திருவதிகை வீரட்டானம்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பொழிப்புரை :

கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.

குறிப்புரை :

திருக்கெடிலம் என்னும் ஆற்றிற்கு வடபால் விளங்கும் திருவதிகையில் உள்ள திருவீரட்டானம் எனப் பெயரிய மாநகராகிய திருக்கோயிலுள் எழுந்தருளிய சிவபெருமானே, அடியேனுக்கு மருளும் பிணி மாயை ஒரு கூற்று ஆயினவாறு வந்து வருத்தும் சூலை நோயை விலக்கமாட்டீர். (இந்நோயை அடைதற்கு அடியாகக்) கொடுமை பல செய்தன (உளவோ எனின், அவற்றை) நான் அறியேன். விடையானே. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாமல் (நின்) அடி (மலர்)க்கே வணங்குவன். இந்நோய் என் வயிற்றின் உள்ளே அடியில் பற்றித் தன்னைத் தோற்றாமல் குடரொடு துடக்குண்டு என்னை முடக்கியிடலால், அடியேன் ஆற்றாமல் வருந்துகின்றேன். இவ்வருத்தம் அகற்றி அடியேனை ஆட்கொண்டருள்வாய்./n திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே `கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்` என்று வெளியாயிற்று./n அது கேட்ட முழுமுதற் பொருள், `இக்கூற்று ஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று` என்று குறித்தது./n அதுகேட்ட சுவாமிகள், `அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன். இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் (இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்து கிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினை வருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின் வடிவமே ஊர்தியாம் ஏறு)` என்றார்./n `அச்சோ! கெடிலத்தின் வடபால் விளங்கும் திருவதிகையில் வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே! சூலை நோய் தன்னைப் புலப்படுத்தாமல் என் வயிற்றின் உள்ளே அடியிலே குடலொடு துடக்குற்று, முடக்கியிடுதலால் உண்டாக்கும் வருத்தத்தினைப் பொறுக்கும் வலியில்லேன். அறிந்து செய்த வினையின் பயனாயினும் அறியாது செய்த வினையின் பயனாயினும், இத் துயரம் தீர்த்து அடியேனைக் காத்தருள்வாய்` என்றார் சுவாமிகள்./n விளக்கம்/n/n வேற்றுச் (சமண்) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்./n இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது; பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச் செந்நெறிப்படியும் பரசிவனை மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?/n `யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம்/n மாதேவன் அல்லால் தேவர்மற்று இல்லையே`/n என்று (தி.5 ப.100 பா.9) அவர் திருவாய் மலர்ந்தருளியதாலும் `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` என்று அருணந்தி தேவநாயனார் அருளிய திருவாக்காலும், இராப் பகல் எல்லாம் சிவபிரானை மறவாத சீர்த்தி சுவாமிளுக்கு உண்டு என்பது உறுதியாயிற்று./n `வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்/n தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்/n சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே/n வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.`/n (தி.5 ப.90 பா.7)/n என்று அருளினார் பின்னர். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார் முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. `பூக் கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் ... கழிவரே`,`நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் ... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே` என்றவற்றையும் `பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்` என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை) தோன்றும்./n திருவதிகை வீரட்டானத் திறைவர் வினா:- ஏன் இங்கு வந்தாய்? என்பால் தீர்தற்கு உன்பால் உள்ள குறை என்ன?/n மருணீக்கியார்:- அதிகைக் கெடில வீரட்டானத் திறைவரே, இச்சூலை நோய் எனக்குக் கூற்று ஆன வகையை விலக்கமாட்டீர்?/n இறைவர்:- `அவர் அவர் வினைவழி அவர் அவர் அநுபவம்` உன்னை இச்சூலை நோய் பற்றி வருத்த, நீ செய்த வினைகள்தாம் காரணம். வினைப்பயனை வினை செய்தவர் அநுபவித்துத்தான் ஆதல் வேண்டும். பயன் அநுபவிக்காமல் இருக்கும் நெறியில் இறைபணி நின்று வினைசெய்திருப்பாயாயின், உன்னை அவ்வினை வருத்தாது. நீ செய்த பல கொடுமைகள் யாவை? அறிவையோ?/n மருணீக்கியார்:- கொடுஞ்செயல்களாகச் செய்தன பலவற்றை அறியேன் நான். (அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றவாறு)/n இறைவர்:- அபுத்தி பூர்வ புண்ணிய கன்மங்களைச் செய்துவரின், அத்தகைய பாவ கன்மம் விலகும். அது செய்து வருகின்றாயோ?/n மருணீக்கியார்:- ஏற்றாய்! (எருதின்மேல் ஏறிவரும்) பெருமானே! பசுபதீ! இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் அடிக்கே வணங்குவன். வணங்கி வந்தும் அபுத்தி பூர்வ பாவகன்மம் விலகி யொழியாமல் வருத்துகின்றதே!./n இறைவர்:- விலகும் வரையில் வலியைப் பொறுத்துக் கொண்டு தான் இருத்தல் வேண்டும். எவ்வாறு எங்கே உன்னை அது வருத்துகின்றது?/n மருணீக்கியார்:- எனக்கும் தோற்றாமல் என் வயிற்றின் உள்ளடியில் குடலொடு துடக்குற்று என்னை முடக்கி யிடுகின்றது. அதனால் அடியேன் வலியைப் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றேன்./n இறைவர்:- நீ வருந்தினால், நான் யாது செய்வது?/n மருணீக்கியார்:- கெடில நதிக்கரையில் திருவதிகையின் மாநகரில் (பெருங்கோயிலில்) எழுந்தருளிய அம்மானே! ஆண்டீர் நீயிர். அடியேன் யான். அதனால் அடியேனைக் காத்தல் ஆண்டீர்க்குக் கடனாகும்./n எச்சம்/n/n கூற்று என்பது உடம்பும் உயிரும் வெவ்வேறு கூறாகச் செய்யுங்காரணம் பற்றிய பெயர். சூலை நோய் உடம்பினின்று உயிரை நீக்கும் அளவு வருத்துவதால் கூற்றெனப்பட்டது. சூலை கூற்று அன்று. கூற்றாயிற்று. அதனால் `ஆயினவாறு` என்றார்./n கயிலையை எடுத்தபோது நெருக்குண்ட இராவணன் அத்துன்பத்தின் நீங்கத் தக்க வழியைக் (கடவுள் இன்னிசையில் சாமகானத்தில் விருப்பன் என்று சொல்லிக்) காட்டிய பழம் பிறவி நிகழ்ச்சியே இச் சூலைக்கு ஏது என்பதை உணர்த்தக் `கூற்று ஆயினவாறு` எனறருளினார் என்பது சிலர் கருத்து. கோவை சிவக்கவிமணி சைவத் திரு. சி. கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., அவர்களும் அதைக் குறித்திருக்கின்றார்கள். கோதாவரிக் கரையில் சமணமே உயர்ந்தது என்று சொற்போர் புரிந்த வரலாறும் அவர்களால் குறிக்கப்பட்டுளது. (தி.12. அப்பர் புராணம் 70 சி.கே.எஸ் உரை. பதிகக் குறிப்பு நோக்குக.)/n கொடுமை பல செய்தன - கொடுஞ் செயல்களாகச் செய்தன பல. நான் அறியேன் - அறிந்து செய்தேன் அல்லேன். அறியாமற் செய்தனவாயிருக்கும். அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றபடி./n கொடுமை - கொடுஞ்செயல். பண்பாகு பெயர். செய்தன - வினையாலணையும் பெயர்./n ஏற்றாய் - (ஏறு- விடை) விடையை யுடையாய்; விளியேற்ற வினைப்பெயராயும் முன்னிலை வினைப்பெயராயும் கொண்டுரைத்தாருமுளர். இராப் பகல் இடைவிடாது செய்யும் வணக்கமே பிறவிப் பிணிக்கு மருந்து. `மனத் தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும் நினைத்தெழுவார் இடர் களைவாய் நெடுங்களம் மேயவனே!` தி.1 ப.52 பா.2); `இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப் பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்` (தி.3 ப.3 பா.8) `எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக; ஏத்தும்` (தி.4 ப.41 பா.3) என வருதல் உணர்க./n அடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன். அடிக்கே - என்பதில் உள்ளவாறு, அப்பர் அருளிய மூன்று திருமுறையுள்ளும் பற்பல இடத்திற் காணலாம். `சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே` என்பது பல திருப்பாக்களின் முடிவாயுள்ளது. `விசயமங்கை ஆண்டவன் அடியே காண்டலே கருத்தாகியிருப்பன்` `நல்லுருவிற் சிவனடியே அடைவேன்` `சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றேன்` `திருவாரூர் மணவாளா நின்னடியே மறவேன்` உன்னை அல்லால் யாதும் நினைவிலேன்` என்று அண்ணாமலையாகிய தீச்சான்றாகச் சொல்லியருளினார். `எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழலடியே கை தொழுது காணின் அல்லால் ... உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே` என்பவற்றால் திருவடிக்கேயன்றி மற்று எதற்கும் தம் வணக்கத்தை உரித்தாக்காத உறுதியுடையவர் வாகீசப் பெருந்தகையார். நான்காவது திருமுறையின் இம்முதல் திருப்பாட்டில் `அடிக்கே` என்றருளினார். தி.6இன் ஈற்றுப் பதிகத்தின் ஈற்றடியில் எல்லாம் `அடிக்கே` என்பது அமைந்தவாறு அறிக. `ஒற்றை யேறுடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள் மேற்படை போகலே` என்பதில் `சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்` உடையவர்க்கு இறப்பு இன்மை உணர்த்தியவாறும் உணர்க. இதனை உணர்வார் அனைவரும் தம் தம் முப்பொறிகளையும் சிவபிரான் திருவடிக்கே உரியனவாம் வகையிற் செலுத்தும் அருள் வாழ்வு நடத்துவதே வையகத்துள் வாழ்ந்தும் அருள் வானத்தில் வாழ்ந்து பெறும் பேரின்பத்தை அடைவிக்கும்./n `ஏயிலானை என் இச்சை அகம்படிக் கோயிலானை` (தி.5 ப.91 பா.1) ஈற்றுத் திருக்குறுந்தொகையுள் 4,8,9 ஆம் திருப் பாடல்களை நோக்கின், திருநாவுக்கரசர் திருவுள்ளக் கிடக்கை இனிது புலனாகும். சிவபத்தர்க்குளதாகும் பேரின்பம் விண்டு பத்தர்க்கு உண்டாகாது என்று அறுதியிட்டுக் கூறியதுணர்க./n அகம்படியே:- அகம்புxபுறம்பு. அகம், புறம் என்பன வற்றின் ஈற்றில், புகாரம் இயைந்து வழங்குதல் இன்றும் அறியலாம். புகாரத்தோடு சேர்ந்தவை அகன், புறன் என்றலும் ஆம். அகம்பு + அடிமை + தொழில் = அகம்படிமைத்தொழில். திருக்கோயிலின் உட்டுறை வினைஞர் அகம்படியர் ஆவர். திருநாளைப் போவாரை `நாளைப் போவாராம் செயலுடைப் புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்` `திருவாயிற்புறம் நின்று ஆடுதலும் பாடுதலும் ஆய் நிகழ்வார்.` `தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்தெழுந்து` `மதிற்புறத்தின் ஆராத பெருங்காதல் ... வளர்ந்தோங்க உள்ளுருகிக் கைதொழுதே ... திருவெல்லை வலங்கொண்டு செல்கின்றார்`. `மதிற்புறத்துப் பிறை யுரிஞ்சுந் திருவாயில் முன்னாகப் ... நெருப்பமைத்தகுழி` என்பவற்றால், புறம்படிமை விளங்கும். `நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார் ... எரியின் கண் ... மாய ... உரு ஒழித்துப் புண்ணிய மாமுனிவடிவாய் ... வெண்ணூல் விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்`, `வானவர்கள் மலர்மாரிகள் பொழிந்தார்`. `தில்லைவாழந்தணர்கள் கைதொழுதார்`. `தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்`. திருநாளைப் போவாராம் மறைமுனிவர் தில்லை வாழந்தணரும் உடன் செல்லச் சென்று ... கோபுரத்தைத் தொழுது உள்புகுந்தார் ... `உலகு உய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்` என்பவற்றால் அகம்படிமை விளங்கும். ஒருவர் திறத்திலேயே அகம்படிமை புறம்படிமை இரண்டும் விளங்குதலைத் திருத்தொண்டர் புராண(தி.12)த்தில் காண்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பொழிப்புரை :

அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.

குறிப்புரை :

திருக்கெடில நதிக்கரையிலே திருவதிகையிலே திருவீரட்டானத்திலே எழுந்தருளியிருக்கும் ஆண்டவரே. அடியேனது நெஞ்சம் தேவரீர்க்கே உறைவிடம் ஆகப் பண்படுத்தி வைத்துள்ளேன். ஒரு பொழுதிலும் உம்மை நினையாமல் இருந்தறியேன். இச் சூலை நோய் போல்வதொரு கொடுநோயை அடியேன் அநுபவித்தறியேன். அஃது அடியேனது வயிற்றினொடு துடக்குண்டு முடக்கியிடும்படி நஞ்சாய் வந்து அடியேனை வருத்துகின்றது. அச்சூலை நோயை இனியும் என்னைக் குறுகாதவாறு துரத்துவதும் மறைப்பதும் தேவரீர் செய்திடீர். அஞ்சேலும் (பயம் கொள்ளாமல் இரும்) என்று அபயமேனும் அளித்திலீர்.
வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் என்பது:- சூலை நோயைக் குறித்ததாகக் கொள்ளாமல் இறைவனுக்கே நெஞ்சத்தையும் அதன் நினைவையும் உரிமையாக்கியதைக் குறித்ததாகக் கொண்டு உரைத்தலும் பொருந்தும்.
அப்பொருளில் வஞ்சம் என்பதற்குப் பொய் என்றல் பொருந்தும். நெஞ்சம் இடமாக நினைக்கும் செயல் என் அநுபவத்தில் பொய் போல்வதன்று. மெய்யே என்றவாறாம். வல் + து + அம் = வஞ்சம். மரூஉ. அது(தண் + து + அம் =) தஞ்சம் என்ற மரூஉப் போல்வது. நஞ்சு ஆகி - நஞ்சினியல்புடையதாகி. ஆகி - போன்று எனலும் ஆம்; `ஆள்வாரிலி மாடு ஆவேனோ` `என்புழிப்போல. `அஞ்சேலும்`:- அஞ்சேல்` என்னும் முன்னிலை யொருமை ஏவல் வினையின் ஈற்றில் முன்னிலைப் பன்மையேவற்கு உரிய `உம்` விகுதி சேர்த்து அஞ்சேலும் என்றதுணர்க. அஞ்சேல்மின், செய்யல்மின் என்பனவும் அன்ன. வாரும் தாரும் செய்யும் உண்ணும் என்பன உடம்பாடு. வாரேலும், தாரேலும், செய்யேலும், உண்ணேலும் என்பன எதிர்மறை. இவ்வாறு ஆட்சியில் இல்லை. `கொள்ளெலும்` (தி.1 ப. 55 பா.10) கொள்ளேலும் (தி.2 ப.119 பா. 10) எனத் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருவாக்கில் வந்தமை கண்டுகொள்க. இஃது அரியதோர் ஆட்சி. என்னீர் - என்று சொல்லீர். வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன் (பா-5) என்பது போல்வதே, வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் என்பது.

பண் :கொல்லி

பாடல் எண் : 3

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டை யோட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

குறிப்புரை :

பிணி முதலியவற்றால் இறந்தவருடைய உடற் சாம்பலாகிய பொடியைக் கொண்டு திருமேனியிலே பூசவல்லீரே, விடையேறி ஊர்தலை விரும்பினீரே, தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தீரே, அடிகளே, திருவதிகைக் கெடிலநதி வடபால் விளங்கும் திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, தேவரீர் நும்மைப் பணிந்தவருடைய தீவினைகளைக் கெடுக்க வல்லீர் ஆயினும், இறந்துபட்டவரது வெண்டலையிலே பிச்சையேற்றுத் திரிவீர். நும் வலிமையை நோக்கி ஆளாகலாம் என்று விருப்பம் எழுகின்றது. நீர் பலிகொண்டுழல்வதை நோக்கி இவர்க்கோ ஆளாவது? இவர்க்கு ஆளாவதில் நமக்குப் பயன் உண்டாமோ? ஆகாதோ? என்று ஐயம் தோன்றுகிறது.
`பணிந்தாருடைய பாவங்களைப் பாற்ற வல்லவராதலின் இவர்க்கு ஆளானால் நம் சூலையைத் தொலைத்தருள்வார்` என்று துணிந்து உமக்கே ஆட்செய்து வாழலுற்றேன். அத்துணிவுடன் ஆட்செய்து வாழ்வேனாம்பட்சத்திலும் என்னைச் சுடுகின்றதாகிய சூலை நோயைத் தவிர்த்தருள்வீர்.
பணிந்தார் + அன் + அ = பணிந்தாரன. வினையாலணையும் பெயர். அன் சாரியையும் ஆறன் வேற்றுமைப் பன்மையுருபும் ஏற்று அவருடைமையாகிய பாவங்கள் என்னும் பன்மைப் பெயர் கொண்டு நின்றது. படுவெண்தலை = பட்டதலை; வெள்தலை. படுதல் - அழிதல்; தலையின் இயல்பிலிருந்து கெடுதல். துணிவு - தெளிவு. `ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்` (குறள்.353) `உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்` (பாடல் 7). பொடி - இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி. `சடையும் பிறையும் சாம்பற்பூச்சும் கீளுடையும் கொண்ட உருவம்`. (தி.1 ப.23 பா.1) பெற்றம் - விடை.
ஏற்று:- பேச்சு, பாட்டு, கீற்று, கூற்று முதலியன போன்ற பெயர். பின்னீரடியிலும் கொண்டவாறு முதலடியிலும் விளியாகக் கொள்ளல் கூடும். சுற்றும் - தலையைச் சுற்றிலும். `தலைமாலை தலைக் கணிந்து` (தி. 4 ப.9 பா.1) `தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே` (தி.7 ப.4 பா.1). அடிகள் என்பது விளியில் அடிகேள் என்று ஆயிற்று. அருமகன்:- அருமான், அர்மான், அம்மான் என மருவிற்று. பெருமகன்:- பெருமான், பெர்மான், பெம்மான் என மருவியவாறும் உணர்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை ... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ!

குறிப்புரை :

முன்னம் அடியேன் என்பது ஒரு தனி வாக்கியம். அறியாமை:- சமண் சமயம் புக்க செயலுக்குப் பண்பாகு பெயர். முனிதல் - ஆண்டவன் வினை. நலிதலும் முடக்கியிடலும் சூலையின் வினை. பின்னையும் என்று உம்மை விரித்துரைக்க. சமண் சார்தற்கு முன்னமும் அடியேன். அதை ஒதுக்கிய பின்னையும் அடியேன். இடையில் நேர்ந்தவை அறியாமையின் விளைவும் அவ்விளைவின் பயனும் ஆம். அவை முறையே சூலையும் அதன் நலிவும் முடக்கிடலும் ஆகும். மூன்றாவதடியில் தன்னை என்றும், தலையாயவர் என்றும் உள்ளது ஒருமை பன்மை மயக்கம் ஆயினும், எதுகை நோக்கியதாகும். என்னை இச் சூலைநோய் பற்றியதன் முன்னும், எனது அறியாமையால் என்னை வெறுத்து இந்நோயால் வருத்தி முடக்கியிடுதலால் பின்னும், அடியேன் குற்றம் அகன்றதும் அன்றி உமக்கு ஆளும் பட்டேன். சமண் சமயம் புகுமுன்னும் அடியேன்; அதை அகன்ற பின்னும் அடியேன்; இடையில் அறியாமையின் விளைவாய் இந் நோயாகிய பயனை எய்தினேன் என்றதுணர்க.
அன்ன நடையுடைய மகளிர் மல்கும் திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே (நான்) உமக்கு இப்போது தான் அடிமையானேன் அல்லேன். சமண் சமயம் சார்தற்கு முன்னேயே அடியேனாயிருந்தேன். அறியாமையின் விளைவாக அமண் சமயம் புக்கதால் என்னை வெறுத்து, எனக்கு இச்சூலை நோயைக் கொடுத்தாய். அது வருத்தி முடக்கியிடுகின்றது. அதனால் அச்சமயத்தை விட்ட பின்னேயும் உமக்கு ஆளும் பட்டேன். ஆட்பட்டேனையும் சூலை சுடுகின்றது. அதனைத் தீர்த்தருள்வீர். தலைவரானவர் கடன் தம்மை அடைந்தவர் வினையைப் போக்குவது அன்றோ? நான் நின் அடியேன். நீ என்னை ஆண்டாய் என்றால் உன்னை அடைந்த என் வினையைத் தீர்ப்பது அன்றோ தலைவனான உன் கடனாவது?

பண் :கொல்லி

பாடல் எண் : 5

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

ஆரவாரித்துப் பெருகும் கெடிலக் கரையிலமைந்த அதிகை வீரட்டானப் பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச் செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின் ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில் விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில் ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய் வயிற்றோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு அறியாதேனாய் நாளை வீணாக்கினேன்.

குறிப்புரை :

புனல் ஆர் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே:- நீர்நிறைந்த திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் உறையும் அம்மானே!
கயத்தைக் காத்து ஆளுவோரது காவலைப் பொருட் படுத்தாமையால், அதன் கரையில் நின்றவர் இக் கயத்தின் நீராழத்தளவு அறிய வினாவிய என்னை நோக்கி `நீயே இறங்கிக் கண்டு கொள்` என்று சொல்லி (நிலைக்க முடியாதவாறு), இறங்கு துறையில் நீத்துக்கு உரியதாகும் நீர்நிலையில் புகுமாறு நூக்கியிட்டதால், (நீந்த மாட்டாதவனாகி) நிலைக்கொள்ளும் ஒரு வழித்துறையை அறியேனானேன். இதைப் போல்வதொரு வார்த்தை கேட்டறிந்திலேன்.
காத்தல் - குளத்து நீரைக் கெடுப்பாரைத் தடுத்தல். ஆள்பவர் - காவற்காரர். தம்மைப் பேணுவாரும் ஆவர். இகழ்தல் - பொருட் படுத்தாமை. நீத்து - நீந்து என்னும் முதனிலை திரிந்த தொழிற் பெயர். அடங்கு - அடக்கு, இறங்கு - இறக்கு என்பனவும் அன்ன. முடக்கியிட ஆர்த்தார் (பொருத்தினார்) என்று இயைக்க. ஆர்த்தவரது அதிகை வீரட்டானம் என்க. கயம் - நீர்நிலை. இயற்கைப் பள்ளம்; ஒருவர், இருவர், பலர் வெட்டுவித்ததன்று. நூக்கியிட-
`கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் .`
(தி.5 ப.72 பா.7)
என்பது நூக்குமாற்றை நன்கு புலப்படுத்தும்.
சைவ சமயம் விட்டுச் சமண் சமயம் புக்கதனை உளங் கொண்டு பாடியது. இது பிறிது மொழிதலாகும். காத்தாள்பவர் திலகவதியார் முதலோர், காவல் அவரது அறிவுறூஉ. இகழ்தல் - அவற்றைப் பொருட்படுத்தாது வேற்றுச் சமய நூல்களை ஆராய்ந்தறிதல். கரை நின்றவர் பிற சமயத்தார். கண்டுகொள் என்று சொல்லல் சமண் சமயத் துண்மைகளை உணர்ந்துகொள் என்று மயக்குதல். நீத்தாய கயம்புக நூக்கல் சமண் சமயம் புகச்செய்தல். நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்று அறியாமை வெளிப்படை. அறிந்தால் மீண்டும் சைவத்திற் புகார் அல்லரோ? `வார்த்தை இது ஒப்பது கண்டு அறியேன்` என்பது சைவத்தின் உயர்வு குறித்ததாகக் கோடலும் பொருந்தும்.

பண் :கொல்லி

பாடல் எண் : 6

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! இறந்தவர் மண்டை யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.

குறிப்புரை :

திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! நீரும் மலரும் புகையும் (பிறவும்) கொண்டு நின்னை வழிபடுவதை மறந்தறியேன். தமிழ் மொழியில் அமைந்த நின்புகழோடு இசை பாடுதலை மறந்தறியேன். நன்கிலும் தீங்கிலும் உன்னை மறந்தறியேன். உன் திருப்பெயரை என் (புல்லிய) நாவில் வைத்துச் சொல்லுதலை மறந்தறியேன். இறந்த நான்முகனார் தலையிலே பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! (அடியேன்) உடலின் உள்ளே மிக்கு வருத்தும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய். அடியேன் வருந்துகின்றேன்.
சலம் - ஜலம். `பூவொடுதூபம்` `தமிழோடிசை` என்பன முறையே அருச்சனையிலும் தோத்திரத்திலும் உள்ளனவாய் உடனிகழ்வன ஆதலின், முதலடிக்கண் வந்த மூன்றனுருபு உடனிகழ்ச்சிப் பொருளவாயின. இருவினையும் பற்றி விளையும் இன்பத் துன்பங்களை நலம் (நன்கு) தீங்கு என்றருளினார். `உன்`, `என்` என்பவற்றின்கண் முறையே இறைமையாகிய மேலுக்கும் அடிமையாகிய கீழுக்கும் உள்ள வரம்பு ஒலித்தல் காண்க.
`மேலுக்கு நீவரம்பாயினை ... ... கீழுக்கு நான் வரம்பாயினேன்`. (சிவஞான பாலைய - கலம்பகம் 90) உலந்தார் - இறந்தவர்; வாழ்நாள் கடந்தவர். `உக்கார் தலைபிடித்து உண்பலிக்கு ஊர்தொறும் புக்கார்`(தி.4 ப.16. பா.4). `மாண்டார் தம் என்பும்` (தி.4 ப.16 பா.9) என்றதில் உள்ள வரலாறு வேறு.
உடல் வயிற்றைக் குறித்ததுமாம். அலந்தேன் - ஈண்டு நிகழ்வு உணர்த்திற்று. மறந்திருந்த குற்றமும் அதற்குக் காரணமும் பழம் பிறவிகளின் நிகழ்ச்சி. அதனை
`ஏழை மாரிடம் நின்று இரு கைக்கொடுஉண்
கோழை மாரொடும் கூடிய குற்றமாம்
கூழைபாய் வயற் கோழம் பத்தானடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே` (தி.5 ப.65 பா.8)
என்னும் திருக்குறுந்தொகையால் அறியலாம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 7

உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப் புரட்டி அறுத்துச் சூலை நோய் உள் உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன். இனி, உமக்குத் தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

குறிப்புரை :

என்னைத் தலைமையராய்க் காவல்புரிவார் நும்மையல்லாது வேறு ஒருவரும் இல்லாமையால், மனையிலிருந்து வாழும் வாழ்க்கையினும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் வாழும் பொருளினும் நீங்கினேன்; முற்செய் தவச் சிறப்பால் விளங்கினேனாகி நுமக்கே ஆளாகித் தொண்டு செய்து வாழ்தல் உற்றேன். உற்ற என்னைத் துன்புறுத்துகின்றதாகிய சூலை நோயைத் தீர்த்தருளா திருக்கின்றீர். என் வயிற்றின் உள்ளடியில் குடலைப் பறித்துப் புரட்டி அறுத்து இழுத்திடலால் அடியேன் அஞ்சி அயர்ந்தேன். உயர்தல் - ஈண்டு நீக்கத்தைக் குறித்து நின்றது. `உக்கத்து மேலும் நடுவுயர்ந்து` `தலைக்கு மேலும் நடு இல்லையாய்` (கலித்தொகை 94) `நடுவுயர்ந்து என்றது நோன்புயர்ந்தது என்றாற்போல நின்றது`. `உயருமன் பழி` - `தாம் செய்த பழி மிகவும் போம்` `உயர்தல் - நோன்புயர்தல் போல நீக்கத்தின் கண் நின்றது`. (கலித்தொகை 129) என்புழி ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையை ஈண்டு நோக்குக. பிங்கலந்தை 1760 பார்க்க. வயந்து - வளர்ந்து; வயமாக்கி. விளங்கி எனின் வயங்கி எனல் வேண்டும். வயக்கம் - விளக்கம். `வெண்ணிற வயக்கம் மாண்டது`. (தணிகைப். நாட்டுப்.15) பழக்கமும் ஆம்.
இலாமையினால் உயர்ந்தேன் என்க. வயந்து என்றதோ டியைத்தும் பொருள் கொள்ளலாம். ஆயினும் அடுத்த திருப் பாடலை நோக்கின், அது பொருந்தாமை காண்க.
தலை என்பது சினையாகு பெயராய்த்தலைவர் என்னும் பொருட்டாய் ஒரு தலைவர் என நின்று, தலைவர் ஒருவர் காவல் இல்லாமையினால் உயர்ந்தேன் என்று இயைத்துக் கொள்ளலாயிற்று. ஆசிரியர்க்கு மனைவாழ்க்கையும் பொருளும் இல்லாமையும், `புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறுபாடிலா நிலைமை துணிந்திருந்த நல்லோர்` ஆய் உள்ளமையும்; பொன்னும் மணியும் உழவாரத்தினில் ஏந்தி எறிந்தமையும், அரம்பையர்கள் புரிந்தவற்றால் நிலை திரியாத சித்தத்தினை அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகு மெய்த் தன்மை யுணர்வொடு நிறுத்திச் செய்பணியின் தலை நின்றமையும் அறிவார்க்கு உயர்ந்தமை (நீங்கினமை) உடன்பாடாம். தி.4 ப.26 பா.4, 7; ப.52.பா.3,5,8; ப.54 பா.6; ப.67 பா.6, 9; ப.69 பா.9; ப.78 பா.9ஆகிய பாக்களின் உள்ளவாறு உண்டு என்பார்க்கு உடன்பாடன்று. `கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன்` (தி.4 ப.96 பா.5) `கருவுற்ற நாள் முதலாக வுன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் திருவொற்றியூரா! திருவாலவாயா! திருவாரூரா ஒருபற்று இலாமையுங் கண்டிரங்காய் கச்சியேகம்பனே.` (தி.4 ப.99 பா.6); `கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்` (தி.4 ப.94 பா.6); கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர்` (தி.6 ப.8 பா.99) என்ற ஈசர் வாக்கால் அவ் வாகீசர்க்கு மனை அறம் இல்லை என்னாது உண்டென்பார்க்கு நரகம் இல்லாது போமோ? `அப் பற்றல்லது மற்றடிநாயினேன் எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே` (தி.5 ப.96 பா.9) என்ற அப்பர்க்கு மனை வாழ்க்கைப்பற்று இருந்ததாகக் கோடல் பொருந்துமோ?
அவர்க்குப் பற்று இருந்ததாகக் கொள்ளினும், நம்மனோர்க்குள்ள அளவினது அன்று அது. ஏகனாகி இறைபணிநிற்கும் உண்மை நிலையினரிடத்தும் அஞ்ஞான கன்மப்பிரவேசம் உண்டு என்று அருள் நூல்கள் உணர்த்துகின்றன. அக்கன்மப் பிரவேசம் உளதாகாவாறு தடுக்கும் வழி அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமை. அஃதாவது (ஏகனாகி) இறைபணி வழுவாது நிற்றலாகும். அத்தகையோர்க்கும் அஞ்ஞான கன்மப் பிரவேசம் உண்டாகலாம் எனின், அதனை நம்மனோர்க்கு உள்ள பற்றினளவை நிகர்த்ததாகக் கொள்ளலாமோ? ஏகனாதலும் இறைபணி நிற்றலும் எங்கே? நாம் எங்கே? அத்தகைய சிற்றளவு பற்றுக்கே அப்பர் வருந்துகின்றார் எனக் கொண்டுரைத்தல் தக்கது. அப்பொழுது `உயர்ந்தேன்` என்பது மிகுதிப்பொருட்டாகும்.
சிவனது இச்சையே தனது இச்சை; சிவனது அறிவே தனது அறிவு; சிவனது செயலே தனது செயல். தனக்கென இச்சையும் ஞானமும் கிரியையும் உரியனவாய் இல்லை என்று சிவனுடைய இச்சாஞானக்கிரியை நிகழ்ச்சிகட்குத் தான் ஒரு கருவியாக நின்று ஒழுகுவதே இறைபணி நிற்றலாகும். பசுகரணம் சிவகரணமாதல் இன்னதே.
திருக்களிற்றுப்படியார்க்குள்ள பழைய உரைகளுள் ஒன்று (சிதம்பரம், சைவத்திரு. முத்து. வைத்தியலிங்கச் செட்டியார் அவர்கள் பதிப்பு. பக்கம்.64).
`சிவன்முதலே அன்றி முதல் இல்லை என்றும்
சிவனுடையது என்அறிவது என்றும் - சிவனவனது
என்செயலது ஆகின்றது என்றும் இவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.` (திருக்களிறு - 64)
என்னும் திருவெண்பாவிற்கு உரிய உரையின் முதற்கண், `முதல் என்பது இச்சை ஞானம் கிரியை மூன்றில் முதலிற் கூறியது இச்சையின் மேற்று` `சிவனுடைய இச்சையே அன்றி நமக்கு இச்சையில்லை` என்று உணர்த்துகின்றது. ஆங்கு, அறிவும் செயலும் கூறப்படுதலின், `முதல்` என்றது இச்சை என்னும் பொருளதேயாகும். இதனை அறியாதார் வேறு கூறுவது பொருந்தாது.
அதனால், `முதல்` என்றது இச்சையையே. அடுத்த இரண்டும் சிவனது ஞானம் சிவனது கிரியை என ஆறனுருபிற் கூறியதால், `சிவன் முதல்` என்றதும் ஆறன்றொகையாகும். எழுவாய்த் தொடராகாது. பசுகரணங்கள் சிவகரணமாகத் துன்னிய சாக்கிரமதனில் துரியாதீதம் தோன்ற முயன்று சுவாநுபூதிகமான சிவாநுபவம் உடையவர்க்கு அம்மூன்றும் சிவனுடையனவாக நிகழ்வனவே ஆகும். ஆகாவேல், சிவகரணம் அல்ல; பசுகரணமே அவை. அவரும் சிவாநுபவத்தரல்லர்.
திருக்களிற்றுப்படியாரில் 63 - ஆவது திருவெண்பாவில், கூட்டில் வாட்சார்த்தி நில்லாதார் வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றாலும் நாட்டிலே நின்று நல்வினைகள் செய்தாலும் பயனொன்றும் இல்லை என்று கூறி, அடுத்த திருப்பாட்டிலே கூட்டிலே வாட்சார்த்தி நிற்குமாறு விளக்கப்பட்டது. அஃது இறைபணி நிற்றலாகும்.
`ஆன்மாவினது இச்சா ஞானக் கிரியை ஆகிய பசுகரணங்கள் சிவனது கரணமாகிய இச்சா ஞானக் கிரியை முழுதும் ஆவதே ஆன்ம தரிசனம்` (தருமையாதீனத்து வெளியீடாகிய சிவாநந்த போத சாரத்தின் உரை) ஆன்ம தரிசனமும் சிவரூபமும் ஒருங்கு நிகழ்வன. `சடசித்துக்கள் முழுவதும் சுகப்பிரபையே தனக்கு வடிவாக உடைய சிவம் கலத்தலால் சிவமயம் எனப் பிரபஞ்சத்தைக் காண்பது சிவரூபம் ஆம்.` (சிவாநந்த போத சாரம் உரை) இவற்றால், `முதல்` என்றது இச்சையே ஆதல் இனிது விளங்கும்.
`நாயகன் எல்லா ஞானத் தொழில் முதல் நண்ணலாலே காயமோ மாயை அன்று காண்பது சத்திதன்னால்` (சித்தியார். சுபக்கம். சூ. 1 - 41) எனவும், `இறைவனாவான் ஞானம் எல்லாம் எல்லா முதன்மை அநுக்கிரகம் எல்லாம் இயல்புடையான், (சித்தியார். சூ. 8:- 17) எனவும் வரும் இடங்களிலும் முதல் என இச்சையைக் குறித்தது காண்க.
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையன் ஆகிய நின்மலன் நினைந்த மேனி நிறுத்தும் முதன்மையன் என்பதில் ஐயம் ஏது? பராசத்தியின் முதல் வேறுபாடு இச்சையாதலினாலும் ஞானம் கிரியைகட்கு (இச்சையாதி) முன்னது ஆதலினாலும் `முதல்` எனப்பட்டது.

பண் :கொல்லி

பாடல் எண் : 8

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.

குறிப்புரை :

அடியேன் மனை வாழ்க்கையை மகிழ்ந்து வலித்தேன். காரணம் யாது? மனவஞ்சம் ஒரு சிறிதும் இல்லாமையினால். துணை யாருமில்லை - துணையாவார் யாருமில்லை. என் வயிற்றின் உள்ளடியிலே செருக்கி வளர்ந்து துன்புறுத்திப் பிறழச் செய்து (சிந்தா. 1067 - 1613) பறித்துத் தின்ன அடியேன் சோர்ந்தேன். ஒருவர் என்பது ஒருவா என்றிருந்ததோ?

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும்.

குறிப்புரை :

பொன்னைப் போல ஒளி செய்வதொரு திருமேனியுடையீர்! முறுக்குண்ட பொற்சடையீர்! கலையிற் குறையும் பிறையுடையீர்! துன்பமும் கவலையும் பிணியும் நணுகாமல் துரந்தும் இடீர். கரந்தும் இடீர். என்னைப்போல்வார்கள் இனி உம்மைத் தெளிய உணரமாட்டார்கள். அடியார் படுவது இதுவே ஆகிலும் அன்பே அமையும். வீரஸ்தாநம் - வீரட்டானம். மூலஸ்தாநம் - மூலட்டானம் என்பது போல்வது.
மிளிர்தல் - விளங்குதல், புன்சடை - பொன்போலும் செஞ்சடை. புன்மை (அற்பம்) எனல் சிவாபராதம். மெலிதல் - கலையிற் குறைதல். பிறை - பிறத்தலாகிய ஏதுப்பற்றிய பெயர். பிணித்தல் - கட்டுதல். கட்டில் - பிணிப்பினையுடைய இல்வாழ்கை (சிந்தாமணி 8.63). `துன்பத்தால் தொடக்கினேன்` (சிந்தாமணி 3.86) என்ற இடத்து, துன்பமும் அதனாலுறும் பிணிப்பும் வேறாதல் நன்கு விளங்கும். யாது செய்வல் என்ற கவலை (சிந்தாமணி 1.302). அமைதி - நிறைவு (சிந்தா. 1.78). என்போலிகள் - போல்பவன், போல்பவள், போல்வது மூன்றும் போலிகள் எனப்படும். போல்வார் எனல் பொருந்தாது. கள் ஈறு சேர்ந்து பலர்பாலைக் குறிக்கலாயிற்று. ஆகவே தெளியார் என்னும் பயனிலை கொண்டது.

பண் :கொல்லி

பாடல் எண் : 10

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை - ஒலித்து நிறையும் நீர் சூழ்ந்த திருவதிகை. அங்குத் (தக்கயாகத்தில்) துன்பம் விளைப்பதில் ஒப்பிலாத யானையின் ஈர்மை பொருந்திய உரித்த தோலைப் போர்த்தாய்! புறங்காடே அரங்கமாகத் திருக்கூத்து ஆடவல்லாய். வீரமுழக்கத்தொடு கயிலைமால்வரையைத் தூக்க முயன்ற அரக்கனான இராவணனை அம்மலையின் கீழ் அகப்பட்டு நசுக்குறச் செய்து, அவனது சாமகானத்தைக் கேட்டுத் திருவுளம் இரங்கித் திருவருள் அளித்த அதனை ஈண்டு எண்ணுகிலாய். (எண்ணுவையேல்) வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் மற்று யாது நிகழ்ந்தாலும் என் துன்பங்களானவற்றை விலக்கிடுவாய். எண்ணாமையால் விலக்கியிடுகிலாய் எழுந்தாலும் என்க. உம்மை தொக்கது.
சிற்பி