திருப்பூவனூர்


பண் :

பாடல் எண் : 1

பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான்
நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.

பொழிப்புரை :

பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் பரவியவர் , தம் பாவங்கள் சிதைந்துகெட்டுத் தேவர் தலைவனாகிய இந்திரனைவிட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர் .

குறிப்புரை :

புனிதன் - தூயவன் . நூறுநூறாயிரம் - ஒரு கோடி . நண்ணினார் - ஓதியவர் . பாறி - அழிந்து . பறைய - நீங்க . ஏ அசை . தேவர்கோ - இந்திரன் .

பண் :

பாடல் எண் : 2

என்ன னென்மனை யெந்தையெ னாருயிர்
தன்னன் தன்னடி யேன்தன மாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணா னியற்கையே.

பொழிப்புரை :

பூவனூர் மேவிய இறைவன் என்னை உடையவன் ; என் மனையாளாகவும் உள்ளவன் ; என் தந்தை ; என் உயிர் ; தனக்குத்தானே உவமையானவன் ; தன்னடியேனுக்குச் செல்வமாக உள்ள பொன்னன் ; தன் இயல்பினால் இன்னதன்மையன் என்று அறியவியலாதவன் ஆவன் .

குறிப்புரை :

என்னன் - எனக்குற்ற துணையாயிருப்பவன் . என் மனை - என்மனைவி போன்றவன் . ` அப்பன்நீ அம்மை நீ ... ... ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ ` ( தி .6. ப .95. பா .1). எந்தை - எனக்குத் தந்தையாயிருப்பவன் . என் ஆருயிர் - என் அரிய உயிரை . தன்னன் தன்னடியேன் - தனக்குரிய பொருளாயும் தன்னடியவனாயுமுள்ள எனது . தன் - அப்பெருமானுடைய அடியேன் என்க . தனமாகிய பொன்னன் - அடியேனுடைய பெறுதற்கரிய சேமநிதியாகிய பொன்னாயிருப்பவன் . இயற்கை - இயல்பு .

பண் :

பாடல் எண் : 3

குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூ ரீசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.

பொழிப்புரை :

குற்றங்களே மிகப் பெருகிக் குணம்பல கூடாதவர்களே ! புற்றிற்பொருந்திய பாம்பினைச் சூடியவனாகிய பூவனூர் இறைவன் திருநாமத்தை நீர் மடிவதன் முன்பே கற்று வாழ்த்துவீராக ; அங்ஙனம் வாழ்த்தினால் நீர் செய்த வினைகளை மாய்க்கலாம் .

குறிப்புரை :

குற்றம் கூடி - குற்றத்தைக் கூடி . குணம்பல கூடாதீர் - பல நல்ல குணங்களைச் சேராது வாழ்வோரே ! மற்றும் தீவினை செய்தன - முன்பிறப்பிற் செய்த வினைகளோடு இப்பிறப்பிற் செய்தன வாய தீயவினைகளையும் . மாய்க்கலாம் - அழிக்கலாம் . கழிவதன் முன்னம் - இறப்பதன் முன்பாக . கற்று வாழ்த்தும் என வினைமுடிவு செய்க . வாழ்த்தும் - வாழ்த்துங்கள் .

பண் :

பாடல் எண் : 4

ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.

பொழிப்புரை :

பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமுழுக்குக் கொள்வானும் , தூய வெண்ணீறு செறிந்த செம்மேனியனும் , விரிகின்ற பூணூல் மேவியவனும் ஆகிய பெருமானுக்குரியதும் வெண்ணியின் தென்கரைக் கண்ணதுமாகிய பூவனூரின்கண் புக்குத்தொழும் அடியவர்களின் வினை அவரைவிட்டு நீங்கும் .

குறிப்புரை :

ஆவின்மேவிய ஐந்து - பஞ்சகவ்யம் . அமர்ந்து - விரும்பி . ஆடுவான் - அபிடேகம் கொள்வான் . துதைந்த - செறிந்து பொருந்திய . மேவநூல் விரி - பொருந்த நூல்களில் சிறப்பிக்கப்படும் . வெண்ணியின் - வெண்ணியாற்றின் .

பண் :

பாடல் எண் : 5

புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர்சீர் காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே.

பொழிப்புரை :

புல்லமும் , ஊர்தியூரும் , பூவனூரும் , புனல் வளம் உடைய நல்லமும் , ஊர்திநல்லூரும் , நனிபள்ளியூரும் , தில்லையூரும் , திருவாரூரும் , சீர்காழியும் , நல்லவல்லமும் ஆகியவற்றைக் கூறியவளவிலேயே வல்வினை நீங்கும் .

குறிப்புரை :

புல்லம் - எருது . எருது வாகனனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர்கள் இவை . இத்தலங்களை நினைத்துச்சொல்ல வினை மாயும் என்க .

பண் :

பாடல் எண் : 6

அனுச யப்பட் டதுவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரில்தலை யான மனிதரே.

பொழிப்புரை :

கனிந்த மனத்தொடு கண்கள் நீர் நிறைந்து , ஐயப்பட்டபொருளன்று இது ; தெளிந்தது என்று கருதிப் பூவனூர்ப் புனிதனைப் போற்றும் மனிதர்களே எல்லா மனிதர்களிலும் தலையான மனிதராவர் .

குறிப்புரை :

அனுசயப்பட்டு - ஒருவரோடு ஒருவர் பகைமையுற்று . அது இது என்னாதே - அது நன்று இது தீது , இது நன்று அது தீது என்று மாறுபடாமல் . உலகியல் வாழ்விலும் சமய நெறியிலும் இது பொருந்துவதொன்று . உலகில் இவ்வாறு போட்டியிட்டுப் பகைமை கொள்வார் பலர் . சமயநெறியிலும் ஒரு சமயத்தவர் மற்றவரை இகழ்தல் உண்டு ஆதலின் இரு நெறியார்க்கும் பொருந்துவதொன்று இது . கனி மனத்தொடு - கனிந்த மனத்தொடு . தலையான மனிதர் - சிறந்த மனிதர் .

பண் :

பாடல் எண் : 7

ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.

பொழிப்புரை :

அழகிய பூவனூர் இறைவன் ஆதியில் தோன்றியவனும் , தேவர்களால் அருச்சிக்கப்படுபவனும் , வேதம் ஓதும் நாவினனும் , மலைமங்கையை ஒரு பாதியிற் கொண்டவனும் , பரவிய பெரும் படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன் .

குறிப்புரை :

ஆதிநாதன் - முதன்மையான தலைவன் . அர்ச்சிதன் - அர்ச்சிக்கப்படுபவன் . வேதநாவன் - வேதமோதும் திருவாயை உடையவன் . வெற்பின் மடப்பாவை - இமயமலை அரசனின் புதல்வி . பசந்த - மிகுந்த . பூதப்படைநாதன் என்க .

பண் :

பாடல் எண் : 8

பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.

பொழிப்புரை :

பூவனூரும் , குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும் , நள்ளாறும் , நன்னிலமும் , கோவலூரும் , குடவாயிலும் , கொடுமுடியும் , மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள் ; காண்பீர்களாக . மூவலூர் வைப்புத்தலம் .

குறிப்புரை :

பூவனூர் முதலாய ஊர்கள் முக்கண்ணனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர்கள் என்க .

பண் :

பாடல் எண் : 9

ஏவம் ஏது மிலாஅம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.

பொழிப்புரை :

விதிவிலக்குகள் ஏதும் இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும் ; பாவகாரிகளுமாகியோர் சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர் புகப்பெற்ற நாள் இன்றேயாகும் .

குறிப்புரை :

ஏவம் - விதிவிலக்குகள் . ஏதும் இலா - எதுவும் இல்லாத . சமண் ஏதலர் - சமணர்களாகிய அயலவர் . பாவகாரிகள் - பாவத்தைச் செய்பவர்கள் . சொல்வலை - சாதுரியப்பேச்சாகிய வலை ; பொய்யைப் பிறர் மயங்க மெய்போலக் காட்டுதல் . நெறி - சமயம் . சொல்வலைப்பட்ட பின் பூவனூர் புகுந்த நாள் இன்று .

பண் :

பாடல் எண் : 10

நார ணன்னொடு நான்முக னிந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் , இந்திரனும் , விநாயகரும் , முருகனும் வணங்கும் கழலை உடைய நிறைவானவனும் , திருப்பூவனூரில் பொருந்திய உலககாரணனுமாகிய பெருமானே , என்னை ஆளுடைய காளைபோல்வான் .

குறிப்புரை :

வாரணன் - யானைமுகக் கடவுளாகிய விநாயகர் . பூரணன் - எல்லாவற்றாலும் நிரம்பியவன் . காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணமாயிருப்பவன் . காளை - காளை போன்றவன் .

பண் :

பாடல் எண் : 11

மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.

பொழிப்புரை :

மேகத்தையொத்த நிறத்தை உடைய இராவணன் திருக்கயிலையைப் புகுந்தெடுத்தலும் , பூவனூர் இறைவன் திரு வடியில் மற்ற விரல்களினும் சிறப்புமிக்குள்ள பெருவிரலைச் சற்று ஊன்றுதலும் தன் உறுப்பெல்லாம் பிளந்து வருந்தியபிறகு பாடி அருள்பெற்று உய்ந்தான் .

குறிப்புரை :

மைக்கடுத்த நிறத்து - கரிய இருளை ஒத்த நிறத்தினை உடைய. புக்கு - அடிவரையில் புகுந்து. மிக்கடுத்த விரல் - இராவணனது செருக்கை அழிக்கப் புகுந்த விரல். பக்கடுத்த பின் - தலைகள் பிளவு ஏற்பட்டு நெரிந்தவுடன். உய்ந்தான் - உயிர் பிழைத்தான்.
சிற்பி