இருபா இருபது


பண் :

பாடல் எண் : 1

கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.

பொழிப்புரை :

நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட யாக்கையால் வந்தவன் திருவெண்ணெய்நல்லூரிலே வாழும் மெய் கண்ட தேவனாதலால் அவனை ஒருகாற் சென்று பொருந்துவராயின் அருள்வேற்றுமையின்றி நிற்குமுறைமையை அவரே கரதலாமலகம் போற் கண்டா ரென்றவாறு.

குறிப்புரை :

உள்ளத்துக்கண் என்றது உள்ளத்தைக் கண்போலவும் சிவனை ஆதித்தன் போலவும் வேறின்மை கண்டா ரென்றுமாம். இச்செய்யுள் குரு அறிவிற்கு முறைமை கூறிற்று.

பண் :

பாடல் எண் : 2

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ
காரார் கிரகக் கலியாழ் வேனைநின்
பேரா வின்பத் திருத்திய பெரும

5. வினவ லானா துடையேன் எனதுளம்
நீங்கா நிலைமை யூங்கு முளையால்
அறிவின் மைமலம் பிறிவின் மையெனின்
ஓராலினை யுணர்த்தும் விராய்நின் றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய்

10. சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பர னெனும்பெயர் முடியா
வேறுநின் றுணர்த்தின் வியாபக மின்றாய்ப்
பேறுமின் றாகும் எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்

15. பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்
வேறோ வுடனோ விளம்பல் வேண்டுஞ்
சீறி யருளல் சிறுமை யுடைத்தால்
அறியாது கூறினை யபக்குவ பக்குவக்
குறிபார்த் தருளினங் குருமுத லாயெனின்

20. அபக்குவ மருளினும் அறியேன் மிகத்தகும்
பக்குவம் வேண்டிற் பயனிலை நின்னாற்
பக்குவ மதனாற் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தா தன்னோ
தன்னொப் பாரிலி யென்பதுந் தகுமே

25. மும்மலஞ் சடமணு மூப்பிள மையின்நீ
நின்மலன் பருவம் நிகழ்த்திய தியார்க்கோ
உணர்வெழு நீக்கத்தை ஓதிய தெனினே
இணையிலி யாயினை யென்பதை யறியேன்
யானே நீக்கினுந் தானே நீக்கினுங்

30. கோனே வேண்டா கூறல் வேண்டுங்
காண்பார் யார்கொல் காட்டாக் காலெனும்
மாண்புரை யுணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞா னத்தின்
ஆட்பா லவர்க்கருள் என்பதை யறியே.

பொழிப்புரை :

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென இடமகன்ற புடவியில் ஆதித்தனையொக்க (இதன்றிக் கண்ணை விட்டு இருள் மறைப்பு நீங்கிய உலகத்தை இரவி கிரணத்தாலே இருளோட்டி அந்த ஞாலத்தைக் காட்டிய முறைமைபோல என்பாரு முளர்); வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ ஆணவமலத்தாலே மறைப்புண்டுகிடந்த என்னைக் காட்டுதற்குத் திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றியருளும் மெய்கண்டதேவனே; காரார் கிரகக் கலி யாழ்வேனை நின் பேரா இன்பத்து இருத்திய பெரும கலியாகிய அஞ்ஞானச் சிறையிலே யகப்பட்டுத் துக்கமுற்றழுந்தும் என்னை உனது நீங்காத ஆனந்தத்திலே யிருத்திவைத்த தலைவனே; வினவ லானா துடையேன் அடியேன் தேவரீரை யொருவினாவுத லுடையேனாகின்றேன் அமையாதவனாதலால், அவ்வினாவாவது; என துளம் நீங்கா நிலைமை யூங்கும் உளையால் என்னிடத்து விட்டு நீங்காமல் நிற்குமுறைமை அனாதியிலுமுண்டாவையாகையால்; அறிவின்மை அப்பொழுது தேவரீரை யறியாதிருப்பானேனென்ன; மலம் பிறிவின்மை யெனின் மலம் நீங்காமையால் தெரிந்திலையெனின்; ஒராலினை யுணர்த்தும் ஆனால் இப்பொழுது தேவரீர் இந்த அறியாமல் (=அறியாமை) போமளவும் ஓரிடத்தொதுங்கி நின்றீரோவென வினாவில்; விராய் நின்றனையேல் எவ்விடத்தும் நிறைந்து நிற்பேனென்று சொல்லுகின்றீராயின்; திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய் ஈதொரு தெய்வீகமானதோர் ஆச்சரியம், அப்படி யிருளோடு கூடி நிற்கிலும் இருட்குப் பகையாவனென்பது மில்லையாம், அதுவுமின்றி; சுத்தன் அமலன் சோதி நாயகன் முத்தன் பரம்பர னெனும்பெயர் முடியா அனாதிசுத்தன் நின்மலன் ஓங்கொளி பாசப்பகைவன் ஆன்ம நாயகன் முத்தசித்து மேலாகிய பரன் என்னும் பெயர் உமக்குண்டாகாது; வேறுநின் றுணர்த்தின் வியாபக மின்றாய்ப் பேறு மின்றாகும் எமக்கு எம் பெரும அத்தன்மை கூடிநிற்றலின்றி வேற்றுமையாக நின்று அறிவிப்பே னென்னின் வியாத்தனென்பது மில்லையாய்ச் சாயுச்சியப் பேறும் எமக்கில்லையாம், எங்கோவே; (வியாத்தமின்றாய் என்பதற்கு ஆன்மாவை நீங்கி நின்றறிவிப்பேனென்னின் ஆன்மாவுக் கறிவில்லை யென்று சொல்லுவாருமுளர்.) இருநிலந்தீநீர் இயமானன் காலெனும் பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின் ‘இருநிலனாய்த் தீயாகி’(அப்பர் 6 : 94 :1) என்னுந் திருப்பாட்டின்படி நின்றவையுடையே னென்கிறதுந் தலைவனே யுனக்கில்லை யாதலால்; வேறோவுடனோ விளம்பல்வேண்டுஞ் சீறியருளல் சிறுமையுடைத்தால் தேவரீர் நிலைமை வேற்றுமையாயோ வேறறக்கூடியோ நிற்பதென்று அருளல் வேண்டும், ஆன்மாவுக்கு அஞ்ஞானமே குணம் ஆதலில் தேவரீர் திருவுள்ளங் கோபமுண்டாவதல்ல; அறியாது கூறினை அபக்குவ அபக்குவனாகையாலே இரவியுங் கண்ணும் இருளும்போல நின்ற நிலைமையறியாது கூறினை; பக்குவக்குறி பார்த்தருளினம் குருமுதலாய் எனின் பக்குவமாகியவனைப் பார்த்து நாம் குருவாய் வந்து தோன்றுவோமென்று அருளினையாயின்; அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும் பக்குவம் வேண்டிற் பயனிலை நின்னால் தேவரீல் குருவாயெழுந்தருளி யுபதேசிக்கிலும் அபக்குவனாதலாலறியேன், மிக்க பக்குவம் வேணுமாயின் தேவரீரை வழிபட வேண்டாம், அந்தப் பக்குவத்தையே வழிபட வேண்டுமத்தனை; பக்குவ மதனாற் பயன் நீ வரினே அப்படியன்று, பக்குவமுண்டாவதுந் தேவரீர் எழுந்தருளுகின்றதென் றருளினீராகில்; நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ தன்னொப்பாரிலி என்பதுந் தகுமே தேவரீரைப் பக்குவம் அறிவிக்க மாட்டாது, அறிவிக்குமாகில் அந்தப் பக்குவம் முதலியாம், அதனால் தேவரீர் இணையிலியென்பதும் நன்றாமே; மும்மலஞ் சடமணு மூப்பிளமையில் நீ நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ அந்தப் பக்குவம் மலங்கட்கென்னில் அவை சடமாதலால் அதற்கு வேண்டாம், ஆன்மாவுக் கென்னின் மூப்பிளமை யில்லையாதலால் ஆன்மாவுக்கும் வேண்டாம், தேவரீர்க்கென்னின் தேவரீர் நின்மலனாதலால் தேவரீர்க்கும் வேண்டாம், இப்பக்குவம் யார்க்கு நிகழ்த்தியதோ வென்னின்; உணர்வெழும் நீக்கத்தை ™ஓதியதெனினே இருவினை யொப்புஞ் சத்திநிபாதமுண்டாய் ஞானம் பிரகாசிக்குமிடத்து மறைப்பு நீங்கு மவதரத்தைக் காணப் பக்குவ மென்றீராயின்; இணையிலி யாயினை யென்பதை யறியேன் தேவரீர்க்கும் இணையிலி யென்பதில்லையாமது யாதெனின்; யானே நீக்கினுந் தானே நீங்கினுங் கோனே வேண்டா கூறல் வேண்டும் அவ்விருள் பக்குவத்திலே தானே நீங்குமாயினும் நானே நீக்குவேனாயினுந் தேவரீர்வேண்டாவாம், இத்தன்மை யருளவேண்டும் அது வருமுறைமை; காண்பார் யார்கொல் காட்டாக்கால் எனும் மாண்புரை யுணர்ந்திலை மன்ற பாண்டியன் கேட்பக் கிளர்த்த மெய்ஞ்ஞானத்தின் ஆட்பாலவர்க்கருள் என்பதை யறியே ‘ஆட்டு வித்தாலாரொருவ ராடாதாரே’ (அப்பர் 6 :95:3) என்னுந் திருப்பாட்டிலே ‘காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாடக்கலே’ யென்றதை நிச்சயமாக அறிந்தாயில்லை, அதுவுமன்றிப் பாண்டியன் காண எழுதி வைகையிலிட்ட மெய்ம்மைப் பொருளில் ‘ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும்’ (சம்பந்தர் 3 : 54 : 4) என்னுந் திருப்பாட்டின்படிக் கொள்வதுமே அறிவேனென்றவாறு.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

அறிவறி யாமை யிரண்டும் அடியேன்
செறிதலான் மெய்கண்ட தேவே - அறிவோ
அறியேனோ யாதென்று கூறுகேன் ஆய்ந்து
குறிமாறு கொள்ளாமற் கூறு.

பொழிப்புரை :

அறிவு அறியாமை யிரண்டும் அடியேன் செறிதலால் மெய்கண்ட தேவே அறிவோ வறியேனோ யாதென்று கூறுகேன் ஆய்ந்து குறிமாறு கொள்ளாமற் கூறுதேவனே கண்போல இருளிலே கூடினபோது இருளாய் அறிவற்று ஒளியோடு கூடினபோது ஒளியாய் அறிவுண்டாயுஞ் செய்யுங் கண்போலவென்றீர், மெய்கண்டதேவனே, அறிவும் அறியாமையும் அடியேன் கூடியறிதலால் இந்த அறிவாகிய சிவமோ யான் அறியாமையாகிய பாசமோவென்ன எனதுண்மையை மாறுபடாமல் இந்த வழியை ஆராய்ந்தருளென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், அறிவோடு கூடினபோது அறிவாயும் அறியாமையோடே கூடினபோது அறியாமலுமாகில் ஆன்மாவின் உண்மையாதென்றதற்கு உத்தரம்; ஆன்மா அறிவிக்க அறியும், அறிவு கூடி அதுதானாயிருக்கும்; இதற்குச் சதசத்தென்றும் பெயராம்.

பண் :

பாடல் எண் : 4

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கின் விகற்பங் கற்பங்
குரோதம் மோகங் கொலையஞர் மதநகை
விராயெண் குணனுமா ணவமென விளம்பினை
5. அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
10. அறுவகைக் குணனுங் கருமத் தருளினை
ஆங்கவை தானும் நீங்காது நின்று
தன்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி யென்பதொன் றின்றா மன்ன
ஊரும் பேரு முருவுங் கொண்டென்
15. ஊரும் பேரு முருவுங் கெடுத்த
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியிற்
சைவ சிகாமணி மெய்யர் மெய்ய
மும்மலஞ் சடமென மொழிந்தனை யம்ம
மாறுகோள் கூறல் போலுந் தேறுஞ்
20. சடஞ்செய லதனைச் சார்ந்திடு மெனினே
கடம்பட மதனுட் கண்டில விடம்படும்
ஊன்றிரள் போன்ற தாயில் தோன்றி
யணைந்தாங் ககறல் வேண்டுங் குணங்களும்
பன்மையின் றாகும் எம்மைவந் தணையத்
25. தானே மாட்டா தியானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மல னாயிட்டு
இயல்பெனிற் போகா தென்றும் மயல்கெடப்
பந்தம் வந்த வாறிங்கு
அந்த மாதி யில்லாய் அருளே.

பொழிப்புரை :

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி வேறு கிளக்கின் விகற்பங் கற்பங் குராதம் மோகங் கொலை யஞர் மத நகை விராய் எண் குணனும் ஆணவமென விளம்பினை சொல்லப்பட்ட மும்மலங்களின் குணம் ஆணவமலத்துக்கு வேற்றுமையாகச் சொல்லுமிடத்து, பிடித்தது விடாதாகை - க, மோகமிகுத்துச் சொல்லுகை - உ, கோபமி டையறாமை - ங, அறியாமை விஞ்சுதல் - ச, கொலைத் தொழில் நினைவு விஞ்சுதல் - ரு ,எப்பொழுதும் வருத்தமுறுதல் - சா, யானெனது விஞ்சுதல் - எ, மாச்சரியம் விடாநகை - அ; இவை எட்டும் ஆணமலத்தின் குணமாமம் ; அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் பைசால குநியம் மாச்சரியம் பய மாவேழ்குணனும் மாயைக் கருளினை பலகலை கற்றும் அறியாமை - க, களவு செய்கை - உ, கண்டது மறுத்தல் - ங, அறிந்தது மறுத்தல் - ச, அழகு பொருந்த உண்டாயும் ஈயானாகை - ரு, அத்தத்தின் மேலே மாச்சரியம் - சா, அழுக்கறாமை - எ; இவை ஏழும் மாயைக்குள்ள குணமாம்; இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும் விடுத்தலும் பரநித்தை மேவல் என்று எடுத்த அறுவகைக் குணனுங் கருமத் தருளினை மடிவந்திருத்தல் - க, பொசிப்பற்றுக் கிடக்கை - உ, புண்ணியத்தைச் செய்கை - ங, பாவத்தைச் செய்கை - ச, தொழிலைச் செய்யாமல் விடுகை - ரு, பரநிந்தனை செய்கை - சா என ஆறு குணங்களுங் கன்மத்துக் கென்றருளிச் செய்தாய்; ஆங்கவை தானும் நீங்காது நின்று தன்வழிச் செலுத்தித் தானே தானாய் என்வழியென்பதொன் றின்றாம் மன்ன எட்டு ஏழு ஆறு குணங்களையுடைய ஆணவம் மாயை கன்மென்று சொல்லப்பட்டவை அறியாமையாயுந் தனுகரணாதியாயும் மனோவாக்குக் காயங்களால் வரும் இதமகிதங்களாயும் நீங்காமல் நின்று தன்தன் வசங்களிலே என்னையாக்கித் தானே தானாகி நின்று என்னை நீங்கியறிய என்வழி யில்லையாகா நின்றது, தலைவனே; ஊரும் பேரும் உருவுங்கொண்டு என் ஊரும் பேரும் உருவுங் கெடுத்த பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம்பதியிற் சைவ சிகாமணி மெய்யர் மெய்ய உனக்குத் தனித்தொரு ஊருமில்லையாயினும் ஊரின்னதென்றும், எல்லாம் பேராயிருக்கவும் பேரின்னதென்றும், எல்லாம் உருவாயிருக்கவும் உருவின்னதென்றுங் கொண்டெழுந்தருளி வந்து, தானொழிந்தெனக்கு ஊரும் பேரும் உருவுமில்லை என்னும்படி நீக்கிப் பெண்ணையாற்றுப் புனல் சூழப்பட்ட வெண்ணெய்நல்லூரில் வந்தவன் சைவசித்தாந்தத்துக்கோர் அபிடேக இரத்தினமாகியவன் மெய்யர்க்கு மெய்யனாகிய மெய்கண்டதேவனே முன்னே; மும்மலஞ் சடமென மொழிந்தனையம்மமாறுகோள் கூறல் போலும் மூன்று மலமுஞ் சடமெனக் கூறினாய் ஈதோராச்சரியம், முன்னொடுபின் மாறுபடுமதாகாநின்றது; தேறுஞ் சடஞ்செயலதனைச் சார்ந்திடு மெனினே கடம்பட மதனுட் கண்டில இப்படி யிருபத்தொரு விதமான ஆணவம் மாயை கன்மங்களுஞ் செயலைச் சாராது சாருமாயில் சடமாகிய கடபடாதிகளிடத்துக் காணப்பட்டதில்லையே யெனின்; விடம்படும் ஊன்றிரள் போன்றதாயில் தோன்றி யணைந்தாங்கு அகறல்வேண்டும் உடலைக் கரந்த நஞ்சு உடலைப் பேதித்துத் தனக்கறிவில்லையாயினும் விகாரங்களைச் செய்விக்குமா போலவென்னின், அவை போல ஒரு கால் தோன்றி நீங்கிவிட வேண்டும் அதுவுமின்றி; குணங்களும் பன்மையின்றாகும் வெவ்வேறாக எட்டும் ஏழும் ஆறுமாகப் பலவகைக் குணங்களு மில்லையாம்; எம்மை வந்து அணையத் தானோ மாட்டாது இம்மலங்கள் என்னை வந்து தானே கூடமாட்டாது; யானோ செய்கிலன் யான் மலங்களை யறிந்து கூடிக் கொள்வதில்லை; நீயோ செய்யாய் நின்மலனாயிட்டு உன்னாற் செய்விக்கப்படுமெனின் நீ நின்மலனாதலாற் கூடிச் செய்விப்பதுமில்லையாம்; இயல்பெனிற் போகாது ஆன்மாக்களுக்குத் தானே வந்து கூடுவது இயல்பெனில் முத்தியிலும் வந்து கூடும்; என்றும் மயல்கெட எப்போதும் மயக்கங்கெட; பந்தம் வந்தவாறு இங்கு அந்தமாதியில்லாய் அருளே எமக்குப் பாசங்கூடிய வழியை முடிவும் ஈறுமில்லாதவனே சொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாவுக்குப் பாசம் கூடியமுறைமையும் நீங்கிய முறைமையும் எப்படி என்று வினாவ அதற்குத்தரம்; செம்புக்குக் களிம்புபோல ஆணவம் பொருந்தியது காரணமின்றி அனாதியேயுள்ளதாம்; அது அனாதியாகவே செம்புக்குக் களிம்பும் அனாதியாக சிவப்பும் நாற்ற(மு)ங் கூடிக் கிடக்குமாப்போல மும்மலங்களும் ஆன்மாவுக்கு அனாதியாம், சத்தியாலே கூட்டியும் பிரித்துஞ் செய்வனென்பது கருத்து. பாசத்துக்கு நின்ற நிலைமை கண்டதொழிந்து அதற்குப் போக்குவரத்தில்லையென்பது பொருந்தப் பொருளாம்.

பண் :

பாடல் எண் : 5

அருள்முன்பு நில்லா தடியேற்குக் கண்ணின்(று)
இருள்கண்ட வாறென்கொல் எந்தாய் – மருள்கொண்ட
மாலையா வெண்ணெய்வாழ் மன்னவா என்னுடைய
மாலையா மாற்ற மதி.

பொழிப்புரை :

அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று இருள் கண்டவாறு என்கொல் எந்தாய் மருள் கொண்ட மாலையாய் வெண்ணெய் வாழ் மன்னவா என்னுடைய மால் ஐயா மாற்ற மதி - இப்படிக் கூறிய மலங்களை இப்பொழுது நீக்குமளவில் அருள்கூடில் இருளும் வெளியுமாய் நில்லாது அடியேனுக்கு அருளொழிய வேறிடமில்லை நின்று நீக்க ஆதலால் இருளையறிந்தவழி எப்படி, எம்முடைய சுவாமியே, மணம் பொருந்திய மாலையினையுடையாய், திருவெண்ணெய் நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவனே, எனக்குண்டாகிய மயக்கத்தை ஐயா போம்படி இதுவென்று புத்தி பண்ணுவாயாக என்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், சதசத்தாகிய ஆன்மா இருளை நீங்கின தெப்படி யென வினாவ அதற்குத்தரம்; ‘சத்தி கொடுநித்தன் தானறியா நின்ற முறை வைத்தலது சுத்தியா வை.’

பண் :

பாடல் எண் : 6

மதிநுதல் பாக னாகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்தென்
உளம்வெளி செய்துன் அளவில் காட்சி
காட்டியெற் காட்டினை எனினும் நாட்டிஎன்
5. உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்
பாதாள சத்தி பரியந்த மாக
ஓதி யுணர்ந்த நானே ஏக
முழுத்தும்நின் றனனே முதல்வ முழுத்தும்
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
10. ஆங்கைந் தவத்தையும் அடைந்தனன் நீங்கிப்
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
எவ்விடத் துண்மையும் இவ்விடத் தாதலுஞ்
செல்லிடத் தெய்தலுந் தெரித்த மூன்றினும்
ஒன்றெனக் கருளுல் வேண்டும் என்றும்
15. இல்ல திலதாய் உள்ள துளதெனுஞ்
சொல்லே சொல்லாய்ச் சொல்லுங் காலைச்
சிறுத்தலும் பெருத்தலு மிலவே நிறுத்தி
யானை யெறும்பி னானது போலெனின்
ஞான மன்றவை காய வாழ்க்கை
20. மற்றவை யடைந்தன வுளவெனின் அற்றன்று
விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டுவந் தனவென வேண்டும் நட்ட
பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையு
முரியது நினக்கே யுண்மை பெரியோய்
25. எனக்கின் றாகும் என்றும்
மனக்கினி யாயினி மற்றது மொழியே.

பொழிப்புரை :

மதிநுதல் பாகனாகிக் கதிதர வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்து என்னுளம் வெளிசெய்து உன் அளவில் காட்சி காட்டி எற் காட்டினை மதிபோலும் நுதலினையுடையாளைப் பாகத்திலுள்ள நீ எனக்கு முத்திதரவேண்டித் திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றி என்னை யாண்டருள்வதாய் உள்புகுந்து என்னுள்ளத்தை வெளியாக்கி எனக்கு உனதெல்லையற்ற காட்சியைத் தெரிசிப்பித்து எண்னுண்மையைக் காட்டினா யாயின்; எனினும் நாட்டி என் உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல் பாதாளசத்தி பரியந்தமாக ஓதியுணர்ந்த நானே அப்படி யாயினீராயின், எனது தலைவனே, என் முற்பட்ட சிறுமையும் இப்பொழுதுண்டான பெருமையும் எனக்கே சொல்லில் பாதாளசத்தி முதலாகத் தலைவன் தன்மையீறாக நானே ஓதியறிந்ததுண்டாதலால்; ஏக முழுத்தும் நின்றனனே முதல்வ அறிவோடு கூடினபொழுது அறிவுதானாக நிறைந்து நின்றேனாயில், தலைவனே; முழுத்தும் புலன்கடைப் பூழை நுழைந்தனன் என்குணமான புலன்களினுழை வழியிலே எப்பொழுதும் நுழைந்து திரிவேனாம்; கலங்கி ஆங்கு ஐந்தவத்தையும் அடைந்தனன் இவ்வளவும் அறியு மாத்திரத்தானுங் கலங்கிப் பஞ்சவத்தைப்பட்டு நிற்பேன்; நீங்கிப் போக்குவரவு புரிந்தனன் அதுவுமின்றி யிவ்வுடல் நீங்கில் வானிலும் நிரையங்களினும் போக்குவரத்துஞ் செய்து திரிவேன் ; தூக்கி இவையிற்றை ஆராயுங்காலத்து ; எவ்விடத்துண்மையும் இவ்விடத்தாதலுஞ் செல்லிடத் தெய்தலுந் தெரித்து மூன்றினும் ஒன்றெனக்கு அருளல் வேண்டும் யான் முன் எல்லாவற்றையு மோதியுணர்ந்த எல்லாவிடத்தும் நீங்கினவிடத்துந் தன்னுண்மையும். செல்லப்பட்ட பரத்தொடு கூடிநிற்றலும் ஆகிய மூன்றையும் விசாரித்து இதனிலே யொன்றை உண்மையாக எனக்கருளல்வேண்டும்; என்றும் இல்லது இலதாய் உள்ளது உளதெனுஞ் சொல்லே சொல்லாய்ச் சொல்லுங்காலை உலகத்து உள்ளதுளதாய் இல்லதில்லையா மென்னுஞ் சொல் தவறாது கொள்ளுமளவில்; சிறுத்தலும் பெருத்தலுமிலவே நிறுத்தி ஒருகாற் சிறுத்தும் ஒருகாற் பெருத்துஞ் செய்யாது ஒரு பொருள் நிறுத்தி; யானை எறும்பினானது போலெனின் ஞானமின்றிவை காயவாழ்க்கை யானையும் எறும்பும் போலப் பெருத்துஞ் சிறுத்து மிருக்குமெனின் உடற்பெருமையுஞ் சிறுமையுமொழிந்து ஞானமல்ல அச்சொல்லை விடுக; மற்றவையடைந்தன வுளவெனின் அவ்விடத்தில் அவ்வுடலடைந்த ஆன்மாவு மவ்வுடலளவுஞ் சிறுத்தும் பெருத்துமுளதே யென்கின்றீராயின்; அற்றன்று சொல்லுகிற முறைமைபோலல்லர் காணும்; விட்ட குறையின் அறிந்து தொன்றுதொட்டு வந்தனவெனவேண்டும் எடுத்த உடலுக்கடுத்த வறிவாதலால் தான் பொசித்து விட்ட குறையை யறிந்து உடல் பெருமை சிறுமை தொந்தித்து வந்தனவாக வேண்டும்; நட்ட பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையும் உரியது நினக்கே உண்மை பொருத்தப்பட்ட பெரியதற்குப் பெருமையாயுஞ் சிறியதற்குச் சிறுமையாயு மிருத்தலும் உனக்குள்ளதாமுண்மையாம்; பெரியோய் எனக் கின்றாகும் என்றும் மனக்கினியாய் இனி மற்றது மொழியே தம்பிரானே, எனக்குக் குணமில்லையாமாதலால் மனதுக்கு என்றும் இனிமை தங்கி யொருதன்மையாக உள்ளவனே இந்த முறையை யருளென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள்; ஆன்மாக் கூடினது தானாவனாதலால் அருளொடு கூடினபோது அருளாய் நிற்பவன் என்றதனை வினாயது; அதற்குத்தரம்; இருளொடு கூடி இருளாய் விழித்த விழி ஒளியொடு கூடினபோது ஒளிதானாய் நின்றது கண்டாற்போல, ஆன்மாவும் எப்போதுங் கூடினதுதானாய் நிற்பன், அருளிலும் மலத்திலும் அப்படியே, அருளொடு கூடினவற்கு அருளும் மலத்தொடு கூடினவற்கு மலமும் இல்லையென்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 7

மொழிந்த அவத்தை முதலடியேன் நின்றாங்(கு)
ஒழிந்தன நான்கும் உணர - இழிந்தறிந்(து)
ஏறிற்றிங் கில்லை எழில்வெண்ணெய் மெய்த்தேவே
தேறிற்றென் கொண்டு தெரித்து.

பொழிப்புரை :

மொழிந்த அவத்தை முதலடியேன் நின்றாங்கு ஒழிந்தன நான்கும் உணர இழிந்தறிந்து ஏறிற்றிங்கில்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே தேறிற்றென் கொண்டு தெரித்து இப்படியே நீங்கித் தெரிசிக்கும் அவதரத்தில் அவத்தைகளை அடியேன் அறிந்து நீங்குமளவில் முற்படு மதீதத்தில் அடியேன் தானேயாய் நின்ற விடத்தினின்றுந் துரியஞ் சுழுத்தி சொப்பனஞ் சாக்கிரமென்னும் நாலவத்தையும் ஆராயுமிடத்துச் சாக்கிரத்திற் கருவிகள் வந்து யிறங்கி யேறியதில்லை; தேவரீரது ஞானமும் வந்து பொருந்தாது; ஆதலால் அவ்விடத்திலே எது கருவியாக அறிந்தேன், அழகு பொருந்திய திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டதேவனே, அருளவேணுமென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், அவத்தை நீங்குமிடத்து ஆன்மாவுக்குக் கருவியேதென வினவ, அதற்குத்தரம்:‘அஞ்சாகுஞ் சாக்கிரத்தில் நான்குகனா மேலடைவே எஞ்சாது மூன்றி ரண்டொன் றென்.’

பண் :

பாடல் எண் : 8

தெரித்ததென் கொண்டெனை யுருத்திர பசுபதி
செடிய னேனையும் அடிமை செய்யப்
படிவங் கொண்டு முடிவுகாட் டில்லாப்
பெண்ணை யாளும் வெண்ணெய் மெய்ய
5. அவத்தையிற் றெரித்தன னாயின் அவத்தை
தெரிந்தாங் கிரித்தலு மிலனே திருத்துங்
காலம் முதலிய கருவி யாயின்
மாலும் பிரமனும் வந்தெனை யடையார்
ஓதுங் காலை யொன்றையொன் றுணரா
10. சேதந மன்றவை பேதைச் செயலுமிச்
சேதந வானாற் செயல் கொள வேண்டும்
போத மவற்றைப் புணர்வதை யறியேன்
கருவித் திரளினுங் காண்பதோ ரொன்றாம்
ஒருவுத லறியேன் உணர்வில னாதலின்
15. நிற்கொடு கண்டன னாயின் எற்குக்
கருவி யாயினை பெருமையு மிலவே
யானே பிரமங் கோனே வேண்டா
இன்னுங் கேண்மோ மன்ன நின்னின்
முன்ன மென்றன் உணர்வில னாதலின்
20. என்னைக் காண்பினுங் காண்பல காணாது
உன்னைக் காண்பினுங் காண்பல வுன்னோடு
ஒருங்கு காண்பினுங் காண்பல அருந்துணை
கண்ட வாறே தெனது கண்ணே
அண்ட வாண அருட்பெருங் கடலே.

பொழிப்புரை :

தெரித்ததென் கொண்டெனை உருத்திரபசுபதிஅவத்தைக்குச் சுத்தத்துவங்கள் கொண்டறிந்தேனாகில், சங்கார கர்த்தாவாகிய பசுபதியே, என்னை யான் அறியுமிடத்து யாது கொண்டறிந்தேன்; செடியனேனையும் அடிமை செய்யப் படிவங் கொண்டு முடிவு காட்டில்லாப் பெண்ணையாளும் வெண்ணெய் மெய்ய அஞ்ஞானியாகிய என்னையும் அடிமை கொள்ள வேண்டி யாவருங்காணத் திருமேனி கொண்டருளி எல்லையிறந்த பல்லேருழவு பயில்தல் விளங்கிய திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவனே; அவத்தையில் தெரித்தனனாயின் அவத்தை தெரித்தாங்கு இரித்தலுமிலனே அவத்தையைப் போல அறிந்தேனாயின் எல்லாம் நீங்கியவிடத்தும் அவத்தை காண்டலும் இருத்தலு முண்டாகாது; திருத்துங் காலம் முதலிய கருவியாயின் மாலும் பிரமனும் வந்தெனை யடையார் அறிவிக்கப்படுங் காலத்தத்துவங்களைக் கொண்டறிந்தேன் என்னில் பிரம விட்டுணுக்களும் எனக்கொவ்வாதாம்; ஓதுங்காலை யொன்றையொன் றுணரா அதுவுமன்றியும் அந்தக் கலாதிகளும் அந்தக்கரணங்களுஞ் சொல்லுமிடத்து ஒன்றையொன்று உணராது; சேதனமன்றவை பேதைச் செயலுமிச் சேதனவானாற் செயல்கொள வேண்டும் அதுவுமன்றி அவை அறிவுடையவு மல்லவாய்ச் சடமுமாய் ஆன்மாக் கூடியல்லது செயற்படாது ஆதலாற் கருவி கொண்டறிந்தவல்லவாம்; போதமவற்றைப் புணர்வதை யறியேன் இப்படிக் கூடியறியச் செய்தே நாமல்லோ கூடியறிகிறோமென்று நானறியேனே; கருவித்திரளினுங் காண்பதோ ரொன்றாம் அவை தன்னை யறியுமிடத்து ஓரொரு கருவியாகவல்லது அறியமாட்டேன்; ஒருவுதலறியேன் உணர்விலனாதலின் அக்கருவிதான் கூடுதலும் நீங்குதலு மறியேன் அறிவிலேன் ஆதலாலே; நிற்கொடு கண்டனனாயின் எற்குக் கருவியாயினை பெருமையுமிலவே நின்னைக் கொண்டு கண்டேனாயின் எனக்கு நீ யறிதற்குக் கருவியாயினாய், நின் பெருமையுமிலையாம்; யானே பிரமம் கோனே வேண்டாம் உன்னை நான் கருவியாகக் கொண்டறிவேனாயின் நானே தலைவனாம், நீ தலைவனாக வேண்டுவதில்லை; இன்னுங்கேண்மோ மன்ன இவையுமன்றி யின்னமுங் கேட்பாயாகத் தலைவனே; நின்னின் முன்னம் என்றன் உணர்விலனாதலின் என்னைக் காண்பினுங் காண்பல என்னை யறியுமிடத்து உன்னை உதவியாகக் கொண்டு காணுமுறைமை யில்லாதபடியாலே கண்டதில்லை; காணாது என்னையானறிவேனாகில் நானென்றும் அறிவென்றும் இரண்டாம்; உன்னைக் காண்பினுங் காண்பல கருவிகளைக் கொண்டு உன்னைக் காண்பினுங் கண்டதல்லவாம்; உன்னோடு ஒருங்கு காண்பினுங் காண்பல அவை யிரண்டுமின்றி உன்னைக் கொண்டு எல்லாவற்றையுங் காண்பினுங் கண்டதல்ல; அருந்துணை கண்டவாறு எது எனது கண்ணே அண்டவாண அருட்பெருங்கடலே உன்னைத் துணையாகக் கொண்டறிவேனாகவேண்டும், அஃதல்லவாயின் என்னை யானறிந்தபடி எப்படி, தேவர்கள் தேவனே யாவரும் பருகுங் கருணைக்கடலே அருளே யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாத் தன்னையறியுமிடத்துக் கருவி யேதென வினாவ, அதற்குத்தரம்: ‘கண்ணாடி தானிடமாக் கண்ணதனைக் கண்டதுபோல் உண்ணா டொளியுன் னொளி.’

பண் :

பாடல் எண் : 9

கடலமுதே வெண்ணெய்க் கரும்பேயென் கண்ணே
உடலகத்து மூலத் தொடுங்கச் – சடலக்
கருவியா தாங்குணர்த்தக் காண்பதுதா னென்னை
மருவியா தென்றுரைக்க மன்.

பொழிப்புரை :

கடலமுதே வெண்ணெய்க் கரும்பே என் கண்ணே உடலகத்து மூலத்தொடுங்கச் சடலக் கருவியாதாங் குணர்த்தக் காண்பதுதானென்னை மருவியாதென்றுரைக்க மன்கடலிடத்தமுதத்தை யொப்பானே வெண்ணெய் நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானேவெண்ணெல் நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானே வெண்ணெய்நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானே எனக்கறிவே நானறிவிக்க அறிந்தவனாயின் அவத்தையில் மூலதாரத்திலே யானறியுமிடத்துக் கருவிகளேது அவ்விடத்துணர்த்தக் காணப்பட்டது (யாது) இவற்றைத் தெரிய இன்னதென்று சொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாவுக் கதீதத்திலும் உணர்த்துமுறைமை எப்படியென்ன வினாவ அதற்குத்தரம் : அதீதத்துப் பிரகிருதி கூடி நிற்கையால் காலம் நியதி கூடும்; துரியத்துக் கலை வித்தை அராகங்கூடும். இதற்குதாரணம் (போற்றிப்பஃறெடை 2936) :மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக்
கால நியிதி யதுகாட்டி – மேலோங்கு
முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்த அராக மவைமுன்பு – தந்த
தொழிலறி விச்சை துணையாக மானின்
எழிலுடைய முக்குணமு மெய்தி – மருளோடு
மன்னு மிதயத்துச் சித்தத்தாற் கண்டபொருள்
இன்ன பொருளென் றியம்பவொண்ணா – அந்நிலைபோய்க்
கண்ட வியன்கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக்
கொண்டுநிய மித்தற்றை நாட்கொடுக்கப் – பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும்வகை யங்கே மருவி - உருவுடனின்
றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற்
போங்கரவி யெல்லாம் புகுந்தீண்டி – நீங்காத
முன்னை மலத்தினிருள் மூடா வகையகத்துள்
துன்னுமிருள் நீக்குஞ் சுடரேபோல் – அந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரிய
ராக்கிப் பணித்த வறம்போற்றி.
இது அதீதத்திலுணர்த்து முறைமை கண்டு கொள்க.

பண் :

பாடல் எண் : 10

மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அந்நிய மாக்கி அருள்வழி யதனான்
என்னுள் புகுந்தனை யெனினே முன்னைத்
திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு
5. ஒருவுத லின்றி யுடந்தையே யாகும்
பெருநிலை யாகல் வேண்டும் மருவிடு
மும்மல மதனால் எம்முள்நின் றிலையெனின்
அம்மலத் திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழற்
சேர்த்தலு மிலவாய்ச் சார்பவை பற்றிப்
10. பெயர்வில னாகும் பெரும தீர்வின்று
அமைந்த கருமத் தியைந்ததை யல்லது
சமைந்தன விலவெனச் சாற்றில் அமைந்த
மாயேயங் கன்ம மாமல மூன்றும்
மாயா தாகவே யார்ச்சந மாயையின்
15. உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று
நிற்சம மாயி னல்லது நிற்பெறல்
இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு
மேயா தாகும் நாயே னுளத்து
நின்றனை யென்பனோ நின்றிலை யென்பனோ
20. பொன்றிய பொன்றிற் றிலமல மென்பனோ
ஒன்றினை யுரைத்தருள் மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி
கைகண் தலைவாய் கால்செவி மூக்குயர்
மெய்கொண் டென்வினை வேரறப் பறித்த
25. மெய்கண்ட தேவ வினையிலி
மைகொண்ட கண்ட வழுவிலென் மதியே.

பொழிப்புரை :

மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அந்நியமாக்கி அருள்வழியதனான் என்னுள் புகுந்தனையெனினே தலைவனே நீ கன்மந் துலையொத்தபோது நீதானே மலத்தை நீக்கி என்னையுந் தெரிசிப்பித்து எனக்குள்ளுமாய் நின்றாயாதலால்; முன்னைத் திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு ஒருவுதலின்றி உடந்தையேயாகும் பெருநிலையாகல் வேண்டும் இப்பொழுது மலங்களை நீக்கிய பரமகுருவே உன்னைவிட்டு நீங்குதலின்றி ஒன்றுபட்டு மிகுந்த நிலையாகல் வேண்டும்; மருவிடு மும்மலமதனால் எம்முள் நின்றிலையெனின் அனாதியே ஆணவம் மாயை கன்மமெனு மலங்கள் என்னைக்கூடி நிற்கையால் எனக்குள்ளே நின்றா யில்லையாயின்; அம்மலத்திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழல் சேர்தலுமிலவாய்ச் சார்பவை பற்றிப் பெயர்விலனாகும் அந்தமலங்கள் ஒரு காலத்திலும் விட்டு நீங்குதலில்லையாய்ச் செந்தாமரைப் பூவையொத்த திருவடி நிழலிலே கூடுதலுமில்லையாய்ச் சேர்ந்த மலத்தின் செய்தியைப் பற்றி நீங்குதலின்றி நிற்கவேண்டும்; பெரும தீர்வின்று அமைந்த கருமத்தியைந்ததை யல்லது சமைந்தனவிலவெனச் சாற்றில் தலைவனே உடலுக்கமைத்த பிராரத்த கன்மமாகிய புண்ய பாவம் பொசித்துத் துலையொக்குமளவில் மலம் பொருந்தி நிற்கும், புண்ணிய பாவங்கள் துலை யொவ்வாத அவதரத்தும் மலம் விட்டு நீங்காதென்னின்; அமைந்த மாயேயங்கன்ம மாமலம் மூன்றும் மாயாதாகவே ஆர்ச்சனமாயையின் உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று அந்தக் கன்ம மாயை முதலியவாகிய அறத்துவாவிலும் நிறைந்து நிற்றலால் மலமூன்றுங் கெடாமல் நின்றே புண்ணிய பாவங்களை ஆர்ச்சிக்கவேண்டுமாதலால் 1(மாயையின் தோற்றமாயுள்ள சரீர தொந்தனை ஒன்றுக்கொன்று விடாமல் மேன்மேலும் தொன்றுதொட்டு வரும்); நிற்சமம் உன்னைப்போல் அந்த மலங்களும் அனாதியாம்; ஆயின் நிற்பெறல் இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு மேயாதாகும் அப்படியாகையால் உனக்கொப்பொன்றில்லையென்ற பழைய நூலுக்கு இத்தன்மை பொருந்தாததனால்; நாயேனுளத்து நின்றனை யென்பனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றா யென்பேனோ;நின்றிலை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றாயில்லை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றா யென்பேனோ; நின்றிலை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றாயில்லை யென்பேனோ; பொன்றிய பொன்றிற்றில மலமென்பனோ - மலமானது கெட்டதென்பதுவோ நின்றதென்பதுவோ யாதுசொல்வேன்; ஒன்றினை யுரைத்தருள் மன்ற - இவற்றினொன்றை யெனக்குத் தெரிய நிச்சயமாக அருள்வாயாக; குன்றாப் பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி கை கண் தலை வாய் கால் செவி மூக்கு உயர் மெய்கொண்டு என்வினை வேரறப்பறித்த மெய்கண்டதேவ வினையிலி மைகொண்ட கண்ட வழுவில் என் மதியே கேடுபடாத பெண்ணையாற்றுப் புனல் சூழப்பட்ட வயலையுடைத்தாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமே கையுங் கண்ணுந் தலையும் வாயுங் காலுஞ்செவியும் மூக்குமென்னும் அவயவங்களை யுடையதொரு திருமேனியைக் கொண்டு எனது வினையை வேரறப் பறித்த (மெய்க்கண்ட தேவனே கன்ம தொந்தனையில்லாதவனே) நீலகண்டனே பழுதில்லாத என்னறிவாயுள்ளவனே அருள்வாயாக என்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் மலம் அனாதியென்னு முறைமையும் முக்தியைப் பெற்ற ஆன்மாக்களிடத்து மலமில்லையென்னு முறைமையும் அறிவித்தது.

பண் :

பாடல் எண் : 11

மதிநின்பா லிந்த மலத்தின்பால் நிற்க
விதியென்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய – பதிநின்பால்
வந்தா லிதில்வரத்தில் வந்திரண்டும் பற்றுகிலேன்
எந்தா யிரண்டாமா றென்.

பொழிப்புரை :

மதிநின்பால் இந்த மலத்தின்பால் நிற்க விதியென்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய பதி நின்பால் வந்தாலிதில் வரத்தில் வந்திரண்டும் பற்றுகிலேன் எந்தாய் இரண்டாமாறென் என்னறிவானது நின்னறிவாலே யறியுமதாய் நிற்கப் பாசஞானத்திலே வந்து உன்னறிவை விட்டு அவையாய் நிற்கைக்குக் காரணமென்ன திருவெண்ணெய்நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவனே இப்பாசஞானத்தை விட்டுப் பசுஞானத்திற் பற்றற்றுப் பதிஞானமாகிய நினதருளிற் கூடிய காலத்து இந்தப் பாசஞானமும் பசுஞானமும் பற்றுகின்றேனில்லை எம்முடைய சுவாமியே என்னுடைய அறிவு இப்படி இரண்டு தன்மை யாவானேன் இதை இன்னதென அருள்வாயாக என்றவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

எண்டிசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டக மலாத்தி மூதறி வருளும்
மேதினி யுதய மெய்கண்ட தேவ
கோதில் அமுத குணப்பெருங் குன்ற
5. என்னி னார்தலும் அகறலும் என்னைகொல்
உன்னிற் றுன்னியுன் னாவிடிற் பெயர்குவை
யென்னு மதுவே நின்னியல் பெனினே
வியங்கோ ளாளனு மாகி யியங்கலு
முண்டெனப் படுவை எண்தோள் முக்கண்
10. யாங்கணும் பிரியா தோங்குநின் னிலையின்
யான்வந் தணைந்து மீள்குவ னாயின்
ஆற்றுத்துய ருற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற் றிழிதர வேண்டலும் வெறுத்தலு
மின்றச் சாயைக்கு நன்றுமன் னியல்பே
15. அனையை யாகுவை நினைவருங் காலை
இந்நிலை யதனின் ஏழையேற் கிரங்கி
நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்
அருள்மா றாகும் பெருமஅஃ தன்றியும்
நிற்பெற் றவர்க்கும் உற்பவ முண்டெனுஞ்
20. சொற்பெறும் அஃதித் தொல்லுல கில்லை
அவ்வவை யமைவுஞ் சால்பும் மயர்வறச்
சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல்லிறந் தோயே.

பொழிப்புரை :

எண்டிசைவிளங்க இருட்படாம் போக்கி முண்டகம். மலர்த்தி மூதறிவருளும் மேதினி யுதய மெய்கண்டதேவ கோதில் அமுத குணப்பெருங் குன்ற பிரபஞ்சத்தை மறைத்த இருளாகிய பீடையை நீக்கி எல்லாருங் காணப்பண்ணியுங் காந்தக் கல்லில் அக்கினியைத் தோற்றுவித்தும் தாமரையை யலர்வித்தும் உலர்வித்துஞ்செய்யும் முறைமை போலவும் மிக்க அறிவைத் தரும் ஆதித்தனைப் போல உலகத்துக்கு வந்த ஞானதித்தனாகிய மெய்கண்ட தேவனே எனக்குத் துராலறத் (=துன்பமறத்) தரும் அமுதனே குணமாகிய பெரிய மலையே; என்னினார்தலும் அகறலும் என்னைகொல் என்னிடத்தில் ஒருகாற் பிரகாசிக்கிறதும் ஒருகாற் பிரகாசியாமலிருக்கிறதும் எப்படியென்ன; உன்னிற்றுன்னி யுன்னாவிடிற் பெயர்குவை யென்னுமதுவே நின்னியல்பெனினே உன்னைச் செறிந்தபோது செறிந்தும் உன்னைச் செறியாதபோது நீங்கியுஞ் செய்வை யென்பதுதானே உன்னியல்பென்று கூறின்; வியங்கோளாளனுமாகி இயங்கலுமுண்டெனப்படுவை கருணையாளனென்கிற மேற்கோளையுடையவனென்கிறதும் உண்டாம்படி எப்படி; எண்தோள் முக்கண் யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின் யான் வந்தணைந்து மீள்குவனாயின் மூன்று நய னமும் எட்டுப்புயமும் முதலியவற்றைக் கரந்து மானிடயாக்கையில் வெளிப்பட்டு வந்த மெய்கண்டதேவனே ஓரிடத்திலும் நீக்கமற நின்ற நினது நிறைவிலே யான் வந்தணைந்து மீள்குவனாயின்; ஆற்றுத்துயருற்றோர் அணிநிழல் நசைஇ வீற்று விற்றிழிதரவேண்டலும் வெறுத்தலுமின்றச் சாயைக்கு நன்று மன்னியல்பே நானுனது திருவடியிலே சேர்ந்து மீள்குவேனாயின் கோடைக்காலத்து வழித்துயருற்றோர் நிழல் கண்டால் அந்நிழலையடைந்திருக்க விரும்புதலும் அதனை நீங்கிப் போகுதலுஞ் செய்யுமிடத்து அந்தச் சாயையானது வழி நடந்து துயருற்றோரை வாவென்றழைத்ததுமில்லைத் தனது கோட்டைக் குறைத்தோரை வெறுத்துத் தள்ளினது மில்லை யதுபோல ஆன்மாச் சென்று நீங்கச் சிவன் நினைவற்றிருந்தவனாம்; அனையை யாகுவை அதுவுமின்றி அந்நிழல் போல நீயும் சடமாவை; நினைவருங்காலை இந்நிலையதனில் ஏழையேற்கிரங்கி நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்நினைதற்கரிய பொருளாகிய நீதான் முன்சொன்ன சாயை (போல) அறிவற்ற எனக்கிரங்கி உன்னை யொருகாற் பிரகாசிப்பித்தும் ஒருகாற் பிரகாசியாமலும் இருப்பையாமாகில்; அருள்மாறாகும் பெரும உன்னருள் நீக்கமற்ற தென்பதற்கு மாறுபாடாகுந் தலைவனே; அஃதின்றியும் நிற்பெற்றவர்க்கும் உற்பவமுண்டெனுஞ் சொற்பெறும் அதுவல்லாமலும் உனது திருவடியிலே சேர்ந்தவர்களுக்குஞ் செனனமுண்டென்னுஞ் சொல்லுண்டாம்; அஃது இத்தொல்லுலகில்லை உபாதியை நீங்கித் திருவடியடைந்த ஆன்மாக்களுக்குச் செனனமுண்டாமென்பதுதான் இந்த உலகத்துளில்லை; அவ்வவையமைவுஞ் சால்பும் மயர்வறச் சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்சொல்லே சொல்லுக சொல்லிறந்தோயே அனாதியில் அந்த மலங்களின் கூட்டமும் அனாதியில் உன்னை விட்டு நீங்காத முறைமையினையும் மயக்கமறப் பாதகப்படாமல் சொல்லுமிடத்து எதிர்த்துச் சொல்லாத சொல்லே சொல்லுவாயாகச் சொல்லுக் கெட்டாதவனே யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாச் சிவனிடத்துக் கூட்டுமளவில் மலங்கெட்டதோ நின்றதோ ஆன்மாத்தான் கூடி மீள்குவதோ நீதான் கூடி மீள்குவையோ ஏதென்று சொல்லென வினாயதற்கு உத்தரம்:

பண் :

பாடல் எண் : 13

அறிவிப்ப தொன்றறிவ தொன்றும் அறிவித்
தறியாத தொன்றென் றறிந்தும் – அறிவித்
தறிபொளூ டேகூடித் தன்னறிவு மாய்ந்து
பிறிவற்று நிற்பதே பேறு. இறந்தோய் கரணங்க ளெல்லாம் எனக்குச்
சிறந்தோ யெனினுமெய்த் தேவே பிறந்துடனாங்
காயங் கொளவுங் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத் தற்று.

பொழிப்புரை :

இறந்தோய் கரணங்களெல்லாம் எனக்குச் சிறந்தோய் எனினும் மெய்த்தேவே பிறந்துடனாங் காயங்கொளவுங் கொளாமலுங் கண்டது நீ ஆயன் கொல் பாதவத்தற்று கருவி கரணங்களெல்லாங் கழன்று நின்ற நீ என்னிடத்து விட்டுநீங்காத சிறப்புண்டாயிருந்தாயாமாகிலும் மெய்கண்டதேவனே அடியேனொரு சரீரத்தை யெடுத்து அந்த உடம்பு தானாக நிற்கவும் அதிற் கூடாமலை (=கூடாமையை) நீ யுண்டாக்கின முறைமை எத்தன்மைத் தென்னின் இடையன் குறைத்த மரத்துக்கொக்கு மென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், மீளத்தோற்றிய பிரபஞ்சம் பேய்த்தேர்போலப் பொய்யாயிருந்ததெனக் கண்டு கூறியது.

பண் :

பாடல் எண் : 14

அற்றதென் பாச முற்றதுன் கழலே
அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத
வேறென் றிருந்த வென்னை யான்பெற
வேறின்மை கண்ட மெய்கண்ட தேவ
5. இருவினை யென்ப தென்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கெனும் மூன்றின்
இதமே யகித மெனுமிவை யாயில்
கணத்திடை யழியுந் தினைத்துணை யாகா
காரணஞ் சடமதன் காரிய மஃதால்
10. ஆரணங் காம்வழி யடியேற் கென்னைகொல்
செயலென தாயினுஞ் செயலே வாராது
இயமன் செய்தி யிதற்கெனின் அமைவும்
பின்னையின் றாகும் அன்னது மிங்குச்
செய்திக் குள்ள செயலவை யருத்தின்
15. மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன
ஒருவரே யமையு மொருவா வொருவற்கு
இருவரும் வேண்டா இறைவனு நின்றனை
நின்னது கருணை சொல்லள வின்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கணை வின்றாம்
20. உள்ளது போகா தில்லது வாராது
உள்ளதே யுள்ள தெனுமுரை யதனாற்
கொள்ளும் வகையாற் கொளுத்திடு மாயின்
வள்ளன் மையெலா முன்னிட வமையும்
ஈய வேண்டு மெனும்விதி யின்றாம்
25. ஆயினு மென்னை யருந்துயர்ப் படுத்த
நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமுங் கரும பந்தமுந்
தெருள வருளுஞ் சிவபெரு மானே.

பொழிப்புரை :

அற்றதென் பாசம் உற்றதுன் கழலே அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத வேறென்றிருந்த என்னை யான் பெற வேறின்மை கண்ட மெய்கண்டதேவ இருவினையென்பதை என்னை கொல் ஊசல் கயிறறத் தரை தாரகமாவதுபோல என்னுடைய அறியாமை திருத்தமாகவே அடியேன் பொருந்தினது உன்னுடைய பாதமே, திருவெண்ணெய்நல்லூரைத் திருப்படை வீடாகப் பெற்ற இன்பசொரூபியாகிய தலைவனே, இருளும் வெளியும்போல இரண்டென்றிருந்த என்னை (அடிமை யென்கிற முதலுங் கெடாமல்) உனக்கு இரவியும் நயனமும் போல அனன்னியமாகிய முறைமையுணர்த்திய மெய்கண்ட தேவனே புண்ணியபாவமென்று சொல்லப்பட்டதெப்படி யென்னில் அதற்குத்தரம்; அருளிய மனமே காயம் வாக்கெனும் மூன்றின் இதமே யகித மெனுமிவை யாயில் புண்ணிய பாவமாவது ஏதென்று வினாவில் பொருந்தப்பட்ட மனோவாக்குக் காயங்களால் ஏறும் இதமுமகிதமு மென்கின்றீராயின்; கணத்திடையழியுந் தினைத்துணையாகா இமைப்பொழுதிலே வேறுவேறுப் பலவாகப் புரியும் மனது இத்தன்மையெல்லாம் ஆகமாட்டாது; காரணஞ் சடம் அதன் காரியம் அஃதால் ஆர் அணங்காம் வழி யடியேற் கென்னைகொல் இந்தக் கன்மத்தை யுண்டாக்குங் காரணமாகிய மனோவாக்குக் காயங்கள் சடமாதலால் அடியேனுக்கு இது துக்கசுகங்களாக வருத்தும்படி எப்படி; செயல் எனதாயினுஞ் செயலே வாராது அதனை ஆன்மாவாகிய வெனது செயலென்கின்றீராயின் யான் செய்த செயல்தான் வடிவுகொண்டு அனுபவிப்பதில்லையாம், அதுவொழிந்து என்னுடைய செயலாலே புண்ணிய பாவமேறுமெனின் என்செயலும் நின்செயலன்றி வாராது என்றுமாம்; இயமன் செய்தி இதற்கெனின் அமைவும் இந்தச் சுக துக்கங்களையறிந்து செய்விப்பன் இயமனாகில் அச்சொல்நிற்க அமையுமது எதுதானென்னில்; பின்னையின்றாகும் அன்னதுமிங்கு இயமனே துக்கமுஞ் சுகமுஞ் செய்விப்பானாகில் உலகத்து இராசா செய்விப்பதில்லையாம், அது வொழிந்து இவ்விடத்து இயமனே புண்ணிய பாவங்களையறிந்து பொசிப்பிப்பானாகில் பின்பு பொசிக்கக் கன்ம முண்டாகாதாகும் என்று சொல்வாருமுளர்; செய்திக்குள்ள செயலவை யருத்தின் மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன அதனாற் செய்த கன்மத்துக்குத் தக்கது எல்லாம் பொசிப்பித்து மயக்கத்தைத் தீர்க்குமதற்கு முதன்மை இயமனுக்கில்லையாம், தலைவனே; ஒருவரேயமையும் ஒருவாவொருவர்க் கிருவரும் வேண்டா அப்படியன்று, இராசாவும் இயமனுமாகிய இருவருந் துக்கசுகம் அருத்துவானேன் என்னின், கன்ம நீங்காத எனக்கு ஒருவரமையாதோ இருவரும் வேண்டுவதில்லை; இறைவனும் நின்றனை இவ்விருவருமின்றி நீயுமொருவன் நின்றாய்; நின்னது கருணை சொல்லளவின்றே நீயேயவர்களையுங் கொண்டு செய்விக்கின்றாயாமாகில் செய்விக்குங் காருண்ணியஞ் சொல்லுங்காலத்து அளவில்லையாம், அதெப்படியென்னின்; அமைத்தது துய்ப்பின் எமக்கணைவின்றாம் உனக்குள்ளதை நீ யனுபவிக்கிறாயென்கின்றாயாமாயின் அந்தக் கன்மம் எனக்குத் தானே வந்து கூடமாட்டாது, கூடுமாயின் நீரெனக்குச் சுவாமியாக வேண்டுவதில்லை; உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதே யுள்ளதெனு முரையதனால் அதுவல்லது உள்ள துன்னாலும் நீக்க வொண்ணாது, இல்லாதது உன்னாலுங் கூட்டவு மொண்ணாது உள்ளதே உள்ளதெனுமாகையால்; கொள்ளும் வகையாற் கொளுத்திடுமாயின் வள்ளன்மை யெல்லா முள்ளிட வமையும் நீயவற்றுக்குச் செய்ததேதெனின் அவற்றைக் கூட்டும் வகையறிந்து கூட்டினாயாயின் உன் பெருமையை நினைக்கப் போதும் அதுவுமன்றி; ஈயவேண்டுமெனும் விதியின்றாம் நீ யிந்தக் கன்மங்களை யெனக்குச் செலுத்த வேணுமென்கிற முறைமையுமில்லையாம்; ஆயினும் என்னை அருந்துயர்ப்படுத்த நாயினேற்கு நன்று மன் என் குறையாற் செய்கின்றாயாயின் அடியேனைத் துயரத்திட்டுப் பார்த்திருப்பது உமது காருண்ணியத்துக்கு மிகவும் நன்று ஆதலால்; மாயக் கருமமுங் கரும பந்தமுந் தெருளவருளுஞ் சிவபெருமானே அனாதியே கன்மமுண்டென்னின் அது கன்மமும் அது வருகைக்கு முன்னமேயாகிய மாயையும் முன்பின் மயங்காமல் அருளிச்செய்யவேண்டும் எனக்குச் சுவாமியாக வந்த சிவனே யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் கன்மங் கூட்டு முறைமையை வினாயது; உத்தரம் :செய்வான் வினையறியான் செய்தவினை தானறியா
எய்யா தவனாலும் எல்லையறச் - செய்தவினை
எங்கோனுஞ் செய்தனவும் எவ்வெவர்க்கும் வெவ்வேறும்
அங்கே யறிவான் அரன்.

பண் :

பாடல் எண் : 15

மானமருஞ் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன
போனவினை தானே பொருந்துமோ – யானதனில்
ஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான்
தேவனே யாதுக்கோ தேர்.

பொழிப்புரை :

மானமருஞ் செங்கை மதில் வெண்ணெய் வாழ் மன்ன போனவினை தானே பொருந்துமோ யான் அதனில் ஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான் தேவனே யாதுக்கோ தேர் மானை யேந்துற சிவந்த கரத்தையுடையவனே, மதில்சூழுந் திருவெண்ணெய்நல்லூரில் வாழுந் தலைவனே, யான் புசித்துத் தொலைந்த வினை மீண்டு பொருந்தியதோ, யான்சென்று அதனைக் கூடினேனோ, தேவரீரும் விகாரியாய்க் கூடுதலில்லையே, ஆதலால் (நின்மலராகிய உம்முடைய) அருள் யாது செய்வதாக நின்றது சுவாமியே விசாரித்தருளென்றவாறு. எனவே வினை பொசிக்குமளவும் யானெனது விஞ்சுதலுண்டாய தெனவறிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

தேரா துரைப்பன் தெருமர லுளத்தொடு
பேரா தருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்ப தென்னுண் மையே
நின்னது நேர்மை சொல்மனத் தின்றே
5. எழுவகைத் தாதுவின் ஏழ்துளை யிரண்டும்
பெருமுழைக் குரம்பையிற் பெய்தகத் தடக்கி
நீக்கி யென்றனைப் போக்கற நிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பது நிற்க
10. வாக்கும் மனமும் போக்குள தனுவுஞ்
சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும்
நல்லவுந் தீயவு மெல்லா மறிந்து
முறைபிற ழாமற் குறைவுநிறை வின்றாய்க்
காலமுந் தேசமும் மாலற வகுத்து
15. நடுவுநின் றருத்தலின் நடுவனா குதியே
சான்றோர் செய்தி மான்றிருப் பின்றே
சாலார் செயலே மாலா குவதே
அத்துவா மெத்தி யடங்கா வினைகளுஞ்
சுத்திசெய் தனையே ஒத்தகன் மத்திடை
20. நீங்கின வென்னை யூங்கூழ் வினைகளும்
ஆங்கவை யருத்தவ தாரைகொல் அதனாற்
கருமமு மருத்துங் கடனது வின்றாந்
தருமம் புரத்தல் பெருமைய தன்றே
கண்ணினுண் மணிய கருத்தினுட் கருத்த
25. வெண்ணெய் வேந்த மெய்கண்ட தேவ
இடர்ப்படு குரம்பையுள் இருத்தித்
துடைப்பதில் லாவரு டோன்றிடச் சொல்லே.

பொழிப்புரை :

தேராதுரைப்பன் தெருமரலுளத்தொடு பேராதருளுதல் பெரியோர் கடனே - பெரியோய் யான் இன்னமொன்று விசாரியாமல் விண்ணப்பஞ் செய்கிறேன் தெளிவில்லாத உள்ளத்தொடுங் கூடுதலாலே, அஃதாவதுதான், நீங்காது நிற்பது உனது முறைமையா தலால்; நின்னைக் கலப்பதென் னுண்மையே - உன்னை நான் இப்போது புதிதாகக் கூடுவேனென்பது எதுண்மையாம்; நின்னது நேர்மை சொல் மனத்தின்றே - நீதான் இதற்கு நேர்வையோவெனின் வாக்கு மனத்துக்கு மெட்டாததாம்; எழுவகைத் தாதுவின் ஏழ்துளையிரண் டும் பெருமுழைக் குரம்பையிற் பெய்து அகத்தடக்கி நீக்கி என்றனைப் போக்கற நிறுத்தி இச்சை முதலிய எழுப்பி நடத்திடும் விச்சை சாலவும் வியப்பு அது நிற்க - எனக்கு நீ சத்த தாதுக்களும் இவ்வாயிலேழும் பெருவாயி லிரண்டுமாகிய பெரிய குவைப் பாழிலே என்னை யாக்கி அதனகத்தடக்கி அவ்வறியாமையை நீக்கி மீண்டுந் தனது ஆக்கினையாலே போக்கற நிறுத்தி எனது இச்சாஞானக்கிரியைகளை நீயே யெழுப்பி அவையிற்றை நடத்தியிடும் வித்தை மிகவும் ஆச்சரியமாம்; அது நிற்க; வாக்கும் மனமும் போக்குள தனவுஞ் சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும் நல்லவுந் தீயவும் எல்லாமறிந்து முறை பிறழாமற் குறைவு நிறைவின்றாய்க் காலமுந் தேசமும் மாலற வகுத்து நடுவு நின்று அருத்தலின் நடுவனாகுதியே - அவரவர் மனவாக்குக் காயங்களானும் நீங்காச் சிறையாகிய அவ்வுடலானும் நினைத்துச் சொல்லிச் செய்தவற்றின் நன்மை தின்மையெல்லாம் நீ யறிந்து அது முன்பின் மாறுபடாமல் (புண்ணிய பாவ பலன்களை அனுபவிக்கத் தக்க காலங்களையும் அவற்றைப் பொசிக்கைத் கிருப்பிடமான தேசங்களையும் மயக்கமற வகுத்துப்) பொசிப்பித்துத் தனது பிரேரக முறைமை ஏறியுங் குறைந்துமில்லாமல் நடவனுமாகி நின்றாய் அதனாலும்; சான்றோர் செய்திமான்றிருப்பின்றே சாலார் செயலே மாலாகுவதே - ஞாதாக்கள் செயலறச் செய்கையாலே அவர்களுக்கு விரிவு கூட்டமில்லை, பொருந்தார் செய்தியே கூட்டுவது மயக்கம் ஆதலானும்; அத்துவா மெத்தி அடங்கா வினைகளுஞ் சுத்தி செய்தனையே ஒத்த கன்மத்திடை கன்மவொப்பில் - மந்திரம் பதம் வன்னம் புவனம் தத்துவங் கலையென்று சொல்லப்பட்ட ஆறத்துவாவிலும் நீ நிறைந்திருக்கப்படா நின்ற சஞ்சித கன்மத்தையுஞ் சோதிக்கையால்; நீங்கின என்னை ஊங்கு ஊழ்வினைகளும் ஆங்கு அவை அருத்துவது ஆரை கொல் அதனால் - அவ்விடத்து ஊழ்வினைகளும் என்னை விட்டு நீங்கினவாகையாலே அவை யாரை வந்து பொசிப்பித்தன அதனால்; கருமமும் அருத்துங் கடனதுவின்றாந் தருமம்புரத்தல் பெருமையதன்றே - கன்மந்தானும் அனுபவிப்பனிடத்துத் தானே பொருந்துவது மில்லையாம், நீ அக்கன்மத்துக் கீடாக நடத்துவையாகில் உன் பெருமைக்கும் அது பொருந்தாது, ஆகையால் கன்மம் நீங்கி அருளாமாறு எப்படி; கண்ணினுள் மணிய கருத்தினுட் கருத்த வெண்ணெய் வேந்த மெய்கண்டதேவ இடர்ப்படு குரம்பையுள் இருத்தித் துடைப்பதில்லா அருள்தோன்றிடச் சொல்லே - கண்ணிற் பாவைபோலவுங் கருத்துள் அறிவு போலவுமாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமாகிய மெய்கண்டதேவனே துக்கவுடலுள் வைத்து நீங்காத் திருவருள் ஏது சொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் கன்மம் நீங்கு முறைமையும் நீங்கினால் அவை போகிற முறைமையும் வினாயது; உத்தரம்: ‘உடலுக் கமைத்த லுயிரொடு நீங்கா - திடவரு(ள் கன்ம ம) ருத்தும்.’

பண் :

பாடல் எண் : 17

சொற்றொழும்பு கொள்ளநீ சூழ்ந்ததுவும் நிற்செயல்கள்
மற்றவர்கள் நின்நோக்கின் மாய்ந்தவுயிர்க் – குற்ற
மொளித்தியாங் கைய வுயர்வெண்ணெய் நல்லூர்க்
குளித்தமதுக் கொன்றையெங் கோ.

பொழிப்புரை :

சொற்றெழும்பு கொள்ளநீ சூழ்ந்ததுவும் நிற்செயல்கள் மற்றவர்கள் நின் நோக்கின் மாய்ந்த வுயிர்க்குற்ற மொளித்தியாங்கு ஐய உயர் வெண்ணெய்நல்லூர் குளித்த மதுக்கொன்றை எங்கோ - உயர்ந்த வெண்ணெய் நல்லூருக்குக் கர்த்தாவாகி மதுவின் மூழ்கிய கொன்றை மலரைப் புனைந்த எம்முடைய சுவாமியே, நீ கன்மம் நீக்குமளவில் உனது சொல்வழி யடிமையாகச் செய்யலாமாயின், உன் செயலென்னாத பெத்தரும் நினது பான்மையை நீங்காதுநிற்க உயிர் கேடுபடாநின்றது, உன்னை நீங்காது நிற்பாரெல்லாருமொப்பச் சிலர்க்குக் குற்றமெவ்விடத்தே போயது கொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், செயலற நிற்க மலம்போனபடி எப்படியென்று வினாயது; உத்தரம்: நின்செயலிற் றம்மைக் கொடுத்தார் வினைதீர்த்தார்
துன்பமற மாயைத் துடக்கறுமே – முன்புமலந்
தான்கெடாச் சத்தி கெடுமாமிக் காயவிருள்
வான்கெடா வாளொளிவந் தால். இத்துணையும் வினாவாக்கி மேற்கூறியவையிற்றுக்கு உத்தரவாதமாக நின்றது.

பண் :

பாடல் எண் : 18

கோலங் கொண்ட வாறுண ராதே
ஞாலங் காவலன் யானெனக் கொளீஇப்
பொய்யை மெய்யெனப் புகன்று வையத்
தோடாப் பூட்கை நாடி நாடா
5. என்னுட் கரந்தென் பின்வந் தருளி
என்னையுந் தன்னையு மறிவின் றியற்றி
என்னது யானெனு மகந்தையுங் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
10. மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
எற்பணி யாளாய் எனைப்பிரி யாதே
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
என்வழி நின்றனன் எந்தை யன்னோ
அருள்மிகு வுடைமையின் அருட்டுறை வந்து
15. பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை யாதலுங்
கைகண்டு கொள்ளெனக் கடலுல கறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத்
தன்னுட் கரந்து தான்முன் னாகித்
தன்னதுந் தானுமா யென்னையின் றாக்கித்
20. தன்னையு மென்னையுந் தந்து தனது
செய்யா மையுமென் செயலின் மையும்
எம்மான் காட்டி யெய்தல்
அம்மா எனக்கே அதிசயந் தருமே.

பொழிப்புரை :

கோலங் கொண்டவாறு உணராதே ஞாலங் காவலன்யான் எனக் கொளீஇப் பொய்யை மெய்யெனப் புகன்று வையத்து ஓடாப் பூட்கை நாடி நாடா - தேவரீர் திருமேனி கொண்ட முறைமையை யுணராமல் பிரபஞ்சத்தக்கு நானே கர்த்தாவென்னக் கொண்டு, பிரபஞ்சத்தை ஊராத பேய்த்தேரின் செலவை விசாரித்து அறியாதாரைப்போல, அசத்தாகிய பிரபஞ்சத்தைச் சத்தெனக் கருதிக் கொண்டிருக்கிற; என்னுள் கரந்து - எனக்குள்ளே மறைந்து; என்பின் வந்தருளி - என்னை முன்னாக்கித் தான் எனக்குப்பின் வந்து; என்னையுந் தன்னையும் அறிவின்றியற்றி - தன்னையும் என்னையும் அறியாதபடி யியற்றி; என்னது யானெனும் அகந்தையுங் கண்டு - யானெனதென்னும் அகந்தையு முண்டாக்கி; யாவயின் யாவையுங் யாங்கணுஞ் சென்று புக்குழிப்புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து - எந்த யோனியிலும் எந்த வுலகத்தும் நான் சென்று புக்கவிடமெங்கும் புக்கு மீண்டவிடமெங்குந் தானும் மீண்டு; மிக்க போகம் விதியால் விளைத்திட்டு - எனக்கு மிகுந்த புசிப்புக்களைத் தப்பாமல் விளைத்து; எற்பணியாளாய் எனைப் பிரியாதே - எனக்குப் பண்ணைக்காரனாகிய ஏவலாளாய் என்னை விட்டு நீங்காதே; ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு என்வழி நின்றனன் எந்தை - வில்லொடு குத்தி விளையாட விடுமா போல ஓடித் திரியும் ஆடலைக் கண்டு முன்னெல்லாம் என் வழி நின்றாய், எனக்குச் சுவாமியாயுள்ளவனே; அன்னோ - அய்யோ அய்யோ; அருள் மிக வுடைமையின் அருட்டுறை : திருவெண்ணெய்நல்லூரிலுள்ள சிவாலயம் ; ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா’ என்பது சுந்தரர் தேவாரம். அருட்டுறை வந்து தனக்கு அருளே மிகுத்த செல்வமாயிருக்கையாலே திருவெண்ணெய்நல்லூரிலே திருமேனி கொண்டு வந்து; பொருள் மிக அருள்தலும் பொய்ப்பகையாதலுங் கை கண்டு கொள்ளெனக் கடலுலகறிய மெய்கண்டதேவன் எனப் பெயர் விரீஇ நீ எல்லாப் பொருளையுங் கூட்டுதலும் கூட்டியும் பொய்க்குப் பகையும் மெய்க்கு உறவுமாய் நிற்றலை எனக்குக் காண்பிப்பான் பொருட்டுத் தண்கடல் சூழ்ந்த உலகமறிய மெய்காணாத ஆன்மாக்களுக்கு மெய்யைக் காண்பித்த தெய்வமென்னும் பெயரை விரித்து நிறுத்தி; தன்னுட் கரந்து தான் முன்னாகி தன்னதுந் தானுமாய் என்னை இன்றாக்கி தனக்குள்ளே என்னையடக்கித் தான் என்பின் செல்வதன்றித் தன் செயலுந் தானுமல்லது என் செயலையும் என்னையும் இன்றாக்கி; தன்னையு மென்னையுந்தந்து என்னுண்மையுந் தண்னுண்மையும் அறியும்படி யுணர்த்தி; தனது செய்யாமையும் என் செயலின்மையும் எம்மான் காட்டி தான் சகல வித்தையும் ஆன்மாக்களுக்குக் கன்மத்துக் கீடாகக் கூட்டிப் பொசிப்பிக்கையிலே தான் அதிற் பணியற்று நிற்கிற முறைமையையும் யான் அதிலே கூடி அதுவதுவாக மொத்துண்கையிலே எனக்கொரு செயலற்று நிற்குந் தன்மையையுந் தலைவன் காட்டினது; எய்தல் அம்மா எனக்கே அதிசயந் தருமே எனக்கு ஏறப் பொருந்துகையாலே ஆச்சரியம் எனக்கே தருமென்றவாறு. அம்மா வென்றது கேட்பிக்கும்; பூட்கைக் கிளவி மேற்கோளாம்.

குறிப்புரை :

இச்செய்யுள் சிவன் நின்று நடத்துகிற முறைமை யறிவித்தது.

பண் :

பாடல் எண் : 19

தருமா தருமத் தலைநின்றாழ் வேனைக்
கருமா கடல்விடமுண் கண்டப் – பெருமான்
திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
உருவென்ன வந்தெடுத்தா னுற்று.

பொழிப்புரை :

தரும அதருமத் தலைநின்று ஆழ்வேளைக் கருமா கடல் விட முண் கண்டப் பெருமான் திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத் தான் உருவென்ன வந்தெடுத்தான் உற்று - புண்ணிய பாவங்களின் எல்லை நீங்காது திரியும் என்னை அவ்வினை துலையொப்பறிந்தவனாதலாலே, மால்பிரமன் முதலிய தேவர் இறந்து போகாமற் கருணையாலே பெரிய கடலில் விடத்தை யுண்டு உய்யக் கொண்ட நீலகண்டனாகிய தலைவன் திருவெண்ணெய் நல்லூரிலெழுந்தருளிச் சுவேதவனப் பெருமாளென்னும் பிள்ளைத் திருநாமத்தையுமுடைய மெய்கண்டதேவன் இவ்வடிவிலே யான் ஈடேறும்படி என்னையடிமையாகக் கொண்டான் பற்றி யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் பரமேசுவரன் பக்குமறிந்து இரட்சிப்பனென்பது சொல்லிற்று.

பண் :

பாடல் எண் : 20

உற்றவர் பெற்றவ ரற்றவர் முற்றும்
அற்றவர்க் கற்றவன் அல்லவர்க் கல்லவன்
அந்த மாதி யில்லவன் வந்து
குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும்
5. பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு
இருள்வெளி யாகும் மருளினை யறுத்து
வந்து புகுதலுஞ் சென்று நீங்கலு
மின்றி யொன்றாய் நின்றஅந் நிலையில்
ஒன்றா காமல் இரண்டா காமல்
10. ஒன்று மிரண்டு மின்றா காமல்
தன்னது பெருமை தாக்கா னாயினும்
என்னது பெருமை யெல்லா மெய்தித்
தன்னை யெனக்குத் தருவதை யன்றியும்
என்னையு மெனக்கே தந்து தன்னது
15. பேரா நந்தப் பெருங்கட லதனுள்
ஆரா வின்ப மளித்துத் தீரா
உள்ளும் புறம்பு மொழிவின்றி நின்ற
வள்ளன்மை காட்டி மலரடி யருளிய
மன்ன னெங்கோன் வார்புனற் பெண்ணை
20. வெண்ணெய் காவலன் மெய்கண்ட தேவன்
அண்ணல் அருளா லயத்தன் நண்ணிய
மலமுத லாயின மாய்க்கும்
உலக வுயிர்க்கெல் லாமொரு கண்ணே.

பொழிப்புரை :

உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றம் அற்றவர்க்கற்றவன் அல்லவர்க் கல்லவன் அந்தமாதியில்லவன் வந்து - ஆசாரியனருளிச் செய்த உண்மையிலே பொருந்தினவர்கள் அதனைச் சிந்திக்கப் பெற்றவர்கள் அந்த உண்மையிலே முழுதுந் தன்னைக் கொடுத்துத் தானதுவாய்த் தன் செயலற்றவர்க்குத் தான் அவர் செயலாய் நிற்கிறவன் தானென்றும் அவனென்றும் இரண்டுபட்டவர்களுக்கு வேறுபட்டிருக்கிறவன் தோற்றமும் ஈறும் இல்லாதவன் திருமேனி கொண்டு வந்து; குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும் பரப்பைக் குவித்துநிறுத்திப் பிடித்திட்டு - குரங்குபோலே ஓரிடத்து நிலையில்லாத மனத்தையுடைய கொடிய வினையேன் உழன்று திரியும் வருத்தத்தைக் கெடுத்து ஒரு நிலையிலே நிறுத்தி என்னை யடிமை பிடித்து என்னும்படிக் காட்டி; இருள் வெளியாகும் மருளினை யறுத்து - வெளியும் இருளுமாகிய மயக்கத்தைக் கெடுத்து இவை யிரண்டுமல்லவாய் நின்ற நிலை காட்டி; வந்து புகுதலுஞ் சென்று நீங்கலுமின்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில் - கண்ணிற்படலத்தை ஒருவன் வந்துரித்த விடத்துக் கண்ணொளியைச் சூரியப்பிரகாசம் வந்து கூடவுமில்லை சூரியப்பிரகாசத்திலே கண்ணொளிபோய்க் கூடினதுமில்லையதுபோல, தானும் புதிதாக வந்து பொருந்துதலுங் கூடினவர் சென்று நீங்கிப் போகலும் இல்லாதபடி, ஏகமாய் அப்படி நின்றநிலை தான்; ஒன்றாகாமல் - பொன்னும் பணியும்போல ஒன்றென்னும் மாயாவாதமுமல்லவாய் உடலும் உயிரும்போல வொன்றாய்; இரண்டாகாமல் - இருளும் வெளியும்போல இரண்டாயிருக்கிற பேதவாதமுமல்லவாய் கண்ணும் ஆதித்தனும் போலவிரண்டாய்; ஒன்றுமிரண்டு மின்றாகாமல் - சத்தமும் அத்தமும் (=பொருளும்) இரண்டாயிருந்து பின்பு ஒன்றானதுபோல அன்மாவென்றுஞ் சிவனென்றும் இரண்டாயிருந்து முத்தியில் ஒன்றாமென்னும் பாற்கரியன் மதமுமல்லவாய் ஆன்மாவும் ஆன்மஞானமும்போல இரண்டாயிருந்து ஒன்றாவதாய்; தன்னதுபெருமை தாக்கானாயினும் என்னது பெருமை எல்லா மெய்தி - தனது முதன்மையாகிய பஞ்சகிருத்தியம் எனக்குத் தாரானாயினும் எனக்குப் பெருமையாகிய பாச சாலங்களெல்லாந் தான்முன்னின்று மேற்போட்டுக்கொண்டு தன்னை எனக்குத் தருவதையன்றியும்; என்னையும் எனக்குத் தந்து - தன்னுண்மை யான் பெறுவதன்றி என்னுண்மை யான் பெறும்படித் தந்து; தன்னது பேரானந்தப் பெருங்கடலதனுள் ஆராவின்பம் அளித்து - தனதாகிய பேரானந்தக் கடலுள் அமையாத அமுதம் எனக்குத் தந்து; தீரா உள்ளும் புறம்பும் ஒழிவின்றி நின்ற வள்ளன்மை காட்டி மலரடி யருளிய - நீக்கமற்று உள்ளேனும் புறம்பேனுந் தெரியாதபடி யொழிவற நிறைந்த தலைமையைக் காட்டித் தனது திருவடியைத் தந்த; மன்னன் - ஞானராசா; எங்கோன் - எம்முடைய சுவாமியாயுள்ளவன்; வார்புனற் பெண்ணை வெண்ணை காவலன் மெய்கண்டதேவன் அண்ணல் அருளாலயத்தன் - ஒழுக்கறாத புனல்பொருந்திய பெண்ணையால் சூழப்பட்ட திருவெண்ணெய்நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவன், சருவான்மாக்களுக்குங் கருத்தா, என்னுடைய உள்ளமே (தன் அருளே?) கோயிலாகக் கொண்டவன்; நண்ணிய மலம் முதலாயின மாய்க்கும் உலக உயிர்க்கெல்லாம் ஒரு கண்ணே - பொருந்திய ஆணவமலத்தை லிங்கமூர்த்தமாய் வந்து கெடாமற் கெடுத்தும் மாயையைக் குருமூர்த்தமாய் வந்து கெடாமற்கெடுத்தும் கன்மத்தைச் சங்கம மூர்த்தமாய் வந்து கெடாமற் கெடுத்தும், இப்படி வந்த மூன்று முதலும் பிரபஞ்சத்துக்கும் ஆன்மாக்களுக்கு மிடமும் ஒரு முதலே யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் கர்த்தா விரிவித்த முறைமை கூறியது.இருபா விருப துரையெழுதி னோன்முன்
ஒருவா விகற்ப முணர்ந்தோன் – அருளுடம்பாம்
பண்புடைய சிற்றம் பலநாடி தாள்பணிவோன்
சண்பைநகர்த் தத்துவநா தன். (குறிப்பு : - அருணந்தி சிவாசாரியார் செய்தருளிய இருபா விருபது, திருவாவடுதுறை நமச்சிவாயத்தம்பிரான் செய்தவிரிவுரையோடு சமாஜத்தின் சித்தாந்த சாத்திர முதற் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது; இந்தப் பதிப்பில் சீகாழித் தத்துவநாதர் செய்த காண்டிகை யுரை முதன் முதலாக வெளியிடப்படுகிறது. இவர் சிற்றம்பல நாடிகள் சீடரென்பது உரையிறுதியில் காணும் செய்யுளால் விளங்கும். இவரே சிந்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய உண்மை நெறி விளக்கம் செய்தார் என்பது காலஞ்சென்ற திரு. அனவரதவிநாயகம் பிள்ளையவர்களால் முதற்பதிப்பின் 980-982 பக்கங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பிரதியின் துணை கொண்டு இவ்வுரை இங்கு பதிப்பிக்கப்படுகிறது. - மு. அருணாசலம்)
சிற்பி