திருப்பயற்றூர்


பண் :

பாடல் எண் : 1

உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகி யோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்க னோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூர்ப் பெருமானார் குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்தார் . யானைத்தோலை உரித்ததனையும் போர்த்ததனையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சித்தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதனைக் கண்டு , சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்தும் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் தாமும் பற்கள்தோன்றச் சிரித்துவிட்டார் .

குறிப்புரை :

உதிரம் - இரத்தம் . ஆறாய் ஒழுகி ஓடும்படி ஆனையைத் தோலுரித்தார் . உரித்த தோலைத் தன் திருமேனிமேல் விரித்துப் போர்த்திட்டார் . அவ்வுரித்தலையும் போர்த்தலையும் கண்ட அம்பிகை அஞ்சி நடுங்கிய கலக்கத்தை நோக்கினார் சிவனார் . அத்தோலைச் சிறிதுநேரம் பொறுத்திட்டார் . பொறுக்கும் ஆற்றல் இல்லாதவராகத் தோற்றினார் . அதனால் அம்பிகைக்கு அலக்கல் ( அசைவு ) மிகுதலைத் தீர்க்க , தம் பற்கள் தோன்றத் தாமும் சிரித்திட்டார் . யானையை உரித்த கோலத்தினை நோக்கி ` எயிறு ` என்றார் . எயிறு யானையுரிக்க மேற்கொண்ட வைரவக் கோலத்துக்குரிய லகிரந்தமாகலாம் . பயறு , உளுந்து , வரகு , தினை முதலியவற்றாலும் ஊர்ப்பெயர்கள் உண்மை இப்பயற்றூர் , உளுந்தூர் , வரகூர் , திருத்தினைநகர் முதலியவற்றால் அறிக . ` அலக்கணோக்கி ` என்னும் பாடத்திற்கு விதிர்த்த அலக்கண் என்று பெயரெச்சத்தொடராகக் கொண்டுரைக்க .

பண் :

பாடல் எண் : 2

உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் பல ஊழிகளையும் படைத்த பெருமானாராய் , விரும்பிப் பார்வதிபாகராய் , மலையை வில்லாகக் கொண்டு , பாம்பை அதற்கு நாணாகக் கட்டி , உலகங்களில் பலரையும் சென்று பற்றி வருத்திய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு , வெகுண்டு சிவந்த கண்களையுடையவர் .

குறிப்புரை :

ஒரு பாகத்தில் உமையம்மையாரை வைத்து உவந்தவர் ; உவந்து வைத்திட்டவர் ; உவந்து இட்டு வைத்தவர் . ஊழி ஊழி - ஊழிதோறும் . பவம் என்னும் வடசொல்லடியாகப் பவந்து என்னும் ஒரு வினையெச்சத்தைத் தோற்றி , அதனொடு இட்ட என்னும் பெய ரெச்சத்தைச் சேர்த்துப் ` பவந்திட்ட ` என்றதாகக் கொண்டு ` தோன்றிய ` என்றுரைத்தனர் பிறர் . மலைச்சிலை - மேரு மலையாகிய வில் . நாகம் - வாசுகி என்னும் பாம்பாகிய கணை . அக் கணையில் மூன்றனுள் ஒரு கூறு வாசுகிக்குரியதேனும் , இவ்வாறுகுறித்தல் மரபு . கவர்ந்திடுதல் - தாம் சென்று பற்றுதல் ; முப்புரத்தின் வினை . கனல் எரி ( கனலும் எரி ):- வினைத்தொகை . சீறிச் சிவந்திட்ட கண்ணர் :- ` கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள ` ` நிறத்துரு வுணர்த்தற்கும் உரிய என்ப ` ( தொல்காப்பியம் . உரியியல் ). ` பவந்த நாதர் ` ( தி .6 ப .13 பா .4).

பண் :

பாடல் எண் : 3

நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளு மெங்க டத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செ யென்ன நின்றவ னாக மஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் நமக்கு அருள்கிட்டும் என்று நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் செய்யும் உண்மைப் பொருளாய்த் தீ நிறத்தவராய் எங்களுக்கு அருள் செய்வீராக என்று எல்லா உயிர்களும் வேண்டித் தொழுமாறு அழியாது நின்ற முதல்வராய்ப் பாம்பினை அஞ்சும் பிறைமதிக்கு அஞ்சவேண்டாதவாறு அருள் செய்துள்ளார் .

குறிப்புரை :

நமக்கு அருள் கிடைக்கும் என்னும் உறுதியுடன் நான்மறைகளை ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் புரியும் தத்துவன் ; தழல் ஆகுபெயர் . அதன் நிறத்துக்காயிற்று . ` எங்களுக்கு அருள்செய் ` என்று எல்லாவுயிர்களும் வேண்டித்தொழ அழியாது என்றும் நின்ற முழு முதல்வன் . நாகத்தை அஞ்சுகின்ற திங்கள் . இது கவி மரபு . நாகம் - சாயாகிரகம் ஆகிய இராகு கேது . நின்ற வல் நாகம் எனல் பொருந்தாது .

பண் :

பாடல் எண் : 4

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் அருச்சுனனுக்கு அருளி , பாம்பினை இடுப்பில் ஆடுமாறு இறுகக்கட்டி , சாத்தனை மகனாக ஏற்றுக் காளிக்காகச் சாமவேதம் பாடியவாறு கூத்து நிகழ்த்திக் கொடிய பாம்பு , பிறை , கங்கை ஆகிய இவற்றைச் சடையில் அணிந்தவராவார் .

குறிப்புரை :

பார்த்தன் - அருச்சுனன் . அரை - திருவரையில் ` அரக்கு அசைத்தார் `. ஆட - அசைய . ` உரகக்கச்சு ` ( சிலப்பதிகாரம் . வேட் . 59 ). சாத்தன் - ஐயனார் . சாமுண்டி - காளி . கூத்தொடும் சாமவேதம் பாடியது . காளியொடு திருக்கூத்தாடியபோது . கோள் - வலிமை . அரா - அரவு ; பாம்பு . மதியம் - திங்கள் . தீர்த்தம் - கங்கை .

பண் :

பாடல் எண் : 5

மூவகை மூவர் போலு முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலு நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலு மாதிரை நாளர் போலும்
தேவர்க டேவர் போலும் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூவகைப்பட்ட இலயசிவம் , போகசிவம் , அதிகாரசிவம் என்ற மூவராய் , நிறைந்த நெற்றிக்கண்ணராய் , முறையாக வைகரி முதலான நால்வகை ஒலிகளை வெளிப்படுத்தும் நாவினை உடையவராய் , நான்கு வேதங்கள் சிவாகமம் முதலிய ஞானநூல்கள் என்பவற்றின் வடிவினராய் , திருவாதிரை நாளை உகப்பவராய்த் தேவர்களுக்குத் தலைவராய் விளங்குபவராவார் .

குறிப்புரை :

அருவம் நாலு ; அருவுருவம் ஒன்று ; உருவம் நாலு என்னும் மூவகையாய் இலயபோக அதிகாரமாய் நின்ற மூவர் . மூவகை :- ஆண் பெண் அலி என்னும் மூன்று வகை . மூவர் - ஆணர் , பெண்ணர் , அலியர் . முற்றும் ஆம் நெற்றிக் கண்ணர் - முழுதும் ஆகும் நெற்றிக் கண்ணினார் . அது ஞானக் கண்ணாய் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியொடு நிறைந்த அருளாதலின் . முற்றுமாதல் ( பரைவியாபகம் ) ` முத்தி நன்னெறி முப்பதும் ` உணர்ந்தார்க்கே விளங்கும் . துகளறுபோதம் , சிவாநந்தபோதசாரம் ( தருமை ஆதீன வெளியீடு ஆகிய சாத்திரங்களும் , தோத்திரங்களும் என்றதில் விளக்கப்பட்டு உள்ளன ) காண்க . நாவகை :- ` மெய் வாய் கண் மூக்குச் செவி ` என்பவற்றுள் ` வாய் ` சுவையுணர் பொறியைக் குறிக்கும் . ` வாக்குப்பாதம் பாணிபாயுரு உபத்தம் ` என்பவற்றுள் ` வாக்கு ` வாயை உணர்த்தாது , அதனின் வேறாய நாவொலியைக் குறிக்கும் . அது சூக்குமை , பைசந்தி , மத்திமை , வைகரி என நான்கு வகைப்படும் . அவற்றை ` நாவகை ` என்றும் , அந் நாவகையைத் தோற்றியருளியது சிவபிரானது நாவேயாதலின் , அவரை ` நாவர் ` என்றும் அருளினார் . நான்மறைகளும் சிவஞானத்தையுணர்த்தும் சிவாகமங்களும் பிறவும் சிவபெருமான் திருவுருவாதலின் , ` நான்மறை ஞானம் எல்லாம் ஆ ( ம் ) வகை ஆவர் ` என்றருளினார் . ` திருவாதிரைநாள் ` சிவபிரானது என்பது வெளிப்படை . தேவதேவர் . ஆவகை - காரண மாயையினின்று மாயாகாரியங்களும் காரண ( ஆணவ ) மலத்தினின்று அதன் காரியங்களும் மூலகன்மத்தினின்று காரிய கன்மங்களும் ஆகும் வகையில் , அவ்வக் காரணத்தினின்று காரியப்பொருள்களைத் தனது சங்கற்ப சிருட்டிமாத்திரத்தில் தோற்ற லயபோகாதிகார அவத்தையாய் நான்மறைஞானமெல்லாமாவர் .

பண் :

பாடல் எண் : 6

ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞக னெந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் தீ நீங்காத கையினராய் , தீபங்கள் நீங்காத சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் , தலைக்கோலம் அணிந்தவராய் , நமக்குத் தந்தையாராய் , தலைவராய் , ஞாயிறு , சந்திரன்களாகவும் , யமன் , வருணன் , அக்கினி , நிருருதி , வாயு , மேம்பட்ட சாந்த வடிவினனாகிய ஈசானன் ஆகிய எண்திசை காப்போராகவும் உள்ளார் .

குறிப்புரை :

ஞாயிறு (- செங்கதிரோன் ). நமன் (- இயமன் ); வருணன் ; சோமன் (- வெண்கதிரோன் ). தீ ; நிருருதி ; வாயு ` சாந்தன் என்னும் எண்மருள் இருசுடரல்லாப் பிறர் திக்குப் பாலகர் . சாந்தன் குபேரனையும் குறிக்கும் ஈசானனையும் குறிக்கும் . திப்பியசாந்தன் என்றதால் இந்திரனையும் குறித்ததாக்கி எண்மரையும் கொள்ளலாம் . பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன் : தி .4 ப .9 பா .5 பார்க்க . தீ அறாக் கையர் -` செங்கையில் அனல் ஏந்தியவர் .

பண் :

பாடல் எண் : 7

ஆவியா யவியு மாகி யருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் வேள்வித் தீயின் புகையாய் , வேள்வியில் தேவருக்கு வழங்கப்படும் அவி உணவாய் , நுண் பொருளாய் , மிகப்பெரும் பொருளாய் , தீவினை செய்தவருடைய தீவினைகளை எல்லாம் போக்கும் பெருமானாய் , பிரமனாய் , கருங் குவளைபோன்ற கண்களை உடையளாகிக் கடல் போன்ற நீலநிறம் உடைய பார்வதிபாகராகயும் உள்ளார் .

குறிப்புரை :

ஆவி - ( வேள்வித் தீயின் ) புகை . அவி - வேள்வி வழியாக விண்ணோர்க்கு அளிக்கும் தூயவுணவு . அருக்கம் x பெருக்கம் . அருகுவது அருக்கம் . பெருகுவது பெருக்கம் ; முரண் . அணுவாய் மகத்தாய் நிற்கும் பொருளியல்பு . அருக்கம் பெருக்கம் எனப்பட்டது . ` சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ ` பாவியர் - பாவத்தைத் தேடிக்கொண்டவரது :- ` பாவியாய் ` என்றும் பாடம் உளது . அது பொருத்தமுடையதன்று . பரமன் - ` முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் ` பிரமன் ஆகி :- பிரமம் என்பதற்கு வேதம் தத்துவம் தவம் பிராமணன் நான்முகன் என்னும் ஐந்தும் பொருளாயினும் , ஈண்டு மெய்ப்பொருள் ( உண்மைதத்துவம் ) என்னும் பொருட்டு . ( அமரம் . நாநா ). ` காவியங்கண்ணள் `:- திருப்பயற்றூர்நாய்ச்சியார் திருப்பெயர் . ` கடல் வண்ணம் ஆகிநின்ற தேவி ` ஆகி தேவி என்க . பாகம் - திருமேனிப்பகுதி .

பண் :

பாடல் எண் : 8

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்
கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே யென்றென் றுள்குவா ருள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் , தந்தையாராய்த் தாயாராய் உலகங்களாய் , உலகில் உள்ளார் அனைவருக்கும் தலைவராய் , ஏழு உலகங்களில் உள்ள உயிர்களின் செயற்பாட்டிற்கு உடனாய் நின்று இயக்குபவராய் , ` எந்தையே ! எம்பெருமானே!` என்று தியானிப்பவர்கள் உள்ளத்திலே சிந்தையும் சிந்திக்கப்பெறும் சிவமுமாகி உள்ளவராவார் .

குறிப்புரை :

` தாயாகித் தந்தையாய்ச் சார்வும் ஆகி ... ... நின்றவாறே `. தந்தையும் தாயும் ஆகி :- ` அம்மையப்பர் ` தரணியாய் :- ` மண்ணாகி விண்ணாகி மலையுமாகி ... ... எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே ` ` இருநிலனாய்த் தீயாகி ... ... அடிகள் நின்றவாறே ` தரணியுள்ளோர்க்கு எந்தையும் என்ன நின்ற :- ` ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத் துகந்தான் ` ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய ` ஏழுலகுடனும் ஆகி :- ` எண்டிசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகித் தோன்றும் கண்ணவன் `. ` நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய் ` ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` ` ஏழ்கடலும் ஏழுலகுமாயினான் காண் `. உள்குவார் - நினைப்பவர் . சிந்தையும் சிவமும் ஆவார் :- சிந்தை சிந்திக்கப்பெறும் சிவம் இரண்டும் அபேதமாதல் , ஏகனாகி இறைபணி நிற்பார் அநுபவத்திற் கூடுவது .

பண் :

பாடல் எண் : 9

புலன்களைப் போக நீக்கிப் புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று விரண்டையு நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் , சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் என்ற ஐம்புல நுகர்ச்சிகளையும் அடியோடு போக்கி , உள்ளத்தை ஒருவழிப்பட நிலைநிறுத்தி , மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களையும் கடக்க நான் , தான் என்ற இரண்டையும் நீக்கி அவனேதானே ஆகிய அந்நெறியாளராய் , மாயை , கன்மம் என்ற மலங்களைச் செயற்படாதவாறு செய்ய வல்ல அடியவர் மனத்திலே இன்பவடிவினராய்ச் சினத்தை விளைக்கும் பிறவித் துன்பங்களை நீக்கி நிற்பவராவர் .

குறிப்புரை :

புலன்களை - சுவை . ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் ஆகிய புலன் ஐந்தினையும் . ` புலனைந்தும் பொறிகலங்கி `. போக நீக்கி - செல்லத் தொலைத்து . ` பங்கத்தைப் போகமாற்றி ` ( தி .4 ப .75 பா .8). ` மடவா ரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போகமாற்றி ` ( தி .6 ப .5 பா .1). புந்தி - அறிவு ; சிந்தை . ஒருங்க - ஒருவழிப்பட ; ( பற்றியவை கெட ). இலங்களை - மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களை . போக - கடக்க . இரண்டையும் - நான் என்பதும் தான் என்பதும் ஆகிய இரண்டனையும் . ஒன்றாய் - ` அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி `. மலங்களை - ` யான் எனது என்னும் செருக்கினையும் மாயை கன்மங்களையும் . வல்லார் மனம் :- ஆறன்றொகை . போகம் - சிவாநந்தாநுபவம் . சினங்கள் :- சினம் விளைக்கும் பிறவித் துன்ப விளைவுகள் .

பண் :

பாடல் எண் : 10

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் , சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக , அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டுநோக்கி , மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார் .

குறிப்புரை :

மூர்த்தி - ` சிவமூர்த்தி `. மலை - திருக்கயிலை . போகாதா - போகாதாக . முனிந்து - வெறுத்து . நோக்கி - உள்ளே எண்ணி . பார்த்து - வெளியே கண்டு . ஆர்த்தல் - ஆரவாரஞ்செய்தல் . அடர்த்தல் - நெருக்குதல் ; வருத்துதல் . நல்லரிவை :- உமாதேவியார் . ` தேத்தெத்தா ` இசை குறித்த அநுகரணம் .
சிற்பி