காப்பு


பண் :

பாடல் எண் : 1

மறைக ளாகமத் துறைகள்மற் றெவையும்
நாசமில் பதிபசு பாசமென் றுரைத்தல்
அயர்த்தோர் குளிகைச் சயத்தால் தாமிரக்
காளித நாசம் பாசத் தேய்த்தல்
கூடா தன்றியும் குளிகை சீருணம் 5
நீடா தழித்த *நிலைஇலை ஆதலிற்
பேத வாதம் ஓதுதல் பிழையே
இன்னும் இன்னுயிர் ஏமங் குளிகை
தன்னில் அன்னியந் தருவது திடமே
வீடித் திறத்தினிற் கூடக் கூடா. 10

பொழிப்புரை :

மறைகள் ஆகமத் துறைகள் மற்று எவையும் நாலு வேதங்கள்முதல் ஆகமமும் வேதாகமங்களினதுவழிகள் புராணங்கள் மற்றுமுண்டான சாத்திரங்கள் இவையெல்லாம் ; நாசம் இல் பதிபசு பாசமென்று உரைத்தல் பதிக்கும் பசுவுக்கும் பாசத்துக்கும் அழிவில்லையென்று சொல்லுகிறதை ; அயர்த்து ஓர் குளிகைச் சயத்தால் தாமிரக் காளித நாசம் பாசத்து ஏய்த்தல் கூடாது நீ இப்பொழுது மறந்துவிட்டு, ஓர் இரத குளிகையினது சாமர்த்தியத்தினாலே செம்பிலுண்டாகிய காளிதமானது கெட்டுப் போகிறதைப் பாசத்துக்கு நீ உவமையாகச் சொன்னது சாத்திர விரோதமாகையால் பாசங் கெடுமென்கிறது அர்த்தமாகாது ; அன்றியும் குளிகை சீருணம் நீடாது அழித்த நிலை இலையாதலிற் பேதவாதம் ஓதுதல் பிழையே பாசம் கெடுமென்று சொன்ன தோஷமன்றியும் இரத குளிகையானது செம்பை நிலைநிற்கவொட்டாமல் அதை யழித்துப் பொன்னாக்கின திட்டாந்தநிலை உனக்குத் தாட்டாந்தத்து இல்லையாகையால், பசுமுதல் கெடாது பெறுவானும் பேறுமாயிருக்கு மென்று நீ முன்னே பேதவாதஞ் சொன்னது பழுதாம் ; இன்னும் இன் உயிர் ஏமம் குளிகை தன்னில் அன்னியந் தருவது திடமே அன்றியும் இன்னமும் ஒரு குற்றமுண்டு. அது என்னெனில், செம்பானது தன்னைச் சுத்தமாக்கின குளிகையு மாகாமல் தன்னுடைய தன்மையுங் கெட்டு நடுவே பொன்னான தன்மைபோல ஆன்மாவுந் தன்னைச் சுத்தமாக்கின சிவனுடைய சொரூபமுமாகாமல் தன்னுடைய தன்மையும் கெட்டு வேறே ஒரு சொரூபமாகவேண்டும். ஆகையால் அது குற்றமுண்டென்றது தப்பாது; வீடு இத்திறத்தினில் கூடக் கூடா மோக்ஷமென்கிறது செம்பும் இரதகுளிகையும் போலுமென்று நீ சொன்னவகையிற் கூடுமென்கிறது உண்டாகாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை
சிற்பி