கோயில்


பண் :

பாடல் எண் : 1

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன் , அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன் . மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன் , நுண்ணியன் , யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன் . தேனும் பாலும் போன்று இனியவன் . நிலைபெற்ற ஒளிவடிவினன் , தேவர்களுக்குத் தலைவன் , திருமாலையும் பிரமனையும் , தீயையும் , காற்றையும் , ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன் . புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம் .

குறிப்புரை :

அரியான் - புறப்பொருளை அறியும் கருவியறிவினாலும் , தன்னையறியும் உயிரறிவினாலும் அறிய வாராதவன் . ` அந்தணர் ` என்றது , ஈண்டுத் தில்லைவாழ் அந்தணரை . ` அந்தணர்தம் சிந்தை யானை ` என்றது , அரியானாகிய அவன் , எளியனாய்நிற்கும் முறைமையை அருளிச்செய்தவாறு . அருமறை - வீடுபேறு கூறும் மறை . அகம் - உள்ளீடு ; முடிந்த பொருள் . இதனான் , எவ்வுயிர்க்கும் முடிந்த வீடுபேறாம் பெருமான் சிவபெருமானேயாதல் தெற்றென விளங்கிற்று . அணு - சிறிது ; இதனை , ` தேவர்கள் தங் கோனை ` என்பதன் முன்னாகவைத்து உரைக்க . யார்க்கும் - எத்தகையோர்க்கும் . தத்துவம் - மெய் . ` தெரியாத ` என்பது , ` தத்துவன் ` என்பதன் முதனிலையோடு முடிந்தது . இதனால் , இறைவனை அணைந்தோரும் அவரது இன்பத்தில் திளைத்தலன்றி , அவனை முழுதும் அகப்படுத்து உணரலாகாமை அருளிச்செய்யப்பட்டது . ` தேன் , பால் ` என்பன உவமையாகு பெயராய் , ` அவை போல்பவன் ` எனப் பொருள்தந்து நின்றன . ` திகழ் ஒளி ` என்பது இசையெச்சத்தால் , ` தானே விளங்கும் ஒளி ( சுயம்பிரகாசம் )` எனப் பொருள் தருதல் காண்க . ஒளியாவது அறிவே என்க . ` தேவர்கள் தம் கோனை ` என்பது முதலிய ஏழும் , ` கலந்து நின்ற ` என்பதனோடு முடிந்தன . ` அணு ` என்றதனால் சிறுமையும் ( நுண்மையும் ), ` பெரியான் ` என்றதனால் பெருமையும் ( அளவின்மையும் ) அருளிச் செய்தவாறு . புலிக்கால் முனிவர்க்குச் சிறந்த உறைவிடமாய் இருந்தமை பற்றித் தில்லை , ` பெரும் பற்றப் புலியூர் ` எனப்பட்டது . ` பிறவாநாள் ` என்றருளியது , பிறவி பயனின்றி யொழிந்த நாளாதல் பற்றி . அறம் பொருள் இன்பங்களாகிய உலகியல்களும் பயனல்லவோ ? என்னும் ஐயத்தினையறுத்து , ` அவை துன்பத்தால் அளவறுக்கப்படும் சிறுமையவாதலின் , இறையின்பமாகிய பெரும்பயனொடு நோக்கப் பயனெனப்படா ` எனத் தெளிவித்தலின் , ` பிறவா நாளே ` என்னும் ஏகாரம் தேற்றம் .

பண் :

பாடல் எண் : 2

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

எல்லாம் வல்லவன் , கங்கையைத் தாங்கிய நீண்ட சடையன் . ஒரு பக்கத்தில் காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன் . பொருள் அற்றவருக்கும் , தாங்குவார் இல்லாது வருந்துபவருக்கும் , அருளுபவன் . தன்னைத் தவிர வேறு எவரும் தனக்கு ஒப்பில்லாதவன் . தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன் . திருவாரூரிலும் உகந்து தங்கியிருப்பவன் ஆகிய எம்பெருமானை நாம் எல்லாருக்கும் மேலானவன் என்று அறிந்தோம் . ஆதலின் அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

கற்றான் - எல்லாம் வல்லவன் ; இஃது இயற்கையைச் செயற்கைபோலக்கூறும் பான்மை வழக்கு . இனிக் கல் தானை எனப்பிரித்து அடையாக்குவாரும் உளர் . கல்தானை - கல்லாடை ; காவியுடை . வலஞ்சுழி சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று . உம்மை , ` தில்லையேயன்றி ` என எச்சஉம்மை . ஆரூரும் என்புழியும் இவ்வாறே கொள்க . அற்றார் - பொருளற்றார் ; அலந்தார் - களைகண் இல்லாதார் ; இவர்க்கு அருள்செய்தலைக் குறித்தருளியது , இம்மை நலங்கள் அருளுதலை அறிவுறுத்தற் பொருட்டு . ` அறிந்தோம் அன்றே ` என்பதனை இறுதிக்கண்வைத்து , ` அதனால் ` என்பது வருவித்துரைக்க . ` மற்றாருந் தன்னொப்பார் இல்லாதான் ` என்றருளியது , தனக்குவமை இல்லாதான் என்றருளியவாறு . கடவுட்பொருள் இரண்டாவது இல்லை என்றவாறு . பலராகக் கூறப்படும் கடவுளர் அனைவரும் உயிர்களாதலை விளக்குதற்கு , ` வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்பெற்றானை ` என்றருளிச் செய்தார் . ` ஏத்தும் பெற்றானை ` என்பது பாடமாயின் , பெற்றத்தான் ( இடபத்தை யுடையவன் ) என்பது குறைந்து வந்ததென்க .

பண் :

பாடல் எண் : 3

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து , தன் கழல்களின் ஒலி ஏனைய இயங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க , கையில் தீயை ஏந்தி , பெருமை வளர்கின்ற பருத்த தோள்களை மடித்து அவைகள் அசையுமாறு , பிறைமதியைச் சடையில் அணிந்து மானின் பார்வை போன்ற பார்வையளாகிய மேம்பட்ட சிறந்த ஒளியை உடைய முகத்தவளாகிய உமாதேவி விரும்பிக்காணுமாறும் தேவர் கூட்டம் தலை தாழ்த்து வணங்குமாறும் திருக்கூத்தாடுகின்ற மேம்பட்டவனாகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , இறைவரது ஆடற் சிறப்பின்கண் ஈடுபட்டருளிச் செய்தது . கருமான் - யானை . ` வருதோள் ` எனவும் , ` அருமுகம் ` எனவும் இயையும் . மானம் - பெருமை . ` மடித்து ` என்பது . ` மட்டித்து ` என விரிக்கப்பட்டது . வீக்கி - கட்டி .

பண் :

பாடல் எண் : 4

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன் , தேவர்கள் தலைவன் , தீமைகளை அழிப்பவன் , மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன் . அலைகள் மடங்கி வீழும் கடல் , மேம்பட்டமலை , நிலம் , வானம் , திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள் , எண்திசைகள் , வானத்தில் உலவுகின்ற காய்கதிர் , மதியம் , பிறவும் , ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

மூவா மருந்து - மூப்பாகாமைக்கு ஏதுவாய மருந்து ; அமிழ்தம் . மறிகடல் - அலைவீசும் கடல் . குலவரை - சிறந்த மலை ; இவை எட்டுத் திசைகளில் திசைக்கு ஒன்றாகச் சொல்லப்படுவன . தாரகை - விண்மீன் ; திரிசுடர்கள் - திரிகின்ற சுடர்கள் ; இரண்டு சூரிய சந்திரர் .

பண் :

பாடல் எண் : 5

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

ஒப்பற்ற துணைவன் , அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன் . பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன்தோன்றும் துணைவர் , ஏனைய சுற்றத்தார் , செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து , பெரியபுலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி , மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப் பயனை அடியோடு நீக்கி , ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

அருந்துணை - ஒப்பற்றதுணை . அருமருந்து - கிடைத்தற்கரிய மருந்து ; அமிழ்தம் . ` தோன்றி ` என்பது ` தோன்றிய பின்னர் ` எனப்பொருள்தரும் . வரும் துணை - உடன்தோன்றும் துணைவர் . பற்று - செல்வம் . வான்புலன் - பெரிய புலன்களின் மேற் செல்லும் மனம் . புலன்கட்குப் பெருமை கடக்கலாகாமை . தன்னைப் பொதுநீக்கி ` நினையவல்லார்க்கு ` என மாற்றியுரைக்க . பொது நீக்கி நினைதலாவது , கடவுளர் பலருள் ஒருவனாக நினையாது , அவர் எல்லார்க்கும் தலைவனாக நினைதல் . மெய்யுணர்வு வாய்க்கப் பெற்றார்க்கன்றி அது கூடாமையின் , ` வல்லோர்க்கு ` என்று அருளிச் செய்தார் . பெருந்துணை - யாதொன்றற்கும் வேறு துணை நாட வேண்டாது , எல்லாவற்றிற்கும் யாண்டும் உடனாய் நின்று உதவும் துணை . இறைவன் அத்தகையோனாதலை , அமணர் இழைத்த தீங்குகள் பலவற்றினும் நாவரசர் கண்டருளினமையை நினைவு கூர்க .

பண் :

பாடல் எண் : 6

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தன் திருமேனியின் இடப்பகுதியாகக் கொண்டவன் . மேம்பட்ட வயிரமலைபோன்ற வடிவினன் . அலரும்பருவத்து அரும்பாய்க் கட்டிய கொன்றைப் பூமாலையான் . நால்வேதமும் ஆறங்கமும் ஆயினான் . வண்டுகள் விரும்பும் நறுமணச்சோலைகள் சூழ்ந்த அழகிய ஆரூரில் மேல் நோக்கும் சுடரொளி போன்றவன் . ஒளிப்பிழம்பு அணைதல் இல்லாத விளக்குப் போன்றவன் . வீடுபேற்று இன்பமாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

வெண்ணீற்றுப் பூச்சில் ஈடுபட்டு . ` கனவயிரக் குன்றனைய காட்சியானை ` என்றருளிச் செய்தார் . திருவாரூரிற் காணவேண்டும் உணர்வுண்டாயினமை , ` ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை ` என்றருளியதனாற் பெறுதும் . பிற இடங்களினும் இவ்வாறே , பின்னர்க் காணுமதனையேனும் , முன்னர்க் கண்டதனையேனும் , அவ்விடங்களில் இறைவர் செய்த அருட்செயல்களையேனும் நினைந்து அருளிச்செய்யுமாற்றினை இடம் நோக்கியுணர்ந்துகொள்க . சுரும்பு - வண்டு . கடிபொழில்கள் - நறுமணச் சோலைகள் . துளக்கு - அசைவு .

பண் :

பாடல் எண் : 7

வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவன் . மேருவை வில்லாகக் கொண்டு , தேவர்களையே அம்பாகக் கொண்டு கொடிய அச்சத்தை விளைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு அம்பினைச் செலுத்திய தலைவன் . அலைகடலில் தோன்றிய விடத்தை உண்டவன் . வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த கூந்தலை உடைய இளைய மகளிரின் கடைக்கண் பார்வையால் அசையாத உள்ளத்தை உடையவராய்ச் சிற்றின்பத்தை அறநீத்த உள்ளத்தார் அடையும் முடிந்த பயனாக இருப்பவன் ஆகிய பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

` எழுநரம்பின் ஓசை` எனப் பின்னர் வருகின்றமையின் , ` வரும் பயன் ` என்றது அவ்வோசைகளான் வரும் பயன் என்க . ` ஏழிசையாய் இசைப்பயனாய் ` ( தி .7. ப .51. பா .10) என்ற அருள் வாக்குங் காண்க . பயன் என்றது , பண்ணென்றாயினும் , பண்ணால் அடையும் இன்பமென்றாயினும் கொள்ளப்படும் . திருமால் அம்பாயும் , காற்றுக் கடவுள் சிறகாயும் , தீக்கடவுள் முனையாயும் அமைந்தமையின் , ` வானவர்கள் முயன்ற வாளி ` என்றருளிச் செய்தார் . ` குன்றவார்சிலை நாணரா அரி வாளிகூர்எரி காற்றின் மும்மதில்வென்ற வாறெங்ஙனே விடையேறும் வேதியனே ` ( தி .2 ப .50. பா .1) என்றருளிச்செய்ததும் காண்க . ` அம்மான் ` என்பதில் அகரம் பலரறி சுட்டு . துறந்தோர் உள்ளப் பெரும் பயன் - துறவுள்ளத்தால் அடையும் முடிந்த பயன் . துளங்காத - கலங்காத .

பண் :

பாடல் எண் : 8

காரானை யீருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

கரிய யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தியவன் . விருப்பம் மருவிய பொலிவினை உடைய காஞ்சி நகரத்தின் ஏகம்பம் என்ற திருக்கோயிலை உகந்து எழுந்தருள்பவன் . அடியவர்களை அண்மித்திருப்பவன் . தம் முயற்சியால் அறிய முயலும் தேவர்களுக்கு அளவிட முடியாதவன் . நிலவுலகத்தவரும் வானுலகத்தவரும் தன்னை வணங்குமாறு கூத்தினைப் பயில்கின்ற ஒளி உருவன் ஆகி எண்ணற்ற திருநாமங்களை உடையவன் . அத்தகைய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

ஆரேனும் - உலகியலில் குலம் முதலியவற்றால் எத்துணை இழிந்தவராயினும் ; இவர்கட்கு இறைவன் அணியனாய் நின்றமையை உண்மை நாயன்மார் பலரது வரலாற்றில் காண்க . ` ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் - ஆரேனுங் காணா அரன் ` என்பது . ( திருக்களிற்றுப்படியார் - 15.) அடியவர் - உடல் பொருள் ஆவி எல்லாவற்றாலும் தம்மை இறைவற்கே யுரியவராக உணர்ந்தொழுகுவார் . அளவிலான் - வரையறைப் படாதவன் ; அகண்டன் என்றபடி . ` நடம் ` என்பது ` நட்டம் ` என விரிக்கப்பட்டது . பரஞ்சுடர் - மேலான ஒளி . ` ஒளி என்பது அறிவே ` என மேலும் ( தாண்டகம் -1) குறிக்கப்பட்டது . ` பெயர் ` என்பது , ` பேர் ` என மருவிற்று . காமரு - விரும்பப்படுகின்ற . பூ - அழகு .

பண் :

பாடல் எண் : 9

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

வெள்ளிய பிறைமதியைச் சூடியவன் . மூவுலகும் தானேயாய் இருக்கும் தலைவன் . பகைவருடைய மும்மதிலையும் அழித்தவன் . விளங்கும் ஒளிவடிவினன் . இடப்பாகத்தது நிறத்தால் மரகதமணி போன்றவன் . இன்பம்பயத்தலால் தேனும் பாலும் போன்றவன் . குற்றாலம் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இளையவன் . கூத்தாடுதலில் வல்லவன் . யாவருக்கும் தலைவன் . சிவஞானியர் ஞானத்தால் அறியப் பெற்றவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

பால் மதி - பால்போலும் ( களங்கமில்லாத ) மதி ; ` பகுப்பாய மதி ` எனலுமாம் . செற்றார்கள் - பகைத்தவர்கள் . செற்றான் - அழித்தான் . மரகதம் - மரகதம்போல்பவன் . ` திகழொளியை , தேனை , பாலை ` என்பதனை மேலே ( தாண் -1) காண்க . குற்றாலம் , பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று . ` கூத்தாட வல்லானை ` என்றருளிச்செய்தது , எல்லா வகை ஆடலும் புரிதல் கருதி . காளியொடு ஆடினமையையும் கருதுக . ` ஞானம் பெற்றான் ` என்றதும் , பான்மை வழக்கு . ` பெற்றார்கள் ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 10

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

கரிய உடல் ஒளியை உடையவனும் சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலும் , நறுமணம் கமழும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தன் அடியையும் முடியையும் காணமுடியாதபடி சீரிய ஒளியை உடைய தீப்பிழம்பாய் நின்ற பழைய மேம்பட்ட ஒளியை உடையவன் . உள்ளத்தில் உள்ள மயக்கத்தைப் போக்கும் ஞான ஒளியானவன் . பெரிய இந்நில உலகையும் , வானத்தையும் , தேவர் உலகையும் உள்ளிட்ட ஏழு உலகங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பாலும் பரவும் எல்லையற்ற பேரொளிப் பிழம்பாய் இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

கார் ஒளிய - கருநிறத்தினனாகிய . ` தொல்லை ஒளி ` என்றருளியது , அவ்விருவர்க்கும் முன்னோன் ஆனதுபற்றி ` ` காணா வண்ணம் நின்ற ஒளி ` என்றருளியது , உயிர்கள் கட்டுற்றுள்ள நிலையில் அவற்றிற்குத் தோன்றாது நின்று மறைத்தலைச் செய்தல் பற்றியும் , ` சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏர்ஒளி ` என்றருளியது , அவை பருவம் எய்திய நிலையில் வெளிப்பட்டு நின்று அருளுதலைச் செய்தல்பற்றியும் , ` ஏழுலகும் கடந்து அண்டத்தப்பால் நின்ற பேரொளி ` என்றருளியது , அவ்வருள் வழிச் சென்று உலகிறந்து நின்ற வழி அநுபவிக்கப்படும் பெரும் பொருளாதல் பற்றியும் என்க . திகழ்தல் உளதாதலையும் , ஏர்தல் தோன்றுதலையும் ( எழுதலையும் ), பெருமை அளவின்மையையும் உணர்த்தும் என்க . கடிக்கமலம் - நறுமணத் தாமரை . ` இருந்தயன் ` என்பதும் பாடம் .
சிற்பி