கோயில்


பண் :

பாடல் எண் : 1

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

பொழிப்புரை :

பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும் . இத்தகைய திருச்சிற்றம்பலத்தை , மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு , பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன் ?

குறிப்புரை :

அன்னம் - வீட்டின்பம் . ` பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் ` என்னும் திருவாசகத்தில் சோறு என்பது பேரின்பம் என்னும் பொருள் பயத்தல் காண்க . கடவுளை அன்னம் ( அமுதம் ) என்னும் சொல்லால் குறித்தலுமுண்டு . தான் இறவாது நின்று பிறர் இறப்பை நீக்குதலால் . ` பிழைத்த தன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் ` என்னும் தேவாரத் திருப்பாடலில் அமுதம் என்ற சொல் வீடுபேறு என்னும் பொருள் பயக்குமாறறிக . இனி , தில்லையில் இன்றும் பாவாடை நிவேதனம் உண்டு . பண்டு இது மிகப் பெரிய அளவில் நிகழ்ந்திருக்கலாம் . அன்னம் பாலிக்கும் தில்லை என்பது அது குறித்ததுமாம் . சிறுமை - அம்பலம் சிற்றம்பலம் . பேரம்பலம் இருத்தலின் பிறிதின் இயைபு நீக்கிய அடைகொளியாகும் . சிதம்பரம் என்பது உணர்வு வெளி என்னும் பொருட்டு ; அஃது ஏனைய அம்பலங்களை நீக்கியதாதலின் அதுவும் அவ்வடைகொளியே . பொன்னம் - பொன்னுலக வாழ்க்கை . ஆகுபெயர் . பொன் எனலும் , பொன் - அம் எனப் பிரித்து உரைத்தலும் கூடும் . பொன் என்னும் நிலைமொழி வருமொழியொடு புணருங்கால் அம்முப்பெறுதல் பெருவழக்கு . ` பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி ` ( தி .8 திருவெம்பாவை 16.) ` பொன்னஞ் சிலம்பு ` ( இறையனார் களவியல் மேற்கோள் சூ .18. 146) ` பொன்னங்கடுக்கை ` ( கந் . கலி . 93) ` ` பொன்னங் கமலம் ` ( மீனாட்சி . பிள் . 24) ` பொன்னங்குழை ` ( முத்து . பிள் . 394) ` பொன்னங்கொடி ` ( முத்து . பிள் . 424) பொன்னஞ் . சிலை ` ( சிதம்பர . மும் . 542) ` பொன்னங்குவடு ` ( சிந்தா - 2136) ` பொன்னப்பத்தம் என னகர ஈறு அக்குப் பெற்றது ` ` பொன்னங்கட்டி ` என அம்முப்பெற்றது ( தொல் . எழுத்து . நச் . சூத் . 405). என் அன்பு எனப் பிரிக்க . அன்பு என்பது அம்பு என மருவிற்று . தென்பு - தெம்பு . வன்பு - வம்பு . ( வீண்பு - வீம்பு .) காண்பு - காம்பு . பாண்பு - பாம்பு முதலிய சொற்களால் வல்லெழுத்துக்கேற்ப மெல்லெழுத்துத் திரிதல் காண்க . என் நம்பு எனப் பிரித்து என் விருப்பம் எனலுமாம் . ` நம்பும் மேவும் நசையாகும்மே ` ( தொல்காப்பியம் சொல் . 329.) ஆலித்தல் - விரித்தல் , பெருக்கல் , களித்தல் , நிறைதல் ` ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலம் ` ( தி .9 திருப்பல்லாண்டு ) அகலல் என்பதன் மருவாகிய ஆலல் என்னும் தொழிற் பெயர் வேறு ; ஆலித்தல் என்னும் தொழிற்பெயர் வேறு . ` அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்களெல்லாம் ` ( தி .12 திருநாட் . 21.) ` ஆலிய முகிலின் கூட்டம் ` ( தி .12 திருநாட் . 24.) என்னம் எனக் கொண்டு எத்தன்மையனவும் என்றுரைத்தலும் பொருந்தும் . ` இன்னம் ... ... பிறவியே ` ` மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே ` என்றார் முன்னும் . ( தி .4. ப .8. பா .4.) உரை காண்க . பாலித்தல் - கொடுத்தருளல் . எல்லோரும் பிறவாமையை வேண்டுதலாயிருக்க சுவாமிகள் திருக்கூத்தைக் காணும் பிறவியையே வேண்டினார் . அக்காட்சி கண்ட அளவானே , இவ்வுடம்பு உள்ளபோதே , பரமுத்திப் பேரானந்த அதீத நிலையை எய்தித் திளைக்க வைத்தலின் . தில்லைத் தரிசனம் பரமுத்தியானந்தத்தை இவ்வுடம்பு உள்ள போதே கொடுத்தலின் , அத்தரிசனத்திற்கு வாயிலாகிய பிறவியை மேலும் வேண்டுவாராயினர் .

பண் :

பாடல் எண் : 2

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.

பொழிப்புரை :

அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி , கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின் .

குறிப்புரை :

வழிபாட்டுக்கு மலர் எடுக்குங்கால் அரும்புகளை நீக்கி மலர்களை மட்டும் பறித்தல்வேண்டும் என்பது விதி . ` அரும் போடு மலர் பறித்திட்டுண்ணா ஊரும் ... ... காடே ` ` அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து ` என ஆசிரியரே அரும்புகளைப் பறித்து வழிபடுதலை உணர்த்தினார் . இது விதி விரோதமெனத் தோன்றும் . பூவினங்களுள் எல்லாவற்றின் அரும்புகளும் வழிபாட்டிற்காகா என்பதில்லை ; தாமரை முதலிய சிலவற்றின் அரும்பு ஆகும் . அரும்பு என்பது அடையின்றி நிற்குங்கால் தாமரை அரும்பிற்கே பொருந்துகிறது . ` அருப்பினார்முலை மங்கை பங்கினன் ` ( தி .2. ப .25. பா .8.) ` அரும்புங் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக் கரும்பின் மொழியாள் ` ( தி .1. ப .46. பா .2.) ` அருப்புப் போல் முலையார் ` ( தி .5. ப .61. பா .5.) என்பவற்றால் அறிக . ` அரும்பார்ந்தன மல்லிகை சண்பகம் ` ( தி .7. ப .13 . பா .4.) என்புழி ஏனைய அரும்புகளை உணர்த்தல் காண்க . ` வைகறை யுணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயுங்கட்டி , மொய்மலர் நெருங்கு வாச நந்தன வனத்துமுன்னிக்கையினிற் றெரிந்து நல்ல கமழ் முகை யலரும் வேலைத் தெய்வநாயகற்குச்சாத்துந் திருப்பள்ளித் தாமங் கொய்து ` ( தி .12 எறிபத் .9) என்றதால் போதுகளைக் கொய்தல் விதியென்பதும் அவற்றையே அரும்பு என்பதும் உணரக் கிடக்கின்றன . அறுதல் - அற்றம் . செறுதல் - செற்றம் . அற்றப்பட - நீக்கம் உற . ஆய் மலர் - வினைத்தொகை . அரும்புகளையும் , அற்றப் பட ஆய்ந்த மலர்களையும் கொண்டு எனக்கூறலும் ஆம் . அற்றப் படுதல் ஆய்தற்கு அடையாய்க் குற்றம் நீங்கல் எனப் பொருள் தரும் . ` விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் ` எனும் குறளி (1186) லும் இப் பொருட்டாதலறிக . சுரும்பு - வண்டினங்களுள் ஒன்று . ` வண்டும் சுரும்பும் மூசும்தேனார் பூங்கோதாய் ` ( சிந்தா . 2065) கரும்பற்றச் சிலை :- அற்றம் - அழிவு . சோர்வு , துன்பம் , மெலிவு , சிலை - வில் . கரும்பு வில் காதலை விளைத்து இவற்றையெல்லாம் ஆக்குதலால் அற்றச்சிலை எனப்பட்டது . அற்றச்சிலை - அற்றத்தை உடைய சிலை என இரண்டன் உருபும் பயனும் உடன்தொக்கதொகை எனக்கொண்டு தனக்கே அழிவு தந்த சிலையாதலின் கரும்பு அற்றச்சிலைக்காமன் என்றார் எனக்கூறலுமாம் . பெரும்பற்றப்புலியூர் - புலிக்கால் முனிவர்க்குப் பேரின்பத்தில் பெரும்பற்றை விளைத்ததாலும் , அவர் வீடுபேற்றிற் பெரும் பற்றுடையராயிருந்ததாலும் , வணங்கும் எல்லா உயிர்க்கும் சிவனடி நீழலில் பெரும்பற்று விளைத்தலாலும் அப்பெயர் பெற்றது . அன்பினால் தூவுக ; தூவின் அவாவறுத்து வீடுபேறு எய்தலாம் என்னும் கருத்தைக் காமனைக் காய்ந்தவன் எனும் தொடர் குறிப்பிக்கின்றது .

பண் :

பாடல் எண் : 3

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ ( இடுகாட்டில் ) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின் .

குறிப்புரை :

அரித்து சிரித்து என்பன முறையே அரிச்சு சிரிச்சு என மருவின . ` அரிச்சிராப்பகல் ` எனத் தொடங்கும் திருக்குறுந் தொகையிலும் ( தி .5. ப .85. பா .3.) இவ்வாறு வருதல் காண்க . முதலும் மூன்றுமாம் அடிகளில் உற்ற என்னும் பெயரெச்சமும் உற்று என்னும் வினையெச்சமும் அமைந்தன . இரண்டாமடியில் சுற்ற என்பது வினையெச்சம் . இப்பாடல் , இறக்கும்முன் பிறப்பை நீக்கிக் கொள்ளும் நெறியை உணர்த்துகின்றது . சிற்றம்பலம் அடைவார்க்கு வினையால் அரிப்புண்டலும் இறப்பொடு பிறப்பும் இல்லையாம் என்றபடி .

பண் :

பாடல் எண் : 4

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

பொழிப்புரை :

எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ? தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர் அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல .

குறிப்புரை :

அல்லல் - ஆகாமியமாகிய எதிர்வினை . அருவினை - நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்கரிய பிராரத்தவினை . தொல்லை வல்வினைத் தொந்தம் - பிராரத்த வினையநுபவம் உள்ள அளவும் உள்ள முயற்சியின் விளைவாய்ப் பருவத்தில் இன்ப துன்பங்களைப் பயக்கத்தக்க இருவினை எனப்படும் சஞ்சிதம் . துவந்துவம் - இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டை களையும் அவைபோல்வனவற்றையும் வடமொழியில் துவந்துவம் என்பர் . அது தமிழில் தொந்தம் என்று வழங்குகிறது . ` என்புள்ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங்களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து முன்புள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே ` ( தி .8 குலாப் .3) என்னும் திருவாசகத்தில் துவந்துவங்கள் தூய்மை செய்தல் சஞ்சித வினையையும் , இருவினையையும் , ஈடழித்தல் ஆகாமியத்தையும் , துன்பங்களைதல் பிராரத்தத்தையும் குறித்தல் காண்க . ` தொண்டன் ` என்பது பாடமாயின் , வல்வினையாகிய அடிமை எனக்கொள்க . இருவினை இறைவன் ஆணையின் வரும் என்பது சாத்திரம் . பரமுத்தியிலும் ஆன்மா முதல்வனுக்கு அடிமையாதலின் ` எல்லையில்லதோர் அடிமை ` என்றருளிச் செய்தார் . ` மீளா அடிமை ` ( தி .7. ப .95. பா .1) என்னும் நம்பியாரூரர் வாய்மொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது .

பண் :

பாடல் எண் : 5

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.

பொழிப்புரை :

உடம்பில் உயிர் உயிர்த்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் நான் என்னை ஆளாக உடைய திருச்சிற்றம்பலவனாரை விளக்கமுறப்பெற்றிருப்பேன் . இன்பத்தேன் விளங்கிய அத் திருச்சிற்றம்பலவனார் அடியேனைப் பேரின்பவீட்டில் நிலைபெற்றிருக்கவும் வைப்பர் .

குறிப்புரை :

ஊன் - உடல் . ஆகுபெயர் . நிலாவி - விளங்கி , நிலை பெற்று . உயிர்க்கும் பொழுது - மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் காலம் . நாதன் - உடையான் . தேன் - சிவானந்தம் . வான் - விண்ணுலகு அன்று ; சிவலோகம் . ஊனில் ஆவி என்றும் , ஊன் நிலாவி என்றும் பிரித்துரைக்கலாம் . வானிலாவி என்புழியும் அவ்வாறே கொள்ளலாம் . முதல்வன் திருவருளை மறவாதவர்க்கே பேரின்பம் எய்தும் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 6

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.

பொழிப்புரை :

ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம் ; சிட்டர்களாகிய அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது அது . அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடியருளும் ஞான மூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அச்சிட்டர்களாய மெய்ஞ்ஞானியரையே , ஏனையோரைச் செறுதற்கு வல்ல காலன் அணுக மாட்டான் .

குறிப்புரை :

சிட்டர் - அறிவர் ; ஞானியர் ; தில்லைவாழந்தணர் . சிட்டன் - ஞானமூர்த்தியாகிய நடராசப்பெருமான் . சிட்டன் , சிரேஷ்டன் , சிஷ்டாசாரமுடையவன் என்பாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 7

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னாரிளை யார்விட முண்டவெம்
அருத்த னாரடி யாரை யறிவரே.

பொழிப்புரை :

தனிமுதற்பொருள் உலகங்களுக்கெல்லாம் ஒரே விளக்காய் உள்ளவர் ; செம்மையார் ; தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர் ; முதியார் ; இளையார் ; நஞ்சுண்ட எம்செல்வர் ; அடியாரை அறிவார் .

குறிப்புரை :

ஒருத்தனார் - ஏகன் அநேகன் இறைவன் ( தி .1. ப .5.) உலகங்கட்கு ஒரு சுடர் - ` சுடர்விட்டுளன் எங்கள் சோதி ` ( தி .3. ப .54. பா .5) ` சோதியே சுடரே சூழொளி விளக்கே ` ( தி .8 திருவாச . அருட் . 1) ` சுடர்ச் சோதியுட் சோதியான் ` ( சம்பந் ) ` தூயநற் சோதியுட் சோதி ` ( தி .9 திருவிசைப் . 2.) ` உலக உயிர்க்கெல்லாம் ஒருகண்ணே ` ( இருபா .20). திருத்தம் - செம்மை . திருத்தன் - செம்பொருள் . திருப்தி உடையவன் என்றலும் ஆம் . திருப்தி எண்குணங்களில் ஒன்று . தீர்த்தனுமாம் . உயிர்களைத் திருத்தி யாட்கொண்டவன் என்றலுமொன்று . ` திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங்கொள் கயிலாயா ` ( தி .7. ப .47. பா .8.) விருத்தனார் இளையார் - ` விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து ` ( தி .1. ப .52. பா .6.) அருத்தனார் - எமக்கு மெய்ப் பொருளாயுள்ளவர் . அருத்தம் - நீடுலகிற்பெறும் நிலையுடைய பெருஞ்செல்வம் . அடியாரை அறிவர் - ` அடியார் அடிமை அறிவாய் போற்றி ` ( தி .5. ப .30. பா .3.) 4,9 பார்க்க . ( தி . 5, ப . 13, பா . 10) பார்க்க . ( தி . 6. ப . 85. பா . 2.) பார்க்க . ( தி . 4. ப .23. பா .2.) பார்க்க .

பண் :

பாடல் எண் : 8

விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்நி றைந்த கடிபொழி லம்பலத்
துள்நி றைந்துநின் றாடு மொருவனே.

பொழிப்புரை :

யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்டற்கு அரிதாய் , ஆகாயத்தையளாவியெழுந்த சோதிப்பிழம்பு ஒப்பற்ற பெருந்தலைவனாய் , தேனிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய் நிறைந்து பஞ்சகிருத்திய நடனத்தைச் செய்யும் . தொழக்கல்லாதவர்களாகிய அயன்மாலுக்கு அரிய முதல்வன் அன்பால் வழிபட்ட வியாக்கிரர் , பதஞ்சலியார் என்னும் முனிவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றித் தன்னியல்பை உணர்த்திப் பேரின்பம் அருளினன் என்றபடி .

குறிப்புரை :

இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை ( அப் . தி .5 ப .95) பார்க்க . ` விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லையிலாதானே ` ( தி .8 திருவாச . சிவ .) எண் - எண்ணம் . கண் நிறைந்த - கள் நிறைந்த . ஞானமன்றில் ஆனந்தக் கூத்தாடுதலின் நிறைந்து நின்றாடும் என்றார் . சிவபிரானை ஒருவன் என்றல் உபநிடத வழக்கு . முழுமுதல் என்னுங் கருத்தை உடையது . ( வடமொழி சுலோகம் ) ` ஒருவன் என்னும் ஒருவன் காண்க ` என்பது திருவாசகம் . ` ஒளிமணி வண்ணன் என்கோ , ஒருவன் என்றேத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோ ` என நம்மாழ்வாரும் இக்கருத்தை வலியுறுத்துதல் காண்க . ` ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ` எனத் திருத்தாண்டகத்தினும் அருளிச்செய்வர் .

பண் :

பாடல் எண் : 9

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.

பொழிப்புரை :

மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்களை விட்டு ஓடும் . இஃது உண்மை .

குறிப்புரை :

வில் - மேருவாகிய வில் . வட்டப்பட - அரைவட்டமாக அமைய . வாங்கி - வளைத்து . அவுணர் - திரிபுரத்தசுரர்கள் . வல்லை வட்டம் மதில் ; வல் - விரைவு . வட்டம் மதில் - வட்ட வடிவாயமைந்த கோட்டைகள் . ஒல்லை - விரைவு . வட்டம் - தொழுவாரைச் சூழ்ந்த இடம் .

பண் :

பாடல் எண் : 10

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர் ; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும் .

குறிப்புரை :

முதல்வனை அன்பால் அகத்தே நினைவார் அவனை உணரப் பெறுவர் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 11

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன் ; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன் . இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி , செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் வருந்தும்படி மெள்ள ஊன்றும் செம்மையான திருவடியைச் சென்று கை தொழுது உய்க .

குறிப்புரை :

மதுரம் - இனிமை . சர்வசங்கார காலத்துப் பெருமானது சினத்தைத் தணித்து மீண்டும் படைத்தற்றொழிலைச் செய்யவல்ல மொழியுடையாள் ஆதலின் ` மதுரவாய்மொழி மங்கை ` என்றார் . பங்கு - இடப்பாகம் . செம்பாதியும் கொண்டதையல் ( முத்துக் -. பிள்ளை . ) சதுரன் - சதுரப்பாடு உடையவன் . ` பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத இன்பம் , ஆவண்ணம் மெய்கொண்டவன் தன் வலியாணைதாங்கி , மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்யவாளா மேவு அண்ணல் ` ( திருவிளையாடல் ) ஆதலின் சதுரன் என்றார் . திருமலை - கயிலைமலை . கோயில் என்பது சிதம்பரத்தைக் குறித்தலைப் போலத் திருமலை என்பது கயிலையைக் குறிக்கும் . அதிர - நடுக்கத்தால் அதிர்ச்சியடைய , ஆர்த்து - ஆணவத்தால் செருக்கி ஆர வாரித்து . மிதிகொள் சேவடி - மிதித்தலைக் கொண்ட எனவும் மிதித்து மீள அருள் செய்துகொண்ட எனவும் இருபொருள் பட நின்றது .
சிற்பி