தென்திருமுல்லைவாயில்


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவிற்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும் , நடனமாடும் ஒளி பொருந்திய வடிவின னும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர் , களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தெளிவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத் தலம் ஆகும் .

குறிப்புரை :

துளி - விஷத்துளி . நிறம் :- ஈண்டுக் கருமை . தெளி - தெளிவு , தேறல் . ஊர் :- எழுவாய் . ( திருமுல்லைவாயிலாகிய ) இது :- பயனிலை , இதுவே அரனூர் எனலுமாம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு மரவிக்க நின்ற வரனூர்
உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி யவையோத மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும் , அயனைப்படைத்த பரமனும் , பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படு வோனுமாகிய அரனது ஊர் , உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பி களும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழு மையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயி லாகிய இத்தலமாகும் .

குறிப்புரை :

பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன் என்பது இரு வினை யொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப் பெற்று , குரு வருளால் சிவஞானம் வளரலுற்று , பழமலம் பற்றறுத்து , சிற்றறிவு தீர்ந்து , திருவடி அடையும் பருவத்தில் எழுந்தருளி வந்து , பயனாகப் பொருந்திய எண்குணத்தன் . அரவிக்க - ஒலிக்க . தெருவம் - தெரு . முத்து + அலை + கொள் எனப்பிரிக்க . அலை - அலைதல் . சங்கும் இப்பி யும் முத்துக்களை ஈன்ற குறிப்புணர்த்தப்பட்டது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

வாராத நாடன் வருவார்தம் வில்லின் உருமெல்கி நாளு முருகில்
ஆராத வின்ப னகலாத அன்பன் அருண்மேவி நின்ற வரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காத னெதிநேர நீடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன் , உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும் . இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பம் அருள்பவன் . அகலாத அன்புடையவன் . அத்தகைய அரன் அருள் செய்ய எழுந் தருளியுள்ள ஊர் , நீங்கா ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

வாராத நாடன் - மீண்டு வாராத பேரின்ப நாடுடைய வன் . வில்லின் உரு - வானவில்லைப்போலத் தோன்றி விரைந்து மறை யும் உடம்பு , ` வாங்குசிலைபுரையும் உடல் ` நால்வர் நான் மணிமாலை . வில்லைப்போலக் கூனிக் கெடும் உடம்பெனலுமாம் . நாளும் உருகில் ஆராத இன்பன் - நாள்தோறும் பக்தியால் உருகித் தற்போதம் அற்றுச் சிவபோதம் உற்றால் , அமையாத பேரின்பமாக விளங்குபவன் . ` உள்ளம் உருகில் உடனாவார் ` ( தி .2 ப .111 பா .3.). கௌத்துவ மணி நீங்காத திருமால் மார்பின்கண் வீற்றிருக்கும் திருமகள் . மலர்மகள் பிரியாது , நீங்காத காதலுடன் செல்வம் தோன்ற நீடுகின்ற திருமுல்லைவாயில் என்னும் பொருளும் உரியதாகும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

ஒன்றொன்றொ டொன்று மொருநான்கொ டைந்து மிருமூன்றொ டேழு முடனாய்
அன்றின்றொ டென்று மறிவான வர்க்கும் அறியாமை நின்ற வரனூர்
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று கொடியொன்றொ டொன்று குழுமிச்
சென்றொன்றொ டொன்று செறிவா னிறைந்த திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு . புருடதத்து வம் இருபத்தைந்தாவது தத்துவம் . இவ்விருபத்தைந்து தத்துவங் கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன் . இதனை அறியாதார் இருபத் தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர் . இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர் , குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும் , குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

ஒன்று .... ஏழும் உடனாய் - இருபத்தைந்தும் உடனாகி . தத்துவம் இருபத்தைந்தும் இவ்வாறு (1+1+1+4+5+6+7) தொகுத்து உரைக்கப்பட்டன . 1. மூலப்பகுதி ( குணதத்துவ காரணம் ) 2. புத்தி . 3. அகங்காரம் . 4. மனம் . 5. செவி . 6. மெய் ( துவக்கு ) 7. கண் . ( நோக்கு ) 8. வாய் . ( நாக்கு ) 9. மூக்கு . 10. வாக்கு . 11. பாதம் . 12. பாணி . 13. பாயு . 14. உபத்தம் . 15. சத்தம் . 16. பரிசம் . 17. உருவம் . 18. இரதம் . 19. கந்தம் . 20. ஆகாயம் . 21. வாயு . 22. தேயு . 23. அப்பு . 24. பிருதிவி . என்னும் இருபத்துநான்கும் ஆன்மதத்துவங்களாகும் . அவற்றுள் , பிருதிவியை முதலாகக்கொண்டு எண்ணின் , எண்ணப்பட்ட இருபத்து நான்கின் வேறாய் எண்ணுகின்ற கர்த்தா ஒன்று உண்டு . அதுவே ஆன்மா . அவ்வான்மாவே கடவுள் என மயங்கி , அம்மயக்கத்தைத் தெளிவெனக் கொண்டவர்க்கு பரமான்மா வேறொன்று உண்டு எனப் புலப்படாது . அவர் , ஆன்மாக்களின் வேறாய் , அவற்றிற்கு உயிராய் , உடனாய் இருக்கின்ற மெய்ப்பொருள் வேறு ; இருபத்துநான்கு தத்துவங்களையும் கொண்டு நிற்கும் ஆன்மாக்கள் வேறு ; அவ்வுண்மையை யறியாதார் பசுவைப் பதியாக் கொள்ளும் மயக்கம் மயக்கமே ; தெளிவன்று ; அது பாதகம் என்று உண்மையுணர்த்துவது சமய குரவர்க்குக் கடனாதலின் , இத்திருப் பாட்டின் முன்னீரடியினும் தமது கடனாற்றினார் நமது சமயத்தின் ஆசிரியர் . புருடதத்துவம் இருபத்தைந்தாவது . அதையே முடிவான பொருள் எனக்கொள்ளும் சமயமும் உண்டு . குறள் . 27. உரை பார்க்க . சிவதருமோத்தர த்துள் , 10 ஆவது சிவஞானயோகவிய லின் 32- ஆவது செய்யுளுரைக்கீழ் பௌராணிகர் மதத் தின் படி கூறியுள்ள தும் அதன் உரையில் , ஐயஞ்சின் அப்புறத்தானும் ஆரூரமர்ந்த அம் மானே . ( தி .4 ப .4. பா .10) என்று மேற்கோள் காட்டியதும் உணர்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

கொம்பன்ன மின்னி னிடையாளொர் கூறன் விடைநாளு மேறு குழகன்
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி யரனூர்
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் அணிகோ புரங்க ளழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஓரு கூற்றாகக் கொண்டவன் . நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன் . நம் மேல் அன்புடையோன் . மறையோதும் நாவினன் . வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர் , அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர் ஆடும் அரங்குகளும் , அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம் பொன் னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத் தலமேயாகும் .

குறிப்புரை :

பூங்கொம்பு உமாதேவியார்க்கும் மின் இடுப்பிற்கும் கொள்ளலாம் . குழகன் - இளைஞன் ; அழகன் . கணவர் - கண்ணுடைய மகளிர் . பொன்ன - பொன்னினுடைய .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

ஊனேறு வேலி னுருவேறு கண்ணி யொளியேறு கொண்ட வொருவன்
ஆனேற தேறி யழகேறு நீறன் அரவேறு பூணு மரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறி யாடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிறஒளியைப் பெற்றவன் . ஆனேற்றின் மிசை ஏறி , அழகுதரும் திருநீற்றை அணிந்தவன் . பாம்பினை அணி கலனாகப் பூண்டவன் . அவ்வரனது ஊர் , மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும் , மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும் , தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

கண்ணி :- உமாதேவியார் . அழகு ஏறும் நீறன் - ` சுந்தர மாவது நீறு ` ` கவினைத்தருவது நீறு `; அழகு ஏறுதலால் ` கண்திகைப் பிப்பது நீறு ` கொல்லையில் மானும் , சோலையில் மயிலும் குயிலும் ஏறுதல் இயல்பு . மா - வண்டு . தேன் - மலர்கள் . முல்லை மாவின் வளத்தில் ஏறியாடும் என்றால் மா - மரத்தையும் , மாவின்வளம் முல்லையில் ஏறியாடும் என்றால் மா வண்டினையும் குறித்ததாக் கொள்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி யரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினுஞ்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன் . ஆனைந்தாடுபவன் . அரவு ஆடும் கையன் . அனல்போன்றமேனியன் . அவ் அரனது ஊர் , மேகங் கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சை யேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திரு முல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

நெஞ்சார நீடு நினைவாரை மூடுவினை - உள்ளத் தாமரையில் சிவபெருமான் திருவடியே அன்றி மற்று எதையும் எண் ணாமல் , இடைவிடாது கருதிப்பணிகின்ற மெய்யடியரைச் சூழும் இரு வினையும் . தேய அவரைப் பற்றாது முற்றும் தேய்ந்தொழிய . நின்ற நிமலன் - அவர் உள்ளத்தாமரையில் நிலைத்தருளிய பரசிவன் . ஈயப் படும் பொருளின் உயர்வு விளங்கச் செஞ்சாலிநெல்லின் வளர்சோறு எனக் குறிக்கப்பட்டது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் முடிபத்து மிற்று நெரிய
உரைவந்த பொன்னி னுருவந்த மேனி உமைபங்க னெங்க ளரனூர்
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

கயிலைமலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும் , உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனியனாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர் , மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

உரைவந்த பொன்னின் உருவந்தமேனி உமை - கட்டளைக்கல்லில் மாற்று உரைக்கப்பெற்ற சிறந்த பொன்னிறம் பொருந்திய திருமேனியை உடைய உமாதேவியார் . தேறல் - தெளிதேன் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலிற்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

திருமேனிமேல் நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன் . வேதமுதல்வன் . பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன் . அவனது ஊர் , காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய் , கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

` மேலோடி ... நூலன் `:- திருமார்பில் அணிந்த முப்புரி நூல் அவனது திருமேனியில் திருத்தோள்மேல் ஓடி நீடும் விளையாடுதல் மேவுதலை உணர்த்திற்று . விரிநூலன் என்பது சிவபிரான் என்னும் பொருட்டாய் நின்றதென்றும் , அவன் விளையாடல் மேவியவன் என்றும் கொள்ளலும் பொருந்தும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

பனைமல்கு திண்கை மதமா வுரித்த பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை யடையாத தேரர் அமண்மாய நின்ற வரனூர்
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன் . நம்பால் அன்புடையவன் . தன் திருவடியை நினையாத சமணர் தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன் . அப்பெருமானது ஊர் , வனங்களில் தாழை மரங்கள் , மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும் , அரும்பு களை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திரு முல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

` பனை .. கை `:- ` பனைக்கை மும்மதவேழம் ` பரமன் நம் நம்பன் . நம்பன் அடியே நினைவு அன்னசிந்தை - சிவபெருமான் திரு வடியே நினைக்கும் அத்தகைய சித்தத்தை . வகுளங்கள் - மகிழ மரங்கள் . முகுளங்கள் - மொட்டுக்கள் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

அணிகொண்ட கோதை யவணன்று மேத்த வருள்செய்த வெந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லை வாயி லிதன்மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான மிகுபந்தன் ஒண் தமிழ்களின்
அணிகொண்ட பத்து மிசைபாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.

பொழிப்புரை :

அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள் செய்த எந்தையாவர் . பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர் . அப்பெருமான் எழுந்தருளிய திரு முல்லை வாயிலாகிய இத்தலத்தின்மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர் .

குறிப்புரை :

அணிகொண்ட கோதையவள் என்பது இத்தலத்து அம் பிகையின் திருப்பெயர் . தணிகொண்ட சிந்தையவர் - விருப்பு வெறுப் புக்களால் உண்டாகும் வெப்பம் தணிதலை உடைய உள்ளத்தவர் ( தி .1 ப .57 பா .4). ( தி .7 ப .8 பா .7). சித்தியார் - 181. என்ப வற்றில் குறிக்கப்பட்ட மனமே தணி கொண்டதாகும் .
சிற்பி