திருப்பழனம்


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கண் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ.

பொழிப்புரை :

சொல் வரிசையைத் தவறாமல்கூவுகின்ற குயில் இனங்களே! பல வரிசையாக உள்ள கோடுகள் பொருந்திய வண்டுகள் பண்பாடும் திருப்பழனத்தை உகந்தருளியிருப்பவனாய், மாலையின் முற்பகுதியில் ஒளிவீசும் பிறை விளங்கும் சடைமுடியைத் தலையில் உடையவனாய்ப் பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் அணிந்த எம்பெருமான் என்னுடைய கன்னிஇள நலத்தை நுகர்ந்து பின் என்னை இகழ்ந்து புறக்கணிப்பானோ? தூது சென்று எம் பெருமானிடம் என் நிலையைச் சொல்லுங்கள்.

குறிப்புரை :

தலைவி தன் கலவி நலனுகர்தலை வெறான் தலைவன் எனல். குயிலைத் தூதுவிடுதல். சொல்மாலை - சொல் வரிசை. சொல்லிய வரிசையில் தவறாது கூவுதல் குயிலுக்கு இயல்பு. அத் தவறாமைக்கு ஏது பயிற்சி. பயிற்சி ஈண்டு உளத்திற்கும் உடற்கும் உரியதன்று. உரை (நா)ப் பயிற்சியாகிய நவிற்சியின் மேற்று. `மறை நவில் அந்தணர்` (புறம். கடவுள் வாழ்த்து) என்பதன் குறிப்புணர்க. வரி வண்டுகளின் பல வரிசையை மாலை என்றார். வண்டு மிழற்றும் பழனம்; இடப் பெயர் கொண்ட எச்சம். மாலை நகு திங்கள். முகிழ் - முதன்முதலிற் பிறை, மேற்கில் மாலையிலேதான் காணப்படும். முடி - கங்கைச் சடைமுடி. சென்னி அம் முடியுடையது. சென்னி - தலை. பொன் மாலை மார்பன்; பழனத்திறைவன். புது நலம்:- கன்னிமை கழியும் பொழுதையது. ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு. தூது செல்வார்க்கு அழகு இன்றியமையாததன்று. சொல்லினிமையே வேண்டுவது. அதனால், நிறம் பற்றிய அழகு இன்மை கருதாது, சொன்மாலை பயில்கின்ற குயிலினங்களைச் சொல்லுமாறு வேண்டினாள். குரு அருளும் மெய்யுணர்வில் நோக்கம் வைத்துச் சீடன் வணங்குதல் போன்று, குயின்மொழியில் உளங்கொண்டாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் றளிர் வண்ணம்
கொண்டநா டானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ. 

பொழிப்புரை :

நீர் முள்ளிகளே! கடல் முள்ளிகளே! தாழைகளே! நெய்தல்களே! பண்டரங்கத் கூத்திற்கு உரிய வேடத்தானாய். பாட்டுக்கள் நீங்காத திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான், வண்டுகள் உலாவுகின்ற குளத்தில் யான் மூழ்க என்னைக் காப்பதற்காகத் தானும் குளத்தில் குதித்து என்னைக் கரைசேர்த்தபோழ்து அவன் என் தளிர்போன்ற வண்ணத்தை அனுபவித்த அந்நாளை, தான் நினைவில் வைத்திருப்பவள் ஆதலின் என்னைத் தன் அடியவளாக ஏற்றுக்கொள்ளாது என்னைத் தனித்து வருந்துமாறு விடுபவனல்லன்.

குறிப்புரை :

கண்டகம் - நீர்முள்ளி. முண்டகம் - கடல்முள்ளி. `முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்` (புறம். 24). கடுஞ்சூல் முண்டகம் - முதற்சூலையுடைய கழிமுள்ளி (சிறுபாண் 148). `மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்` (மதுரைக். 96.7.) `அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை` (நற்றிணை. 125) `முண்டகக் கோதை நனைய....நின்றோள்.` (ஐங்குறுநூறு. 121) கைதை - தாழை. பண்டரங்க வேடத்தான்:- பண்டரங்கம் என்னும் கூத்துக்குத் தக்க கோலத்தைக் கொண்டவன். (கலித்தொகை கடவுள் வாழ்த்து.) பாட்டு ஓவாப் பழனத்தான்:- பழனத்தின் சிறப்பு. அடியார் பலர் பாட்டும் புள்ளொலி முதலிய பாட்டும் ஓவாமையும் பழனத்தான் சிறப்பாயின், சாமகானமும் ஆம். தடம் - நீர் நிலை. வண்டுலாவலால் மலர்த் தடம் என்றாயிற்று. தளிர் வண்ணம் போலும் வண்ணத்தைக் கொண்ட நாள் கொண்டான் அறிவான். அதைக் குறிக்கொள்ளா திரான். கேளாதவற்றைக் கேட்பன போலக் கொண்டு கூறியது இது. `ஒட்டிய உறுப்புடையதுபோல் உணர்வுடையது போல்...சொல்லாமரபினவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கி` (தொல். பொருளியல்.2) என வருதலின்பாற்பட்டது. `வாராமரபின.....என்னா மரபின` என்னும் எச்சவியற் சூத்திரம் ஈண்டுப் பொருந்தாது. புனல் விளையாட்டின் நிகழ்ச்சி நினைந்து கூறியது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

மனைக்காஞ்சி யிளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைம்மா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லா முரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ. 

பொழிப்புரை :

வீட்டுக்கொல்லையில் வளர்க்கப்பட்ட காஞ்சி மரத்தில் தங்கியிருக்கும் இளைய நாரையே! மறந்தாயோ! பிரகாசிக்கின்ற வண்டே! மதம் பொழியும் முகத்தை உடையதாய்ப் பனை போலும் திரண்டு உருண்ட பருத்த துதிக்கையை உடைய யானைத் தோலை மேலே போர்த்தவனாய்ப் பலரும் பாடும் திருப்பழனத்து எம்பெருமான் நினைக்கின்ற நினைவை எல்லாம் அறிந்து வந்து என்னிடம் கூற மாட்டாயா? என் தூதாகச் சென்ற என் தோழி அவன்பால் தான் கொண்ட காதலால் தூது சொல்லவேண்டிய செய்தியை நெகிழவிட்டுவிட்டாளோ?

குறிப்புரை :

மனைக் காஞ்சி - தோட்டத்தில் வளர்த்த காஞ்சி மரம். `காஞ்சி` (நகர்) என்பது இம்மரத்தாற் பெற்ற பெயரே. குருகே மறந்தாயோ? வண்டே உரையாயோ? ஆற்றாமை அடுக்கிய தூது விடுக்கிய தூண்டிற்று. மதமுகத்த - மதம் பொழியும் முகத்தையுடைய. பனைக்கை - பனைபோலும் திரண்டுருண்ட பருங்கை. மா - யானை. உரி - தோல். பலர் - அடியர் பலர் பாடும் பழனத்தான்:- முற்பாட்டின் குறிப்பு உணர்க. நினைக்கின்ற நினைப்பெல்லாம்:- தலைவி நினைக்கின்ற எல்லா நினைப்பும் நிகழ் - விளக்கம். சுனைக்குவளை மலர்க்கண் - சுனையிற் பூத்த குவளை மலர் போலுங் கண். `சுனை` அடையால், கண்ணின் குளிர்ச்சி புலப்படும். தனக்குத் தூதாய்ச் சென்றவள் அவன்பாற் கொண்ட காதலாற் சோர்வாளோ என்று ஐயுற்றவாறும் சொற்சோர்வுபடுவாளோ என்றவாறும் ஆம். `குருகு` - நெய்தல் நிலத்துப் புள். (கலி.121.இ. வை. அ. ஐயர் பதிப்பு. பக்கம். 763.4 பார்க்க) `கருங்கால் வெண்குருகு` வண்டிருந்த குவளையைக் குவளைக்கண்ணி என்றதாகக்கொண்டு பொருள் கூறலும் பொருந்தும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

புதியையா யினியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாள னென்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ. 

பொழிப்புரை :

புதிய இனிய பூமணம் கமழும் தென்றல் காற்றே! சுடுகாட்டைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பலரும் புகழும் பழனத் தானாய், தன்னை மதியாத தக்கனும் மற்றவரும் செய்தவேள்வியை ஒரு பொருளாகக் கொண்டு அழித்த, விதியைத் தன் இட்டவழக்காக ஆள்கின்ற பெருமான், என் உயிருடன் விளையாடுகின்றானோ?

குறிப்புரை :

புதியைஆய் இனியைஆம் பூந்தென்றால்:- தென்றல் ஆண்டுதொறும் போதரினும், வியர்த்தலால் ஆகும் வருத்தம் போக்கும் பொழுதெல்லாம், வருந்தும் உள்ளத்திற்கு புதுமையாய்த் தோன்றும். மென்காற்றாதலின் இன்காற்று என்பதில் ஐயம் இன்று. பூந்தென்றலாதலின், மணம் வீசுதலாலும் இனிமை உண்டாக்கும். `கோயில் சுடுகாடு`. `கள்ளி முதுகாட்டில் ஆடிகண்டாய்`. மதியாதார் - தக்கனும் அவன் வேள்வியில் உதவியாய் இருந்தவரும். மதித்திட்ட - ஒரு பொருளாகக் கொண்டு வீரபத்திரத் திருக்கோலம் கொண்டு அழித்த. மதிகங்கை - மதியையும் கங்கையையும். விதியாளன் - தலைமேற் சூடி ஆள்பவன். `விதி` ஈண்டுத் தலைக்கு ஆகு பெயர். `தலைவிதி` என்னும் வழக்குணர்க. விதி (ஊழ்வினை) எனக் கொண்டு நியம நெறியாளன் எனப் பொருந்தக் கூறலுமாம். திருமுறையில் இறைவனை `விதி` எனக் கூறுதல் பயின்ற ஆட்சி. `விதியொப்பான்` (தி.5 ப.3 பா.6) `நல்வினையும் தீவினையும் ஆயினான்` (தி.6 ப.11 பா.2) `விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி` (தி.1 ப.30 பா.1) `விதியானை` (தி.2 ப.16 பா.2) `விதியுமாம் விளைவாம்` (தி.3 ப.48 பா.2) உயிர்மேல் விளையாடல்:- காதலின்ப விளையாடலும் உயிர்க்கே உரியது. அந்தக்கரண முதலியவற்றின் நுகர்ச்சியளவினதன்று. பேரின்ப விளையாடல் கருவி கரணங் கடந்த நிலையில் உயிர்க்குத் தனியாட்சியாயுரியது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ. 

பொழிப்புரை :

இம்மண்ணுலகில் பொருந்தி இம்மை இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும் மேம்பட்ட தூய்மையை உடைய வேதியர்க்கும் வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும் துன்ப வீடும் இன்பப் பேறுமாய் நிற்பவனாய், சான்றோர்கள் பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் தலைவனை யான் உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் கைவிடக் கூடியவனோ?

குறிப்புரை :

மண்ணவர்க்கும், மிக்க தூய்மையுடைய மறையவர்க்கும், விண்ணவர்க்கும் துன்பவீடும் இன்பப்பேறுமாகி நிலவும் முதல்வனை; பண்ணொடு பொருந்த இசை பாடும் திருப்பழனத்தில் எழுந்தருளிய அப்பனை, யான் இறக்கும் பொழுதிலும் கைவிடக் கடவேனல்லேன். கண்பொருந்தல்:- இறப்பினை உணர்த்தி நின்ற மங்கல வழக்கு. `போதத்து` என்பது, பாவலர் சிலராட்சியில், இரண்டு நிகழ்ச்சி ஒரு பொழுதில் ஒருங்கு நிகழ்தலைக் குறிக்கின்றுழி நிற்கின்றது. ஈண்டும் கண்பொருந்தலும் (உயிர் நீக்கமும்) வழி பாட்டைக் கைவிடலும் ஒருசேர நிகழ்வன. அத்தகைய நிலையிலும் அப்பனைக்கைவிடாத அப்பர் நம் அப்பர் என்றுணர்க. \\\\\\\\\\\\\\\"வேயுயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்\\\\\\\\\\\\\\\" என்ற கம்பர் கருத்தை (அயோத். தைலமாட். 60) ஒட்டி அச்சொற் பொருளை நோக்குக. பொழுதடுத்து என்பதன் மரூஉவே போழ்தத்து, போதத்து என்பன. `மண் பொருந்தி` எனத் தொடங்கும் திருப்பாடலைச் சிவபூசை முடிவிற் சொல்லிவருதல் சைவரது வழக்கம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போ யிரைதேரும்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேனான்
அங்கோல வளைகவர்ந்தா னணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ. 

பொழிப்புரை :

மிக்க வெள்ளத்தை உடைய பெரிய கடலில் அலைகளின் பின்னே பின்னே சென்று இரையாகிய மீன்களை ஆராயும் சிவந்த கால்களையும் வெண்ணிறத்தையும் உடைய இளைய நாரையே! அடியேன் இனிச் செய்யும் திறன் அறியேன். என்னுடைய அழகிய திரண்ட வளையல்களைக் கவர்ந்தவனாகிய, அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னுடைய அழகிய நறிய கொன்றைப் பூமாலையை அருளாது அடியேனைக் கைவிடுவானோ?

குறிப்புரை :

பொங்குகின்ற ஓசையை உடைய பெரிய கடலில், பின்னே சென்று இரையைத் தேர்கின்ற செய்ய காலுடைய வெள்ளிள நாரையே, இனிச் செயற்படுவது யாது என்று நான் அறியமாட்டாதேன் ஆனேன். அழகிய சோலை சூழ்ந்த திருப்பழனத்து முதல்வன் என் அழகிய திரண்ட வளைகளைக் கவர்ந்தான். தன் அழகிய நறிய கொன்றை மாலையை அருளாமலிருப்பானோ? (அருள்வான்). புறம் புறம் (தி.6 ப.26 பா.7) `புறம் புறந்திரிந்த செல்வமே` (தி.8 திருவா.) `பின்பினே திரிந்து` (தி.4. ப.62 பா.2) எனப் பிறாண்டும் வருதல் அறிக. `தங்கோல ....கொன்றைத்தார்` என்பதில், `தன்` என்னும் ஒருமை எதுகை நோக்கித் திரிந்தது. `நாமார்க்குங் குடியல்லோம்` என்பதில், `தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன்` என்றுழிச் சங்கரன் என்னும் ஒருமையும் தாம் என்னும் பன்மையும் மயக்கமல்ல. `தான்` என்பதே ஆண்டு எதுகை நோக்கித் திரிந்த தென்க. ஒழிவானோ - நிற்பானோ? `ஒழிதல்` - நிற்றல். `ஆறன் மருங்கிற் குற்றியலுகரம் ஈறு மெய் ஒழியக் கெடுதல் வேண்டும்` (தொல். 469).

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோவாப் பழனத்தான்
கணையார விருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பனென் னெழினலமுண் டிகழ்வானோ. 

பொழிப்புரை :

துணையானபேட்டினைத் தழுவிச் சென்று நீர்த் துறையை அடையும் இளைய நாரையே! முரசங்களின் ஆரவாரமும் பாடல்களின் ஒலியும் நீங்காத திருப்பழனத்தில் உறைபவனாய், அம்பினால் வானத்தில் இயங்கிய காவலை உடைய மும்மதில் களையும் அடியோடு பொடியாக்கியவனும், முடிக்கப்படாமல் இரு பக்கமும் தொங்கவிடப்படும் மாலையை அணிந்த மார்பினை உடையவனுமான எம்பெருமான், என் அழகையும் இனிமையையும் நுகர்ந்து பின் என்னை அலட்சியம் செய்வானோ?

குறிப்புரை :

நாராய். இணையாரமார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ? இகழான் என்றவாறு. துணைப் பறவையை உள்ளம் நிறைவுறக் கூடிச் சென்று துறையை அடையும் இளநாரையே, பெரிய ஆரவாரத்தொடு பாட்டு ஓவாமல் இசைக்கும் திருப்பழனத்திறைவன்; பெருவானிற் காவற் கோட்டையாகிய மூன்றூரைக் கணைகளுக்கு ஒழிவு நிரம்ப அவற்றைத் தொழிற்படுத்தாது (சிரித்தோ விழித்தோ) பொடியாக்கியவன். இணைந்த ஆரம் `இணைந்த மலராற் செய்த கோதையுமாம்`. (கலித்.) ஆரம் (மாலை) பூண்ட மார்பன். (நீர்த்துறை) சேர்தல் இரை தேர்தற் பொருட்டு. பணை - பருமை. ஈண்டு மிகுதிப் பொருட்டு. வயலுமாம். ஆரவாரத்தான் - `ஆன்` ஒடுவுருபின் பொருட்டு; ஆரவாரத்தினன் என்றும் பொருத்தலாம். கணையை ஆளாமையால், ஆர்தல் (தொழிற்படாது) பொருந்துதல் என்னும் பொருளதாயிற்று. இணை ஆரம்; கணை உண்ண எனலுமாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.

பொழிப்புரை :

திரளாக உள்ள மணிகளை வாரிக் கரையிலே சேர்த்துப் பெருகி ஓடிக்கொண்டிருக்கும் காவிரிப் பாவையின்கண் முத்துக்கள் விளங்குமாறு மகளிர் பாய்ந்து நீராடும் திருப்பழனத்தை உடையவனாய், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை உடைய பார்வதியின் கேள்வனாய், உள்ள எம்பெருமானுடைய காளை எழுதிய கொடியாடை மேலே உள்ள மழலைபோல் இனிமையாகப் பேசும் பூவைகளே! எம்பெருமானுடைய பிரிவாற்றாமல் அடியேனுக்குப் பொழுது ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாய் நீண்டு, கழியாது துன்புறுத்துகின்றது.

குறிப்புரை :

கூவை - திரள். மணி - முத்து முதலிய பலவும் ஆம். வரன்றி - வாரி. காவிரியாகிய பூம்பாவை. வாய் முத்து என்றது இருபொருளது. திருப்பழனம் காவிரிப்பாய்ச்சலுடையது. கோவைவாய்:- உவமத்தொகை. `கொவ்வைச் செவ்வாய் இக் கொடியிடை` (தி.8 திருக்கோவையார். 9) மலைமகள் - பார்வதி தேவியார். கொல்லேறு; சாதியடை. ஏற்றின் கொடி (இடபத்துவசம்). கொடியாடை மேலிருக்கும் பூவை. `மழலை` ஆகுபெயராய்ப் பூவையையே குறித்தது. போகாதபொழுது உளது:- பிரிவாற்றாமையாற் பொழுது நீட்டித்தற்குறிப்பு. பொழுதுபோதல் என்னும் உலக வழக்கிற்கு மாறாகப் போகாதபொழுதும் உளதோ என்றாளுமாம். `போதுபோய்ப் புலர்ந்ததன்றே` (தி.4 ப.76 பா.1) பூவை - நாகணவாய். மழலை ஆகுபெயர். கூவை:- புறம். 29. 275. மதுரைக். 142. மலைபடு. 137. 422. சிலப். காட்சிக். 42 தமிழ்ச்சொல்லகராதி. 920.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் றொழுதேத்த விருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கு மென்றுரைப்ப ருலகெல்லாம்
கள்ளியே னானிவர்க்கென் கனவளையுங் கடவேனோ. 

பொழிப்புரை :

புள்ளிகளை உடைய மானே! படப்புள்ளிகளை உடைய பாம்பே! அன்னப் பறவையின் உருவத்தை எழுதிய கொடியை உயர்த்திய பிரமனும், படங்களை உடைய திருஅனந்தாழ்வானைப் படுக்கையாக உடைய திருமாலும், தொழுது துதிக்குமாறு பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னைத் தியானிப்பவருடைய வினைகளைப் போக்கி இன்பம் அருளுவான் என்று உலகோர் கூறுகின்றனர். உள்ளத்தில் கள்ளத் தன்மையை உடைய அடியேன் வினை தீரப் பெறாமையே அன்றி இத்தலைவனுக்கு என் கனமான வளையல்களையும் இழக்கும் நிலையேன் ஆவேனோ?

குறிப்புரை :

பழனத்தான் உள்குவார் உள்கிற்றெல்லாம் உடன் இருந்து அறிந்து, அவர் வினைகளைத் தீர்த்து இன்பம் விளைப்பான் என்று உலகோரனைவரும் சொல்கின்றனர். கள்ளியேனான நான் வினை தீரப் பெறாமையே அன்றி, இத் தலைவனுக்கு என் கனத்த வளையும் (இழக்கக்) கடவேனோ? புள்உயர்த்தான் - அன்னப் பறவையை எழுதிய கொடியெடுத்த நான்முகன். மணிநாகப் பள்ளி யான் - மாணிக்கத்தையுடைய பாம்பணைமேல் துயிலும் திருமால். அந் நால்வரும் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்? புள்ளிமானையும் பொறியரவத்தையும் தொழுது ஏத்த? பொறி - படப்புள்ளி. அரவம் - பாம்பு. புள்ளிமானும் பொறியரவமும் இருக்கின்ற பழனமோ? மான் விடுதூதோ? மானும் அரவும் (கொண்டு) இருக்கின்றவனென்றும் கொள்ளலாம். பிரிவாற்றாமையால் வளையும் சுமையாயிற்று. `வளை கவர்ந்தான்` என்று முன்னும் (தி.4 ப.12 பா.6) பின்னும் (தி.4 ப.12 பா.10) கூறியதால், இழக்கக்கடவேனோ என்றதாகக் கொள்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.

பொழிப்புரை :

அஞ்சிப்போய்க் கலியின் துயரம் நீங்குமாறு முத்தீயை ஓம்பும் அப்பூதியின் குடுமிக்குத் தாமரைப் பூவாக இருக்கும் சிவந்த அடிகளை உடைய கூடல் தெய்வமே! என் வளைகளை வஞ்சித்துக் கவர்ந்த, செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண் சிறகுகளையும் உடைய அன்னப் பறவைகள் பரவி ஆரவாரிக்கும் பழனத்து எம் பெருமான் அடியேனுக்கு அருள் செய்ய வாரானே என்றாலும், கூடல் சுழியின் இரண்டு முனைகளும் இணைந்து ஒன்று சேருமாறு செய்வாயாக.

குறிப்புரை :

என்வளைகளை வஞ்சித்துக் கவர்ந்த பழனத்தான் வாராமல் என்னை இடர்ப்படுத்துவானே ஆனாலும், சேவடியாய்! கோடு இயை என்று இயைக்க. சேவடியாய் என்றது கூடற்றெய்வத்தை, எல்லாத் தெய்வங்களும் சிவனடி வணங்குவனவே ஆதலின், அதனை அவ்வாறு விளித்தாள். அப்பர்க்குக் கூடல் தெய்வமாவதும் பழனத் தரனே என்க. பஞ்சின் மெல்லடியும் சிறகும் உடைய அன்னப்புள் பரந்து ஒலி செய்யும் பழனம். திருப்பழனத் திறைவன் சேவடி. அப்பூதி யடிகளது குஞ்சி (தலைமுடி)ப் பூவாய் நின்ற சேவடி. கலி அஞ்சிப் போய் மெலிய அழல் ஓம்பும் அப்பூதி:- சிவபூசையின் ஓர் அங்கமான சிவாக்கினி காரியத்தை நாடோறும் வழாது புரிந்து, நாட்டில் வறுமை இல்லாதவாறு செய்த செம்மையர் என்பது குறித்தது. அகத்திணைத் துறைகளுள், கூடலிழைத்தல் என்று ஒன்றுண்டு. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"கூடலிழைத்தல் என்பது தலைமகள், இம்மணற்குன்றின்கண் நீத்து அகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தர வல்லையோ எனக் கூடற் றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தாநிற்றல்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (தி.8 திருக் கோவையார் உரை. 186) `ஆழிதிருத்தும் புலியூர் உடையான் அருளின்அளித்து ஆழிதிருத்தும் மணற்குன்றின் நீத்துஅகன்றார் வருகஎன்று ஆழிதிருத்திச் சுழிக்கணக்கு ஓதிநையாமல் ஐய ஆழிதிருத்தித் தரக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே`, `ஐய என்றது கூடற்றெய்வத்தை` (தி.8திருக்கோவையார் 186). கூடலிழைத்தல்:- பெரியதொரு வட்டமாகக் கோடு கீறி, அதன் உள்ளே சிறு சுழிகளை அளவிடாது சுழித்து, அவற்றை இரட்டைப்பட எண்ணி, ஒற்றைப்படாதுளதோ என்று நோக்கல்; மிஞ்சாதேல், தலைவன் விரைவில் வந்தணைவான் என்பது மரபு. பிரிந்து வருந்தும் தலைவிக் குரியது இப் பண்டைய வழக்கு. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"கூடலாவது வட்டமாகக் கோட்டைக் கீறி அதற்குள்ளே சுழி சுழியாகச் சுற்றுஞ் சுழித்து இவ்விரண்டு சுழி யாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று சங்கேதம்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (நாச்சியார் திருமொழி. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்து அரும்பதம்). இவ்வாறு அன்றிக் கண்ணை மூடிக்கொண்டு கீறிய கோடு, எழுவாய் இறுவாயிரண்டும் கூடியிருப் பின் வந்து கூடுவன், விலகின் வாரான் என்பதுமுண்டு. இத்துறைக்கு எடுத்துக்காட்டுக்கள் பற்பல உள. அவற்றுள் இங்கு உணரத்தக்கவை:- `பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் கூட லாக்கிடும் குன்றின் மணற்கொடு கோடல் பூத்தலர் கோழம்பத் துள்மகிழ்ந் தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே`.(தி.5 ப.64 பா.4) `நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும் ஓடு மாலினோ டொண்கொடி மாதரா மாட நீள்மரு கற்பெரு மான்வரில் கூடு நீஎன்று கூட லிழைக்குமே `. (தி.5 ப.88 பா.8) `இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக் காட்டுமேற் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடுங் கூட்டுமேற் கூடலே கூடு. (தி.11 கைலைபாதி. காளத்திபாதி. 90). கூடற்சுழியில் வழுநேரின் வாரான் என்று தோன்றிற்று. தோன்றவே, `வாரானே ஆயிடினும் கோடு இயை சேவடியாய்` எனக் கூடற்றெய்வத்தை வேண்டினாள். (நான்முகன் திருவந்தாதி 39. திருவிருத்தம் 34; கம்பர். உண்டாட். 33; விபீடணப் 28; அகநா. 351; கலி. நெய்தல். 25 உரை; ஐந்திணை ஐம்பது. 43; சீவக. 1037-38; கலிங்கத்.51; நைடதம். கைக். 6; சீகாழிக்கோவை. 308; அம்பிகாபதி. 322; குலோத்துங்க. 258; மாறந். 286 என்னும் இடங்களிலும் இத்துறைக் கருத்துண்டு) `சேவடியாய் கோடு இயை` என்பதற்கு, `சேவடியை அடைந்த அநுபவம் உடையவனே, மலையை அடைவாய்` என்றுரைத்து, இருள்வரின் தலைவன் வருவான்; பிறை விரைவில் மேற்கு மலைக்கண் இயைந்து மறையின், இருள் பரவும் எனக் கருதியும், பிறையே மறையாயேல், மீண்டும் சிவனடிக்கீழே தேய்ப்புறுவாய் என்று அச்சுறுத்தியும் நின்றதாகக்கொள்ளலும் ஆகும். `தக்கன்றன் வேள்வியினில் சந்திரனைத் தேய்த்தருளி` யதால், அவனைச் சேவடியாய்` என்று விளித்தாள். அடியார்க்கு முடிப்பூ. அல்லார்க்குத் தேய்ப்பு. முடிமேற் கிடக்கற்பாலை நீ. அடிக்கீழ்த் தேய்ப்புண்டாய். இனி, இனிதே உற எண்ணுவையேல், மலைக்கோடு இயைவாய் என்றாளுமாம். `மணிநிற மையிருள் அகல நிலாவிரிபு கோடு கூடுமதியம் இயலுற்றாங்கு` என்புழி (பதிற். 31:- 11-2)க் கொள்ளும் பொருள் வேறு. அதற்குள்ள பழைய குறிப்புரையை யுணர்ந்துரைத்தல் பொருந்தும். மதி கோட்டின்கண் நிலவும், பிறை கோடுகூடின் இருளும் பரவும்.
சிற்பி