திருவரசிலி


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல்
ஆடன் மாசுண மசைத்த அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று சூழும் கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும் புனலை உடைய கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம் பூ ஆகியன குலவி விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை மாலை மருவ, இடையில் புலித் தோலை உடுத்தித் தோள்மேல் பாம்பைச் சுற்றிக் கொண்டுள்ள அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.

குறிப்புரை :

செஞ்சடையில் குலாவுவன - கொன்றை, பிறை, கங்கை. கோடல் (வெண்காந்தள்), கூவிள (-வில்வ) மாலை, ஊமத்தம்பூ. தலைமாலை. வல்லி - உமாதேவியார். மாசுணம் - பாம்பு. நிலத்திலூர்ந்தும் புரண்டும் மாசு உண்ணுங் காரணத்தாற்பெற்ற பெயர். அழுக்கு அடையும் ஆடைக்கு மாசுணி என்ற பெயர் உள்ளமை அறிக. `பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்` (ஆசாரக்கோவை,) `வல்லியந் தோல்` என்றிருந்து, லகரம் ளகரம் ஆகிய பிழைபோலும். வல்லியம் - புலி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
வேறு செய்தத னுரிவை வெண்புலால் கலக்கமெய் போர்த்த
ஊறு தேனவ னும்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

விடையேற்றினை விரும்பி ஏறி, இளமையும் மதமும் உடையதாய்த் தம்மை எதிர்த்து வரும் யானையை உதைத்துக் கொன்று அதன் தோலை வெண்புலால் உடலிற் கலக்குமாறு மேனிமீது போர்த்தவரும், அடியார் சிந்தனையுள் ஊறும் தேனாக விளங்கு பவரும், தேவர்களால் போற்றப்படும் ஒருவரும், ஒளி பொருந்திய சுடராகத் திகழ்பவரும், கங்கை சூடிய சென்னியரும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.

குறிப்புரை :

களிறு:- களிப்புடையது என்னுங் காரணப் பொருட்டாய், ஆண் யானையைக் குறிப்பது. உரிவை - தோல், புலால் கலக்க மெய்யிற்போர்த்த இனியன். யானையை உரித்துப் போர்த்தவன் இன்னாதவன் என்று கொள்ளுதல் பொருந்தாமை உணர்த்த. ஊறுதேனவன் (-`சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும்` இனியவன்) என்றருளினார். ஆணவமல நாசஞ்செய்வதே யானையுரி வரலாற்றின் தாற்பரியம். உம்பர்க்கு ஒருவன் - `அமரரால் அமரப்படுவான்`. சுடர் - சிவம். ஒளி - சத்தி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

கங்கை நீர்சடை மேலே கதமிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாகம் மருவிய கொல்லைவெள் ளேற்றன்
சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க்கருள் செய்து
அங்கை யாலன லேந்து அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

வேகத்தோடு வந்த கங்கை நீரைச் சடைமேல் தாங்கி ஒளியும் இளமையும் அழகும் பொருந்திய தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் `முல்லை` நிலத்துக்குரிய விடையேற்றை உடையவரும், ஐயுறவு கொண்டு வீண்பொழுது போக்காத தம்மடியவர்கட்கு அருள்புரிபவரும், அழகிய கையில் அனல் ஏந்தியவருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

கதம் - வேகம். வனம் - அழகு, சங்கை - சந்தேகம். அடியார்கள் ` நமக்கு ஆண்டவன் அருள்வானோ அருளானோ` என்னும் ஐயுறவுகொண்டு திரிந்து, வீண்காலம் போக்கும் அவப்பொழுது நேராது சிவப்பொழுது போக்குமாறு அவர்கட்கு அருள்வான் என்பது கருத்து. திரியாமே அருள்செய்து அனல் ஏந்தும் அடிகள் என்க. எருதேறித் திரியும் இறைவன் எனினும் அடியார்க்கு அருள்செய்யத் தவறான் என்றும். சங்கை - ஐயம். ஐயம் -பிச்சை. இரப்போர்க்கு இன்று நாம் இரப்பது சிறக்கக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயம்பற்றிய காரணப் பெயர். பிச்சைக்காரனாய்த் திரியும் ஒன்றே செய்யாமல் அடியார்க் கருள்வதையும் செய்து என்றும், பிச்சையெடுத்தாலும் அடியார்க்கு அருளும் பெருஞ்செல்வன் என்றும் கொள்ளும்பொருள் வலிந்து கொள்வனவேயாம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க வூரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை
அக்கி னாரமும் பூண்ட அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

அறநெறியோடு உயிர்களைக் கவரும் எமனை அழித்துத் காமன் உடல் நீறாகும்படி விழித்து, ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்டு, மார்பில் பொன்போலத் திகழும் கொன்றை மாலை, பூணூல் ஆகியவற்றையும், திருவெண்ணீற்றையும் அணிந்து ஆமை யோடு, என்புமாலை ஆகியவற்றைச் சூடிவரும் சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

மிக்ககாலன் - இன்னான் இனியான் என்று கருதாது, உரிய காலத்தில் கூறுபடுத்தும் அறத்தில் மேம்பட்ட தருமராசன். தக்கநூல் - வேதாந்தம் என்னத் தக்க பூணூல், நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்` (திருமந்திரம்). அக்கின் ஆரம் - எலும்புமாலை. இனமல்லாமையால் ஆமையோடும் உருத்திராக்க மாலையும் எனல் ஒவ்வாது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித்
தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி அடிகளுக் கிடமர சிலியே.

பொழிப்புரை :

மானும் கண்டு அஞ்சும் மடநோக்கினை உடைய மலை மகளை ஒருபாகமாக மருவியவரும் அஞ்சாது தன்னை எதிர்த்த முப்புரங்களைத் தழல் எழுமாறு அம்பெய்து அழித்தவரும், வான வரும் அஞ்சும் ஆலகாலப் பெருவிடத்தை உண்டருளியவரும், ஆனைந்தாடும் திருமுடியினருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

குறிப்புரை :

மான் அஞ்சும் மடநோக்கியாகிய மலைமகள், நோக்கி - (கண்ணி) நோக்கத்தையுடையவள். மானினது கண்போன்ற கண் என்னாது, அக்கண்ணினது நோக்கம் போன்ற நோக்கம் எனல் முன்னோர் கருத்து, மான்விழி` என்பதும் மான் கண் என்பதும் ஒன்றாகா, விழிப்பது விழி. கண்ணுவது கண்,
விழித்தல் - இமைதிறத்தல். கண்ணுதல் - மனம் கருதல். இமை திறந்தும் திறவாதும் கருதல் செய்யலாம். திறக்கக் கருதினாலன்றி இமைதிறத்தல் நிகழாது. வான் - வானோர், அசுரர்.ஓதி:- பெயர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய வவர்தமைக் கண்டு
அரிய வாரமு தாக்கும் அடிகளுக் கிடமர சிலியே.

பொழிப்புரை :

அமுதை விரும்பிய வானவர் வாசுகி என்னும் பெரிய பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்தரம் என்னும் மலையை மத்தாக நாட்டிப் பெரிய கடலைக் கலங்குமாறு கடைந்த போது அதனிடை, கருநிறமான ஆலகால விடம் தோன்றக் கண்டு அஞ்சிய அவர்களைக் கண்டு இரங்கி அதனை எடுத்துவரச் செய்து அரிய அமுதாக உண்டு வானவரைக் காத்தருளிய அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

பரிய - பெரிய. அரிய அமுது எனலே அமையும். `அரிய ஆரமுது` என்றது பெரிய பேராசிரியர் (மகாமகோபாத்தியார்) என்ற (ஆன்மாக்களின் அகங்காரத்தை வளர்க்கும்) பட்டப்பெயர் போல்வது. ஆருயிர் - காருடல் என்பனபோல ஆரமுதும் பண்புத் தொகை. அரிய:- நஞ்சு அமுது ஆதல் முன் இன்மை குறித்தது. ஆர் - முன் இல்லாத அஃது இப்பொழுது (அமுதாக்கிய சமயம்) விளங்கு தலைக் குறித்தது. அருமை - இன்மை, விளக்கம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடமர சிலியே.

பொழிப்புரை :

அழகிய கயிலை மலையைக் கீழ் மேலாகுமாறு புரட்ட முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்களும் தோள்களும் வாய்களும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

வண்ணமால்வரை - கயிலைமலை. மறித்திடல் - கீழ் மேலாக்குதல். கண், தோள், வாய் நெரிய என்க. கைந்நரம்பு - இராவணன் கையிலிருந்த யாழ். பண்ணின் பாடல் நரம்புக்கு அடை. பாடிய பாடல் - அந்நரம்பாற் பாடிய பாடல். அண்ணலாய் - நாளும் வாளும் அருளிய பெருமையிற் சிறந்தவனாகி; இன்னாசெய்தாற்கும் இனியவே செய்யும் பெருமையனாகி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

குறிய மாணுரு வாகிக் குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும், அழலுருவாய் ஒங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம் அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

குறிய மாணுரு - வாமனாவதாரம், `குறுமாணுருவன்` (தி.1 ப.101 பா.5. )வெறி - மணம். மெய்த்தவத்தோன் - பிரமன். செறிவு ஒணா- செறிதல் ஒன்றா. செறிதல் - பொருந்துதல். அறிவொணாவுருவம் - ஐம்பொறிகளாலும், மனாதியாலும், ஜீவபோதத்தாலும் அறிதல் ஒன்றாத ஞானசொரூபம்.
`பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம் பரனைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாதநீழற் கீழ்` நின்று அறியப்படும் திருவுருவம் அது. `அறிவினில் அருளான் மன்னி` (சித்தியார்).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை யார்தர நல்கும் அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

இளமையான மகளிர் இருப்ப அவரோடு கூடி வாழாது தலைமயிரைப் பறித்து முண்டிதராய்ச் சோற்று உருண்டை களைக் கையில் இரந்துண்டு பெற்று உண்பவர்களாகிய சமணரும் புத்தரும் சொல்லும் அவர்தம் சமயக் கொள்கைகளைக் கொள்ளல் வேண்டா. அடையத்தக்க பொருளானவரும், பொய்மையில்லாத வரும் உண்மையின் வடிவானவரும், தம் பொன்னடிகளை வணங்கு வார்க்கு அருளை நிரம்ப நல்குபவரும் ஆகிய சிவபிரானுக்குகந்த இடம் திரு அரசிலியே யாகும். அத்தலத்தை எய்தி வழிபடுங்கள்.

குறிப்புரை :

உண்பவர் - சமணர். சொல்லிய - சொன்னதம் சமயக் கொள்கைகளை. வினையாலணையும் பெயர். பொருள் - `உயர் பொருள்` (தி.1 ப.13 பா.5.) `உரமென்னும் பொருள்` (தி.7 ப.86 பா.5.) `பல்கலைப் பொருள்` (தி.7 ப.69 பா.10.) `மெய்ப்பொருள்` (தி.4 ப.74 பா.9.) `கொன்றைத் தொங்கலான் அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே` (தி.2 ப.41 பா.7.) என்றதால் ஆன்மாக் களுக்குப் பொருளாவது சிவபரம் பொருளே என்றறிக. குருளை என்பது ஈண்டு இளமையைக் குறித்தது. இளமகளிரை வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருந்தும், தலை மயிரைப் பறித்து விடுவது பொருத்தமாகாமையை உணர்த்துவதுடன், அதற்கு ஏதுவாவது அமிதபோஜனப்ரியம் என்றுங் குறித்தார்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி வைகலு மகிழ்ந்திருப் பாரே.

பொழிப்புரை :

நீர்ப் பூக்களை உடைய நீண்ட வயல்கள் சூழ்ந்த திரு அரசிலி இறைவனைப் போற்றிச் சீகாழிப் பதியில் தோன்றிய நல்ல ஞானசம்பந்தர் பாடியருளிய இத் திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர். வானுலகெய்தி அமரர்கள் தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர்.

குறிப்புரை :

அல்லி - அகவிதழ். (இரவில் பூக்கும் பூக்கள்) நற்றமிழ் - பிறவிப்பிணிக்கு மருந்தாகிய தமிழாகிய இத்திருப்பதிகம். `நாளும் சொல்ல வல்லவர் வைகலும் மகிழ்ந்திருப்பார்` ஒருநாள் தவறின் அன்று மகிழ்ந்திரார் என்பது அவரவர் அநுபவத்தால் உணரப் படும்.
சிற்பி