திருக்கடம்பூர்


பண் :

பாடல் எண் : 1

தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

தளருகின்ற கொள்ளுதல் தப்பாத பாம்பினோடு , குளிர்ந்த பிறைமதி வளரும் அழகு வளர்கின்ற சடையாராகிய சிவபெருமானுக்கு இடம் , பேரிசை கிளர்கின்ற கின்னரங்களின் பாட்டு அறாத , கரிய கடம்பு நிறைந்த ஊரில் திருக்கரக் கோயிலே .

குறிப்புரை :

தளரும் - வளையும் . கோள் அரவம் - விழுங்குதலை உடைய பாம்பு . தண்மதி - குளிர்ந்த பிறைமதி . வளரும் - தங்கும் . கோலம் - அழகிய . வளர்சடையார்க்கு - வளர்கின்ற சடையை உடையவர்க்கு . கிளரும் - விளங்கும் . பேரிசை - மிக்க இசையினை உடையதாகிய . கின்னரம் - ஒருவாச்சியம் . அறா - நீங்காத . களரும் - கறஉப்பு நிறமுடையதாய . கார் - கார்காலத்தே மலரும் . கடம்பூர் - கடம்ப மரங்கள் செறிந்த ஊர் . கரக்கோயில் - ஒரு வகை அமைப்பினை உடைய கோயில் ; இந்திரன் தன் கரத்தால் அகழ்ந்து மூர்த்தியை எடுத்துப் பொன்னுலகத்து வைக்க முயன்றமையைக் குறிக்கும் என்பாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 2

வெலவ லான்புல னைந்தொடு வேதமும்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் தோளியைக்
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

கடம்பூர்த் திருக்கரக் கோயிலின்கண் வீற்றிருக்கும் இறைவன் புலன் ஐந்தினை வெல்ல வல்லமை உடையவன் ; வேதமும் சொல்லவல்லவன் ; சுழல்கின்ற தடுமாற்றமும் நீக்க வல்லவன் : மனையார்ந்த மங்கையாகிய மென்றோளுடைய உமாதேவியாரைக் கலத்தல் வல்லவன்

குறிப்புரை :

பலன் ஐந்தொடு - ஐம்புலன்களோடு ஏனைய பகை வர்க்கங்களையும் . வெலவலான் - வெல்லவல்லவன் . வேதமும் - எண்ணும் எழுத்தும் உலகிற்குச் சொல்லியதோடன்றி வேதங்களையும் . சொலவலான் - சொல்லவல்லவன் . சுழலும் தடுமாற்றமும் - சுழற்சியாகிய அறியாமை மயக்கமும் ஐயுறவும் . அலவலான் - இயல்பாகவே நீங்கியவன் ; ( நீக்கவல்லவன் ). மனையார்ந்த - தனது வீட்டின்கண்ணே தங்கியுள்ள . மென்தோளியை - மெல்லிய தோளை உடையபார்வதியை . கலவலான் - கலத்தல் வல்லவன் .

பண் :

பாடல் எண் : 3

பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வாரவ ரெள்கநீர்
கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.

பொழிப்புரை :

உலகப் பொருள்களில் பற்றுச் செய்யாது . புலியின் தோலை உடுத்தோனாகிய சிவபிரான் பணியைச் செய்து , அவ்வாறு எழுவார் பணியினையும் உடன்செய்து கரக்கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக ! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும் .

குறிப்புரை :

பொய்தொழாது - பொய்யான பொருள்களுக்கு அடிமைப்படாது ; உலகப்பற்றுவிட்டு . புலிஉரியோன் - புலித்தோல் உடுத்த சிவபிரான் . வைது எழாது எழுவார் என்க , நீர் , சிவபிரான் பணியைச் செய்யாநின்று எழுந்து , அங்ஙனம் எழுவாராகிய நும்போன்ற அன்பர் பணியினையும் செய்யாநின்று எழுந்து , திருக் கரக்கோயிலைக் கைதொழுது மேல் ஓங்குமின் எனமுடிக்க . பணி செய்தெழா - துயில் உணரும்போது , சிவன் பணி அன்பர் பணி இரண்டையும் சிந்தித்தபடியே உணர்ந்து என்றபடி . வைது எழாது எழுவார் - இறைவனை இகழ்ந்து உணர்வின்றியே எழும் அறிவிலிகள் . அவர் நும்மை இகழ்தல் இயல்பு என்றபடி .

பண் :

பாடல் எண் : 4

துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே
பண்ணி னால்முனம் பாட லதுசெய்தே
எண்ணி லாரெயில் மூன்று மெரித்தமுக்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

நல்ல எண்ணமில்லாதாரது முப்புரம் எரித்த முக்கண்ணினானது கடம்பூர்க் கரக்கோயிலை , பண்ணினால் திருமுன்பு பாடல் பரவி அச்சமின்றி நெஞ்சமே தொழுவாயாக !

குறிப்புரை :

துண்எனாமனத்தால் - நடுக்கம் இல்லாத நினைவோடு , அன்பினால் என்றபடி . பண்ணினால் - இசையோடு . முன்னம் - அவனது திருமுன்னே . பாடலதுசெய்து - பாடி . எண்ணிலார் - நல்ல எண்ணமில்லாத திரிபுரத்தசுரர்கள் . திரிபுரம் எரித்தான் ஆயினும் உய்யவல்லார் மூவரைக் காத்தவன் ஆகலின் , அன்பினால் பாடித் தொழுக என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையு முள்ளத் தவர்வினை நீங்குமே.

பொழிப்புரை :

சுனையுள் பூத்த நீலமலர் போன்ற கண்டத்தனும் , புனையும் பொன்னிறக் கொன்றையுடைய புரிசடையும் ஒலிக்கின்ற கழலும் உடையவனுமாகிய கரக்கோயிற் பெருமானை நினையும் உள்ளத்தவர் வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

சுனை - மலையிடத்துத் தானே தோன்றிய நீர்நிலை . நீல மலர் - குவளைமலர் . அன - ஒத்த . புனையும் - அணியும் . கனையும் - ஒலிக்கும் . கொன்றை , புரிசடை , கழல் இவற்றை உடையான் என்க .

பண் :

பாடல் எண் : 6

குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவ ரன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.

பொழிப்புரை :

அன்புடையாரெலாம் குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவதும் , கணங்கள் வணங்கி வான்மலர் கொண்டு வைகலும் அடி போற்றிசைப்பதும் கரக்கோயில் தலத்திலாகும் .

குறிப்புரை :

கணங்கள் தூயமலர்கள் கொண்டு முதல்வன்றன் அடிவணங்கி என்றும் போற்றிசைக்கும் தலமாகிய திருக்கரக் கோயிலின்கண் அன்புடையார் எல்லாம் மெய்யன்பர்களின் உயரிய குணங்களைப் பாராட்டிப் பிறர்க்கு எடுத்துரைத்தும் தம் குற்றங்களை எண்ணிப் பேசியும் முதல்வனை வணங்கி அவன்றன் பொருள்சேர் புகழ்சொல்லி வாழ்த்துவர் என்க . கணங்கள் - பூதகணங்கள் அல்லது , பதினெண் கணங்கள் ; விண்ணவரும் மண்மேல் வந்து வணங்குவர் என்பதை அடுத்த பாட்டினும் காண்க .

பண் :

பாடல் எண் : 7

பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்கப் படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

திருக்கடம்பூர்க் கரக்கோயில் பண்ணினைப் பொருந்திய மறையோதிப் பல்பூசனைகளை மண்ணினுள்ளார் செய்வதன்றியும் நாள்தோறும் விண்ணினுள்ளாரும் வியக்கப்படும் பூசனைகள் செய்யக்கருதினர் .

குறிப்புரை :

பண்ணினார்மறை - பண்ணோடு பொருந்திய மறையை ஓதி . பல்பல பூசனை - வேதநெறி . சைவநெறி . பத்திநெறி என்னும் இவைபற்றிச் செய்யப்படும் பலவேறுவகையான பூசைகள் . மண்ணினார் - நிலவுலகில் சிவனடியார்கள் . வைகலும் - நாடோறும் . விண்ணினார்கள் - தேவர்கள் . வியக்கப்படுவன கண்ணினார் - மண்ணுலகில் உள்ளார் வியக்கத்தக்க செயல்களைச் செய்யக் கருதிச் செய்வார்கள் . எங்கெனில் , கடம்பூர்க் கரக்கோயிலின்கண் என்க . விண்ணினார் செய் பூசைகள் குற்றம் குறையின்றி நிறைவுடையன ஆகலின் வியக்கப்படுவன ஆயின , கண்ணினார் - கருதிச்செய்வர் ஆயினர் . கண்ணுதல் - கருதுதல் .

பண் :

பாடல் எண் : 8

அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்
தங்கை யால்தொழு வார்வினை சாயுமே.

பொழிப்புரை :

உமையம்மை உடனிருந்து மகிழ்ந்து பாட அங்கையில் அழல் ஏந்தி நின்று ஆடல் புரிபவன் , ஆய கங்கை யுறையும் சடையான் வீற்றிருக்கும் கரக்கோயிலைத் தம்கையால் தொழுவாருடைய வினைகள் வலியற்றுக்கெடும் .

குறிப்புரை :

அங்கை - அகங்கையிலே . ஆர் அழல் . தாங்குதற்கு அரிய நெருப்பை . ஆடலன் - ஆடுதலைச் செய்பவன் , மங்கை - பார்வதிதேவியார் . மங்கை உடன் ( இருந்து ) மகிழ்ந்து பாட ஏந்தி ஆடலன் எனக்கூட்டுக . சாயும் - வலியற்றுக் கெடும் .

பண் :

பாடல் எண் : 9

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

பொழிப்புரை :

கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல் ; என் போன்றார் கடன் பணிசெய்து தற்போதம் இன்றியே இருத்தல் .

குறிப்புரை :

நங்கடம்பன் - நம்மால் விரும்பிப் போற்றப்படும் . கடம்பமலர் சூடும் முருகன் . பெற்றவள் - பார்வதி . பங்கினன் - பாகமாக உடையவன் . தென் - அழகிய . தன்கடன் - அப்பெருமான் தன் கடமை . அடியேனையும் - அடியவனாகிய என்னையும் . உம்மை இழிபுணர்த்திற்று . தாங்குதல் - காப்பாற்றுதல் . என்கடன் - என்னுடைய கடமை . கிடப்பது - அவன் அருள்வழி நின்று என்செயல் என்பது சிறிதும் இன்றி இருத்தல் .

பண் :

பாடல் எண் : 10

பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்
பிணங்கும் பேரழ லெம்பெரு மாற்கிடம்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.

பொழிப்புரை :

பாற்கடலில் கிடக்கும் படம்கொண்ட பாம்பு அணையானாகிய திருமாலும் மணம் கமழ் மலர்த்தாமரையானாகிய பிரமனும் தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த எம் பெருமானுக்கு இடம் , கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

பணங்கொள்பாம்பு எனக் கூட்டுக . பணம் கொள் - படத்தைக்கொண்ட . பாற்கடல் - திருப்பாற்கடலில் . அணையான் - படுக்கையாகக்கொண்டு அறிதுயில் செய்பவன் . மலர்த்தாமரையான் - வெண்தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவனாகிய பிரமன் . பிணங்கும் - ` யானே பிரமம் ` எனச் சொல்லித் தம்முள் மாறுபடுதற்குக் காரணமாக . பேரழல் - பெரிய சோதிவடிவாய்த் தோன்றியவனாகிய ; இச் சோதிப்பிழம்பே மஹாலிங்கம் எனப்படும் .

பண் :

பாடல் எண் : 11

வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை
அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார்
திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே.

பொழிப்புரை :

திருக்கயிலாயத் திருமலைக்கண் இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள்புரிந்த ஈசனார் வீற்றிருக்கும் , அலைவீசும் குளிர் புனல் சூழ் கரக்கோயிலைக் கூறும் உள்ளத்தவர் வினைகள் ஓயும் .

குறிப்புரை :

வரைக்கண் - திருக்கயிலைத் திருமலையின்கண் . நாலைந்து தோளுடையான் - இருபது தோள்களை உடைய இராவணன் . அரைக்க - நெரிபட . திரைக்கும் - அலைவீசும் . ஓயும் - பலன்தாராது மெலியும் .
சிற்பி