திருப்பழனம்


பண் :

பாடல் எண் : 1

மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன வல்ல லவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே.

பொழிப்புரை :

திருப்பழனத்தில் உகந்தருளியிருக்கும் அரசே ! அடியேன் வாழ்க்கையில் தீவினையின் விளைவுகளாகிய துக்கங்கள் எல்லாம் கொடிய துயரத்தை அடையச் செய்து என்னை மேவி நிற்கின்றன . அவை தம் செயலில் சோர்ந்து கொட்டாவிவிட்டு அடியேனை விடுத்து நீங்கின அல்ல . அடியேன் அவற்றைப் போக்கச் சிவோகம் பாவனையில் இருக்கும் செய்தியை நீ அறிவாய் . அடியேனை உன் அடிமைத் தொழிலில் கூவுவித்துக் கொள்ளுவதை உன் குறிக்கோளாகக் கொள்வாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , துக்கம் எல்லாம் வெந்துயர் மேவித்து நின்று விளைந்தன ; அல்லல் ஆவித்து நின்று கழிந்தன . அவை அறுப்பான் பாவித்த பாவனை நீ அறிவாய் . ஆபற்சகாயர் ஆதலின் இப் பதிகம் இவ்வாறமைந்தது . கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வது . மேவுதல் ; மேவித்தல் , ஆவித்து - உயிர்த்து ; புகைத்து ; ஆவி விட்டு . ` ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம் நான் நிலாவியிருப்பன் என் நாதனை ` ( தி .5 ப .1 பா .5) கூவித்து - கூவச் செய்து . கூவல் ; கூவித்தல் . துக்கம் எல்லாம் வெந்துயரத்தை மேவச் செய்து நின்று முற்றின . வெந்துயரும் துக்கமும் ஆகிய எல்லாம் மேவித்து நின்று விளைந்தன எனலும் ஆம் . ` துயரமே ஏற்றம் ஆகத் துன்பக் கோலதனைப் பற்றி ` ( தி .4 ப .52 பா .7) என்புழித் துயரம் துன்பம் வெவ்வேறாதல் விளங்கிற்று . அத் துன்பமே ஈண்டு வடமொழியில் ` துக்கம் ` எனப்பட்டது . ` சுகதுக்கம் ` என்றதன் பொருளதே தமிழில் ` இன்பதுன்பம் ` என்பது . ` அல்லல் என்செய்யும் அருவினை என்செய்யும் .` ` அல்லல் தீர்க்கும் அருமருந்து `. அறுப்பான் - அறுக்க . பாவித்த பாவனை :- சிவோகம்பாவனை . சரியை முதலிய நாற்றிறத் தினருடையவும் ஆம் . கூவித்துக் கொள்ளல் :- ` அறைகூவி ஆட்கொண்டருளி ` ( தி .8 திருவாசகம் 3:- 148) ` இங்கே வா என்று அங்கேகூவும் அவ்வருளைப்பெறுவான் ஆசைப்பட்டேன் ` ( ? . 418) ` என்னை நீ கூவிக்கொண்டருளே ` ( ? . 449) ` நீயே அருள் செய்து கோனே கூவிக்கொள்ளும் நாள் என்றென் றுன்னைக் கூறுவதே `. ( ? . 499) ` உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமோ ` ( ? . 497) என்பவற்றான் ஆண்டவன் அடிமையைக் கூவுதல் உண்மையை உணர்க . ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் ` ( தி .8 திருவாசகம் . 49) ` பற்றியழைத்துப் பதறினர் ` ( ? . 4;- 49) அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்றருளாயே ` ( ? . 458) ` பிறைசேர் சடையாய் முறையோ என்று அழைத்தால் அருளாதொழிவதே அம்மானே உன் அடியேற்கே ` ( ? . 496) என்பவற்றால் அடிமை ஆண்டவனை அழைத்த லுண்மையை அறிக . அழைத்தல் அடிமையின் தொழில் ; கூவல் தலைவன் செயல் என்னும் வேறுபாடும் உணர்க . தனை - அளவு . கொள்ளும் தனை - கொள்ளும் அளவு . குறிக்கொள்வது குறிக் கொண்டருளுவது என்றமையால் இறைவன் செயலாயிற்று . குறிக் கொள்ளல் உயிர்க்கே உரித்தாதல் ` நின் குரைகழல் காட்டிக் குறிக் கொள்க என்று நின் தொண்டரிற் காட்டாய் ` ` பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு போம் ஆறு அமைமின் ` ( தி .8 திருவாசகம் . 405, 607) என்பவற்றால் அறியப்படும் . குறிக்கொள்வது :- வியங்கோள் . இதன் தி .4 ப .75 பா ,9 குறிப்பிற் காண்க .

பண் :

பாடல் எண் : 2

சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! எண் திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர் . நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர் . திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர் . இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ , அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு அருள் செய்வாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , புறம் சுற்றிக் காவல் நின்றார் ; மற்றும் கடைத்தலையில் ( பலர் ) நின்றார் ; திருமாலோடு நான்முகன் வந்து ( நின் ) அடிக்கீழ்ப்பற்றி நின்றார் ; உன்பணி அறிவான் உற்று நின்றார் . அடியேனைக் குறிக்கொண்டருளுவது . ( அருள்க ). அருளுவது :- வியங்கோள் . ` மறப்பது அறிவிலென் கூற்றுக்களே `. ` அறிவில்லாதேன் சொல்லிய சொற்களை ( அவற்றை ) மறப்பாயாக `. ` மறப்பது என்பது வியங்கோள் ` ( தி .8 திருக்கோவையார் . 87. உரை ). புறஞ்சுற்றிக் காவல் நின்றார் மற்றும் பலர் . வந்து அடிக்கீழ்ப்பற்றி நின்றார் திருமாலும் நான்முகனும் . அறிவான் - அறிய . உற்று - விரும்பி . ` மற்று ` என்றதை அசையாக்கி , ` நின்றார் ` என்ற நான்கனுள் முன்னிரண்டும் அமரர்க்கும் பின்னிரண்டும் மாலயற்கும் உரியவாக்கி யுரைத்தலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

ஆடிநின் றாயண்ட மேழுங் கடந்துபோய் மேலவையும்
கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கொர் பான்மதியம்
சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக் குறிக்கொள்வதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! நீ மேல் உலகங்கள் ஏழனையும் கடந்து அதற்கு மேலும் உயர்ந்து கூத்து நிகழ்த்தி நின்றாய் . எல்லா உயிரோடும் பொருந்தியிருக்கின்றாய் . குவிந்த மெல்லிய முலைகளை உடைய பார்வதியையும் உடன் கொண்டு பால் போன்ற வெண்பிறை சூடிப் பாடிக் கொண்டு நிற்கும் நீ அடியேனையும் பிறவித் துயர்கருதி அஞ்சாதபடி ஆட்கொள்ளவேண்டுவதனை உன் திருவுள்ளத்துக் கொள்வாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , அண்டம் ஏழும் கடந்துபோய் மேலவையும் ஆடிநின்றாய் ; கூடிநின்றாய் ; குவிமென்முலையாளையும் கொண்டுடனே பாடி நின்றாய் ; அங்கு ஓர்பால் மதியம் சூடி நின்றாய் . அடியேனை அஞ்சாமைக் குறிக்கொண்டருளுவது . பால் மதியம் - பால்போலும் வெண்பிறை ( தி .4 ப .88 பா .1), உலகெலாம் மலர் சிலம்படி ` ஆதலின் , ` ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொற் புனத்தகத்தான் ` ஆகி ஆடி நிற்றல் உரித்தே . ` ஆதியாய் நடுவுமாகி ` ` கற்பனை கடந்த சோதி ` என்று தொடங்கும் தி .12 பெரிய புராணத் திருப் பாடல்களை நினைக . 1. மாக்கூத்து ( தூல நடனம் ) 2. நுண்கூத்து ( சூக்கும நடனம் ) 3. கழிநுண்கூத்து ( அதிசூக்கும நடனம் , பர நடனம் ) என்ற மூவகையாம் . ` உலகமே உருவமாக .......... நாடகம் நடிப்பன் நாதன் ` ( சிவஞான சித்தியார் . சூ . 5:- 7 ) என்பது சூக்கும நடனத்தை உணர்த்திற்று . அஞ்சாமை :- பிறப்பும் இறப்பும் மேலும் எய்துங்கொல் என்று அஞ்சுதல் நீங்கி , வீடுபெறுவதுறுதியென்னுந் துணிவுடைமை . ஈண்டு ` அஞ்சாமை ` என்பது மறைவினை யெச்சப் பொருட்டாய் நின்று குறிக்கொண்டு அருளுவது என்பதைத் தழுவிற்று .

பண் :

பாடல் எண் : 4

எரித்துவிட் டாயம்பி னாற்புர மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாயுமை யாண்டுக் கெய்தவொர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழனத் தர சேகங்கை வார்சடைமேல்
தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! அம்பினால் மும்மதில்கள் முன்னொரு காலத்தில் அழியுமாறு எரியச் செய்து விட்டாய் . பார்வதி நடுங்குமாறு ஓர் யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்வையாக அணிந்து விட்டாய் . நீண்ட சடையின் மீது கங்கையைப் பொறுத்துத் தாங்கியுள்ளாய் . அடியேனை உள்ளத்துக்கொண்டு அருள் செய்வாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே ! முன்னே புரம் மூன்றும் அம்பினாற் பட எரித்துவிட்டாய் . உமையாள் நடுக்கமுற எய்த ஓர் குஞ்சரத்தை உரித்துவிட்டாய் . வார்சடைமேல் கங்கையைத் தாங்கி விட்டாய் ; தரித்து விட்டாய் . அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே . முன்னே :- திரிபுரம் எரித்த காலத்தைக் குறிப்பது . அஃது அநாதியாகும் , பரிபக்குவம் உடையவர்க்கு முப்புரதகனம் ( மும்மலமும் நீக்கும் அருட்செயல் ) நிகழ்வதாகும் . ` பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை `. ( திருவருட்பயன் . 11) புரத்தை எரித்ததும் , குஞ்சரத்தை உரித்ததும் , கங்கையைப் பரித்ததும் தரித்ததும் செய்த நீ அடியேனையும் குறிக்கொண்டருள்க . குஞ்சரம் - குஞ்சத்தையுடையது என்னும் காரணத்தாற் பெற்ற பெயர் . பரித்தலும் தரித்தலும் தாங்குதல் என்னும் ஒரு பொருளே குறிப்பனவாக உரைத்தல் கூடாது . பரிதல் - நீங்கல் . பரித்தல் - நீக்கல் . கங்கையின் விரைவு வன்மை முதலிய நீக்கிய குறிப்புணர்த்துவதென்று கொண்டு , நீக்கிவிட்டாய் என்றும் உரைக்க . தரித்தல் - தாங்குதல் .

பண் :

பாடல் எண் : 5

முன்னியு முன்னி முளைத்தன மூவெயி லும்முடனே
மன்னியு மங்கு மிருந்தனை மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி வாய்பழ னத்தரசே
முன்னியு முன்னடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! மும்மதிலிலுள்ள அரக்கர்களும் எதிர்ப்பட்டு உள்ளத்துக் கருதி உன்னொடு போராட நீ அங்கும் நிலை பெற்று இருந்து அவர்களை அழித்தாய் . வஞ்சமனத்தவராகிய புறச் சமயப் புறப்புறச் சமயத்தவர்கள் இயற்றிவைத்துள்ள நூல்களின் பொருளியல்பையும் நீ அறிவாய் . நீ பல செய்திகளை நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக் கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

முன்னியும் உன்னை முனைத்தன - எதிர்ப்பட்டும் பரந்து சென்றும் , உன்னை எதிர்த்தன , முன்னல் - எதிர்ப்படுதல் ; பரந்து செல்லல் , முனைத்தல் - எதிர்த்தல் ; போராடல் . மும்மதிலும் முனைத்தன . உடனே மன்னியும் அங்கும் இருந்தனை ? மாயமனத்தவர்கள் - வஞ்ச மனத்தினர் ; புறப்புறம் முதலிய சமயத்தவர்கள் . நூல் - அவ்வச் சமயநூல்கள் . பரிசு - அவ்வந்நூற் பொருளியல்பு . உன்னியும் - நினைத்தும் . முதலடியில் , ` முனைத்தன ` என்றும் ` முளைத்தன ` என்றும் பாடபேதம் உளது . ` முன்னி முளைத்தன ` என்றே பழம் பதிப்புக்களிற் காணப்படுகின்றது . முன்னியும் முன்னி முளைத்தன என்றுள்ளவாறே பொருள் கூறலும் பொருந்தும் . பொருந்தினும் , இதன் பொருள் செவ்விதின் விளங்கிற்றிலது . பழம் பதிப்பில் ஈற்றடியிலும் ` முன்னி ` என்றே உளது . அதுவே இப்பதிப்பிலும் உளது .

பண் :

பாடல் எண் : 6

ஏய்ந்தறுத் தாயின்ப னாயிருந் தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர சேயென் பழவினை நோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! நீ எல்லோருக்கும் இன்பத்தை நல்குபவனாய் இருந்தும் பிரமன் தலையை மனம் பொருந்தி நீக்கினாய் . மன்மதனைப் பார்வதியின் திருமணத்தின் முன்பு வெகுண்டு அழித்தாய் . கூற்றுவனையும் காலால் உதைத்து அழித்தாய் . அடியேனுடைய பழைய வினைகளின் பயனாகிய துன்பத்தை நுணுகுமாறு அழித்து அடியேனைக் குறிக்கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , படைத்தான் தலையை அறுத்தாய் . அறுத்தற்கேற்றவன் துன்பன் ; வன்பன் . அறுக்க நினைத்தலுஞ் செய்ய மாட்டாத இன்பனாயிருப்பவன் நீ ; அவ்வின்பனாயிருந்தே அப் பிரமன் தலையை அறுத்தனை . ஏய்ந்து :- இயைந்து என்றதன் மரூஉ . உடன்பட்டு என்றபடி . காமனைக் காய்ந்தறுத்தாய் ; கண்ணினாற் காய்ந்து . அன்று - யோகிருந்த அக்காலத்தில் , ` கண்ணுதல் யோகிருப்பக் காமன் நின்றிட வேட்கைக்கு விண்ணுறு தேவராதி மெலிந்தமை ஓரார் `. ( சித்தியார் . 72). கண்ணினாற் காய்தல் - நெற்றிக் கண்ணின் தீயாற் சுட்டெரித்தல் . காமன் - மன்மதன் . காலனையும் பாய்ந்தறுத்தாய் - இயமனையும் பாய்ந்து திருவடியால் உதைத்து மாய்த்தனை . ` காலன்றன் ஆருயிரதனை வவ்வினாய் ` ( சுந்தரப் பெருமாள் ). என் பழவினை நோய் ஆய்ந்து அறுத்தாய் - யான் செய்த சஞ்சித கருமத்தையும் பிராரத்த கருமத்தையும் நுணுகியறச் செய்தனை . பிராரத்த கருமாநுபவத்தின் நிகழும் ஆகாமிய கருமத்தையும் அறுத்தாய் .

பண் :

பாடல் எண் : 7

மற்றுவைத் தாயங்கொர் மாலொரு பாக மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாயுமை யாளொடுங் கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கொர் பாம்பொருகை
சுற்றிவைத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! ஒப்பற்ற திருமாலை மகிழ்வோடு உன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்து , பார்வதிக்குத் திருமேனியின் ஒரு பாகத்தைக் கொடுத்து அவளோடு கூடியிருப்பது போலவே திருமாலொடும் பொருந்தியுள்ளாய் . ஒரு பாம்பைப் பிடித்து அஃது ஒருகையைச் சுற்றிக் கொண்டிருக்குமாறு செய்துள்ளாய் . அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

பழனத்தரசே ! மற்று - மற்றும் அங்கு ஓர் திருமாலை வைத்தாய் . ஓரு பாகம் மகிழ்ந்து உடனே உற்றுவைத்தாய் . உமை யாளொடும் கூடும் பரிசென்னவே பற்றிவைத்தாய் . அங்கு ஒர் பாம்பு ஒரு கை சுற்றி வைத்தாய் . ` மற்று ` உம்மை செய்யுட்டிரிபு . பரிசு - தன்மை ; பெற்றி . எனவே - போலவே . கைசுற்றி - கையிற் சுற்றி .

பண் :

பாடல் எண் : 8

ஊரினின் றாயொன்றி நின்றுவிண் டாரையு மொள்ளழலால்
போரினின் றாய்பொறை யாயுயி ராவி சுமந்துகொண்டு
பாரினின் றாய்பழ னத்தர சேபணி செய்பவர்கட்
காரநின் றாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

கயிலைமலையில் உள்ளம் பொருந்தி உறைகின்றாய் . அத்தகைய பழனத்து அரசே ! கொடிய தீயினாலே பகைவர்களை அழிப்பதற்குப் போரில் ஈடுபட்டாய் . உயிர்களைப் பாரமாகச் சுமந்து கொண்டு உயிர்களுக்கு உயிராக இருக்கின்றாய் . உனக்குத் தொண்டு செய்யும் அடியவர்கள் மனநிறைவு அடையுமாறு திருக் கோயில்களில் நிலையாக இருக்கும் நீ அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே . ஒன்றி - பொருந்தி . விண்டார் - பகைவர் . ஒள் அழல் - ஒளியதாய தீ ; பண்புத்தொகை . போர் - மும்மதிற் போர் . திரிபுரம் எரித்த வரலாறு குறித்தது இது . பொறையாகி உயிர்க்கும் ஆவியைச் சுமந்துகொண்டு பாரில் நின்றாய் ; உயிர்க்குப் பொறை உடம்பு . உயிர்க்குயிராதலின் , கடவுட்குப் பொறை உயிர் ஆயிற்று . ஆதலின் , பொறையாய்ச் சுமந்துகொண்டு நின்றாய் என்றார் . பொறையாய் உயிர்க்கும் ஆவி . ` ஆய் ` என்னும் எச்சம் ` உயிர் ` என்னும் முதனிலைகொண்டது . ஆவியே பொறையாவதும் உயிர்ப்பதும் ஆகும் . பணி - திருப்பணி . ஆர - நிறைய ; நுகர . ஊரினின் தாய் ஒன்றி நின்று விண்டார் - ஓர் ஊரினின்றும் பிறிதோர் ஊர்க்குத் தாவி நின்று அழிக்கும் பகைவர் .

பண் :

பாடல் எண் : 9

போகம்வைத் தாய்புரி புன்சடை மேலொர் புனலதனை
யாகம்வைத் தாய்மலை யான்மட மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! முறுக்கேறிய சிவந்த சடையின் மீது கங்கையை உனக்குப் போகசக்தியாக வைத்துள்ளாய் . உன் மார்பில் வைத்திருந்த பார்வதியை மகிழ்ந்து உன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விட்டாய் . அருளினாலே , உனக்குத் தொண்டு செய்வதற்கே அடியேனுடைய உடம்பை அமைத்துள்ள நீ அடியேனைக் குறிக்கொண்டு ( இனிப் பிறவித் துயர் அடியேற்கு நேராதவாறு ) அருளுவாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , சடைமேல் ஓர் புனலதனைப் போகம் வைத்தாய் . மலையார் மடமங்கையை ஆகம் வைத்தாய் ; மகிழ்ந்து உடனே பாகம்வைத்தாய் . பணி - தொண்டு . ஆகம் - உடம்பு . அருளால் , உடற்றொண்டு புரியவைத்தாய் என்றதாம் . பணியர் உள்ளால் ஆகம் வைத்தாய் எனல் சிறவாது .

பண் :

பாடல் எண் : 10

அடுத்திருந் தாயரக் கன்முடி வாயொடு தோணெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! இராவணன் கயிலையைப் பெயர்க்கத் தொடங்கும் வரையில் அருகிலேயே இருந்து அவன் செயற்பட்ட அளவில் அவனுடைய முடிகள் வாய் கண் தோள்கள் என்பன நெரிந்து சிதறுமாறு கால்விரலால் அழுத்தி அவன் செருக்கைக் கெடுத்தாய் . செருக்குற்று எழுந்தவருடைய வலிமையை அவர்களைச் சேர்ந்தவர்களுடைய வலிமையோடும் கெடுத்தாய் . புலித்தோலை ஆடையாக உடுத்துள்ளாய் . அத்தகைய நீ அடியேனையும் குறித்து மனத்துக் கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

அடுத்து - நெருங்கி. அரக்கன் - இராவணன். முடி - தலைமுடி பத்தும். வாய் - பத்து வாயும். தோள் - இருபது தோளும். வாயொடு முடியும் தோளும் நெரியக் கெடுத்திருந்தாய். இருத்தல் - அரக்கன் அசைத்த மலைமேல் நடுக்குறாது வீற்றிருத்தல். கிளர்ந்தார் - வளர்ந்தார். வளர்ந்தது வலி. கிளை - கிளைத்தவர். `கிளை` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராயிற்று. அசுரர் கிளை அழித்தமை குறித்தது. படுத்தல் - அழித்தல். உரியாகிய தோல்; உரித்த தோல். தோலையுடுத்திருந்தாய்.
சிற்பி