பொது


பண் :

பாடல் எண் : 1

கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.

பொழிப்புரை :

காலதூதர்களே ! கண்டுகொள்ள அரியவன் . உள்ளத்தைக் கனியச்செய்து முன்பு நான் செய்த அடிமைத் திறத்தைக் கேட்பீரேயானால் தொண்டரைச் சூழாதீர்கள் .

குறிப்புரை :

கண்டுகொள்ளரியான் - காணுதற்கு அரியவன் . கனிவித்து - என்னிடம் கனியும்படியாக அன்பு பாராட்டி . பாழிமை - அடிமைத்திறத்தின் உறைப்பு . கேட்டிரேல் - கேட்டீரானால் . கொண்ட பாணி - பாடுதலை மேற்கொண்ட இசைப்பாடல் . கொடுகொட்டி - தோற்கருவி , வாத்திய விசேடம் . பாணிகொண்ட கொடுகொட்டி என மாற்றி இறைவன் புகழை இசைபாடுவார்க்குப் பக்கவாத்தியமாகக் கொண்ட கொடுகொட்டிதாளம் என்பனவற்றைக் கைக்கொண்ட அடியார்களை என்க . சூழல் - சூழாதேயுங்கள் .

பண் :

பாடல் எண் : 2

நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.

பொழிப்புரை :

அஞ்சியும் அன்புசெய்தும் இறைவனிடத்து அன்புடையவராய் ஈகை செய்யும் அடியவரைத் துன்புறுத்தாது அகலுங்கள் .

குறிப்புரை :

நடுக்கத்துள்ளும் - அச்சத்திலும் அன்பிலும் வாழ்க்கையில் ஏற்படும் எத்தனையோ நடுங்குதற்குரிய துன்பக் காலத்தின் கண்ணும் . நகையுளும் - உலகவர்கள் ஏளனம் செய்து நகைத்த இடத்தும் . நம்பர்க்கு - இறைவனுக்கு . கடுக்க - ஒப்ப . பெருமானது திரு நடனத்தின்போது அடிக்கப்படும் பறையினை ஒப்ப . கல்லவடம் - மணி மாலைபோன்ற உருத்திராக்க மாலை . பறை எனினுமாம் . இடுவார்கட்கு - அணிவார்கட்கு அல்லது கொட்டுபவர்களுக்கு . கொடுக்க என உரைப்பார்களைக் கொள்க என உரைப்பவர்களைக் கொடுக்கும்படிச் சொல்லியவர்களையும் கொள்க என்று கொடுத்தவர்களையும் . இடுக்கண் செய்யப்பெறீர் - துன்பம் செய்யாதீர்கள் . இங்கும் நீங்குமே - இவ்விடத்தை விட்டும் நீங்குக .

பண் :

பாடல் எண் : 3

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.

பொழிப்புரை :

கார்காலத்திலே மலர்தலைக்கொண்ட கொன்றையின் மணமிக்க மலர்களைக் கண்ணியாக அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக ; அவர்களை நீர் சாரப்பெறாதீர் ; நீங்குவீராக .

குறிப்புரை :

கார் காலத்தே மலர்தலைக் கொண்ட . கடிமலர் - மணம் பொருந்திய மலர் . கண்ணியான் - தலை மாலையை உடையவன் . சீர் கொள் நாமம் - சிறப்பைக்கொண்ட திருப்பெயர் . சிவன் என்று - சிவ பெருமான் என்று . அரற்றுவார் - பலகாலும் சொல்வார்கள் . ஆர்களாகிலும் ஆக - யாராயிருந்தாலும் இருக்கட்டும் . நீர்கள் - நீங்கள் . சாரப்பெறீர் - அடையாதீர்கள் இங்கும் நீங்குமே .

பண் :

பாடல் எண் : 4

சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.

பொழிப்புரை :

சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும் , காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல் .

குறிப்புரை :

சாற்றினேன் - சொன்னேன் . நீள்சடைமுடி - நீண்ட சடை முடியை உடைய . சீற்றம் - கோபம் . காமன்கண் சீற்றம் வைத்தவன் - காமனைச் சினந்து எரித்தவன் . சேவடி - திருவடிகளை . ஆற்றவும் - மிகவும் . களிப்பட்ட - களிப்படைந்த . மனத்தராய் - மனத்தை உடையவராய் . போற்றியென்றுரைப்பார் புடை - போற்றி என்று சொல்பவர்களின் பக்கத்தில் . போகல் - செல்லாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 5

இறையென் சொல்மற வேல்நமன் தூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.

பொழிப்புரை :

நமன் தூதுவர்களே ! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர் ; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிர் நீவிர் செல்லேல் .

குறிப்புரை :

இறை - சிறிதும் . மறவேல் - மறவாதீர்கள் . நமன் தூதுவீர் - இயமனுடைய தூதுவர்களே . தமர் - சுற்றம் . நறவம் நாறிய - தேன் நிறைந்த மலரின் மணம் கமழ்கின்ற . நல்நறும் சாந்திலும் - நல்ல மணம் பொருந்திய சந்தனத்தைக் காட்டிலும் . நிறைய - நிரம்ப . நீறணிவார் எதிர் - திருநீறணிவார் எதிரே . செல்லல் - செல்லாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 6

வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.

பொழிப்புரை :

வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந் திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும் , தூபமும் , மாலையும் , தண்ணிய நறுவிய சாந்தமும் , பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல் .

குறிப்புரை :

வாமதேவன் - சிவன் . சதாசிவமூர்த்தியாகிய இறைவனது வடக்கு நோக்கிய திருமுகம் வாமதேவமுகம் எனப்படும் . வள நகர் - அவன் எழுந்தருளியகோயில் . காமம் - சிவனடியன்றி வேறொன்றில் செல்லாத பற்று . ஒன்று - ஒன்றும் . ஏமம் - திரு நீற்றுக்காப்பு .

பண் :

பாடல் எண் : 7

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நம தீச னடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.

பொழிப்புரை :

படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே ! நமது ஈசன் அடியரை அடையாதீர் ; இடபத்தை ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக .

குறிப்புரை :

படையும் - சூலமும் . பாசமும் - காலபாசமும் . பற்றிய - பிடித்த . கையினீர் - கையை உடையவர்களே . அடையன் மின் - அடையாதீர்கள் . விடைகொள் ஊர்தியன் - இடபவாகனன் . புடை புகாது - பக்கம் செல்லாது . போற்றியே போமின் - உங்களைப் பாதுகாத்துச் செல்லுங்கள் . அவர்களை அணுகில் இயமனுக்கு நிகழ்ந்த தண்டனை அவர்கட்கும் கிடைக்கும் ஆதலால் போற்றிச் செல்லுங்கள் என்றார் .

பண் :

பாடல் எண் : 8

விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி யருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

பொழிப்புரை :

வித்தையாவதும் , விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே ; அச்சம் கொண்டு , பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக .

குறிப்புரை :

விச்சை - வித்தை , ஞானம் , கல்வி , வேட்கைமை - பக்தி . விரும்புந்தன்மை . நிச்சல் - நாடோறும் . நினைப்பதே - சிந்திப்பதேயாகும் . அச்சம் எய்தி - பயமெய்தி . அருகணையாது - பக்கம் செல்லாமல் . நீர் - நீங்கள் . பிச்சை புக்கவன் - பிக்ஷாடனராய பெருமான் . பேணும் - விரும்பி வழிபடுங்கள் .

பண் :

பாடல் எண் : 9

இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.

பொழிப்புரை :

இன்னும் கேட்பீராக ; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா .

குறிப்புரை :

இன்னம் கேண்மின் - இன்னமும் கேளுங்கள் . மனத்துடன் - நிறைந்த மனத்தோடு . ஏத்துவார் - வணங்குபவர்கள் . மன்னும் - என்றும் நிலைத்து நிற்பதாகிய . மந்திரந்தன்னில் - மந்திரத்தில் . ஒன்று வல்லாரையும் - ஓரெழுத்து வல்லவர்களையும் . சாரல் - அடையாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 10

மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடி யேயலால்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.

பொழிப்புரை :

மற்றும் கேட்பீராக ; மனத்திலே வேறொன்றும் தாங்குதலின்றி மேனிமுழுதும் பூசிய திருநீற்றொடு கோவணமும் கொண்டு ஒப்பற்ற தனி இடபத்தை உடைய இறைவன் திருவடிகளே அல்லால் வேறு பற்று ஒன்றும் இல்லாதவர்களாகிய அடியார்கள்மேல் படைகொண்டு போகவேண்டா .

குறிப்புரை :

மற்றும் - வேறொன்றும் . மனப்பரிப்பு - மனத்தில் பிறிது ஒரு நினைப்பு . சுற்றும் பூசிய - உடல் முழுதும் பூசிய . பற்றொன்று இல்லி கள்மேல் - இறைவனையன்றிப் பற்றுக்கோடு இல்லாதவர்களிடத்தே ஆசையெனலுமாம் . படை போகல் - படைகொண்டு செல்லாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 11

அரக்க னீரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலும்
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே

பொழிப்புரை :

இராவணனை நெரித்த பெருமானது அடி யவர்களைவிட்டு அகலுங்கள் : நீங்கள் ஏதேனும் இடையூறு செய்ய முயன்றால் அவன் திருவடி சுடும் .

குறிப்புரை :

ஈரைந்தலை - பத்துத்தலை. ஓர்தாளினால் - ஒரு திருவடி விரலால். சுருக்கு - பாசத்தால் பிணித்தல். நெருக்கி ஊன்றி இட்டான் - மலையின்கீழ் அகப்படச்செய்து ஊன்றி வருத்தியவன். தமர் - அடியார். நிற்கிலும் - நின்றாலும். சுருக்கெனாது - விரைவாகப் போதல் இன்றி. சுருக்கெனில் - உமது தொழில்களில் ஏதேனும் செய்ய முயன்றால். சூடும் - சுடும் என்பது நீண்டது. திருவடியை நினைப்பித்த வாறு.
சிற்பி