திருவதிகை வீரட்டானம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய சந்தனச் சேறும் முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும் , அழகிய புலித்தோல் ஆடையும் , வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும் , தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த , பகைவரோடு மாறுபடும் காளையும் , மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும் , திண்ணிய கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேம் யாம் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப்போவதும் இல்லை .

குறிப்புரை :

சுண்ணம் - பொடி . சுடர் - வெண்சுடர் . சூளாமணி - சூடாமணி ; உச்சியில் அணிசெய்யும் அரதனம் . வண்ணம் - அழகு ; நிறம் . உரிவை - தோல் . அண்ணல் - தலைமை ; பெருமை . அரண் - காவல் . அறம்போலக் காவல் பிறிதொன்றில்லை . அறவிடை ( தரும இடபம் ) என்னும் பெயர் இங்கு நினைக்கற்பாலது . ஏறு - விடை . அகலம் - மார்பு . அரவு - பாம்பு . திண் + நல் + கெடிலம் . திண்மையும் நன்மையும் கெடிலயாற்றுக்குரியன . தமர் - அடியவர் . யாது என்பது வகையுணர்த்தலின் ஒன்றும் என்பது ஒரு சிறிதும் என்னும் பொருட்டு ஆயிற்று . ` நற்பைங்கண் மிளிர் அரவாரமும் பூண்பிர் ` ( தி .4 ப .17 பா .2)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள
நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

அணிகலனாக அணிந்த மகாவராகத்தின் கொம்பும் , நீண்ட திண்ணிய இடத்தோள் மீது வலப்புறமாகச் சுற்றி , பொன்போல் விளங்கும் , ஆமை ஓட்டின் மீது புரண்டவாறு , நிலாப் போல் ஒளிவீசும் வெள்ளிய பூணூலும் , காண்டற்கினிய கொக்கின் இறகும் , தம்மோடு பொருந்திய மழுவின் வடிவம் எழுதப் பெற்ற கொடியும் , பெருகிவரும் கெடிலயாற்றுத் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம்யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதும் இல்லை

குறிப்புரை :

கேழல் - பன்றி . எயிறு - பல் . கொம்பு . ` ஏனமுளைக் கொம்பு ` ( தி .1 ப .1 பா .2) பொன் திகழ் ஆமை - பொன்போல விளங்கும் ஆமை . ` முற்றல் ஆமை ` ( தி .1 ப .1 பா .2). நீட்சியும் திண்மையும் தோளின் அடை . வெண்ணூல் வலம் சூழ்தல் . வெண்மைக்கு நிலாவொளி ஒப்பு . புள்ளின் சிறகு - கொக்கிறகு . ` கொக்கின் இறகர் ` ( தி .1 ப .71 பா .7) போல் அ - போலும் அந்த ( நூல் ). கட்டங்கம் - மழு . மழுக்கொடியும் உண்டு போலும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்
சித்த வடமு மதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

தோளில் மாலையாக அணிந்த இளைய பாம்பும் , இரண்டாகிய தோள் பட்டிகையும் , பலவடங்களாக அமைந்த முத்து மாலையினை இணைந்த உருத்திராக்கக் கண்டிகையும் , மூன்று இலைவடிவாக அமைந்த முத்தலைச் சூலமும் , சித்தவடம் என்ற பெயரிய சைவமடம் ஒன்றுடைய திருத்தலமும் , மதில்கள் உயரமாக உடைய அதிகை நகரை ஒருபுறம் சூழ்ந்து இயங்கும் விரைந்து செல்லும் கெடில நதித் தீர்த்தமும் உடைய பெருமானுடைய அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதுமில்லை .

குறிப்புரை :

நாகம் - பாம்பு . முத்துவடம் என்றதால் அக்காலத்துள்ள கண்டிகையியல்பு விளங்கும் . முத்துவடக் கண்டிகை :- ` கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர் `. ( தி .1 ப .78 பா .7) ` கண்டியிற்பட்ட கழுத்துடையீர் ` ( தி .4 ப .95 பா .6) ` மேல் இலங்கு கண்டிகை பூண்டு ` ( தி .4 ப .111. பா .9). இலைக்குரிய அடை முளைத்தெழு என்பது . சித்த வடம் - அதிகைக்கு அருகில் ஒரு சைவ மடம் உள்ள ஊர் . சேண் உயர் வீரட்டம் - திருவதிகைவீரட்டத்தின் விண்ணளவும் ஓங்கிய மாநகர்ச் சிறப்புணர்த்திற்று . வீரஸ்தாநம் - வீரட்டானம் , வீரட்டம் . உருத்திர பட்டம் - ( தி .12 மானக் கஞ்சாற . 23 . பார்க்க ) தோட்பட்டிகை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மடமான் மறிபொற் கலையு மழுப்பாம் பொருகையில் வீணை
குடமால் வரையதிண் டோளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாக மிருநில னேற்ற சுவடும்
தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

ஒருகையில் மான்குட்டி , ஒருகையில் மான் தோல் ஆடை , ஒருகையில் மழுப்படை , மற்றொரு கையில் பாம்பு , மற்றொருகையில் வீணை இவற்றை உடையவராய் , மேற்றிசைப் பெருமலையை ஒத்த திண்ணிய தோள்களும் , வில்போல் வளைந்து ஆடுகின்ற கூத்தின் பயிற்சியும் , பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடுடைய திருமால் தழுவிப் பொருந்தியிருக்கும் , இடப்பாகமும் , நீர்த்துறைகள் அமைந்த கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

குறிப்புரை :

மடமான் - இளமான் . மறி - கன்று . கலை - ஆண் . கலைமான் கன்று ஒரு கையில் உண்டு . மடமான் மறியும் பொற்கலையும் மழுவும் பாம்பும் வீணையும் என்றதாகக் கொள்ளின் பொற்கலை அழகிய ஆடையாம் . மான்றோலுடையைச் சிவபிரானுடையன் . ஒரு கையில் வீணை . ` வேயுறு தோளிபங்கன் ........ மிக நல்ல வீணை தடவி ..... திங்கள் கங்கை ..... அணிந்து உளமே புகுந்த ` இறைவர் ( தி .2 ப .85 பா .1) குடமால் வரை - மேற்றிசைப் பெருமலை . வரைய தோள் - மலையை ஒத்த தோள் . குனிசிலை - வளைந்த வில் . சிலைக்கூத்து - வில்போல் வளைந்து குதிக்குங்கூத்து . குதித்து என்பதன் மரூவே ` கூத்து என்பது . தவளைப்பாய்த்து என்பது போலக் குதித்து என்பதும் துவ்விகுதி பெற்ற தொழிற் பெயர் . பயில்வு - பயிற்சி . ` பயில்விக் கயிலைப் பரம்பரனே ` ( தி .8 திருவாச 6.34) என்றதும் ஈண்டு நோக்கத்தக்கது . இடம் - இடப்பால் . மால் - திருமால் . இருநிலம் - பெரிய மண்ணுலகு . ஏற்ற - தாங்கிய . சுவடு - அடையாளத் தழும்பு . உலகேந்திய திருமால் வரலாறு உணர்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும் , இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும் , மேம்பட்ட கயிலை மலையையும் , நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

குறிப்புரை :

பலபல காமத்தர் - ` ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல ` ` எண்பது கோடி நினைந்து எண்ணுவன ` எனத் திருக்குறளிலும் , மூதுரையிலும் உரைத்தவாறு காண்க . எண்ணியவாறே எண்ணங்களை இடையூறு நீக்கி ஈடேற்றும் கணபதியை வழிபட்டுக் கேட்கும் வரங்களைப் பலபல காமம் என்றருளினார் . கலமலக்கிடுதல் - கலந்து பிறழச் செய்தல் . நினைத்த வரங்களை எல்லாம் நல்க , அவை ஒன்றொடு ஒன்று கலந்து , பெற்ற முறையில் அன்றிப் பிறழ்ந்து பயன் கொடுக்கின்றமை பற்றிக் கலந்து பிறழ்தலாம் . மலக்கிடுதல் - மலங்கச் செய்தல் . மலங்க - கெட ; சுழல ; பிறழ . ( சிந்தாமணி ) கல என்னும் முதனிலை ஈண்டு எச்சப் பொருட்டாய் நின்றது . ( இலக்கணக் கொத்துரை ) கலக்கி மலக்கிட்டு , தி .4 ப .1 பா .8 பார்க்க . கணபதி யென்னும் களிறும் உடையார் - ` தனது அடி வழிபடு மவர்இடர் கடி கணபதிவர அருளினன் ` ( தி .1 ப .123 பா .5). வலம் ஏந்து இரண்டு சுடர் - இருளை ஒழிக்கும் வலிமை தாங்கிய செய்யதும் வெளியதுமான இருகதிர் . ஞாயிறும் திங்களும் கண்ணாக உடையார் . வான் கயிலாய மலை - சிவலோகம் . தூய்மை வெண்மை குறித்தது . நலம் - முழுகுவார் தம் கழுவாயில்லாத தீவினைகளையும் தீர்க்கும் நன்மை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

உயிர்கள் அறியாதவாறு மறைந்து நின்று அடியார்களுக்கு ஒளி வீசும் திருவருளாகிய விளக்கின் ஒளியும் , சுழலுகின்ற துடி என்ற இசைக் கருவியின் ஓசையும் , எங்கும் பரவிய தேவ கணத்தர் பதினெண்மரும் வேற்றிடங்களில் பழகி அறியாதனவாகிய பாட்டின் ஒலியும் , கூத்துவல்லார் கூத்தாடும் அரங்கங்களில் கண்டு அறியப்படாததாகிய கூத்து நிகழ்ச்சியும் , முறையாக ஓடிவரும் கெடில நதித் தீர்த்தத்தின் புனிதமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.

குறிப்புரை :

காரண கேவலத்திலும் காரிய கேவலத்திலும் உயிர்க்கு உயிராய் நின்று முதல்வன் செய்யும் அருளுதவி குறித்தது இது . திருவருள் விளக்கம் உயிரறியாவாறு மறைந்து நின்று ( சிவ போதத்தார்க்கு ) ஒளிர்கின்றது பற்றிக் ` கரந்தன கொள்ளி விளக்கு என்றருளினார் `. அத் திருவருளைக் கொள்ளி எனலை ` உற்கை தரும் பொற்கை யுடையவர் போல் உண்மைப் பின் நிற்கை அருளார் நிலை ` ( திருவருட்பயன் 68 ) என்பதாலும் அறியலாம் . ` இருள் அடராது உள்ளுயிர்க்கு உயிராய்த்தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது `. ( கொடிக் கவி 1 ) என்பதும் காண்க . ` கண்ணொளி விளக்களித்து ..... கருத்தொன்றன்றே ` ( சிவப் பிரகாசம் 59 ) ` குன்றா விளக்காய்நிறைந்த விரிசுடரான் ` ( நெஞ்சு விடு தூது 3 5) ` அச்சம் அறச் சென்று விளக்கை எழத்தூண்டிச் செஞ்சுடரில் ஒன்றி ஒரு விளக்கின் உள்ளொளியாய்ப் ` ` பெருவிளக்கின் பேரொளியின் உள்ளே பிரசம் மருவும் மலர்போல் கதித்து அங்கு அருவின் உருக்கொள்ளா அருள் ` ( நெஞ்சுவிடு தூது 94-7 ) என்பவற்றால் திருவருளை விளக்கெனல் அறியப்படும் . பதினெண் கணம் - ` அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே ` - புறம் :- கடவுள் வாழ்த்துரை பார்க்க . பாட்டு - சாமகீதம் . வேதப் பாடல் எனலுமாம் . ` தொடுக்குங் கடவுட் பழம் பாடற்றொடை ` ` காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம் பாடல் ` ( மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ). பயின்று அறியாத - இராவணன் முதலிய சிலர் பயின்றறிந்த மட்டும் பயின்றன , பலர் பயிலாத அரிய பாட்டு . ` பாடல் பயின்ற பல்பூதம் ` ( தி .4 ப .2 பா .8) என்றதுமாம் . அரங்கு - கூத்தாடும் இடம் . சகளம் , அகளம் , சகளாகளம் என்னும் மூவேறு நிலைக்கும் உரிய மூவிடமும் அரங்காகும் . அவ்வரங்கும் அங்கு ஆடும் கூத்தும் மதி நுட்பமுடன் குருவின் உபதேசமும் பெற்றவர்க்கே விளங்கும் . எத்துணை நூலறிவுடையார் ஆயினும் , ஏனையோர்க்கு எள்ளளவும் விளங்கா . நூலறிவு மட்டும் கொண்டு திருக்கூத்தை உணர முயல்வதும் அவ்வறிவு பெறாமல் அதற்கு விளக்கம் செய்வதும் இக்காலத்தில் மிக்குள்ளன . மதிநுட்பம் நூலோடுடையாரும் குருவின் உபதேசம் பெறாரயின் , அவரால் அக்கூத்தும் அது நிகழும் அரங்கும் அறியப்படாமையை உணர்த்தினார் ஆசிரியர் . ( தி .4 ப .2 பா .8) நாடற்கு அரியதோர் கூத்து என்றதும் உணர்க . நிரந்த - நிரல்பட்ட . ` நிறைகிரி முழுவதும் நிரந்த நீள்முகில் ` ( சேதுபுராணம் . கந்தமா .22) பரத்தலுமாம் ( சிந்தாமணி ).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கொலைவரி வேங்கை யதளுங் குவவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

தம்மால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய புலித்தோலும் , திரட்சியோடு விளங்கும் பொலிவுடைய தோடும் , பெருவிலையுடைய சங்கினாலாகிய காதணியும் , விலையே இல்லாத மண்டையோடாகிய உண்கலனும் , பார்வதி தங்குமிடமாகக்கொண்ட மார்பும் , நீலமணியின் நிறங்கொண்டு விளங்கும் கழுத்தும் , ஒழுகுகின்ற கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.

குறிப்புரை :

அதள் - தோல் . குவவு - திரட்சி . தோளுக்கு ஆகு பெயர் . குலவு என்று பிழை பட்டது . ` குன்றென வுயரிய குவவுத் தோளினான் ` ( கம்பர் - பாலகாண் . எழுச்சிப் .6 ) காதில் அசையும் தோடு தோளிற்படுவது நூல்களிற் பயின்றது . பொற்றோடு - ( பொன் + தோடு ) ` தோடுடைய செவியன் `. சங்கக் குழை - சங்கினால் ஆக்கப்பட்ட குழை . அதற்கு விலைமதிப்பு உண்டு . அவர் ஏந்திய பிரம கபாலப் பாத்திரத்துக்கு விலை மதிப்பு இல்லை . மலைமகள் கைக்கொண்ட மார்பு. `கொழும் பவளச் செங்கனிவாய்க் காமக்கோட்டி கொங்கையிணை யமர் பொருது கோலங் கொண்ட தழும்புளவே வரைமார்பில் வெண்ணூலுண்டே` (தி.6 ப.4 பா.10) மணி.....மிடறு - `மணிகொள் கண்டர்` (தி.1 ப.28 பா.4). காரணி மணி திகழ் மிடறு (தி.1 ப.41 பா.1). `கருமணி நிகர் களம்`(தி.1 ப.123 பா.3).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்
பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

கூத்தாடுதலை விரும்பிச் செய்த நிலையும் , இடுப்பில் இறுக்கிக் கட்டிய பாம்பும் , இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு , பல ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும் , ஆராய்ந்து , அறியமுடியாத கூத்தும் , மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலில் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

குறிப்புரை :

ஆடல் புரிந்த நிலை - திருக்கூத்தாடிய நிலை . அரை - ( நடு ) இடை . அரவு - பாம்பு . பாடல் - பாட்டு . ` நாடற்கு அரியது ஓர் கூத்தும் ` ` அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாத தொர் கூத்தும் ` ( தி .4 ப .2. பா .6) அக்கூத்தினை நாடற்குப் பல்லாயிரங் கருவி இருப்பினும் அக்கூத்து நாடற்கரியதே . கோயிலைக் கண்டோர் வீரட்டத்தின் நன்குயர்வை அறிவர் . ஓடும் கெடிலப் புனல் - வீரட்டத்தைச் சூழ்ந்து ஓடும் புனல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும் , துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும் , யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும் , சோலைகள் மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப் போவதும் இல்லை .

குறிப்புரை :

அரவத்துகில் - ஒலியல் . துகில்கிழி - கோவணக்கீள் ; கிழிப்பது கிழி . கீழ் - கீள் , மரூஉ . குபினம் - அழுக்கு . குபின சம்பந்தம் கௌபீனம் ; கோவணம் மரூஉ . யாழின் மொழியவள் - யாழொலி போலும் இனிய மொழியையுடைய உமையம்மையார் . வேழம் உரித்தவர் அஞ்சிலர் . உரிக்கும் கால் அங்கு இருந்தவர் அஞ்சினார் . அஞ்சாமைச் சிறப்புணர்த்த அருவரை போன்ற வேழம் . ` கைம்மலை ` ` கைவரை ` ` நடைமலை ` ` நடைக்குன்றம் ` ` வருங்குன்றம் `. வீரட்டம் சூழ்ந்து தாழும் புனல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது மொன்று மலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

பார்வதி நடுங்கும்படியாக நரம்புகளால் செயற்படும் கைகளைக் கோத்து தன் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்துக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் கதறும்படியாக முதலில் அழுத்திப் பின் அவன் பாடிய சாமகானம் கேட்டு அவனுக்கு வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமானாய் , வளருகின்ற சோலைகளை உடைய வீரட்டக் கோயிலை ஒரு புறம் சுற்றி நீர் நிரம்பியுள்ள கெடில நதித் தீர்த்தத்தை உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

குறிப்புரை :

நரம்பு எழு கைகள்:- `என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்` (தி.11 திருமுருகு.130) `நரம்பு எழுந்துலறிய நிரம்பா மென்றோள்` ( புறம் . 278) என்புழிப் போலக் கொண்டு நரம்புகள் எழுந்து தோன்றும் கைகள். இது சிவனுக்குப் பொருந்துமேற் கொள்க. `பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவன்`, `இடங்கை வீணை ஏந்தி`, `பண்ணமர் வீணையினான்`, `மிக நல்ல வீணை தடவி`, `நுண்ணூற் சிந்தை விரட்டும் விரலன்` ( பதிற்றுப் பத்து, கடவுள் வாழ்த்து ) `கைய தோர் சிரந்தையன்` (தி.1 ப.61 பா.3) என்பவற்றை உட்கொண்டு, இசை நரம்பு எனலும் பொருந்தும். பிடித்தது அச்சத்தால். `மலையான் மகள் அஞ்சவ்வரை எடுத்தவ் வலியரக்கன்` (தி.1 ப.9 பா.8) நங்கை - உமா தேவியார். என்கை (எங்கை) தன்கை (தங்கை) நுன்கை (நுங்கை) என்பன போல நன்கை என்பது நங்கையென்றாயிற்று. மண்கை (மங்கை) போல நண்கை (நங்கை)யும் ஆம். உரம் - வலிமை. உரங்கள் எனப் பன்மையாகக் கூறுதலால் மார்பு எனல் பொருந்தாது. வாய்களும் அலறின. வரங்கள்:- பெயர், வாழ்நாள், கோலவாள் முதலியன.
சிற்பி