திருவன்பிலாலந்துறை


பண் :

பாடல் எண் : 1

வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை யன்பிலா லந்துறைக்
கோன்எஞ் செல்வனைக் கூறிட கிற்றியே.

பொழிப்புரை :

நெஞ்சே ! வானத்தைச் சேர்ந்த பிறை மதியைச் சூடிய மைந்தனாகிய சிவபெருமானை நினையும் வல்லமை உடையை இல்லை ; நீ கெடுவாய் , பஞ்சகவ்வியத் திருவபிஷேகம் கொள்வானாகிய திரு அன்பில் ஆலந்துறைக்கோனாம் எம் செல்வனைக் கூறிடும் வல்லமை பெறுவாயாக .

குறிப்புரை :

வானம்சேர் - ஆகாயத்தைச் சேர்ந்துள்ள . மைந்தன் - இளையன் , வலியன் . நெஞ்சே நீ - மனமே நீ . கெடுவாய் - கெட்டுவிடுவாய் . நினைகிற்கிலை - நினையாமல் இருக்கின்றாய் . நீ நன்மையடைதற் பொருட்டுக் கூறவில்லையே ஆதலால் கெடுவாய் என இயைத்துக் கூறுக . ஆனஞ்சு - பஞ்சகவ்வியம் . கோன் - தலைவனாகிய . அன்பிலாலந் துறை இறைவன் திருப்பெயரைப் பலகாலும் சொல் என்பதாம் .

பண் :

பாடல் எண் : 2

கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொரு ளன்பிலா லந்துறை
நார ணற்கரி யானொரு நம்பியே.

பொழிப்புரை :

அன்பிலாலந்துறையில் திருமாலுக்கும் அரியாராகிய ஒப்பற்ற நம்பி , உலககாரணரும் , கருத்தில் உள்ளவரும் , பிரமகபாலம் கொண்ட கையினரும் , யானை உரிபோர்த்த மணாளரும் , வேதப்பொருள் ஆயவரும் ஆவர் .

குறிப்புரை :

காரணத்தர் - உலகின் நிமித்த காரணராயிருப்பவர் . கருத்தர் - எல்லாவற்றிற்கும் மூலகாரணர் . கபாலியார் - பிரமனது மண்டையோட்டைக் கையின்கண் ஏந்தியவர் . வாரணத்து - யானையினது . உரி - தோல் . ஆரணப்பொருள் - வேதங்களின் பொருளாய் விளங்குபவன் . நாரணன் - திருமால் . ஒருநம்பி - ஒப்பற்ற சிறந்த ஆண் மகனாயிருப்பவன் .

பண் :

பாடல் எண் : 3

அன்பின் ஆனஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்
அன்பி லானையம் மானையள் ளூறிய
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.

பொழிப்புரை :

அன்பினால் பஞ்சகவ்வியம் ஐந்துடன் திரு முழுக்குக் கொண்டவனும் , எலும்புடைய யானையின் உரியை உரித்துக்களைந்தவனும் ஆகிய , அன்பில் ஆலந்துறையில் உள்ள அம்மானை , நெஞ்சில் அள்ளூறி அன்பினால் நினைந்தவர்களே அறிந்தவர்கள் .

குறிப்புரை :

அன்பின் - அன்பினாலே . ஆன் அமைந்து அஞ்சுடன் ஆடிய - பசுவிடமுளதாய ஐந்து பொருள்களை ஏனைய பொருள்களோடு அபிடேகம் கொண்ட . என்பின் - எலும்புகளாகும்படி . உரித்துக் களைந்தவன் - தோலைஉரித்து நீக்கியவன் . ஆனையை உரித்து என்பின் யானையாகச் செய்தவன் . அன்பிலானை - அன்பில் என்ற தலத்து எழுந்தருளியவன் . அம்மானை - தலைவனை . அள்ளூறிய - செறிந்து ஊறிப் பெருக்கெடுத்த ; அன்பு என்க . ஆர் அறிந்தார்கள் - யார் உண்மையில் உணர்வாராயினார்கள் .

பண் :

பாடல் எண் : 4

சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை
பங்க னாரடி பாவியேன் நானுய்ய
அங்க ணனெந்தை யன்பிலா லந்துறைச்
செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.

பொழிப்புரை :

உள்ளதும் ஐயம் ; சாவதேமெய் ; ஆதலால் உமை பங்கரும் , அழகிய கண்ணை உடையவரும் , எந்தையும் , அன்பிலாலந் துறையில் சிவந்த கண்ணை உடையவருமாகிய பெருமான் அடிகளைப் பாவியேன் நான் உய்யச் சேரவும் வல்லனே !.

குறிப்புரை :

உள்ளது சங்கை - இவ்வுலக வாழ்வில் இருப்பது ஐயம் . சாவது மெய் - இறப்பது நிச்சயம் . மெய் - உண்மையே . உமை பங்கனார் - பார்வதி சமேதராய பெருமான் . அடி - திருவடிகளை . பாவியேன் - சிந்தியேன் . அங்கணன் - அழகிய அருட்கண்ணன் . எந்தை - எங்கள் தந்தை . செங்கணார் - சிவந்த கண்களை உடைய . வல்லனே - வல்லனோ என்க .

பண் :

பாடல் எண் : 5

கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்க ரையின ரன்பிலா லந்துறை
நக்கு ருவரும் நம்மை யறிவரே.

பொழிப்புரை :

கொக்கிறகை உடையவரும் , குளிர் மதிப் பிறையினைச் சடையிற் கொண்டவரும் , சினம்மிக்கு அரக்கர் முப்புரங்களை எரித்தல் செய்தவரும் , அக்கினை அரைக்கசைத்தவருமாகிய அன்பிலாலந்துறையில் திகம்பர உருவினராம் இறைவர் நம்மை அறிவர் .

குறிப்புரை :

கொக்கிறகர் - கொக்கு வடிவில் நின்ற அசுரனை அழித்து அவன் இறகினைச் சூடியவர் சிவபெருமான் ஆதலின் கொக்கிறகர் என்றார் . குளிர்மதி - குளிர்ந்த பிறைமதி . மிக்க - செருக்கிய . அரக்கர் - திரிபுராரிகள் . புரம் - மூன்று கோட்டைகள் . எரிசெய்தவர் - எரியச்செய்தவர் . அக்கரையினர் - அக்குமணி மாலையை அரையிலே கட்டியவர் . நக்குருவர் - நகுதற்குக் காரணமான தோற்றத்தோடு கூடியவர் . நம்மை அறிவர் - நம்மை அறிந்து திருவருள் செய்வர் .

பண் :

பாடல் எண் : 6

வெள்ள முள்ள விரிசடை நந்தியைக்
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வய லன்பிலா லந்துறை
உள்ள வாறறி யார்சில ரூமரே.

பொழிப்புரை :

கங்கையாகிய வெள்ளம் உள்ள விரிசடையோடு கூடிய நந்தியாகியபெருமானைக் கள்ளமுள்ள மனத்தவர் காணும் திறமை இல்லாதவர்கள் ; சேறு நிறைந்த வயலை உடைய அன்பிலாலந் துறையின்கண் உள்ளவாறு சில ஊமையர் அறியார் .

குறிப்புரை :

வெள்ளம் - கங்கை . நந்தி - சிவபெருமானுக்குரிய பெயர் . கள்ளம் - வஞ்சகம் . காண்கிலார் - காணமாட்டார் . அள்ளல் - சேறு . ஆர் - பொருந்திய . உள்ளவாறு - உள்ளபடி .

பண் :

பாடல் எண் : 7

பிறவி மாயப் பிணக்கி லழுந்தினும்
உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே
அறவ னெம்பிரா னன்பிலா லந்துறை
மறவா தேதொழு தேத்தி வணங்குமே.

பொழிப்புரை :

பிறவியாகிய பொய்ப்பிணக்கில் அழுந்தினாலும் உறவெல்லாவற்றையும் சிந்தித்து எண்ணி மகிழாமல் , அறவடிவாகிய எம்பெருமானது அன்பிலாலந்துறையை மறவாது தொழுது ஏத்தி வணங்குவீராக .

குறிப்புரை :

பிறவி மாயப்பிணக்கில் - பிறவியாகிய பொய்மையை உடைய மாறுபாட்டுள் . அழுந்தினும் - அழுந்தினாலும் . உறவெலாம் சிந்தித்து - உறவினராயவர் எல்லாரையும் எண்ணி . உன்னி - அவர்களையே மீள மீள நினைத்து . உகவாதே - மகிழாமல் . அறவன் - அறவடிவன் . வணங்கும் - வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 8

நுணங்கு நூலயன் மாலு மிருவரும்
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்க னெம்பிரா னன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.

பொழிப்புரை :

நுண்ணிய நூல் பல கற்ற பிரமனும் திருமாலுமாகிய இருவரும் மாறுபட்டு எங்கும் திரிந்து இளைத்தும் காணும் திறமையற்றனர் ; அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன் அன்பிலாலந்துறையை நும் வினைகள் மாய்ந்து அறும் வண்ணம் வணங்குவீராக .

குறிப்புரை :

நுணங்கு - நுண்ணிய . நூல் - வேதநூல்களை ; ஓதும் . அயன் - பிரமன் . பிணங்கு - மாறுபட்டு . எய்த்தும் - வருந்தி இளைத்தும் . காண்கிலா - காணாத . அணங்கன் - அணங்கை உடையவன் . நும் வினை மாய்ந்தறும் வண்ணம் வணங்கும் என்க . வணங்கும் - வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 9

பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக்
கையன் மாருரை கேளா தெழுமினோ
ஐய னெம்பிரா னன்பிலா லந்துறை
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.

பொழிப்புரை :

எல்லாப் பொய்யும் உரைக்கும் சமணரும் , சாக்கியருமாகிய சிறுமை உடையவர்கள் பேச்சைக் கேளாது எழுமின் ; ஐயனும் எம்பெருமானும் அன்பிலாலந்துறையில் எழுந்தருளியுள்ள மெய்யனுமாகிய இறைவன் சேவடி ஏத்துவார் மெய்யர் ஆவர் .

குறிப்புரை :

பொய்யெலாம் - பொய்யாயின பலவற்றையும் . சமண் சாக்கியக் கையன்மார் - சமண மதக் கொள்கையினராய சாக்கியர் என்னும் பிரிவினர் . எழுமின் - புறப்படுங்கள் . மெய்யன் - உண்மை வடிவானவன் . ஓ - அசை

பண் :

பாடல் எண் : 10

இலங்கை வேந்த னிருபது தோளிற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்க லெம்பிரா னன்பிலா லந்துறை
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.

பொழிப்புரை :

இலங்கை அரசனாம் இராவணன் இருபது தோள்களும் இற்றுச் சுழலும்படியாகத் திருக்கயிலைமாமலை மேல் திருவிரலை ஊன்றியவன் ஆகிய கொன்றைமாலையணிந்த பெருமானுடைய அன்பிலாலந்துறையை வலங்கொண்டு வழிபடுவாரைத் தேவர்கள் வலம் கொண்டு வணங்கிப் போற்றுவர் .

குறிப்புரை :

இலங்கை வேந்தன் - இராவணன். இற்று - நெரிந்து. மலங்க - வருந்த. மாமலைமேல் - சிறந்த திருக்கயிலை மலையின் மேல். அலங்கல் - மலர்மாலை. வலங்கொள்வாரை - வலமாகச் சுற்றி வணங்குவாரை.
சிற்பி