திருக்கயிலாயம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகின் மூளுமிருள் கீளவிரி தாளகயி லாயமலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிபொருந்திய வரிகளையுடைய புலியின் தோலை உடுத்தவர் . அது பாதத்தில் பொருந்த எக்காலத்திலும் ஆனந்தமாய் இருப்பவர் . அடியவர்களை ஆட்கொள்பவர் . எதிரிட்ட விலங்குகளைக் கிழிக்கும் கூரிய பற்களை யுடைய திரண்ட வடிவுடைய யானையை அடக்கியாண்டவர் . சிறந்த வில்லினை ஏந்திய தோளர் . கூளிகள் தாளமிட நடனம் புரிபவர் . திருவெண்ணீற்றினை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் கயிலாய மலையானது கரிய மேகங்களால் மூண்ட இருட்டை ஓட்டும் வெண்பொன்னாகிய ஒளியை விரிக்கும் அடிவாரம் உடையதாகும் .

குறிப்புரை :

வாள - ஒளி பொருந்திய . வரி - கீற்றுக்களையுடைய . கோள - கொலைபுரிவதாகிய . புலி - புலியை . கீளது - கிழித்ததாகிய . உரி - தோல் ( உடுப்பதால் ) தாளின் மிசை - ( அது ) பாதத்தில் பொருந்த . நாளும் மகிழ்வர் - என்றும் மகிழ்வர் . வேள் - கண்டவர் விரும்பும் . அநகர் - தூயோர் . ஆளுமவர் - ஆள்பவர் . போள் - ( எதிரிட்ட விலங்குகளை ) கிழிக்கும்படியான . அயில - கூரிய பற்களையுடைய . கோள - திரண்டவடிவையுடையதான . களிறு - யானையை . ஆளி - அடக்கியாண்டவர் . வர வில் - சிறந்த வில்லைத் தாங்கிய . தோள் - தோளையுடைய . அமரர் - தேவராவர் . மதர் - செருக்கிய . கூளி - கூளிகள் . தாளம் எழ - தாளத்தை எழுப்ப . மீளி - ( நடனமாடும் ) வலியர் . மிளிர் - பிரகாசிக்கின்ற . தூளி - திருநீற்றைப் பூசியவர் . காளமுகில் - கரிய மேகங்களாய் . மூளும் - மூண்ட . இருள் - இருட்டை . கீள - ஓட்ட . பொன் - வெண்பொன்னாகிய . விரி - ஒளியை விரிக்கும் . தாள - அடிவரையையுடைய கயிலாயமலை . போழ் - போள் என எதுகை நோக்கி நின்றது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருக ணொற்றைவிடையன்
செற்றதெயி லுற்றதுமை யற்றவர்க ணற்றுணைவ னுற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு குற்றமில தெற்றெனவினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி பெற்றகயி லாயமலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பைப் பற்றிய கையை உடையவர் . நெற்றியில் ஒரு கண்ணுடையவர் . ஒற்றை இடபத்தை உடையவர் . முப்புரத்தை எரித்தவர் . உமாதேவியை ஒரு பாகமாக உடையவர் . உலகப் பற்றை நீக்கிய அடியவர்கட்கு நல்ல துணையாக விளங்குபவர் . அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மலையிற் பிறக்கும் மணிகள் ஒளியிழக்குமாறு தன்னொளி மிக்க கயிலாய மலையாகும் . கற்றவர்கள் போற்றித் துதிப்பதால் ஞான ஒளி பெற்ற சிறப்புடையது இக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

புற்று அரவு - புற்றில் உள்ள பாம்பை . பற்றிய - பிடித்தகை . நெற்றியது - நெற்றியில் உள்ளது . மற்று ஒரு கண் - மூன்றாவது ஆகிய ஓர் கண் . ஒற்றைவிடையன் - ஒரு இடபத்தையுடையவர் . செற்றது எயில் - ( அவர் ) அழித்தது மதிலை . உற்றது உமை - பிரியாது உடம்பில் பொருந்தியது , உமையை . அற்றவர்கள் - பற்றற்றவர்களின் . நல்துணை - நல்ல துணைவராவார் . ( அத்தகைய சிவபெருமான் ) உற்ற - தங்கிய . நகர் தான் - தலமாவது . சுற்றுமணி - சுற்றிலுமுள்ள இரத்தினங்கள் , பெற்றது ஒளி உடையதாகிய ஒளியை : ( அழித்த ) செற்றமோடு - பகைமையோடு ( இருந்தும் ) குற்றம் இலது எற்று என - ( இம்மலை ) குற்றம் அற்றது ஆயினது எதனால் என்று , வினாய் - வினாவி , கற்றவர்கள் - அறிஞர்கள் . சொல் தொகையின் - சொல்லும் புகழினோடு , முற்றும் - உலகை வளைப்பதாகிய , ஒளி பெற்ற - ஒளியைப்பெற்ற கயிலாயமலை . தன்னைச் சார்ந்தவர்களை அழிப்பது அறமா ? மலையிற்கிடக்கும் மணிகள் ஒளியிழந்தனவே தன்னொளியால் அவ்வாறு செய்த இம்மலை குற்றமில்லாதது ஆகுமா ? என்பது மூன்றாம் அடியின் பொருள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

சிங்கவரை மங்கையர்க டங்களன செங்கைநிறை கொங்குமலர் தூய்
எங்கள் வினை சங்கையவை யிங்ககல வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிரு ணொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை தங்குகயி லாயமலையே.

பொழிப்புரை :

சிங்கங்கள் வாழ்கின்ற மலைகளிலுள்ள வித்தியாதர மகளிர் தங்கள் சிவந்த கைகளால் தேந்துளிக்கும் , நறுமணம் கமழும் மலர்களைத் தூவிப் போற்றி , ` எங்கள் வினைகளும் , துன்பங்களும் அகலுமாறு அருள்புரிவீராக ` என்று அங்கமாய் மொழியும் தோத்திரங்கள் எங்கும் ஒலிக்க , சந்திரனிடத்துள்ள குறையைப் போக்கி ஒளிமிகும்படி செய்து , மாலையோடு பக்கத்திலே கங்கையையும் மிகுந்த சடையிலே தாங்கி எங்கள் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

சிங்கம் - சிங்கங்களையுடைய . வரை - மலையில் வாழும் , மங்கையர்கள் - வித்தியாதர மகளிர் முதலியோர் . தங்களன - தங்களுடைய , செங்கை - சிவந்த கைகளில் , நிறை - நிறைந்த , கொங்குமலர் - வாசனை பொருந்திய . மலர்களை . தூய் - தூவி , எங்கள் வினை - எங்கள் வினைகளும் . சங்கையவை - துன்பங்களும் . இங்கு அகல - இங்கு விலகுவது ஆக என்று , அங்கம் - அங்கமாக , மொழி - மொழியும் தோத்திரங்கள் . எங்கும் உள ஆய் - எல்லாப் பக்கங்களிலும் உள ஆகி . திங்கள் - சந்திரன் , இருள் நொங்க - இருள் கெட , ஒளி வீங்கி - ஒளி மிகுந்து , மிளிர் - விளங்குகின்ற , தொங்கலொடு - மாலையோடு , தங்க - தங்கவும் , அயலே - பக்கத்தில் , கங்கையோடு - கங்கா நதியோடு , பொங்கும் - மிகுந்த , சடை - சடையையுடைய , எங்கள் இறை - எங்கள் தலைவன் , தங்கும் - தங்கும் கயிலாயமலை , விங்கி - குறுக்கல்விகாரம்

பண் :சாதாரி

பாடல் எண் : 4

முடியசடை பிடியதொரு வடியமழு வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி நொடியமகி ழடிகளிடமாம்
கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிரக்
கடியகுர னெடியமுகின் மடியவத ரடிகொள்கயி லாயமலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் தலையில் சடைமுடியையும் , கையில் கூரிய மழுவையும் உடையவர் . வெறுக்கத்தக்க கொலைத் தொழிலை உடைய அசுரர்களை அழித்தவர் . பிச்சையேற்றுத் திரியும் அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் இடபத்தின் கனத்த குரலும் , யானையின் பிளிறலும் இணைந்து மிகுந்த ஓசையுடன் , மேகங்களின் இடிமுழக்கத்தை அடக்கி அடிவாரம்வரை செல்லும் திருக்கயிலாயமலையாகும் .

குறிப்புரை :

முடிய - தலையில் உள்ளதாகிய . சடை - சடையையும் . பிடியது - கையில் பிடிப்பதாகிய . வடிய - கூரிய . ஒரு மழு உடையர் - ஒரு மழுவையும் உடையவர் . செடியுடைய தலையில் - புதர்போன்ற தலையோடு . வெடிய - வெறுக்கத்தக்க . வினை - கொலைத் தொழிலையுடைய . கொடியர் - கொடியோராகிய , அசுரர்கள் . கெட - கெடவும் . இடு - இடுகின்ற . சில் - சில . பலி - பிச்சைக்காக . நொடிய - சில வார்த்தைகளைப் பேசவும் . மகிழ் - விரும்புகின்ற , சிவபெருமானின் இடமாம் . கொடிய குரல் - கொடிய குரலை உடைய . விடை - இடபங்கள் . கடிய - வேகத்தையுடைய . துடியடியினொடு - யானைக் கன்றுகளுடனே . இடியின் - இடியைப்போல . அதிர - ஒலிக்க . ( அதனால் ) கடிய குரல் - மிக்க ஓசையையுடைய . நெடிய முகில் - விரிவாகிய மேகங்கள் . மடிய - தமது ஒலி கெட . அடி - தாள் வரையின் இடத்தில் . அதர்கொள் - செல்லும் , கயிலாயமலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு விடங்கன திடந்தண் முகில்போய்த்
தடங்கட றொடர்ந்துட னுடங்குவ விடங்கொளமி டைந்தகுரலால்
கடுங்கலின் முடங்களை நுடங்கர வொடுங்குகயி லாயமலையே.

பொழிப்புரை :

உள்ளங்கையில் நெருப்பானது எரிய , படம் கொண்டு ஆடுகின்ற பாம்பானது ஒளிர்ந்து திருமேனியில் படர , நடனம் புரியும் பேரழகரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மேகங்கள் கடல்நீரை முகந்து , மேலே சென்று எல்லா இடங்களிலும் பரவி , இடிமுழக்கத்துடன் மழை பொழிய , அந்த இடியோசை கேட்ட மெலிந்த நாகம் வளைந்த புற்றிலே பதுங்குகின்ற திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

குடங்கையின் - உள்ளங்கையிலே . நுடங்கு - ஒசிந்து . எரி - அக்கினி . தொடர்ந்து - விடாது . எழ - பிரகாசிக்க . விடம்கிளர் - நஞ்சு மிகுந்த . படங்கொள் - படத்தைக் கொண்ட . அரவம் - பாம்பின் ( தலையில் உள்ள நாகரத்தினத்தினால் ) மடங்கு - ஏனைய ஒளிகள் மடங்கும் ; ஒளிபடர்ந்திட - ஒளி பரவ , நடம்தரு - ஆடும் விடங்கனது இடம் - பேரழகுடைய சிவபெருமானின் ( இடமாவது ) தண் முகில் - குளிர்ச்சி பொருந்திய மேகங்கள் . போய் - சென்று . தடங்கடல் - அகன்ற கடலை . தொடர்ந்து - பற்றி ( நீர் உண்டு ). உடன் - உடனே . நுடங்குவ - தவழ்வன . இடங்கொள - எல்லா இடங்களும் கொள்ளும்படி . மிடைந்த - நெருங்கிய . குரலால் - இடியின் ஓசையினால் . கடுங்கல்லின் - விளக்கம் மிகுந்த மலைச்சாரலிலே . முடங்கு - வளைவான . அளை - வளையிலே . நுடங்கு அரவு - மெலிந்த பாம்பு . ஒடுங்கு - பதுங்குகின்ற ; கயிலாயமலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

ஏதமில பூதமொடு கோதைதுணை யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற வாதுபயி னாதனகர்தான்
தாதுபொதி போதுவிட வூதுசிறை மீதுதுளி கூதனலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோதுகயி லாயமலையே.

பொழிப்புரை :

குற்றமில்லாத பூதகணங்கள் சூழ்ந்திருக்க , உமாதேவியைத் துணையாகக் கொண்டு , ஆதிமூர்த்தியாகிய சிவபெருமான் , வேதங்களை இசையோடு பாடியருளி , அதன் பொருளையும் விரித்து , நீதிக்கருத்துக்கள் பலவற்றையும் ஓதியவன் . தேவர்களாலும் , முனிவர்களாலும் , அடியவர்களாலும் நாள்தோறும் மறவாது வணங்கப்படும் தலைவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மகரந்தப் பொடிகளைத் தன்னுள் அடக்கிய அரும்பு மலர , தேனை ஊதி உறிஞ்சிய சிறகுகளையுடைய வண்டுகள் தம்மேல் சிதறிய தேன்துளிகளால் குளிர் வருத்த , அன்புமிக , ஒளிர்கின்ற , அழகிய குயில்கள் தளிர்களைக் கோதும் திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

ஏதமில - குற்றமில்லாதனவாகிய . பூதமொடு - பூதங்களோடு . கோதை - அம்பிகைக்கு , துணை - துணையாகிய , ஆதி முதல் - பழமையாகிய முதற்கடவுள் . வேதவிகிர்தன் - வேதத்திலே எடுத்துக் கூறப்படும் . வேறுபட்ட தன்மையையுடையவன் . ஓதி - ஓதி அருளியவன் . மறவாது பயில் நாதன் - தேவர் முனிவர் முதலியோர் தன்னை மறவாமல் நாடோறும் வந்து வணங்கப் பெற்ற தலைவனாகிய சிவபெருமானது ; நகர்தான் - தலமாவது . தாது - மகரந்தப்பொடிகளை , பொதி - அடக்கிய , போது - அரும்புகள் . விட - மலர , ஊது - ஊதுகின்ற , சிறை - சிறகுகளையுடைய வண்டுகள் . மீது - தமது மேல் சிதறிய . துளி - தேன்துளிகளால் , கூதல் - குளிர் . நலிய - வருத்த ( வும் ) காதல் மிகு - ( அச்சோலையின் கண்ணே தங்குவதற்கு ) அன்பு மிகும் , சோதி கிளர் - ஒளி பிரகாசிக்கின்ற , மாது பயில் - அழகுதங்கிய , கோது - குயில்கள் தளிர்களைக்கோதும் ; கயிலை மலையே .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடு மொன்றியுடனே
நின்றமர ரென்றுமிறை வன்றனடி சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் னின்றகயி லாயமலையே.

பொழிப்புரை :

நன்மக்கள் ஐம்புலன்களையும் வென்றவர்களாய் குறுமயிர் பொருந்திய தலைகளையுடைய பூதகணங்களோடு சேர்ந்து , தேவர்களும் உடன்நிற்க எக்காலத்தும் இறைவனின் திருவடிகளை வணங்குகின்ற நகர் , கொத்தாக மலரும் பொன்போல் விளங்கும் கொன்றை மலர்களின் நறுமணம் தென்றற்காற்றோடு பரவ , இள யானைக்கன்றுகளும் , பெண் யானைகளும் , ஆண் யானைகளும் மலையின் முற்பக்கங்களில் உலவுகின்ற திருக்கயிலாயமலையாகும் .

குறிப்புரை :

சென்று - பகைவர் இருக்குமிடம் போய் . பல - பல போர்களிலும் , வென்று - செயித்து . உலவு - திரிகின்ற , புன் தலையர் - குறு மயிர்கள் பொருந்திய தலையுடையவர்களாகிய பூதகணங்களின் ; துன்றலொடும் - கூட்டத்தொடும் , ஒன்றி - சேர்ந்து . உடனே நின்று - ஒரு சேர நின்று , அமரர் தேவர்கள் சென்று - போய் என்றும் எக்காலத்தும் ; இறைவன் தன் அடி - கடவுளின் பாதங்களை - பணிகின்ற , வணங்குகின்ற , நகர்தான் - தலமாவது . துன்றும் - கொத்தாகப் பொருந்திய , மலர் - பூக்கள் , பொன் - பொன்னைப் போல , திகழ் செய் - விளங்குகின்ற , ( கொன்றை மாலையின் ) விரை - வாசனை , ( தென்றற்காற்றொடு ) சென்று - பரவி , கமழ - மணக்க , கன்று - கன்றுகளும் , பிடி பெண்யானைகளும் , துன்று - நெருங்கிய . களிறு - ஆண் யானைகளும் , என்று இவை இத்தகைய மிருகங்கள் ; முன்நின்ற - மலையின் முற்பக்கங்களிலே நிற்கின்ற ; கயிலாயமலை . புன்தலையர் ` புன்றலைய பூதப்பொருசடையாய் ` என்னும் திருமுருகாற்றுப்படை ( தி .11) வெண்பாவாலறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை யொருக்குட னரக்கனுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலு நெருக்கென நிருத்தவிரலால்
கருத்தில வொருத்தனை யெருத்திற நெரித்தகயி லாயமலையே.

பொழிப்புரை :

தந்தத்தில் நெருப்புப்பொறி பறக்க , மலையோடு கர்வத்துடன் போர்செய்த பருத்த யானையைப் போல , கயிலை மலையில் சிவபெருமான் வீற்றிருத்தலைப் பொருட்படுத்தாது , இராவணன் அதனைப் பெயர்க்க முயல , ஒப்பற்ற உமாதேவி அஞ்சவும் , சிவபெருமான் நடனம்புரியும் தன் காற்பெருவிரலை ஊன்றி அறிவற்ற இராவணனின் கழுத்து முறியும்படி செய்த கயிலாயமலையே சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாகும் .

குறிப்புரை :

பொருப்பிடை - மலையில் , விருப்புற - ஆசையோடு , இருக்கையை - பெருமான் வீற்றிருத்தலை , அரக்கன் உணராது - இராவணன் பொருட்படுத்தாமல் , மருப்பிடை - தந்தத்தில் , நெருப்பெழு - அக்கினிப்பொறி கக்கும்படியாக , செரு - போரை , தருக்கொடு - கர்வத்துடன் செய்த , பருத்தகளிறின் - பருத்த யானையைப் போல , ( மலையொடு பொருதமால் யானையைப்போல எடுக்கலுற்று ) ஒருத்தியை - ஒப்பற்றவளாகிய உமாதேவியை , வெருக்குற - அச்சம் உறும்படி . ஒருக்கு - ஒருங்கு . உடன் - உடனே , வெருட்டலும் - அஞ்சச் செய்த அளவில் , நிருத்தவிரலால் - நடம்புரியும் விரல் ஒன்றினால் , கருத்தில ஒருத்தனை - அறிவற்ற ஒருத்தனாகிய அவ்விராவணனை : எருத்துஇற - கழுத்து முறியும்படி , நெருக்கென - நெருக்கென்று . நெரித்த - முறித்து அரைத்த ; கயிலாய மலையே . பெருமான் இடமாகும் என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பரியதிரை யெரியபுனல் வரியபுலி யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு புரிவினவர் பிரிவினகர்தான்
பெரியவெரி யுருவமது தெரியவுரு பரிவுதரு மருமையதனால்
கரியவனு மரியமறை புரியவனு மருவுகயி லாயமலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் நெருப்பையும் , பெரிய அலைகளையுடைய கங்கையையும் கொண்டவர் . வரிகளையுடைய புலித்தோலை ஆடையாக அணிந்தவர் . கீற்றுக்களையுடைய வளையல்களை அணிந்த செவ்வரி படர்ந்த கண்களையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிவில்லாது வீற்றிருந்தருளும் இடமாவது , சிவபெருமான் பெரிய சோதிப்பிழம்பாய் நிற்க அதன் அடியையும் , முடியையும் தேடத்தொடங்கிக் காண்பதற் கரியதாய் விளங்கியதால் நீலநிறத் திருமாலும் , அருமறைகள் வல்ல பிரமனும் தவறுணர்ந்து மன்னிப்பு வேண்டும் பொருட்டுப் பொருந்திய திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

பரிய திரை - பருத்த அலைகளையுடைய , எரிய - அக்கினி தோன்றுவதற்கு இடமாகிய , புனல் - கங்கைநீரும் , வரிய - வரிகளையுடைய , புலியுரியது - புலியின் தோலாகிய , உடை - ஆடையையும் , ( கொண்ட ) பரிசையுடையான் - தன்மையையுடையவன் . வரிய - கீற்றுக்களையுடைய , வளை - வளைகளையணிந்த , அரிய - செவ்வரியுடைய , கணி - கண்ணி ( உமாதேவியாரின் ) உருவின் ஒடு - உடம்போடு , புரிவின் அவர் - கலத்தலையுடைய அச் சிவபெருமான் ; பிரிவு இல் நகர்தான் - பிரியாத தலமாவது , பெரிய - மிகப்பெரியதாகிய , எரி உருவம் அது - தீயாகிய வடிவத்தை , தெரிய - தேடத் தொடங்க , உரு - அவ்வடிவம் . பரிவு தரும் - துன்பத்தைத் தரக்கூடிய , அருமை அதனால் - அரிய தன்மை உடைமையினால் , கரியவனும் , - திருமாலும் , ( அரிய ) மறை - வேதத்தை . புரியவனும் - விரும்புகின்ற பிரமனும் , மருவு - ( மன்னிப்பு வேண்டும் பொருட்டு ) பொருந்திய கயிலாய மலையே .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

அண்டர்தொழு சண்டி பணி கண்டடிமை கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர சண்டவிருள் கண்டரிடமாம்
குண்டமண வண்டரவர் மண்டைகையி லுண்டுளறி மிண்டுசமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி யாதகயி லாயமலையே.

பொழிப்புரை :

தேவர்களும் தொழுது போற்றும் சண்டேசுவர நாயனாரின் சிவவழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து ஆட்கொண்டவர் சிவபெருமான் . பிறைச்சந்திரனை இண்டைமாலையால் அலங்கரிக்கப் பட்ட சடைமுடியில் தரித்தும் , மண்டையோட்டை மாலையாக அணிந்தும் , கடிய இருள் போன்ற கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , குண்டான சமணர்களும் , கையிலேந்திய மண்டையில் உணவு உண்டு திரியும் புத்தர்களும் , அச் சமயங்களைக் கண்டவர்களும் , அநுட்டிப்போர்களும் முன்பு அறியாத திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

அண்டர் தொழு - தேவர்கள் வணங்கக் கூடிய , சண்டி - சண்டேசுவர நாயனாரின் , பணி கண்டு - வழிபாட்டைக் கண்டு , அடிமை கொண்ட - ஆட்கொண்ட , இறை - கடவுளும் , துண்டம் - துண்டாகிய , மதியோடு - பிறைச் சந்திரனோடு , இண்டை - இண்டை மாலையால் . புனைவு உண்ட - அலங்கரிக்கப்பட்ட . சடை - சடையினிடத்தில் , முண்டதர - நகுவெண்டலையைத் தரித்தருளியவரும் , சண்ட இருள் - கடிய இருள் போன்ற , கண்டர் - கழுத்தையுடைய வரும் , ஆகிய சிவபெருமானின் இடமாம் . குண்டு அமணவண்டர் அவர் - மூர்க்கத்தனத்தையுடைய சமணர்களாகிய கீழ் மக்களும் , மண்டைகையில் உண்டு - கையில் ஏந்திய மண்டையில் உணவு உண்டு , உளறி - உளறித்திரிந்து , மிண்டு - ஏமாற்றுகின்ற , சமயம் - சமயங்களை , கண்டவர்கள் - அறிந்தவர்களும் , கொண்டவர்கள் - அநுட்டிப்போரும் , பண்டும் அறியாத - அக்காலத்திலும் அறியாத கயிலாயமலையே .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

அந்தண்வரை வந்தபுன றந்ததிரை சந்தனமொ டுந்தியகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழி சைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே.

பொழிப்புரை :

அழகிய , குளிர்ச்சி பொருந்திய மலையிலிருந்து விழும் நீரின் அலைகள் சந்தனம் , அகில் இவற்றை உந்தித் தள்ள , நறுமணம் கமழும் மலர்க் கொத்துக்களோடு குரங்குக் கூட்டங்கள் சிதறும் திருக்கயிலாயமலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , சந்த இசையோடு செந்தமிழில் திருப்புகலியில் அவதரித்த திருஞானசம்பந்தர் அருளிச்செய்த இத்திருப் பதிகத்தை மனத்தால் சிந்தித்து , வாயால் ஓத வினையாவும் நலியப் பரலோகம் எளிதில் பெறக்கூடும் .

குறிப்புரை :

அம் தண் - அழகிய குளிர்ந்த , வரை வந்த புனல் தந்த - மலையில் வரும் அருவிகளில் உண்டாகிய , திரை - அலைகள் , சந்தனமொடு - சந்தனக் கட்டைகளோடு , உந்தி - தள்ளிக் கொண்டு வந்து , அகில் - அகில் கட்டைகளும் , கந்த மலர் - வாசனை பொருந்திய மலர்களின் , கொந்தினொடு - கொத்தோடும் , மந்தி பல - பல குரங்கின் கூட்டங்கள் , சிந்து - சிதறும் ; கைலாய மலையின்மேல் . எந்தையடி - எமது தந்தையாகிய சிவபெருமானின் திருவடியை , வந்து அணுகும் - வந்து சேர்ந்த ; சந்தமொடு - வழி மொழித் திருவிராகமாகிய சந்த இசையோடு , ( செந்தமிழ் இசைத்த ); புகலி - சீர்காழியில் அவதரித்த , பந்தன் உரை - திருஞானசம்பந்தமூர்த்திகள் அருளிச் செய்த இப்பாடல்களை , சிந்தை செய - தியானிக்க , வந்த வினை - துன்புறுத்த வந்த பிணிகள் , நைந்து - கெட்டு , ( அதனால் ) பரலோகம் எளிது - பரலோகம் எளிதில் பெறக்கூடியதாகும் .
சிற்பி