பொது


பண் :

பாடல் எண் : 1

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

பொழிப்புரை :

ஏறூர்ந்த செல்வனே! எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் துறப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், தமக்கு எல்லாப் பொருளும் இறைவனேயாகக் கொண்டு நின்ற தம் அன்பின் மேலீட்டினை அருளிச் செய்தது.
அப்பன் - தந்தை. அம்மை - தாய். ஐயன் - தமையன். ``அன்புடைய`` என்றது, இடைநிலை விளக்காய் நின்று, ``அப்பன்`` முதலிய எல்லாவற்றொடும் இயையும். ஒப்புடைய மாதர் - ``பிறப்பே குடிமை`` (தொல் - பொருள். 269) முதலிய எல்லாவற்றாலும் ஒத்த மனைவியார். ``பெண்ணிற் பெருந்தக்கயாவுள`` (குறள். 54) என்றவாறு, ஒப்புடைய மனைவியை எய்துதல் மிக்க புண்ணியத்தானன்றிக் கூடாமையின், அவ்வாறு எய்திய மனைவி என்பார், ``மாதர்`` எனப் பன்மையால் அருளிச் செய்தார். பொருள் - பணம். `அறநெறியான் வந்த பொருள்` என்பார், ``ஒண்பொருள்`` என்று அருளிச்செய்தார்; ``ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு`` (குறள். 760.) என்றார், திருவள்ளுவநாயனாரும். குலம் - கிளை; இதனை, `சாதி` என்ப. அஃது ஆகுபெயராய், `குலத்தவர்` எனப் பொருள் தந்தது. சுற்றம் - மேற்கூறிய அப்பன் முதலியவரோடு நேராகவும், வழிவழியாகவும் தொடர்புபட்டு வருவோர். ``ஓர் ஊர்`` என்றது, `நிலையாக நின்று வாழும் ஊர்` என்றவாறு. துய்ப்பன - நுகர்ச்சிப் பொருள். உய்ப்பன - ஊர்தி வகைகள்; அவற்றை வேறு ஓதினார், பொருளுடையார்க்கு அவை மிக்க பயனையும், பெருமையையும் தருதலின். செல்வம் உடையார் என்பதை விளக்க, `யானை எருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்...சென்றோர்` (நாலடி.3) என ஊர்தியையே பிறரும் சிறந்தெடுத்துக் கூறினார். `துய்ப்பனவும் உய்ப்பனவுமாய்` என ஆக்கம் வருவிக்க. துணையாய் - உலகியலாய குழியில் வீழாது காக்கும் துணைவனாய் உடன்நின்று. துறப்பித்தல், உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்க. பொன் முதலிய மூன்றினும் நின்ற இகரச் சுட்டுக்கள், `இவ்வுலகத்தாரைப் பிணிக்கின்ற` என்னும் பொருளுடையன. இம்மூன்று தொடர்களையும், `தோற்றுவாய் நீ` என்பதன் பின்னர்க் கூட்டுக. இறைவன் - கடவுள். ``ஏறு ஊர்ந்த செல்வன்`` என்றது, `என்னை மேற்கதிக்கண் உய்ப்பவன்` என்றபடி, ``அப்பன் நீ`` என்பது முதலிய எல்லாவற்றிற்கும் இயைய. `எனக்கு` என்பதனை முதற்கண் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 2

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரும், ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்த வரும், செம்பவள நிறத்தினரும், செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை? யாவர்க்கும் எளியோம் அல்லோம்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் தோன்றக்கூறியருளியது.
வெம்ப - நாம் வருந்தும்படி. வருகிற்பது அன்று - வரவல்லது அன்று; `கூற்றம்` என்பது சொல்லால் அஃறிணையாதலின், `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும். பைய நையும் - மெல்ல வருந்துகின்ற; மென்மை முறை முறையாக வருதல் குறித்தது. பரிவு - துன்பம். `வினைப்பகையும் பரிவும் தீர்ந்தோம்` என இயையும்; `பரிவு தீர்ந்தோம்` என உம்மையின்றி ஓதுதல் பாடம் அன்று. இடுக் கண் - இடையூறு. `எங்கெழில் என் ஞாயிறு` என்பது, `உலகம் எவ் வகையாக நிலைமாறினாலும் எமக்கு அதனால் வரக்கடவது என்னை?` என்பதை உணர்த்துதற்குக் கூறுவதோர் வழக்கு. இதனை, தி.8 திருவாசகம் (திருவெம். 19) சிவஞானசித்தி (சூ. 8. 31.) சீவகசிந்தா மணி (கனகமா. 237) இவற்றுள்ளும் காணலாம். `யாவர்க்கும் எளியோம் அல்லோம்` என்க. ``செங்குன்ற வண்ணர்`` என்புழி நின்ற வண்ணம், வடிவைக் குறித்தது. `என் சிந்தையார் ஆயினார்; அதனால்` என எடுத்துக்கொண்டுரைக்க. ``நம்மேல்`` என்பது முதலியன, உயர்வு பற்றி வந்த ஒருமைப் பன்மை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 3

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

பொழிப்புரை :

கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?

குறிப்புரை :

இத் திருத்தாண்டம் இறைவனது தன்வயமுடைமையை உணர்த்து முகத்தால், உயிர்களிடத்து நிகழும் அவனது கைம்மாறற்ற உதவியை அருளிச்செய்தது.
ஆட்டுவித்தலாவது, உயிர்களை அவற்றது, `யான் எனது` என்னும் செருக்குக் காரணமாகப் பல்வேறு உடம்பாகிய பாவையுட் படுத்து, வினையாகிய கயிற்றினால் கீழ் மேல் நடு என்னும் உலக மாகிய அரங்கினிடத்து, வினையை ஈட்டியும் நுகர்ந்தும் சுழலச் செய்த லாகிய கூத்தினை இயற்றுவித்தல். ``கோனாகி யான் எனதென்றவ ரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே`` (தி.8 திருவா. திருச்சதகம். 15.) என்றருளிச்செய்தார், மாணிக்கவாசகரும். இவ்வாறு ஆட்டுவித்தல், உலகத்தைப் படைத்தலும் காத்தலும் ஆகிய தொழில்களால் ஆவதாகும்.
அடக்குவித்தல், மேற்கூறியவாறு ஆட்டுவித்தலால் ஆடி வரும் உயிர்கட்கு எய்ப்புத் தோன்றாதவாறு, ஆடலை இடையே சிறிது காலம் நிறுத்தி, யாதும் செய்யாதவாறு அமைந்திருக்கச் செய்தல்; இஃது, உலகம் முழுவதையும் அழிக்கும் முற்றழிப்பினால் நிகழும்.
ஓட்டுவித்தலாவது, பின் நின்று ஆட்டுவிக்கின்ற தன்னை உள் நோக்கி உணராவண்ணம் உயிர்களைப் பிற பொருள்களை நோக்கிப் புறத்தே ஓடுமாறு ஓட்டுதல்; இது, `மறைத்தல்` என்னும் தொழிலினால் ஆவதாகும்.
உருகுவித்தலாவது, புறமே ஓடிப் பயன் காணாது உவர்ப் பெய்திய உயிர்களைப் பின்னர் உள்நோக்கித் தன்னை உணருமாறு செய்து, தன்னையும் தனது உதவியினையும் நினைந்து நினைந்து அன்பு கூர்ந்து மனம் உருகுமாறு செய்தல்.
பாட்டுவித்தலாவது, அவ்வுருக்கத்தின்வழித் தோன்றும் வாழ்த்துக்களையும் புகழ்ச்சிகளையும் வாயார எடுத்துப் பாடுமாறு செய்தல். இப்பாட்டுக்கள் தாமே பாடுவனவும், முன்னுள்ளனவுமாய் அமையும்.
பணிவித்தலாவது, அன்புமிக்கெழுந்து பெருக தன்முனைப்பு அடியோடு நீங்குதலால், தன்முன்னே நிற்றல் இன்றி, நிலஞ்சேர வீழ்ந்து பணியச்செய்தல். உருகுவித்தல் முதலிய மூன்றும் முறையே மன மொழி மெய்கள் என்னும் மூன்றும் தன்வழி (இறைவழி)ப் படச் செய்விப்பனவாதல் காண்க. இம் மூன்றும், `அருளல்` என்னும் தொழிலால் அமைவன. மறைத்தலும் அருளலும் ஆகிய இத் தொழில்களைக் குறித்தே.
``போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்``
(தி.8 திருவா. சிவபு. 43.)
எனவும்,
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
(தி.8 திருவா. திருவண். 52.)
எனவும் அருளிச்செய்தார், ஆளுடைய அடிகள்.
``காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே`` என்றது, `உயிர்கள் உன்னைக் காணாமை, நீ காட்டுவியாமையேயாம் எனவும், ``காண்பாரார் காட்டாக்கால்`` என்றது, `நீ காட்டுவியாத பொழுது, உயிர்கள் தாமே உன்னைக் காண வல்லன அல்ல` எனவும், `உயிர்கள் இறைவனைக் காண்டல் அவன் அருளால் அன்றி ஆகாது ஆதலின்` முத்திக் காலத்திலும் உயிர்கட்கு முதல்வனது உதவி இன்றியமையாதது` என்பதனை உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்து இனிது விளங்க அருளிச்செய்தவாறு.
நெற்றிக்கண், இறைவனது இயற்கைப்பேரறிவினை உணர்த்து மாதலின், ``கண்ணுதலாய்`` என விளித்தருளியது, காட்டுதல் முதலிய பலவற்றிற்கும் உரிய இயைபு உணர்த்தப்பட்டது என்க.
``கண்ணுதலாய்`` என்பதனை முதற்கண் வைத்து, `நீ` என்னும் சொல்லெச்சத்தினை, ஆட்டுவித்தல் முதலிய எல்லாவற்றிற்கும் வருவிக்க. இறைவன், உயிர்களைத் தொழிற்படுத்துதல் பெத்த காலத்தில் திரோதான சத்தியும், அதன் வழித்தாயவினையும், அதன் வழியராகிய காரணக் கடவுளரும் முதலிய வாயில்களாலும், முத்திக் காலத்தில் அருட்சத்தி வாயிலாலும் ஆகலின், `ஆட்டினால், ஓட்டி னால்` என்பனபோல அருளாது, `ஆட்டுவித்தால் பாட்டுவித்தால்` முதலியனவாக அருளினார். அதனால், இறுதிக்கண், ``காட்டாக்கால்`` என்றதற்கும், `காட்டுவியாக்கால்` என்றலே திருவுள்ளம் என்க.
`பாடுவிப்பித்தால்` என்றே ஓதற்பாலதாயினும், செய்யுள் இன்பம் நோக்கி, `பாட்டுவித்தால்` என்று அருளிச்செய்தார். இன்றியமையாமை நோக்கி இவ்வாறு சொற்களை ஆக்கி அளித்தல், தலைவராயினார்க்கு உரியது; அதனால், அச்சொல், ஆசிரியரது ஆணையாற் கொள்ளப்படுவதொன்றாம் என்க. இனி, `பாடுவிப்பித் தால்` என்பதே, எதுகை நோக்கி வேண்டும் விகாரங்கள் எய்தி, `பாட்டு வித்தால்` என நின்றது என்றலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 4

நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.

பொழிப்புரை :

வீடுபேற்றினை அடைய உரியவருடைய வீடு பேறாய் நின்றவனே! ஞானமே வடிவானவனே! நன்மையை விளக்கும் சுடரே! நான்கு வேதங்களுக்கும் அப்பால் நின்ற சொல்பதத்தாராகிய அபர முத்தருடைய சொற்பதத்தையும் கடந்து நின்ற சொல்லற்கரிய சூழலாய்! இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே! கனகமும் மாணிக்கமும் ஒத்த நிறத்தினை உடைய எம் கடவுளே. யான் உன்னை விடுவேன் அல்லேன்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், இறைவன் தமக்கு அனுபவப் பொருளாயின அருமையை அருளிச்செய்தது.
நற்பதத்தார் - நன்னிலையை (வீடுபேற்றினை) அடைய உரியவர்; இதன்கண் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, `முருகனது குறிஞ்சி` என்றாற்போலக் கிழமைக்கண் வந்தது. உண்மை வீடுபேறு இறைவனேயாகலின், ``நற்பதத்தார் நற்பதமே`` என்று அருளினார். ஞான மூர்த்தீ - அறிவு வடிவாயவனே. `நலச் சுடர்` என்பது, மெலிந்து நின்றது. `நன்மையை விளக்கும் சுடர்` என்பது பொருள். தீமையாகிய உலகைக்காட்டும் சுடர் (மாயை) போலாது, தன்னையே காட்டும் சுடர் என்றபடி, நால்வேதங்கள் வைகரி வாக்குக்களாதலின், அவற்றிற்கு அப்பால் நின்ற சொற்பதம் என்றது, நாதத்தையாம், அப்பதத்தை அடைந்தவர் அபரமுத்தர் எனப்படுவர். அவரது சொற்பதம் என்றது, சூக்குமை வாக்கையேயாம். சூக்குமை வாக்கையும் கடந்தவன் இறைவனாகலின், `சொலற்கரிய சூழலாய்` என்றருளினார். `இது` என்றது, `நற்பதம்` முதலாக மேற்கூறிய தன்மைகள் அனைத்தையும் தொகுத்துச் சுட்டியது. `இது உன் தன்மை` என்பதன் பின், `ஆயினும்` என்பது வருவிக்க. நிற்பது ஒத்து - நிற்பதுபோலக் காட்டி. நிலை இலா - நில்லாது அலைகின்ற. `நெஞ்சந் தன்னுள் வந்து` என ஒருசொல் வருவித்து முடிக்க. `நெஞ்சு வழியாக உடம்பில் நின்றான்` என்பார், `நெஞ்சந்தன்னுள் வந்து உடம்பே புகுந்து நின்ற` என்றார். நிலாவாத - நிலையில்லாத. நெஞ்சின் தன்மையையும், உடம்பின் தன்மையையும் எடுத்தோதியது. அவை அவன் புகுதற்கு உரியனவாகாமையை விளக்குதற்கு. தேற்றேகாரமும் அதுபற்றியே வந்தது. நெஞ்சினுள் நின்று எல்லாப் பயனையும் தருதலின், `கற்பகமே` என்றும், இதனை இனிதுணரப்பெற்றமையின், `விடுவேனல்லேன்` என்றும் அருளினார். கனகம் - பொன். மாமணி - மாணிக்கம். `கனக நிறத்து, மாமணி நிறத்து` எனத் தனித்தனி இயைக்க. `கடவுள்` என்னும் தொழிற்பெயர் ஆன் விகுதி ஏற்று `கடவுளான்` என நின்றது; `கடத்தலை உடையவன்` என்பது பொருள். இஃது இவ்விகுதி இன்றியே ஆகுபெயரால் அப்பொருள் குறித்தல் பெரும்பான்மை.

பண் :

பாடல் எண் : 5

திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் மக்கள் வாழும் ஊர்க்கு உரிய இயல்பு கூறும் முகத்தால், நன்மக்கட்கு உரிய ஒழுக்க நெறியை வகுத்தருளிச் செய்தது.
``திருக்கோயில்`` என்பது, சிவபிரான் கோயிலைக் குறிக்கும் மரபுச் சொல்; திரு இல் ஊர் - நன்மை இல்லாத ஊர், ``அணியாத ஊர் ,பாடா ஊர், ஊதா ஊர், உண்ணா ஊர்`` என்பன, இடத்து நிகழ் பொருளின் தொழிலை இடத்தின் மேல் ஏற்றிக் கூறிய பான்மை வழக்கு. பரு - பருமை; அஃது ஆகுபெயரால், உடம்பைக் குறித்தது. கோடி - வளைந்து; வணங்கி, ``கோடிப் பாடா`` என, சினைவினை முதல்வினையோடு முடிந்தது. பாங்கு - அழகு. ``தளிகள்`` என்றதும் திருக்கோயிலையே. பேரூராயின், நாள்தோறும் பலரும் ஓரிடத்துச் சென்று வழிபடுதல் அரிதாகலின், அதன்கண் பலதளிகள் வேண்டும் என்க. இதனால், ``பலதளிகள் இல்லா ஊர்`` என்றது, பேரூரினை யாயிற்று; அடுக்க அருளும் இரண்டு ஊர்களும் அவையே என்க. ``சங்கம்` என்றது, வலம்புரிச் சங்கினை; என்னையெனின், அதுவே மங்கல வாச்சியம் ஆகலின், விதானம் - மேற்கட்டி`` பந்தர்; வெண் கொடியும் மங்கலத்திற்கு உரியது. விதானமும், வெண்கொடிகளும் விழா நாட்களில் எடுக்கப்படுவனவாம். `அரும்பு` என்பது, `அருப்பு` என வலிந்து நின்றது; ``அரும்பு`` என்றது, போதினை (பேரரும் பினை). `போது` என்றதும், போதாய் உள்ள நிலையினையே. `மலரைப் போதாய் உள்ள நிலைக்கண்ணே பறித்து` என்க. இட்டு - சிவபிரானுக்குச் சாத்தி - சிவபிரானுக்கு என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. `உண்ணா` என்னும் எதிர்மறை, `இட்டு` என்னும் எச்சத் திற்கும் உரித்து. `ஆகிய அவை எல்லாம்` என்க. `அடவி` என்னும் வட சொல், பெருங்காட்டினைக் குறிக்குமாதலின், அது, `காடு` என்னும் பொதுச்சொல்லின் பொதுமை நீக்கி நின்றது. ``காடே`` என்னும் ஏகாரம். `இவ்வூரின்கண் வாழ்வார் விலங்குகளே` என்பார், ஊரை ``அடவி காடே`` என அருளினார். நிலத்தின்கண் வாழ்வோராலே நிலம், `நன்று` என்றும், `தீது` என்றும் சொல்லப்படும் என்பதனை,
``நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ரா டவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே`` (புறம். 187.)
என்னும் ஔவையார் பாட்டானும் அறிக.

பண் :

பாடல் எண் : 6

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

பொழிப்புரை :

திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதாரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவராவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோவெனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், மேல் எதிர்மறை முகத்தால் ஓதிப் பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்கட்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தியருளியது.
`திருநாமம்` என்றதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல். `திருநாமமாகிய அஞ்செழுத்து` என்க. ``அஞ்செழுத்தும்`` என்னும் உம்மை, சொல்லுதல் யார்க்கும் எளிதாதலைக் குறித்து நின்றது. திறம் - இயல்பு. `ஒருகாலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. சூழ்தல் - வலம்வருதல். வெண்ணீறணிதலால் உடல்நோய் நீங்குதல் கண்கூடாய்க் காணப்படுவதாகலின், அது நோக்கியேனும் அணிகிலர் என்பார். ``அருநோய்கள் கெட வெண்ணீறு அணியா ராகில்`` என்று அருளிச்செய்தார்.
`அளி அற்றார்` என்பது, `தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்` எனப் பொருள் தரும். அதனால், ஈண்டு அஃது, `இறைவனது திருவருளை இழந்தவர்` என்னும் பொருள் தந்து நின்றது. பிறந்தவாறு ஏதோ என்னில் - பிறந்த முறைமை தான் யாதோ என ஆராயின். பெருநோய்கள் - தீராத கொடுநோய்கள். `மிக நலியச் செத்து` என இயையும். பெயர்த்தும் செத்து - வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து, பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே - மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றவரே யாவர்.
``ஒருகாலும்`` என்பதனை, அது கூறாத இடங்களிலும் கூட்டுக. அஞ்செழுத்துச் செப்புதல் முதலியவற்றை முற்பிறப்பிற் பயிற்சியால் பல்கால் செய்து பயன் பெறாதவர், ஒன்றையேனும் ஒரோஒருகாற் செய்யினும் அடுத்த பிறப்பில் அதனைப் பல்காற் செய்து பயன் பெறுவர்; அவ்வாறு செய்யாதவர் ஒரு பிறப்பிலும் பயன் பெறார் என்பார், வருகின்ற பிறப்புக்களில் நிகழ்வனவற்றை அருளிச் செய்தார். எனவே, `பிறந்தவாறு ஏதோ` என வினவினார்க்கு. `முன்னும் பின்னும் இவ்வாறு வினைச்சூழலால் பிறந்து இறந்து செல்லும் முறையாற் பிறந்ததன்றி விசேடம் ஒன்றும் இன்று` என விடுத்தவாறாயிற்று.
இவ்விரு திருத்தாண்டகங்களிலும், திருக்கோயில், திருவைந்தெழுத்து முதலியவற்றை விதந்தோதினமையால், பிற கோயில்கள், பிற நாமங்கள் முதலியவற்றாலும் பிறவி நீங்கப் பெறார் என்பது பெறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.

பொழிப்புரை :

நின்னைப்போல் ஆவார் பிறர் இன்றி நீ ஒருவனே ஆனாய், நினைப்பார் தம் மனமாகிய நிலத்துக்கு ஒப்பற்ற வித்தும் ஆனாய், தலைவன் ஆனாய், அரசர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆறங்கமுமாய், பொன்னும் மணியும் போகமும் ஆகும் பூமிமேல் புகழ்தற்குரிய பொருளானவனே! நீ எவ்வாறெல்லாம் ஆனாய் எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றிச் சிற்றறிவினையுடைய யான் எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், இறைவனது பெருமை உயிர்களால் அளவிட்டு உணரலாகாமையை அருளிச்செய்தது.
``நின் ஆவார்`` என்பதில், `போல` என்னும் உவம உருபு விரித்துரைக்க. இதனால், இறை (கடவுள்) ஒன்றேயாய், எல்லா வற்றினும் மேலானதாய் நிற்றல் அருளப்பட்டது; ``தனக்குவமை இல்லாதான்`` (குறள்-7,) என்றதும் இவைநோக்கி என்க. ``மனத்துக்கு`` என்பதனை, `மனமாகிய நிலத்துக்கு` என்க. அன்பால் நினைப்பவரது உள்ளத்தில் முளைத்து விளங்கலின், ``வித்து`` என்று அருளினார். மன் - தலைவன். ``மன்னவர்`` என்றது, முறையை (நீதியை) முட்டாமற் செலுத்தும் அரசரை. வையகத்தை யெல்லாம் காத்து அதற்கு இன்பஞ் செய்கின்ற அவரைக் காத்து அவர்க்கு இன்பம் செய்தலின், ``மன்னவர்க்கு ஓர் அமுதமானாய்`` என்று அருளினார். ஓர் - ஒப்பற்ற. இப்பொருள் பற்றி மேலும் (ப.87 பா.6) கூறப்பட்டமை காண்க. போகம் - நுகர்ச்சிப் பொருள். இறைவன் ஒருவனே பொருள் சேர் புகழுடையவனாகியும், புகழ்வார்க்கு அவர் விரும்பிய பொருளை விரும்பியவாறே கரவாது வழங்குபவனாகியும் நிற்றலால், அவன் ஒருவனே புகழத் தக்கவன் என்பார், ``பூமி மேல் புகழ்தக்க பொருளே`` என்று அருளினார்;
``தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்வி னும்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்`` (தி.7. ப.34. பா.1.)
என்றருளிய ஆளுடைய நம்பிகளது திருமொழியையும் காண்க. என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் - எவ்வாறெல்லாம் ஆனாய், எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றி. ஏழையேன் - சிற்றறிவினை உடையயான். என் சொல்லி ஏத்துகேன் - எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்; `எத்துணையவாகச் சொல்லினும் அவை முடியா` என்றபடி.

பண் :

பாடல் எண் : 8

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.

பொழிப்புரை :

தந்தையே! ஐயா! உன் அடியவன் ஆகிய என்னை என் அன்பு கொண்டு பிணிப்புண்ணச் செய்தாய்; உனது திருவருள் நோக்கத்தாலே என்னைத் தீர்த்த நீர் ஆட்டித் தூயவன் ஆக்கினாய். அடைதற்கு மிகவும் அரியையாகிய நீ எனக்கு மிகவும் எளியை ஆயினாய்; என்மீது இரங்கி எனை ஆண்டுகொண்டு என்செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன்னின்று ஏற்றுக்கொண்டாய். ஒரு நெறிப்படாத பித்தனேனும் யாதுமுணராத பேதையேனேனும், வீணில் உழலும் பேயேனேனும் இழிவு மிகுந்த நாயேனேனும் நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தனை. நின் அருட்செயல்கள் யாவும் எம்போலியரது அளவிற்கு உரியனவோ? அல்ல; அல்ல; எம் பெருமான் திருக்கருணை இருந்த தன்மையைக் காட்டுவனவே அவை.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் இறைவன் தம்மை எளிவந்து ஆண்டருளிய பெருங்கருணைத் திறத்தை நினைந்து மகிழ்ந்தருளிச் செய்தது,
அத்தா - தந்தையே. அன்பு, நாயனாருடையது. எனவே ``ஆர்த்தாய்`` என்றது, `பிணிப்புண்ணச் செய்தாய்` என்றவாறு. `உனக்குத் தொண்டுபடுதல் அன்பினாலாயினும் அச்சத்தினாலாயினுமாகும். அவற்றுள், அடியேனை அன்பினாலே தொண்டனாகச் செய்தாய்` என்றதாம். தீர்த்த நீர் - தூய நீர்; அதனால் ஆட்டுதல், குற்றத்தைக் கழுவுதற்பொருட்டு. `அடியேனை மந்திர நீரால் ஆட்டித் தூய்மை செய்யாது, உனது திருவருள் நோக்கத்தாலே தூய்மை செய்து அருளினாய்` என்பார், `அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக்கொண்டாய்` என்றருளினார். `தீர்த்த நீராட்டுதலை அருள்நோக்கினாலே செய்தாய்` என்றதாம். ``கொண்டாய்`` என்றது, `தூயனாக்கினாய்` என்னும் குறிப்பினது. இங்ஙனம் கழுவவேண்டியது, சமண் சமயத்திற் படிந்திருந்த மாசு தீர்தற்பொருட்டு என்க. ``எத்துணையும்`` என்றதனை, ``எளியை ஆனாய்`` என்பதற்கும் கூட்டுக. நாயனாருக்கு மிக எளியனாகியது, அவர் யாதும் செய்யாதே அவர்தம் தமக்கையார் வேண்டிக் கொண்ட துணையானே இரங்கியருளியதாகும். ஏனையோர்க்கு அவ்வாறின்றி, அவர் தாமே பல்காலும் பணிந்து இரந்து, பல்வகைத் தொண்டுகளையும் செய்து நிற்பவும் அவர்க்குத் தன் திருவருளை வழங்கிலன் என்க. `இரங்கி ஆண்டுகொண்டு` என மாற்றி உரைக்க. ஏற்றுக் கொண்டாய் - என் செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன் நின்று ஏற்றுக்கொண்டாய். பித்தன் - ஒருநெறிப் படாதவன். பேதை - யாதும் உணராதவன். பேயன் - வீணில் உழல்பவன். நாயேன் - நாய் போன்றவன்; இழிந்தவன். இத்துணையவரும் தாமாக அருளிச் செய்தது, வஞ்சகராகிய சமணரது சொல்லின் வஞ்சத்தினை உணர மாட்டாது, அதனை மெய்யென்றே தெளிந்த நன்னெறியாகிய சிவ நெறியைக் கைவிட்டுச் சென்றமை கருதி. இத்துணை இகழ்வுடையேனாகிய என்னை ஆண்டுகொண்டது, யான் செய்த குற்றங்கள் அத்தனையையும் திருவுள்ளத்திற் கொள்ளாது ஒழிந்தமை யன்றி, அவையனைத்திற்கும் தீர்வுசெய்து அன்று என்பார், `பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே`` என்று அருளினார். ``கள்விகுதி``, `பிழைத்தவை` என்பதன் பின் வருதல்போல, ``பிழைத்தனகள்`` என விகுதிமேல் விகுதியாய்ச் சிறுபான்மை வந்தது. ``இத்தனையும்`` என்றது, ``அன்பால் ஆர்த்தாய்`` என்பது முதலாக மேல் அருளிய வற்றை. எம்பரமோ - எம்போலியரது அளவிற்கு உரியனவோ? அல்ல; இன்னதொரு பேரருள் எம்மாட்டு இருந்த தன்மையேயாம் என்க. `ஐயோ` என்பது இரக்கக் குறிப்பிடைச்சொல். ஐய - தலைவனே; இதனை, ``அத்தா`` என்றதன் பின்னர்க் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 9

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.

பொழிப்புரை :

சார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லா வற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால் குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், நாயனார், சமண் சமயம் சார்ந்திருந்த காலத்தில் இருந்த தம் நிலையை நினைந்து இரங்கி யருளியது.
குலம் - கூட்டம்; இனம். நாயனார், முன்பு சேர்ந்திருந்தது சமணர் கூட்டத்தில் ஆகலின், அதனை, `பொல்லேன்` என்றார். பொல்லேன் - தீயேன்; `இல்லாதது, இல்லாது, இல்லாத இல்லார்` என்னும் சொற்கள், `இல்` என்பது அடியாக வருதலின், `பொல்லாதது, பொல்லாது, பொல்லாத பொல்லார்` என்னும் சொற்கட்கு அடிநிலை, `பொல்` என்றே கொள்க. இஃது, `இல், இன்மை, இல்லாமை` என்றாற் போல வாராதாயினும், `பொல்லாங்கு, பொல்லாப்பு` எனவரும் என்க.
காத்து ஆள்பவரது (தமக்கையாரது) காவலை இகழ்ந்து சென்று குண்டரோடு கூடினமையின், `குணம் பொல்லேன்` என்றார். குறி - குறிக்கோள்; அது, தலைமயிரைப் பறித்தல் முதலியவற்றால் உடம்பை வருத்தி யொழிதலாகவே இருந்தமையின், `பொல்லேன்` என்றார். மக்களில் பலர் செய்கையால் தீயாராயினும் குறிக்கோள் அளவில் நல்லராதல் உண்டு; அவ்வாறும் இல்லை என்பார், ``குறியும் பொல்லேன்`` எனச் சிறப்பும்மை கொடுத்தோதினார். ``குற்றம்`` என்றது, குற்றமாகிய செயலை; அவை, `கடவுள் இல்லை` என்றல் முதலியன. கோலம் - வேடம். துறந்தார்க்கு அவரது வேடம் அவர்க்கும் பிறர்க்கும் நலம் பயப்பதொன்றாகலின், ``கோலமாய நலம்`` என்றும், அதுதான், உலகத்தார் கண்டோடிக் கதவடைக்கும் கோலமாய் இருந்தமையின், ``பொல்லேன்`` என்றும் ஓதினார்; நலம் பயப்பதனை, `நலம்` என்று அருளினார். `நான் பொல்லேன்` என்றது, ``குணம் நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் - மிகைநாடி மிக்க கொளல்`` (குறள். 504) என்றவாறு, `சிலவற்றாற் பொல்லேனாகாது, எல்லாவற்றாலும் பொல்லேனாயினமையின், யாவராலும் பொல்லேனாக ஒதுக்கப்பட்டேன்` என்றதாம். ``ஞானி அல்லேன்`` எனவும், ``நல்லாரோடு இசைந்திலேன்`` எனவும் அருளியது, `என்னை ஞானி எனவும், என்னால் இசைய (கூட)ப் பட்டாரை நல்லார் எனவும் மயங்கினேன்` என்றவாறு.
நடுவே நின்ற விலங்கு - மனவுணர்வுடைய மக்கட்கும், அஃது இல்லாத பிற உயிர்கட்கும் இடையே நிற்கின்ற ஒருசார் விலங்குகள்; அவை யானை, குரங்கு முதலாயின. மக்கட்கேற்ற சிறப்பு மன உணர்வுடைமையால், ``நடுவே நின்ற விலங்கல்லேன்`` என்றும், அச்சிறப்புணர்வினாற் பயன் கொள்ளாது ஒழிந்தமையால், ``விலங்கல்லாது ஒழிந்தேனல்லேன்`` என்றும் அருளினார்.
``நடுவே நின்ற`` என்றது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம்; இயைபின்மை நீக்கிய விசேடணமாகக்கொள்ளின், அதனாற் போந்த பயன் இன்றாதல் அறிக. தொல்காப்பியத்துள்,
``மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே`` (தொல். மரபியல் - 33)
என்னும் சூத்திரத்தின்பின்,
``ஒருசார் விலங்கும் உளஎன மொழிப`` (தொல். மரபியல் - 34)
என்னும் சூத்திரத்தைப் பாடம் ஓதி, `இதுவும் அது` என, கருத்துரையை மேலைச் சூத்திரக் கருத்துரையொடு மாட்டெறிந்து, `விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராம் என்றவாறு` எனப் பொழிப்புரைத்து, `அவையாவன, கிளியும் குரங்கும் யானையும் முதலாயின` என எடுத்துக்காட்டும் காட்டிப் போந்தார், இளம்பூரண அடிகள்; ஆயினும் அச்சூத்திரத்தைப் பேராசிரியர் பெற்றிலாமையின், அதன் பொருளை, மேலைச் சூத்திரத்துள், ``பிறப்பு`` என்றதனாற் கொண்டார். இவற்றால், `விலங்கினுள் ஒரு சாரன மன உணர்வுடையன` என்பது இனிது விளங்கிற்று.
வெறுப்பன - வெறுக்கத்தக்க சொற்கள்; அவை, `பொய், புறங்கூற்று, கடுஞ்சொல், பயனில்சொல்` என்பன. `வெறுப்பனவும்` என்னும் உம்மை, `மேலனவற்றோடு இவையும் வல்லேன்` என, இறந்தது தழுவிற்று. ``மிகப் பெரிதும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. `இல்லம்` என்பது, `இலம்` என இடைக் குறைந்து நின்றது; `குடிமை` என்பது பொருள். `பிறப்பால் குடிமை நல்லேனாயினும், எனது செயல்களால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன்` என்பார், `இலம் பொல்லேன்` எனவும், அச்செயல்கள்தாம் இவை என்பார், ``இரப்பதே ஈயமாட்டேன்`` எனவும், அருளிச்செய்தார். இச்செயல்களால் அறிவுடையோர், `இவன் குலனுடையானாயின், இலன் என்னும் எவ்வம் உரைத்தலும், ஈயாமையும் உடையவன் ஆகா னன்றே` (குறள் - 223.) என என் குடிமையை இகழ்வாராயினர் என்றவாறு. ``தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் - தோன்றலிற் தோன்றாமை நன்று`` (குறள் - 236) என்றபடி, `இவ்வாறு எல்லா வற்றாலும் யாவரினும் கடைமையை எய்திய யான் எதற்கு மனிதனாய்ப் பிறக்கவேண்டும்` என்பார், ``என்செய்வான் தோன்றினேன் ஏழையேன்`` என்று அருளினார்.
``குலம் பொல்லேன்`` முதலியன, பண்பு முதலியவற்றின் தன்மையை அதனை உடைய பொருள்மேற் சார்த்தி யுரைத்தனவாம். இதனுள், ``குலம் பொல்லேன்`` என்பது முதலாக, ``விலங்கல்லா தொழிந்தே னல்லேன்`` என்பது ஈறாக உள்ளனவற்றை: சமணரொடு கூடியிருந்த நிலைபற்றி ஓதினார்; அதனால், அவற்றின்கண் உள்ள வினைக்குறிப்பு முற்றுக்கள், `பொல்லேனாகி யிருந்தேன்` என்றாற் போல இறந்தகாலக் குறிப்பினவாம். ஏனையவை, எஞ்ஞான்றும் தம்பால் உள்ள நற்பண்புகளால் தாம் அமையாது அருளிச்செய்தனவாம். இவை யாவும், `இறைவன் தனது பெருங்கருணையால் என்னை வலிந்து ஆட்கொள்ளாதொழியின், என் நிலையாதாய் முடியும்` என நினைந்து இரங்கியருளியனவேயாம் என்க.

பண் :

பாடல் எண் : 10

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.

பொழிப்புரை :

சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், உலகியலைப் பற்றாது, மெய்ந் நெறியையே பற்றி நிற்கும் தமது உள்ள நிலையை அருளிச்செய்தது.
சங்க நிதி - சங்கு வடிவாகக் குவிக்கப்பட்ட நிதி. பதுமநிதி - தாமரை வடிவாகக் குவிக்கப்பட்ட நிதி. இனி, `சங்கம், பதுமம்` என்பன சில பேரெண்கள்` எனவும் கூறுப. `இந்நிதிகள் குபேரனிடத்து உள்ளன` எனவும், `அவற்றிலிருந்து எத்துணைப் பொருள் கொள்ளினும் அதனாற் குறையாது முன்னையளவில் நிரம்பி நிற்கும் தெய்வத் தன்மை உடையன` எனவும் சொல்லுப. தரணி - பூமி. `வான் தருவரேனும்` என இயையும். ``இரண்டும் தந்து`` எனவும், ``தரணியொடு வான் தருவரேனும்`` எனவும் அருளியன, `அவைகளை ஒரு சேரக் கொடுப்பினும்` என்றபடியாம். ``தருவரேனும்`` என்றது, `மனிதருள் சிலர் தரவல்லராயினும்` என்றவாறு. மங்குவார் - நிலையின்றி அழிவார். `மங்குவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒரு பொருளாக மதிப்போம் அல்லோம்` என்க. மாதேவர்க்கு - சிவ பெருமானார்க்கு. இதனை, `மாதேவரிடத்து` எனத் திரித்துக்கொள்க. ஏகாந்தர் - ஒருதலையாய் உணர்வுடையவர்; `பிற தேவரிடத்துப் பலதலைப்பட்டுச் செல்லாதவர்` என்றபடி. ஒரு சாரார், ஏகாரத்தைப் பிரிநிலை இடைச்சொல்லாக்கி, `காந்தர்` எனப் பிரித்து, `அன்பு உடையவர்` என உரைப்பர். `அல்லாராகில் மதிப்போமல்லோம்` என இயையும்.
அங்கம் - உறுப்பு. தொழுநோய் - குட்டநோய். இதனை அருளியது, காட்சிக்கு இன்னாராதலைக் குறித்தற்கு. `காட்சிக்கு இன்னாராவாரை அணுகிப் பணிபுரிதல் கூடாதாயினும் புரிவேம்` என்றல், திருவுள்ளம் என்க.
ஆ - பசு; இஃது, `உயிரோடு நின்றது, உயிர் நீத்தது` என்னும் இரண்டனையும் குறித்து நின்றது. ``ஆவுரித்துத் தின்று உழலும்`` என விதந்தோதியது, `புலையராவார் இவர்` என்பதும், `அவர் புலைய ராயினமை இத் தீத்தொழிலால்` என்பதும் உணர்த்தற்கு. தூய உடம்பினவாய், பிற அனைத்தையும் தூய்மை செய்வனவும் தேவர்கள் விரும்பி ஏற்பனவும் ஆகிய பால் முதலிய ஐந்தினையும் தருவனவாய், தேவரொடு வைத்து வழிபடப்படும் ஆவைக் கோறலாகிய தொழிலினும் தீயதொழில் பிறிதொன்று காணாமையின், அது செய்வாரைப் பிறர் யாவரும், `புலையர்` என்றிகழ்ந்தனர் என்பதாம். புலையர் - கீழோர். வடமொழியுள் இவரை, `சண்டாளர்` என்பர். `இறைவன் தன்னிடத்து உண்மை அன்பு உண்டாகப் பெற்றாரிடத்துப் பிறப்பின் சார்பால் உளவாகி, பல்வேறாகிய காரணங்களால் அகற்றப்படாது நிற்குங் குற்றங்களை நோக்கி அவரைக் கடிந்தொழியாது, அவர்தம் அன்பு ஒன்றையே நோக்கி அவரை உகந்தருளுவன்` என்பதும், பிறப்பு முதலியவற்றால் உயர்ந்தோரும் அவரை வணங்கற் பாலர் என்பது இறைவன் திருவுள்ளமாதலும் கண்ணப்ப நாயனாரது வரலாற்றால் இனிது விளங்கிக் கிடத்தலின், ``புலையரேனும் - கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில், அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளார்`` என்று அருளிச்செய்தார். இதனானே, `சிவனடியாரை` அவர்தம் பிறப்பு முதலியன நோக்கி இகழற்க` என விலக்கினமை பெற்றாம்.
`இறைவனிடத்து எத்துணைச் சிறந்த அன்பும் தொண்டும் உடையராயினும், இலராயினும் அவரை அவர்தம் பிறப்பு, தொழில் முதலியவற்றின் உயர்வு தாழ்வுகட்கேற்பக் கொள்ளுதல் உலகியல்` என்பதும், `பிறப்பு, தொழில் முதலியவற்றால் எத்துணை உயர்வு தாழ்வுகள் உடையராயினும், அவரை அவர்க்கு இறைவனிடத்துள்ள அன்பு, தொண்டு என்னும் இவற்றின் நிலைகட்கு ஏற்பக் கொள்ளுதல் மெய்ந்நெறி` என்பதும் இத்திருத்தாண்டகத்தால் இனிது விளங்கிக் கிடக்கின்றன.
இம் மெய்ந்நெறி முறைமை, `சண்டாளனாய் இருப்பினும், `சிவ` என்று சொல்வானேல், ஒருவர் அவனோடு பேசுக; அவனோடு வசிக்க; அவனோடு இருந்து உண்க` என, உபநிடதத்தினும் (முண்டகம்) கூறப்பட்டமை, பிரம சூத்திரம் நான்காம் அத்தியாயம் முதற்பாதம் பன்னிரண்டாம் அதிகரணத்துள் நீலகண்ட பாடியத்துக் காட்டப்பட்டது. எனினும், அம்மந்திரம் இக்காலத்து அவ்வுப நிடதத்துட் காணப்பட்டிலது; அது மெய்ந்நெறிப்பற்றின்றி உலகியற் பற்றே உடையோரால் மறைக்கப்பட்டது போலும்! அஃது எவ்வா றாயினும், வடநூற்கடலும் தென்றமிழ்க்கடலும் நிலை கண்டுணர்ந்த, சிவஞானபோத மாபாடிய முதல்வராகிய மாதவச் சிவஞான யோகிகள், மேற்காட்டிய உபநிடத மந்திரத்தையே, தமது கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதியில்,
``சிவனெனும் மொழியைக் கொடியசண் டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக
அவனொடு கலந்து பேசுக அவனோ
டருகிருந் துண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோ டுடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவே
றெனக்கிலை கலைசையாண் டகையே``
என மொழிபெயர்த்துக் கூறினார். இவற்றை எல்லாம் அறிந்த பின்பும், `இங்கு`, `சண்டாளன்` என்றது, ஜன்ம சண்டாளனை அன்று; கன்ம சண்டாளனையே; அஃதாவது, பிறப்பில் சண்டாளர் இனத்திற் பிறந்தவனை அன்று; உயர்ந்த வருணத்திற் பிறந்து, தனது சாதி தருமத்தில் வழுவினமையால் சண்டாளத்துவம் எய்தி நின்றவனையே` என மீளவும் தம் உலகியல் முறைமையினையே நிலைநிறுத்த முயல்வர் சிலர். இக்கருத்தினை உபநிடதம் வெளிப்படக் கூறாது செல்லினும், அதனை விளக்கவே புகுந்த சிவஞான யோகிகள் தாமும் கூறாதது என்னையோ என்க. இனி, மேற்கூறிய உபநிடத மந்திரத்தினையே உபவிருங்கணம் செய்யும் (வலியுறுத்திக் கூறும்) வாசிட்டலைங்க சுலோகம் ஒன்றை, காசிவாசி செந்திநாத ஐயர் அவர்கள் காட்டி யுள்ளார்கள்; அதனுள்ளும், சண்டாளனைக் `கன்ம சண்டாளன்` என விதந்தோதவில்லை. விதவாதவழி `சண்டாளன்` என்னும் சொல், இயல்பாய் உள்ள உண்மைச் சண்டாளனைக் குறித்தல் அன்றி, ஒரு காரணம் பற்றி அவனோடு ஒப்பிக்கப்படுவானைக் குறிக்குமாறில்லை. ஆகவே, ஓரிடத்தும் இல்லாத அப்பொருளை அச்சொல்லிற்கு யாண்டும் கற்பித்துக் கூறுதல், அச்சுருதிகளாலும் அவர் மனம் மெய்ந் நெறிக்கண் செல்லாமையையே காட்டுவதாகும். இத்தன்மையோரை நோக்கியே, ``பலநல்ல கற்றக்கடைத்தும் மன நல்ல ராகுதல் மாணார்க் கரிது`` (குறள் - 823) என்றருளினார், திருவள்ளுவநாயனார். ஆகவே, அவர் கூறும் அது, மெய்ந்நெறி முறைமை கூற எழுந்த உபநிடதங்கட்கும், திருமுறைத் திருமொழிகட்குங் கருத்தாகாமை அறிக. ``ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்` என்றெழுந்த நாயனார் திருமொழி, இவ்வகை விவாதங்கட்குச் சிறிதும் இடம் செய்யாது, பிறப்பால் புலையராயினாரையே குறித்தல் இங்குக் குறிக்கொண்டு உணர்தற்பாலதாகும்.
சிற்பி