திருமங்கலக்குடி


பண் :

பாடல் எண் : 1

தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே.

பொழிப்புரை :

மணம் உடைய மலரைச்சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியோடு மங்கலக்குடியில் மேவிய மணவாளன் , தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் பின் நிறைந்த அருள் புரிந்தவன் .

குறிப்புரை :

தங்கலப்பிய - தமக்குள்கலந்த . தம்மோடு உறவு கலந்தவனாகிய . அங்கு - அவ்விடத்திலேயே . அலக்கழித்து - சின்னா பின்னம் செய்து . ஆரருள் செய்தவன் - பின்னர் அவனுக்குப் பெறுதற்கரிய திருவருளைச் செய்தவன் . கொங்கு - தேன் . அலர் - மலர் . குழல் - கூந்தல் . கொம்பனையாள் - பூங்கொம்பு போன்றவளாகிய உமை .

பண் :

பாடல் எண் : 2

காவி ரியின் வடகரைத் காண்தகு
மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத்
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.

பொழிப்புரை :

காவிரியின் வடகரையில் காணத்தக்க மாமரங்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில் , திருமாலாகிய தேவும் , பிரமனும் தேடி அறியவியலாத தூய எரிவிடும் சுடரை உடைய சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் இறைவன் .

குறிப்புரை :

காண்தகு - காணத்தக்க . மா - வண்டு . விரியும் - படரும் , அல்லது மாமரங்கள் விரிந்து வளரும் என்றோ அடர்த்தியால் கருமை விரியும் என்றோ கொள்க . தேவரி - தெய்வத்தன்மை பொருந்தியவராகிய திருமால் . தூஎரி - தூய நெருப்பு . தன்கண் அழுக்கு இன்றி இருப்பது பிறிதில்லை ஆகலின் தூஎரி என்றார் . சுடர்ச்சோதி - ஒளியையுடைய விளக்கு . உள்சோதி - ஆன்ம சைதன்யத்தினுள் நின்று செலுத்தும் சிவசைதன்யன் . உயிர்க்குயிரானவன் என்றபடி .

பண் :

பாடல் எண் : 3

மங்க லக்குடி யீசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.

பொழிப்புரை :

மங்கலக்குடி இறைவனை மாகாளியும் , சூரியனும் , விண்ணும் மண்ணும் நிகராய சங்கு , சக்கரதாரியாகிய திருமாலும் , பிரமனும் , அகத்தியனும் அருச்சித்தார்கள் .

குறிப்புரை :

மாகாளி - பெருமைக்குரியவளாகிய காளிதேவி . வெங்கதிர்ச் செல்வன் - சூரியன் . விண்ணொடு மண்ணும் - தெய்வலோகத் திலுள்ளாரொடு நிலவுலகிலுள்ளவர்களும் . நேர் - நேர்ந்து . சங்கு சக்கரதாரி - சங்கு சக்கரம் ஆகியவற்றைத் தரித்தவனாகிய திருமால் . சதுர்முகன் - நான்முகனாகிய பிரமன் . அர்ச்சித்தார் - மலர்தூவி வழிபட்டார் .

பண் :

பாடல் எண் : 4

மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி
நஞ்ச மாரமு தாக நயந்துகொண்
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.

பொழிப்புரை :

நீண்ட கடல் சூழ்ந்த மங்கலக்குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய ( பெருவீரனாகிய ) பெருமான் , ஆலகாலவிடத்தைச் செறிந்த அமுதமாக விரும்பி உட்கொண்டு , பஞ்சகவ்வியம் ஆடலை விரும்பி அடியேனுடைய நெஞ்சத்தை ஆலயமாகக்கொண்டு நிலை பெற்றான் .

குறிப்புரை :

மஞ்சன் , மைந்தன் என்பதன் போலி . வார்கடல் - நீண்ட கடல் . ஆரமுதாக - பெறுதற்கரிய அமுதமாக எண்ணி . நயந்து கொண்டு - விரும்பி உண்டு . அஞ்சு - பஞ்சகவ்வியம் . ஆடலமர்ந்து - அபிடேகம்கொள்ள விரும்பி . நின்றது - எழுந்தருளியது .

பண் :

பாடல் எண் : 5

செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே.

பொழிப்புரை :

செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியில் , அருட் செல்வம் நிறைந்த சிவ ஒழுக்கம் உடையவராய்ச் செல்வம் மல்கும் செழித்த மறையோர் தொழத் திருவருட்செல்வனாகிய பெருமான் உமாதேவியோடும் திகழ்வது திருக்கோயிலிலாகும் .

குறிப்புரை :

செல்வம் - இயற்கைச்செல்வங்கள் . செல்வம் - பேரின்பம் . உண்டாக்கும் - மல்கும் . சிவநியமம் - சிவத்தைச் சார்விக்கும் நெறி . செல்வம் - மழைவளம் . மல்கும் - பொருந்தும் . செல்வன் - மங்கல வடிவினன் .

பண் :

பாடல் எண் : 6

மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரு முரைக்கவல் லார்களும்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.

பொழிப்புரை :

நிலைபெற்ற புகழை உடைய மங்கலக்குடியில் நிலைபெற்ற பின்னுதல் உடைய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை எண்ணுவாரும் , சொல்லும் வல்லமை உடையாரும் , நன்னெறித் தொடர்பு எய்தத் துன்னுவார் ஆவர் .

குறிப்புரை :

மன்னு - நிலைபெற்ற . சீர் - சிறப்புப் பொருந்திய . மன்னிய - எழுந்தருளிய . பின்னு - முறுக்கிய . வார் - நீண்ட . உன்னுவார் - நினைப்பவர் . நன்னெறி - சிவஞானம் . தொடர்வு எய்த - காப்பு உண்டாக . துன்னுவார் - அடைவார் . திருவைந் தெழுத்தை ஓதுவார் சிவஞானத் தொடர்புபெறுவர் என்க .

பண் :

பாடல் எண் : 7

மாத ரார்மரு வும்மங் கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

பொழிப்புரை :

பெண்கள் பொருந்துகின்ற மங்கலக்குடியின் ஆதிநாயகன் , தேவர்கள் தலைவன் ; வேதநாயகன் ; வேதியர்நாயகன் ; பூதநாயகன் ; புண்ணியமூர்த்தி ஆவன் .

குறிப்புரை :

மாதரார் - பெண்கள் . மருவும் - பொருந்தி வாழும் . ஆதிநாயகன் - முதன்மைத் தலைவன் . அண்டர்கள் நாயகன் - தேவர்கள் தலைவன் . வேதியர் - வேதமோதுபவர் . பூதநாயகன் - பசுபதி .

பண் :

பாடல் எண் : 8

வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

பொழிப்புரை :

வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக் குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான் , மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன் .

குறிப்புரை :

வண்டுசேர் பொழில் - வண்டுகள் மொய்க்கும் சோலை . விண்ட - தன் எண்ணத்தின் மாறுபட்ட . தாதை - தந்தை . தாள் அற - கால் இருதுண்டாக . வீசிய - வெட்டிய . துண்டமாமதி - பிறைமதி .

பண் :

பாடல் எண் : 9

கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேச மேது மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங் கலக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.

பொழிப்புரை :

மங்கலக்குடி இறைவன் , தம் சிறுமை நோக்கிக் கூசாதவர்களும் , குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , அன்பு சிறிதும் இல்லாதவர்களும் , கீழானவர்களும் , குற்றம் உடையவர்களுமாகிய சமணரோடு என்னை வேறுபடுக்க , உய்ந்தேன் .

குறிப்புரை :

கூசுவாரலர் - பாவம் செய்ய மனம் கூசமாட்டார்கள் . நேசம் - அன்பு . நீர் இழிதகைமையுடையவர் . வெறுக்கத்தக்கவர் . மாசர் பால் - உடலும் அறிவும் குற்றமுடையவர் . வேறுபடுக்க - பிரிக்க .

பண் :

பாடல் எண் : 10

மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.

பொழிப்புரை :

மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும் , தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான் .

குறிப்புரை :

அலைத்து - அசைத்து. எடுக்குற்ற - தூக்குதலைச் செய்த. கரம் - கைகள். தகர்ந்து - சிதறி. அலைத்து அழுது - தன் தவறுக்கு அடித்துக்கொண்டு அழுது. உய்ந்தான் - பிழைத்தான்.
சிற்பி