திருப்பழனம்


பண் :

பாடல் எண் : 1

அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
அமரர்களுக் கருள்செய்யும் ஆதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
சிலையால் புரமூன் றெரித்தார் தாமே
தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

திருப்பழனத்திலே உகந்தருளி உறையும் எம் பெருமான் அலைகள் பொருந்திய கடலின் நஞ்சினை உண்டவர். தேவர்களுக்கு அருள் செய்யும் முதற்பொருள். உயிர்களைக் கவரும் கூற்றினை உதைத்தவர். தம்மால் கொல்லப்பட்ட வேங்கைப் புலியின் தோலை உடுத்தவர். வில்லால் திரிபுரத்தை எரித்தவர். கொடிய சூலை நோயைப் போக்கி என்னை ஆட் கொண்டவர். பிச்சை எடுக்கும் நிலையிலும் அழகான பண்புடையவர்.

குறிப்புரை :

`ஆதி` என்றது, பன்மை ஒருமை மயக்கம். அசைத்தார் - கட்டினார். `அழகாய்ப் பலிதேர்ந்த` என, மாற்றி யுரைக்க.
பலி - பிச்சை. தேர்ந்து - ஆராய்ந்து; தேடி. `பழனநகர் எம் பிரானார்தாமே` என்பதனை எழுவாயாகக் கொள்க. இதன்கண் உள்ள ஏகாரம் ஈற்றசை; ஏனைய ஏகாரங்கள் தேற்றம்; `தாம்` அனைத்தும் அசைநிலை.

பண் :

பாடல் எண் : 2

வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே
மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே
கருத்துடைய பூதப் படையார் தாமே
உள்ளத் துவகை தருவார் தாமே
யுறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் ஒற்றைச் சடையிலே கங்கை வெள்ளத்தை ஏற்றவர். மேம்பட்டவர் எல்லோருக்கும் மேம்பட்டவர். வஞ்சத்தைப் போக்கி என்னை ஆட்கொண்டவர். ஞானம் பெற்ற பூதங்களைப் படையாக உடையவர். தம்மை நினைக்கும் மனத்திற்கு மகிழ்ச்சி தருபவர். தீராத பெரிய நோய்களையும், சிறிய நோய்களையும் தீர்ப்பவர். ஆழமான கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்.

குறிப்புரை :

மேலார்கள் - தேவர்கள்; அவர்க்கு மேலார்கள், அயனும் மாலும். இனி, அயன் மால் என்பாரையும் தேவர்களுள்ளே வைத்து, அவர்க்கு மேலார்கள் அபரமுத்தர் என்றுரைத்தலுமாம். `கள்ளம்` என்றது சமணரது சார்பினால், தம் செயலுக்குத் தாமே தலைவராக நினைந்திருந்த முனைப்பினை. `கருத்துடைய பூதம்` என்றருளிச்செய்தது, `ஞானம்பெற்ற பூதங்கள்; சிவபூதங்கள்` என்றபடி.
உவகை தருவார் - (வாட்டம் நீக்கி) மகிழ்ச்சி தருவார். உறுநோய் - பெருநோய்கள்; தீரா நோய்கள். `உறுநோயும் சிறுபிணிகளும் தீர்ப்பார்` என்க.

பண் :

பாடல் எண் : 3

இரவும் பகலுமாய் நின்றார் தாமே
எப்போதும் என்நெஞ்சத் துள்ளார் தாமே
அரவ மரையில் அசைத்தார் தாமே
அனலாடி யங்கை மறித்தார் தாமே
குரவங் கமழுங்குற் றாலர் தாமே
கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் இரவும் பகலும் எப்போதும் என் நெஞ்சத்து உள்ளவராய்ப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தீயில் கூத்தாடித் தம் கையால் எல்லோருக்கும் `அஞ்சன்மின்` என்று அபயம் அளிப்பவராய்க் குரா மலர் மணம் கமழும் குற்றாலத்தில் உறைபவராய்ப் பலபல வேடங்களை விரும்பு பவராய்த் தம்மை வழிபடும் அடியவர்களுக்கு என்றும் பக்கலில் இருந்து உதவுபவர்.

குறிப்புரை :

`ஆடி` என்னும் எச்சம், எண்ணின்கண் வந்தது. மறித்தார் - தடுத்தார்; `அஞ்சேல்` என்று அமைத்து ஆட்கொண்டார். குரவம் - குரவம்பூ; அம், அல்வழிக்கண் வந்த சாரியை. `குரா` என்பது, குரவு என்றாயிற்று. கோலங்கள் - வேடங்கள். `மேன்மேல்` என்றது. `எல்லையின்றி` என்றபடி. பாங்கர் - உடன்நின்று உதவுபவர்; `தோழராகின்றவர்` என்பது நயம்.

பண் :

பாடல் எண் : 4

மாறில் மதில்மூன்று மெய்தார் தாமே
வரியரவங் கச்சாக வார்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறுகொடுஞ் சூலக் கையர் தாமே
யென்பா பரண மணிந்தார் தாமே
பாறுண் தலையிற் பலியார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் தமக்கு நிகரில்லாத மதில்கள் மூன்றனையும் அழித்தவராய்க் கோடுகளை உடைய பாம்பினைக் கச்சாக அணிந்தவராய், திருநீறணிந்த தூயவராய், நெற்றியில் அக்கினியாகிய கண்ணை உடையவராய்க் கொடிய சூலத்தை ஏந்தியவராய், எலும்புகளை அணிகளாக அணிந்தவராய்ப் பருந்துகள் புலால் நாற்றமறிந்து வட்டமிடும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவராய் உள்ளார்.

குறிப்புரை :

மாறுஇல் - அழிதல் இல்லாத. வரி-(படத்திற்) புள்ளி. `நெற்றியின்கண்` என உருபு விரிக்க. ஏறு-பொருந்திய. பாறு உண் - பருந்துகள் வீழ்ந்து புலாலை உண்கின்ற. பலி - பிச்சை.

பண் :

பாடல் எண் : 5

சீரால் வணங்கப் படுவார் தாமே
திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே
ஆரா அமுதமு மானார் தாமே
யளவில் பெருமை யுடையார் தாமே
நீறார் நியமம் உடையார் தாமே
நீள்வரைவில் லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் எல்லோராலும் புகழ்ந்து வணங்கப்படுபவராய், எண் திசைகளுக்கும் உரிய தேவராய், தெவிட்டாத அமுதம் ஆவாராய், எல்லையற்ற பெருமை உடையவராய், நீர்வளம் பொருந்திய நியமம் என்ற திருத்தலத்தை உடையவராய், மேருமலையை வில்லாக வளைத்தவராய், எல்லா உலகத்தாராலும் முன் நின்று துதிக்கப்படுபவர் ஆவர்.

குறிப்புரை :

சீரால் - புகழோடு; என்றது, `யாவராலும் ஏத்தி (வணங்கப்படுவார்)` என்றருளியவாறு. `வணங்கப்படுவார்` என்றது, `வணங்கப்படுதற்கு உரியார் அவர் ஒருவரே` என்றருளிச் செய்தவாறு; (ப.16. பா.3. குறிப்புரை.) `திசைக்கெல்லாம் தேவாகி நின்றார்` என்றது, `அவரே முழுமுதற்கடவுள்` என்றருளியவாறு; இது, பன்மை யொருமை மயக்கம்.
ஆரா - தெவிட்டாத. `அமுதமும்` என்னும் உம்மை, சிறப்பு. நீரார்-நீர் போலும் தெளிந்த ஒழுக்கமுடையவர்; அவரது நியமங்களை உடையவர் (தமக்கு உரிய பொருளாக ஏற்றுக்கொள்பவர்) என்க.

பண் :

பாடல் எண் : 6

காலனுயிர் வௌவ வல்லார் தாமே
கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவு முகப்பார் தாமே
கோணாகம் நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே
பால விருத்தரு மானார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் காலன் உயிரைப் போக்க வல்லவராய், விரைந்து ஓடும் வெள்ளை நிறக் காளையை உடையவராய்ப் பல வேடங்களையும் விரும்புபவராய்க் கொடிய பாம்பினைத் தம் வில்லின் நாணாக இணைத்தவராய், நீல கண்டராய்க் கயிலாயத்தின் உச்சியில் உள்ளாராய், பாலன் மூத்தோன் முதலிய எல்லாப் பருவங்களையும் உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

நாண் - அரை நாண். நீள்வரை - ஊழிதோறும் உயர்கின்ற மலை; கயிலை. `பால விருத்தர்` உயர்திணை உம்மைத்தொகை. உம்மை, `குமரர்` என்பதனைத் தழுவிய எச்ச உம்மை; `எல்லாப் பருவத்தினருமாகி, யாதொரு பருவமும் இலர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 7

ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே
யேழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
தீவாய் அரவதனை யார்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் தமக்குப் பொருந்திய பார்வதி பாகராய், ஏழு ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டவராய், அடியார்கள் மலர்களைத் தூய்மை செய்து அணிவிக்க அவற்றை ஏற்று நிற்பவராய், எல்லை கடந்த பெருமை உடையவராய், உருவில் சிறிய பிறையைச் சடையில் அணிந்தவராய், விடம் கக்கும் வாயினை உடைய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தேவருலகிலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த கங்கையைச் சடையில் ஏற்றவராய் உள்ளார்.

குறிப்புரை :

ஏய்ந்த-(தமக்குப்) பொருந்திய; எத்திறம் தான் வேண்டினும் அத்திறமாய் நிற்கின்ற. `ஏழ்` என்பது பன்மை குறித்தவாறு. `மலரை ஆய்ந்து தூவ` என்க. நின்றார் - அத்தூவலை (வழி பாட்டினை) ஏற்று நிற்பவர். இறைவரது பெருமைமுழுவதும் உணர்ந்தார் ஒருவரும் இலர் என்பதுணர்த்துவார், `அளவில் பெருமை உடையார்` என்றருளிச் செய்தார். `நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்` (தி.11 திருமுருகாற் - 278.) என்று நக்கீர தேவர் அருளியது காண்க. `வைத்தார்` `ஆர்த்தார்` என்னும் சொற்குறிப்பினால், `பிறையை நலம்பெற வைத்து, பாம்பை அடக்கிக் கட்டினார்` என்பது பெறப்படும். `தேய்ந்த, தீவாய்` என அடைபுணர்த்ததும் அவை நோக்கி `பாய்ந்த கங்கை` என விதந்தருளிச்செய்தது, அது பிறரால் ஏற்றற்காகாமையை விளக்குதற்கு.

பண் :

பாடல் எண் : 8

ஓராதா ருள்ளத்தில் நில்லார் தாமே
யுள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை யிருந்தார் தாமே
பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே
ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே
யுலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத் திடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் தம்மை நினையாதவர் உள்ளத்தில் நிலையாக இல்லாதவராய், உள்ளத்தில் அன்பு சுரந்து பெருகுகின்ற அன்பர்கள் உள்ளத்தில் நிலையாக இருப்பவராய், என் உள்ளத்தை விட்டு அகலாது இருப்பவராய், தம் அடியவர் அல்லாத பிறருக்குக் காண்பதற்கு அரியவராய், ஊர்கள் நிறைந்த மூவுலகத்தும் பரவியிருப்பவராய், உலகம் துயரால் நடுங்காதபடி காப்பவராய், இவ்வுலகைச் சூழ்ந்த கடல்களிலும் பரவியிருப்பவராய் உள்ளார்.

குறிப்புரை :

ஓராதார்-நினையாதவர். `ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே` (தி.8 சிவபுராணம். 68) என்றருளிச் செய்த திருவாசகத்தினை ஈண்டு நோக்குக. உள் ஊறும் அன்பர் - உள்ளத்தில் சுரந்து பெருகுகின்ற அன்பினை உடையவர். இறைவனது அருட் குணங்களை ஒருகாலைக்கு ஒருகால் மிகுதியாக அறிதலால் அன்பு அவ்வாறு பெருகுவதாயிற்று என்க. பிறரது காட்சிக்கு ஒருஞான்றும் அகப்படாதவராகிய இறைவர் சுவாமிகளது உள்ளத்தில் ஒருஞான்றும் நீங்காதிருந்தமை அவரது மறவாமையாலேயாம். ஆகவே, இத் திருப்பாட்டின் முதல் இரண்டடிகளும் ஒரு பொருளையே பொதுவாகவும். சிறப்பாகவும் அநுபவமாக இனிதுணர்த்தியவாறாதல் அறிக. ஊர் ஆரும் - ஊர்கள் நிறைந்த; மேல் கீழ் உலகங்களிலும் ஊர்கள் உளவென்க. ஆர் முழவம் - ஒலிக்கின்ற மத்தளம்போலும் ஓசையை உடைய கடல்; உவமையாகுபெயர், நிலமும் கடலுமாய் இருப்பவர் என்றபடி.

பண் :

பாடல் எண் : 9

நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே
நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே
பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழனநகர் எம்பிரானார் திருமாலுக்கு அடியினைக் காணமுடியாத தீப் பிழம்பின் வடிவில் காட்சி வழங்கியவராய், பார்வதி பாகராய், புலித்தோல் மீது பாம்பினை இறுகக் கட்டி இடையில் அணிபவராய், செஞ்சடையில் கங்கை வெள்ளத்தைத் தேக்கியவராய், ஏழு உலகங்களையும் படைத்து ஆள்பவராய், பல இடங்களிலும் சிவமாகிக் காட்சி வழங்குபவராய், பாண்டவரில் அருச்சுனனுக்கு இரங்கிப் படைகள் வழங்கி அருள்புரிந்தவராய் உள்ளார்.

குறிப்புரை :

நீண்டவர், திருமால்; நீண்டு மூவுலகையும் அளந்த அவர்க்கே அளப்பரிதாக நீண்டார் என்றவாறு. `பூண்டு` என்ற செய்தெனெச்சம், எண்ணுப் பொருளதாய் நின்றது. `உண்டு உறங்கினான்` என்பதிற்போல; எனவே, `` அரவைப் பூண்டார்; புலித் தோலை மேல் ஆர்த்தார்` என்பது பொருளாயிற்று. `பொன்னிறத்த சடை` என இயையும். `ஆண்டு வைத்தார்` என்பதனை, `வைத்து ஆண்டார்` என மாற்றியுரைக்க. வைத்து - படைத்து. அங்கங்கே சிவமாகி நிற்றலாவது, உயிர்கள் வழிபட்டு உய்வான் வேண்டிப் பல இடங்களில் குரு லிங்க சங்கமத் திருமேனிகள் கொண்டு எழுந்தருளியிருத்தல்.
`தாவர சங்கமங்கள் என்றிரண்டுருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்`
(சிவஞான சித்தி. சூ. 2-28). என அவரது பெருங்கருணைத் திறம் அருளிச்செய்யப்பட்டது. பரிந்தார் - இரங்கினார். இறைவரை நோக்கித் தவம்செய்துகொண்டிருந்த பார்த்தனை (அருச்சுனனை)க் கொல்லவேண்டி `மூகன்` என்னும் அசுரன் பன்றி வடிவங்கொண்டு வர அதனைப் பார்த்தன் அறியாதிருந்தமை பற்றி, இறைவர் தாமே வேட்டுவ வடிவங்கொண்டு சென்று, அப்பன்றியை விரைந்து அம்பெய்து கொன்ற வரலாற்றினைப் பாரதத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 10

விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே
விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே
பூந்துருத்தி நெய்த்தானம் மேயார் தாமே
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே
அரக்கனையும் ஆற்ற லழித்தார் தாமே
படையாப் பல்பூத முடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் காளையை இவர்ந்து தாம் விரும்பிய உலகத்து இருப்பவராய்ச் சூரியன் வழிபடும் சோற்றுத் துறையில் உறைபவராய்த் தேவர் கூட்டத்தால் நாற்பக்கமும் சூழப் பெற்றவராய்ப் பூந்துருத்தியையும் நெய்த்தானத்தையும் விரும்பியவராய், அடுத்துப் புனல்சூழும் திருவையாற்றை உகந்தருளி உறைபவராய், இராவணனுடைய ஆற்றலை அழித்தவராய்ப் பூதங்களைப் படையாக உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

`இருப்பர்` என்றது, `சென்று காட்சியளிப்பர்` என்றவாறு. சோற்றுத்துறை சூரியன் வழிபட்ட தலமாகலின், `விரி கதிரோன் சோற்றுத்துறை` என்றருளினார். `சூழ் அத்தேவர்` எனப் பிரிக்க. சோற்றுத்துறையும் பூந்துருத்தியும் நெய்த்தானமும், ஐயாறும் சோழ நாட்டுத் தலங்கள். `பல்பூதம் படையா உடையார்` எனக் கூட்டுக.
சிற்பி