திருநெய்த்தானம்


பண் :

பாடல் எண் : 1

வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூ ரமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

திருநெய்த்தானத்தில் உகந்தருளி உறையும் பெருமானே ! செல்வர்க்கு உரிய கூறுபாடுகள் யாவும் உடைய நீ , உயர்ந்த கயிலை மலையை விரும்பி உறைவாய் . உயர்வற உயர்நலம் யாவும் உடையாய் , வெண்காடு , பாசூர் இவற்றை உறைவிடமாக விரும்புகிறாய் . பகைகளை எல்லாம் போக்கி எமை ஆண்டாய் . எண்திசையிலுள்ளாரும் உன்னை வழிபடுமாறு ஆங்கெல்லாம் செல்வாய் என்று உன் பண்பு நலன்களை நாங்கள் எடுத்துத் துதிக்கிறோம் .

குறிப்புரை :

வகையெலாம் - உடையவர்க்கு ( செல்வர்க்கு ) உரிய வகைகள் பலவும் . உம்மைகள் எச்சப்பொருளன ; சிறப்புமாம் . வான் - உயர்ச்சி . மிகையெலாம் மிக்காய் - மிகுந்து நிற்கும் வகைகள் எல்லாவற்றாலும் மிகுந்து நின்றாய் . ` வகையெலாம் உடையாய் , மிகையெலாம் மிக்காய் ` என்பவற்றால் , இறைவனைப் புகழும் புகழ்கள் யாவும் பொருள்சேர் புகழாதல் தெளிவித்தவாறு . ` முற்று நீ புகழ்ந்துமுன் உரைப்பதென்மு கம்மனே ` ( தி .3. ப .52. பா .3.) என்றருளிய ஆளுடைய பிள்ளையார் திருமொழியுங் காண்க . ` முன்னே யுரைத்தால் முகமனே யொக்கும் ` ( தி .4. ப .112. பா .3.) என்றார் சுவாமிகளும் . பகை , அகப்பகை ; அவை நோய் முதலிய உடற்பகைகளும் , அவா , வெகுளி முதலிய உளப்பகைகளுமாம் . பாசூர் , தொண்டை நாட்டுத் தலம் . திகை - திசை . திசையெலாம் தொழ ஆங்கெல்லாம் செல்வாய் , என உரைக்க ; எவ்வுலகமும் உன்னுடையனவே ` என்றவாறு . ` செய்வாய் ` எனவும் பாடம் ஓதுப . ஐந்தாஞ் சீரில் வரற்பால தாய மோனை , மேலைத் திருப்பதிகத்திற்போல இத் திருப்பதிகத்தும் எல்லாத் திருப்பாடலிலும் ஈற்றடிக்கண் நீக்கப்பட்டது .

பண் :

பாடல் எண் : 2

ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
கோடிகா மேய குழகா என்றும்
பார்த்தற் கருள் செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! உனக்கு அடிமையாகப் பிணிக்கப்பட்ட அடியேனிடம் அன்பு உடையாய் , பழைய கயிலாயம் , கோடிகா பழையனூர் இவற்றில் உறைகின்றாய் . நடனக்கலையின் நுட்பங்களெல்லாம் அமையக் கூத்தாடுகின்றாய் . அருச்சுனனுக்கு அருள் செய்தாய் . தூயவனும் சிவலோகநாதனுமாக உள்ளாய் என்று அடியோங்கள் நின்னை துதிக்கின்றோம் .

குறிப்புரை :

ஆர்த்த - ஆர்க்கப்பட்ட ( ஆளாக அணைத்துக் கொள்ளப்பட்ட .) ` எனக்கன்பன் நீயே ` என்றது , என்னிடத்து அன்புடையவன் நீயன்றிப் பிறரில்லை யென்றபடி . ஆதிக்கயிலாயம் - எல்லாவற்றிற்கும் முதலாய கயிலைமலை . கூர்த்த நடம் - நடனக் கலையின் நுட்பங்கள் அமைந்த நடனம் . கோடிகா , சோழ நாட்டுத் தலம் . பழையனூர் , தொண்டைநாட்டில் திருவாலங்காட்டினை அடுத்துள்ளது . ` தீர்த்தன் , சிவலோகன் ` செவ்வெண் .

பண் :

பாடல் எண் : 3

அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்
காளத்திக் கற்பகமும் நீயே யென்றும்
சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந்
சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும்
செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ இரவாகவும் பகலாகவும் உள்ளாய் . பழைய கயிலாயம் , காளத்தி , சோற்றுத்துறை இவற்றை விரும்பி உறைவாய் . கல்லாலின் கீழ் அமர்ந்தவனும் , சொல்லும் பொருளுமாய் இருப்பவனும் , நீயே . உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு உதவும் செல்வமாகவும் நீ உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

அல் - இரவு . சோற்றுத்துறை , சோழநாட்டுத் தலம் . செல்வாய்த் திரு - யாவும் நடத்தற்கு வழியாகிய செல்வம் . வறுமை வாழ்க்கையை , ` செல்லாத் தீவாழ்க்கை ` ( குறள் - 330) என்றது காண்க .

பண் :

பாடல் எண் : 4

மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்
வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்
பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்
பூத கணநாதன் நீயே யென்றும்
என்னா விரதத்தாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ வெள்ளிய கயிலை மலை , ஏகம்பம் தென்னூர் இவற்றில் விரும்பி உறைகின்றாய் . மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதிபாகனாய் , பொன்னை ஒத்து ஒளி வீசும் சடை முடியனாய்ப் பூதகணத் தலைவனாய் எம் நாவினில் இனிக்கின்ற சுவைப் பொருளாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

` வெண்கயிலை மேவினாய் ` என்பதன்றி , ` வெண்காடு மேவினாய் ` என்றும் பாடம் ஓதுவர் ; இத் திருப்பதிகத் திருப்பாடல்கள் தோறும் முதலடிக்கண் கயிலையை ஓதியருளுதலின் அது பாடம் அன்றென்க . என் நா இரதத்தாய் - எனது நாவில் இனிக்கின்ற சுவையாயினாய் . ` ஏகம்பத்து என் ஈசன் ` என எடுத்தோதியருளிய இதனாலும் , திருவேகம்பப் பெருமானே சுவாமிகளுக்கு வழிபாட்டுப் பெருமானாய் இருந்தமை பெறுதும் . தென்னூர் , வைப்புத்தலம் ` தென்னூராகிய பதி ` என்க .

பண் :

பாடல் எண் : 5

முந்தி யிருந்தாயும் நீயே யென்றும்
முன்கயிலை மேவினாய் நீயே யென்றும்
நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்
நடமாடி நள்ளாறன் நீயே யென்றும்
பந்திப் பரியாயும் நீயே யென்றும்
பைஞ்ஞீலீ மேவினாய் நீயே யென்றும்
சிந்திப் பரியாயும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! கயிலை , நள்ளாறு பைஞ்ஞீலி என்ற தலங்களைக் கூத்தனாய நீ விரும்பி உறைகின்றாய் . எல்லாப் பொருளுக்கும் முற்பட்டவனாய் நந்திதேவருக்கு அருள் செய்தவனாய் , பாசத்தால் பிணிக்க ஒண்ணாதவனாய்ச் சிந்தையால் அணுக ஒண்ணாதவனாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

முந்தி - ( எல்லாவற்றுக்கும் ) முற்பட்டு . ` முன் கயிலை ` என்றதும் , ` ஆதிக் கயிலை ` என்றதனோடொத்தது . னகரம் திரியாமை செய்யுள் விகாரம் என்க . ` நினைக்கப்படுகின்ற கயிலை ` என வினைத்தொகையாக உரைத்தலுமாம் . நந்தி - அதிகார நந்தி ; இவர்க்கு அருள் செய்தமை திருவையாற்றுப் புராணம் முதலியவற்றுட் காண்க . ` நடம் ஆடி ` என்பது பெயர் . பந்திப்பு அரியாய் - பாசத்தாற் பிணிக்க ஒண்ணாதவனே . நள்ளாறு , பைஞ்ஞீலி இவை சோழநாட்டுத் தலங்கள் . சிந்தையால் அணுகலாகாமையால் , ` சிந்திப்பரியாய் ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 6

தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ மேம்பட்ட கயிலாயனாகவும் ஆக்கூரில் தான்தோன்றி ஈசனாகவும் புள்ளிருக்குவேளூர் , தெற்கே உள்ள மாகோணம் இவற்றில் உறைபவனாகவும் உள்ளாய் . தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும் எலும்பு மாலை அணிபவனாகவும் உயிர்கள் புகுந்து வாழும் ஏழுலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

` தக்காராய அடியார்கட்குத் துணை நீயே ` என்க . துணை என்பது சொல்லெச்சம் . தலை - தலைமை . ஆர் - பொருந்திய . அக்கு ஆரம் - எலும்பு மாலை . ` புக்கு ` என்னும் முதனிலை திரிந்த தொழிற் பெயர் ஆகுபெயராய் , உயிர்கள் புகுந்து வாழும் இடத்தை உணர்த்திற்று . புள்ளிருக்குவேளூர் , வைத்தீசுரன்கோயில் . இதனைச் சார்ந்த பகுதியில் உள்ள தலமே ஆக்கூர் . தெற்கு , ` தெக்கு ` என நின்றது , ஆரும் - பொருந்திய . ` தெக்காரமாகோணம் ` என்பதும் பாடம் . மாகோணம் , வைப்புத் தலம் .

பண் :

பாடல் எண் : 7

புகழும் பெருமையாய் நீயே யென்றும்
பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்
இகழுந் தலையேந்தி நீயே யென்றும்
இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும்
அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்
ஆலவாய் மேவினாய் நீயே யென்றும்
திகழும் மதிசூடி நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! அழகிய கயிலை , இராமேச்சுரம் ஆலவாய் இவற்றில் உகந்து உறைபவனே ! எல்லோரும் புகழும் பெருமையை உடையையாய் , யாவரும் இகழும் மண்டை யோட்டை உண்கலமாக ஏந்தியையாய் , ஆலவாயில் அகழும் மதிலும் உடையையாய் , விளங்கும் பிறை சூடியாய் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

புகழும் பெருமையாய் - புகழ்ந்து சொல்லப்படும் பெருமையையெல்லாம் முற்ற உடையாய் ; என்றது , ` மெய்யான புகழை உடையாய் ` என்றவாறு . ` மதில் ` என்பதில் , எண்ணும்மை தொக்கது ; இனி , ` அகலும் என்பது , எதுகை நோக்கித் திரிந்தது ` என்றலுமாம் . அகழ் , மதில் இவை ஆலவாயைச் சூழ்ந்துள்ளவை என்க . இவற்றைச் சிறந்தெடுத்தோதியது . அவையே ` ஆலவாய் ` எனப் பெயர் பெற்று விளங்கும் சிறப்புப் பற்றி . அவை அப்பெயர்பெற்ற காரணம் திரு விளையாடற் புராணத்தாலும் ஒருவாறறியப்படும் .

பண் :

பாடல் எண் : 8

வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்
வானக் கயிலாயன் நீயே யென்றும்
கான நடமாடி நீயே யென்றுங்
கடவூரில் வீரட்டன் நீயே யென்றும்
ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்
ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும்
தேனாய் அமுதானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ வானளாவிய கயிலாயனாய்க் கடவூர் வீரட்டனாய் , ஒற்றியூரிலும் ஆரூரிலும் உறைபவனாய்த் தேனும் அமுதும் போல இனியனாய் உள்ளாய் . தேவர்களுக்கும் முற்பட்டவனாய் , சுடுகாட்டில் கூத்தாடுபவனாய்த் தக்க யாகத்தில் ஈடுபட்ட தேவர்களின் தலைகளைப் போக்கினாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

மூத்து என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது ; ` மூத்தாய் இளையாய் ` என்பது பொருள் ; இளையையாவாய் என்க ; வானவரது தோற்றத்திற்கு முன் உள்ளமையின் , ` மூத்தாய் ` என்றும் , ஒடுக்கத்திற்குப் பின் உள்ளமையின் ` இளையாய் ` என்றும் அருளிச் செய்தார் . ` வான் கயிலாயம் ` என்பது அகரம் பெற்று நின்றது . ஊனார் - மேலிடத்துள்ளார் ; தேவர் . அவர்தம் தலையைத் தடிந்தது தக்கன் வேள்வியில் . இனி , ` முடிய ( அழிய ) அறுத்தாய் ( அழித்தாய் )` என்றலுமாம் . ` ஒற்றியூர் ஆரூர் `, உம்மைத்தொகையாய் நின்று முதனிலையாயிற்று . இனிமை பயத்தலின் , ` தேனாய் ` என்றும் , இனிமையோடு இறவாது வைத்தலின் , ` அமுதானாய் ` என்றும் அருளிச்செய்தார் . ` தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் ` ( தி .8 திருவாசகம் திருவேசறவு - 10.) என்றது ஈண்டு நோக்கத் தக்கது .

பண் :

பாடல் எண் : 9

தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ எங்கள் உள்ளத்திலும் மேம்பட்ட கயிலாயம் , ஏகம்பம் , மூவலூர் , தேனூர் என்ற திருத்தலங்களிலும் உறைகின்றாய் . தந்தைதாய் இல்லாத பிறவாயாக்கைப் பெரியோனாய் , யாவருக்கும் முற்பட்ட முக்கண்ணனாய் , எங்களுக்குத் தாய் தந்தையாகவும் தலைவனாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

` தந்தை தாய் இல்லாதான் ` என்பது எஞ்ஞான்றும் பிறத்தல் இல்லாமை குறிப்பது . ` தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி ` ( தி .8 திருவா . திருச்சாழல் 3.) ` தந்தையாரொடு தாயிலர் ` ( தி .3. ப .54. பா .3.) ` தமக்குத் தந்தையர் தாயிலர் என்பது .... எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம் ` ( தி .12 பெ . பு . திருஞான - 829.) ` எம் தாய் ` எனப் பிரிக்க . ` எந்தை ` எனப் பாடம் ஓதுதலுமாம் . முந்திய - ( எல்லாவற்றுக்கும் ) முற்பட்ட . ` முக்கணாய் ` என்பது , ` சிவபிரானே ` என்னும் பொருளதாய் நின்றது . மூவலூர் , தேனூர் இவை வைப்புத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 10

மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்
வீழி மிழலையாய் நீயே யென்றும்
அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ உயரிய கயிலை , வீழிமிழலை இவற்றில் உறைபவன் . தன்விமானத்தை நிறுத்திக் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து , உலகப் பற்றைத் துறந்த அடியார்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி , அறவடிவினனாய் , வானோர்க்கு அமுதம் வழங்கி , ஒருவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு , பொறிவாயில் ஐந்து அவித்துள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

மறித்தான் - தனது ஊர்தியை நிறுத்திப் பெயர்த்தவன் ; இராவணன் . ` கயிலை ` எனப் பின்னர் வருகின்றமையின் , வாளா , ` மறித்தான் ` என்றருளினார் . ` மறுத்தான் ` என்பதும் பாடம் . வெறுத்தார் - துறந்தவர் . வீழிமிழலை , சோழ நாட்டுத் தலம் . அறத்தாய் - அறவடிவினாய் . ` நஞ்சம் உண்டு அமுது ஈந்தாய் ` என்றும் , ` புலன் ஐந்தும் பொறுத்தாய் ` என்றும் கூட்டுக . பொறுத்தாய் - விரும்பாது கொண்டாய் ; என்றது , ` நுகராது பற்றிநின்றாய் ` என்றதாம் . இத்திருப்பாடலின் ஈற்றடியின் முதலெழுத்து ஏனைய திருப்பாடல்களிற் போல , ` இ , ஈ , எ . ஏ ` என்னும் உயிரொடு கூடிய தகர சகர மெய்களாகாது , வேறாயிற்று .
சிற்பி