திருக்கயிலாயம்


பண் :

பாடல் எண் : 1

பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

மேம்பட்ட பாமாலை சூடியவனே ! உன்தன்மை இன்னது என்று பிறரால் அறியப்படாதவனே ! பிறையை முடியில் சூடியவனே ! ஊமத்த மாலையை அணிந்தவனே ! பஞ்ச கவ்விய அபிடேகத்தை விரும்புபவனே ! பகைவருடைய முப்புரமும் எரியுமாறு நகைத்தவனே ! யானையின் தோலை உரித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` பாட்டான தொடை ` என்றது உருவகம் . ` நல்ல தொடை ` என்றதனால் , மலர் முதலியவற்றால் செய்யும் வழிபாட்டினும் , பாட்டாற் பரவுதலே இறைவற்குப் பேருவகை செய்யும் என்பது பெறப்பட்டது ; ` பெருகிய சிறப்பின் மிக்க - அற்சனை பாட்டே யாகும் ` ( தி .12 பெரிய புரா . தடுத்தாட் . 70) என , இறைவன் தானே அருளிச் செய்தமை கூறப்பட்டது காண்க . இதுபற்றியே , ` பன்மாலைத் திரளிருக்கப்பாமாலைக்கே பட்சம் பரமற்கு ` என்றருளினார் , தாயுமான அடிகள் ( பன்மாலை .1) பரிசு - உண்மை நிலை . சூட்டு - கண்ணி . ` தூமாலை ` யாவது கொன்றை மாலை என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது ; ` அதனோடு மத்தம் அணிந்தாய் ` என்க . மத்தம் - ஊமத்தை . ஆட்டு - ஆட்டப்படும் பொருள் . ` ஆட்டாக ` என ஆக்கம் வருவித்துரைக்க . ஆனது - பசுவினது . ` ஆட்டான அஞ்சும் ` எனவும் , பாடம் ஓதுவர் . அடங்கார் - பகைவர் ; ` அடங்காதார் என்றும் அடங்கார் ` ( நாலடி - 116) என்பதிற்போல , ` அடங்கார் , அறிவிலார் ` என்றலுமாம் . ` காட்டானை ` என்றது , இனம் பற்றி என்க .

பண் :

பாடல் எண் : 2

அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர்மெய் பூசுந் தலைவா போற்றி
எதிரா வுலகம் அமைப்பாய் போற்றி
யென்றும்மீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

வினைகள் நடுங்கச் செய்யாதபடி அவற்றை நீக்குபவனே ! கல்லால மர நிழற்கீழ் அமர்ந்தவனே ! திறமை உடையவனே ! சிறந்த குழை என்னும் காதணியை அணிந்தவனே ! சாம்பலை உடலில் பூசும் தலைவனே ! தனக்கு ஒப்பில்லாத முத்தி உலகை அமைத்து அதனை அடையும் அடியவருக்கு என்றும் பிறப்பிற்குத் திரும்பி வாராத அருளைச் செய்பவனே ! ஒளி வீசும் சூரியன் முதலிய ஒளிகளுக்குப் பற்றுக் கோடாக இருப்பவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` அதிராமை , மீளாமை ` என்னும் வினையெச்ச மறைகளின் ஈறுகள் கெட்டன . ` மீளா அருள் ` என்பதற்கு , மீளாமைக்கு ஏதுவான அருள் என்று உரைப்பினும் அமையும் . அதிர்த்தல் - நடுங்கச் செய்தல் . சதுரா - திறனுடையவனே . சதுரக்குழை - சிறந்து விளங்குங் குழை . எதிரா - இணையில்லாத . இணையில்லாத உலகமாவது பரமுத்திநிலை ; அஃது உணர்த்த வாராமையின் , உலகமாக அருளிச் செய்தார் ; ` எதிரா உலகம் ` என்றது , அப்பொருளதாதலை , ` என்றும் மீளா அருள் செய்வாய் ` எனப் பின்னர் அருளிச் செய்த குறிப்பானும் உணர்க . ` அமைப்பாய் ` என்றது , ` வழங்குவாய் ` என்றவாறு . ` கதிரார் கதிர் ` என்பதில் பின்னுள்ள கதிர் , ` ஞாயிறு ` என்னும் பொருட்டாய் , வாளா பெயராய் நின்றது . ` கண் ` என்றது , ` கண்போலச் சிறந்தவன் ` என்னும் பொருளதாய் , இன்றியமையாமை உணர்த்தி , ஞாயிற்றின் ஒளிக்கும் முதல் ஒளியாய் நிற்றலை விளக்கிற்று .

பண் :

பாடல் எண் : 3

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாய வண்ண முடையாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

செம்மை கருமை வெண்ணிறம் இவற்றை உடையவனே ! நீங்காத செல்வம் உடையவனே ! வியக்கத்தக்கவனே ! பெரிய பொருள்களும் சிறிய பொருள்களும் ஆகியவனே ! ஆகாயத்தின் தன்மை உடையவனே ! தீயோருக்கு வெப்பமும் அடியார்க்குக் குளிர்ச்சியும் அண்மையுமாய் உள்ளவனே ! ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் அருட் சக்தியை உடையவனே ! அனல் ஏந்திய அழகனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` செம்மை , கருமை , வெண்மை ` என்னும் மூன்றுமே முதல் நிறங்களாதல் பற்றியும் அவை முறையே இராசத தாமத சாத்துவிக குணங்களைக் குறிக்கும் குறிப்புக்களாதல் பற்றியும் , ` எல்லாப் பொருளுமாயினவன் ` என்பார் , அவற்றை வகுத்தோதி யருளினார் . செல்லாத - நீங்காத , நீங்காத செல்வமாவன தன்வயத்தனாதல் முதலிய குணங்கள் . ஐ - வியப்பு ; தலைமையுமாம் . வண்ணம் - தன்மை . ஆகாயத்தின் தன்மையாவது , அருவாதலும் , எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கி நிற்றலுமாம் . இவ்வாறாதல் பற்றியே இறைவனது குணத்தினை , ` சிதாகாசம் , அருள்வெளி ` என்பன போன்ற சொற்களாற் குறிப்பர் . இப்பெற்றி நோக்கியே , ` விசும்பு மெய்யாக ` ( நற்றிணை - கடவுள் வாழ்த்து ). என , இறைவற்கு ஆகாயத்தை உடம்பாகக் கூறினார் , சான்றோர் எனத் தைத்திரீய உப நிடதமும் கூறும் . வெய்யாய் - வெம்மை உடையவனே . தணியாய் - தண்மை யுடையவனே . அண்மை . ` அணிமை ` எனப் படுதல் போல , தண்மை . ` தணிமை ` எனப்பட்டது ; ` வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா ` என , ஆளுடைய அடிகளும் அருளினார் . ( தி .8 திருவா . சிவபு .36) அணியாய் - அண்மையில் உள்ளவனே . இங்ஙனம் அருளியவாற்றால் அணிமையின் மறுதலைபற்றி ` சேயாய் ` என்பதுங் கொள்ளப்படும் . ` செய்யாய் கரியாய் ` என்றது முதலிய பலவற்றால் , ஒன்றொடொன்று ஓவ்வாப் பொருள்கள் பலவும் தான் ஒருவனேயாய் நிற்கும் அதிசயநிலை அருளிச் செய்யப்பட்டது ; ` செல்லாத செல்வம் , வேளாத வேள்வி ` என்றருளியனவும் அன்ன , வேளாத வேள்வி - ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் வேள்வி ; என்றது அருட்சத்தியை . அது , சிவபிரானைப் பயன்கருதியும் கருதாதும் வழிபடுவோர்க்குத் தூய்தான உலகப் பயனையும் , வீடுபேற்றையும் தரும் என்பதனை , தூய்தல்லாத உலகப் பயனைத்தரும் வேள்விகளிலே மனஞ்செல் வார்க்கு அறிவுறுத்தற்பொருட்டு , வேள்வியாக அருளிச் செய்தார் . தூய்தன்மை மயக்கஞ் செய்தலும் , தூய்மை அது செய்யாமையுமாம் . இன்னும் தேவர்க்குக் கொடுக்கும் அவியுணவுகளை வேள்வித் தீ வழியாகக் கொடுத்தல் போல , சிவபிரானுக்கு நிவேதிக்கும் நிவேதனங்கள் அனைத்தும் அவனது அருட்சத்தி வழியாகவே நிவேதிக்கப் படுதலின் , அதனை அவ்வாறருளிச் செய்தற்கு இயைபுண்மை யறிக . இது பற்றியே , சிவபிரானுக்கு வேள்வித் தீ வழியாகக் கொடுக்கு மிடத்தும் சிவாக்கினி வழியாகவே கொடுத்தல் சிவநெறி முறைமை யாயிற்று , இதனானே , சைவவேள்வி , பூதாக்கினியையே வளர்க்கும் வைதிக வேள்வி போலாது , சிவாக்கினியை வளர்க்கும் வேள்வியாத லறிக . சிவாக்கினியைப் பிறப்பிக்கும் முறை , அதனை வளர்க்கும் முறை முதலியவெல்லாம் , பிரமாணங்கள் முதலியவற்றினன்றிச் சைவாகமங்களிலே அறியப்படுவனவாம் . ` கையின்கண் ` என உருபு விரிக்க . ` ஆர் ` இரண்டனுள் முன்னது மிகுதியையும் , பின்னது பொருந்துதலையும் குறித்தன . ` ஆரழல் ` என்பதே பாடம் என்றலுமாம் . விடங்கன் - வீரம் உடையவன் .

பண் :

பாடல் எண் : 4

ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

உலகை ஆள்பவனே ! அடியார்களுக்கு இன்பம் அளிப்பவனே ! சிறிதும் வஞ்சனை இல்லாதவனே ! கடல் விடம் உண்டவனே ! மேம்பட்ட மாண்புகளை உடையவனே ! என் உள்ளத்துள் நிலைபெற்றிருப்பவனே ! தம்முயற்சியால் யாரும் காண்டற்கு அரியவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` அமுதெலாம் ` எனப் பன்மை கூறியவதனால் , ` அமுது ` என்றதற்கு , ` இன்பம் ` எனப் பொருளுரைத்துக் கொள்க . சூட்சி - வஞ்சனை . ` சூழ்ச்சி ` என்பது , மருவிநின்றது . மாட்சி - பெருமை , காட்சி - அறிதல் , சிவபிரானது புகழ்ப்பாடல்களாவன யாவற்றுள்ளும் அவனது எண்குணங்கள் ஏற்றபெற்றியாற் பெறப்படுமாயினும் , இத்திருத்தாண்டகத்துள் , அவனது எண்குணங்களும் பெறப்படும் . அஃதாமாறு காட்டுதும் : ஆட்சியால் தன்வயமும் , அமுதினால் வரம்பிலின்பமும் , சூட்சி சிறிதுமின்மையால் இயல்பாகவே பாசங்களின் நீங்குதலும் , நஞ்சமுண்டமையால் பேரருளும் , பெரிதாய மாட்சியால் முடிவிலாற்றலும் , அடியவரது சிந்தையினின்று அறிவித்தலால் இயற்கை யுணர்வும் , காட்சிக் கருமையால் தூய உடம்பும் , கயிலைமலையிருக்கையால் முற்றுணர்வும் பெறப்படுதலை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க . மலைமேல் நின்றார்க்கு எல்லாப் பொருளும் தோன்றுதலால் , கயிலைமலை யிருக்கையால் முற்றுணர்வுடைமை பெறப்படும் என்க . எனவே , இஃதோர் அரும்பெறற்றிருப்பாடலாத லுணர்க .

பண் :

பாடல் எண் : 5

முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
யேழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

தவக்கோலம் பூண்ட முதல்வனே ! மூப்படையாத திருமேனியனே ! எனக்குத் தாயும் தந்தையும் ஆயவனே ! ஏழிசையை விரும்புபவனே ! உன்னோடு கூடிய பார்வதியின் துணைவனே ! மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களும் ஆனவனே ! என்றும் அழிவில்லாத கங்கைக்குத் தலைவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` முனியாய் ` என்பது , ` முன்னியாய் ` என விரித்தல் பெற்றது ; பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை - முனியாய் ( தி .5. ப .96. பா .3.) எனத் திருக்குறுந்தொகையில் அருளிச் செய்தமை காண்க . ` தவக்கோலம் உடையவனே ` என்பது பொருள் . இனி , இயல்பாகவே கொண்டு , ` எல்லாவற்றையும் நினைப்பினாற் செய்பவனே ` என்று உரைத்தலுமாம் . ` என் ` எனவும் , ` யாய் ` எனவும் வந்த சொற்கள் ` என்னியாய் ` என இகரம் பெற்றுப் புணர்ந்தன . யாய் - தாய் . ` என் ` என்பது ` எந்தை பிரான் ` என்பனவற்றோடும் இயையும் . ` யாய் , எந்தை ` என்பனவும் விளிப்பெயர்கள் என்க . ` இசையே ` என , பிறவற்றை உகவாதான் போலப் பிரிநிலையேகாரம் புணர்த்தோதினார் , அதன்கண் உள்ள விருப்பமிகுதி புலப்படுத்தற் பொருட்டு ; ` பூம்புகலி - வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே ` ( தி .2. ப .54. பா .8.) என்றதுபோல . இசையில் இறைவற்கு உள்ள விருப்ப மிகுதியை , ` அளப்பில கீதஞ்சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே ` என்றும் சுவாமிகள் உணர்த்தியருளினார்கள் . ( தி .4. ப .77. பா .3.) தந்திரம் - ஆகமம் . ` கன்னி ` என்றது தென்றிசைக் குமரித் தீர்த்தத்தை ; ஆர் கங்கை - நிறைந்த கங்கைநதி . ` இவ்விரண்டிற்கும் ஒருவனே தலைவன் ` என்றருளியவாறு . ` கங்கை ` என்பதற்கு ` கங்காதேவி ` எனப் பொருளுரைப்பின் , ` கங்கையார் ` என்னும் பன்மையோடியையாமையும் , தகரம் மிகுதல் பொருந்தாமையும் அறிக .

பண் :

பாடல் எண் : 6

உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னும் ஊர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
யேசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே யடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

எல்லா உலகிற்கும் உரிமை உடையவனே ! உன் கருத்தறிந்து செயற்படும் காளையை வாகனமாக உடையவனே ! எரி போன்ற அருள் விளக்கே ! பிறர் இகழுமாறு மண்டை யோட்டினை ஏந்தினவனே ! தேவர்கள் அணுகுவதற்கு அரியவனே ! அறிவு வடிவானவனே ! நுண்ணியனே ! ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

` உரியாய் ` என்றது ` உடையவனே ` என்றவாறு ; ` உலகினுக்கு ` என , உயர்திணைக் கிழமைக்கண் அது உருபுவாராது குவ்வுருபு வந்தது . விடையூர்தியாவது உயிரேயாதலின் , ` உணர்வென்னும் ஊர்வதுடையாய் ` என்றருளினார் , அறமேயன்றி உயிரும் ஊர்தியாமென்பதுணர்க . எரியாய - எரிபோன்ற . தெய்வச்சுடர் - அருள் விளக்கு . ஏசும் - இகழப்படுகின்ற . முண்டி - தசை நீங்கிய தலை , ` அதனைக் கையில் உடையவன் ` என்க . ` போற்றி ` என்பதனை , ` அறிவே ` என்பதனோடுங் கூட்டுக . அறிவு - அறிவே வடிவம் ஆனவன் . அடக்கம் - நுணுகியிருத்தல் ; ` நறுமல ரெழுதரு நாற்றம் போல் - பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் ` ( தி .8 திருவா . அதிசயப் - 9.) என்பதுங் காண்க . கரியான் - திருமால் . ஆழி - சக்கரம் .

பண் :

பாடல் எண் : 7

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
யேறறிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

உயிர்களுடைய எண்ணங்களுக்கு மேற்பட்ட எண்ணங்களை உடையவனே ! உயிர்களைக் கரையேற்றும் பொருட்டு மேம்பட்ட குணங்களை உடையவனே ! பண்ணிடத்திலே விருப்பம் கொண்டு பண்ணோடு யாழினையும் வீணையையும் இசைக்கின்றவனே ! வானத்தையும் கடந்து ஓங்கியிருப்பவனே ! மேலோருக் கெல்லாம் மேலோனே ! இரு கண்களுக்கு மேலே மூன்றாவதான நெற்றிக் கண்ணை உடையவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` எண் ` என்றது , உயிர்களது எண்ணத்தினை . ` மேல் ` என்பது ஏழனுருபு ; ` உம்மை ` நுணுக்கத்தினது மிகுதியுணர்த்தலின் , சிறப்பு . எண்ணம் - எண்ணுதல் . அறிய - பலரும் பார்க்க . ` அரிய ` என்பது பிழைபட்ட பாடம் . குணம் - இயல்பு . பாவித்து - நினைத்து ; விருப்பங் கொண்டு . இதனை வலியுறுத்தற்கு . யாழும் வீணையும் பயிறலை அருளிச் செய்தார் . ` விண்ணின் மேலும் , அதற்கு மேலும் ` என்க . ` விண் ` என்றது , பிருதிவி அண்டத்தை ` மேலார் கண் மேலார் கண் மேலாய் ` என்றதனை மேலே காண்க . ` கண்மேலுங் கண்ணொன் றுடையாய் ` என்பதனை , ` கண்மேற் கண்ணும் சடைமேற் பிறையும் உடையார் ` ( தி .1. ப .67. பா .2.) என்பதனோடு வைத்துக் காண்க .

பண் :

பாடல் எண் : 8

முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

சடையில் பிறை சூடி , திருநீறு பூசிய மூர்த்தியே ! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே ! தம் முயற்சியால் அறிய முற்படுபவர் காணமுடியாதபடி இருப்பவனே ! அடியவர்களின் அடிமைத் தன்மையின் உண்மையை அறிபவனே ! அவர்களைத் தேவருலகை ஆளவைப்பவனே ! காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` முடியாக ஆர்ந்த சடை ` என்க . முழுநீறு - நீற்றின் இலக்கணம் சிதையாது நிரம்பிய நீறு ; மேனியின் முழுமை நீற்றின்மேல் ஏற்றப்பட்டது எனினுமாம் . சண்ணித்தல் - பூசுதல் . சோதித்தார் , அயனும் மாலும் . ` அறிவாய் ` என்றது , ` பிறரறியாதொழியினும் அறிந்து அருள் செய்பவனே ` என்றதாம் ; இதனை நாயன்மாரது வரலாறுகளிற் காண்க . ` அடியார் ` என முன்னே அருளினமையின் , வாளா , ` அமரர் பதியாள வைத்தாய் ` என்றார் . கடியார் - கொடியவர் .

பண் :

பாடல் எண் : 9

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

அடியார்கள் வணக்கம் சொல்லித் திருவடிகளை வழிபடுமாறு இருப்பவனே ! புண்ணியனே ! முயற்சியால் அணுக அரியவனே ! இடி ஒலிக்கும் வான்மேல் இருப்பவனே ! எண்ணிறந்த பெயர்களை உடையவனே ! நான்கு திசைகளுக்கும் ஒலி வழங்கும் தலைவனே ! பிரமனுக்கும் திருமாலுக்கும் உள்ளவாறு உணர்தற்கு அரியவனே ! காற்று இயங்கும் திசைகளுக்கெல்லாம் காரணனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` போற்றி இசைத்து ` என்பது , ` போற்றிசைத்து ` என நின்றது ; இதனுள் , ` போற்றி ` என்னுஞ்சொல் தன்னை உணர நின்றது . இசைத்து - சொல்லி ; இதனானே , ` அவ்வாறு பரவுதல் செய்தற்பாற்று ` என்பது பெறப்பட்டது . ` ஏறு ` என்பது , ` ஏற்று ` என விரித்தலாயிற்று ; ` இடி ` என்பது பொருள் . ` ஏற்றிசைக்கும் வான் ` என்றது , ` மேகம் ` என்றவாறு . அதன்மேல் இருத்தலாவது , அதற்குத் தலைவனாய் நின்று அதனை நடத்துதல் . இனி , இது , நாயனாருக்குக் கயிலை மலை வழியில் இறைவன் விண்ணிலே மறைந்தருள் புரிந்தமையைக் குறித் தருளியதூஉமாம் . ( தி .12 பெ . பு . திருநாவு . 368) எண் - எண்ணப்படுகின்ற . ` ஆயிரத்தெட்டும் நூற்றெட்டுமாகச் சொல்லப்படும் பெயர்களை உடையவன் ` எனவும் பொருள் உரைப்பர் ; அஃது அத்துணைப் பெயர்களால் அருச்சிக்கும் மரபு பற்றியதாம் . போற்றித் திருப்பாடல்கள் பலவற்றின் இறுதிக்கண் இவ்வாறருளிச் செய்தமை , அவைகளை முடித்தற் குறிப்புணர்த்தும் . விளக்குப் போல எல்லாவற்றையும் புலப்படுத்துதலின் , ` விளக்காய நாதா ` என்றருளினார் . காற்று இசைக்கும் - காற்று ஒலிக்கின்ற என்றது , காற்றில்லாத திசைக்கெல்லாம் ` என்றருளிச் செய்தார் . ` வித்து ` என்றது ` காரணன் ` ( தலைவன் ) என்னும் பொருளது . இத்திருப்பதிகத்திற் கிடைத்த திருப்பாடல்கள் இவ்வளவே . இக்கயிலாயப் போற்றித் திருப்பதிகங்களுள் பலவிடத்தும் , இறைவன் தமது சிந்தனையின்கண் நின்றமையை வலியுறுத்தருளிச் செய்தது , கயிலைபோல , உடம்பிற் கயிலை உள்ளம் என்பது உணர்த்துதற் பொருட்டென்க . * * * * * * * * * 10 .
சிற்பி