பொது - சிவனெனுமோசை


பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 1

சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே
அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.

பொழிப்புரை :

உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன் . எம்பெருமான் பிச்சை எடுத்து உண்பவன் . தோலையே ஆடையாக உடையவன் . அத்தோல்மேல் ஆடும்பாம்பை இறுகக்கட்டியவன் . கவண் கல் அளவு சிறிதே உண்பவன் . சுடுகாடே இருப்பிடம் . அவனுடைய உண்கலன் மண்டையோடு . ஆராய்ந்து பார்த்தால் அவன் உடைமைகளைக் கண்டும் அவன் தன்மையைக் கண்டும் தேவர்கள் தம் உள்ளத்தை அப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்வர் .

குறிப்புரை :

உலகில் சிவன் எனும் ஓசை அல்லது திருநின்ற செம்மை உளதோ ? அறையோ . ` நேர்பட நின்று அறை கூவும் திருப்பதிகம் ` என்று சேக்கிழார்பெருமான் அருளியதால் , ` வஞ்சினம் கூறவோ ` ( சிந்தாமணி .12.137 ) எனல் பொருத்தம் . சித்தியார் சூ .8:- 14 ` உத்தரம் `. அது ஈண்டுப் பொருந்தாது . ( தி .10 திருமந் . 884. 2988) கையறைதலும் வரையறையும்பற்றி ` அறையோ ` என்று ஆணைக்கு வழங்கலாயிற்று . சிவநாமமே முழக்கத்திற்கு உரியது . செம்மையானது . ஏனைய அன்ன அல்ல . ஓசை , அறை முதலியன ஒலிப்பொருளாம் . ஒலிசெய் என்பது ஓசை என மருவிற்று . நன்செய் - நஞ்சை . புன்செய் - புஞ்சை . தண்செய் - தஞ்சை . ` ஓசை யொலியெலாம் ஆனாய் நீயே ` என்பது ஐயாற்றிற் சென்றுணரற்பாற்று . உலகில் திருநின்ற செம்மை உளதே - சிவமேபெறும் திருவானது நிலைபெறக் காரணமான செம்மை ( வேறு ) உளதோ ? ` உலகில் `:- எல்லாவுலகிலும் . உளதே என்பது தேற்றம் உணர்த்தியதுமாம் . அவனும் - அச்சிவனும் , ஓர் ஐயம் உண்ணி - பிச்சைபுக்குண்ணும் ஒருவன் . ஆடை ஆவது , அதள் (- தோல் ). அதன்மேல் - அத்தோலாடை மேல் . ஓர் ஆடல் அரவம் - ஆடுதலை ஒழியாத ஒரு பாம்பு . கவண் அளவு உள்ள ( உண்கு ) - கவணதுகல் முதலியவற்றினளவுடைய உட்கொள்ளும் உணவு . சிறிதளவு என்றவாறு . கவளம் கவண் என மருவிற்று எனின் , அது சிறிதன்று . ` குன்றாமுது குன்றுடையான் இலாத வெண் கோவணத்தான் நன்றாக இத்தனை பிச்சையுண்டோ சொல் நறுநுதலாய் என்றான் ` ( பிட்சாடன நவமணிமாலை .2 .) என்பதில் உணர்த்திய பிச்சையுணவினளவு சிறிதாதல் அறிக . பழிப்பதுபோலப் புகழ்தலாய்ப் பிச்சையுணவைக் குறிக்கின்ற ஈண்டுச் சிறுமையே கொள்ளற்பாலது . கோயில் கரி ( ந்த ) காடு . ( உண் ) கலன் ஆவது ஓடு ; ( பிரமகபாலம் ). கருதில் அவனும் ஓர் ஐயம் உண்ணி ...... ஓடு என்றியைக்க . பெற்றி - பெற்றிருக்கும் பேறு . நீர்மை எனப்பின்வருதலின் , பெற்றியைத் தன்மை எனல் பொருந்தாது . தேவர் கண்டும் தம் அகத்தில் அச் சிவனைத் தேர்வர் என்றவாறு .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 2

விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனும்
திரிதரு வாயு வல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணி யாளை யொருபாக மாக வருள்கார ணத்தில் வருவார்
எரியர வார மார்ப ரிமையாரு மல்ல ரிமைப்பாரு மல்ல ரிவரே.

பொழிப்புரை :

இப்பெருமானார் ஒளிக்கதிர்கள் விரியும் சூரியனும் அல்லர் . சந்திரனும் அல்லர் . பிரமனும் அல்லர் . வேதத்தில் விதித்தனவும் விலக்கியனவும் அல்லர் . விண்ணும் நிலனும் அலையும் காற்றும் துன்புறுத்தும் தீயும் தெளிந்த நீரும் அல்லர் . செவ்வரி கருவரி பரந்த கண்களை உடைய பார்வதி பாகராக அருள் காரணத்தால் காட்சி வழங்கும் இவர் கோபிக்கின்ற பாம்பினை மார்பில் மாலையாக உடையவர் . இவர் கண் இமைக்காத தேவரும் கண் இமைக்கும் மக்களும் அல்லர் . இவரே எல்லாமாகி அல்லராய் உடனும் ஆவர் .

குறிப்புரை :

அரிதரு கண்ணியாளை - செவ்வரிபடர்தரும் கண் உடையவளை . கண்ணி - கண்ணள் . இகரவிகுதிக்கு மேலும் ` ஆள் ` விகுதி சேர்ந்து ` கண்ணியாள் ` என்று நின்றமை அறிக . கண்ணியாள் என்று இறந்தகால வினையாலணையும் பெயராகக் கொள்ளல் பொருந்தாது ; ` அரிதரு ` என்னும் அடைக்குக் கண்ணுறுப்பு உரியதாதலின் . ஒரு பாகம் - இடப்பால் . அருள் காரணம் - உயிர்கட்கு இம்மை மறுமை வீடு பேறு எய்த அருளுங்காரணம் . எரி அரவு ஆரம் மார்பர் - எரி ( தீப் ) போலும் நச்சுப் பாம்பினை ( மாலை ) ஆக அணிந்த மார்பினை உடையவர் . ஞாயிறும் மதியும் ( திங்களும் ) வேதவிதியும் ( பிரமனும் வேதத்தில் விதித்தவையும் விலக்கியவையும் ) விண்ணும் நிலமும் , வாயுவும் ( காற்றும் ) தீயும் , இமையாரும் , இமைப்பாரும் அல்லர் . சிவபெருமான் ஞாயிறு முதலியவாகித் தோன்றியும் அவற்றின் வேறாயும் இருத்தல் உணர்த்தப்பட்டது . எல்லாமாய் அல்லதுமாய் உடனுமாய் இருக்கும்நிலை . ` ஒருவனே எல்லாம் ஆகி அல்லனாய் உடனும் ஆவன் ` ( சித்தியார் . 1-27. )

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 3

தேய்பொடி வெள்ளை பூசி யதன்மேலொர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலை நீல வொளிமா மிடற்றர் கரிகாடர் காலொர் கழலர்
வேயுட னாடு தோளி யவள்விம்ம வெய்ய மழுவீசி வேழ வுரிபோர்த்
தேயிவ ராடு மாறு மிவள்காணு மாறு மிதுதா னிவர்க்கொ ரியல்பே.

பொழிப்புரை :

நுண்ணிய வெண்ணீறு பூசித் திங்கள் போன்ற வடிவுடைய திலகத்தை இட்ட நெற்றியை உடையவர் . சூரியன் தோன்றும் கீழ்க்கடலின் நீல ஒளி பொருந்திய கழுத்தினர் . சுடுகாட்டில் உறைபவர் . காலில் ஒற்றைக் கழல் அணிபவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி நடுங்குமாறு கொடிய மழுப்படையை வீசி யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து இவர் கூத்தினை நிகழ்த்துவதும் , அதனைப் பார்வதி காணுமாறு செய்வதும் இவருக்கு இயல்பு போலும் .

குறிப்புரை :

தேய்பொடி - ` நுண்டுகள் `. பொடி வெள்ளை - வெள்ளைப்பொடி , ` வெண்ணீறு ` பொடிபூசி என்க . அதன் மேல் , பூசியதன்மேல் எனலும் ஆம் . திங்கள் திலகம் பதித்த நுதலர் :- ` பிறை நுதல் வண்ணம் ஆகின்று ` ( புறநானூறு கடவுள் வாழ்த்து ). நுதல் - சென்னி . திங்கள் போலும் வடிவு உடைய திலகம் பதித்த நெற்றியர் எனக்கொண்டு , பொடிபூசியதன்மேல் என்பதற்கு இயையப் , பொருளுரைத்தலும் ஆம் . காய் கதிர் வேலை - வெஞ்சுடர் ( ஞாயிறு ) தோன்றும் கீழ்கடல் . வேலை ( கடல் ) நீலவொளி போலும் ஒளியையுடைய மிடறு ( கழுத்து ). மாமிடற்றர் - திருநீலகண்டர் . கரி காடர் - கரிந்த ( சுடு ) காட்டில் ஆடுபவர் . கால் ஒர் கழலர் - ஒரு கழலணிந்த வலக்காலினார் . வேய் - மூங்கிலின் இரு கணுக்கிடை . தோட்கு ஒப்பு அஃதே . தோளியவள் விம்ம ( வேழவுரி ) போர்த்து என்க . வெய்ய மழு :- மழுவின் வெண்மை . ` ஏ ` இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஓர் இயல்பே ? போர்த்தே எனலுமாம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 4

வளர்பொறி யாமை புல்கி வளர்கோதை வைகி வடிதோலு நூலும் வளரக்
கிளர்பொறி நாக மொன்று மிளிர்கின்ற மார்பர் கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞை யன்ன தளிர்போன்று சாய லவடோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டு பாடு குழலா ளொருத்தி யுளள்போல் குலாவி யுடனே.

பொழிப்புரை :

பெருமானார் வளர்ந்த , பொறிகளை உடைய ஆமை ஓட்டை அணிந்து , நீண்ட கூந்தலை உடைய பார்வதி தங்கியதும் , மான்தோலும் பூணூலும் ஓளிவீசுவதும் , மிக்க பொறிகளை உடைய நாகம் விளங்குவதுமான மார்பினராய் , காட்டிலும் நாட்டிலும் மகிழ்ந்து ஆடுபவராய் உள்ளார் . செறிந்த பொறிகளை உடைய மயில் போன்று கட்புலனாகும் மென்மையும் தளிர் போன்று ஊற்றுக்கினிய மென்மையும் உடையவள் என்று சொல்லப்படும் உண்மை தன்னிடம் நிலைபெறப் புள்ளிகளை உடைய குளிர்ந்த வண்டுகள் பாடும் கூந்தலை உடைய கங்கையாளும் அப்பெருமானோடு கூடி அவருடன் உள்ளாள் போலும் .

குறிப்புரை :

வளர் பொறி - வளர்ந்த பொறிகளை . ( புள்ளி )களை யுடைய ஆமை உறுப்புகளை உட் சுருக்கி வெளி நீட்டல் பற்றி ` வளர்பொறி ` என்றலுமாம் . புல்கி - பொருந்தி ; ` முற்றல் ஆமை இளநாகமொடு ஏனமுளைக் கொம்பவை பூண்டு ` ( தி .1 ப .1 பா .2) வளர்கோதை வைகி மிளிர்கின்ற மார்பர் :- ` மலைமகள் கைக்கொண்ட மார்பும் ` ( தி .4 ப .2 பா .7). ` மார்பிற் பெண்மகிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மான் ` ( தி .1 ப .1 பா .4). தோலும் நூலும் வளர மிளிர்கின்ற மார்பர் :- ` தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் ` ( தி .1 ப .6 பா .3). தோல் - புலி , யானை , மான் , சிங்கத்துரியுள்யாதுங் கொள்ளலாம் . இங்கு நூலொடு கூடிய மான்றோல் மிக்க பொருத்தம் உடைத்து . புலியுரித் தோலுடையன் . ` வேழத்துரிபோர்த்தான் ` ( தி .4 ப .19 பா .7) ` கலைமல்கு தோல் உடுத்து ` ( தி .1 ப .6 பா .10) ` சிறுமான் உரியாடை ` ( தி .4 ப .19 பா .6) ` மானைத் தோல் ஒன்றையுடுத்துப் புலித்தோல் பியற்கும் இட்டு , யானைத் தோல் போர்ப்பது ` ( தி .7 ப .18 பா .4). ` சிங்கமும் நீள் புலியும் செழுமால் கரியோடு அலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்து ஈருரி போர்த்தது ` ( தி .7 ப .99 பா .6). நூல் - புரிநூல் . ` மின்னு பொன்புரி நூலினார் ` ( தி .2 ப .78 பா .5). ` பொடி புல்குமார்பினில் புரிபுல்குநூல் ` (1-111-7) ` ஒன்பதுபோல் அவர் மார்பினில் நூலிழை ` ( தி .4 ப .18 பா .9). நாகம் மிளிர்கின்ற மார்பர் :- ` மண் மகிழ்ந்த அரவம் .... மலிந்த .... மார்பு ` ( தி .1 ப .1 பா .4) ` பொறி யரவம் மார்பாரப் பூண்டான் ` ( தி .6 ப .22 பா .9). காடும் நாடும் மகிழ்வர் :- காட்டிலும் நாட்டிலும் மகிழ்வர் ( ஆடுவர் ). நளிர் - செறிவு . பொறி :- முதுகிற் பொறி . மஞ்ஞை - மயில் . மஞ்ஞையன்ன சாயல் . தளிர் போன்று சாயல் . ` சாயலவள் ` குழலின் அடை பொது . சாயலவள் குழலாள் ஒருத்தி என்க . வாய்மை - வாயின் தன்மை , வண்டுகட்கு ( இசை ) தோன்றலும் பெருகலும் பாடுதலும் வாயின் தன்மையாக உள்ளமை உணர்க . ` தோன்று வாய்மை பெருகி ` என்றது அம்மையப்பராகி என்றும் உள்ளதை உணர்த்திற்று எனலும் ஆம் . குழலாள் கங்கையும் ஆம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 5

உறைவது காடு போலு முரிதோ லுடுப்பர் விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும் வண்ண மிதுவேலு மீச ரொருபா லிசைந்த தொருபால்
பிறைநுதல் பேதை மாத ருமையென்னு நங்கை பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டு பாடு மடிநீழ லாணை கடவா தமர ருலகே.

பொழிப்புரை :

இவர் தங்குமிடம் காடு , உரித்தெடுக்கப்பட்ட புலி முதலியவற்றின் தோலை உடுப்பர் . இவர் காளையை ஊர்வர் . மண்டையோடு உண்கலம் . தலைவராகிய இவர் வாழும் வகை இது . இவர் எல்லோரையும் அடக்கி ஆள்பவர் . இவருக்கு உரியது இவர் உடம்பின் வலப்பகுதியே . மற்றொரு பகுதியாகப் பிறைபோன்ற நெற்றியளாய் மடம் என்ற பண்புள்ளவளாய்த் திகழும் விரும்பத்தக்க உமை என்னும் நங்கை உள்ளாள் . இடம் பெயர்ந்து ஆடுவதற்காகப் பார்வதியோடும் கூடியிருப்பார் . வீரக்கழல் ஒலிக்க வண்டுகள் பாடும் திருவடியின் நிழலாகிய அப்பெருமானாருடைய ஆணையைத் தேவர் உலகம் மீறிச் செயற்படமாட்டாது .

குறிப்புரை :

உறைவது காடு . உடுப்பது தோல் . ஊர்வது விடை . உண்கலன் ஓடு . இவ்விறைவர் வாழும் வண்ணம் இது எனில் , ஒருபால் ஈசர் . ஒருபால் உமை நங்கை . பிறழ்பு - பிறழ்ந்து . ஆடநின்று . ` அறைகழல் ஒலி ` வண்டு பாடும் ஒலிக்கு ஒப்பு என்பாரும் உளர் , அடிநிழல் ஆணையை அமரர் உலகு கடவாது . பிறழ் - சொல் . ஆடற்கேற்ற சொல்லை உமை பாட நின்று பிணைவான் என்றும் உரைக்கலாம் . ` தளிரிளவளர் என உமை பாடத் தாளம் இட ..... ஆடும் அடிகள் ` ( தி .2 ப .111 பா .1). ` வாருறு மென்முலை மங்கை பாட நடம் ஆடி ` ( தி .3 ப .11 பா .6) ` தேவி பாட நடம் ஆடி ` ( தி .3 ப .11 பா .7). பிறழ் - ( ஆடற்குப் பாடல் ) விளக்கம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 6

கணிவளர் வேங்கை யோடு கடிதிங்கள் கண்ணி கழல்கால் சிலம்ப வழகார்
அணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ண வியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞை யால மழையாடு சோலை மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்ன வண்ண மவள்வண்ண வண்ண மவர்வண்ண வண்ண மழலே.

பொழிப்புரை :

சோதிடனின் இயல்பை உடையதாய் வளருகின்ற வேங்கைப் பூக்களையும் புதிய பிறையையும் முடிமாலையாகச் சூடி , காலில் கழல் ஒலிப்ப இவற்றால் ஏற்படும் அழகினை உடையவர் . அழகு விளங்குகின்ற மாலையையும் , வெண்ணீற்றையும் அணிந்து செந்நிறமுடைய இயல்பினர் ஆகிய பெருமான் அம்மையப்பராய் இருவராய் உள்ளார் . அழகு விளங்குகின்ற மயில்கள் ஆட மேகங்கள் உலாவும் சோலைகளை உடைய இமயத்து மன்னன் மகளாகிய பார்வதிக்குத் தலைவர் . பார்வதியினுடைய நிறத்தின் வண்ணம் அழகு வெளிப்படுகின்ற அன்ன நிறத்தின் வண்ணமாகும் . ( காரன்னம் ) அவருடைய நிறம் நெருப்பின் நிறமாகும் .

குறிப்புரை :

கணிவளர் வேங்கை :- வளர்கின்ற கணிவேங்கை மரம் . கணி - சோதிடன் . கணியைப்போல வேங்கையும் மணம்புரி காலத்தைக் கருதுவிப்பதால் ` கணிவளர் வேங்கை ` என்று அருளினார் . கணி என்பது வேங்கைக்குரிய பெயராதலின் , கணியாகிய வளர் வேங்கை - வளர்கின்ற கணிவேங்கை எனலுமாம் . ` ஒள்ளிணர்க் கணியின் கொம்பர் ` ( கந்தபுராணம் வள்ளி . 12 ) ` வண்ணவண்ணத் தெம் பெருமான் வர்த்த மானீச்சரத்தாரே ` ( தி .2 ப . 92 பா .4). சிவபிரான் முடிமேல் ` எருக்கு அலர்ந்தவன்னி கொன்றை மத்தமும் ` ( தி .2 ப .102 பா .2). ` வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் ` ( தி .2 ப .7 பா .1) அன்றி வேங்கையும் உண்டு என்று இதனால் அறியலாம் . வேங்கையோடு திங்கள் கண்ணி அழகார் என்றும் கழல் காலிற்சிலம்ப அழகார் என்றும் இயைத்துணர்க . அணி - அழகு . ஆரம் - சந்தனம் . ஆரச்சுண்ணம் - சந்தனக்குழம்பு . வெள்ளை தவழ்சுண்ண வண்ணம் . ஆரத்தை மாலை எனக்கொண்டு ஆரவண்ணவியல் :- வெள்ளைதவழ் சுண்ணவண்ணவியல் எனலுமாம் . ` விலையிலா ஆரம்சேர் மார்பர் ` ( தி .6 ப .28 பா .8) ஆதலின் ` அணிகிளர் ஆரவண்ண வியலார் ` என்றார் . வெள்ளைதவழ் சுண்ணம் - திருவெண்ணீறு எனில் ` நீறணி ... வண்ணர் ` ( பா .8) என்பதொடு வேறுபடும் . அதன் வண்ண வியலுடையார் ( தி .5.28. பதிகம் பார்க்க ). ஒருவர் - ( பா . 8 பார்க்க ). அநேகமாய உலகங்கட்கும் அநேகராய ஆன்மாக்களுக்கும் பதியாகிய ஏகர் . ` ஒன்றே பதி ` ( சிவஞானபோதம் சூ .2 வெண்பா ). ` ஒருத்தனார் உலகங்கட்கு ` ( தி .5 ப .1 பா .7) ` கருவனே கருவாய்த் தெளிவார்க்கெலாம் ஒருவனே ` ( தி .5 ப .13 பா .5). ` ஒருவனாகி நின்றான் இவ்வுலகெலாம் ` ( தி .5 ப . 97 பா .11). இருவர் - அம்மையப்பராகிய இருவர் . ` ஒருவராய் இரு மூவருமாயவன் ` ( தி .5 ப .20 பா .1). மணி - நீலமணி ( போலக் கிளர்ந்த ) மஞ்ஞை - மயில் . ஆல - தோகையை அகல விரித்து ஆட . மழை - மேகம் . மழை ஆடும் சோலையை உடைய ( இமய ) மலை . மலையான் - இமவான் . மகள் - பார்வதி தேவியார் . உம்மை - எச்சப்பொருட்டு ; வீடு பெறலில் இறந்ததும் எதிரதும் ஆகிய உயிர்களைக் குறித்து நிற்றலின் . அவள் வண்ணவண்ணம் அணிகிளர் அன்னவண்ணம் என்றும் அவர் வண்ணவண்ணம் அழல் ( வண்ணம் ) என்றும் வகுத்துக்கொள்க . பார்வதி தேவியாரது வண்ணம் அன்னத்தின் வண்ணம் . அவர் ` தீவண்ணர் ` ` தீவண்ணர்திறம் ` ( தி .6 ப .95 பா .6). வண்ணம் - நிறத்தியல் . ` இயற்கையழகு ` என்றலும் உண்டு . ( பரிபாடல் .) வண்ணத்தின் வகை எனலும் ஆம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 7

நகைவளர் கொன்றை துன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல கறைகொண் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறு மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம் வீசி மதியங்கு மாறு மிதுபோலு மீச ரியல்பே.

பொழிப்புரை :

விளக்கம் மிகுகின்ற கொன்றை மலர் நெருங்கிய தலைமாலையும் குளிர்ந்த கங்கையும் தங்கிய சடைமுடியை உடையவர் . உலகில் மேம்பட்டு விளங்குகின்ற வேதப் பாடல்களை ஒலிக்கும் முறையோடு பாடுதலில் வல்ல , விடக்கறை பொருந்திய நீலகண்டர் . மொட்டுக்களால் ஆகிய மாலையை அணிந்த பார்வதி , பெருமானுடைய கூத்தாடலுக்கு ஏற்பப்பாடும் முறையும் பெருமான் தீயிடை ஆடும் முறையும் , இவர் கையில் ஏந்திய பகைத்தன்மை வளர்கின்ற நாகத்தை அகற்றிப் பிறை அசையுமாறு இவர் இவ்வாறு செய்வதும் போலும் இவர் தன்மையாகும் .

குறிப்புரை :

நகை - விளக்கம் . கொன்றை மிகப் பூத்தலாலும் இயல்பான நிறத்தாலும் தொலைவிலுள்ளார்க்கும் நன்கு விளங்கும் . துன்று வெண்டலை என்க . கொன்றையும் வெண்டலையும் சடைமேல் உள்ளமையால் ஒன்றனை ஒன்று துன்றும் . நகுதலை . வெள் + தலை . தலையார் - தலைமாலையர் . கைத்தலை கொன்றை துன்றுமாறில்லை . தலையர் முடியர் என்பவற்றுள் முன்னது அணி . பின்னது சினை . ` அரவும் அலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவுஞ்சடை ` . ` பைங்கட்டலைக்குச் சுடலைக்களரி ` ( தி .4 ப .86 பா .10). வேதகாரணர் ஆதலின் , வேதகீதம் வல்ல மிடறர் . மிகை - சிறப்பு . மிடறு - திருக்கழுத்து . கறை - நஞ்சின் கறுப்பு . மணி - நீலமணி . நிறத்திற்கு ஆகுபெயர் . செய்மிடறு - வினைத்தொகை . முகைவளர் கோதை - மொட்டுக்கள் வளரும் மாலையை ( அணிந்த ). மாதர் - உமை . ( தி .2 ப .111 பா .1). முனி - மநநசீலம் ; சங்காரகால முனிவு ` அரி அயன்தலை வெட்டி வட்டாடினார் ` ( தி .5 ப .85 பா .2) க்கு முனிவில்லையாமோ ? ` சண்ட தாண்டவம் ` முதலிய சிலவற்றில் முனிவுண்டு . கைவளர் நாகம் . பகைவளர் நாகம் . ` பகை ` நாகத்தியல்புணர்த்திற்று . தலைமதியொடு பகை எனலுமாம் . வீசுமது என்றிருந்தது போலும் . ` வீசி ` எதைத் தழுவுவது ? பாடுமாறும் ஆடுமாறும் இயங்குமாறும் ஆகிய இது (- இவ்வாறு ) போலும் ஈசரியல்பு என்க . வீசி மதி அங்கு மாறும் எனின் முன்னிரண்டொடும் ஒட்டாமை உணர்க . ` முனிபாடு - கோபம் . மாறும் - தணியும் ` எனில் எரி ஆடு மாறும் மதி அங்கு மாறும் என்பன தழுவா . ` வழிபாடு .... ஒழிபாடு ` ( தி .2 ப .84 பா .3) போல ` முனிபாடு ` என்னும் சொல்லமைதி உண்டேனும் ஈண்டுப் பொருந்தாது . ப 8. பா .3 இல் ஆடுமாறும் காணுமாறும் என்றதுபோற்கொள்ளலே ஏற்றது . மதி அல்குமாறோ ?

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 8

ஒளிவளர் கங்கை தங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ணர் தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேட முண்டொர் கடமா வுரித்த வுடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்ன தொல்லை யவள்பாக மாக வெழில்வேத மோது மவரே.

பொழிப்புரை :

எம்பெருமான் ஒளிவளர்கின்ற கங்கை தங்கும் சடையின் செந்நிற ஒளியை உடையர் . திருமால் பிரமன் இவர்கள் உடைய உடல்கள் சாம்பலாக அவர்களுடைய ஒளி வீசுகின்ற வெள்ளை நீற்றினை , ஒளி வீசும் மாலையின் வெண்ணிறத்தோடு பூசிய வெண்பொடி நிறத்தவர் . தனியராயிருந்த ஒருவர் . அழகு விளங்குகின்ற அன்னம் போன்ற அநாதி சக்தி ஒருபாகமாக , அதனால் மகிழ்ச்சி மிகும் இருவர் வேடமும் அவருக்கு உண்டு . ஒரு மத யானையை உரித்த தோலை மேலுடையாகப் போர்த்த , மண்டையோட்டை உடைய அப்பெருமானார் அழகிய வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர் ஆவர் .

குறிப்புரை :

ஒளிவளர் கங்கை தங்கும் ஒளி :- கங்கையொளியும் , அது ( சடையில் ) தங்கும் ( ஒளியும் ) சடையொளியும் , தங்குமொளி மாலயனைச் சாராது . வீயச் சுடர்நீறு அணி என்று வினையெச்சித்தின் முன் வலிமிகல் வேண்டும் . இது சந்தம் நோக்கிய இயல்பு . வீயஅணி . சுடர்நீறு :- ` காண இனியது நீறு ` ` கண் திகைப்பிப்பது நீறு ` ` கவினைத் தருவது நீறு ` ` பராவணமாவது நீறு ` ` உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து ` ( தி .2 ப .85 பா .3). பரையே ` மெய்ச்சுடருக்கெல்லாம் ஒளி வந்த பூங்கழல் ` ( தி .8 திருவாசகம் 119). ஆரவெள்ளைதவழ் சுண்ண வண்ணர் - சந்தனச் சுண்ணம் பூசிய வண்ணத்தவர் . ` வெண்சாந்து ` என்னும் வழக்குண்டு . ஆரச்சுண்ணம் . வெள்ளை ஆரச் சுண்ணம் . வெள்ளைதவழ் ஆரச்சுண்ணம் . சுண்ணவண்ணம் . வண்ணர் . நீறணிவண்ணர் . தமியார் - தனி முதல்வர் . அம்மையப்பராகுங்கால் ` எமியேம் ` எனற்குரியார் . ஒருவர் - ஒப்பற்றவர் , முக்கியர் , வேறா ( க வீற்றிருப்ப ) வர் . ` ஏகபெருந்தகையாய பெம்மான் ` ( தி .1 ப .4 பா .4). இருவர் - அம்மையப்பர் . திருமாலும் பிரமனுமாயும் இருப்பவர் . ` இருவர் அறியாத ஒருவன் ` அவ்விருவராயும் உயிர்கட்கு உலகைப் படைத்தும் காத்தும் அருள்கின்றான் . ` ஒருவராய் இருமூவரும் ஆனவன் ` ( தி .5 ப .20 பா .1). ` ஓருடம்பினை யீருருவாகவே உன் பொருட்டிற மீருருவாகவே ` ( தி .3 ப .114 பா .10). ` களி - மகிழ்ச்சி . வேடம் - வீரபத்திர ரூபம் . உண்டு - உளதாகிக் கொண்டு . கடமா - மதயானை . தோலுடை என மாறுக . தொல்லையவள் - அநாதி சத்தி .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 9

மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாக வுண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ள முற்று மலறக் கடைந்த வழனஞ்ச முண்ட வவரே.

பொழிப்புரை :

பார்வதியோடு , வடக்கில் உற்பத்தியாகும் கங்கை என்ற பெண்ணுக்கும் கணவராகி மகிழ்பவர் . மண்டையோட்டையே பிச்சை எடுத்து உண்ணும் பாத்திரமாகக் கொண்டு தனியே திரிந்து , அடியார் செய்யும் தவத்தில் வாழ்பவராகி அவர்களுக்கு அருளும் முயற்சியை உடையார் . விலையில்லாது கிட்டும் சந்தனமாக மணங் கமழும் திருநீற்றைப் பூசி விளையாடும் வேடத்தை உடையர் , உலகியலிலிருந்து வேறுபட்ட இயல்பை உடைய பெருமான் , அலைகளை உடைய கடலின் வெள்ளம் முழுவதும் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட கொடிய விடத்தை உண்ட அப்பெருமான் ஆவார் .

குறிப்புரை :

மலைமட மங்கைக்கும் வடகங்கை நங்கைக்கும் மணவாளர் . ` மடமாதர் இருவர் ஆதரிப்பார் ...... அடையாளம் ` ( தி .2 ப . 106 பா .6). கலன் - உண்கலம் . தலை - பிரமகபாலம் . வெண்டலை . தனியே திரிந்து தவவாணராகி முயல்வர் :- ` தான் தனியன் ` ஆயினும் , அடியார் முதலோர் செய்யும் தவத்தில் வாழ்பவராகி , அவர்க்கு அருளும் முயற்சியுடையர் . விலையிலி சாந்தம் என்று நீறுபூசுதல் :- ` சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு ` ( தி .1 ப .52 பா .7). ` சாந்தம் வெண்ணீறெனப்பூசி வெள்ளம் சடைவைத்தவர் ` ( தி .2 ப .120 பா .1). விலையிலியாகிய சாந்தம் என்க . வெறி - மணம் . வெறிவேர் ( வெற்றிவேர் , வெட்டிவேர் ). விளையாடல் - இன்பம் விளைக்கும் ஆட்டம் . வேடவிகிர்தர் :- ` பலபல வேடமாகும் பரன் `. பாற்கடல் கடைந்த வரலாறு . நஞ்சுண்ட சீர்த்தி .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 10

புதுவிரி பொன்செ யோலை யொருகா தொர்காது சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ண மியல்பே.

பொழிப்புரை :

புதிதாகச் சுருள் பொன்னால் செய்யப்பட்ட ஓலை ஒருகாதிலும் வளைந்த சங்கு ஒரு காதிலும் காதணிகளாக அமைந்து தோள்கள் மீது புரள , முறைப்படி வேதப்பாடலை ஒருபக்கம் ஓத , இடப்பக்கமாகிய பார்வதி பாகம் மெதுவாக முறுவல் செய்யும் . சடைப்பகுதியில் தேன் விரியும் கொன்றைப் பூப்பொருந்த , பெண் பகுதி , கூந்தலைப் பின்னியிருக்கும் பாகமாக வருகின்ற பெருமானுடைய நிறமும் , இயல்பும் இவை , தேவியினுடைய நிறமும் இயல்பும் இவை . அழகு வண்ணங்கள் இரண்டன் இயல்புகள் இவையே .

குறிப்புரை :

புதுவிரிஓலை - புதுமை யொளியைப் பரப்பும் தோடு . குழைக்காதர் . மாதியலும் பாதியற்கு ஒருபால் தோடும் ஒரு பால் குழையும் உள்ளமை உணர்த்திற்று . ` தோடுடைய செவியன் ` ( தி .1 ப .1 பா .1). ` காதிலங் குழையன் ` ( தி .1 ப .2 பா .2). ` தோடுடையான் குழையுடையான் ` ( தி .1 ப .61 பா .8). ` சங்கோடு இலங்கத் தோடு பெய்து காதில் ஓர் தாழ்குழையன் ` ( தி .1 ப .63 பா .4) என்புழி விழிப்பொடு பொருள்கொள்ளல் வேண்டும் . ` வெண்பளிங்கின் குழைக்காதர் ` ( தி .2 ப .38 பா .7). ` சதுர் வெண்பளிங்குக் குழை ` ( தி .4 ப .6 பா .7) ` காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும் ` ( தி .6 ப .18 பா .1). மது - தேன் . துன்றுசடை . மாதர் பாகம் ஆக ( குழல் பாகம் ஆக ) என்க . மாதர் - கங்கை . குழல் - உமைநங்கை . ஆகுபெயர் . குழல் பாகம் திருமேனிப்பகுதி . மாதர் பாகம் சடை . ` செப்பிளமுலை நன்மங்கை யொருபாகமாக விடையேறு செல்வன் ` ( தி .2 ப .85 பா .7). இவர் - சிவபெருமானார் . இவள் - சிவாநந்தவல்லி . எழில் - எழுச்சி . விதி - பிரமன் ; செய்வன தவிர்வன . விதிக்கு விதித்த வேதம் .
சிற்பி