பொது


பண் :

பாடல் எண் : 1

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

பெரிய பூமியாகியும் , நீராகியும் , தீயாகியும் , எறியும் காற்றாகியும் , ஆகாயமாகியும் , ஞாயிறாகியும் , அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும் , இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும் , பெருமையுடையதாகிய நன்மையும் , சிறுமை உடையதாகிய குற்றமும் , பெண்ணும் , ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம் , உருவம் , அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும் , நேற்று ஆகியும் , இன்று ஆகியும் , நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .

குறிப்புரை :

இத்திருப்பதிகத்துள் முதல் திருத்தாண்டகமாகிய இதனுள் முதற்கண்ணே இறைவனது எட்டுரு ( அட்டமூர்த்த ) நிலை அருளிச்செய்யப்பட்டது . அஃது ஏனைய எல்லாவற்றினும் சிறப்புடையது ஆகலின் , அட்ட மூர்த்தத்தை , ` நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாசம் , ஞாயிறு , திங்கள் , இயமானன் ` எனக் கூறுதலே முறை யாயினும் , அவற்றைச் செய்யுளுக்கேற்ப வைத்து அருளினார் என்க . இருநிலம் - பெரிய பூமி . ` இயமானன் ` என்பது , ` யஜமானன் ` என்னும் வடசொல் திரிபு ; இஃது உயிரைக் குறிப்பது ; திருக் கோவையார் உரைத் தொடக்கத்தில் , வேட்போன் ` என மொழி பெயர்த்துக் கூறினார் பேராசிரியர் . எறியும் காற்று - வீசுகின்ற காற்று . அருநிலைய - அழிவில்லாத நிலையை உடைய ; திங்கள் - சந்திரன் . சந்திரனை இவ்வாறு சிறப்பித்தது , தக்கனது சாபத்தால் அழிவெய்தாது நின்ற நிலையைக் கருதி . ஞாயிறு - சூரியன் . அட்டமூர்த்தி - எட்டுரு உடையவன் . ` நிலம் முதலியனவாகியதனால் எட்டுருவாகி ` என்க . பெருநலம் - பெருமையை உடையதாகிய நன்மை . நலத்தை ` பெருமையை உடையது ` என்றதனால் , ` குற்றம் சிறுமையை உடையது ` என்பது பெறப்படும் . ` இப்பெருமை சிறுமை ` என்பன இயைபின்மை நீக்கிய விசேடணங்கள் என்க . பிறர் உரு - ஏனையதேவரது வடிவங்கள் . ` தம் உரு ` என்றது , சிவபிரானது ` அருவம் , உருவம் , அருவுருவம் ` என்னும் மூவகைத் திருமேனிகளையும் . ` சிவதன்மம் , சிவயோகம் , சிவஞானம் ` என்பவற்றால் எய்திநின்றோரது உருவங்களை . நெருநல் - நேற்று ; ஐகாரம் சாரியை . நிமிர் - நீண்ட . சடையை , ` புன்சடை ` என்றல் , உலகியலுக்கு ஒவ்வாமைபற்றி . ` நின்றவாறு ` என்பதனை எழுவாயாகவும் , ` ஆகி ` என்பனவற்றை அதன் பயனிலைகளாகவும் கொண்டு ` நின்றவாறு ஆகி ` எனத் தனித்தனி எண்ணி முடிக்க . ` நின்றவாறு ` என்பதில் , நிற்றலையே , ` ஆறு ` என்றாராகலின் , அத்தொடர் , ` நின்றமை , என்னும் ` தொழிற்பெயர்ப் பொருட்டாய் ஒரு சொற்றன்மை எய்தி நின்றது . தொழிற்பெயர் எழுவாயாய் நிற்குமிடத்து , வினையெச்சமும் , இரண்டாவது முதல் ஏழாவது ஈறாக உள்ள வேற்றுமைகளும் பயனிலையாய் நிற்கும் என்பது , ` அவன் வந்தது நடந்து ; சென்றது விரைந்து ; உண்டது சோற்றை ; போழ்ந்தது வாளால் ` என்றாற்போல்வனவற்றால் அறியப்படும் . இத்தொடர்களில் பயனிலைகளாய் நிற்கும் வினையெச்சத்திற்குப் பின்னும் , வேற்றுமைகட்குப் பின்னும் எழுவாய்க்கண் உள்ள தொழிற்பெயர்களே மீளச் சொல்லத்தக்க சொல்லெச்சங்களாய் எஞ்சி நிற்கும் ; அத்தொழிற் பெயர்கள் , ` இம்மகன் நேற்று யான்கண்ட மகன் ` என்றல்போல எழுவாய்க்கண்பொதுவாயும் , பயனிலைக்கண் சிறப்பாயும் நிற்கும் ; ஆயினும் , அவ்வெச்சத்தை வெளிப்படக் கூறின் அத் தொடர்கள் இனியவாய்த் தோன்றா என்னுங் கருத்தான் அவை எஞ்சி நிற்கவைத்தே வழங்குவர் என அறிக . இவற்றுள் , வினையெச்சம் பயனிலையாய் நிற்றலை , ` அவற்றுள் , நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே ` ( தொல் . அகத்திணை யியல் . சூத் . 2) என்பதின் உரையுள் , இளம்பூரணரும் சிறிது உரைத்தார் . இனி , ` எம் அடிகள் நின்றவாறு வியக்கத்தக்கது ` என ஒருசொல் எஞ்சி நின்றதென , அதனை வருவித்து முடித்தலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 2

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

மண் ஆகியும் , விண் ஆகியும் , மலையாகியும் வயிரமாகியும் , மாணிக்கமாகியும் , கண்ணாகியும் , கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும் , நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும் , பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் , எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .

குறிப்புரை :

` கண்ணுக்கு , பெண்ணுக்கு , எண்ணுக்கு ` என்னும் நான்கனுருபுகள் , ` அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் ` என்பது போல ஏற்புடைப் பொருட்கண் வந்தன . கலை - நூல் , கலைஞானம் - நூலறிவு . ` ஒடுக்கம் ` எனப் பொருள்தரும் . ` லயம் ` என்னும் வடசொல் , ` பிர ` என்னும் இடைச்சொல்லோடு கூடி , ` பிரளயம் ` எனவரும் . தோற்ற ஒடுக்கங்கள் கால தத்துவத்திற்கு உட்பட்டு நிகழ்வன . சுத்தமாயா புவனங்கள் கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டவை ; ஆகவே , ` பிரளயத்துக்கு அப்பால் உள்ள அண்டம் ` என்றது , சுத்தமாயா புவனத்தை என்பது பெறப்பட்டது . அவை பலவாயினும் , சுத்த மாயையின் விளைவாக நோக்குமிடத்து ஒன்றாதல் பற்றி , ` ஓர் அண்டம் ` என்றார் . சுத்தமாயா தத்துவங்களும் , புவனங்களும் கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டமை பற்றி , ` நித்தம் ` எனப்படும் என்பது , ` சுத்த தத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவமாகும் - நித்தம் என்றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே ` என்பதனால் ( சிவஞானசித்தியார் . சூ . 1-66) உணரப்படும் . எண் - எண்ணுதல் ; ஆராய்தல் ; அஃது ஆராய்ச்சிக்குப் புலனாம் பொருள்மேல் நின்றது ; அதனை உயிர் அறிவின்கண் பதிவிப்பது எழுத்தோசை ( நாதம் ) ஆதலின் ` எண்ணுக்கு ஓர் எழுத்து ` என்று அருளினார் . எழும் சுடர் - தோன்றி விளங்கும் ஒளி ; என்றது , சிவபிரானது தடத்த நிலையை . அந்நிலை படைப்புக் காலத்து விரிந்தும் , ஒடுக்கக் காலத்துக் குவிந்தும் வருதல் பற்றி , ` எழுஞ்சுடர் ` எனப்பட்டது ; ` விரிந்தனை குவிந்தனை ` ( தி .2. ப .30. பா .3) எனத் திருஞானசம்பந்தரும் , ` விரிந்தானைக் குவிந்தானை ` ( ப .86. பா .6) என சுவாமிகளும் அருளிச்செய்ததும் இது நோக்கி என்க . வருகின்ற திருத்தாண்டகங்களில் , ` பரஞ்சுடராய் ` என்பது தவிர்த்துப் பிறவாறு வரும் சுடர்கள் யாவும் இந்நிலையையே குறிக்கும் என்க .

பண் :

பாடல் எண் : 3

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

மலையாகியும் களர்நிலமாகியும் காடாகியும் , ஆறாகியும் , வாய்க்காலாகிய வழியாகியும் , கடற்கரைக்கழியாகியும் , புல்லாகியும் , புதராகியும் , பூடு ஆகியும் , நகர் ஆகியும் , புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும் , சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும் , போக்கு வரவு ஆகியும் , அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும் , நீராகியும் , நெல்லாகியும் , நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .

குறிப்புரை :

கல் - மலை . ` அளறு ` என்பதுபோல , களர் நிலத்தை , ` களறு ` எனவும் வழங்குபவர் . கான் - காடு . ` காவிரி ` என்றது பொதுப் படப் பிற யாறுகளையும் கொள்ள நின்றது . கால் - யாறுகளினின்றும் பிரிந்துசெல்லும் வாய்க்கால் . ஆறு - வழி ; ` வாய்க்காலாகிய வழி ` என்க . கழி - கடற்கரைக் கழி . புரம் - பல நகரங்கள் . ` புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி ` என்றது , ` அந்நகரங்கட்கு அழிவுமாய் ` என்றவாறு . ` சொல்லுக்கு ` என்னும் நான்கனுருபையும் , மேலைத் திருத்தாண்டகத்திற் கூறிய வாறே கொள்க . சுலாவு - போக்குவரவு . சூழல் - ( அப்போக்கு வரவிற்கு வேண்டப்படும் ) இடம் . ` நெல்லாகி ` என்றதனை , ` நீருமாகி ` என்றதன் பின்னர்க் கூட்டி உரைக்க ; என்னை ? நிலமும் நீரும் இயைவதனால் உண்டாகும் பயனே நெல் ஆதலின் ; ` நீரு நிலனும் புணரி யோரீண் டுடம்பு முயிரும் படைத்திசி னோரே ` ( புறம் - 18) என்றதும் , இது நோக்கி .

பண் :

பாடல் எண் : 4

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

காற்றாகியும் , கரியமுகிலாகியும் , இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும் , கனவாகியும் , நனவாகியும் , இரவாகியும் , நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும் , இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும் , ஒலிக்கும் கடலாகியும் , அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும் , நீறணிந்த கோலத்தன் ஆகியும் , நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும் , நீண்ட ஆகாயம் ஆகியும் , அவ்வாகாயத்து உச்சியாகியும் , உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும ஏற்றுக் கொண்டவனாகியும் , இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .

குறிப்புரை :

எட்டுருவில் ஒன்றாதல் பற்றி , மேல் , ` எறியும் காற்றுமாகி ` என்று அருளி , ஈண்டு , கார்முகிலோடு ( கரிய மேகத்தோடு ) இயைபுடைமை நோக்கி , ` காற்றாகி ` என்று அருளிச்செய்தார் , மேல் அருளிச்செய்த , ` நெருநல் ` முதலிய மூன்றும் நாள்களையே குறித்தன . ஈண்டு , ` காலம் மூன்றாய் ` என்றது , நொடியும் , நாழிகையும் முதலாகப் பலபடவரும் காலப்பகுதிகள் அனைத்தையும் குறித்தது . கங்குல் - இரவு . கூற்று - இயமன் , ` கொல்களிறு ` உவமையாகுபெயர் . ` கூற்று உதைகொல் களிறுமாகி ` என்பதே பாடம் போலும் ! இது , கூற்றுவனது தோற்ற ஒடுக்கங்களைக் கொள்ள வைத்த குறிப்புமொழி என்க . குரை கடல் - ஒலிக்கின்ற கடல் . கடற்குக் கோமான் - வருணன் . ` நீற்றான் ` என்றது , நீறணிந்த கோலத்தை மேற்கொண்ட நிலையையும் . ` நீறேற்ற மேனி ` என்றது , அந்நிலைக்கு உரிய வடிவத்தையும் குறித்தன . ` விசும்பு ` என்றது அனைத்துலகங்களின் முடிவையும் , ` விசும்பின் உச்சி ` என்றது , அவைகளைத் தோற்றியும் ஒடுக்கியும் நிற்கும் நிலையையும் குறித்தன . ஏற்றான் - உலகத்தின் தொழிற் பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவன் . ஏறு - இடபம் . ` அதனை ஊர்ந்த செல்வன் ` என்றது , அங்ஙனம் ஏன்றுகொண்டு நிற்கும் தலைவன் ( பதி ) என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

தீயின் வெம்மையாகியும் , நீரின் தண்மையாகியும் , நிலத்தின் திண்மையாகியும் , திசைகள் ஆகியும் , அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும் , தாயாகியும் , தந்தையாகியும் , சார்தற்குரிய பற்றுக்கோடாகியும் , நாண் மீனாகியும் , ஞாயிறாகியும் , குளிர் மதியமாகியும் , காயாகியும் , பழங்கள் ஆகியும் , பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும் , அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .

குறிப்புரை :

திண்மை , நிலத்தின் குணம் ; இது கூறினமையால் , ` தீ , நீர் ` என்றவற்றினும் , அவற்றது தட்ப வெப்பங்களாகிய குணங்களையே கொள்க . திசைத் தெய்வம் - திசைக் காவலர் . திசைகளைத் தனித்தனி நோக்கி அருளிச்செய்தலின் , ` ஓர் தெய்வமாகி ` என்று அருளினார் . சார்வு - சார்பு ; துணை ; பற்றுக்கோடு . தாரகை - விண்மீன் ; இது முதலிய மூன்றும் வானத்திலுள்ள ஒளி மண்டிலங்களை நோக்கி அருளிச் செய்தவாறு . ` இரதமாகி ` என்பதும் உடம்பொடு புணர்த்தலாற் கொள்ளப்படும் . இரதம் - சுவை . நுகர்வான் - துய்ப்பவன் ; இனம் பற்றி ஒருமையாக அருளிச்செய்தார் . ` நீ , நான் என்பன , முன்னிலை , படர்க்கை ` என்னுந் துணையாய் நின்றன ; இவற்றானே , ` அவன் ` என்னும் படர்க்கையும் கொள்ள நின்றது . நேர்மை - நுண்மை .

பண் :

பாடல் எண் : 6

அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்கள் ஆகியும் , ஆதியாய வேதங்கள் ஆகியும் , அரிய மந்திரங்கள் ஆகியும் , ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும் , புகழ்ச் சொற்களேயன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும் , வெள்ளிய மதி ஆகியும் , உலகிற்கு முதல் ஆகியும் , வினையாகியும் , கங்கை , காவிரி , கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும் , கடலாகியும் , மலையாகியும் , கழி ஆகியும் , எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன் ஆகியும் , தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .

குறிப்புரை :

` ஆதியாய வேதம் ` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று . மறை - மந்திரம் . ` ஐம்பூதம் ` என்றது அவற்றுக்குத் தலைவராய தேவரை . ` மதி , கங்கை , காவிரி , கன்னி ` என்றனவும் அவற்றது தெய்வங்களையே என்க . ` சொல் ` என்றது , புகழையாதலின் , பங்கம் என்றது அவற்றுக்கு மறுதலையாய இகழ்ச்சியை . எனவே , வேதத்துள் , கொடியாரை வைதும் . தேவரை வாழ்த்தியும் கூறும் பலவகைச் சொற்களாயும் நின்றமை அருளியவாறாம் . ஆதி - உலகிற்கு முதற்காரணம் ; மாயை . பான்மை - வினை . கன்னி - குமரித்துறை . கடல் முதலிய மூன்றும் ஆகுபெயரால் அவற்றை அடுத்துள்ள இடங்களை உணர்த்தின . அது , ` எங்குமாய் ` என்ற குறிப்பாற் பெறப்படும் . தொகுக்கப் பட்ட அகரத்தை விரித்து , ` செல்வனாகி எழுஞ்சுடராய எம் அடிகள் ` என அடையாக்கி உரைக்க .

பண் :

பாடல் எண் : 7

மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

பொழிப்புரை :

மாதாபிதா மக்கள் ஆகியும் , அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும் , கோதாவிரி குமரிகள் ஆகியும் , கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும் , உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும் . ` யாது நிகழினும் நிகழ்க ` எனக் கவலையற்றுத் தன்னையே நினை வார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிற முடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்

குறிப்புரை :

` மக்கள் ` என்றது முறைப்பெயர் . ` கடல் ` என்றது அதன்கண் உள்ள நீரை ; அது , ` மறிகடல் ` என்பதனாற் பெறப்பட்டது . ` விசும்பு ` என்றது , அதன் குணமாகிய ஓசையைக் குறித்தது . ` கோதாவரி , குமரி ` என்றனவும் அவற்றது நீரையே , ` குழகனாகி , புனிதனாகி , எளிதேயாகி ` என்னும் எச்சங்கள் , ` வண்ணர் ` என்பதில் தொக்குநின்ற ` ஆயவர் ` என்பதனோடு முடியும் . ` குழகன் , புனிதன் ` என்பன , பன்மை ஒருமை மயக்கம் . ` எளிது ` என்றது , ` எளிய பொருள் ` என்னும் பொருளது . ` யாதானும் ` என்புழி , ` ஆக ` என்பது வருவிக்க . ` யாது நிகழினும் நிகழ்க ` எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார் என்றபடி . சுவாமிகள் , தம்மைச் சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில் வீழ்த்தியபொழுது , ` எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை ` என நினைந்து பாடினமையைப் பெரிய புராணத்துட் காண்க . அழல் வண்ண வண்ணர் - நெருப்பினது நிறம்போலும் நிறம் உடையவர் .

பண் :

பாடல் எண் : 8

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

பசுவும் பசுவிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும் , வேள்வித்தீயும் , அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும் , நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும் , நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும் , பூவும் , அப்பூவிற் குரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும் , நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும் , தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும் , செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .

குறிப்புரை :

அழல் - நெருப்பு ; என்றது வேள்வித்தீயை . அவி - வேள்வித்தீயில் இடப்படும் உணவு . ` நாவுக்கு ` என்பது முதலிய நான்கனுருபுகட்கு , மேல் உரைத்தவாறே உரைக்க . ` நாதமாகி , வேதத்தின் உள்ளாகி ` என்பவற்றையே , ` நாதனாகி , வேதத்தின் உள்ளோனாகி ` என ஓதியருளினார் . ` நாதம் ` என்றது சூக்கும வாக்கையும் , ` வேதத்தின் உள் ` என்றது , வேதத்தின் பொருளையும் என்க . ` வாசமாய் உள்ளால்புக்கு நின்றானாகி ` என்றது , ` நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகி ` என்றபடி . ` தே ` என்னும் அஃறிணைச் சொல் , பன்மையாய் நின்றது . ` முதல் ` என்றதும் அவ்வாறு நின்று தலையாய தேவரைக் குறித்தது . சென்று - பரவி .

பண் :

பாடல் எண் : 9

நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும் , தன்னை யடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும் , நீள அகலங்களும்ஆகியும் , புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும் , பூமியின் பொறைக்குணமும் , பண்ணின் இனிமைப் பண்பும் , அப்பண்புடைய பாடலும் ஆகியும் , மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்

குறிப்புரை :

` நீர் ` என்றது , அதன் குணமாய சுவையை . ` நீள அகலம் ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று . ` நீளம் , அகலம் ` என்பன அப்பண்புகளையே குறித்து நின்றன . ` தான் ` என்பது , ` அகலம் ` என்பதனைச் சார்ந்துநின்ற அசைநிலை . ஏகாரம் , எண் ணிடைச்சொல் ; அதனை , ` நீளம் ` என்பதனோடும் கூட்டுக . நிழல் - ஒளி . ` உச்சி ` என்றது , எல்லையை , பேர் - புகழ் . ` பாராகிப் பண்ணாகிப் பாடலாகி ` என்றதனை , ` பெருமையாகி ` என்பதன் பின்னர்க் கூட்டுக . பார் - பூமி ; என்றது , தாங்குதலாகிய அதன்செயலை . பரஞ்சுடர் - மேலான ஒளி . ` அடிகள்தாம் , எய்தானாகி , ஈசனாரும் பரஞ்சுடரும் ஆயினும் , சென்று நின்றவாறு ` எனக்கொண்டு கூட்டி , எடுத்துக்கொண்டு உரைக்க . ` எய்தான் ` என்றது , பன்மை ஒருமை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 10

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

மாலும் , நான்முகனும் ஆகியும் , பெரும்பூதங்கள் ஆகியும் , பெருக்கமும் , சுருக்கமும் , மகிழ்ச்சியும் , ஆகியும் , எட்டுத் திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும் , பரப்பும் பரலோகமும் ஆகியும் , பூலோக புவலோக சுவ லோகங்களும் , அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும் , புராணனுக்குரிய பழமையாகியும் , தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும் , அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும் , எழும் ஒளிப்பிழம்பாகியும் , எம்பெருமான் விளங்கி நின்ற வாறு வியக்கத்தக்கதாகும் .

குறிப்புரை :

` மாபூதம் ` என்றது அவற்றோடு இயைந்து நிற்கும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களையும் , மற்றும் அப்பூதங்களின் கூறாய தாத்துவிதங்களையும் என்க . மருக்கம் - பெருக்கம் ; ` இது , மருங்குசெல்வது ` என்னும் பொருள்பற்றி வந்தது . அருக்கம் - சுருக்கம் ; இது , ` அருகுதல் ` என்பதுபற்றி வந்தது . ` பால் ` என்றது , ` திசைப்பிரிவு ` என்னும் பொருளது . ` எண்டிசை` என்பதில் உள்ள , ` எட்டு ` என்பதனை , ` பால் ` என்றதனோடும் கூட்டுக . பரப்பு - அகலமும் நீளமும் கூடியது . பரலோகம் - எல்லாவற்றினும் மேலாய சிவலோகம் . ` பூதங்கள் ` என்றது , அவற்றின் உட்பட்ட அண்டங் களை . ` புராணன் தானேயாகி ` என்றதும் , ` புராணம் ` எனப்படும் பழமையாகி என்றதேயாம் . ` இயலாதன ` ` இயல்விப்பான் ` என்பன , ` ஏலாதன ` எனவும் , ` ஏல்விப்பான் ` எனவும் மருவி நின்றன ; அது ஏற்பிப்பான் என்னாது ஏல்விப்பான் என்றதனானே அறியப்படும் . இயலாதன - தானின்றித் தாமாக நடைபெறாதன ; அவை சட உலகங்கள் . ` இயல்விப்பான் ஆய் ` என்றது , ` அவைகளை நடை பெறுவித்தற்கு அமைந்து என்றவாறு `. ` ஏல்விப்பானாய் ` என்னும் எச்சம் . ` எழுஞ்சுடராய் ` என்பதில் உள்ள , ` ஆய் ` என்பதனோடு முடியும் . மருக்கம் - மனம் ., அருக்கம் - உணவு என்பர் சுவாமிநாத பண்டிதர் . ( தேவாரத் திருமுறை . தலவரிசை - 1911, பக் . 1228.)
சிற்பி