திருஇடைமருதூர்


பண் :

பாடல் எண் : 1

சூலப் படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய், ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய், விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய், மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய், ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.

குறிப்புரை :

கண்ணி - முடியிலணியும் மாலை; இஃது ஆகு பெயராய், அதனை உடையவரைக்குறித்தது. மாலை - திருமாலை; விட்டுணுவை. `தந்திரகலை` மந்திரகலை, உபதேசகலை` என, இறைநூல் மூன்று பகுதியாய் நிகழும். அவை முறையே `கரும காண்டம்` உபாசனா காண்டம், ஞானகாண்டம்` எனப்படும். உபாசனா காண்டத்தைக் கருமகாண்டத்துள் அடக்கி, இருபகுதியாக வழங்குதல் பெரும் பான்மை. உபாசனா காண்டத்தை, `பத்தி` காண்டம் என்றும் கூறுவர். முப்பகுதிகளுள் மந்திரகலையையும், தந்திர கலையையும் அருளவே, இனம் பற்றி உபதேசகலையும், கொள்ளப்படும். தந்திரகலை அல்லது கருமகாண்டமாவது, நாள்தொறும் செய்யப்படுவனவும், எவையேனும் சிறப்புப்பற்றி அவ்வந்நாள்களில் செய்யப்படுவனவும், எவையேனும் பயன்கருதி அவற்றின் பொருட்டுச் செய்யப் படுவனவுமாகிய கடமைகளை வகுப்பது; இக்கடமைகள் முறையே, நித்திய கன்மம், நைமித்திக கன்மம், காமியகன்மம் எனப்படும். மந்திரகலை அல்லது உபாசனா காண்டமாவது, கருமகாண்டத்துட் சொல்லப்பட்ட கடமைகளை மேற்கொண்டு செய்யும் செயல் முறைகளைக் கூறுவது. உபதேசகலை அல்லது ஞானகாண்டமாவது, தலைவனாகிய இறைவனது இயல்புகளையும், அவனது அடிமைகளாகிய உயிர்களது இயல்புகளையும், அவனது உடைமைகளாகிய உலகு, உடல், உள்ளம் முதலியவற்றின் இயல்புகளையும் தெரித்துணர்த்துவது. வேலைக் கடல், ஒரு பொருட் பன்மொழி, கடல் நஞ்சினால் தேவர்கட்கு இறுதி வந்த ஞான்று அதனை உண்டு காத்துக் காலத்தால் உதவினார்` என்றுரைத்தலுமாம். `தொல்வினை, ஊழ் வினை, மேல்வினை` என வினைகள் மூன்று வகைப்படும்; அவை முறையே, சஞ்சித கன்மம், பிராரத்த கன்மம், ஆகாமிய கன்மம் எனப்படும். முன்னைய பிறப்புக்களில் எல்லாம் செய்யப்பட்டு நுகரப்படாது கிடப்பன தொல்வினை அல்லது சஞ்சிதகன்மம்; அவ்வாறு கிடப்பனவற்றுள் பக்குவமாகி வந்து நுகர்ச்சியாவன ஊழ்வினை அல்லது பிராரத்தகன்மம்; ஊழ்வினையை நுகரும்பொழுதே உடன் ஈட்டிக் கொள்ளப்படுவன மேல்வினை அல்லது ஆகாமிய கன்மம். அவற்றுள், மேல்வினைகளைத் தீர்த்தலை ஈண்டு அருளிச் செய்தார் என்க.
விகிர்தர் - வேறுபட்டவர்; உலகியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதாம், ஏலம் - கூந்தலிற் பூசும் சாந்து. கமழ் குழலாள் - இயற்கையாகவே மணங்கமழ்கின்ற கூந்தலை உடையவள் `ஏலக்குழலாள், கமழ் குழலாள்` எனத் தனித்தனி முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
காரானை யீருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பரந்தார் போலும்
சீரால் வணங்கப் படுவார் போலும்
திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் கார்காலத்தில் பூக்கும் நறுமணக்கொன்றைப் பூவினை முடிமாலையாக உடையவராய், கரிய யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைத் திருமேனியின் மீது போர்த்தியவராய், உலகத்தாரால் முன் நின்று துதிக்கப்படுபவராய்ப் பல ஊழிக்காலங்களையும் அடக்கி நிற்கும் காலமாய் நிற்பவராய், பலரும் தம்முடைய பொருள்சேர் புகழைச் சொல்லி வணங்க நிற்பவராய், பத்துத் திசைகளிலும் உள்ள நிலப் பகுதிகளும் மற்றும் பரவி நிற்பவராய், நறுமணம் கமழும் அழகிய கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.

குறிப்புரை :

கார் ஆர் கொன்றை - (பார்க்க: ப.2. பா.5. குறிப்புரை.) ஈர் உரிவை - உரித்த தோல். `பத்து` என்பது, `பத்தடுத்த கோடி உறும்` (குறள் - 818.) என்புழிப்போல மிகுதி குறித்துநின்று, பல்லூழிக்கு அடையாயிற்று, பல்லூழி பரந்தார்; என்றது, `பல பொருள்களின் தோற்ற ஒடுக்கங்கட்கும் பற்றுக்கோடாய் நின்று அவற்றை அடக்கி நிற்கும் காலமாகிய ஊழிகளின் தோற்ற ஒடுக்கங்கட்கும் தாம் பற்றுக் கோடாய் நின்று அவற்றை அடக்கிநிற்கும் காலமாய் நின்றார்` என்றதாம். `சீரால்`, `சீரோடு` என்க. சீர் - புகழ், தமது பொருள்சேர் புகழைப் பலரும் சொல்லி வணங்க நிற்பவர் என்பதாம். `திசை` என்றது, நிலப்பகுதிகளை . ஏர் - எழுச்சி. ஈண்டும் `ஏர் ஆர் குழல், கமழ்குழல்` எனத் தனித்தனி முடிக்க.

பண் :

பாடல் எண் : 3

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகும் மண்ணுலகு மானார் போலும்
பூதங்க ளாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும்
பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
ஏதங்க ளான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் வேதங்களோடு வேள்விகளைப் படைத்தவராய், விண்ணுலகும் மண்ணுலகும் ஐம்பூதங்களும் தாமேயாகிய பழையவராய்த் தம்மைப் புகழ்வார் உள்ளத்தில் ஞானஒளியாய் நிற்பவராய்த் தம் திருவடிகள் எல்லோராலும் முன்நின்று துதிக்கப்படுவனவாய், அடியார்களுக்கு இன்பம் பயப்பவராய், அவர்களுடைய துன்பங்களையெல்லாம் துடைப்பவராய் அமைந்துள்ளார்.

குறிப்புரை :

`வேதங்கள்` என்புழி, ஆல் உருபு விரிக்க. `வேதங்களோடு பொருந்திய வேள்வி; வைதிக கன்மங்கள்` என்றுரைத்தலுமாம். பயந்தார் - படைத்தார். பூதங்கள், ஐம்பூதங்கள். இவற்றை அருளவே, ஏனைய தத்துவங்களும் கொள்ளப்படும். புராணர் - பழையவர்; யாவருக்கும் முன்னவர், புகழவளர் ஒளியாய் நின்றார் - தம்மை ஏத்த ஏத்த, ஏத்துவார் உள்ளத்தில் மிகுகின்ற ஞானமே வடிவாய் நின்றவர். `பாதம் பரவப் படுவார்` என்றருளியது, `தியானிக்கப்படுதற்கு உரியவர்` என்றவாறு. `பொதுநீக்கித் தனை நினைய வல்லோர்க் கென்றும் பெருந்துணையை` (தி.1. பா.5.) என அருளிச்செய்ததனை மேலே காண்க. `கல்லால் நீழல் - அல்லாத் தேவை - நல்லார் பேணார்` (தி.3. ப.40. பா.1.) என்று அருளிச் செய்தார்கள், திருஞானசம்பந்த சுவாமிகள். `மற்றெல்லோரையும் விலக்கிச் சிவன் ஒருவனே தியானிக்கப்படத்தக்கவன்` (சிவ ஏகோ த்யேயச் சிவங்கரஸ் ஸர்வம் அந்யத் பரித்யஜ்ய) என்றது அதர்வசிகை உபநிடதம். இங்ஙனமே `இளம்பிறைத் - துண்டத்தானைக் கண்டீர் தொழற்பாலதே` (தி.5. ப.94. பா.1.) என்பது முதலாக, `சிவன் ஒருவனே வணங்கப்படுதற்கு உரியவன்` என்பதனைப் பல்லாற்றானும் சுவாமிகள் அறிவுறுத்தருளிச்செய்தமை காண்க. `ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்` (தி.1. ப.1. பா.11.) எனவும், `ஏர்கொள் கச்சித் திருவேகம்பத்து - உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே` (தி.2. ப.12. பா.1.) எனவும், `திருவான்மியூர் உறையும் - அரையா உன்னையல்லால் அடையாதெனது ஆதரவே` (தி.3. ப.55. பா.1.) எனவும், `நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்` (தி.4. ப.1. பா.2.) எனவும், `சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்` (தி.6. ப.98. பா.5.) எனவும், `மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தேன்` (தி.7. ப.48. பா.1.) எனவும். `கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் - அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே` எனவும், (தி.7. ப.26. பா.1) `கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம் - அடிகேள் என்னமுதே எனக் கார்துணை நீயலதே` (தி.7. ப.28. பா.1.) எனவும், `உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாதெங்கள் உத்தமனே` (தி.8 திருவாசகம், திருச்சதகம்.2) எனவும் அருளாசிரியர் அனைவரும் இதனை ஒருபடித்தாக அருளிச் செய்தமை காண்க. ஏதங்கள் - துன்பங்கள், துன்பங்களைக் கடிதலும் பத்தர்களுக்கே என்க.

பண் :

பாடல் எண் : 4

திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
பரங்குன்றம் மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிமைப் படுத்தி ஆளும் ஆற்றலை உடைய, தேவகணங்கள் தம் திருவடிகளைத் துதித்துத் திசை நோக்கி வணங்குமாறு செய்த இடைமருது மேவிய ஈசர், இந்திரன் செய்த வேள்வியை அழியுமாறு கெடுத்து, மேக வடிவில் வந்த திருமாலை வாகனமாகக் கொண்டு செலுத்திய வேறுபட்ட இயல்பினர். யாழைப் பண்ணும் (சுருதிகூட்டும்) இயல்பினராகிய மகளிரின் ஆடல் பாடல்கள் நீங்காத பரங்குன்றை விரும்பித் தங்கிய பரம்பொருள் ஆவார். எண்ணாயிரவர் என்ற தொகுதியைச் சார்ந்த அந்தணர்கள் வேற்றுத் தெய்வங்களை விடுத்துத் தம்மையே பரம்பொருளாகத் தியானிக்கும் இயல்பினராவர்.

குறிப்புரை :

திண்குணம் - வலிமைக் குணம்; அஃதாவது, பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிப்படுத்து ஆளும் ஆற்றல். `திண்குணத்தாராகிய தேவர்` என்க. திசை வணங்க - திசை நோக்கி வணங்குமாறு. `வைத்தார் ` என்பது. `உடையராயினார்` என்னும் பொருட்டு. `விண் குணத்தார் வேள்வி` என்றது. இந்திரன் செய்த வேள்வியை. விண்குணம், ஆகாயத்தின் பரப்பு. நூறி - அழித்து. கொண்டல் மேற்செல் - மேகத்தின் மேல் ஏறிச்சென்ற. `ஒரு காலத்தில் திருமால் மேகமாய் நின்று சிவபிரானைச் சுமந்தார்` என்பதும், அதனால், அக்காலம். `மேக வாகன கற்பம்` எனப் பெயர் பெற்றது என்பதும் புராண வரலாறுகள்.
பண்குணத்தார் - யாழைப் பண்ணும் (சுருதி கூட்டும்) இயல்பினர்; ஆடல் மகளிருடையது. எண்குணம், `தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு. இயல்பாகவே பாசம் இன்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம், என்பன. எண் ஆயிரவர் - ஆயிரம் என்னும் எண்ணினை உடையவர். `ஆயிரம்` என்பது, ஈண்டு அளவின்மை குறித்தது; எண்ணில் அடங்காதவர் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 5

ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழில்அண் ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
படுவெண் தலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில்சூழ் ஆரூ ருறைகின் றாரும்
ஏகம்பம் மேயாரு மெல்லா மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் வானளாவிய சோலைகளிலே குரங்குகள் நடமாடும் அண்ணாமலையிலும், அழகிய பொழில்கள் சூழ்ந்த ஆரூரிலும், கச்சி ஏகம்பத்திலும் உகந்தருளியிருக்கின்றார். பார்வதி பாகராய்ப் பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர். வானில் உலவிய மும்மதில்களையும் எய்து வீழ்த்தியவர். எல்லாப் பொருள்களாகவும் உள்ளவர்.

குறிப்புரை :

ஊகம் - குரங்கு, `ஊகச் சோலை, முகில் உரிஞ்சு சோலை` என்க. `அண்ணா` என்பது அண்ணாமலையைக் குறித்த முதற் குறிப்பு. `அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்` (ப.21. பா.8.) `காளத்தி கழுக்குன்றம் கண்ணார் அண்ணா` (ப.71. பா.9.) என்பன காண்க.
பாகு அம் - பாகுபோலும் இனிய அழகிய. பணிமொழி - பணிந்த சொல்.மாகம் அடை - விண்ணில் திரிகின்ற.

பண் :

பாடல் எண் : 6

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் பத்துத் திசைகளும், ஏழு இசைகளும், பதினெட்டு வித்தைகளும், பன்னிரண்டு சூரியர்களும், தீவினைகளும் நல்வினைகளுமாகிப் பத்துத் திசைகளிலும் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார். அவர் கொன்றை சூடிய சடையர். கூத்து நிகழ்த்துதலில் வல்ல இளைஞர். தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்தவர்.

குறிப்புரை :

ஐயிரண்டு - பத்துத் திசைகள். ஆறொன்று - ஏழு இசைகள். அறுமூன்று - பதினெட்டு வித்தைகள். அவை: வேதம் நான்கு அங்கம் ஆறு, புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி, என்னும் உபாங்கம் நான்கு, ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் உபவேதம் நான்கு. நான்மூன்று - பன்னிரண்டு சூரியர்கள், இறைவனை வழிபடும் இடங்களில் சூரியன் பலருக்கும் பொதுவாய்ப் பெரும்பான்மையதாதல் அறிக. `நல்வினை` எனப் பின்னர் விதந்தருளினமையின், முன்னர், `வினை` என்றது தீவினை என்பது பெறப்படும். `திசை` என்றது, அவற்றில் உள்ள பொருள்களை.

பண் :

பாடல் எண் : 7

பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும், உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம் பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும், பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள் ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின் உள்ளத்தாமரையில் உலவிவருபவராவார்.

குறிப்புரை :

` உயிர்கட்குப் பிரியாத (நீங்காத) குணம் என்றது, அதன் இயற்கைத் தன்மையை. அத்தன்மை பத்தாவன இவையென்பது அஞ்ஞான்று வழக்கின்கண் இருந்ததாகல் வேண்டும். ஆயினும் இக்காலத்து அறியப்படாமையால் பின்வருமாறு கூறலாம். இறைவனது எண்குணங்கட்கு மறுதலையான தன்வயமின்மை, சார்ந்ததன் வண்ணமாதல், அறிவிக்கவே அறிதல், ஒவ்வொன்றையே உணர்தல், படிமுறையான் உணர்தல், பெரிதும் சிறிதுமின்றி இடைநிகர்த்ததாதல், இன்னாதது வெறுத்தல், இனியது உவத்தல் என்னும் எட்டும், தனித்துநில்லாமை, தனித்துணரப்படாமை என்னும் இரண்டுமாம். உயிர்கட்குப் பிரிவுடைய (நீங்கத்தக்க) குணம் என்றது மலச்சார்பினால் வரும் செயற்கைத் தன்மையை. அவை பதினொன்றாவன, `பேதைமை, புல்லறிவாண்மை, அமைதி, வெகுளி, மடி, இன்ப நுகர்ச்சி, துன்பநுகர்ச்சி, நுகர்ச்சியின்மை, நன்முயற்சி, தீமுயற்சி, ஊக்கமின்மை என்பன. பேதைமையை, `கேவலநிலை` என்றும், புல்லறிவாண்மையை, `சகலநிலை` என்றும், அமைதி முதலிய மூன்றை, `சத்துவம், இராசதம், தாமதம்` என்றும் மெய்ந் நூல்கள் கூறும். சத்துவம் முதலிய முக்குணங்கள் காரணமாக, இன்ப நுகர்ச்சி முதலிய மூன்றும் உளவாகும். பின்னர் அவற்றால், நன்முயற்சி முதலிய மூன்றும் உளவாகும். மலச்சார்பு நீங்கிய விடத்து இவை அனைத்தும் நீங்குமென்க. பிரியாத குணம், பிரிவுடைய குணம்` என்பவற்றை, முன்னர், `உயிர்கட்கு` என விதந்தருளிச் செய்தமையால், பின்னர், ``விரியாத குணம்`` என்றருளியது, இறைவர்க்கென்பது பெறப்படும். விரியாத குணம் - தொகுத்துக் கொள்ளப்படும் குணம். அவை நான்காவன, `உண்மை, அறிவு, இன்பம் (சத்து, சித்து, ஆனந்தம்), அருள்` என்பன. பிற நெறிகள் அருள் ஒழிந்த மூன்றையே கூறுமாயினும், சிவநெறியுள் `அருள்` என்பதும் இன்றியமையாததென்க. `அருள்உண்டாம் ஈசற்கு அது சத்தி அன்றே`` (சிவஞானபோதம். சூ.5. அதி. 2) என்றதும் நோக்குக. `ஒருகால்` என்றமையால்; `மற்றொரு கால்` என்பது வருவிக்கப்படும். `விரிவிலா என்றது. `விரியாத` என மேற்போந்ததனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது. எனவே, அவரது குணங்களைத் தொகுத்துக் கூறுமிடத்து நான்காகக் கூறுதல் ஒருமுறை எனவும், அவைகளை ஆராயுமிடத்து ஆறாகக் கூறுதல் மற்றொரு முறை எனவும் அருளியவாறாம். அறுகுணங்களாவன `முற்றுணர்வு, வரம்பிலின்பம், இயற்கையுணர்வு. தன்வயம், முடிவிலாற்றல், பேரருள்` என்பன. இவை முறையே, `சருவஞ்ஞதை, திருத்தி, அநாதிபோதம், சுவதந்திரதை, அனந்தசத்தி, அலுத்த சத்தி, எனவும் கூறப்படும். இவற்றோடு `தூய உடம்பு அல்லது விசுத்த தேகம், இயல்பாகவே பாசமின்மை அல்லது நிராமயம்` என்னும் இரண்டுங்கூட்டி எட்டுக்குணம்` என்றலே விரித்துக் கூறலாகலின், `நான்கு` என்றும் `ஆறு` என்றும் கூறுவன தொகுத்துக் கூறலாமாறு உணர்க. தெரிவாய குணம் - மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்துணரப் படுவனவாய குணம். அவை அஞ்சாவன `ஓசை, ஒளி, ஊறு, சுவை நாற்றம்` (சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம்) என்பன. ஐம்பெரும் பூதங்களே உலகிற்கு முதலென்பது யாவர்க்கும் எளிதின் அறியப் படுவதாகலின், அவற்றின் குணங்களாகிய இவற்றை மட்டுமே அருளிச் செய்தார். சமிதை - ஓம விறகு; அதனை ஒன்பது என்றும் பிறவாறுங் கூறுபவாயினும், `ஆல், அரசு, அத்தி, மா, வன்னி, என்பன சிறப்புடையனவாதல் நோக்கி, `அஞ்சு` என்றருளினார். எழுத்தை, `பதம்` என்றருளினார். ``வகரக்கிளவி`` (தொல்.எழுத்து. 81.) என்றாற்போல. அஞ்செழுத்து - திருவைந்தெழுத்து மந்திரம், `அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி`` (தி.7. ப.83. பா.1.) என்றருளியதுங் காண்க. கதி ஐந்தாவன. `மக்கள்கதி. விலங்கு கதி, நரக கதி, தேவ கதி` என்னும் நான்கனோடு, `பரகதி` என்னும் வீட்டு நிலையுங்கூடியன. `இவைகளை எல்லாம் வேதாகமங்களில் சொல்லி யருளினார்` என்க. எரி - சுடர் வடிவம். `எரியாய` என்பதன் ஈற்றில் உள்ள அகரம் விரித்தல். ``தாமரை`` என்றது. அன்பர்களது நெஞ்சத் தாமரையை, உள்ளமாகிய தாமரை மலரின்மேல் இறைவனைச் சுடர் உருவில் தியானிக்கும் தியானமுறையை, `தகர வித்தை` என. உபநிடதங்கள் சிறந்தெடுத்துக்கூறும் (அத யதிதமஸ்மிந் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் ... சாந்தோக்யம், பத்மகோச ப்ரதீகாசம் தஸ்யமத்யே வஹ்நிசிகா, தஸ்யாஸ் ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித - மகாநாராயணோபநிடதம்) திருவள்ளுவ நாயனாரும் இறைவனை ``மலர்மிசையேகினான்`` (குறள். 3.) என்று அருளிச் செய்தமை காண்க. `எரியையே தாமரை மலராகிய இருக்கையாக உருவகித்தருளினார்` என்றலுமாம்.

பண் :

பாடல் எண் : 8

தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக வுண்டார் போலும்
அடியார்கட் காரமுத மானார் போலும்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் தோலுடையை உடுத்து அதன்மேல் ஒளிவாய்ந்த பாம்பினை இறுக்கிக் கட்டிய சோதி வடிவானவர். விடத்தையே அமுதம்போல உண்டவர். அடியவர்களுக்கு அமுதம் போல் இனியவர். காலனை வெகுண்டுதைத்த திருவடியை உடையவர். கயிலாயத்தை நிலையான இடமாக உடையவர். நறுமணம் வீசும் கூந்தலை உடைய பார்வதி பாகர்.

குறிப்புரை :

சுடர் வாய் - ஒளி வாய்ந்த; மணியை உடைய. `` ஆலம் அமுதாக உண்டார்`` என்பதனை, `அமுது ஆக ஆலம் உண்டார்` என மாற்றி, `தேவர்கட்கு அமுதம் கிடைத்தற் பொருட்டுத் தாம் நஞ்சு உண்டார்` என உரைக்க. ``ஆலம் தான் உகந்து அமுது செய்தானை`` (தி.7. ப.61. பா.1.) எனவும், ``விண்ணாள்வார் அமுதுண்ண மிக்க பெரு விடம் உண்ட - கண்ணாளா`` (தி.12 பெ. புரா. ஏயர்கோன். 286) எனவும் அருளினமை காண்க. இனி, `விடத்தையே அமுதமாக உண்டார்` எனக் கிடந்தவாறே உரைத்தலுமாம். `ஆரமுதம்` என்றது, பேரின்பப் பொருளாதலைக் குறித்தருளியவாறு.

பண் :

பாடல் எண் : 9

பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
அணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் பசிய தளிர்கள் இடையே தோன்றும் கொன்றைப் பூ மாலையர். வேல்போன்ற கண்களை உடைய பார்வதி பாகர். மாலை வானம் போன்ற செந்நிற அழகர். அழகிய நீலகண்டர். உலகில் பிறப்புக்களையும் இறப்புக்களையும் நிகழ்வித்து என் உள்ளத்தில் நீங்காதிருப்பவர். அடியார்களுடைய இடர்களைத் தீர்த்து அவர்களைக் காக்கும் இயல்பினர்.

குறிப்புரை :

``அந்திவாய்`` என்பதில் உள்ள ``வாய்`` என்பது, `அந்திக்கண்` என ஏழாம் வேற்றுமை உருபு. வண்ணம் - நிறம். அந்திக்காலத்தில் தோன்றும் நிறம், செவ்வானத்தின் நிறம் என்க. வரவு - பிறப்பு. செலவு - இறப்பு. இடர் - மேற்குறித்த வரவு செலவுகள்.

பண் :

பாடல் எண் : 10

கொன்றையங் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
அன்றவ் வரக்கன் அலறி வீழ
அருவரையைக் காலா லழுத்தி னாரும்
என்று மிடுபிச்சை யேற்றுண் பாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் கொன்றை மலரோடு வில்வமாலையைக் குளிர்ந்த சடைமீது வைத்து மகிழ்ந்த இயல்பினர். தம்மீது அம்பு எய்ய இருந்த மன்மதனைச் சாம்பலாக்கி நெருப்பு வடிவாய் நின்ற தூயவர். இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அன்று அவன் அலறிவிழுமாறு அம்மலையைக் காலால் அழுத்தியவர். என்றும் மற்றவர் இடும் பிச்சையை வாங்கி உண்பவர்.

குறிப்புரை :

கூவிளை - வில்வம். `அவ்வரக்கன்` என்னும் வகரம் தொகுத்தல்.
சிற்பி