திருப்புறவார்பனங்காட்டூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார்பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக.

குறிப்புரை :

விண் அமர்ந்தன - ஆகாயத்தில் பொருந்தியனவாகிய. பிஞ்ஞகா - சடைமுடியனே. பிறைசேர் நுதலிடைக்கண் - `பிறைநுதல் வண்ணம் ஆகின்று` (புறம், கடவுள் வாழ்த்து.) நுதல்; நெற்றி + சென்னி இரண்டையும் குறித்து ஆளப்படும். யோகமார்க்கத்தில் பிறை விளங்கும் இடம் நுதல் ஆதலைக் குறித்ததுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர் ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும் மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசைபாடும் புறவார்பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

நீடல் - (நீள் + தல்), நீட்சியை உடைய. கோடல் -வெண் காந்தள். நிரை - வரிசை. தாது - முல்லைப்பூந்தாதுக்கள். அளம்செய - உப்பளம்போலக்குவிக்க. இலங்கிய - விளங்கிய, அயல் - பக்கத்தில். மின் - ஒளி. நள்இருள் - செறிந்த இருளில். `நள்ளிருளில் நட்டம் பயின் றாடும்`. சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

மிளிர்தல் - ஒளிர்தல். கமுகம் - பாக்கு. பூளை - ஒரு செடி. இது சிறுமை பெருமையால் இருவகைப்படும். `இரும்பூளை` (பதிகம் .172) `மாருதம் அறைந்த பூளைப்பூ`. என்று உவமை கூறலாவதும் இதனையே. மதமத்தம் - உக்கிரகந்தத்தையுடைய ஊமத்தை, புனைவாய் - அணிபவனே. கழல் - கழல்களை அணிந்த. இணைத்தாள் - இரண்டு திருவடிகள். ஏகாரம் பிரிநிலை, `சாம்பகல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே` (ப .180. பா ,3.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென்கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்றுகுளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து அடிபரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

மேதி - எருமை, வைகறை - விடியற்பொழுது. பழனம் - வயல். அடிகள் - சுவாமி, கடவுள். சிவபெருமானை `அடி` என்றும், கள்விகுதிசேர்த்து உயர்வு குறித்து `அடிகள்` என்றும் வழங்குதல் மரபு, `திருவடி சேர்ந்தார்`, `அடிசேர் ஞானம்` என்பவற்றால் அவ்வுண்மை புலப்படும். `இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானபூசை` என்பது முதலிய இடங்களில் சிவஞானத்தைக் குறித்தல் உணர்க. சிவனையும் சிவஞானத்தையும் அடைந்தவர் அடியார் என்பர். எல்லாவற்றிற்கும் அடி (மூலம்) சிவஞானமும், சிவமும் அன்றி வேறில்லை. `அடியார் சிவஞானமானது பெற்றோர்` (திருமந்திரம்.1672.) `முதல்வனது திருவடியாகிய சிவானந்தத்தை` (சிவஞான பாடியம். சூ .10.அதி .1. ஏதுவின் விளக்கம்)`முதல்வன் திருவடியாகிய சிவானந்தாநுபூதி`(ஷெ. 11. உரை)`முதல்வனொருவனே ஞாயிறும் ஒளியும் போலச் சிவனும் சத்தியும் எனத்தாதான்மியத்தான் இருதிறப்பட்டுச் சருவவியாபியாய்ப் பொதுமையில் நிற்பன்`(ஷெ. சூ.2. அதி.4.) ஆதலின், `அடி` என்று சிவத்தையும் சிவஞானத்தையும் உணர்த்தலாயிற்று. உயிர்கள் அதை அடையுங்காலம்; `யான் எனப்படும் ஞாதாவும், எனதெனப்படும் ஞானமும், அதற்கு விடயமாய் எனதெனப்படும் ஞேயமும் எனப் பகுத்துக்காணும் மயக்கவுணர்விற்கு ஏதுவாகிய மலவாசனை` நீங்குங்காலம் ஆதலின், `பரை உயிரில் யான் எனது என்று அற நின்றது அடியாம் என்றது உண்மை நெறி விளக்கம். பின் வந்த குமரகுருபர முனிவரரும் `யான் எனது என்பது அற்ற இடமே திருவடி` என்றருளினார். கடவுளைச் சிவாகம விதிப்படி உருவுடையவராகக் கற்பித்துக் கொண்டு வழிபடுவார் அதன் திருவடிகளைக் குறிக்கும் உண்மையும் ஆய்ந்துணர்க,`உருவினதடிமுடி` (தி .1 ப .126 பா.9) `ஆரொருவருள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்` (தி.6 பா .18 ப .11). யேன யேன ஹி ரூபேண ஸாதக: ஸம்ஸ் மரேத ததாதஸ்ய தந்மயதாம் யாதி சிந்தாமணி: இவ ஈஷ்வர: என்ற சர்வசுரோத சங் கிரகம் கூறும் ஆற்றாலும் உருவ வழிபாட்டின் சிறப்பை உணர்க. என்று என்று:- அடுக்கு. பலகாலும் அரற்றல் வேண்டுமென்றது குறித்து நின்றது. மலர் சாய்ந்த அடி - பூக்கள் வீழ்ந்த திருப்பாதங்களை. தாமரை தோற்றதிருத்தாள் எனலுமாம். சாய்ந்த - அகரம் தொகுத்தல். மலரால், அடிகளைச் சாய்ந்து (விழுந்து) பரவும் (வாழ்த்தும்) எனலுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.

பொழிப்புரை :

செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில் கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

செங்கயல் சேல் இரண்டும் போர்செய்ய மலரும், தேனினத்தொடு மலரும் என்றியைக்க. சிறுமை + யாழ் - சீறியாழ். பேரி யாழ் வேறுண்டு. இப்பிரிவால் பாணரும் சிறுபாணர் பெரும்பாணர் என்றிருவகைப்படுவர். தேன் - வண்டு, யாழ்முரல் - யாழின் ஒலி போல முரலு (ஒலித்)தல். கேண்மையாள் - உமாதேவியார். கேள் + மை - கேளாந்தன்மை. உரிமை, `உன் பெருந்தேவி என்னும் உரிமை`, மறி - கன்று. ஆடல் (ஆள் + தல்) ஆளுதல், ஆடலன் - ஆளுதலையுடையவனே. மான்கன்றேந்திய அழகியகையன் என்றவாறு. அகங்கையுமாம். `அங்கையிற்படையாய்` (ப .187.பா .5)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில் சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள் தோறும் பிரியாது வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள் தோறும் சிறப்பொடு வழிபடும் அடியவர்கட்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் - நீரால் (அரணாகப்) பொருந்திய எல்லையை வகுத்துப், பெரிய கடல் நெடுகப்பரவிய சோலை, சூழ்ந்து பிரியா ஊர் என்க. சூழ்தல் சோலையின் வினை. பிரியாமை பாரினாரது. பாரினார் - மண்ணுலகத்தார். வைகலும் பிரியா - நாடோறும் நீங்காது வழிபடும். காரின் ஆர்மலர்க் கொன்றை :- `கண்ணிகார்நறுங் கொன்றை` என்றவாறு, கார்காலத்தில் கொன்றை மிகுதியாகப் பூப்பதுணர்த்திற்று. கூப்பி - குவித்து. கூம்பி - தன்வினை, கூப்பி - பிறவினை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையொர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா வடிமை புரிந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

மகளிரின் மெல்லிய கைவிரல்களைக் காட்டிப் படம் பொருந்திய பாம்பு போல் காந்தள் செடி விரிந்து மலரும் புறவார் பனங்காட்டூரில் உமையம்மையைத் தனது மெய்யில் ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எனக்கூறித் திருவடிகளைப் பரவி நாள்தோறும் மெய்த்தொண்டு புரியும் அடியவர்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

அரிவையர் - மகளிர். கைமெல்விரலவை - கையிலுள்ள மெல்லிய விரல்கள். அவை ஈண்டுச்சுட்டல்ல, நிலமது பொருளது என்பவற்றில் அது என்னும் ஒருமை சுட்டாதவாறு போல இதிற் பன்மை சுட்டாது நின்றது. நிலம் பொருள் என்றல்லாத வேறு பொருளில்லை, ஈண்டு விரலல்லாத வேறு பொருள் `அவை` என்றதற்கு இல்லை. பை - படம். அரா - பாம்பு. அராவிரியும் = அராவைப்போல மலரும். காட்டி விரியும். அரிவை - உமாதேவியார். மெய் - திருமேனியில், ஓர் பாகமாகவும் மேவியவனே! (ப .188.பா . 11). பொய்யிலா அடிமை - மெய்யடிமை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே.

பொழிப்புரை :

அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய் இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

தூவி - இறகினடிப்பாகம். அனம் - அன்னப்பறவை, பாவில் - பரப்பில். ஏவிய - ஏவல் செய்ய, ஆக்ஞை செய்த.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை, நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய் அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

அம்தண் - அழகும் குளிர்ச்சியும் உடைய. அரவிந்தம் - தாமரை. தண் + ஞாழல்கள் - தணாழல்கள். ஞாழல்மரம். எந்து - எமது!. முகில் - மேகம். என்ற இவர்க்கு அகரம் தொகுத்தல். சந்தம் - அழகு, கருத்து, ஆயவன் - ஆனவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.

பொழிப்புரை :

வண்டுகள்,பெருகி நிரம்பிய தேனை உண்டு நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும் புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரிய வனே! உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

நீணம் - நீளம். `நீணுதல்` (தி.1 ப. 1 பா.9) முருகு - தேன். பாண் - பாட்டு. நக - சிரிக்க. தலையூண் உரியவனே - பிரமகபாலத்தில் வாங்கி உணவு கொள்ளுதற்கு உரியவனே.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை, குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார் பனங் காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம் பந்தன் பாடிய இப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர்.

குறிப்புரை :

மையின் - மேகத்தைப்போல. மாசு - குற்றம். பைய - பசுமையுடைய. ஆய்ந்த - (முற்பிறவியில்) ஆராய்ந்த. செய்யுள் - இத்திருப்பதிகத்தை.
சிற்பி