவ பெருமானுக்குத் தமராகிய நாம் ` எனப் பொருள் தந்தது . ` ஆர்க்கும் ` என்றதும் , அவ்வாறு , ` இவ்வுலகில் எத்துணைப் பெரியார்க்கும் ` எனப் பொருள்தந்தது . குடி - அடிமை . அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் வருமாகலின் ( தொல் - சொல் . 100.) ` நமனை அஞ்சோம் ` என , இரண்டாம் வேற்றுமை வந்தது . ` நரகத்தில் இடப்படோம் ` எனவும் பாடம் ஓதுப . நடலை - பொய் . யாதானும் ஒன்றான் அச்சம் வரப் பெறுவோரே பொய்யுடையராவராகலின் , அச்சம் இல்லாதார்க்குப் பொய்யும் இல்லையாயிற்று . ஏமாப்போம் - களிப்புற்றிருப்போம் . பிணி அறியோம் - ` பிணியாவது இது ` என அறியோம் . பணிவோம் அல்லோம் - யாரிடத்தும் சென்று யாதானும் ஒன்று வேண்டி அவரை வணங்குவோம் அல்லோம் . ` எந்நாளும் ` என்றதனை , ` இன்பமே ` என்றதற்கு முன்னும் கூட்டுக . ` இன்பமே ` என்றதன்பின் , ` உள்ளது ` என்பது எஞ்சிநின்றது . ` இன்பமே ` என்ற பிரிநிலை ஏகாரத்தை , ` துன்பம் ` என்றதனோடுங் கூட்டுக . ` துன்பம் இல்லை ` என்றதன் பின் , ` என்னை ?` என்னும் வினாவை வருவிக்க . ` தாம் ` என்றது , ஒருமைப் பன்மை மயக்கம் . ` தன்மையன் ` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று . ` ஓர் காதிற் சங்கவெண் குழைக் கோமான் ` என மாற்றிக் கொள்க . ` சங்கவெண் குழையை உடைய ஓர் காதினை உடைய கோமான் ` என , கிடந்தவாறே உரைத்தலும் ஆம் . ` அவன் சேவடி இணை ` என , சுட்டு வருவித்துரைக்க . கொய்மலர் - பறித்தற்கு உரிய மலர் ; என்றது அப்பொழுது அலர்ந்து பொலிவு பெற்றிருப்பதனை . குறுகினோம் - அடைந்தோம் .

பண் :

பாடல் எண் : 2

அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.

பொழிப்புரை :

பரந்த பூமிமுழுதும் எமக்கு இடமாகும் . ஊர்கள் தோறும் தம் உணவை அட்டுண்ணும் இல்லறத்தான் அதனைப் பிறர்க்கு இட்டு அல்லது உண்ணாராதலின் எமக்கு உணவுப் பிச்சையிடுதலை அவர்கள் ஒருபோதும் விலக்கார் . அம்பலங்கள் யாம் தங்கும் இடங்க ளாகும் . யாம் தன்னுடன் கிடந்தால் பூமிதேவி எம்மைப் புரட்டி எறியாள் . இது பொய்யன்று , மெய்யே . போர்விடையை ஊர்தியாக உடைய சிவபெருமானார் எம்மைத் தம் அடிமையாக ஏற்றுக் கொண்டார் . அதனால் இனியாம் ஏதும் குறைவில்லேம் ; துன்பமாயின எல்லாம் தீர்ந்தேம் . குற்றமற்றேம் ஆயின் யாம் சிறந்த உடைகளை உடுத்துப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் அரசர் சொல்லும் சொல்லை ஏற்க வேண்டிய கடப்பாடு உடையேம் அல்லேம் .

குறிப்புரை :

அகலிடம் - அகன்ற இடத்தை உடையது ; பூமி . ` அது முழுதும் எமக்கு இடமாய் நிற்க ` என்க . ` அகலிடமே இடமாகும் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . அட்டு உண்பார் . இல்லத்தில் சமைத்து உண்பவர் ; இல்வாழ்வார் ; இவரது தலையாய அறம் விருந்தோம்ப லும் , ஈகையும் ஆதலின் , ` அவர் ஐயம் விலக்கார் ` என்று அருளினார் . ஐயம் - பிச்சை . இதனால் , ` ஊர்கள் தோறும் இல்லத்தார் இடும் ஐயமே உணவு ` என்றதாயிற்று . அம்பலங்கள் - பொது இடங்கள் . ` அம் பலங்கள் புகலிடமாம் ` என்க . புகலிடம் - தங்கும் இடங்கள் . ` பூமிதேவி யாம் தன்னுடன் கிடந்தால் எம்மைப் புரட்டாள் ; இது பொய்யன்று ; மெய்யே ` என்க . எனவே , ` அரசரோடு எமக்கு யாதும் தொடர்பில்லை ` என்றபடி . இகலுடைய விடை - போர்விடை . துகில் - சிறந்த உடை . ` திரிவார் ` என்றது , அரசரை ; அவரை அங்ஙனம் அருளியது , தமது பெருமையும் அவரது சிறுமையும் தோன்ற . துரிசு - குற்றம் . ` துரிசற்றோம் ` என்றதனை ` விடையுடையான் ஏன்று கொண்டான் ` என்றதன் பின்னர்க் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 3

வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
கன்மனமே நன்மனமாய்க் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.

பொழிப்புரை :

கச்சணிந்த கொங்கை மாதருடன் சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையில் பொருந்தோம் . மகாதேவா மகாதேவா என்று பலகாலும் அவனை வாழ்த்தி விடியற்காலத்து நீராடப் பெற்றோம் , திருநீறணியும் சைவத் திருக்கோலமே எம்பால் நிலவப் பெற்றோம் . பண்டு கல்லாய்த் திகழ்ந்த மனம் கரிய மேகம் பொழியும் மழை போலக் கண்ணீர் சோருமாறு நன்மனமாய்க் கரையப் பெற்றோம் . ஆகவே உலகியற் பொருளில் பற்றற்றேமாகிய யாம் பூமி முழுவதையும் ஆண்டு ஆனை ஏறி வரும் அரசர் ஏவும் பணிகளை ஏற்க வேண்டிய கடப்பாட்டினேம் அல்லேம் .

குறிப்புரை :

` மனையில் சேரோம் ` என்றது , ` மகளிரொடு வாழும் மனைவாழ்க்கையின் நீங்கினோம் ` என்றபடி ; ` மனை வாழ்க்கை உடையவர் அன்றோ அரசர்க்கு அடங்கியவர் ` என்பது திருக்குறிப்பு . ` புரோதாயம் ` என்றது , ` பூர்வோதயம் ` என்பதன் திரிபு ; ` பகலவன் தோன்றுதற்கு முன்னே ` என்பது பொருள் ; ஆண்ட புரோதாயம் - துயிலுணருங்காலமாகப் பயின்ற விடியற்காலத்து ; ` நீர் ஆடப் பெற்றோம் ` என இயையும் . ` பெற்றோம் ` என்றருளியன பலவும் , அவை , தாம் சமணரிடை இருந்த காலத்து இல்லாதிருந்தமையைக் குறித்தன . ` கோலமே ` என்னும் பிரிநிலை ஏகாரம் , ` உடை இல்லாமை , உறிதூக்குதல் , பாய் இடுக்குதல் ` முதலியவற்றை தவிர்ந்தமை விளக்கிற்று . இறைவனை நினையுங்கால் உருகாதிருந்த மனத்தை , ` கல்மனம் ` என்றார் . ` அது , மழைபோலக் கண்ணீர் சோருமாறு நன்மனமாய்க் கரையப் பெற்றோம் ` என்று அருளினார் . இங்கு , ` ஆகலான் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . கார் ஆண்ட - மேகம் பொழிந்த . பகடு - யானை . பணிகேட்க - ஆணையின்கண் நிற்க . ` பற்றற்றோம் ` என்ற தனை , முதற்கண் வைத்துரைக்க .

பண் :

பாடல் எண் : 4

உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.

பொழிப்புரை :

சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர் . கோவணமும் கீளும் யாம் உடுப்பனவாய் உள்ளன . ஆகவே பகைவரும் எம்மை வெகுளார் . தேன் நிறைந்து பொன் போன்று திகழும் நல்ல கொன்றை மாலையணிந்த புகழுடைய சிவ பெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை நாவால் சொல்ல வல்லேமாய்ச் சுறவுக்கொடியானாகிய மன்மதனைப் பொடியாக அக்கினி நேத்திரத்தை விழித்த சோதிவடிவினனையே தொடர்வுற்றே மாதலின் , தீமை , நன்மையாய்ச் சிறக்கப் பிறப்பிற் செல்லேம் ஆயினேம் .

குறிப்புரை :

உருத்திர பல்கணத்தர் - சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் . செறுவார் - வெகுள்வார் ; பகைவர் ; செறமாட்டார் - வெகுளமாட்டார் . தீமை , தீமையாய் வாராமை மேலும் , அதுதானே நன்மையாய்ச் சிறந்து நிற்கும் என்க . நறவு ஆர் - தேன் நிறைந்த . பொன் இதழி - பொன்போலும் கொன்றை . ` நமச்சிவாயஞ் சொல்ல ` எனவும் பாடம் ஓதுவர் . ` நாவார் சொல்ல ` என இயையும் . சுறவு - மீன் ; மீன் பொருந்திய கொடியை உடையவன் மன்மதன் . சுடர் நயனம் - அக்கினி நேத்திரம் . ` சோதியையே ` என்னும் தேற்றேகாரம் , அவன் தொடர்தற்கு அரியனாதலை விளக்கி நின்றது . உறவும் , உடுப்பனவும் வேறாய் உலகியலின் நீங்கினமையின் பகைவர் பகைமையொழிதலும் , நமச்சிவாயச் சொல்லிச் சுடர் நயனச் சோதியைத் தொடர்வுற்றதனால் , தீமை நன்மையாதலும் பிறப்பிற் செல்லாமையும் உளவாயின என்க .

பண் :

பாடல் எண் : 5

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய் , இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம் . இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை . யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம் . யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம் . அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின .

குறிப்புரை :

இடைதல் - பின்வாங்குதல் . எதிராவார் - இணை யாவார் ; உம்மை , ` உயர்வாவாரும் இல்லை ` என , எதிரது தழுவிற்று . இனி , ` எதிராக ஆரும் ` இல்லை என்றலுமாம் . ` சேர்வோம் அல்லோமாய் ` என , எச்ச மாக்குக . அன்றே - அமணரை விட்டு நீங்கிய அன்றே . உறுபிணி - மிக்கநோய் . செறல் - வருத்துதல் . ` பிணியார் ` எனவும் , ` ஓடிப்போனார் ` எனவும் உயர்திணையாக்கியருளியது , அதனது மாட்டாமையாகிய இழிபுணர்த்தற்கு . பொன்றினார் - இறந்தவர் . நண்ணிய புண்ணியம் - அடைந்த புண்ணியப் பயன் . ` சேரப்பெற்றோம் , புண்ணியத்துளோம் ` என்பவற்றை முதற்கண் வைத்து , ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க .

பண் :

பாடல் எண் : 6

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே.

பொழிப்புரை :

` அயன் , அரி , அரன் என்னும் மூவுருவிற்கும் முதலுருவாயவனே ! அட்டமூர்த்தியே ! முப்பத்து மூவர் தேவர்களும் அவர்களின் மிக்க இருடியரும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் செம்பவளத் திருமேனியுடைய சிவனே ` என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார் . அதனால் கடிதாய செயலும் களவும் அற்றோமாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டினேம் அல்லேம் .

குறிப்புரை :

` மூவுருவின் முதல் உரு ` என்றது , ` மூவுருவினுள் முதலாய உரு `, ` மூவுருவிற்கும் முதலாய உரு ` என இருவகையாகவும் பொருள் கொள்ள நின்றது . இருநான்கான மூர்த்தி - எட்டுருவாய இறைவன் . ` முப்பத்து மூவராய தேவர்கள் ` என்க . ` நாவுடையாரே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று . ` அன்றே ` என்றது , தேற்றம் உணர்த்திற்று . அதன்பின் , ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . ` சிறிது நிலத்தை ஆளும் நும் அரசனே யன்றி , நாவலந்தீவு முழுதிற்கும் தலைவராய் உள்ள அரசர் ஒருவர் தம் ஏவலரை , எம்மை அழைத்து வருமாறு ஏவி விடுத்தாராயினும் , யாம் அவர் ஆணையின் வழி நிற்கும் கடமையுடையோம் அல்லோம் ` என்றவாறு . ` கடவம் அல்லோம் ` என்றதன்பின் . ` என்னை ?` என்னும் வினாச்சொல் வரு விக்க . கடுமை - கடிதாய செயல் ; பிறரை நலிதல் . ` கடுமையும் களவும் உடையாரே அரசன் ஆணைக்கு அஞ்சற்பாலர் ` என்பது திருக்குறிப்பு .

பண் :

பாடல் எண் : 7

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே.

பொழிப்புரை :

நிற்பனவும் , நடப்பனவும் , நிலனும் , நீரும் , நெருப்பும் , காற்றும் , நெடுவானும் , புன்மையதும் , பெரியதும் , அரியதும் , அன்புடையார்க்கெளியதும் , அளக்கலாகாத் தற்பரமும் , சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானை அவன் நன்மைகளையும் , பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம் ; அதனால் பிழையற்றோம் . அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்பப் பேயர் பேசுமாறுபோல யாம் பேசுவமோ ?

குறிப்புரை :

நிற்பன - அசரம் . நடப்பன - சரம் . அற்பம் - சிறுமை ; இது முதலிய மூன்று பண்புகளும் ஆகுபெயராய் , அவற்றை உடைய பொருள்மேல் நின்றன . ` அளக்கலாகாப் பரம் ` என இயையும் . பரம் - மேலான பொருள் . தத்பரம் - உயிருக்கு மேற்பட்டது . சதாசிவம் - சதா சிவதத்துவம் . தானும் - தானேயாகியும் ; யானும் - யானாகியும் . இவை முறையே இறைவனது பொருட்டன்மையையும் கலப்பினையும் உணர்த்தி , இரட்டுற மொழிதலால் , உடனாதலையும் உணர்த்தும் . ` தன்மையனைப் பேசக்கடவோம் ; அவனால் முன்னமே பிழை யற்றோம் ; பேயர் பேசுவன பேசுதுமோ ` என்க . ` பேயர் ` என்றது , சிறந்த உணர்வு இல்லாமை பற்றி . ` பேசுவன ` என்றது , அரசனுக்கு வணங்கி நின்று , அவனுக்கு ஏற்பப் பேசுதலை .

பண் :

பாடல் எண் : 8

ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.

பொழிப்புரை :

எவ்வுலகினுக்கும் ஈசனும் , இறைவனும் , தேவர்கள் தலைவனும் , எரிபோன்று மிக்கு ஒளிரும் தேசனும் , செம்மேனியிடத்து வெண்ணீற்றானும் , மலையரையன் பொற்பாவை தன்னைக் காதலிக்க , தானும் அவளைக் காதலிக்கும் நேசனும் ஆகிய சிவபெருமானைத் தினமும் நினையப் பெற்றோம் . அதனால் நின்றுண்ணும் சமணர் என்றும் மறவாதிருக்கும்படி எமக்குச் சொன்ன உறுதிபோலும் சொற்களை எல்லாம் யாம் மறந்தொழிந்தோம் . இந்நிலையில் என்னிடம் வந்த நீர் யார் ? மன்னன் ஆவான் தானும் யாரே ?.

குறிப்புரை :

ஈசன் - ஆள்பவன் . ` எவ்வுலகினுக்கும் ஈசன் ` என்க . இறைவன் - எங்கும் நிறைந்திருப்பவன் . தேசன் - ஒளியை யுடையவன் . ` செம்மேனியில் வெண்ணீற்றானை ` என்க . சிலம்பரையன் - மலையரசன் . பொற்பாவை - அழகிய பாவை போல்பவள் . நலம் செய்கின்ற - காதலிக்கின்ற . ` நேசன் ` என்றது ` தானும் அவளைக் காதலிப்பவன் ` என்றபடி . நின்று உண்பார் , சமணர் . நினைய - என்றும் மறவாதிருக்கும்படி . ` எம்மைச் சொன்ன ` என இயையும் . ` எம்மை ` என்றதனை . ` எமக்கு ` என்க . வாசகம் - உறுதிபோலும் சொல் . ` அன்றே மறந்தோம் ` என்க . அன்றே - அவரைவிட்டு நீங்கிய அன்றே , ` மறந்தோம் ` என்றதன்பின் , ` ஆதலின் ` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க . ` சமணரே நும் அரசன் பணிகேட்பர் ; சிவன் அடியார் அது கேளார் ` என்பார் , ` வந்தீராகிய நீர் யாவிர் ? மன்னவன் என நும்மால் குறிக்கப்பட்டவன் யாவன் ? என வினவினார் ; இவ்வினா , ` நும்மோடும் அவனோடும் எமக்குச் சிறிதும் தொடர்பில்லை ` என்றது விளக்கிற்று .

பண் :

பாடல் எண் : 9

சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே.

பொழிப்புரை :

சடையுடையானும் ஒருகாதில் விளங்கும் சங்கக் குழையானும் , சாம்பலைப் பூசிப் பாம்பை அணிந்த மேனியானும் , விடையுடையானும் , புலித்தோலாம் மேலாடையானும் , வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த உடை உடையானும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான் . அதனால் பாசத்தை முழுதும் உதறியெறியும் நிலையினை உடையோம் . ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களையுமுடைய அரசனுடைய ஆணைகேட்கும் தொழில் உடையோம் அல்லோம் .

குறிப்புரை :

விடை - இடபம் . வேங்கை அதள் - புலித்தோல் ; அது , மேலாடையாதலும் அறிக . ` புள்ளிமான் ` என இயையும் . உழை , மான்களுக்குள் ஓர் இனம் . ` படை ` என்றது , படைவீரர் முதலிய ஏவலாளர் அனைவரையும் . ` நின்ற ` என்றது , ` படை ` என்றதனோடு முடிந்தது , ` அவர்களை உடையான் ` என்றது , அரசனை . பணி கேட்கும் பணியோம் அல்லோம் - ஆணை கேட்கும் தொழில் உடையோம் அல்லோம் . படியோம் - நிலையினை உடையோம் . ` பாசத்தை அற வீசும் படியோம் ` என்க . ` பணியோம் அல்லோம் ` என்றதன்பின் , ` என்னை ?` என்னும் வினாச்சொல் வருவிக்க .

பண் :

பாடல் எண் : 10

நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே.

பொழிப்புரை :

நாவிடத்து இன்பம் நிறையச் சிவபெருமானையே பாடப் பெற்றோம் அதனால் உடை உடாத சமணர் எம்மை விரும்பாது விலகப்பெற்றோம் . அமரர் தலைவனாகிய சிவபெருமான் மனமிரங்கி எமை ஆள்வான் . நான்முகனும் திருமாலும் அறிதற்கு அரிய அனற் பிழம்பாய் நீண்டவனும் தேவர்க்குத் தேவனுமாகிய சிவபெருமான் எம் சிந்தையில் மன்னி நின்றான் . அதனால் அவனுக்குரிய எண் குணங்களை உடையேமாயினேம் . ஆகவே இயமனே வந்து தன் தலைமையை உரைத்து எம்மைக் குற்றேவல் செய்க என்றாலும் அதனை எமக்குரிய நெறியாகக் கொள்ளோம் .

குறிப்புரை :

நா ஆர - நாக்குளிர . நம்பன் - சிவபெருமான் . நாணற்றார் - உடை உடாத சமணர் . நள்ளாமே நீங்க - விரும்பாது விலக . ` ஆ ஆ ` என்றது , இரக்கக் குறிப்பு ; எனவே , ` மனம் இரங்கி ` என்றது , பொருளாயிற்று . ` சேர்ந்திருந்தான் ` என்பதன்பின் , ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . தென்றிசைக்கோன் - இயமன் . கோ ஆடி - தனது தலைமையை உரைத்து . குணமாக - நெறியாக . ` எண் குணத்துளோம் ` என்றதனை , ` அதனால் ` என வருவிக்கப்பட்ட சொல்லெச்சத்தின் பின்னர்க் கூட்டி , இதன்பின்னும் , ` ஆகலான் ` என்னும் ஒரு சொல்லெச்சம் வருவிக்க . எண்குணம் சிவபிரானுக்கு உரியன ; அவை மேலே காட்டப்பட்டன . இதனால் , ` சிவபிரானை அடைந்தோர் , அவனது எண்குணங்களையும் பெறுவர் ` என்பதும் பெறப்பட்டது .
சிற்பி