திருவானைக்கா


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவி லின்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத மில்லையே.

பொழிப்புரை :

வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச் சடையில் தாங்கி , தேன் போன்ற இனிய மொழிபேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு , திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக வாழ்பவர்கட்குத் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல் பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் எதுவும் இல்லை .

குறிப்புரை :

வானை - செவ்வானத்தை ; கா - காத்திருத்தல்போல . வெண் மதி , மல்கு - ஒளிமிகும் . புல்கு - பொருந்திய . வார்சடை , செவ்வானம் சடைக்கு உவமை . கா - முதனிலைத் தொழிற்பெயர் . இல் - ஐந்தன் உருபு ஒப்புப்பொருள் . தேனைக்காவில் இன்மொழி - தேனைக் கலந்துள்ள இனிமைதங்கிய மொழி . ( காவில் காவுதலில் உள்ள இனிமை . காவுதல் - கலந்திருத்தல் ). அபயம் - சரண் ; புகலிடம் ` வார்தல் , போகல் , ஒழுகல் மூன்றும் , நேர்பும் , நெடுமையும் செய்யும்பொருள ` என்பது தொல்காப்பியச் சூத்திரம் ( சொல் . சூத் . 317. ) ஏனைக்காவல் வேண்டுவார் . ஏதம் - தம்மைத்தாமே காத்துக்கொள்ள முடியாமற் பிற துணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் . ஏதும் - எதுவும் , ஆனைக்காவில் அண்ணலைச் சரணாக வாழ்பவருக்கு இல்லை . வாழ்பவர் - நான்கன் உருபுத்தொகை . ` ஐந்தவித்தான் ஆற்றல் ` என்புழிப்போல ( திருக்குறள் ) பாடபேதம்: வானைக்காவல்

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவி லண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாத மேத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே.

பொழிப்புரை :

சேறுடைய குளிர்ச்சி பொருந்திய வயல் வளம் பெருகுமாறு , நெடுந்தொலைவு சென்று ஓடிவரும் காவிரி ஆற்றின் துறையில் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாகிய சிவபெருமான் , திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர் . ஒப்பற்ற அப்பெருமானின் திருவடிகளைப் போற்றுபவர்கள் , சிந்தை முதலிய பசுகரணங்கள் , பதி கரணங்களாக மாறியவர்களாய் , முத்தியின்பம் பெறுவதற்குரிய சிவஞானம் கைகூடப் பெற்றவர்கள் ஆவர் .

குறிப்புரை :

சேண் உலா - நெடுந்தூரத்திலிருந்து உலாவி வருகின்ற ; ஆறு . சென்று சென்று - பலதரமும் சென்று . சிந்தை முதலிய பசு கரணங்கள் . பதிகரணங்களாக மாறியவராய் விண்ணில் எண்ண வல்லர் - முத்தியின்புற்றோராய்க் கருதத்தக்கவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

தாரமாய மாதரா டானொர்பாக மாயினான்
ஈரமாய புன்சடை ஏற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவி லண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

பொழிப்புரை :

தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான் . கங்கையைத் தாங்கிய சடை முடியில் சந்திரனையும் சூடியவர் . சோழ அரசனின் வேண்டுகோளுக்கிணங்க , அவனது தொலைந்த இரத்தின மாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர் . திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை அன்புடன் வணங்குவார்களின் தீவினைகள் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

வாரம் - உரிமை . ஆரம் ஆய மார்பு - என்றது , உறையூர்க் காவிரித் துறையில் நீராடிய சோழ அரசர் ஒருவர் தமது இரத்தின ஆரம் ஆற்றில் நழுவியதையறிந்து இவ்வணிகலன் ஆனைக்காவில் அண்ணலுக்கு ஏற்பதாகுக என்றனராக இங்குத் திருவானைக்காத் திருமஞ்சனத்துறையில் நீர் சுமந்தோர் இறைவனுக்கு விட்ட அந்நீரோடு அந்தமணி ஆரம் இறைவர் திருமார்பில் விழ ஏற்றனர் என்னும் வரலாறு ` ஆரம் நீரொடேந்தினான் ஆனைக்காவு சேர்மினே ` என வருவதும் காண்க . ( தி .3 ப .5. பா .7)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

விண்ணினண்ணு புல்கிய வீரமாய மால்விடைச்
சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான்
அண்ணல்கண்ணொர் மூன்றினா னானைக்காவு கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்று மில்லையே.

பொழிப்புரை :

வானில் நண்ணிச்சென்று முப்புரம் எரித்தபோது திருமால் இடபமாகத் தாங்கினான் . இறைவன் திருவெண்ணீறு அணிந்தவன் . சூலமேந்திய கையினன் . மூன்று கண்களையுடைய மூர்த்தியான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்காவைக் கைதொழ எண்ணும் அன்பர்கட்குத் தீமை எதுவும் இல்லை .

குறிப்புரை :

விண்ணின் நண்ணு - வான்வழியாக வருகின்ற . புல்கிய வீரம் ஆய - பொருந்திய வீரத்தையுடைய , மால்விடை . கைதொழ வல்லவர்க்கும் - ( எண்ணும் வண்ணம் ) தியானிக்குமாறு வல்லவர்க்கும் தீங்கு எதுவும் நேராது என்பது இப்பாடலின் இறுதிப் பகுதியின் பொருள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்க ளாண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு சேர்மினே.

பொழிப்புரை :

கொடிய பாவமானது விலக வேண்டும் என்று விரும்புகிற அன்பர்களே ! தேவர்களைக் காத்து அருள்புரிந்த நஞ்சுண்ட இருண்ட கண்டத்தினனும் , வெப்ப மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற அன்புடையவனும் , அன்றலர்ந்த கொன்றை மலரைக் கொய்து தலையிலணிந்தவனுமான எம் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

வெய்ய , தீ மாலையாடு காதலான் - தீயிற் காதலோடு ஆடும் இயல்புடையவன் . மாலை - இயல்பு ( தொல் - சொல் ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
ஆணும்பெண்ணு மாகிய வானைக்காவி லண்ணலார்
காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொண்மிடற னல்லனே.

பொழிப்புரை :

அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத பிறர் நாணத்தக்க நாணமும் , பதியை ஓர்ந்து அறிதலும் , அறிந்தபின் சார்ந்திருத்தலும் , சார்தலினால் மகிழ்ச்சியும் , மனத்தை அடக்கி உள்கித் தியானம் செய்தலுமாகிய நன்மையும் உடையவர்களாய் , எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் கொண்ட அடியவர்கள் கொண்டாடிப் பேசத்தக்க தன்மையை உடைய , சிவபெருமான் ஆணும் , பெண்ணும் சேர்ந்ததாகிய அர்த்தநாரித் திருக்கோலத்தில் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாய் மூன்று கண்களையுடையவராய் விளங்குபவர் அல்லரோ ?

குறிப்புரை :

நாணும் ஓர்வு - பிறர் நாணத்தக்க ஞானமும் , சார்வும் - எவருக்கும் பற்றுக் கோடாதற்குரிய ஐசுவரியமும் . முன்நகையும் - எவருக்கும் முற்பட்ட மகிழ்ச்சியை விளைக்கும் புகழும் . உட்கும் - எவரும் அஞ்சத்தக்க வீரியமும் , நன்மையும் திருவும் . பேண் உறாத செல்வமும் - எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் . ஆகிய இவ்வாறு குணங்களையும் ; பேசநின்ற - அடியவர் கொண்டாடிப் பேசத்தக்க . பெற்றியான் - தன்மையை உடையவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

கூருமாலை நண்பகற் கூடிவல்ல தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை செஞ்சடை
ஆரநீரொ டேந்தினா னானைக்காவு சேர்மினே.

பொழிப்புரை :

காலை , மாலை , நண்பகல் முக்காலங்களிலும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் ஒன்று கூடி , இறைவனின் திருநாம மகிமைகளையும் திருத்தலங்களின் சிறப்புக்களையும் , அவன் அருட்செயல்களையும் போற்றிப் பேச விளங்கும் தன்மையன் சிவபெருமான் . பூவுலகத்தோரும் , விண்ணுலகத்தோரும் கைதொழுது வணங்கக் கங்கையைச் செஞ்சடையில் தாங்கியுள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மாலை , நண்பகல் கூறவே ஏனைக்காலையும் அடங்கிற்று , முப்பொழுதிலும் என்க . ` முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தியவனிருக்கும் வண்ணங்கேட்டாள் , பின்னையவனுடைய ஆரூர்கேட்டாள் ` என்ற அப்பர் வாக்கோடு இரண்டாமடி யொத்திருத்தல் காண்க . கங்கை நீரோடு செஞ்சடை ஆர ஏந்தினான் என்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை யானைக்காவி லண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழ றுன்னவல்லர் விண்ணையே.

பொழிப்புரை :

இலக்குமி வீற்றிருந்தருளும் தாமரை மலரில் வண்டினம் ரீங்காரம் செய்யவும் , அன்னப்பறவைகள் வைகும் குளிர்ந்த நீர்நிலைகளின் துறைகலை உடைய திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை நான்கு வேதங்களிலுமுள்ள பாடல்களைப் பாடி , அவன் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கள் இப்பூவுலகின்கண் குறைவற்ற செல்வராய்த் திகழ்வதோடு மறுமையில் விண்ணுலகை ஆள்வர் .

குறிப்புரை :

பொன்னம் - இலக்குமி . தனிமொழியும் சாரியை பெற்றது . திருவடியை நினைக்கும் தன்மைவல்லர் ஆவார் விண்ணையும் அடைய வல்லர் ஆவார் . ( விண் - முத்திப்பேறு ) என்றது ஈற்றடியின் பொருள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

ஊனொடுண்ட னன்றென ஊனொடுண்டல் தீதென
ஆனதொண்ட ரன்பினாற் பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்று
ஆனொடஞ்சு மாடினா னானைக்காவு சேர்மினே.

பொழிப்புரை :

ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் நன்று என்று சுவைமிகுந்த இறைச்சியைப் படைத்த கண்ணப்பநாயனாரின் அன்பிற்கும் , ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் அபசாரம் அது தீது என மருண்ட சிவகோசரியார் அன்பிற்கும் கட்டுண்ட தன்மையினனும் , பிறைச்சந்திரனைச் சடையில் சூடி , சத்தியப் பொருளாக என்றும் நிலைத்து நின்று , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப் படுகின்றவனுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தைச் சார்ந்து அவனை வழிபட்டு உய்யுங்கள் .

குறிப்புரை :

மூதலீரடி கண்ணப்பநாயனார் வழிபாட்டையும் , சிவகோசரியர் வழிபாட்டையும் குறிப்பன . வானொடு ஒன்று - வானில் பொருந்துதலையுடைய ( மதியை ) சூடினான் . ஒன்று - ஒன்றுதலையுடைய மதிக்கு ஆனது தொழிலாகு பெயர் . ஆனோடு அஞ்சு - மூன்றனுருபு ஆறன் பொருளில்வந்த வேற்றுமை உருபு மயக்கம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

கையிலுண்ணுங் கையருங் கடுக்கள்தின் கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை யறிகிலார்
தையல்பாக மாயினான் றழலதுருவத் தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு சேர்மினே.

பொழிப்புரை :

கையில் உணவு வாங்கி உண்ணும் சமணரும் , கடுக்காய்களைத் தின்னும் புத்தர்களும் , மெய்ப்பொருளாம் இறைவனை உணராது பொய்ப்பொருளாம் உலகியலைப் பற்றிப் பேசுபவர்களாய் வேதநெறியை அறியாதவர்கள் . எனவே அவர்களைச் சாராது , உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும் , நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியை உடையவருமான எங்கள் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து அவரை வழிபட்டு உய்யுங்கள் .

குறிப்புரை :

கடுக்கள் - கடுக்காய்கள் . கழுக்கள் - கழுந்து போல்வார் . மெய்யைப்போர்க்கும் பொய்யர் , உடம்பைப் போர்வையாற் போர்ப்போர் எனவும் , பொய்யை மெய்யாக நடிப்போர் எனவும் பொருள்தரும் . சிலேடை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

ஊழியூழி வையகத் துயிர்கடோற்று வானொடும்
ஆழியானுங் காண்கிலா வானைக்காவி லண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகண் மாயுமே.

பொழிப்புரை :

ஊழிக்காலந்தோறும் உயிர்களுக்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைக்கின்ற பிரமனும் , திருமாலும் இறைவனின் முடியையும் , அடியையும் தேடிச்சென்றும் காண்பதற்கு அரிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானைச் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை மண்ணில் நல்ல வண்ணம் வாழக் கற்று ஓதவல்லவர்களின் கொடியவினையாவும் மாய்ந்தழியும் .

குறிப்புரை :

ஊழிக்காலம் தோறும் , உயிர்கள் தோற்றுவான் - உயிர்களுக்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைப்பவன் . வாழி - வாழ்வு தருவது . இகரம் கருவிப் பொருளில் வந்தது . பதிகக் குறிப்பு எட்டாம் பாடலில் இராவணன் செயல் குறிக்கப் பெறாமலும் , ஒன்பதாம் பாடலில் வரும் அரி , பிரமர் செயல் திருக்கடைக்காப்பில் வரப்பெறவும் அமைந்துள்ளது .
சிற்பி