திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற
அண்டனே யமர ரேறே திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் றொழுதுன் பாதஞ் சொல்லி நான்றிரிகின் றேனே.

பொழிப்புரை :

அறிவிலியாய் அடியேன் சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே ! ஞானப் பிரகாசனே ! தூய வழியாக நின்ற உலகத்தலைவனே ! தேவர்கள் தலைவனே ! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற இனியவனே ! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டு நாட்டில் உலவுகின்றேன் .

குறிப்புரை :

குண்டன் - மூர்க்கன் . நான் சமணரோடே நான் குண்டனாய்க் கூடிக்கொண்ட மாலைத் துண்டனே என்க . மாலை - மயக்கத்தை , துண்டனே - துணித்தவனே . சுடர்கொள் சோதி - முச் சுடரும் கொண்ட ஒளியே . ` மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக் கரசே` ( தி .8 திருவாசகம் . 119) ` அருக்க னாவான் அரனுரு அல்லனோ ` ` சோதியாய்ச் சுடருமானார் ` ` ஞாயிறாய் ... சோமனாகித் தீ ... ஆகி . ` திசையினோடு ஒளிகள் ஆகி `. தூநெறியாகிநின்ற அண்டன் :- ` முன்னெறியாகிய முதல்வன் ` ( தி .4 ப .11 பா .9). அண்டத்திற்குச் செல்லும் தூநெறியாகி நின்றவன் . ` அண்டவாணன் `. சிவனருள் வெளியே ஈண்டு அண்டம் எனப்பட்டது . அமரர் ஏறு :- தேவர்கோ அறியாத தேவ தேவே `, ` தேன் ` என்றதன் கருத்து திருவையாற்றில் ஒரு பெட்டகத்துள் எழுந்தருளிய சிவலிங்கப் பெருமானுக்குத் தேனாட்டு நிகழும்பொழுது கண்டு உணர்ந்து கொள்ளத் தக்கது .

பண் :

பாடல் எண் : 2

பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே.

பொழிப்புரை :

மயிற்பீலியைக் கையில்வைத்துக் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி , மேல்தோல் உரிக்கப்பட்டதனால் வெண்மையாக உள்ள தடிகள்போல ஆடையின்றி அறிவுகெட்ட சமணர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள் ? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தருளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது .

குறிப்புரை :

பீலி - மயிற்பீலி , ` பெரியதொரு தவம் ` என்று எண்ணுவதும் மதியின்மையே . வாலிய தறிகள் - வெள்ளைத் தடிகள் . வாலியம் பாலப் பருவத்தைக் குறித்ததாகக் கொண்டு , முழுமக்கள் ( மதியிலார் ) என்றதற்கேற்ப உரைத்தலும்கூடும் . வாலியார் :- திரு வடகுரங்காடுதுறைத் திருப் பதிகத்திலே , ` கோலமாமலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி ஆலுமா காவிரி வடகரை அடை குரங்காடு துறை நீலமாமணிமிடற்றடிகளை நினைய வல்வினைகள் வீடே ` என்றும் ` நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுங்கோயில் ` என்றும் திரு ஞானசம்பந்தர் அருளியதுணர்க . ஆலித்தல் - களித்தல் . ` ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலம் ` ( தி .9 திருப்பல்லாண்டு ) ஆலியா - ஆலித்து .

பண் :

பாடல் எண் : 3

தட்டிடு சமண ரோடே தருக்கிநான் றவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே யும்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடு முள்ளத் தீரே யும்மைநா னுகந்திட் டேனே.

பொழிப்புரை :

உணவுக்குரிய உண்கலன்களாகிய தட்டுக்களைக் கையில் இடுக்கிக் கொள்ளும் சமணரோடு செருக்குற்று அச் செயலையே தவம் என்று கருதி யான் அவர்களோடு இணைந்து வாழுமாறு செய்த மனமே ! உனக்கு நான் என்ன தண்டனை கொடுப்பேன் ? மொட்டோடு கூடிய தாமரைகள் காணப்படும் , மானிடர் ஆக்காத நீர்நிலைகளை உடைய திருவையாற்றில் விரும்பி உறையும் தேன்போன்ற எம்பெருமானோடு இப்பொழுது இணைந்து வாழும் நெஞ்சே ! உன் செயல் கண்டு உன்னை நான் இப்பொழுது மெச்சுகின்றேன் .

குறிப்புரை :

தட்டு இடு சமணர் :- ` தட்டை யிடுக்கத் தலையைப் பறிப்பார் ` ( தி .1 ப .69 பா .10) ` தாறிடு பெண்ணைத் தட்டுடையார் ` ( தி .1 ப .101 பா .10). ` தட்டிடுக்கி உறி தூக்கி ` ( தி .2 ப .119 பா .10). ` தடுக்கால் உடல் மறைப்பார் ` ( தி .1 ப .13 பா .10). ` தடுக்குடை கையர் ` ( தி .1 ப .7 பா .10) என்பவற்றால் , சமணர் பெண்ணை ( பனை ) த் தட்டு ; தடுக்கு உடையவர் என்பது வெளிப்படும் . தருக்கி - செருக்குற்று . இதில் ` மனத்தினீரே `-` உள்ளத்தீரே ` என்பன , முறையே சமணம் சைவம் இரண்டனுள்ளும் நாயனார் தாம் உற்ற நிலைமையைக் குறித்த விளியாகும் . நான் சமணரோடே தருக்கித் தவம் என்று எண்ணி ஒட்டினேன் . மனமும் அதை ஒட்டிற்று . திரு வையாறமர்ந்த தேனோடு ஒட்டினேன் . உள்ளமும் ஒட்டிற்று . ` ஒட்டிட்ட பண்பு ` உள்ளாத மனம் அது உள்ளிய உள்ளம் இது . அதனை உகந்திட்டிலர் . இதனை உகந்திட்டார் . பா .5 ஆவது திருப்பாடலிலும் இவ்வாறே மதியிலா நெஞ்சம் அருந்தவம் புரிந்த நெஞ்சம் என்று பகுத்துணர்த்துவதறிக . மொட்டு இடு கமலம் பொய்கை - அரும்புகளிடு செந்தாமரைக் குளம் .

பண் :

பாடல் எண் : 4

பாசிப்பன் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.

பொழிப்புரை :

பல்துலக்காததனால் பசிய நிறம்படிந்த பல்லினராய் அழுக்குப் படிந்த உடம்பினராய்ப் பயனற்ற வாழ்வினை வாழும் சமணரோடு அன்பினால் கூடிவாழ்ந்த மனத்தை அவரிடம் இருந்து பிரித்து நல்வழிப்படுத்தும் வழியை அறியமாட்டாதேனாய் முன்பு அடியேன் இருந்தேன் . உலகிலுள்ள நன்மக்கள் எல்லோரும் அன்பினால் முன்நின்று துதித்து வணங்குகின்ற திருவையாறு அமர்ந்த தேனை நறுமணம் கமழும் பூக்களோடு சென்று வணங்கும் ஆற்றல் உடையவர்களுடைய கொடிய வினைகள் அழிந்து ஒழியும் என்பதை இப்பொழுது அறிந்தேன் .

குறிப்புரை :

பாசிப்பல் - வெண்மை நீங்கிப் பசுமை உற்ற பற்கள் . மாசு மெய் - அழுக்குடல் . பலம் - வன்மை . விரதத்தால் இளைத்தல் . ` அநந்த விரதம் ` என்றும் ஒன்றுண்டு . நேசம் - பற்று நே - அன்பு . நே + அம் = நேயம் , நேசம் . தேசத்தார் - உலகோர் . வாசத்தால் வணங்க வல்லார் :- திருவையாற்றில் வாசம் புரிந்து வழிபட வல்லவர் ; வாசனை யுடைய மலர் , புகை முதலியவற்றால் வழிபட்டிறைஞ்ச வல்லவர் . சிவபுண்ணியமே பசுவினை இரண்டினையும் மாய்க்கும் .

பண் :

பாடல் எண் : 5

கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே மதியிலீ பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந் திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே யருந்தவஞ் செய்த வாறே.

பொழிப்புரை :

கடுக்காய்ப் பொடியை உடம்பில் தடவிக்கொள்ளும் அதனையே ஒரு தவ வாழ்க்கை என்று கருதும் குற்றங்களிலே பொருந்திய என் மனமாகிய அறிவுகெட்ட பொருளே ! நீ அந்தப் பயனற்ற செயல்களால் பெற்ற பயன்தான் யாது ? நீர்த்தேக்கங்களிலே வாளைமீன்கள் துள்ளித்திரியும் திருவையாறு அமர்ந்ததேனை அணுகி நிலையாக நின்று தியானிக்கும் மனமே ! நீ சிறந்த தவச் செயலை இப்பொழுதே செய்தனை ஆகின்றாய் .

குறிப்புரை :

கடுப்பொடியட்டி மெய்யில் :- ` மூசுகடுப் பொடியார் ` ( தி .1 ப .43 பா .10) ` கடுப்பொடி யுடற் கவசர் ` ( தி .3 ப .74 பா .10). மெய்யிற் கடுப்பொடி அட்டி என்று மாற்றிக்கொள்க . வடுக்கள் - குற்றங்கள் . மதியிலீ - அறிவிலீ . பட்டது - அடைந்தது . அருந்தவம் - திருவையாறமர்ந்த தேனை அடுத்து நின்று உன்னும் பயனை அளித்தது . ` உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது மன்னுபவந்தீர்க்கும் மருந்து ` ( திருவருட் பயன் 10 )

பண் :

பாடல் எண் : 6

துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்து
உறவினா லமண ரோடு முணர்விலே னுணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன் மதியுனக் கடைந்த வாறே.

பொழிப்புரை :

வீண் செயல் என்று ஆராய்ந்து உணராதேனாய்ச் சமணர்களோடு கொண்ட உறவினாலே அவர்கள் குறிப்பிட்ட வழியிலேயே காலம் போக்கி உண்மையான செயல்பற்றிய அறிவு இன்றி நல்லுணர்வு இல்லேனாய் வாழ்ந்தேன் . தேன் நிரம்பிய சோலைகள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை மறவாமையால் வாழும் மனமே ! உனக்கு இந்த நன்மதி வாய்த்தவாறென்னே !

குறிப்புரை :

துறவி என்று அவம் அது ஓரேன் :- முற்றத் துறந்தோர் என்று நம்பி , சமணருடைய அவச் செயலை ஓராது தவச்செயலாகத் திரிபுபட ஓர்ந்தேன் . அது சுட்டன்று . அவம் என்னுஞ் சொல்லின் பொருளே தனக்குரித்தாக நின்றது . பகுதிப் பொருள் விகுதி என்பர் ; சுட்டுதலின்மையால் , இது உது இரண்டும் அங்ஙனம் நிற்றலில்லை . குருந்தமது ( தி .4 ப .39 பா .9.) சொல்லிய செலவு . ( தி .4 ப .39 பா .7) பலபல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன் . சமணர் சொல்லியவற்றிலே செல்லுதல் . சமணூல் சொல்லியவும் ஆம் . உணர்தல் ஒன்றும் இன்றி உணர்விலேன் ஆனேன் என ஆக்கம் வருவித்துரைக்க . நறவம் - தேன் . மறவு - மறத்தல் . நன்மதி - நல்லுணர்வு . சிவஞானம் . அடைந்தவாறு என்னே என்க .

பண் :

பாடல் எண் : 7

பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன் சோர்வனா னினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லா நினைந்தபோ தினிய வாறே.

பொழிப்புரை :

வினவிய ஐயங்களுக்குப் பல வழிகளைக் கொண்டு விடைகூறும் சமணர்களோடு பழகிப் பல ஆண்டுகள் அவர்கள் குறிப்பிட்ட வழியில் வாழ்ந்து , அவ்வாறு வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது அடியேன் வாழ்நாள் வீணானது குறித்து மனத்தளர்வு உறுகின்றேன் . மல்லிகைச் செடிகளில் பூக்கள் மலரும் சோலைகளையுடைய திருவையாறு அமர்ந்ததேனை இப்பொழுது இரவு பகல் ஆகிய எல்லாக் காலத்தும் தியானிக்கும் இனிமை இருந்தவாறென்னே !

குறிப்புரை :

பல்லுரைச் சமணர் :- ` அநேககாந்த வாதம் ` கூறும் ஆருகதர் . ` உடம்பு எடுத்தற்குமுன் சீவன் உண்டோ இல்லையோ என்று வினாய வழி , 1. உண்டாம் . 2. இல்லையாம் . 3. உண்டும் இல்லையும் ஆம் . 4. சொல்லொணாததாம் . 5. உண்டுமாம் சொல்லொணாததும் ஆம் . 6. இல்லையாம் சொல்லொணாததுமாம் . 7. உண்டும் இல்லையும் ஆம் சொல்லொணாததும் ஆம் என எழுவகையான் இறுத்தல் . வினாயவையெல்லாம் இவ்வாறே இறுக்கப்படும் . ஆம் என்பது ஈண்டுச் சற்று என்னும் பொருட்டாயதோர் இடைச்சொல் . சொல்லொணாதது என்பது உளதும் இலதும் அல்லாதது என்னும் பொருட்டு என்பது . எனவே 1. உள்ளதும் 2. இல்லதும் 3. உளதிலதும் 4. இரண்டும் அல்லதும் என நான்கு பக்கமாய் , இரண்டு அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது ( என்பதனொடு ) 5. உள்ளதும் 6. இல்லதும் 7. உளதிலதும் என்னும் மூன்றும் கூட்ட ஏழுபக்கம் ஆயின எனக் காண்க `. ( சிவஞான போதமாபாடியம் .) அவையடக்கம் :- புறப்புறச் சமயம் ; ஆருகதம் என்னும் மதத்தின் விளக்கம் . பல் ( ஏழு ) வகையாயுரைத்தலாற் பல்லுரைச் சமணர் ஆயினர் . பல பல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன் . ( தி .4 ப .39 பா .6) நினைந்த போது சோர்வன் நான் . ` களவுபடாததோர் காலம் காண்பான் கடைக்கணிற்கின்றேன் ` என்றது இது குறித்தே போலும் . எல்லி - இரவு , இராப்பகலா நினைத்தார் காலங்களவு படாதன்றோ ?

பண் :

பாடல் எண் : 8

மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே யிசைந்தனை யேழை நெஞ்சே
தெண்ணிலா வெறிக்குஞ் சென்னித் திருவையா றமர்ந்த தேனைக்
கண்ணினாற் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்த வாறே.

பொழிப்புரை :

அறிவில்லாத மனமே ! மக்களும் தேவரும் தம் தீவினை நீங்கத் தெளிந்த பிறை ஒளிவீசும் சென்னியை உடையராய்த் திருவையாறு அமர்ந்த தேன் போன்ற எம்பெருமானை மண்ணவரும் விண்ணவரும் வணங்குவாராக , நீ ஒரு பொருளாக எண்ணத் தகாதவரான சமணரோடு இணைந்து காலத்தைப் போக்கினாயே . அப்பெருமானை நாம் கண்ணினால் காணப் பெற்றதனால் நாம் விரும்பிய வீடுபேற்றின்பம் கைகூடிவிட்ட காரியமாயிற்று .

குறிப்புரை :

ஏழை நெஞ்சே , தெண்ணிலா எறிக்கும் சென்னித் திருவையாறமர்ந்த தேனைக்கண்ணினாற் காணப்பெற்றுக் கருதிற்றே முடிந்தவாறே . மண்ணுளாரும் விண்ணுளாரும் ( தம்தம் ) பாவம்போக ` அத்தேனை ` வணங்குவார் . ( இந் நலத்தை அன்றே அடையாமல் ) எண்ணிலாச் சமணரோடே இசைந்தனை . இத்திருப்பதிக முழுவதும் திருவையாற்றிலே சிவாநந்தத்தேனை நுகரும் பேரின்பத்தை முன்னரே அடையவொட்டாது செய்த சமண சமயச்சார்வை நினைந்து , எற்றென்றிரங்கிக் கூறியவாறறிக . எண்ணியமை - அளவில்லாமை , ஆராய்ச்சி யின்மை எண்ணத்தின்படி செயலில் நில்லாமை . எறிக்கும் - வீசும் . சென்னியிற் பிறை வீசும் சிவாநந்தத்தேன் வாயாலுண்ணத்தக்கதன்று . கண் ( கருத்து ) காணத்தக்கது . கருதியது வீடுபேறு .

பண் :

பாடல் எண் : 9

குருந்தம தொசித்த மாலும் குலமலர் மேவி னானும்
திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே.

பொழிப்புரை :

இடைக்குலச் சிறுமியர் மரக்கிளைகளில் தொங்க விடப்பட்ட தம் ஆடைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு உடுத்துமாறு குருந்தமரத்தைக் கண்ணனாக அவதரித்த காலத்தில் வளைத்துக் கொடுத்த திருமாலும் , மேம்பட்ட தாமரையில் விரும்பித் தங்கிய பிரமனும் மேம்பட்ட பெரிய திருவடிகளையும் திருமுடியையும் காண இயலாதவர்களாக , மேம்பட்ட முனிவர்கள் உயர்த்திப் புகழும் திருவையாறு அமர்ந்த தேனை உன்னுள் பொருத்தித் தியானிக்கும் மனமே ! அச்செயலால் நம் பொய்யான உடலிலிருந்து நுகரும் வினைப்பயன்கள் யாவும் அழிந்து விடுதல் தெளிவு .

குறிப்புரை :

குருந்தமது - குருந்த மரத்தை , ` அவமது ` ( தி .4 ப .24 பா .6.) என்றதன் குறிப்புணர்க . ஒசித்த - ஒடித்த . இது மால் குருந்த மரம் ஒடித்த வரலாற்றுக் குறிப்பு . குலமலர் - தாமரை , ` பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை `, ` பூவிற்குத் தாமரையே ` ` பூவெனப்படுவது பொறி வாழ் பூவே ` எனப்படும் மேன்மைக் குலமாகும் . மேவினான் பிரமன் , திருந்து நற்றிருவடி :- ஆன்மாக்கள் தம்மைத் திருத்திக்கொண்டே சென்றெய்தும் இயல்பிற்கேற்பத் திருவடி திருந்த விளங்கும் . ` திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச்செல்வன்றன்னது திறமெலாம் ` ( தி .3 ப . 38 பா .7). ` அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்டசிவலோகா ` ( தி .8 திருவாசகம் 491) என்னும் உண்மையால் திருந்திய அருளே திருந்தாச் சிந்தையைத் திருத்தவல்லதாதல் விளங்கும் . திருத்தல் - இச்சா ஞானக் கிரியை ஆகிய மூன்றனையும் தன் கரணமாக்கிப் பசுகரணமாகத் தொழிற்படாது செய்தல் , திருவடியும் திருமுடியும் அருளுருவத் திருமேனி குறித்தவை . அருவம் , அருவுருவம் , உருவம் மூன்றனையுங் கடந்த நிலையில் , ` பரை உயிரில் யான் எனது அற நின்றது அடியாம் . பார்ப்பிடம் எங்கும் சிவமாய்த் தோன்றலது முகமாம் . உரையிறந்த சுகமதுவே முடியாகும் ` ( உண்மைநெறி விளக்கம் 4 ) என்று தெளிக . நிரல் நிறையாகக் கொண்டு , மால் திருவடிகாணமாட்டான் . மலர் மேவினான் திருமுடி காணமாட்டான் என்றுரைக்க . அருந்தவ முனிவர் :- அப்ப மூர்த்திகள் திருக்கண்ணாற் காணப்பெற்ற அக் காலத்து மாதவர்கள் . ` ஏத்தும் ` என்று நிகழ்காலத்தாற் கூறியதுணர்க . பொருந்தி நின்றுன்னுதல் - ஒன்றியிருந்து நினைத்தல் . பொய்வினை :- மூலகன்மத்தின் காரியமாய்த் தோன்றியழியும் ஆகாமியம் சஞ்சிதம் பிராரத்தம் என்பன . வினை ஈட்டப்படுங்கால் மந்திரம் முதலிய அத்துவாக்களிடமாக முறையானே மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றான் ஈட்டப்பட்டுத் தூலகன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும் . பின்னர்ப் பக்குவம் ஆங்காறும் சூக்குமகன்மமாய்ப் புத்தி தத்துவத்தினிடமாக மாயையிற்கிடந்து , சாதி ஆயுப் போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி , முறையே சனகம் தாரகம் போக்கியம் என மூவகைத்தாய் , அபூர்வம் , சஞ்சிதம் , புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர்பெறும் . அது பின்னர்ப் பயன்படுங்கால் ஆதி தைவிகம் , ஆத்தியான்மிகம் , ஆதி பௌதிகம் என்னும் முத்திறத்தாற் பலதிறப்பட்டுப் பிராரத்தம் எனப்பெறும் என்றுணர்க . ( சிவ ஞானமாபாடியம் . சூ 2. அதி . 2 ). ` வேறாகப் பார்த்திருப்பதன்றியே பாழான கன்மத்தை நீத்திருக்கலாமோ நிலத்து ` ( தி .4 ப .9 பா .10.) ` முன்னை வினைக்கு ஈடா முதல்வன் அருள் நமைக் கொண்டு என்ன வினை செய்ய இயற்றுமோ ? இன்னவினை செய்வோம் தவிர்வோம் திரிவோம் இருப்போம் இங்கு உய்வோம் எனும் வகை ஏது ?` ( தி .4 ப .9 பா .6.) ` எடுத்த உடற்கேய்ந்த கன்மம் எப்போதும் ஊட்டும் ` ( தி .4 ப .8 பா .6) மனவாக்குக் காயம் மன்னியசைப்பானும் அனமாதிபோகம் அளிப்பானும் நனவாதி கூட்டிவிடுவானும் முத்தி கூட்டிடுவானும் பிறப்பில் ஆட்டி விடுவானும் அரன் ` ( தி .4 ப .9 பா .5.) என்று தருமைக் குருமுதல்வர் அருளிய சிவபோகசாரம் ஈண்டுணரத்தக்கது .

பண் :

பாடல் எண் : 10

அறிவிலா வரக்க னோடி யருவரை யெடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு மூதறி வாள னோக்கி
நிறுவினான் சிறு விரலா னெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினா லருள்கள் செய்தான் றிருவையா றமர்ந்த தேனே.

பொழிப்புரை :

இறைவனுடைய ஆற்றலைப் பற்றிய உண்மை அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்ப்பதற்கு முழுமையாக முயன்ற செயலைக்கண்டு , உண்மையான ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன்போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன் கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன் இறைவனைப் பற்றிய அறிவோடு சாமவேதகீதம் பாட , அவனுக்கு அப்பெருமான் அருள்களைச் செய்தான் .

குறிப்புரை :

அரக்கன் ஓடி எடுக்கல் உற்று முறுகினான் . முறுகக் கண்டு மூதறிவாளன் நோக்கிச் சிறுவிரலால் நிறுவினான் . நெரிந்து போய் நிலத்தில் வீழச் சிறு விரலால் நிறுவினான் . அறிவினால் அருள்கள் செய்தான் . அவன் யார் எனில் அவனே திருவையாறமர்ந்த தேன் ஆவான் என்க . மலையெடுத்தது அறிவின்மையால் . சாமகானம் பாடி அருள்கள் பெற்றது அறிவினால் . அறிவு என்பது இறைவனது கருணை என்னும் சத்தியைக் குறித்ததாகக் கொண்டு , இரக்கத்தால் எனலும் பொருந்தும் . மூதறிவாளன் , எழுவாய் , காண்டல் நோக்கல் நிறுவல் செய்தல் நான்கும் அவன் வினைகள் . அறிவின்மை , எடுக்கலுறுதல் , முறுகல் , நெரிதல் , போதல் , வீழ்தல் , அரக்கனுடையன . அறிவு இருவரதுமாம் . வீழ்ந்ததால் , பாடி உருக்கும் அறிவு தோன்றப் பெற்றான் . வீழக் கண்டதால் இறைவன் இரங்கி அருளினான் . ` அறிவிலி அரக்கன் ` என்றதால் , மூதறிவாளனை நோக்கி என இரண்டனுருபு விரித்தல் பொருந்தாது . தன் குற்றமும் அதற்குத் தீர்வும் அறிந்ததே ஆண்டு அறிவாம் .
சிற்பி