திருநறையூர்ச்சித்தீச்சரம்


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த நல்குண்டு பண்டு சுடலை
நாரியொர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

ஊர்கள் தோறும் சென்று , பிச்சையேற்று உலகங் கள் போற்ற நல்குவதை உண்டு , முற்காலத்தே சுடலையில் மாதொரு பாகனாக நடனமாடவல்ல , நறையூரில் விளங்கும் நம்பனாகிய சிவ பெருமான் , நுண்ணியன் . பேருருவினன் . தன்னொரு பாகத்தை அளித்த திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன் . நீர் , காற்று , முதலான ஐம்பூத வடிவினன் .

குறிப்புரை :

நேரியன் - நுண்ணியன் , தோன்றுபவன் . ( சித்தி .280.) முன் ஆய ஒளியான் - அநாதியாகிய சிவப்பிரகாசன் . திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன் எனலும் ஆம் . அல்லன் - நேரியனல்லாத பரியன் . நீரியல் .... நிமலன் - நீர் , காற்று , விண் , தீ ஆகிய விமலன் . நல் குண்டு - நல்க உண்டு . அகரம் ( தொகுத்தல் விகாரம் ).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

இடமயி லன்னசாயன் மடமங்கை தன்கை யெதிர்நாணி பூண வரையில்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து வமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை யெனநின்றுதொண்டர் மனநின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

பொருந்திய மயில்கள் நடனம் ஆடி அகவவும் , புகழ் நீடிய குயில்கள் கூவவும் , விளங்கும் சோலை சூழ்ந்த நறையூரில் விளங்கும் நம்பனாகிய அப்பெருமான் , இடப்பாகத்தே மயிலன்ன சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு தன் கையில் உள்ள மலைவில்லில் அரவு நாணைப் பூட்டிக் கடிதானகூரிய அம்பினைக் கோத்து , மூவெயில்களைச் செற்று மகிழ்ந்து தேவர்கட்கு வாழ்வளித்த தலைவன் . இளைய மயிலூர்தியைக் கொண்ட முருகனின் தந்தை என்று தொண்டர் எதிர்நின்று போற்ற அவர்கள் மனத்திலே எழுந்தருளும் மைந்தன் ஆவான் .

குறிப்புரை :

நாணி - வில்லின்நாண் . வரை - மேருவாகிய வில் . கடும் அயில் அம்பு - கடிய கூரிய கணை . மயிலூர்தி - முருகப்பெருமான் . நின்று நின்றமைந்தன் எனக் கூட்டுக .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

சூடக முன்கைமங்கை யொருபாக மாக வருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

இளம் பெண்கள் நாட்டியம் ஆடிப்பாடிப் போற்றும் நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய அப்பெருமான் வளையல் அணிந்தமுன் கைகளை உடைய மலைமங்கை ஒரு பாகமாக விளங்க அருள்புரிய வருபவன் . பெரிய வீடுகளை நோக்கிச் சென்று அவர்கள் இடும் பிச்சையை ஏற்று , மிக்க ஈடுபாடு உடையவன் என்று அடியவர் பரவி ஏத்த , இரு காதுகளிலும் தோடும் குழையும் அணிந்து யானையின் தோலைப் போர்த்துள்ளவன் .

குறிப்புரை :

சூடகம் - வளையல் . ஈடு அகம் ஆன - பெரிய வீடுகள் ஆனவற்றைநோக்கி . தோடும் குழையும் இருவேறு திருச்செவியிலும் அணிந்தது முன்னும் குறிக்கப்பட்டது . ( தி .2 ப .84 பா .5).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

சாயனன் மாதொர்பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த வருளாய செல்வன் இருளாய கண்ட னவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

தாங்கள் விரும்பிய மலையின்கண் இருந்து தவம் முயலும் சித்தர்கள் இறங்கி வந்து வழிபடுகின்ற , சித்தர்கட்கு ஈசுவரன் என்று மறையவரால் போற்றிப் பேணும் நறையூர்ச் சித்தீச்சரத்து இறை வனாகிய அவன் , அழகிய மலைமாதினை ஒரு பாகமாகக் கொண்ட வன் . எல்லோர்க்கும் ஊழை வரையறுக்கும் சோதி . சிவகதியாக நிற்கும் கடவுள் . என் மனத்திடை வந்து அருள் புரியும் செல்வன் . இருண்ட கண்டத்தினன் . தாயெனத் தலையளி செய்யும் தலைவன் .

குறிப்புரை :

கதியாகநின்ற கடவுள் - சிவகதியாக நிற்கும் பரமேச்சு வரன் . அவனித்தாய் ` தாயவன்காண் உலகிற்கு ` ( தி .6 ப .64 பா .4). மலையின்கண் வந்து தொழுவார் நாயகன் :- மலையினிருந்து வந்து வழிபடுகின்ற சித்தர்க்கு ஈசுவரன் என்று மறையோர்கள் இறைஞ்சிப் பேணும் நறையூர் என்க . பா . ` சித்தர் பேண `.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

நெதிபடு மெய்யெமைய னிறைசோலை சுற்றி நிகழம்ப லத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல வமரர்க் கொருத்தன் எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து விடையேறி யில்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

வாளைமீன்கள் நதி வழியாக நீந்தி வந்து வயல் களிற் பாயும் நறையூரில் எழுந்தருளிய இறைவன் , சேமநிதியாகக் கருதப்படும் மெய்ப்பொருள் . எமக்குத் தலைவன் . நிறைந்த சோலை கள் சூழ்ந்த அம்பலத்தில் அதிர்பட ஆடுபவன் . அமரர்க்குத் தலைவன் . அடியவர்க்குச் சுற்றமாய் விளங்குபவன் . பிறை பொருந்திய சடை தாழ்ந்து தொங்க விடைஏறி வந்து வீடுகள் தோறும் பலி ஏற்பவன் .

குறிப்புரை :

நெதிபடுமெய் - நிதியாகப்படுகின்ற மெய் ( ப்பொருள் ). அமரர்க்கு ஒருத்தன் - தேவாதி தேவர்க்கெல்லாம் தலைவன் . அமர ரால் அமரப்படுவான் -( தி .7 பா .384.) எமர்சுற்றம் ஆய இறைவன் - எம்மவராகிய அடியார்களுக்கு உறவாய கடவுள் . இல் - வீடுதோறும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை மலர்துன்று செஞ் சடையினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின் பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

அருள் பெறத் தன்னை நண்ணிய தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நறையூரில் விளங்கும் இறைவன் . கங்கை தங்கிய முடி மீது வன்னி , கொன்றைமலர் முதலியன பொருந்திய சடையினை உடையவன் . வணங்குதற்கு முன்னரே அவர்கள் விரும்பும் வடிவங் கள் பலவாகத் தோன்றி அருள்புரிபவன் . தன்னை அணுகிய வேதங் களின் ஓசை , அகன்ற ஆறு அங்கங்களின் பொருளாக விளங்கும் கருணையாளன் .

குறிப்புரை :

கணிகை - கங்கை . கணிகையொர் சென்னி - தியானிப் போர் ; பிரமரந்திரம் எனல் பொருந்தாது . சென்னியில் வன்னியும் கொன்றைமலரும் துன்றிய செஞ்சடை உடையவன் . பணிகையின் முன் - வணங்குதற்கு முன்னரே பணிகின்ற கை என்ன வினைத் தொகையாகக் கொள்ளலும் பொருந்தும் . அணுகிய வேத ஓசை - தன்னை அடைய வேண்டும் என்று தேடிக்கிட்டிய வேத முழக்கம் . அகல் அங்கம் ஆறின் பொருள் - விரிந்த ஆறங்கங்களின் பொருள் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க வனலேந்தி யாடும் விகிர்தன் விடங்கொண் மிடறன்
துளிதரு சோலையாலை தொழின்மேவ வேத மெழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாட மடவார்க ளாரு நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

தேன் துளிக்கும் சோலைகளையும் , கரும்பினைப் பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலையும் வேதமுழக்கங்களின் எழுச்சியையும் , வெற்றி வழங்கும் செல்வவளம் உடைய வான ளாவிய , மடவார்கள் வாழும் மாடவீடுகளையும் உடைய நறையூரில் எழுந்தருளிய இறைவன் ஒளிதரும் தன்திருமேனியிலுள்ள அங்கங்கள் எங்கும் அரவுகள் ஆட , கையில் விளங்கும் அனலை ஏந்தி ஆடும் விகிர்தன் . விடம் பொருந்திய கண்டத்தினன் .

குறிப்புரை :

மேனி - நிறம் . துளிதரல் - தேன்துளித்தல் . வேதம் எழில்ஆர - வேத முழக்கத்தின் எழுச்சி நிறைய . மதிசேரும் மாடம் :- வண்கொண்டல் விட்டு மதிமுட்டுவன மாடம் ` ( கம்பர் ).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

அடலெரு தேறுகந்த வதிருங் கழற்கள் ளெதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும் இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனாகிய இராவணனின் உடல் தோள் பத்துத்தலைகள் ஆகியவற்றை நெரித்துப் பின் அவனது இசையைக்கேட்டு இரங்கி அவன் துன்பங்களைத் தவிர்த்து ஒப்பற்ற வாளைத் தந்து கருணை காட்டியவனாய் நம்மை ஆளுதற்பொருட்டு நறையூரில் எழுந்தருளிய இறைவன் வலிய எருதினை உகந்தவன் . அதிரும் கழல்களோடு ஒருபாதியில் சிலம்பு ஒலிக்க வருபவன் . கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டு கனிவு பொருந்தக் கண்டத்தில் நிறுத்தியோன் .

குறிப்புரை :

கழல்கள் எனற்பாலது கழற்கள் எனத் திரிந்தது . அரை யன் - அரசன் , இராவணன் . உடல் தோள் முடி அனைத்தும் இறுத்தும் கேட்டு , இரங்கி , தீர்த்து ( வாள் ) நல்கி என்க . நல்கி ஆளவல்ல நம்பன் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல வெய்தொணாமை யெரியா யுயர்ந்த பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

சிலபல தொண்டர்கள் நின்று பெருமைகள் பேசிப் பரவக் கரியமேகங்கள் விளங்கும் பொழிலின் நல்ல மலர்கள் சிந்து தலால் மணம் வீசும் வீதிகளை உடைய நறையூரில் எழுந்தருளிய நம்ப னாகிய இறைவன் மலர்களிற் சிறந்த தாமரைமலர் மேல் விளங்கும் பிரமனும் புகழ்மிக்க திருமாலும் எதிர்கூடித் தேடியும் அவர்கள் நினைப்பில் உற்றிலாத பல சிறப்பினனாய் அவர்கள் காணமுடியாத படி , தீயாய் ஓங்கிய பெரியோன் , விளங்கும் சடைமுடியை உடையவன் .

குறிப்புரை :

மேவினான் ; பிரமன் . மிகுமாயன் - மாயம் மிக்கவன் . நேடி - தேடி . நினைவுற்றில பல - நினைப்பில் உற்றில்லாதன பலவாய் . பெருமைகள் - பொருள்சேர்புகழ்கள் . ` பெருமைக்கள் ` என்பதில் கவ் வொற்று இசைப்பொருட்டு விரித்தலாயிற்று . அருமை - அரிய மேகம் . வரும்மை , அருமை எனலுமாம் . பொழில் இனிய நல்ல மலர்களைச் சிந்த , வாசமணம் . ஒருபொருளிரு சொல் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

துவருறுகின்ற ஆடை யுடல்போர்த் துழன்ற அவர்தாமும் அல்ல சமணும்
கவருறு சிந்தையாள ருரைநீத் துகந்த பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயி லொளிபொன்செய் மாட நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

தவம் நிறைந்த பத்தர்கள் , சித்தர்கள் , மறை வல்லோர் விரும்பி வழிபடவும் , மாதர்கள் முறையாகப் பாடி அடைய வும் , நவமணிகள் செறிந்த கோயிலையும் ஒளிதரும் பொன்னால் இயன்ற மாடவீடுகளையும் கொண்டுள்ள நறையூரில் விளங்கும் இறைவன் , துவர் ஏற்றிய ஆடையை உடலில் போர்த்துத் திரியும் தேரரும் அவரல்லாத சமணர்களும் ஆகிய மாறுபட்ட மனம் உடை யோர் உரைகளைக் கடந்து நிற்கும் பெருமான் ஆவன் . அவன் விளங்கும் சடைமுடி உடையோன் .

குறிப்புரை :

துவர் உறுகின்ற ஆடை - துவர் ( காவி ) ஊட்டிய துணி . அல்ல - ( தேரர் ) அல்லாத , கவர் உறு சிந்தையாளர் - பல தலையாய் உற்ற மனம் உடையவர் . பலதலை - ஐயம் . தவம்மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண - தவத்தின் மிகுந்த அன்பரும் சித்துவல்லாரும் வேதியரும் விரும்பிவழிபட . ( பா .4) இல் ` மலையின் கண் வந்து தொழுவார் ` என்றது இதிற்குறித்த சித்தரையே .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

கான லுலாவி ஓதம் எதிர்மல்கு காழி மிகுபந்தன் முந்தி யுணர
ஞான முலாவுசிந்தை அடிவைத் துகந்த நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த தமிழ்மாலை பத்து நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று வழிபாடு செய்யு மிகவே.

பொழிப்புரை :

ஓதநீர் கடற்கரைச் சோலைகளைக் கடந்து வந்து நிறையும் காழிப்பதியில் தோன்றிய புகழ் மிகு ஞானசம்பந்தன் இளமை யில் உணரும் வண்ணம் ஞானம் உலாவுகின்ற மனத்தில் தன் திருவடி களைப் பதிய வைத்து உகந்த நறையூரில் விளங்கும் இறைவனை , குற்ற மற்றவகையில் இசையால் உரைத்த தமிழ்மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் உணர வல்லவர் நிலவுலகம் நின்று வழிபடுமாறு வானம் நிலாவ வல்லவர் ஆவர் .

குறிப்புரை :

ஞானம் உலாவு சிந்தை - திருப்பெருகு சிவஞானம் உலாவுகின்ற திருவுள்ளத்தில் சிந்திக்கும் வண்ணம் .
சிற்பி