திருக்கச்சியேகம்பம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.

பொழிப்புரை :

வேதவடிவினன், குற்றமற்ற சிவந்த சடையிற் பொருந்திய வெண்பிறையினன். பெண்ணும் ஆணுமாகிய பெருமான் எல்லாப் பொருள்களிலும் உறைபவன். அழகிய கச்சிப்பதியில் திருஏகம்பம் என்னும் கோயிலில் உறைபவன். அத்தகையோனை அல்லது என் உள்ளம் பிறவற்றை நினையாது.

குறிப்புரை :

மறையான் - வேதசொரூபன், வேதங்களை அருளியவன் எனலுமாம். மாசு - குற்றம். புன்சடை - மென்மையையுடைய சடை. புன்மை, பொன்மையுமாம். பிறையான் - பிறையை அணிந்தவன். பெண்ணும் ஆணும் ஆகிய பெருமான். இறையான் - எப்பொருளினும் உறைவான். ஏர் - எழுச்சி. அழகும் ஆம். கச்சி - சிவதலம், காஞ்சிபுரம். திருவேகம்பம் - அங்குள்ள பெரிய சிவாலயம். திருவேகம்பத்து உறைவான் - திருவேகம்பம் எனப்பெயரிய திருக்கோயிலுள் வாழ்பவன். உள்காது - எண்ணாது. ஏகம்பம் - ஏகாம்ரம். ஏகாம்பரம். ஏகம் - ஒன்று. ஆம்ரம் - மாமரம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.

பொழிப்புரை :

நொச்சியிலை, வன்னிஇலை, கொன்றை மலர் பிறைமதி, வில்வம் ஆகியவற்றை முடியிற்புனைந்துள்ளமை அவன் அடையாளமாகும். விடைஊர்தியை உடையவன் அவன். கச்சியில் திருவேகம்பத்தில் எழுந்தருளிய அக்கறைக்கண்டனை விரும்பித் தொழுவீர்களாக. உம்மேல் வரும் வினைகள் மெலியும்.

குறிப்புரை :

நொச்சியிலை. வன்னிபத்திரம், கொன்றைப்பூ, பிறை, கூவிளம் (- வில்வம்) ஆகியவற்றைச் சிவபெருமான் முடியிற் புனைவது அவனது திருவேடமாகும். ஊர்தி - வாகனம். எருது வாகனத்தன். கறை - (நஞ்சுண்டதன் காரணமாகப் பொருந்திய அதன்) கறுப்பு. கண்டன் - திருக்கழுத்தினன். நச்சி - விரும்பி. பக்தி கொண்டு. தொழுமின் - வழிபடுங்கள். நையும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
சேராதா ரின்பமா யந்நெறி சேராரே.

பொழிப்புரை :

உலகிற் பொருந்திய முழவம், மொந்தை, குழல், யாழ் ஆகியவற்றின் ஒலியோடு முறையான பாடலும் ஆடலும் குறையாத அழகிய கச்சி ஏகம்பத்து எம்மானைச் சேராதவர் இன்பமான நெறிகளைச் சேராதவர் ஆவர். நும் வினை - உங்கள் கர்மம், மேல்வினை - ஆகாமியம்.

குறிப்புரை :

பார் - நிலம். ஆரும் - நிறைந்து முழங்கும். முழவம், மொந்தை, குழல், யாழ் என்னும் இசைக்கருவிகளின் ஒலியும், சீரும், பாடலும், ஆடலும் கச்சியுள் அக்காலத்தில் மிக்கிருந்த உண்மை புலனாகும். சிதைவு - கேடு. ஏர் - எழுச்சி, அழகு. சேராதார் - இடைவிடாது நினையாதவர். இன்பமாய நெறி - பேரின்பத்தை எய்துவதற்குரிய நன்னெறியை (சன்மார்க்கத்தை). நகரமெய் விரித்தல். சேரார் - அடையார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.

பொழிப்புரை :

குன்றுகள் போன்று உயர்ந்த சுதைமாடங்களில் கட்டிய கொடிகள் கூடிச் சென்று மின்னல்கள் உராயும் முகில்களைத் தோயும் விரிந்த கச்சிப்பதியில் பலவாறு மன்றுகளில் புகழப்படும் சீர்மையை உடையவன் எழுந்தருளிய திருஏகம்பத்தை அடைந்து மனம் பொருந்த வழிபாடு செய்யும் அடியவர்கள்மேல் வினைகள் சேரா.

குறிப்புரை :

குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடம்:- நெடிய (உயரிய) சுதையால் தீற்றப்பட்ட மாடங்கள் மலைகளைப்போல் விளங்குகின்றன. கொடி கூடிப்போய் மின்தேய்க்கும் முகில்கள் தோயும் அம் மாடங்களின்மேல் கட்டிப் பறக்கவிட்ட துணிக்கொடிகள் எல்லாம் ஒருங்குசேர்ந்து சென்று மின்னல்கள் ஒன்றோடொன்று உராயும் மேகமண்டலத்தை அளாவிப்படியும். மன்று - பிருதிவியம்பலத்தை. மிகுதியாப்பரவித் தேய்க்கும் சீரால் எனலுமாம். மல்குசீரான் - மிக்க சிறப்புடைய சிவபிரான். ஏய்க்கும் - பொருந்தச்செய்யும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவனும், தலையோட்டைக் கையில் ஏந்திப் பலியிடுவார் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் உடல் பொருள் ஆவி ஆகியவற்றைக் கொண்டவனும் ஆகிய ஆரவாரம் நிறைந்த கச்சிப் பதியில் பொன்னிறமலர்கள் மலரும் கம்பை நதிக்கரையில் விளங்கும் திருஏகம்பம் உடையானை அல்லது பிறரை எனது உள்ளம் விரும்பாது.

குறிப்புரை :

தலை ஏந்தி - தலையை (பிரமகபாலத்தை)க் கையில் தாங்கி, தருவார்:- தாருகாவனத்துப் பெண்டிர், கடை - வாயிற் கடை, மூன்றும் - உடல் பொருள் ஆவி எல்லாம். உயிர், நாண். கற்பு என்றலுமாம். புடை - நகரின் பக்கங்களில். பொன் மலரும் - பொன் (போற் கொன்றைகள்) பூக்கும். பொன்விளையும் எனல் பொருந்தாது. கம்பை - கம்பாநதி. உடையான் - சுவாமி. உள்காது - நினையாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.

பொழிப்புரை :

மழுவாள் அழகிய சூலம் ஆகிய படைகளை ஏந்தி யவர். தம்மிடம் பொருந்திய ஒளியுடையவர். இமயமலையின் உச்சியில் உறைபவர். உமையம்மை கங்கை ஆகியோருடன் கூடி அவர் எழுந்தருளிய பெருகும் புகழ் பொருந்திய ஏகம்பத்தைத் தொழுபவரே விழுமியோர் ஆவர். அவரை வினைகள் அணுகா.

குறிப்புரை :

மழு, வாள், சூலம் என்னும் படைகள் ஏந்தவல்லவர். வாள் - கட்கம், எழில் - அழகு, வல்லார்தம் ஏகம்பம், கெழுவாள், உமையாள், வாளோர் இமையர் (- இமயமலையர்). வாளோர் - ஒளியுடையவர். உச்சி, பொது. உமையாளும் கங்கையும் மல்குசீர். வழுவாமே - தவறாமல். தொழுவாரே - வணங்குவாரே. விழுமியார் - சிறந்தவர். துன்னா - நெருங்கா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின் றவலங் காரம்மே.

பொழிப்புரை :

வானகத்தில் உறைபவர். மறைகளாகிய வேதங்களை விரித்து ஓதுபவர்களின் கண்களின் ஒளிர்பவர். கருநிறம் உடைய காலனை வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைத்து வென்றவர். தம்மைச் சரணாக அடைபவர்களின் எழிலைக் கொள்ளும், கச்சி நகரில் விளங்கும் திருஏகம்பத்துத்தலைவர் ஆடுகின்ற ஆடல் மிக்க அழகுடையது.

குறிப்புரை :

விண்ணிலும் வேதங்களை விரித்துப் பொருள்கூறும் அறிஞர் கண்ணிலும் இருப்பவர். கரி(ந்த) காலன் - யமதர்மன். கழல் - திருவடிக்கு ஆகுபெயர். யமனைக் காலால் உதைத்து வென்றவர். வெல்வார். நண்ணுவார் - அடைவார், விரும்புவார். எழில் கொள்ளல் - வண்ணம்பெறல். நண்ணுவாரெழில் கொள்ளல் - இறைவன் தன்னைச் சேர்ந்தவர் வண்ணத்தைத் தான் கொள்ளுதல். `பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் -(திருக்களிறு .79) என்றும் (ஈறாகி... முதலொன்றாய்... எண் வகையாய்...வேறாய்...உருவுடைமை... இருக்கின்றான்` (? 86) என்றும்) உள்ள சிவாகம வசனத்தை நோக்குக. `தந்தது உன்றன்னைக் கொண்டது என்றன்னை` என்றதும் உணர்க. நண்ணுவார் எழில்கொள்ள நகர் கொடுக்கும் என்ற கருத்தும் பொருந்தும். எழில் - சிவப்பொலிவு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.

பொழிப்புரை :

தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.

குறிப்புரை :

தூயவனும், தூயனவாகிய மறைகளை ஓதியருளிய வாயவனும், வாளேந்திய அரக்கனாகிய இராவணனது வலியை வாடச்செய்த தீயவனும், தீயது இல்லாத திருக்கச்சியேகம்பத்தில் மேவியவனும் ஆகிய சிவபெருமானை விரும்பித்தொழுவார் என் தலைமேல் இருப்பவர். இத்திருப்பாட்டின் ஈற்றடிப் பொருளால், திருஞானசம்பந்தர்க்குச் சிவனடியாரிடத்திலுள்ள பத்திச் சிறப்பு விளங்கு கின்றது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நாகம்பூ ணேறதே றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
ஏகம்ப மேவியா டுமிறை யிருவர்க்கும்
மாகம்ப மறியும்வண் ணத்தவ னல்லனே.

பொழிப்புரை :

நாகம் அவனது அணிகலன். அவனது ஊர்தி விடை. மணம் கமழும் கொன்றை அவனதுமாலை. ஒருபாகத்தில் பெண்ணைக் கொண்டவன். பிச்சையும் ஏற்பவன். மறைகளைப்பாடுபவன். கச்சித்திருஏகம்பத்தில் எழுந்தருளி மகிழ்வோடு ஆடும் இறைவன். திருமால் பிரமர்க்குப் பெரிய நடுக்கத்தைத் தருவதோடு அவர்களால் அறியத்தக்க வண்ணத்தவன் அல்லன்.

குறிப்புரை :

பூண்நாகம், ஏறல்ஏறது, தார் நறுங்கொன்றை, பாகம் பெண் என்று இயைத்து, சர்ப்பாபரணம், இடபவாகனம், கொன்றை மாலை, மாதியலும் பாதியைக் கொண்டுரைக்க. பலியும் ஏற்பர் - பிச்சை கொள்வர். உம்மை பலியின் இழிவை மிகுத்து நின்றது. மறை - வேதம். ஏகம்பம் மேவிஆடும் இறை - திருவேகம்பத்தில் (பிருதிவியம் பலத்தில்) எழுந்தருளிய கடவுள், ஆட்டம்:-காமாட்சியம்மையாரைத் தன்பால் ஒடுக்கிய இடமாதலின், வகாரத்தைத் தன்பால் அடக்கிய சிகாரத்தின் நிலையாகிய சிவாநந்தத் தாண்டவம். இருவர் - பிரம விட்டுணு. மாகம்பம் - அறியும் வண்ணத்தவன் அல்லன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.

பொழிப்புரை :

போதிமரநிழலில் அமர்ந்த புத்தனை வணங்கு வோரும், அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தசமண மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய மாமர நீழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள் விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். நும் மேல் வரும் வினைகள் நில்லா.

குறிப்புரை :

போதியார் - போதிமரத்தின் கீழமர்ந்த புத்தனை வணங்குவோர். பிண்டியார் - பிண்டி (அசோக) மரத்தின் கீழமர்ந்த அருகனை வணங்குவோர். பொய்ந்நூல் - மெய்ப்பொருளை அறிந்தெழுதப்படாத புத்தகம். வாதியா - வாதிக்காமல். வம்மின் - வாருங்கள். அம் - அழகிய. மா - மாமரம். ஏகாம்பரம். மா எனும் கச்சி:- திருவேகம்பம் எனப்படும் கச்சி. ஆதியார் - முதல்வர். நீதியால் - சிவாகமமுறைப்படி. தொழுமின் - வழிபடுங்கள். நும்மேல் - உங்கள்பால், வினை நில்லா - கர்மம்பற்றா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.

பொழிப்புரை :

அழகும் தண்மையும் பொலிவும் உடைய கச்சி ஏகம்பத்தில் விளங்கும் தலைவனைப்பற்றி, நீர் வளமும் தண்மையும் அழகும் உடைய சீகாழிப்பதியுள் தோன்றியவனாய் ஒலிமாலை எனப்படும் திருப்பதிகங்களால் இசைத்தமிழில் பாடவல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆடிப் போற்றப் பாவம் கெடும்.

குறிப்புரை :

அம்தண்பூ - அழகும் குளிர்ச்சியும் பொலிவும் பொருந்திய, கந்தண்பூங்காழியூர் - நீரும் குளிர்ச்சியும் அழகும் உடைய சீகாழிப்பதி. கலிக்கோவை - ஒலிமாலை. `பூத முதல்வன் முதலே முதலாகப் பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே` (தி.3 ப.54 பா.8) என்று திருப்பாசுரத்தில் அருளியது அறிக. சந்தம் - இசைப்பாடல். சொல் - சொல்மாலை. பாடி ஆடப்பாவம்கெடும். காழியூரனாகிய தமிழ் ஞானசம்பந்தன்; கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல ஞானசம்பந்தன்; `ஒண்கலியைப் பொன்றும் கவுணியன்` அருளியகோவை ஆதலின், கலியைத் தீர்க்கும் கோவை எனலும் ஆம். கலியுகத்துக்கோவை, கலிவிருத்தக்கோவை எனல் பொருந்து மேற்கொள்க.
சிற்பி