பத்தாஞ் சூத்திரம் - ஐந்தெழுத் தருள்நிலை


பண் :

பாடல் எண் : 1

பந்தமா னவைஅ றுத்துப் பவுதிகம் உழலும் எல்லைச்
சந்தியா தொழியா திங்குத் தன்மைபோல் வினையுஞ் சாரும்
அந்தம்ஆ திகள்இ லாத அஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை வாதியா பேதி யாவே.

உடலுறு நுகர்வும் உற்றிடும் வினையும்
இடர்பட அஞ்செழுத் தியம்புக வென்றது.

பொழிப்புரை :

பந்தமானவை அறுத்துப் பவுதிகம் உழலும் எல்லைச் சந்தியா தொழியாது தீடிக்ஷகளினாலே கன்மங்களைப் போக்கினாலும் பிராரத்த கன்மம் இந்தப் பூததேகம் உள்ள மட்டும் பொருந்துதல் தவிராது. அஃதென்போலவென்னில்; இங்குத் தன்மைபோல் பெருங்காயத்தின் இயல்பு போல. அஃதாவது பாத்திரத்திலே இட்டு வைத்த பெருங்காயமானதை வைத்த எடை குறையாமல் வாங்கிப் பாத்திரத்தைத் தூயதாய்க் கழுவிப் போட்டாலும் அந்தப் பாத்திரம் உள்ள மட்டும் அதிலுள்ள கந்தத்தின் வாசனை போகாதாற்போல என்றதென அறிக. அப்படிப் பிராரத்த கன்மம் உண்டாகவே; வினையுஞ் சாரும் ஆகாமிய கன்மமும் ஏறாதிராது. அப்படி இங்ஙனம் பொருந்தப்பட்ட பிராரத்தமும் அதனாலுண்டாகிய ஆகாமியமும்; அந்தம் ஆதிகள் இலாத அஞ்செழுத்தருளினாலே வந்தவாறுரை செய்வாரை முடிவு முதலு மில்லாத ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஆசாரியன் கடாக்ஷித்த முறைமையிலே உச்சரிக்கப்பட்ட சிவஞானிகளை ; வாதியா பேதியாவே அந்தப் பிராரத்த கன்மம் புசிப்பு மாத்திரமாய் வந்து போகிறதொழிய அவர்கள் ஈடுபடத்தக்கதாக மேலிட்டு வருத்தாது. அவர்கள் அப்படி ஈடுபட்டு வருந்தாதது கொண்டே மற்ற ஆகாமிய கன்மமும் ஏறாது. அப்படியே ஏறிற்றாகிலும் பேதமாக்குவித்து ஜனனத்தை உண்டாக்காது.
அன்றியும், இந்தப் பதத்துக்குப் பிராரத்த கன்மம் வாதியாது ஆகாமிய கன்மம் பேதியாதென்றதைப் பிராரத்தமொன்றிலேயும் வைத்துக் கொண்டு ஒருமையாகக் கூறுவாருமுளர். அது வழக்கல்லவென அறிக. அதற்குக் குற்றமேதென்னில், அப்படிப் பிராரத்த கன்மம் வாதியாதென்றால் ‘பவுதிக முழலுமெல்லைச் சந்தியா தொழியாது’ என்ற பதத்துக்குப் பிராரத்த கன்மம் பூததேக முள்ளமட்டும் பொருந்துதல் தவிராதென்று அறுதி கூற வழக்கில்லையாமென அறிக. அன்றியும், சித்தியாரில் “ஏன்ற உடற் கன்மம்அநு பவத்தினால் அறுத்து” (8.10) எம், திருவருட் பயனில் “ஏன்றவினை யுடலோ டேகும்” (98) எம் நூல்களில் வரும் பொருளுக்கும் விரோதமுமாமென அறிக. இதுவன்றியும், பிராரத்த கன்மம் பேதியாது ஆகாமிய கன்மம் வாதியா தென்பாருமுளர். அதுவும் வழக்கல்லவென அறிக. அதற்குக் குற்றமேதென்னில், பேதியாதென்பது போகாதென்னும் பொருள் பெற்று நிற்கையால் பூத தேகமுள்ளமட்டும் பிராரத்த கன்மம் பொருந்துதல் தவிராதென்று முற்கூறுகையாலே மீளவும் அதனை இரட்டித்துப் பொருள் படுத்த வேண்டியதில்லையாம். அல்லதூஉம், பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கிறவர்களுக்குப் பிராரத்த கன்மம் போகாதென்பது வழக்கல்ல. அஃதெங்ஙனே என்னில், பஞ்சாக்ஷரத்தை உச்சரித்தால் கன்மம் நீங்குமென்பதன்றிப் போகாதென்பது எதுபோல என்னில் ஒளஷதங் கொண்டாலும் வியாதி போகாதென்பதற்கு ஒக்குமென அறிக. ஆகையால், பிராரத்த கன்மம் பேதியாதென்பது வழக்கல்லவென அறிக. அன்றியும், வாதியா பேதியா என்பதை ஆகாமிய மொன்றிலேயும் வைத்துக்கொண்டு, பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கிற சிவஞானிகளுக்கு ஆகாமிய கன்மம் வாதியாது, அல்லாமல் வாதித்ததாகிலும் அதனாலே பேதித்து ஜநநமுண்டாக்கா தென்பாருமுளர். அதுவும் வழக்கல்லவென அறிக. அதற்குக் குற்றமேதென்னில், இச்செய்யுளிலே ‘பவுதிக முழலுமெல்லைச் சந்தியாதொழியாது’ என்று பிராரத்த கன்மத்துக்குச் சொல்லுகையினாலும், வினையுஞ் சாருமென்று ஆகாமிய கன்மத்துக்குச் சொல்லுகையினாலும், அன்றியும் இதுவே கருத்தென்பதைப் பற்றி அம்பலநாதத் தம்பிரானார் இச்செய்யுளுக்குக் கருத்தாக அருளிச் செய்தது. “உடலுறு நுகர்வும் உற்றிடும் வினையும், இடர்பட அஞ்செழுத் தியம்புக என்றது” என்று பிராரத்தத்திற்கும் ஆகாமியத்திற்குமாக அருளிச் செய்கையினால், ஆகாமியம் ஒன்றிலுங் கூட்டிப் பொருள் படுத்துகை வழக்கல்லவென அறிக. ஆகையால், பிராரத்த கன்மமானது சிவஞானிகளுக்கு வாதனாபலத்தால் புசிப்பு மாத்திரமாய் நிற்பதொழிய, சிவஞானிகளை மேலிட்டு அவர்கள் ஈடுபடத்தக்கதாக வருத்தாதென்பதே வாதியாதென்பதற்கு வழக்கென அறிக.
அப்படிப் பிராரத்த கன்மம் வந்து தாக்கினாலும் அதனாலீடு பட்டு வருத்தப்படாமல் நின்றவர்களும் உண்டோவென்னில், அப்படியுண்டு. அஃது யாரோவென்னில் அப்பரென்னுந் திருநாவுக்கரசு தம்பிரானார் சமண சமயத்தை விட்டுச் சைவத்திலே வந்ததற்கு அந்தச் சமணர் வெகுண்டுகொண்டு வேண்டும் வருத்தங்கள் செய்த வளவிலும் அதனாலீடுபட்டு வருந்தாமல் நின்றதுண்டு. அதற்கு பிம் திருக்களிற்றுப் படியாரில் “கொல்கரியின் நீற்றறையின் நஞ்சிற் கொலை தவிர்த்தல், கல்லே மிதப்பாய்க் கடல்நீந்தல் நல்ல, மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல், திருவாமூராளி செயல்” (71) எது கண்டு கொள்க. அப்பர் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு நிற்கவே அந்த அமணர் செய்யப்பட்ட வருத்தங்கள638639டல் ஈடுபட்டதில்லை என்பதற்கு பிம் தேவாரத்தில் “சொற்றுணை வேதியன் சோதி வானவன், பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக், கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சிவாயவே” (4.11.1) எது கண்டுகொள்க. அன்றியும், சிவஞானிகளிடத்திலே கன்மங்கள் வந்து தாக்கினாலும் அதனால் வருந்தார்கள் என்பதற்கு பிம் சித்தியாரில் “அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடாதாகும் ஒளடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா, எங்குற்ற கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக் கிருவினைகள் சென்றணையா முற்செய்வினை இங்குத், தங்கிப் போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த சக்கரமும் கந்தித்துச் சுழலு மாபோல், மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே” (10.6) எம், ஞானாமிர்தத்தில், “மண்வினை மாக்கள் தம்வினை முடியா திகிரி யுருட்டி யொருவி யாங்கு வருத லோவா மற்றுங் குவிவாய்த் தசும்புரை யிங்காங் கசும்புறத் துடைத்து இருங்கடி யிகவாப் பெருங்கட னல்லதை யுடையதை யுடையரோ வினையுணர்ந் தோரே” (48.11.16) எது கண்டுகொள்க.
அந்த மாதிகளிலாத ஐந்தெழுத்து எகு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைத் தோற்றமும் ஈறுமில்லாதென்றதேதென்னில், சிவனுக்குத் தோற்றமும் ஈறுமில்லாதது கொண்டே ஸ்ரீ பஞ்சாக்ஷரமுஞ் சிவனுடைய திருநாமம் ஆகையால், அதனையும் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இந்தப் பஞ்சாக்ஷரத்தைக் குருமுகாந்தரமாக அறிந்து உச்சரிக்கிற சிவஞானிகளை அந்தக் கன்மங்கள் மேலிட்டு வருத்தாதென்றதற்கு பிம் தேவாரத்தில் “விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல், உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம், பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை, நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே” (4.11.3) எம், அன்றியும் அந்தப் பஞ்சாக்ஷரத்தை அறிந்து உச்சரிக்கிறவர்களிடத்திலே சிவன் சாந்நித்தியமாவன் என்பதற்கு பிம் தேவாரத்தில் “ஏது மொன்று மறிவில ராயினும், ஓதி யஞ்செழுத் தும்முணர் வார்கட்குப், பேத மின்றி யவரவ ருள்ளத்தே, மாதுந் தாமு மகிழ்வர்மாற் பேறரே” (5.60.1) எம், அன்றியும் சித்தியாரில் ஒன்பதாஞ் சூத்திரத்தில் “அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க மதியருக்கன் அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே” (9.8) எம் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, ஆன்மாக்களுக்கு உண்டாக்கப்பட்ட கன்மங்களை தீடிக்ஷயினாலே ஆசாரியன் கிருபைசெய்து போக்கினாலும் பிராரத்த கன்மம் உடலுள்ள மட்டும் புசித்தே தொலையுமென்றும், அங்ஙனம் பிராரத்த கன்மம் உண்டாகவே ஆகாமிய கன்மம் உண்டாமென்றும், அப்படி உண்டாக்கப்பட்ட கன்மங்கள் இரண்டும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைக் குருமுகாந்தரமாகப் பெற்று உச்சரிக்கிற சிவஞானிகளுக்குப் பிராரத்த கன்மம் புசிப்பு மாத்திரமாய் வந்துபோகிற தொழிய மேலிட்டு வருத்தாதென்றும், அது அப்படி வருத்தாதது கொண்டே அதனால் உண்டாகிய ஆகாமிய கன்மமும் பேதித்துக் கிளைத்து ஜநநத்தை உண்டாக்காதென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சஞ்சித கன்மமானது தீடிக்ஷகளினாலே போமென்றும், பிராரத்த கன்மம் இந்த உடலுள்ள மட்டும் புசித்துத் தொலைய வேணுமென்றும், அதனாலுண்டாக்கப்பட்ட ஆகாமிய கன்மமானது அவர்களிடத்து உண்டாகிய ஞானத்தினாலே போமென்றும் முன்னர்ச் செய்யுளிலே அருளிச் செய்கையினால் அப்படி வாதிக்கப்பட்ட கன்மங்கள் போக்கிக் கொள்ளுகைக்கு அந்த ஞானநிலைமை கைகூடாத அவதரத்தும் பரிபாகமாக ஆன்ம லாபமாகிய பத்தாஞ் சூத்திரத்துக்கு மேலாக முற்கூறின ஆன்ம சுத்தியாகிய ஒன்பதாஞ் சூத்திரத்தின் பகுதியாகிய பஞ்சாக்ஷர தரிசனமாகிய ஐந்தெழுத்து அருள்நிலையென்னும் அதிகாரம் வைக்கப்பட்டது.
அஃதாவது, பதி பசு பாசமென்று சொல்லப்பட்ட மூன்று முதலும் ஐந்து வகையாக நிற்கையால் அந்த ஐந்தினையும் சிவனுடைய திருநாமமாகிய பஞ்சாக்ஷரமும் ஐந்தெழுத்தாகையால் அதிலே அடைத்துத் தரிசிப்பித்ததென அறிக. அது ஐந்திலும் நின்றமுறைமை மேல் “திருவெழுத்தைந்தில்” (91) என்னுஞ் செய்யுளிலே கண்டுகொள்க. இவ்வதிகாரத்துக்கு முந்தின செய்யுளாகிய “பந்தமானவை யறுத்து” என்னுஞ் செய்யுளுக்குத் தொந்தனை வருமாறு: அஃதாவது, அப்படிச் செய்யப்பட்ட தீடிக்ஷகளினாலே சஞ்சித கன்மம் போனாற் போல மற்றுள்ள கன்மங்கள் போகாதிருப்பான் ஏனென்ற மாணவகனை நோக்கிப் பிராரத்த கன்மம் இந்த உடலுள்ளமட்டும் புசித்தே தொலையுமென்பதற்கு ஒரு திருஷ்டாந்தமுகமாக அருளிச் செய்து, அப்படி வாதிக்கப்பட்ட கன்மங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைக் குருமுகாந்தரமாக அறிந்து உச்சரிக்கிற சிவஞானிகளுக்குப் புசிப்புமாத்திரமாய் வந்து போகிறதொழிய அவர்களை மேலிட்டு வருத்தமாட்டாதென்னும் முறைமையை மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

திருவெழுத் தஞ்சில் ஆன்மாத் திரோதமா சருள்சி வஞ்சூழ்
தரநடு நின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மையாகி
வருமந மிகுதி யாலே வாசியி லாசை யின்றிக்
கருவழிச் சுழலு மாறுங் காதலார்க் கோத லாமே.

தீதிலா உண்மைத் திருவைந் தெழுத்தையுங்
காதலா மவருக் கோதலா மென்றது.

பொழிப்புரை :

திருவெழுத் தஞ்சில் ஆன்மாத் திரோதமாசருள் சிவம் சிவனுடைய திருநாமமாகிய நமசிவய என்ற ஐந்தக்ஷரத்தினும் ஆன்மாவுந் திரோதசத்தியும் மலமும் அருளும் சிவமும் என்று சொல்லப்பட்ட ஐந்து முதலும் நிற்கும். அவையாவன : யகாரத்திலே ஆன்மாவும் நகாரத்திலே திரோதசத்தியும் மகாரத்திலே மலமும் வகாரத்திலே அருளும் சிகாரத்திலே சிவமுமாக நின்றதென அறிக. இவை ஐந்து முதலினுஞ் சிவமுன்னாக உச்சரிக்கும்பொழுது ; சூழ்தர நடுநின்றது திரோதமும் மலமும் ஒருபாலும் அருளுஞ் சிவமும் ஒருபாலுமாக முன்பின் சூழ்ந்துநிற்க நடுநின்றது ஆன்மா ; ஒன்றாந் தன்மையுந் தொன்மையாகி வரும் நடுவேநின்ற ஆன்மாவானது அந்த அருளறிவித்தால் அதனாலே அறிந்தும், மற்ற மலம் மறைத்தால் அதனாலே மறைப்புண்டும், இங்ஙனம் இரண்டோடுங் கூடி ஒன்றுபட்டு அதுவதுவாய் நின்றாலும், தானொரு முதலாய் வருகிறது அநாதியேயுடையது. அப்படியிருக்கவும் ; மநமிகுதியாலே மவ்வாகிய மலமும் நவ்வாகிய திரோதசத்தியும் மேலிட்டு நிற்கையாலே ; வாசியில் ஆசையின்றிக் கருவழிச் சுழலும் வவ்வாகிய அருளிலுஞ் சிவ்வாகிய சிவத்திலும் ஆசையற்று ஜநந மரணத் துக்கத்திலே நின்றழுந்தும் ; மாறுங் காதலார்க் கோதலாமே அந்த மலத்தின் கௌரவ நீங்கி அருளிலே ஆசையுடையவர்களுக்கு இந்தப் பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கலாம்.
பதி பசு பாசமென்று சொல்லப்பட்ட மூன்று முதலும் ஐவகையாக நின்றதற்கு வழியேதென்னில், சிவ்விலும் வவ்விலும் நவ்விலும் பதியின் கூறாகிய சிவமும் அருளுந் திரோத சத்தியும் நின்றதென அறிக. யவ்விலே பசுவாகிய ஆன்மா நின்றதென அறிக. மவ்விலே பாசமாகிய மலம் நின்றதென அறிக. இதிலே, முற்கூறிய பதியின் கூற்றுக்குப் பாசத்தின் பகுதியாயிருக்கப்பட்ட திரோத சத்தியைக் கூட்டினது ஏதென்னில், அஃதாவது ஆன்மாவை மறைக்கப்பட்ட ஆணவமலத்தைப் பாகம் வருத்தவேண்டி அருளானது திரோதமாய் நின்று காரியப்படுத்துகையால் அதனையும் பதியின் கூறாகச் சொல்லப்பட்டதென அறிக. அப்படியானால் அந்த அருளுக்குத் திரோத சத்தியென்று பேராக வேண்டுவான் ஏனென்னில், அந்த மலத்தோடுங் கூடிக் காரியப் படுத்துகையால் அவதரப் பெயரானதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “தூயவன் தனதோர் சத்தி திரோதான கரியதென்றும்” (2.87) எம், அன்றியும் இந்நூலினும் “முற்சினமருவு திரோதாயி கருணையாகி” (48) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. நடுநின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மையாகி வரும் எது ஆன்மா அருளோடும் மலத்தோடுங் கூடி ஒன்றுபட்டு வருமென்பதற்கு பிம் சித்தியாரில் “சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்து மசத்துமன்று, நித்தனாய்ச் சதசத்தாகி நின்றிடு மிரண்டின் பாலும்” (7.2) எது கண்டுகொள்க. மந மிகுதியாலே வாசியி லாசையின்றிக் கருவழிச் சுழலும் எகு நவ்வாகிய திரோதத்தோடும் மவ்வாகிய மலத்தோடுங் கூடிப் பிரபஞ்சப் பற்றுவிடாமல் நிற்குமளவும் ஜநந மரண துக்கத்திலே நின்று அழுந்து மென்றதற்கு பிம் சித்தியாரில் “மலம்மாயை கன்ம மாயே யந்திரோ தாயி மன்னிச், சலமாரும் பிறப்பி றப்பிற் றங்கி” (2.88) எது கண்டுகொள்க. மாறுங் காதலார்க் கோதலாமே எகு பிரபஞ்சப் பற்றுவிட்டு அருளிலே ஆசைப்பட்டவர்களுக்கென்றதற்கு பிம் திருவாசகத்தில் “அருளைப் பெறுவா னாசைப் பட்டேன் கண்டா யம்மானே” (25.1) எம், “ஆசைப்பட்டே னாட்பட்டே னுன்னடியேனே” (5.82) எம் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே பதி பசு பாச மூன்றும் ஐந்தாக நின்ற முறைமையும், இதில் பசுவாகிய ஆன்மா அந்த அருளை இழந்து மலத்தோடுங்கூடி ஜநந மரணதுக்கப்பட்டு நிற்குமுறைமையும், இந்த மலத்தின் மேலீடு நீங்கி அருளிலே ஆசைப்பட்டவர்களுக்கு இந்தப் பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கலா மென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட பஞ்சாக்ஷரத்திலே பதி பசு பாசங்கள் மூன்றும் ஐந்து வகையாக நின்ற முறைமை எங்ஙனே யென்றும் இதனை யார் உச்சரிக்கப்படுமென்றும் வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக
ஓசைகொள் அதனில் நம்மேல் ஒழித்தரு ளோங்கும் மீள
வாசியை அருளும் மாயா மற்றது பற்றா உற்றங்(கு)
ஈசனில் ஏக மாகும் இதுதிரு எழுத்தின் ஈடே.

ஓங்கிய திருவெழுத் தினையுணர்ந் துரைப்பவர்
நீங்கருஞ் சிவத்தினை நீங்கா ரென்றது.

பொழிப்புரை :

ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக ஓசை கொள் அஞ்ஞானமாகிய மலமும் அதனோடுங் கூடி இருக்கப்பட்ட திரோதான சத்தியும் ஆன்மாவைப் பொருந்தாமல் நீங்கும்படி சிவத்தை முன்னாக உச்சரிக்க ; அதனில் நீயுமப்படி உச்சரிப்பையாமாகில் ; நம்மேல் ஒழித்தருளோங்கும் நவ்வாகிய திரோத சத்தியும் மவ்வாகிய மலத்தின் மேலீட்டை நீக்கி அருளாக நின்று பிரகாசிக்கும். அதுவுமன்றியே ; மீள வாசியை அருளும் அங்ஙனம் மலத்தினின்று மீளவிட்ட வவ்வாகிய அருளும் சிவ்வாகிய சிவத்தையுஞ் தாராநிற்கும் ; மா யா அப்படி மலபாகம் வந்த மகத்தான ஆன்மா; மற்றது பற்றா உற்றாங்கு ஈசனில் ஏகமாகும் முன் சொன்ன அருள் தாரகமாகச் சென்று அந்தச் சிவத்தோடுங் கூடி இரண்டறநின் றனுபவிக்கும் ; இது திருவெழுத்தின் ஈடே இங்ஙனஞ் சொல்லப்பட்ட இது ஸ்ரீபஞ்சாக்ஷரத்தின் முறைமையாம்.
ஆசென்றதைக் குற்றத்தையுடைய மலமென்றதேதென்னில், ஆணவமலம் ஆன்மபோதத்தோடுங் கூடி அஞ்ஞானத்தை விளைத்து நிற்கையாலென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “என்றும் அஞ்ஞாங் காட்டும் ஆணவ மியைந்து நின்று” (2. 80) எது கண்டுகொள்க. உறு திரோதமென்றதை ஆணவ மலத்தோடுங் கூடி நின்று பாகம் வருத்தப்பட்ட திரோதாயியென்றது ஏதென்னில், ஆன்மாவோடும் அநாதியே கூடி வரப்பட்ட ஆணவமலத்தைப் பாகம் வருத்த வேண்டி அருளாகிய கிருபாசத்தி அதனோடுங் கூடித் திரோதமாய் மறைத்து நின்றதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “தூயவன் தனதோர்சத்தி திரோதான கரியதென்றும்” (2.87) எம், அன்றியும் இந்நூலினும் “பாகமாம் வகைநின்று திரோதான சத்தி பண்ணுதலான் மலமெனவும் பகர்வர்” (20) எம் கண்டுகொள்க. சிவமுன்னாக ஓசைகொள் என்பது சர்வமும் சிவசேட்டையாலொழிய முடியாதாகையாலே சிவத்தை முன்னிட்டுக் கொண்டு நிற்கவென்றதென அறிக. இதற்கு பிம் திருக்களிற்றுப் படியாரில் “சிவன் முதலே யன்றிமுத லில்லையென்றும்” (64) எது கண்டுகொள்க. நம்மேலொழித்தருளோங்கும் எகு நவ்வாகிய திரோதசத்தி மவ்வாகிய மலத்தின் மேலீட்டை நீக்கி அருளாய் நின்று பிரகாசிக்கு மென்றதற்கு பிம் இந்நூலில் “முற்சின மருவு திரோதாயி கருணை யாகித் திருந்தியசத் திநிபாதந் திகழும்” (48) எம், திருவெம்பாவையில் “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்” (8.7.14) எம் வருமது கண்டுகொள்க. மா யா என்றதை மகத்தான ஆன்மாவென்றதேதென்னில் அந்தச் சிவத்தை முன்னிட்டு நின்று உச்சரிக்கையினாலென அறிக. இதற்கு பிம் திருவாசகத்தில் “யானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்” (38.10) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது அந்த மலங்கள் நீங்கத்தக்கதாகச் சிவமுன்னாக உச்சரித்தால் முன்பு திரோதமாய் நின்ற அருளானது அந்தச் சிவத்துடனே கூட்ட ஆன்மா அந்தச் சிவத்தோடுங் கூடிப் பிரிவறநிற்கும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட மலமுந் திரோதாயியும் நீங்கி அந்த அருளையுஞ் சிவத்தையும் பெறும்வழி எப்படியென்று வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.
சிற்பி