திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய் . இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய் . மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய் . இமவான் மருமகனாய் உள்ளாய் . உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய் . எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய் . உலகில் உள்ள ஞாயிறு திங்கள் , கோள்கள் , விண்மீன்கள் முதலிய யாவுமாகியுள்ளாய் .

குறிப்புரை :

` ஒசை , ஒலி ` என்பன , ` சத்தம் , நாதம் ` என்னும் பொருளுடையன . ` வெற்றோசையும் பொருளோசையும் ` என ஒசை இருவகைப்படும் . அவற்றுள் , வெற்றோசையை ` ஒசை ` என்றும் , பொருளோசையை ` ஒலி ` என்றும் அருளிச்செய்தார் . பொருளோசை , எழுத்தும் சொல்லுமாக அறியப்படும் , ` எழுத்து ` என்பதும் , ` சொல் ` என்பதும் உண்மையில் முறையே பொருள் உணர்வாகிய ஆற்றலும் , அவ்வாற்றலின் , கூட்டமுமேயாகும் . ஆயினும் , அவ்வாற்றலை எழுப்புகின்ற அளவுபட்ட ஓசையும் , அவற்றது கூட்டமும் ஆகுபெயரால் , ` எழுத்து ` என்றும் , சொல் என்றும் சொல்லப்படுகின்றன . இதுவே , ` எழுத்துக்களின் தன்மை ` எனப்படுவது . ` இதனை ஆசிரியர் தொல்காப்பியனார் நமக்கு உணர்த்தலாகாமையின் உணர்த்திற்றிலர் ` என்பர் உரையாளர் . எழுத்துக்கள் புணர்ச்சிக் கண் ஓன்று வேறொன்றாதலை , ` மெய்பிறிதாதல் ` எனக் குறியிட்டு . ( தொல் . எழுத்து . 110.) அவ்வாறே பலவிடத்தும் ஆண்டமையின் , பொருளுணர்த்தும் ஆற்றலே உண்மை எழுத்தென்பதும் , ஓசை அதற்கு நிமித்தம் என்பதும் அவ்வாசிரியரது கருத்தாதல் தெளிவு . இனி , அவ்வாற்றலைப் புலப்படுக்கும் ஓசையை , ` மெய்தெரி வளியிசை ` ( பொருளைத் தெரிவிக்கும் காற்றொலி ) என விளக்கினார் ( தொல் . எழுத்து . 103.) அதனால் அவற்றை ` எழுத்து ` என்றும் , அவற்றது கூட்டத்தைச் ` சொல் ` என்றும் கூறுதல் பான்மை வழக்கே என்பதும் , ஆயினும் , எழுத்துக்களது உண்மைத் தன்மை உலகத்தார்க்கு இனிது விளங்காது அவைதாமே எழுத்தும் சொல்லுமாய் நிற்றல் பற்றி செவ்வன் வழக்காகவே ஆளப்படுவது என்பதும் விளங்கும் . யாழின் நரம்புகள் ஒரோர் அளவிற்பட்டு நின்று , கேட்டற்கு இனியவாய் இசையுமாறு எழுப்ப எழுந்து ` இசை ` என்னும் காரணக் குறிபெறும் ஓசைபோல , அளவிற்பட்டுப் பொருளுணர்வு தோன்றுமாறு இசைந்து நிற்கும் ஓசையும் ` இசை ` எனப்படுதலின் ` ` ஓரள பிசைக்கும் குற்றெழுத்தென்ப ` ` ஈரள பிசைக்கும் நெட்டெழுத்தென்ப ` ( தொல் . எழுத்து . 3.4 .) என்றாற் போல எழுத்தையும் , ` மெய்தெரி வளியிசை `, ( தொல் . எழுத்து . 103 ) ` ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே ` ` உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைக்கும் ` ( தொல் . சொல் . 1,4 .) என்றாற்போலச் சொல்லையும் , ` இசை ` யென வழங்குவர் ஆசிரியர் . மெய்தெரி வளியிசை , உயிர்வளியின் ( பிராணவாயுவின் ) இயக்கத்தால் புறத்துப்போந்து உரத்து இசைத்தலும் , அஃது இன்றி , எழுவளி ( உதான வாயு ) அளவில் அகத்து மிடற்றின் கண்ணே நின்று மெல்ல இசைத்தலும் ஆகிய இருநிலையை உடைத்து என்பதும் , அவற்றுள் புறத்திசைக்கும் நிலையே இயற்றமிழ் நூலுள் எழுத்தெனவும் , சொல்லெனவும் எடுத்து வரையறை கூறப்பட்ட தென்பதும் , ஏனை அகத்திசைக்கும் நிலை மெய்ந்நூலுள்ளே ( தத்துவசாத்திரத்துள் ) வரையறுத் துணர்த்தப்படும் என்பதும் தொல்லாசிரியர் துணிபென்பது , ` எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே ` எனவும் , ( தொல் . எழுத்து . 102). ` அஃதிவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே ` ( தொல் . எழுத்து . 103.) எனவும் ஓதியவாற்றான் அறியப்படும் . ` சொல்லை வாக்கு ` என்றலின் , அகத்தெழு வளியிசையை , ` மத்திமை வாக்கு ` எனவும் , புறத்திசைக்கும் வளியிசையை , ` வைகரி வாக்கு ` எனவும் மெய்ந்நூல் கூறும் . இனி ; சொல் , அகத்தெழு வளியொடும்படாது நினைவின் கண்ணே நிற்கும் நிலையும் உண்டு ; அது , ` பைசந்தி வாக்கு ` எனவும் , சொல் இவ்வாறெல்லாம் வெளிப்படாது தன்னியல்பில் நிற்கும் நிலை ` சூக்கும வாக்கு ` எனவும் சொல்லப்படும் . இவற்றுள் சூக்கும வாக்கே ` நாதம் ` எனப்படுவது . இதனையே சிலர் , ` நாதப் பிரமம் ` எனக் கடவுளாகக் கூறுவர் ; அது , சொல்லும் சடமே என்பது உணராதாரது கூற்றேயாமென்க . உணர்வுடையோர் , கூற்றாயின் , உண்மை என்னாது , ` அன்னம் பிரமம் ` ( தைத்ரீயம் ) என்பதுபோல உபசாரம் என்க . இங்ஙனங் கூறியவாற்றால் , ` ஓசை` எனப்பட்டதும் , ` ஒலி ` எனப்பட்டதும் வேறு வேறு என்பது விளங்கிற்று . ஒருவன் - ஒப்பற்ற தவைன் . பொன் , மணி முதலியன போல நறுமணங் கமழும் மலர்களும் உலகப் பொருள்களுட் சிறப்புடையன வாகலான் அவைகளை எடுத்தோதியருளினார் . மலையான் - மலையரசன் . சுவாமிகளுக்கு இறைவன் திருநல்லூரில் திருவடி சூட்டினமையை அவரது புராணத்துட் காண்க . தேச விளக்கு - உலகில் உள்ள ஒளிப்பொருள்கள் ; அவை ஞாயிறு , திங்கள் , தீ முதலியன . செம்பொற்சோதீ - செம்பொன்னினது ` ஒளிபோன்றுள்ளவனே ; சோதி , உவமையாகுபெயர் . ` ஆனாய் ` முதலிய பலவும் வினைப்பெயர்கள் . அவை எழுவாயாய் நின்று நீயே என்னும் பெயர்கொண்டு முடிந்தன ; ஏகாரங்கள் , ` பிறரல்லர் ; நீ ஒருவனே ` எனப் பிரித்து நின்ற பிரிநிலை .

பண் :

பாடல் எண் : 2

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

ஊனக்கண்ணால் காணுதற்கு இயலாத திருமேனியை உடையாய் ! பசி , பிணி முதலியவற்றினால் வருந்தாதபடி அருட்பார்வையால் காப்பவன் . நீ , அடக்க முடியாத என் ஐம்புலன்களையும் அடக்குமாறு செய்தாய் . மன்மதனை நெருப்புக் கண்ணால் வெகுண்டாய் . கட்டுதற்கு அரிய பெரிய பாம்பினை வில் நாணாகக் கட்டினாய் . உன் அடியவன் என்று என் தலையில் உன் திருவடிகளை வைத்தாய் . மற்றவரால் போக்க முடியாத ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை நீக்கினாய் . இவ்வாறு செய்து திருவையாறு அகலாத செம்பொன் சோதியாய் உள்ளாய் .

குறிப்புரை :

நோக்கரிய திருமேனி - ஊனக் கண்ணாற் காணுதல் இயலாத திருமேனி ; ` திருமேனி ` என்பது , வடிவத்தையேயன்றி , இயல்பையுங் குறிக்கும் . நோவாமே - வருந்தாதபடி ; வருத்தம் . பசி பிணி முதலியவற்றாலும் , பிறப்பினாலும் வருவன . நோக்கு - அருட்பார்வை . இனி , ` நோக்கு ` என்பதனை , ` அழகு ` எனக்கொண்டு , ` நோயுறாத அழகிய உடம்பு ` என்றுரைத்தலுமாம் . காப்பரிய - அடக்குதற்கரிய . காத்தாய் - அடக்கினாய் . இறைவனைப் புலன்களை அடக்கியிருப்பவனாகக் கூறுதல் , எல்லா வற்றையும் அறிந்தும் , அவற்றுள் ஒன்றிலும் அழுந்தாது பற்றற்று நிற்றல் பற்றி என்க . ஆர்த்தல் - கட்டுதல் .

பண் :

பாடல் எண் : 3

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொன் சோதியே ! நீ மேகத்தில் மின்னல்களாகவும் , கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகியும் , மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும் , உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள வல்லவனாகவும் , அடியவர் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும் , என் தலைமேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும் , சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய் .

குறிப்புரை :

கனம் - மேகம் . கடுஞ்சுடர் - மிக்க ஒளி ; மின்னல் . தனம் - செல்வம் ; ` தலை ஓடாகிய பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்தான் உனது செல்வநிலை ` என நகைச்சுவை தோன்ற அருளியவாறு . தகைந்து - தடுத்து ; பிறரிடத்துச் செல்லாதவாறு நிறுத்தி . நஞ்சை உட்கொண்டிருத்தலை , ` சினத்திருந்த ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 4

வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உறைவாய் . புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழுப்படையை உடையாய் . சடையில் பிறை , பாம்பு , கங்கை இவற்றை வைத்தாய் . பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகிறாய் . அடியவன் என்று என் தலை மீது உன் திருவடிகளை வைத்தாய் . தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய் .

குறிப்புரை :

வான் உற்ற - ஆகாயத்தை அளாவிய . ` வடகயிலை ` என்றதை ` செஞ்ஞாயிறு ` ( புறம் . 30) என்பதுபோலக்கொள்க . ` தேன் உற்ற ` என்பதில் , ` உற்ற ` உவம உருபு ; இதனை , ` இயைய , ஏய்ப்ப ` முதலியனபோலக் கொள்க .

பண் :

பாடல் எண் : 5

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய்ப் பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய் , மற்றவர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய் , ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து உலகங்களை எல்லாம் காத்தவனாய்க் கழலணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய் , வலிமை வாய்ந்த மழுப்படையை உடையவனாய் உள்ளாய் .

குறிப்புரை :

` பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவன் ` என்க . ஊழி முதல்வன் - காலத்தை நடத்தும் தலைவன் . பெரியார்கள் - ஞானியர் ; அவர்கட்கெல்லாம் பெரியவன் என்றது , இயற்கையுணர்வும் , சுதந்திர உணர்வும் உடைமை பற்றி . ` உலகு ` என்றது , உயிர்களை ; அவைகளுக்குக் ` கண் ` என்றது , அறிவுக் கறிவாகி நிற்றலை ; ` சொன்ன சிவன் கண்ணா ` ( சிவஞானபோதம் . சூ . 5. அதி . 2.)

பண் :

பாடல் எண் : 6

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பொருள்களில் அவற்றின் பண்புகளாக உள்ளாய் . அடியவர்கள் சுற்றமாக உள்ளாய் . கற்கும் கலையறிவாகவும் அநுபவப்பொருளை ஞானதேசிகர்பால் கேட்டவர்க்கு வேண்டியவை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய் . பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய் . பிரானாய் அடி என்மேல் வைத்தாய் . நஞ்சினை அடக்கிய நீல கண்டன் நீயே ஆவாய் .

குறிப்புரை :

உற்றிருந்த - பொருள்களை உணர்ந்துள்ள . உற்றவர் - அடைந்தவர் . ஓர் சுற்றம் - தனித்ததொரு களைகண் . ` கற்றவர் ` என்றது , கற்றவழியே தனது நற்றாள் தொழுகின்றவரை . கற்பகம் - விரும்பியவற்றை யெல்லாங் கொடுப்பவன் . செற்று - நஞ்சினைச் செறுத்து ; அடக்கி .

பண் :

பாடல் எண் : 7

எல்லா உலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ எல்லா உலகங்களும் ஆனவனாய் , ஏகம்பத்தில் விரும்பியிருப்பவனாய் , நல்லவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாய் , ஞான ஒளி வீசும் விளக்காய் , கொடிய வினைகளைப் போக்குபவனாய்ப் புகழ்ச் சேவடி என் மேல் வைத்தவனாய்ச் செல்வங்களுள் மேம்பட்ட வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய் .

குறிப்புரை :

` எல்லா உலகமும் ஆனாய் ` என்றது , இறைவனது பெருநிலை ( சருவ வியாபகநிலை ) யையும் , ` ஏகம்பம் மேவி இருந்தாய் ` என்றது . அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் வரையறை ( ஏகதேசமாம் ) நிலையையும் விளக்கியருளியவாறு . எனவே , ஓரிடத்து நிற்றலை விளக்குதற்கு ஏகம்பத்தைக் குறித்தருளியவாறாம் . இதனால் சுவாமிகளுக்கு , திருவேகம்பத்தில் ஒரு தனிப்பேரன்பிருந்தமை தெளியப்படும் . ` நல்லாரை நன்மை அறிவான் ` என்றது , ` பசுவைப்பால்கறந்தான் ` என்பது போல நின்றது , இங்ஙனம் அருளியது , ` நல்லாரது நன்மையை அறிந்து அவர்க்கு அருள் செய்வாய் ` என்றருளியவாறு . இதனானே , ` தீயாரது தீமையை அறிந்து அவரைத் தெறுவாய் ` என்பதும் பெறப்படும் . அதனையன்றி இதனையே எடுத்தோதியருளினமையால் , ` தெறுதல் ஒரோவழி அளவிற்குறைதலும் கைவிடப்படுதலும் உளவாமாயினும் , அருளல் அவை இரண்டுமின்றி அளவின் மிகுதலுமுடைத்து ` என்றல் திருவுள்ளமாதல் பெறப்படுகின்றது . ` கடிதோச்சி மெல்ல எறிக ` ( குறள் - 562.) எனத் தெறுதற்கே மென்மை கூறினமையின் , தலைவராயினார்க்கு இயல்பு இதுவே என்பது திருவள்ளுவ நாயனார்க்குங் கருத்தாதல் அறியப்படும் . சுடர் - ஒளி ; ` ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு ` என்க . ` செல்வமாய ` என்பது கடைக்குறைந்து , ` செல்வாய ` என நின்றது ; ` உண்மைச் செல்வம் ( அழியாச் செல்வம் - வீடுபேறு ) ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே , பிறரில்லை ` என்றபடி . இதனால் ` அழிதன் மாலையவாகிய செல்வங்களையும் சிவபிரானே தருவானாயினும் , அவைகளைத் தம்தம் புண்ணிய விசேடத்தால் தரும் ஆற்றலுடையார் பிறரும் உளர் ; ஆயினும் , அழியாச் செல்வமாகிய வீடு பேற்றைத் தரும் ஆற்றலைப் பிறர் ஒருவரும் உடையராதல் இல்லை , அவர்தாமே அதனைப் பெறாது கட்டுண்டு கிடத்தலின் ` என்பதுணர்க . இனி , ` அழியாது என்றும் செல்லும் நிலைமையையுடைய செல்வம் ` என , இயல்பாகவே வினைத்தொகையாகக் கொண்டு , மேலைப் பொருளே பொருளாக உரைப்பினும் அமையும் ; இவ்வுரைக்கு , ` வாய் - நிலைமை ` என்க .

பண் :

பாடல் எண் : 8

ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய் , எல்லையற்ற பெருமையை உடையவனாய் , பூவினில் நாற்றம் போல எங்கும் பரவியவனாய் , போர்க் கோலம் பூண்டு மும்மதில்களையும் அழித்தவனாய் , நாவினால் பேசும் நடுவுநிலையான சொற்களை உடையவனாய் , நண்ணி என் தலை மீது திருவடிகளை வைத்தவனாய் , ஏனைய தேவர்களும் அறிய முடியாத தேவனாய் உள்ளாய் .

குறிப்புரை :

நடுவுரை - நடுவுநிலையான சொல் ; நீதியான தீர்ப்பு ; அறங்கூ றவையத்தில் ( நீதிமன்றத்தில் ) இருப்பவர்கட்கு இறைவன் நடுவு நிலை ( நீதி ) வடிவில் நின்று , அதனிற் பிறழாதோர்க்கு அருளும் , பிறழ்ந்தோர்க்குத் தெறலும் செய்தருளுவன் என்பது இதனால் அருளிச்செய்யப்பட்டது . திருமுறைகளுட் பலவிடங்களில் , இறைவனை , ` நீதி வடிவினன் ` என்று ஓதுவதன் உண்மை இதனால் விளங்கும் . இறைவனுண்மை கொள்ளாது வினையையே முதலாகக் கொள்வார் , ` அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் ` ( சிலப்பதிகாரம் - பதிகம் - 55) என்றாற்போல , அந் நீதிதானே அளியும் தெறலும் செய்யும் என்பர் ; அதனை ` அளி , தெறல் ` என்பன அறிவுடைப்பொருளின் பண்பாவதல்லது , அறிவில் பொருளின் பண்பல்லவாகலின் அவற்றிற்கேற்ற செயல்களை அறமே செய்தல் எங்ஙனம் என ஆய்ந்தொழிக . இனி , ` என்பிலதனை வெயில்போலக் காயுமே - அன்பிலதனை அறம் ( குறள் - 77.) ` அல்லாத மாந்தர்க் கறங் கூற்றம் ` ( மூதுரை . 27) என்றாற்போல அருளுவார்க்கு , இறைவன் ஆணை வழியானே அறம் அத்தன்மைத்தாம் என்பது கருத்தாதல் அவர் நூல்களுள் வெளிப்படை யாகலின் , அவைபற்றி ஐயமின்றாதலறிக .

பண் :

பாடல் எண் : 9

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ எண்திசைகளிலும் உள்ள ஒளி வீசும் சுடர்கள் ஆனாய் . ஏகம்பம் மேவிய இறைவன் நீ . வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையை உடையவன் . சென்றால் மீண்டு வருதல் இல்லாத வீடுபேற்றை அளிப்பவன் . அடியார்கள் உன் திருத் தொண்டில் ஈடுபட்டு உன் திருவடிகளை முன்நின்று துதிக்குமாறு உள்ளாய் . தூய மலர்போன்ற உன் சிவந்த திருவடிகளை என் தலை மேல் வைத்தாய் . திண்ணிய மலையாகிய வில்லுக்கு ஏற்ற அம்பினை இணைத்துச் செயற்பட்டவன் ஆவாய் .

குறிப்புரை :

` சுடர் ` என்றது , பொருள்களைத் தோற்றுவித்தலும் , அறிவை விளக்குதலும் பற்றி . ஏகம்பம் மேவி நிற்றல் , இறைவி என்றும் ஏத்தி வழிபட நிற்பதாகலான் , அஃது அடியவர் என்றும் ஏத்தி வழிபட நிற்றலைக் குறித்தருளுங் குறிப்பாயிற்று . தொண்டு இசைத்து - கைப்பணியை ஏற்பித்து . பரவ - வாயால் வாழ்த்த . ` திண்சிலை ` மேருவாகிய வில்லையும் , ` ஓர்சரம் ` திருமாலாகிய அம்பையும் கொள்ள நின்றன .

பண் :

பாடல் எண் : 10

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ பகைவர் முப்புரங்களை அழித்தாய் . தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய் . பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய் . பல ஊழிக்காலங்களாக நிலைபெற்றிருக்கிறாய் . அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய் . தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் . திண்ணிய தோள்களை வீசித் தீயில் கூத்தாடுதலில் திறமை உடையாய் .

குறிப்புரை :

விண்டார் - நீங்கினார் ; பகைத்தார் . ` கண்டாரைக் கொல்லும் நஞ்சு ` என்றது , பாற்கடலைக் கடைந்தபொழுது தோன்றிய ஆலகாலத்தின் கொடுமை மிகுதியை விளக்கிற்று . தொண்டா - தொண்டானாகும்படி ; தொண்டு , ஆகுபெயர் . ` திண்தோள்விட்டு ` என்புழி , விட்டு - வீசி .

பண் :

பாடல் எண் : 11

ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுந் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

ஒருவரும் அறிய முடியாத உயர் நிலையில் உள்ளாய் . வானத்திலே தேரைச் செலுத்தவல்லமை உடையாய் . பெரிய புகழை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கினாய் . வானத்தில் உலாவிய மூன்று மதில்களையும் அழித்தாய் . பிரமனும் திருமாலும் கூடித்தேடும் அடிகளை என் தலைமேல் வைத்தாய் . அத்தகைய நீ திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையையாய் அனைவருக்கும் காட்சி வழங்குகிறாய் .

குறிப்புரை :

ஆரும் அறியா இடம் - எத்திறத்தவரும் அறிய இயலாத நிலை . அவர் , ` சகலர் , பிரளயாகலர் , விஞ்ஞானகலர் ` என்பாரும் , ` மக்கள் , தேவர் , காரணக் கடவுளர் ` என்பாரும் முதலாகப் பலவாற்றாற் கூறப்படுபவர் . ` ஆகாயம் தேர் ஊரவல்லாய் ` என்றது , ` கல்நார் உரித்தல் ` ` கல்லைப் பிசைந்து கனியாக்குதல் ` ( தி .8 திருவாசகம் . போற்றித் திருவகவல் - 97, திருவம்மானை -5) என்றாற்போலச் செய்தற்கரியனவற்றைச் செய்தல் குறித்தது . இனி , திரிபுரம் எரித்த ஞான்று ஊர்ந்த தேரினது நிலையையே குறித்தது எனினும் ஆம் . ` பேரும் பெரிய ` என்றது , ` தசக்கிரீவன் ` எனப் பெருமையாகச் சொல்லப்பட்டமையை . ஊரும் புரம் - வானத்தில் இயங்கும் அரண் . ` பிரமனும் மாலும் இருவருங் கூடித் தேடியும் காணுதற்கரிய திருவடியை எளியேன் தலைமேல் வைத்தருளினாய் ` என்று உருகி அருளிச்செய்தவாறு .
சிற்பி