திருச்சிவபுரம்


பண் :

பாடல் எண் : 1

வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள் நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம் பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும், தன்னைக் கருதுவார் இதயத் திடத்து, தாமரை மலரிடத்து ஊறும் தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும் பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.

குறிப்புரை :

வானவன் - தேவன்; என்றது, `தேவருள் ஒருவன் போல நின்று, வேண்டுவார் வேண்டுவனவற்றை அருளுபவன்` என்றவாறு; சிவபிரான் தேவருள் ஒருவனாய் நின்று, அவர்கட்கும் மக்கள் முதலிய பிற உயிர்கட்கும் அருளுதல் பற்றி அவனைத் தேவருள் ஒருவனாகவே உணர்தல் மயக்க உணர்வேயாம் என்பதனை,
``தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாத
ராவது முணரார் ஆதி அரியயற் கறிய வொண்ணா
மேவுரு நிலையு மோரார் அவனுரு விளைவு மோரார்``
என விளக்கும் சிவஞான சித்தி (சூ 1, 49.) - இதனை அறிவுறுத்தற் பொருட்டே, பின்னர், ``வானவர்க்கு மேலானான் காண்`` என்றருளிச் செய்தார் என்க. ``வடமொழியும் தென்றமிழும் ........ ஆனவன்`` என்றதன் கருத்தை, ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (ப.23. பா.5.) என்றதன் குறிப்பிற் காண்க. ``எல்லாப் பொருளும் வேதத்தின்கண் உள்ளன`` என்றலின், ``மறைகள் நான்கும் ஆனவன் காண்`` என்றதனால், `ஏனை எல்லா நூல்களும் ஆனவன்` என்பது தானே பெறப்பட்டது.
ஐயன் - தலைவன். கானவன் - காட்டில் இருப்பவன். கானவனுக்கு - வேடனுக்கு; கண்ணப்ப நாயனாருக்கு; அவருக்கு அருள் செய்தமையை எடுத்தோதியது, இறைவற்கு அன்பு ஒன்றே உவப்பாவது; அதனால் `அவ்வன்பின் வழிப்பட்ட வழி இழிந்தனவும் உயர்ந்தனவாய், உவகையைப் பயப்பிக்கும்` எனவும், `அதன் வழிப்படாதவழி உயர்ந்தனவும் இழிந்தனவாய், வெறுப்பைத் தோற்றுவிக்கும்` எனவும் உணர்த்துதற் பொருட்டு `இதயத்து` என்புழி அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை; எனவே, `இதய கமலம்` என்பது பொருளாயிற்று. இனி, `இதயத்திடத்து, கமலத்துக்கண் ஊறும்தேன் போன்றவன்` என, ``கமலத்து ஊறும்`` என்றதனை இடைநிலையாக்கி உரைத்தலுமாம். ஊறும் - சுரக்கின்ற. `ஊறும் தேன் போன்றவன்` என்றது, உள்நின்று விளங்கி, இன்பம் தருதல் பற்றி.
சென்று அடையாத செல்வம் - முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்று அடைதல் என்பது இன்றி, இயல்பாகவே உள்ள செல்வம்; அஃது அவனது வரம்பிலின்பம். ``சென்று அடையாத`` என்றதனால், நீங்காது என்றும் உளதாதலும் பெறப்பட்டது. ``சென்றடையாத திருவுடையானை`` (தி.1. ப.98. பா.1.) என்று அருளினார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும். இப்பொருட்கு, ``அடையா`` என்னும் எச்சம் ``செல்வன்``. என்றதன் முதனிலையோடு முடியும்; இனி `பெயர்ந்து சென்று அடையாது, உணர்வு வேறு பாட்டானே அடையப்படும் இன்பப் பொருளாய் உள்ளவன்` என்று உரைத்தலுமாம். ``சிவன்`` என்பதன் பொருளை (ப.31. பா.6 உரை) காண்க. ``சிவனவன்``. என்பதில் அவன், பகுதிப்பொருள் விகுதி. எம் செல்வன் எமக்குச் செல்வமாய் (எல்லா நன்மைகளுமாய்) உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 2

நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த
நாதன்காண் பூதகண மாட ஆடும்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான் உடை இல்லாதவனும், ஒளியுடைய பாம்பினை இடையிற்கட்டிய தலைவனும், பூதகணங்கள் ஆட அவற்றுடன் தானும் ஆடும் அழகனும், கொக்கிறகைச் சூடினவனும், துணை முலைகளை உடைய துடிபோலும் இடையாளுக்குச் சேரப்படும் இடமாந் தகுதிபெற்ற பொலிவையுடையவனும், சம்புடத்துக்கொண்ட வெள்ளிய திருநீற்றை உடையவனும், புவனங்கள் மூன்றிற்கும் உயிராய் நின்ற புகலிடமானவனும், செவ்வானம் போலத்திகழும் மேனியையுடையவனும் ஆவான்.

குறிப்புரை :

நக்கன் - உடையில்லாதவன்; இது பிட்சாடன கோலத்தைக் குறித்தது. `நக்க அரவம்` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. நக்க - ஒளியை உடைய; `ஒளி, மாணிக்கத்தது` என்க.
சொக்கன் - அழகன். சேர்வு - சேரப்படும் இடம். பொக்கன் - பொலிவை உடையவன். பொக்கணம் - சம்புடம். ``சுத்திய பொக் கணத்து`` என்னும் தி.8 திருக்கோவை. (பா. 242.) யும் காண்க. பொருள் - முதற்பொருள்; `உயிர்` என்றவாறு, திக்கு - புகலிடம். செக்கர் - செவ்வானம்; `செக்கர் போலத் திகழும்` என்க. இனி, செக்கர் - சிவப்பு நிறமுமாம். அது, பகுதிப்பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 3

வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண்
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்து எம் செல்வனாம் சிவபெருமான் மணங்கமழும் மலர்களையணிந்த கூந்தலையுடைய உமையம்மையின் கணவனும், நான்முகனும் திருமாலும் காணமுடியாத வலிமையுடையவனும், அசையுமியல்பினையுடைய மதயானை துன்பமிகுதியால் பிளிற, அதன் தோலை உரித்தவனும், கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் இருண்ட கண்டத்தவனும், அம்பர் நகரத்துப் பெருங் கோயிலில் விரும்பி உறைபவனும், அயவந்தித்திருக்கோயிலில் உள்ளவனும், ஐயாறனும், செம்பொன்போல் திகழும் திருவுருவத்தவனும், ஆவான்.

குறிப்புரை :

வம்பு - வாசனை; இயற்கை மணம். கம்பம் - அசைவு. அம்பர் நகர்ப் பெருங்கோயில் - அம்பர்ப் பெருந்திருக்கோயில்; இது சோழநாட்டுத் தலம், ``அயவந்தி`` என்பது, திருச்சாத்த மங்கைத் தலத்தின் திருக்கோயிற் பெயர்; இத்தலம், சோழ நாட்டில் உள்ளது; திருநீலநக்க நாயனார் தோன்றியருளி அயவந்தி நாதரை வழிபட்டது. ஐயாறு - திருவையாறு.

பண் :

பாடல் எண் : 4

பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம்
பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயினான் காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண்
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான். பித்தனாய், தக்கன் வேள்வியை முழுதும் பெருமையிழக்க அழித்துப் பின் அனைவருக்கும் அருள்கள் செய்த முத்தனாய், முத்தீயும் ஆனவனாய், முனிவர்க்கும் தேவர்க்கும் முதலாகும் மேன்மை மிக்க தந்தையாய், புத்தூரில் அமர்ந்தவனாய், அரிசிற்பெருந்துறையை இருந்து ஆளுமிடமாகக்கொண்ட சித்தனாய், நறையூர்ச் சித்தீச்சரத் தவனாய்த் திகழ்பவன் ஆவான்.

குறிப்புரை :

பீடு - பெருமை. தேவர்கட்கே யன்றித் தக்கனுக்கும் பின்னர் அருள் செய்தமை யறிக. முத்தன் - பாசம் இல்லாதவன். முத்தீ, `ஆகவனீயம், காருகபத்தியம். தக்கிணாக்கினி` என்பன. அத்தன் - தந்தை; `முனிவர்க்கும் தேவர்க்குமே அத்தன் எனச் சிறந்தெடுத் தருளிச் செய்தது, அவர்கள் அந்நிலையை இயல்பில் அனுபவமாக ஐயமின்றி உணரும் பிறப்பினராதல் பற்றி. அரிசிற் பெருந்துறையை எடுத்தோதினமையால், புத்தூர், சோழநாட்டில் உள்ள அரிசிற்கரைப் புத்தூர் என்க. புகழ்த்துணை நாயனார் தோன்றியருளி, திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டது. பாண்டிநாட்டுத் தலமாகிய புத்தூர், இதனின் வேறு. அரிசில் - அரிசில் ஆறு. சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன். சித்தீச்சரம், நறையூர்ச் சித்தீச்சரம்; சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 5

தூயவன்காண் நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான் காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண்
அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், தூயவனும், ஒளி விளங்கும் பளிங்கு போன்று, திருநீறு செறிந்த மேனிச் சோதியனும், தீயாய்த் திகழ்பவனும், கொடிய அசுரருடைய புரங்களை அழித்தவனும், சிறுமானைச் செங்கையிலேந்திய எம் பெருமானும், தாய் போன்றவனும், ஆரூரில் அம்மானாய்த் திகழ்பவனும், அடியவர்க்கு ஆரமுதம் ஆனவனும், மற்றையர்க்குத் தொலைவில் உள்ளவனும், பாதுகாவலான நெறியினனும் ஆவான்.

குறிப்புரை :

`மேனி சோதியான்` என இயையும், ``சோதியான்`` என, சினையை முதலொடு சார்த்தி முடித்தருளினார். துளங்கும் - ஒளி விளங்குகின்ற. தீயவன் - தீயாய் இருப்பவன். ``சிறுமான் பெருமான்`` என்றது, முரண் தொடை நயம், ஆய் - தாய்; `யாய்` என்பதன் மரூஉ; `தாய்போன்றவன்` என்பது பொருள். அகரம், சாரியை. `ஆரூரில் ஆயவன்` என மாற்றி உரைப்பினும் ஆம். `அடியார்கட்கு` என்றமையால். ``சேயவன்`` என்றது, மற்றையோர்க்கு என்பது பெறப்படும். சேயவன் - சேய்மையில் உள்ளவன். சேமநெறி - பாதுகாவலான நெறி.

பண் :

பாடல் எண் : 6

பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப்
பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், விளைநிலமானவனும், விளைநிலத்தில் பயிரானவனும், பயிரை வளர்க்கும் மழையானவனும், அம்மழைத்துளியில் நின்ற நீரானவனும், தன் சடைமேல் நீர்நிற்கச் செய்தவனும், நிலவேந்தர் தம் ஆட்சியால் தாம் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைக்குமாறு ஓங்கும் புகழானவனும், பிறை போன்ற விளைந்த பல்லினை உடைய வெள்ளைப் பன்றியாகிய திருமால் இந்நகரின் நீங்காது பலநாளும் வழிபட்டு வணங்கும் புகழினனானவனும், சிறப்புடைய தேவர் எல்லாருக்கும் இன்பக் காரணன் ஆனவனும் ஆவான்.

குறிப்புரை :

``பார்`` என்றது, விளைநிலத்தை, துளி - மழை. பேர் - பெயர்; புகழ். ``இறைகடியன்`` என்று குடிகள் உரைக்கும் இன்னாச் சொல் (குறள் - 564.) இன்றி, ``செங்கோலன்` எனக் கூறும் சொல்லையே நிலவேந்தர் தம் ஆட்சியாற் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைதலின், அதனை, ``நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும் பேர்`` என்று அருளிச் செய்தார். `அவர் நினைவின்கண் உற்று ஓங்கும் பேர்` என்க. பெயலும் விளையுளும் தொக்கு இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவர் நாட்டவாகச் செய்து, (குறள். 545,) அவர்க்கு மேற் கூறிய பரிசைப் பெறுவிப்பவன் இறைவனாதல் பற்றி, அவனை இவ்வாறு அருளிச்செய்தார். ``மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை`` (தி.8 திருவாசகம் - திருவம்மானை. 10.) என்பதும் காண்க.
இதனானே, சிவபிரான் திருக்கோயில் வழிபாடுகள் விழாக்கள் முதலியவற்றை நன்கு காத்தல் நிலவேந்தர்க்கு முதற் கடமையாதலும் பெறப்பட்டது. ``வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் - வீழ்க தண்புனல்`` என, அந்தணரையும் தேவரையும் ஆனினத்தையும் மழையையும் வாழ்த்தியருளிய ஆளுடைய பிள்ளையார், ``வேந்தனும் ஓங்குக`` (தி.3. ப.54. பா.1.) என அரசனை வாழ்த்தியருளியதூஉம் இது பற்றி என்பதனை, ``ஆளும் மன்னனை வாழ்த்திய தர்ச்சனை மூளும் மற்றிவை காக்கும் முறைமையால்`` (தி.12 திருஞான. புரா. 822) எனச் சேக்கிழார் நாயனார் விளக்கியருளினார். `இது செய்யாத அரசன் தானும் கேடுற்றுத் தன் நாட்டினையும் கேடுறச் செய்வான்` என்பதனைத் திருமூல நாயனார் திருமந்திரத்துள்,
``ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே``
எனவும்,
``முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே``
எனவும் அருளிச் செய்தார்.
பிறை எயிறு - பிறைபோன்ற கோரப் பல். வெள்ளைப் பன்றி- சுவேத வராகம்; இது திருமால் கொண்ட வடிவம். திருமால் இவ் வடிவத்துடன் நிலத்தை ஊழி வெள்ளத்திலிருந்து எடுத்து நிறுத்திய பின் இத் தலத்தில் சிவபெருமானை வழிபட்டனன் என்பது புராணம்.
``மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக
ழெயிறத னுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய எழில்அரி
வழிபட அருள்செய்த
பதமுடை யவன்அமர் சிவபுரம்``
(தி.1. ப.21. பா.7.) என்றருளினார் ஞானசம்பந்தரும். சீர் - புகழ், சீர் உடைய தேவர் - வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படும் புகழை உடைய தேவர்கள். ``சிவன்`` என்றது, இங்கு, `இன்பத்திற்குக் காரணன்` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 7

வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்
காமனங்கம் பொடிவிழித்த கண்ணி னான்காண்
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கொடியவர்க்குக் கொடியவனும், வெப்பமிகு கனலை ஏந்தியவனும், பரந்த கெடிலநதிக்கரை மீதுள்ள அதிகை வீரட்டானத்து அமர்ந்தவனும், மெய்ப்பொருளினனும், பொய்யர் மனத்துட் புகாதவனும், இனிமைமிகும் பாடல் வீணையோடு இயைந்து இனிமை மேலும் மிகுதற்குக் காரணமான விரலினனும், கையில் மழுவாயுதத்தை ஏந்தியவனும், காமனது உடல் எரிந்து சாம்பல் ஆக விழித்த கண்ணினனும், செம்மை நிறத்தவனும், திருமகளைத் திருமாலுக்கு ஈந்தவனும் ஆவான்.

குறிப்புரை :

``வெய்யவன்`` என்றது, வெய்யவர்க்கு. மெய்யவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன். மிக்க கை - மிகுதற்கு ஏதுவாய கை; ``கை`` என்றது, ஈண்டு விரலை. `பொடியாக விழித்த` என ஆக்கம் வருவிக்க.
செய்யவன் - செம்மை (நன்மை) யுடையவன். செய்யவள் - திருமகள்: இவள், பாற்கடலில் தோன்றிய விடத்தைச் சிவபெருமான் உண்டபின்னர், தேவர் அமுதம் வரக் கடைந்தபொழுது தோன்றினமை நோக்கி அப்பெருமானால் ஈயப்பட்டவளாக அருளினார்; இது வானவர்க்கு அமுதம் ஈந்தமை போல்வது என்க. இனி, `வளை - சங்கு; செய்ய வளை - செம்மையாய (நன்றாய) சங்கு என உரைத்து, திருமாலுக்குச் சக்கரமே யன்றிச் சங்கினை அளித்த வரலாறு உளதேனும் கொள்க.
குறிப்பு: இத்திருப்பதிகத்துள், இதனை அடுத்த திருத்தாண்டகங்கள் கிடைத்தில; இறுதித் திருத்தாண்டகமே கிடைத்துளது.

பண் :

பாடல் எண் : 8

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 10

கலையாரு நூலங்க மாயி னான்காண்
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
தகர்ந்துவிழ வொருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கலைகள் எல்லாம் பொருந்திய வேதநூலும் அங்கங்களும் ஆனவனும், கலைகளிற் பொருந்திய கருத்துக்களாய் உள்ளவனும், தீர்த்த மாயும், மலையாயும், அலைகள் மடங்கி வீழ் கடல்கள் ஏழும் சூழ்ந்து நின்ற நிலவுலகமாயும், விண்ணாயும், நின்றவனும், சிறந்த கயிலாய மலையை எடுத்த பண்புகெட்ட இராவணன் வலியிழந்து விடுமாறு ஒரு விரலால் முடித்தவனும், மலையில் தோன்றி வளர்ந்த மட மகளாம் பார்வதியைத் தன் கூறாகக் கொண்டு ஆண்டவனும் ஆவான்.

குறிப்புரை :

கலை ஆரும் நூல் - கற்கப்படும் பொருள்கள் நிறைந்த நூல்; எனவே, `உறுதிப் பொருள்களை உணர்த்தும் நூல்கள்` என்ற வாறாயிற்று. அங்கம் - கருவி நூல், கலை பயிலும். கலைகளிற் பொருந்திய. கருத்தன் - கருத்துக்களாய் உள்ளவன்; இனி, `கலைகளில் சொல்லப்படும் தலைவன்` என்றலுமாம், திருத்தம் - தீர்த்தம். தலையாய மலை, கயிலாயம். தகவு - பண்பு. தகர்ந்து - வலியழிந்து. சாதித்து - முடித்து. `பின்பு ஆண்டருளிய` என்க. சிலை - மலை `மலைமகள்` என்னும் பாடத்திற்கு சிலை - கல். என்க.
சிற்பி