திருவேட்களம்


பண் :

பாடல் எண் : 1

நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

பொழிப்புரை :

திருவேட்களத்துள்ளுறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக ; அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும் ; என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் .

குறிப்புரை :

நாடொறும் நன்று - நாள்தொறும் நன்மையே உண்டாகும் . என்றும் - எப்பொழுதும் . துன்று - நெருங்கிய . பொற்சடை - பொன்போன்ற சடை எனலுமாம் . தொழுமின் - வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 2

கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகி லெனக்கிட ரில்லையே.

பொழிப்புரை :

கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும் , மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும் , அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின் , எனக்கு இடர்களே இல்லை .

குறிப்புரை :

கருப்புவெஞ்சிலை - கரும்பாகிய கொடிய வில்லையுடைய . காமன் - மன்மதன் . காய்ந்தவன் - எரித்தவன் . பொருப்பு வெஞ்சிலையால் - இமையவில்லால் . புரம் - மூன்று கோட்டைகளை . செற்றவன் - அழித்தவன் . விருப்பன் - விரும்புதற்கு உரியவன் . இடர் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 3

வேட்க ளத்துறை வேதிய னெம்மிறை
ஆக்க ளேறுவ ரானைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

பொழிப்புரை :

வேட்களத்துறையும் வேதியனும் , எம் இறைவனும் , திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர் ; பஞ்சகவ்வியம் ஆடுவர் ; பூக்களைக்கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர் .

குறிப்புரை :

எம் இறை - எங்கள் தலைவன் . ஆக்கள் ஏறுவர் - விடை ஏறுவர் . ஆனைஞ்சு - பஞ்சகவ்வியம் . ஆடுவர் - அபிடேகம் கொள்வர் . மிடறு - கழுத்து .

பண் :

பாடல் எண் : 4

அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே.

பொழிப்புரை :

நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும் ; காண்பீர்களாக ; அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை ; அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம் .

குறிப்புரை :

அல்லல் - பிறவி முதலிய துன்பங்கள் . அருவினை - நீக்குதற்கரிய இருவினைகள் ; அல்லல் வினை இவற்றை நீக்கும் என்க . மல்கு - மிக்க . வல்லராகில் - முயற்சியுடையரானால் ; அறிவாற்றல் உடையவரானால் ; வேட்களம் சென்று பெருமானைக் கைதொழுதலே வழியாகும் .

பண் :

பாடல் எண் : 5

துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.

பொழிப்புரை :

நம்மவராகிய திருநீலகண்டனும் , என் பொன் போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால் , இனித் துன்பமும் இல்லை ; துயரங்களும் இல்லை .

குறிப்புரை :

துன்பம் - பிறவித்துன்பம் . துயர் இல்லையாம் - ஏனைய துன்பங்கள் இல்லையாகும் . இனி - இனி நாம் செய்ய வேண்டுவது . நன்மணி கண்டனார் - நல்ல நீலமணிபோலும் கழுத்தையுடையவர் . என்பொனார் - எனக்குப் பொன்னாயிருப்பவர் . சேவடி - சிவந்த திருவடி . இருப்பது இன்பச்சேவடி ஏத்தி ; அதனால் இனித் துன்பமில்லை துயரில்லை என முடிக்க .

பண் :

பாடல் எண் : 6

கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.

பொழிப்புரை :

கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது , விரைந்து உயிர்போவதற்கு முன்பே நீர் , உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக ; தொழுவீராயின் , பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும் .

குறிப்புரை :

கட்டப்பட்டு - துன்புற்று . கவலையில் - மனக்கவலையின்கண் . பொட்ட - விரைவாக ( பொட்டென என்பதன் திரிபு ). வல் உயிர் - பலவும் செய்யவல்ல உயிர் . பட்ட - செய்யப்பட்டுத் தோன்றிய . பாறும் - அழியும் .

பண் :

பாடல் எண் : 7

வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்று மிரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறியாமை உடைய நெஞ்சமே ! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , எட்டு மூர்த்தியானவரும் , ஒரு பரம்பொருளானவரும் , இரண்டு ( சிவம் , சத்தி ) ஆனவரும் , மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும் , உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக .

குறிப்புரை :

வட்டம் - வட்டவடிவமான . எட்டாயினார் - அட்ட மூர்த்தி வடிவாயினவர் .( தி .6. ப .94. பா .1.) ஒன்றாயினார் - ஒருவராயிருப்பவர் . இரண்டாயினார் - சத்தி சிவமாய் வீற்றிருப்பவர் . மூன்றாயினார் - படைப்பு முதலிய முத்தொழிலால் அயன் , அரி , அரனாய் விளங்குபவர் . சிட்டர் - உயர்ந்தோர் . இட்டம் - விருப்பம் . மடநெஞ்சமே - அறியாமை உடைய மனமே .

பண் :

பாடல் எண் : 8

நட்ட மாடிய நம்பனை நாள்தொறும்
இட்டத் தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.

பொழிப்புரை :

வட்டவடிவமாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும் , அங்கு நட்டமாடிய நம்பனையும் , நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக .

குறிப்புரை :

இட்டத்தால் - விருப்பத்தோடு . வட்டவார் முலையாள் - வட்டவடிவமான கச்சணிந்த தனங்கள் .

பண் :

பாடல் எண் : 9

வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

பொழிப்புரை :

திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும் , தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர் .

குறிப்புரை :

வட்டம் - வட்டவடிவாய் . மதில் மூன்று அரண் - மூன்று மதில்களை உடைய வலிய கோட்டை . சுட்ட - அழித்த . சூழ்ந்தவர் - தம்மை வலம் வந்து வணங்கி நிற்பவர் . குட்ட வல்வினை - குழியாகிய வலியவினைகள் .

பண் :

பாடல் எண் : 10

சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி ஆங்கெடுத் தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.

பொழிப்புரை :

பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி , மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக .

குறிப்புரை :

சேடன் - பெருமையுடையவன் . வாட - வருந்த . ஊன்றிவாங்கி - சிறிது ஊன்றிப் பின்னர் எடுத்த . வேடனார் - பார்த்தற்குப் பாசுபதம் கொடுத்த தலமாதலின் அருச்சுனனை எதிர்க்க வேடனாய் வந்தவன் என்றார் ; வேடனார் பலகோலங்களைக் கொண்டவர் எனலுமாம் .
சிற்பி